கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 3,439 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் அறையைச் சுற்றிப் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் கூட இவ்வளவு பரிசுத்தமாக இருக்குமோ என்னவோ? வெள்ளை வெளேரென்ற விரிப்புப் போட்ட படுக்கை. பக்கத்தில் சின்ன மேஜையில் டூ இன் ஒன். காஸெட் டேப். இரண்டு, மூன்று புத்தகங்கள். ஒரு தாதிப் பெண் தினமும் வந்து உடம்பைத் துடைத்துப் புடவை மாற்றி, மிகத் தேவையான மற்ற பணிவிடைகளையும் செய்து விட்டுப் போவாள். 

இவ்வளவு சொகுசு எனக்குத் தேவை இல்லைதான். ஆனால், பெரிய ஆடிட்டரான என் மகனும் கல்லூரி விரிவுரையாளரான என் மருமகளும் என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டனர். என் மாமா பெண் காமு, ஊரிலிருந்து வரவழைக்கப்பட்டாள். அவள் வீட்டைக் கவனித்துக்கொண்டாள். 

நாள் பூராவும் மாடியில் என் அறையில் விழுந்து இ டந்தேன். சுறுசுறுப்பான சமூக சேவகியாக பாலவாடியிலும் சேவாசங்கத்துச் சமையலறையிலும் கறிகாய்த் தோட்டத் திலும் சுற்றி வந்து வேலை செய்த எனக்கு இந்தப் படுக்கை வேதனை தந்தது. எங்கோ காக்காய் கரைந்தது. எல்லாப் புலன்களும் இப்போது தத்தம் சக்தியை என் செவிக்கே தந்து விட்டனவோ… கீழே பால்காரன் வந்தது, வேலைக்காரி போனது, அண்டை அயல் வீடுகளில் யார் வீட்டுக்கு ரிக்ஷா வந்தது, யார் வீட்டு கார் கிளம்பிற்று இப்படி ஒவ்வொரு ஓசையையும் ஆராய்ந்தபடி கிடந்தேன். அம்மா!” என்று அழைத்தபடி என் மகன் ரவி வந்தான். 

“நான் கிளம்பறேம்மா. நீ ஓய்வெடுத்துக்கோ. ஏதாவது வேணுமா?” என்று கரிசனத்தோடு விசாரித்து விட்டு கிளம்பிச் சென்றான். 

சற்று நேரத்துக்கெல்லாம் என் மூன்று வயது பேரன் அருணை அழைத்துக்கொண்டு மருமகள் மாயா வந்தாள். “பாட்டீ, நான் ஸ்கூலுக்குப்போகிறேன். டாட்டா” என்று சொன்னவன் என் பக்கமாக ஓடி வரப் பார்த்தான். 

“உஷ்… பாட்டிக்கு வலி. தொடக் கூடாது” என்று அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் மாயா. 

“அம்மா, நான் காலேஜ் போய் வரேன். பத்திரமாக இருங்கோ. என்ன வேண்டுமானாலும் காமு சித்தியைக் கேளுங்கோ. தயங்க வேண்டாம். எங்க லைப்ரரியிலிருந்து ஏதாவது பத்திரிகை வேணுமா?” என்று கனிவுடன் விசாரித்தாள். 

பின்னர் அறையைச் சுற்றிப் பார்த்தாள். ஜன்னல் கதவுகளைச் சரியாகத் திறந்துவிட்டு, சீலைகளைச் சரிப்படுத்தி விட்டு, தன் பையனை இறுகப் பிடித்து இழுந்துக்கொண்டு வெளியே சென்றாள். அதன் பிறகு நிசப்தம். 

கொஞ்சம் நேரம் ரேடியோ வைத்துப் பாட்டுக் கேட்டேன். ஆனால், என் மனம் அதில் லயிக்க வில்லை. தலையணை அடியிலிருந்து புத்தகம் எடுத்துப் புரட்டினேன். என்ன படித்தேன் என்றே மனத்தில் நிற்கவில்லை. கூரையை வெறித்தவாறு கிடந்தேன். காமு வந்தாள். எனக்குச் சாப்பாடு கொடுத்தாள். தாதிப் பெண் போல மற்ற பணிவிடைகளையும் செய்தாள். அவள் முழங்கையைப் பிடித்தேன். 

“என்ன வேணும்?” என்றாள் அவள். 

“ஒண்ணுமே வேண்டாம். கீழே உனக்கு வேலை இருக்கா?” என்று கேட்டேன். 

“ஆமாம். அப்படி அப்படியே கிடக்கிறது. ஒதுக்கி, ஒழிச்சு, ஒழுங்கு படுத்திட்டுச் சாப்பிடணும்” என்றாள். 

அவளும் போய்விட்டாள். கண்களை இறுக மூடிக் கொண்டு எனக்குத் தெரிந்த தோத்திரங்களை மனசோடு சொல்லிக்கொண்டேன். உண்ட மயக்கம். கண்ணைச் செருகியது. 

பட்டுப் போன்ற கை ஒன்று என் மீது படவும் கண்ணைத் திறந்தேன். என் முகத்தின் அருகே கருவண்டுக் கண்கள். “பாட்டீ… நான் வந்துட்டேன்” என்று காதில் சிசுகிசுத்தான் என் பேரன் அருண். 

“கண்ணா, ஸ்கூல் முடிஞ்சுடுச்சா?” 

“உம்…” என்றவன், கட்டில் மீது ஏறி என் அருகே அமர்ந்து, ஒரு மோகனச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய வெல்வெட் போன்ற வயிறு என் உடம்பில் ஜில்லென்று ஒட்டிக் கொண்டது. அவன் முழங்கை என் விலாவில் குத்தியது. அதுவும் ஓர் இன்ப வேதனையாக இருந்தது. 

“பாட்டீ… என் கிளாஸிலே நர்மதா மிஸ் சாக்லெட் குடுத்தாங்க. அவங்களுக்கு ஹாப்பி பர்த்டேவாம். உனக்குக்கூட ஒண்ணுகேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன் பார்” என்று அவன் பிஞ்சுக் கையை விரித்தான். கசகச வென்ற ஈரத்துடன் ஒரு சாக்லெட்டைக் காட்டினான். 

“நீயே என் வாயில் போட்டுடு…” என்றேன். 

அவன் என் வாயில் சாக்லெட்டைத் திணித்து விட்டுத் தன் நுங்கு வாயை என் கன்னத்தில் பதித்து முத்தம் தந்தான். “இனிமேல் .சரியாயிடும்…” என்றான். 

இதற்குள் கீழிருந்து காமு ஓடோடி வந்தாள். “அம்மா வந்தாச்சு. வா, ராஜா…” என்று அழைத்தாள். 

“ஊகூம்…” என்று என்மீது நன்றாகச் சாய்ந்து கொண்டான் அருண். முழங்கை இன்னும் அழுத்தமாகக் குத்தியது. அவன் அம்மாவே தேடிக்கொண்டு வந்து விட்டாள். 

“ராஸ்கல், பாட்டிக்கு உடம்பு சரியில்லை… இங்கே வரக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” என்று கோபத்தோடு அவனைப் பிடித்து இழுத்துக் கீழே இறக்கினாள். 

“பார், உன் முழங்கால் அழுக்கு எல்லாம் இப்ப பாட்டி படுக்கைல்… வா, சக்கையாய் உதைக்கிறேன்” என்று அவனை மிரட்டித் தூக்கிக் கொண்டு போய் விட்டாள். 

நான் அருணை நினைத்து அந்த இனிய அனுபவத்தை மீண்டும் மனதால் அசைபோட்டுச் சுவைத்தேன், மெத்தென்று அவன் வயிறு என் உடம்பில் பட்ட இடம் புளகாங்கிதம் அடைந்தது. 

“போகாதே அம்மா. அங்கே போகக் கூடாது” என் திடீரென்று காமுவின் குரல் கேட்டது. கூடவே யாரோ சாமான்களைத் தூக்கிப் படிக்கட்டுகளில் வைத்து, வைத்து ஏறிவருவது புரிந்தது. கதவைத் திறந்துகொண்டு என் அண்ணன் மகள் எச்சுமி எட்டிப் பார்த்தாள். கதவை அகல திறந்து, இரண்டு பெரிய பிளாஸ்டிக் வாளிகளைச் சுமந்த படி உள்ளே நுழைந்தாள். 

“இப்ப எப்படி இருக்கு உடம்பு? பாவம், தனியா மோட்டு வளையைப் பார்த்துண்டு படுத்துக் கிடக்கிறியே… வாய் வார்த்தையா பேசலாம்னு வந்தேன். உடம்பு வலி மறக்க வேண்டாமா?” 

“அது சரி… ஆனா, இதெல்லாம் என்ன? இங்கே எதுக்குக் கடை பரப்பறே?” என்று கவலையோடு கேட்டேன். 

“இங்கேதான் உன்னோடு பேசிண்டே பட்சணம் செய்யப் போறேன். அதுக்கான சாமான்தான் இது!” 

“ஐயையோ….படுக்கையறை அழுக்காயிடும். கீழே சமையலறைக்கு எடுத்துண்டு போ…”

“அங்கே போனால்… உன்னோடு எப்படிப் பேசறது?” 

எச்சுமி ஒரு ஒரு இரண்டுங்கெட்டான். தனக்காகவு இங்கிதம் போதாது… சொன்னாலும் கேட்கமாட்டாள். புல்டோசர் மாதிரி மேடு, பள்ளம் தெரியாமல் போய்க் கொண்டே இருப்பாள். எனக்கு மிகவும் தர்ம சங்கடமாகி விட்டது. 

“மாயா வந்தா கோவிச்சுப்பா. வீட்டை எப்படிக் கண்ணாடியாட்டம் துடைச்சு வெச்சிருக்கா, பார். இங்கே ஒண்ணும் செய்யக்கூடாது…” 

“அத்தை, உனக்கு ஏன் இந்தப் படபடப்பு? நான் என்ன விறகு அடுப்பா மூட்டப் போறேன்? புகை வருமா, சாம்பல் பறக்குமா? பயப்படாதே…” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் முனைந்தாள். 

முதலில் ஒரு பெரிய ஆயில் கிளாத்தைப் பரப்பினாள். பிறகு, பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்தாள். இலுப்புச் சட்டியை ஏற்றி வைத்து அதில் ஒரு சீசாவிலிருந்து எண்ணெய் ஊற்றினாள். எண்ணெய் காய்வதற்குள் நிமிஷமாக மாவைப் பிசைந்தாள். அச்சில் போட்டாள். அருமையாக வட்டமாக முறுக்குகள் பிழிந்து வேகவிட்டு எடுத்துவிட்டாள். நான் வாயடைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வாளியில் சாமான்கள். ஒரு திருகு மூடி போட்ட குடத்தில் தண்ணீர். கைத்துடைக்க, பாத்திரம் துடைக்க, தரை துடைக்க என்று ஏற்பாடாகி தனித்தனி துணிகள் இருந்தன. ஸ்டவ்வின் ஓசையைச் சுருதியாக அமைத்துக்கொண்டு அதுக்கும் மேலே குரல் எழுப்பிப் பேசினாள். நான் விழுந்து அடிபட்டுக் கொண்ட விவரம் கேட்டாள். தான் போன இடத்தில் கண்ட காட்சிகள், பெற்ற அனுபவங்கள், கணவரோடு சண்டை போட்டது, கேள்வியுற்றது எல்லாம் விஸ்தாரமாக விவரித்தாள். நேரம் போனதே தெரியவில்லை. மெய்ம்மறந்து கேட்டேன் என்று சொல்லமுடியாது. உள்ளூர ஒரு திகில் ஓடிக்கொண்டே இருந்தது. ரவியும் மாயாவும் வந்தால்…” 

வந்து கடை பரப்பியது போலவே அழகாக அடுக்கியும் விட்டாள். செய்த பட்சணத்தை ஒரு வாளியில் வைத்தாள். மற்ற சாமான்களை மற்ற வாளியில் அடுக்கினாள். மெழுகுச் சீலையை மடிக்கும்போது மாயா குரல் கேட்டது. 

“என்ன அக்கிரமம் இது? உடம்பு சரியில்லாத இடத்திலே ஸ்டவ் இரைச்சல்?” 

“வா, மாயா. இந்தப் பம்ப் ஸ்டவ் சித்த அப்படித் தான். முறுக்கு சாப்பிடறயா?” என்று சாவதானமாகக் கேட்டாள். எச்சுமி. 

“எனக்கு முறுக்கும் வேண்டாம்… கிறுக்கும் வேண்டாம். முதல்லே, இடத்தைக் காலி பண்ணுங்கோ. விவரம் தெரியாமல் இப்படியா அநியாயம்?” என்றாள் மாயா உரக்கவே. 

எச்சுமி தன் நிதானத்தை இழக்கவே இல்லை. நிதானமாக சாமான்களை வெளியே கொண்டுவைத்து விட்டு, “அத்தை, நான் போய் வரேன். எல்லா பட்சணமும் மாதிரிக்குக் கொண்டு வரேன். நாளைக்கும் வந்து பேசிண்டு இருக்கேன்” என்று ஓர் அறிக்கை விடுத்துவிட்டு வெளியே சென்று விட்டாள். 

மாயா பொறுமை இழந்தவளாக எச்சுமி செல்வதையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தாள். அதற்குள் எங்கிருந்தோ அருண் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்து என் கட்டிலை நோக்கி ஓடி வந்தான். மாயா சட்டென்று அவனைப் பிடித்துத் தூக்கிக் கொண்டாள். அவன் திமிற, தொடையைத் திருகினாள். “ராஸ்கல்! பாட்டி ரூமுக்கு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லியா!” என்றபடி ஒரு அடி வைத்தாள். 

அருண் அழ அழ, அவனைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள் மாயா. 

அவர்கள் சென்ற பிறகு அறை மீண்டும் அமைதியாகியது. நான் யோசிக்கலானேன். உடம்பு சரியில்லாத போது, பலவீனமாக இருக்கும் போது, சரீரத்துக்கு சுத்தமும் சுகமும் இருந்தால் மட்டும்போதாது. மனசுக்குள் ஒரு நெருடல், ஒரு தேடல் இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்ய ஒரு பேச்சுத் துணை, ஒரு ஸ்பரிச துணை இரண்டுமே தேவை. 

நிறையப் படித்த என் மகனுக்கும் மருமகளுக்கும். இது புரியாமல் போனது ஏன்? 

– 09-07-2000, பிரமாதமான கதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *