மாசுளமணி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2023
பார்வையிட்டோர்: 2,078 
 

சரவணன் கூவினான்.

தோழர்

என்ன சரவணா?

இங்க வாங்க.

போனேன்.

இவங்க மணியோட தங்கை .

அந்தப் பெண்ணின் உடையில், கழுத்திலிதிலிருந்த பிளாஸ்டிக் மாலையில், கைகளில் உருண்ட கண்ணாடி வளையல்களில் ஏழ்மை.

மாசிலாமணி கோவா போய்ருக்கானே. உங்களுக்குத் தெரியாதா?

பெண் தலையசைத்தாள்.

தெரியாதுங்க சார். அம்மாவையும் அழச்சிட்டு வந்துருக்கேன்.

குரல் அடிபட்ட பறவையினதாய் இருந்தது.

சொல்லும் போதே அவள் கண்கள் இளகின.

அம்மா எங்க?

அம்மாக்கு உடம்பு முடில. ஆட்டோவ்ல இருக்காங்க.

என்ன உடம்புக்கு?

உதடு கோண அழ ஆரம்பித்தாள்.

எங்க ஊர் ஆஸ்பத்திரில என்ன என்னமோ சொல்றங்க. அதான் இங்க அழச்சிட்டு வந்தேன்.

மணிக்கு சொல்லிட்டு வந்துருக்லாம்ல..

மெளனமாயிருந்தாள்.

ரெண்டும் மாசமா அண்ணன் ஃபோன் பேசவேல்ல.

இன்னைக்கு தான் வர்றதா சொன்னான். இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?

அவள் தயங்கி மறுத்தாள்.

வாங்க அம்மாவ பாக்கலாம்.

ஆட்டோவில மணியின் அம்மா ஏறக்குறைய மயங்கிய நிலையிலிருந்தார்.

அம்மா.. அம்மா

அவள் அழுகைக் குரலில் கூப்பிட்டாள்.

அம்மாக்கு என்ன பண்ணுது?

கத்தையாய்க் காகிதங்களை நீட்டினாள்.

முதல் பார்வையிலேயே புரிந்தது.

சாப்பிட்டிங்களா? பஸ்டாண்டுல இறங்கி சாப்பிட்டுத்தான் வந்தோம் அண்ணா.

ஆட்டோவில இருங்க. உள்ற போய் சொல்லிட்டு வந்துர்றேன்.

சரவணனைச் சுற்றி கூட்டமிருந்தது.

சரவணா மணியோட அம்மாக்கு முடியல. நான் ஹாஸ்பிட்டல் அழச்சிட்டு போறேன். ஜேகேட்ட சொல்லிடு.

நானும் வரட்டா தோழர்.

கூட்டம் நிறைய இருக்கு . செளம்யா மேடம் திணறிடுவாங்க. தேவைன்னாக் கூப்பிடறேன்.

டாக்டர் தேவராஜன் முகம் இறுகியிருந்தது.

இவங்க யார் சங்கர்?

என் கலீக்கோட அம்மா.

யோசித்தார்.

நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில இருங்க. சார்ட்ட பேசிட்டுக் கூப்பிடறேன்.

பெண் அழ ஆரம்பித்தாள்.

ஒண்ணுமில்லேமா.. ஒண்ணுமில்லேம்மா.

டாக்டர் சொன்னார்.

வெளியே போனார்கள்.

கல்லீரல் புற்று நோய். ஃபோர்த் ஸ்டேஜ்.

சான்ஸ்?

நோ. சில வாரங்கள் அல்லது நாட்கள்.

அடையார் அழச்சிட்டுப் போனா?

டாக்டர் தலையசைத்தார்.

வெளியே வந்தேன்.

அந்தப் பெண் ஒடிவந்து கையைப் பிடித்துக் கொண்டது.

டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா?

சரியாய்டும்.

கதவைத் திறந்த நந்தினியின் விழிகள் விரிந்தன.

இது மாசிலாமணியோட அம்மாவும், தங்கையும். அவன் கோவா போய்ருக்கான். இன்னைக்கு வந்துடுவான். சாப்பிட எதாவது கொடு.

கொடுத்துட்டு வர்றேன்.

வந்தாள்.

என்ன பிரச்னை?

சொன்னேன். அடக்கடவுளெ. மணிக்குத் தெரியுமா?

ராஸ்கல். தெரியுமாம். ஆனா கண்டுக்கல.

அடப்பாவி.

பேங்க்ல வேலை ஜாஸ்தி. ஐநூறு ரூவா நோட்டு மாத்தறததுக்கு இன்னைக்கு லாஸ்ட் டேட். நான் கிளம்பறேன். அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். தேவராஜன் ஒரு ஸ்பெஷலிஸ்ட் அட்ரஸ் கொடுத்துருக்கார். சாயங்காலம் போய் பார்ப்போம்.

மொபைல் கூப்பிட்டது.

சரவணன்.

அவங்க என் வீட்லதான் இருக்காங்க. நான் இதோ கிளம்பிட்டேன்.

கேஷ் கெளண்ட்டர் க்யூ நீண்டிருந்தது.

என்ன சரவணா?

மாசிலாமணி வந்துட்டான்.

எங்க?

செய்தி சொன்னேன். உங்க வீட்டுக்குத் தான் போனான். எதிர்ல பாக்கலையா?

பாக்கலையே. சரி. கூட்டத்தை பிரிச்சு என் கெளண்டருக்கும் அனுப்பு.

கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பேங்க் வாசல் கதவை மூடமுடியவில்லை. இரவு எவ்வளவு நேரமானாலும் நோட்டை மாத்திக் கொடுக்க வேண்டும்.

அதிகாரத்தின் விரல்களின் பொம்மலாட்டம்.

ஆடுகிறோம்.

மொபைல் அழைத்தது.

நந்தினி.

என்ன நந்து?

மணி வந்து அவங்கள அழச்சிட்டுப் போய்ட்டார்.

எங்க?

தெரில.

டிஸிபியில் கையெழுத்து போட்டு கேஷ் பாக்ஸ் உள்ளே வைக்கும் போது மாசிலாமணி வந்தான்.

ரொம்ப தேங்க்ஸ் தோழர்.

அவங்க எங்கடா?

ஊருக்கு அனுப்பிட்டேன்.

உன் அம்மாக்கு என்ன நோயின்னு தெரியுமா?

தெரியும். இதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. கைல காசு கொடுத்து இப்பதான் பஸ் ஏத்திவிட்டேன்.

காசு.

ஒற்றை நொடிதான்.

வலது கை விரல்கள் ஐந்தையும் மடக்கி ஆக்ரோஷமாய் அவன் முகத்தில் குத்தினேன்.

முதல் துளி தயங்கி பின் வேகமாய் அவன் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “மாசுளமணி

  1. தாய்மையும் உறவும் பொருளியலில் அடங்காதது அதற்கும் மேலே உள்ளது என அழுத்தம் திருத்தமான நண்பனின் முதல் சொட்டு ரத்தம் புரியவைத்திருக்கவேண்டும்.
    நன்றியுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *