கொசுவும் குதிரையும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,642 
 

ஒருநாள் குதிரை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஒரு கொசு பறந்து வந்தது.

குதிரையைக் கண்டவுடன் அதைக் கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது கொசுவுக்கு.

“நீ எப்படி இருக்கே?’ என்று ஏளனமாகக் கேட்டது.

கொசுவும் குதிரையும்குரல் கேட்டவுடன், குதிரை சுற்றுமுற்றும் பார்த்தது. ஆனால் அதன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை! பிறகு தன்னுடைய வாலிலும் காதுகளிலும் ஏதாவது இருக்கின்றதா என்று கழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது.

அப்போது, தனது முதுகில் ஏதோ ஒன்று உட்கார்ந்து இருப்பதை உணர்ந்தது. பிறகு அது ஒரு கொசு என்பது புரிந்தது.

குதிரை தன்னை கவனித்துவிட்டதை உணர்ந்த கொசு, “எவ்வளவு பெரிய உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள்?’ என்றது.

“நான் உங்களைப் போல சின்னப் பயல் கிடையாது!’

என்றது குதிரை.

“ஆமாம், நீஙகள் பெரியவர்தான். என்னை மாதிரிச் சின்னவன் கிடையாதுதான். ஆனால்…’ என்று இழுத்தது கொசு.

இப்படிக் குதிரையும் கொசுவும் பேசிக் கொண்டிருந்தபோது, மிதமான காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது.

குதிரை தன்னுடைய வாலை கம்பீரமாக ஆட்டிக் கொண்டு, தலையை ஒரு சிலுப்பு சிலுப்பியது!

“நீ பெரியவன்தான். சரி.. நீ ரொம்ப பலசாலியோ?’ என்று மீண்டும் ஏளனமாகக் கேட்டது கொசு.

“ஆமாம்! இதிலென்ன உனக்கு சந்தேகம்?’ என்று வேகமாகக் கேட்டது குதிரை.

“பறக்கிற எல்லோரும் என்னோட சொந்தக்காரங்க… அவர்களை விட நீங்க பலசாலியா இருப்பீங்களோ என்ற சந்தேகம் வருகிறது எனக்கு…’ என்று கொசு நீட்டி முழக்கியது.

“நான் திரும்பவும் சொல்றேன்… கண்டிப்பாக என்னைவிட பலசாலி உங்களில் இருக்க முடியாது!’ என்று கோபமாகக் கூறியது குதிரை.

“என்னோட சொந்தக்காரங்கள்ள ‘உன்னி’ன்னு ஒரு பூச்சி வகை இருக்காங்க! அவுங்க உங்களைவிட பலசாலிங்க!’ என்று கொசுவும் கோபமாகக் கூறியது.

“குதிரைங்க எல்லாமே பலசாலிங்கதான். ஆனா, எல்லாக் குதிரைகளையும்விட நான் மிகவும் பலசாலி!’ என்று நா தடுமாற, கோபத்தின் உச்சியில் பேசியது குதிரை.

“நீங்க பலசாலிதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களைவிட நாங்கள்தான் பலசாலிங்க..’ என்று விட்டுக் கொடுக்காமல் கோபமாகக் கூறியது கொசு.

இதைக் கேட்டவுடன் குதிரைக்கு எரிச்சலாக வந்தது. கோபத்துடன் முறைத்துப் பார்த்தது.

‘நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத் திரண்டு வந்தால் சுலபமாக உங்களை ஜெயித்துவிடுவோம்!’ என்று குதிரையைப் பார்த்து சவால் விட்டது கொசு.

“இல்லே! உங்களால முடியாது…’ என்றது குதிரை.

“இல்லை, எங்களால முடியும்!’ என்றது கொசு.

“உங்களால் என்னை வெல்லவே முடியாது…’ என்று மீண்டும் கூறியது குதிரை.

“சுலபமாக உன்னை வென்றுவிடுவோம்..’ என்று ஓலமிட்டது கொசு.

இப்படியே இருவரும் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் “சும்மா, இப்படியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம் இப்போது…’ என்றது குதிரை.

குதிரை மேல் உட்கார்ந்திருந்த கொசு, எழுந்து நின்று மிகவும் சத்தமாக, “எல்லோரும் இங்கே வாங்க…’ என்று கூக்குரலிட்டது.

கொசுவின் குரலைக் கேட்டவுடன், மரத்திலிருந்தும் குளத்திலிருந்தும் சதுப்பு நிலத்திலிருந்தும் கொசுக்கள் பெரும்படையாகக் குதிரையை நோக்கி வந்தன.

பறந்து வந்த கொசுக்களைப் பார்த்ததும், “எல்லோரும் வந்துட்டீங்களா?’ என்று கேட்டது குதிரை.

“ஆமாம், உங்களை ஜெயிப்பதற்காக நாங்கள் ஒன்று திரண்டு வந்திருக்கிறோம்..’என்றது அந்த அடாவடிக் கொசு.

“என்மீது எல்லோரும் உட்காருங்கள். உட்கார்ந்த பிறகு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் யாரும் கீழே விழக்கூடாது. கீழே விழுந்தால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். அதுதான் போட்டி…’ என்றது குதிரை.

“நாங்கள் எல்லோரும் உட்கார்ந்துவிட்டோம். போட்டியை ஆரம்பிக்கலாம்’ என்று எல்லாக் கொசுக்களும் கோரஸôகக் கூறின.

குதிரை வேகமாக உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியது! சிறிது நேரத்தில் அங்குமிங்குமாகக் குதிரை சுற்றிச் சுற்றித் துள்ளிக் குதித்தது.

குதிரையின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அத்தனை கொசுக்களும் சிதறி விழுந்து இறந்து போயின.

ஆனால் ஒரே ஒரு கொசு மட்டும் உயிரோடு இருந்தது! அந்தக் கொசுவின் சிறகு உடைந்து விட்டது.

அப்போது முதலில் குதிரையுடன் வாக்குவாதத்தை ஆரம்பித்த கொசு, அங்கே வந்தது.

எப்போதும் அடாவடியான பேர்வழிகள் சண்டைக்கு முன் நிற்பார்கள். சண்டை ஆரம்பித்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த யோசனை அப்போதுதான் சிறகொடிந்த கொசுவுக்கு வந்தது. குதிரை இன்னும் ஒடிக் கொண்டிருந்தது.

“சண்டை என்ன ஆயிற்று?’ என்று கேட்டது அடாவடிக் கொசு.

குதிரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லையாதலால் சிறகொடிந்த கொசு திமிராகப் பேசியது-

“சண்டையில் குதிரையைக் கடித்தே விரட்டிவிட்டோம். இன்னும் நான்கு பேர் கூட இருந்திருந்தால் குதிரையின் தோலை உரித்திருப்போம்!’ என்று கூறியது சிறகொடிந்த கொசு.

“நல்ல வேலை செய்தீர்கள்!’ என்று பாராட்டிய அடாவடிக் கொசு, வேகமாகப் பறந்து சென்று காட்டிலுள்ள மற்ற எறும்புகள், சிறு பூச்சிகளிடம் சேதியைச் சொல்லப் போனது.

– முத்தையா வெள்ளையன் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *