அருக்காயியின் கம்மல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 2,098 
 

அருக்காயிக்கு அழுகை அழுகையாய் வந்தது. கணவன் அவள் கையையே எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான். மாட்டேன் என்பது போல தலை அசைக்க நினைத்தவள் என்ன நினைத்தாளோ அழுது கொண்டே தன் கம்மலை கழட்டி அவன் கையில் கொடுத்தாள்.

இந்தா அழ்வாதே புள்ளே, எப்படியும் வாங்குன ஆடு குட்டி போட்டா அதை வித்து உனக்கு இதை இட்டாந்து தாறேன், முனியாண்டி பதனமாய் சொன்னாலும் அருக்காயிக்கு தெரியும், குடியானவன் புழைப்பு, ‘வாய் அளவுக்குத்தான்னு’ இது எப்ப இவ கைக்கு வருமோ?

இப்படித்தான் சொல்லி போன வருசம் வாங்கிட்டு போன ‘சங்கிலி’ ஒண்ணு, காலோ, அரையோ இருக்கும், அதை எடுக்கறதுக்கு துப்பு வரலை, இப்ப கம்மலுக்கு வந்து நிக்குது.

முனியாண்டியை சொல்லி என்ன பிரயோசனம், அவனுந்தான் பாவம் பாடுபட்டு போனவருசம் சங்கிலியை வச்சு பூச்சி மருந்து வாங்கி தெளிச்சான். எப்படியும் மகசூலுல எடுத்துடலாமுன்னு சொல்லிகிட்டுத்தான் இருந்தான். இங்கதான் “சாண் ஏறுனா முழம் வழுக்கற” கதையா இருக்குதே. பாவம், இவனுக்கு வயித்து நோவு வந்து கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலதான் சேத்து பாத்தாலும், செலவு அங்க மட்டும் என்ன குறைஞ்சு போகுதா, இங்கிருந்து டவுனுக்கு போயி வர அப்ப்டி இப்படின்னு இரண்டாயிரம் பக்கம் இழுத்துகிட்டு போயிடுச்சு. அப்புறம் என்ன அரை ஏக்கராவுல விளையற விளைச்சல்ல என்னத்த சுகத்தை பாக்கமுடியும். சங்கிலி அப்படியே தங்கி வட்டி குட்டி போட்டுட்டு இருக்குது.

இப்ப நல்ல சினை ஆடு ஒண்ணு விலைக்கு வருது, வாங்கிடுவோம், எப்படியும் குட்டி மிஞ்சும், வித்து காசாக்கிட்டா ஆடு மிச்சம், இப்படி முனியாண்டியும், அருக்காயியும் உட்கார்ந்து பேசித்தான் கம்மலை கேட்டான். அதெல்லாம் முடியாதுன்னு எப்படி சொல்ல் முடியும் அவளால.

ஆனா ஒண்ணு இந்த கம்மலு மட்டும் அவ காதுல தங்கறதே இல்லை, அதை சம்பாதிக்க அவ அப்பன் பட்ட பாடு, இவளும் அப்பன் கூட சந்தைக்கு போயி அதைய வித்து, இதைய் வித்து, ஆறு வருசம் மல்லு கட்டி அவனை கூட்டிகிட்டு போய் ஆறுமுக ஆசாரி கடையில போயி நின்னு வாங்கின “கம்மலு. பாப்பாவுக்கு அப்படியே பொருத்தமாயிருக்கு”, ஆறுமுக ஆசாரி எப்ப வெத்தலை போட்ட வாயால சொன்னாரோ, வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கூட ஆயிருக்காது. அருக்காயின் அம்மா பக்கத்துல வந்து நின்னு, அடியே உன் கம்மலை கழட்டி கொடு, என்று நின்றாள்

எதுக்கு? அதெல்லாம் முடியாது, இவள் தலையை ஆட்டி மறுப்பு தெரிவிக்க, அவள் அம்மா பத்ரகாளியாய் சண்டை போட்டு கம்மலை பிடுங்கி சென்றாள். அது அடகுகாரனிடம் தூங்கி இரண்டு மூன்று வருசம் இழுத்து எப்படியோ முனியாண்டி பெண் கேட்டு வர அவளது கம்மலுக்கு விடிவு காலம் வந்து மீண்டும் இவள் காதுக்கு வந்து சேர்ந்தது.

அதுவும் மூன்று மாதம் கூட ஆகவில்லை, இப்பொழுது மீண்டும் அடகுகாரனிடம் படையெடுக்கிறது. நினைத்து பார்த்தாலே அவளுக்கு அழுகையாய் வருகிறது.

அருக்காயி கம்மலை மறந்து இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிறது. முனியாண்டி வாங்குன ஆடு இரண்டு ஈத்து போட்டுடுச்சு, ஆனா கம்மலு மட்டும் வந்த பாட காணோம். திடீருன்னு அவ புருசன் முனியாண்டி இந்தா புள்ளை, கையில கம்மலை கொண்டு வந்து கொடுக்கவும் இவளுக்கு ஆனந்தமுன்னா அப்படி ஒரு ஆனந்தம். “அப்பாடி என் கம்மலு” என் கிட்டே வந்துடுச்சு, சந்தோசமா சொல்லி வூட்டுக்குள்ளார போனாளோ இல்லையோ..!

“முனியாண்டி” பெருங்குரலுடன் வூட்டுக்காரனின் அக்கா உள்ளே நுழைஞ்சா.

இவ எதுக்கு இப்ப வந்துருக்கா, மனசுக்குள்ள நினைச்சாலும் ‘வாங்க மைனி’..அன்பாய் கூப்பிட்டு போனாள். எப்படியிருக்கே அருக்காயி ! தம்பி பொண்டாட்டியை தொட்டு பேசியவள், அவள் காதை பார்த்து விட்டு கண்ணை தாழ்த்திக்கொண்டாள்.

அன்று இரவு முனியாண்டி ‘’புள்ளே உன் கம்மலை’’ கொஞ்சம் கழட்டி கொடு.. முடியாது என்று சொல்ல நினைத்தவள், பாவி தம்பி வூட்டுக்குள்ள வரும்போதே என் க்ம்மலை உத்து பாத்தாளே, மனதுக்குள் சபித்தாளும் எதுவும் பேசாமல் கழட்டி கொடுத்தாள். அவள் எதுவும் பேசாமல் கழட்டி கொடுக்கவும், முனியாண்டிக்கு மனசு வருத்தமாகி விட்டது. தப்பா நினைச்சுக்காத புள்ளே, அக்கா மக பாரிக்கு சடங்குக்கு பணம் பத்தலியாம்,பணம் ஏதாவது கொடுத்து உதவ முடியுமான்னு கேட்டா, அதான், இதை வச்சு பணம் புரட்டி கொடுத்துட்டு சீக்கிரமாவே மீட்டு உனக்கு கொடுத்துடறேன். மன சமாதானத்திற்கு சொன்னானோ இல்லை உண்மையாக சொன்னானோ தெரியாது, இவள் எதுவும் பேசாமல் போய் விட்டாள்.

ஒரு வருடம் ஓடி விட்டது, முனியாண்டி இவள் கையில் மீண்டும் கொடுத்த கம்மல் அவளுக்கு அவ்வளவாக சந்தோசத்தை கொடுக்கவில்லை. கடமையே என்று காதில் போட்டுக்கொண்டாள். மாலையே அவளுக்கு வாந்தி மயக்கம் வர, அவசர அவசர்மாய்…ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றான் முனியாண்டி.

 அருக்காயி மாசமா இருக்கான்னு சொன்ன் டாக்டரு, அவளை நல்லா சத்தான சாப்பாட்டை சாப்பிட சொல்லி சொன்னாங்க. எங்க இங்க? வயித்துப்பாட்டுக்கே வழிய காணோம், இதுல சத்தான சாப்பாடு? அவளின் மகளை பிரசவிப்பதற்கு மீண்டும் அந்த கம்மல் படையெடுத்தது. மீண்டும் அந்த கம்மல் அவள் கையில் வரும் பொழுது மகள் பூவாயி “ஸ்கோலுக்கு போவதற்கு தயாராய் இருந்தாள்’ ஒரு வாரம் அவள் காதில் தங்கி இருந்த அவள் கம்மல் மீண்டும் மகள் பூவாயிக்கு துணி மணி எடுக்க, புக்கு வாங்க என்று அடகுக்காரனிடம் படை எடுத்தது.

இப்படி அருக்காயியின் காதுக்கும், அடகு கடைக்கும் இருபது வருடங்களாய் மாறிக்கொண்டிருந்த கம்மல் ஒரு வழியாய் மகள் “பூவாயின்” கல்யாணத்தில் அவளின் காதுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. மணமக்களை வாழ்த்தி அவளை கணவன் வீட்டுக்கு அனுப்பும்போது கூட மகளின் காதுகளையே ஏக்கமாய் பார்த்துக்கொண்டு வழி அனுப்பினாள்.

முனியாண்டி இப்பொழுது கூட பதவிசாய் சொல்லிகொண்டிருந்தான். கவலைப்படாத புள்ளே, உனக்கு “வேற கம்மலு” செஞ்சு போட்டுடலாம். எதுவும் பேசாம்ல் வெறுமையாய் சற்று நேரம் இருந்தவள் “இனிமேல் எனக்கெதுக்கு பூவாயிக்கு பொறக்கபோறவளுக்கு ஏதாவது செஞ்சு போடுவோம்”. அவளின் குரலில் தென்பட்டது ஏமாற்றமா? விரக்தியா?  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *