மனுசனா நீ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 2,197 
 

கண்களில் கண்ணீர். வயிற்றினில் பசி. கதவோரம் சுருண்டு படுத்திருந்த நாலு வயது பரத்தைக் கண்டதும் இன்னும் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது கங்காவிற்கு.

“ச்ச.. என்ன மனுசன் இவன்? குடிகாரப் புருஷனுக்கு வாக்கப்பட்டது என் தப்பு தான். இந்த குட்டி ஜீவன் என்ன பாவம் பண்ணுச்சு?”

“தானா வேலைக்குப் போயி எதுவும் சம்பாதிக்கறதும் இல்ல.. கஷ்டப்பட்டு முள்ளுக்காட்டு போயி சம்பாதிச்சு வந்த கொஞ்ச நஞ்ச காசையும் எங்கிட்ட விட்டு வைக்கிறதும் இல்ல. ஒரு குட்டிப்பையன் இருக்கானே! அவனுக்கும் பசிக்குமே! அதுக்காவது வீட்டுல எதாவது இருக்கா அப்படீனு எந்த நெனப்பும் இல்ல..”

“காச தரமாட்டேனு கத்திச் சொன்னப்போ, எவ்ளோ கோவம் வந்துச்சு.. எவ்ளோ பெரிய அடி அடிச்சு புடுங்கிட்டுப் போயிட்டான். இப்ப குடிச்சிட்டு எங்க விழுந்து கெடக்கறானோ.. ச்ச.. என்ன வாழ்க்கை இது? இந்த வெக்கங்கெட்ட பொழப்புக்குத்தான் எங்கப்பா, ஆத்தா என்னை சின்ன வயசுலேயே பாட்டிக்கிட்ட விட்டுட்டு மேல போயிட்டாங்களோ!”

“அப்ப இருந்து நான் படாத கஷ்டமா! பேசும் போது பாட்டிக்கிட்ட ரொம்ப நல்லாத்தான் பேசினான். ஆனா கல்யாணத்தன்னைக்கே அவனோட சுயரூபத்த காட்டிட்டானே!”

“அப்பவே பாட்டிட்ட சொன்னேன்..”

“வேணாம் பாட்டி விட்டுடலாம்னு.. ஆனா பாட்டி கேக்கலயே!”

“அன்னைக்கு அவன் பண்ணின அலப்பறய பாத்துட்டு, பாட்டி கேள்வி கேக்கப் போயி, அவங்களையே தள்ளி விட்டுட்டான். அதுல காயமானவங்க தான்.. உடலாலும் மனசாலும்.. அப்பறம் எந்திரிக்கவேயில்ல..”

“சரி அதப்பாத்தாவது திருந்துவான்னு பார்த்தா, எனக்கு யாருனு இல்லேனு ஆனப்பறம்.. அவனோட குடி இன்னும் அதிகமாயிருச்சு..”

“எனக்குனு வருத்தப்பட்டு யாரு பேசுவா? யாராவது சப்போர்ட் பண்ணி பேச வந்தா, இல்லாததையும் பொல்லாததையும் பேசி வாய அடச்சிடுவான். அதுக்காகவே யாரும் அவங்கிட்ட எதும் வச்சிக்கிறது இல்ல..”

பொங்கிய அழுகையுடன் இன்னுமொரு டம்ளர் பானைத் தண்ணியை மொண்டு குடித்தாள்.

வாசலில் நிழலாடுவது தெரிந்தது.

“க‌ங்கா.. க‌ங்கா..”

எழுந்து வெளியே வந்தாள்.

தள்ளாடிய படியே நின்றிருந்தான் சுரேஷ்.

“என்னை மன்னிச்சுக்க கங்கா.. இன்னிக்குத்தான் இது கடைசி வாட்டி.. இனி குடிக்கமாட்டேன். சத்தியமா”, எனச் சொல்லி அப்படியே சுருண்டு விழுந்தான்.

இன்னும் அவன் மேல் வெறுப்பு அதிகமாக, அவனைத் தரதரவென கஷ்டப்பட்டு இழுத்து உள்ளே போட்டாள்.

இவனது சத்தம் கேட்டு பரத் விழித்திருந்தான்.

“அம்மா.. அம்மா..”, என மெதுவாக அழைத்தான். “என்ன.. சொல்லு பரத்”

“பசிக்குதும்மா”

அதைக் கேட்டதும் துக்கம் அதிகமாக கண்ணீரைத் துடைத்தபடி, நாலைந்து டப்பாக்களைத் தேடினாள். சில்லறையாக பத்து ரூபாய் தேறியது. அவனையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த டீக்கடை நோக்கி ஓடினாள் கங்கா..


அடுத்த நாள் பொழுது கண்ணுக்கு மட்டுமே விடிந்தது. மனதும் உடலும் மிகவும் துக்கத்தில் இருந்துச்சு.

கண்கள் ரெண்டும் சிவந்திருந்தன கங்காவிற்கு. பசி மயக்கக்தில் சரியான தூக்கமும் இல்லை.

பாவமாய் தூங்கிக் கொண்டிருந்த பரத்தை வருடி விட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு நாட்களாக பத்த வைக்காத அடுப்பு வெறுமையாக காட்சியளித்தது.

கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு மூன்று கிழிந்து போன சேலைகளும் கங்காவின் நிலையை படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன.

அழையா விருந்தாளியாக மீண்டும் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது கண்ணீர்.

நேத்து முள்ளுக்காட்டில் விறகு பொறுக்கிக் கொண்டு இருந்த போது பத்மா சொன்னது அப்படியே இவள் காதிற்குள் எதிரொலித்தது.

“கங்கா.. இதெல்லாம் திருந்தாத‌ ஜென்மங்கள். எதுக்குத்தான் இந்த உலகத்துல பொறந்து நம்ம உசுர வாங்குதுங்களோ! இதுமாதிரி இருக்கறவனுகளையெல்லாம் நான் மனுஷனாவே மதிக்கறது இல்ல.. பேசாம அத்து வுட்டுரு.. போடா இவனேனு.. நீ அவன விட்டு வெளிய வந்திரு.. கல்யாணமானதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் கொஞ்சமாவது பொறுப்பா நடந்திருக்கறானா? எதாவது கம்பெனிக்கு போறேனு ஒரு வாரம்.. பத்து நாள் போக வேண்டியது. அப்பறம் அங்கேயும் குடிச்சிட்டு கலாட்டா பண்ணிட்டு வேலையில்லாம நிக்க வேண்டியது. இந்த குடிகாரனுகள நெனச்சாலே எனக்கு வெறுப்பா இருக்கு. குடிக்கறான் சரி.. அத வீட்டுக்குள்ளேயே வச்சிக்கலாம்ல. அப்படியே போஸ்டர் ஒட்டி ஊரெல்லாம் அறிவிக்க வேண்டியது. நான் குடிகாரன், குடிகாரன்..அப்படீனு.. வீட்டுக்குள்ளேயே குடிச்சிட்டு, காலைல ப்ரஷ்ஷா எந்திருச்சு வேலைக்கு போனா தான் என்ன? வெளிய போயித்தான் குடிக்கனும்னு இருக்கா என்ன? அப்பத்தான் ஏர்ற போத நல்லா ஏறுமா? எங்க எங்கவோ போயி குடிக்க வேண்டியது.. ரோட்ல போற வர்றவங்கள என்னென்னவோ சொல்லி பேச வேண்டியது.. எவன் எவங்கிட்டயோ அடி வாங்க வேண்டியது.. என் புருஷனும் அப்படித்தான் இருந்தான். தெனம் தெனம் வேணாம் வேணாம்னு கதறிப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். ஒன்னும் கேக்கற மாதிரி தெரியல.. டே.. வெளியில வேணான்டா. .வீட்டுல மட்டும் குடினா. அதுவும் கேக்கல.. அன்னைக்கு வந்த கோவத்துக்கு.. கட்டுல்ல குடிச்சிட்டு படுத்திருந்தப்ப அப்படியே கையையும் காலையும் கட்டுலோட சேத்து கட்டிப்போட்டுட்டேன். ரெண்டு நாளைக்கு சாப்பாடு தண்ணி ஒன்னும் கொடுக்கல.. அவன் பக்கம் போறப்பல்லாம் ‘பொலிச் பொலிச்’னு ரெண்டு மூனு அறை விட்டேன். பார்க்க பாவமாத்தான் இருந்துச்சு. ஆனாலும் அவன் எனக்கு பண்ணியிருந்த அக்கப்போருக்கு முன்னால இதெல்லாம் ஒன்னுமே இல்ல.. கயிற அவுத்துவுட்ட அன்னைக்கு.. நடக்கு கூட முடியாம “இதோவரே”னு போனவந்தான்.. நாலு வருஷமாச்சு.. இன்னும் வரல..”

“என்ன அப்படி பார்க்கற? இப்போ சந்தோசமா இருக்கியானு கேக்கறியா? இப்ப சந்தோசமா இருக்கேனோ இல்லையோ! அடி வாங்காம, ஏச்சு வாங்காம, ஊரு பூரா ராத்திரி முழுக்க எங்க விழுந்து கெடக்கானோனு தேடிட்டு இல்லாம.. ரொம்ப நிம்மதியா இருக்கேன்”

“எதோ உன்ன பார்க்கறப்பெல்லாம் இத சொல்லனும்னு நெனச்சிட்டே இருந்தேன். இதுவரைக்கும் அதுக்கான சந்தர்ப்பம் அமையல.. இன்னைக்கு

சொல்லிட்டேன்.. இதையே நீ செய்யுனு சொல்லல.. எனக்கு என்ன சரினு தோனுச்சோ அத நான் செஞ்சேன். உனக்கு எது சரினு படுதோ அத நீ செய்”

“ம்.. எனக்கு என்ன தோனுது? பத்மா செஞ்சதவிட வெறித்தனமா எதாவது பண்ணனும்னு என்னென்னவோ தோனுது..”,

இப்படி யோசித்தவாறே மெல்ல எழுந்தாள் கங்கா.

“ஏங்க.. ஏங்க..”, என சுரேஷை உலுப்பிப்பார்த்தாள். அவன் எந்திரிப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.

பரத்தை கிளப்பினாள். மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்து, அருகிலிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்றாள்.

யாரோ.. வெளியூர் காரங்க போல.. சாமி கும்பிட்டு விட்டு வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தவங்க.. இவங்களைப் பார்த்ததும் இங்க வாம்மானு கூப்பிட்டு ரெண்டு தட்டில் இட்லிய போட்டு கொடுத்தாங்க..

பசி தாங்கி பசிதாங்கி ஒட்டி போயிருந்த வயித்துல ரெண்டு இட்லிக்கு மேல போகல..

நன்றாகவே சாப்பிட்ட பரத் கொஞ்சம் தெளிந்திருந்தான்.

கங்காவிற்கும் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்தது. கருவறையின் முன் பரத்தைக் கூட்டிக்கொண்டு போய் நின்றாள்.

“ஆத்தா.. எங்கள நல்லா புரிஞ்ச தெரிஞ்ச ஆத்தா.. உன் சன்னதிக்கு வந்தவுடனே எங்க நிலையறிந்து சாப்பாடு கொடுத்த பார்த்தியா.. ரொம்ப நன்றி.. நான் இப்போ ஒரு முக்கியமான கேள்வியோட உன் முன்னாடி வந்து நிக்கறேன். ரெண்டு தீர்மானம் மனசுல எடுத்துருக்கேன்.. நான் என்ன பண்ணட்டும்னு நீயே சொல்லு!”

“ஒன்னு.. நானும் என் பையனும் கெளம்பி எங்கேயாவது கண்காணாத எடத்துக்குப் போறது. அதுனால எம் புருஷனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.. ரெண்டு நாள் தேடுவான். அப்பறம் கண்டுக்காம விட்டுடுவான்”

“இன்னொன்னு.. நெனைக்கும் போதே உடம்பெல்லாம் இப்பவே நடுங்குது.. சுரேஷ அந்த வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு, எங்க குடிசையை கொளுத்தி விடறது. அப்பறம் ஊருக்குள்ள போயி அலறி.. காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கத்தறது..”

“நீயே சொல்லு ஆத்தா. .பூவா தலையா”, என காசை சுண்டிப்போட்டாள்.

அவளுக்கு முன்னே விழுந்த காசு.. ஓடி ஓடி அருகிலிருந்த ஒரு சிலைக்கடியில் அடைக்கலமானது.

கங்காவுக்கு ஆத்தா என்ன சொல்ல வரானு புரியவேயில்லை.

பரத்தை கூட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்றவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

குளித்துவிட்டு நெற்றியில் திருநீறுடன் பக்திமயமாய் உட்கார்ந்திருந்தான் சுரேஷ்.

கோவிலுக்கு வேறுவித மனநிலையுடன் சென்று வந்தவள், இந்தக் காட்சியை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.

“வா கங்கா.. வேலைக்கு கெளம்பிட்டேன்”, எனச் சொன்னவனை நம்பிக்கை இல்லாதவளாகப் பார்த்தாள் கங்கா.

அதைப் புரிந்து கொண்டவன், “என்ன கங்கா.. இப்படி பார்க்கற? நெசமாத்தான் சொல்றேன். நம்ம வீட்டுக்கு அம்மா வந்திருந்தாங்க”, என அவன் சொன்னதும் அதிர்வுடன், “யாருங்க?”, என்றாள்.

“எங்க அம்மா கங்கா.. படுத்திருந்தேனா வந்து எழுப்பி உக்கார வச்சாங்க..”

“மாறி மாறி கன்னத்துல ஏழெட்டு அடி கொடுத்தாங்க.. போத மொத்தமா தெளிஞ்சிருச்சு.. என்ன பொழப்புடா இது.. எப்பப் பார்த்தாலும் குடி குடினு.. பொண்டாட்டி புள்ளைங்கள இப்படித்தான் பார்த்துப்பியா..? சரியாவே சரியாவேனு இத்தன நாளா காத்திட்டு இருந்தேன். ஒன்னும் ஆகற மாதிரி தெரியல.. அதான் நேர்லயே வந்துட்டேன். இனியும் இப்படியே திருஞ்ச.. என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை படுபயங்கரமா இருக்கும்னு அவங்க சொன்ன போதே நான் முழுசா திருந்திட்டேன் கங்கா..”, என சுரேஷ் சொல்லி முடிக்க.. சுவற்றில் மெலிதாக ஆடிக் கொண்டிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்தாள் கங்கா.

குங்குமப் பொட்டுடன் சிரித்தபடி இருந்த மாமியார், இன்னும் நன்றாக வாயசைத்து சிரிப்பது போலப் பட்டது.

இவள் பார்க்க பார்க்க அந்த முகம் இவள் சன்னதியில் கண்ட அம்மனின் முகம் போல மாறிக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *