தூக்கம் என் கண்களை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,865 
 

அரசகுமாரன் நவ்கிரீன் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தான். இது அந்நாட்டு அரசனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. பல கலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய இளம் வயது. இந்த வயதில் இப்படி ஒரு தூக்கமா என்று எண்ணி வருந்தினான். அரசகுமாரனுக்கு நல்ல கல்வி புகட்டுவதற்காக புலவர் வித்தகமித்திரர் அமர்த்தப்பட்டார். புலவரிடம் பத்தே நிமிடம் பாடம் கேட்டான். உடனே தலையை வலிக்கிறது என்று சொல்லி ஓடிவிட்டான். பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டான்.

“”ஏண்டா கண்ணு, இப்படி வந்து படுத்துக் கொள்கிறாய்? நீ கற்க வேண்டிய காலத்தில் கற்றால்தானே நல்லது! நாளைக்கு நீ இந்த நாட்டை ஆள வேண்டிய கடமை இருக்கிறதே! அப்போது என்னடா செய்வாய்?” என்பார். தாயின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் உறங்க ஆரம்பித்தான். அரசர் வந்து பார்த்தார். மகன் உறங்கிக் கொண்டு இருந்தான். மகனுடைய உறக்கத்தைத் தடுப்பது எப்படி என்று சிந்தித்தார்.

“”வேடிக்கை காட்டத் தெரிந்தவர்கள் வருக! வித்தைகள் காட்டத் தெரிந்தவர்கள் வருக! என் மகனுக்கு முன்னே வந்து காட்டுக!” என்று நாடு முழுவதும் அறிவிக்கச் செய்தான். ஆனால், தன் மகன் ஒரு தூங்கு மூஞ்சி என்பதை மட்டும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிப்பது தமக்குப் பெரிய அவமானம் என்று கருதினான். எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆளப் போகிறவன். அவன் எப்போதும் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்றால் மக்கள் எப்படி அவனை மதிப்பர்? இப்படி மன்னன் மனத்தில் எண்ணங்கள் ஓடின. வேடிக்கைகளைப் பார்ப்பதற்காவது இவன் தூங்காமல் இருக்கட்டுமே என்று கருதினான். கோணங்கி சேட்டைகள் எல்லாம் பலர் செய்து காட்டினர். இளவரசன் அவற்றைப் பார்த்து நன்றாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே தூங்கினான்; தூங்கிக் கொண்டே சிரித்தான். வித்தை காட்டுகிறவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இளவரசர் சிரிக்கிறாரா அல்லது தூங்குகிறாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

வித்தை காட்டுவதை நிறுத்தினர். உடனே இளவரசன், “”ஏன் நிறுத்தி விட்டீர்கள்? தொடர்ந்து உங்கள் வித்தைகளைக் காட்டுங்கள்,” என்றான். “”அட, நம் இளவரசர் தூங்குவது போலவும் இருக்கிறார்; தூங்காதது போலவும் இருக்கிறாரே!” என்று பேசிக் கொண்டனர். புலவர் இளவரசனை வந்து பார்த்தார். “”தம்பி, இந்த வித்தைகளைச் சிறிது நிறுத்தச் சொல்லட்டுமா? என்னிடம் பாடம் படிக்கிறாயா?” என்று கேட்டார். புலவர் குரல் கேட்டதும் இளவரசன் கண்ணை நன்றாக மூடிக் கொண்டான். “”நாளைக்குப் படிக்கிறேன் ஐயா! இப்போது வித்தைகள் நடக்கட்டும்!” என்றான். புலவர் பேசாமல் போய்விட்டார். மறுநாள் புலவர் வந்தார். இளவரசனைப் பாடம் படிக்கிறாயா என்று கேட்டார். அவன் மறுநாள் படிப்பதாகச் சொன்னான். ஒவ்வொரு நாளும் இப்படியே ஏமாற்றி வந்தான். ஒரு நாள் வித்தை காட்டுகிறவர்கள் யாரும் வரவில்லை. அன்று புலவர் வந்தார். “”நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் இன்று பாடம் நடத்தப் போகிறேன்,” என்றார்.

“”எனக்குத் தலையை வலிக்கிறது. நான் தூங்கப் போகிறேன் ஐயா!” என்றான் இளவரசன். “”அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. நீ நன்றாகத் தூங்கிக் கொள். அதோ ஆடிக் கொண்டு இருக்கிறது மயில், அது என் பாடத்தைக் கேட்கட்டும். அதோ இருக்கிறதே பைங்கிளி. அது என் பாடத்தைக் கேட்கட்டும். இந்த அறையில் உள்ள ஓவியங்கள் என் பாடத்தைக் கேட்கட்டும்,” என்றார் புலவர்.

“”அவை கேட்பதால் உங்களுக்கு என்ன பயன் ஐயா?”

“”எனக்கு ஒன்றும் பயன் இல்லை. அரசகுமாரன் கேட்க வேண்டிய கல்வியைக் குயிலும் கிளியும் கேட்கும். அடுத்த பிறவியில் அவை அரசகுமாரனாகப் பிறந்தாலும் பிறக்கும்.” “”அப்படியானால் நான் அடுத்த பிறவியில் அரசகுமாரனாகப் பிறக்க மாட்டேனா?” என்று கோபத்தோடு கேட்டான். “”இந்தப் பிறவியிலே நீ அரச குமாரனுக்கு உரிய கடமை எதையுமே செய்யவில்லை. எப்போதும் தூங்குவதில் ஆர்வமாக இருக்கிறாய். அதனால் அடுத்த பிறவியில் நீ எப்படி அரச குமாரனாகப் பிறக்க முடியும்?” என்று கேட்டார் புலவர்.

“”வேறு எப்படிப் பிறப்பேன்?”

“”இதோ இந்த மயில் போல் பிறக்கலாம்; இந்தக் கிளி போலப் பிறக்கலாம்.”

“”அப்படி எல்லாம் என்னால் பிறக்க முடியாது. நான் அரசகுமாரனாகத்தான் பிறந்தாக வேண்டும். அதற்கு வேண்டிய காரியங்களைத் தொடங்குங்கள்,” என்று அதிகாரமாகக் கட்டளை இட்டான். “”இப்போதே தொடங்குகிறேன் இளவரசே!” உங்களுக்காக என் புலமை முழுவதையும் செலவு செய்கிறேன். நீங்கள் படித்துக் கொள்வதற்கு நல்ல நல்ல பாடங்களை நான் சொல்லித் தருகிறேன்,” என்று தொடங்கினார் புலவர். புலவர் பல நல்ல கருத்துக்களைச் சொன்னார். சுவையாகக் கதைகள் சொன்னார். நயமான பாடல்கள் சொன்னார். ஏடுகளில் இருந்து படித்துக் காட்டினார். சில சமயங்களில் நடித்துக் காட்டினார்.

இளவரசனுக்கு இவற்றைக் கேட்பதில் விருப்பமாகவும் இருந்தது. சில சமயம் வெறுப்பாகவும் இருந்தது. தூங்குகிற இன்பம் போனதே என்று நினைத்தபோது அவனுக்கு வெறுப்பாக இருந்தது. “புலவருடைய பாடங்களைக் கேட்காமல் எப்படி நாம் தப்பித்துக் கொள்வது? எங்கே ஓடிப் போய் ஒளிந்து கொள்ளலாம்?’ என்று இளவரசன் சிந்திக்கத் தொடங்கினான்.

அரண்மனையில் எங்கே ஒளிந்து கொண்டாலும் தன்னைக் கண்டுபிடித்து விடுவர். அரண்மனையை விட்டு வெளியே போய் விடலாமா என்று சிந்தித்தான். நகரத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் நம் அரண்மனை வீரர்கள் கண்டுபிடிப்பரே என்ற கவலை வந்தது. இளவரசன் நீண்ட நேரம் சிந்தித்தான். “காட்டுக்குப் போய் வேட்டையாடுகிறேன் என்று சொல்லவிட்டு காட்டுக்குப் போவோம். அங்கே நல்ல இடம் அமைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டு இருக்கலாம்’ என்று முடிவு செய்தான். தன் முடிவைத் தந்தையிடம் தெரிவித்தான். “”வேட்டை ஆடுவதற்கு உரிய வயது உனக்கு இன்னும் வரவில்லை மகனே! சிறிது காலம் போகட்டும்,” என்றார் அரசர். மகன் பிடிவாதமாக இருந்தான். “”நான் உடனே காட்டுக்குப் போக வேண்டும். வேட்டை ஆட வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் அப்பா,” என்று கேட்டுக் கொண்டான். அரசர் புலவரிடம் தம் மகன் விருப்பத்தைக் கூறினார்.
“”அப்படியே அனுப்பி வையுங்கள்!” என்றார் புலவர். புலவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லையே என்று இளவரசன் வியப்பு அடைந்தான். இளவரசனோடு பல அரண்மனை வீரர்கள் காட்டுக்குப் புறப்பட்டனர்.

காட்டுக்கு நடுவே சென்று கூடாரம் அமைத்தனர். “”எனக்குத் தனியிடத்தில் கூடாரம் வேண்டும். இன்னும் சிறிது தூரம் தள்ளி எனக்குக் கூடாரம் அமையுங்கள்,” என்றான் இளவரசன். “”தனியே அமைப்பது ஆபத்து இளவரசே! எல்லாரும் ஒரே இடத்தில் கூடாரங்கள் அமைப்போம்!” என்று வீரர்கள் சொன்னதை இளவரசன் கேட்கவில்லை. “”என் கட்டளையை நிறைவேற்றுங்கள்!” என்று கத்தினான். வீரர்கள் வேறு வழியின்றி அவனுக்குத் தனியே கூடாரம் அமைத்தனர். தனிக் கூடாரத்தில் இளவரசன் தங்கினான்.
“”நாளைக்கு நான் வேட்டைக்கு வருவேன். இன்று நீங்கள் எல்லாரும் வேட்டைக்குச் செல்லுங்கள்,” என்றான் இளவரசன். “”இங்கே நீங்கள் தனியே தங்கி இருப்பது ஆபத்து இளவரசே! நீங்கள் எங்களோடு வாருங்கள் அல்லது எங்களில் சிலர் உங்களோடு துணையாக இருக்கட்டும்,” என்று வீரர் தலைவன் சொன்னான்.

இளவரசன் கேட்கவில்லை. “”நான் உங்களோடு வரமாட்டேன். இங்கே தனியாக இருப்பேன். எனக்குத் துணையாக யாரும் தேவை இல்லை. எல்லாரும் புறப்படுங்கள்,” என்று ஆணையிட்டான். வீரர்கள் வேறு வழியின்றிப் புறப்பட்டனர். இளவரசன் கூடாரத்தின் உள்ளே சென்றான். தனக்கு அமைக்கப்பட்ட படுக்கையில் மகிழ்ச்சியுடன் படுத்து உறங்கினான். மாலையில் வீரர்கள் திரும்பும் வரை உறங்கிக் கொண்டே இருந்தான். வீரர்கள் வந்து எழுப்பினர். இளவரசன் எழுந்து உட்கார்ந்தான். தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை எல்லாம் காட்டினர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.

மூன்று நாளும் இப்படியே நடந்தது. நான்காவது நாள் வீரர்கள் வேட்டைக்குப் புறப்பட்டுப் போனார்கள். இளவரசன் தனியே படுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது பயங்கரமான ஒலி கேட்டது. தூங்கிக் கொண்டு இருந்தவன் விழித்தான். கூடாரத்திற்கு வெளியே வந்து பார்த்தான். ஒரு சிங்கம் கர்ஜனை செய்து கொண்டு நின்றது. அதைப் பார்த்ததும் இளவரசனுக்கு நடுக்கமாக இருந்தது. இருந்தாலும் அந்தச் சிங்கத்தை நோக்கிக் கட்டளை இட்டான். “”நான் இந்த நாட்டு அரசகுமாரன். என் முன் நின்று பயம் காட்டாதே. ஓடிப் போ!” என்றான். அது ஓடத் தயாராக இல்லை. அவனைப் பார்த்துக் கர்ஜனை செய்தது. அவன் என்ன சொல்லியும் அது அசையவில்லை. இளவரசன் மெய்யாகவே அழத் தொடங்கி விட்டான். அவன் மீது பாய்வதற்குச் சிங்கம் முன்னங்கால்களைத் தூக்கியது. தூரத்தில் இருந்து இரண்டு அம்புகள் சரியான நேரத்தில் சிங்கத்தின் மேல் தாக்கின. சிங்கம் பயங்கரமாக அலறிக் கொண்டு சாய்ந்தது. இளவரசன் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

தூரத்தில் இரண்டு வீரர்கள் ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்த பிறகுதான் இளவரசனுக்குச் சற்று அச்சம் குறைந்தது. “”இளவரசே, உங்களுக்கு ஆபத்து வரும் என்று தான் உங்களுக்கு தெரியாமல் காவல் இருந்தோம். தக்க சமயத்தில் உங்கள் மேல் பாய இருந்த சிங்கத்தைக் கொன்றோம்,” என்று வீரர்கள் சொன்னார்கள்.

“”என்னைத் தூக்கத்திலேயே இந்தச் சிங்கம் அடித்துக் கொன்று இருந்தால் என் எலும்புகளைக் கூட நீங்கள் பார்த்து இருக்க முடியாது. என் பக்கத்தில் உங்களைக் காவல் இருக்கச் சொல்லாமல் விரட்டியது எத்தனை பெரிய தவறு. இப்போது புரிந்து கொண்டேன். இனிமேல் எப்போதும் அளவாகத் தூங்குவேன்.” இளவரசர் பேச்சைக் கேட்டு வீரர்கள் மகிழ்ந்தனர். வேட்டைக்குச் சென்ற வீரர்கள் திரும்பி வந்தனர். நடந்த செய்தியை அறிந்தனர். இளவரசர் மனம் மாறினார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

மறுநாளே நாட்டுக்குப் புறப்பட்டனர். இளவரசன் நாட்டுக்குள் நுழைந்ததும் நேராகப் புலவர் முன்னால் போய் நின்றான். அவர் காலில் விழுந்து வணங்கினான்.

“”ஐயா, உங்களிடம் பாடம் கேட்பதைக் கசப்பாக நினைத்தேன். எப்போதும் தூங்குவதையே இனிப்பாக நினைத்து இருந்தேன். இது எத்தனை தவறு என்று புரிந்து கொண்டேன். அருள் கூர்ந்து என்னை மன்னியுங்கள்,” என்று வேண்டினான

“”காட்டிலே நீ நிம்மதியாகத் தூங்க முடியாது என்பது எனக்குத் தெரியும். நீ திருந்துவாய் என்பதும் எனக்குத் தெரியும். அதனால்தான் நீ காட்டிற்குப் புறப்பட்ட போது நான் தடை ஏதும் சொல்லவில்லை,” என்றார் புலவர்.

அரசர் மகனின் மனமாற்றம் அறிந்து மகிழ்ந்தார். தூங்கிக் கொண்டே இருந்தவன் புதிய எழுச்சியோடு திகழ்ந்தான். தூக்கம் ஊக்கமாக மாறியது.

– ஜூலை 23,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *