பூர்வீகச்சொத்து!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 3,168 
 
 

“பூர்வீக ஊட்ல இருந்து வாழவே முடியல. ஒரு பைசாங்கூட பொட்டில தங்கவே மாட்டீங்குது. ஆஸ்பத்திரி செலவு தொரத்தீட்டே வருது. கண்ணாலமாயி பத்து வருசம் ஓடிப்போயிங்கூட பொண்டாட்டி வகுத்துல புழு, பூச்சி உண்டாக மாட்டீங்குது. என்ற அப்பனாத்தா வெளில ஊடு பாத்துப்போகோணும்னு சொன்னா புடிவாதமா ஒத்துக்க மாட்டீங்கறாங்க. என்ன பண்ணறதுன்னு தெரியல. கொஞ்சம் என்ற சாதகத்த நல்லா கணிச்சு சொல்லுங்க. உங்கள கடவுளு மாதர நெனைச்சுக்கேக்றேன்” ஜோதிடர் கந்தனிடம் தனது ஜாதகத்தைக்கொடுத்து பலன் கேட்டான் பரமன்.

கந்தன் நிறைந்த ஜோதிட அனுபவம் கொண்டவர். ஆன்மீகவாதி. அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். எழுபது வயதைக்கடந்தவர் ஐம்பது வருடமாக ஜோதிடப்பலன் கூறினாலும் உடல் நிலை காரணமாக தினமும் சில பேருக்கு மட்டும் ஜாதகம் பார்த்து சொல்லி வருகிறவர். பரமன் ஜாதகத்தைக்கணித்து விட்டுக்கூறினார்.

“செடி காய்க்கிற செடிதான். பாறைல இருக்கிற குழில மொளைச்சு வளந்ததுனால கீழ நல்லா வேறூனாம காய்க்க மாட்டேங்குது. வேற நெலத்துல புடுங்கி நெட்டுனாத்தான் காய்க்கும்.

நாத்தங்கால்ல இருக்கிற நெல்லுப்பயிர புடுங்கி வயிலுக்குள்ள நெட்டுனாத்தான் வெளையும். நாத்தங்கால்ல வெளையாது. வெளைஞ்சாலும் பாலையாப்போகும். புடுங்கி நெட்டுனா கருகிப்போகும்னு உன்ற அப்பனாத்தா பயப்படறாங்க. இப்ப ஜாதகத்துல நேரங்காலம் மண்ணுக்கு மழை பேஞ்ச காலம் மாதர நல்லா இருக்கறதுனால இப்ப புடிங்கி செடிய நெட்டுனா கருகாமத்தளைஞ்சு காச்சுப்போடும். புரிஞ்சுதா? ” எனக்கேட்டார்.

“புரிஞ்சு போச்சுங்க. நல்லாவே புரிஞ்சு போச்சுங்க. பாறைக்குழிங்கிறது பூர்வீகம். செடிங்கிறது நானு. வேற மண்ணுங்கிறது பூர்வீகத்த விட்டு மாறிப்போகோணும்னு சொல்லறீங்க. அதுக்கு ஜாதகப்படி தெசா, புத்தி நல்லாருக்குதுன்னு சொல்லறீங்க. நல்லாப்புரிஞ்சுதுங்க ஐயா” என்றான் பரமன்.

“பூர்வீகம்னா அப்பனப்பெத்த அப்பன்அப்பாரு சம்பாறிச்ச, அதுக்கு முன்ன பாட்டனும், முப்பாட்டனும் சம்பாறிச்சது. பெத்த அப்பஞ்சம்பாறிச்சது கெடையாது. அம்மா வகையும் கெடையாது அதப்புரிஞ்சுக்கோணும் நீ மொதல்ல” 

“பரிஞ்சுதுங்க”

“தம்பி இந்த ஒலகம் ரொம்பம்மே விசித்திரமா இருக்குது. ஆனா பொளைக்கறதுக்கு தேவையான எல்லாமே இருக்குது. சும்மா மாங்கு, மாங்குன்னு பாட்டப்பட்டா மட்டும் போதாது. கொஞ்சம் அறிவையும் செலுத்தி சித்த யோசிக்கோணும்” என்றவர் தன் மருமகள் கொடுத்த பாலற்ற காபியை எடுத்துக்குடித்து விட்டு பேசினார்.

“ஒரு வேவாரி ஒரு சந்தைல விக்காத பொருள ஒன்னொரு சந்தைல வித்துப்போடறாரு. காக்காய், குருவிங்கூட கூடுகட்டியிருக்கிற மரத்துல பழம் இல்லீன்னா கூடலூரு வெரைக்கும் பறந்து போயி அங்க கெடைக்கிற பழங்கள தின்னு போட்டு வந்திருது. மனுசங்க சில பேரைத்தவுத்து பல பேரு பரம்பரை சொத்த விக்கவும் மாட்டேன், உட்டுப்போட்டு போகவும் மாட்டேன்னு நடக்க மாட்டாதவன் சித்தப்பனூட்ல பொண்ணு கட்ன கதையா அஞ்சு தலக்கட்டு, பத்து தலக்கட்டுனு ஒரே எடத்துலயே இருந்து சொத்திருந்தும் சோத்துக்கில்லாம பொளைக்கிறத நெறையாப்பாக்கறமில்ல. நானொன்னும் வித்துப்போட்டு போகச்சொல்லுல. உட்டுப்போட்டுப்போனா உருப்படுலான்னு தான் சொன்னேன். சரிதானே…?” என்றவர் தட்சிணையை வெற்றிலையிலிருந்து எடுத்து பெட்டியில் போட்டவர், வெற்றிலையை பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்து மடித்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்ததும், ‘இனி எதுவும் சொல்ல மாட்டார்’ என்பதைப்புரிந்த பரமன் ஜாதகத்தை எடுத்து மஞ்சள் பைக்குள் வைத்துக்கொண்டு கையெடுத்து கும்பிட ஜோதிடரும் கும்பிடக்கிளம்பினான்.

“கஞ்சிக்கே வழியில்லாமப்போனாலும் என்ற மசுருக்காலு அளவுக்கும் உசுரு போற வெரைக்கும் காட்ட விக்கிறதுக்கு உடவே மாட்டேன். காலனாவும், அரையனாவுமா வகுத்தக்கட்டி, வாயக்கட்டி என்ற பாட்டங்காரன் சேத்தி வெச்ச சொத்த உட்டுப்போட்டு போறதுக்கும் ஒத்துக்க மாட்டேன். அப்படிப்போனீனா நீ என்ற வாரிசுன்னு பாக்காம, செத்தா மொட்டையடிக்காட்டீம்போகுதுன்னு முனீஸ்வங்கோயிலுக்கு எழுதி வெச்சுப்போட்டு செத்துப்போவேன் ஆமா. பூர்வீகம் ஆகாதாமா‌, இவம் போறானாமா. இல்லீன்னா உன்ற அக்கா கொழைந்தைகளுக்கு கொடுத்துப்போடுவேன். போறதுன்னா போயிக்கோ. போனா இந்த சென்மத்துல நாஞ்செத்தாலும் என்ற மூஞ்சீல முழிக்கப்படாது. சொல்லிப்போட்டேன் ஆமா” என பரமனின் தந்தை பழனியப்பன் பிடிவாதமாகப்பேசியது பரமனுக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

“வெளிய போறம் போறன்னு பொண்டாட்டி பேச்சக்கேட்டுப்போட்டு சொல்லறியே… போயி எப்புடிப்பொளைப்பே? இப்புடி சொத்துக்காரனா உன்ற பாட்டம் பூட்டன் பண்ணையம் பண்ணுன ஊர உட்டுப்போட்டுப்போனா இந்த மரியாத எங்க கெடைக்கும்? அரைக்கஞ்சி குடிச்சாலும் கௌரவம் கொறையாம அந்தஸ்தா வாழ்ந்தவடா உன்ற ஆத்தா. உனக்கு கொழந்ததா இல்லாட்டிப்போனா என்ன கொறைஞ்சு போச்சு? உன்ற அக்காக்காரிக்கு நாலு பொட்டப்புள்ளைக இருக்குதில்ல. அதுகளுக்கு நம்முளுக்கு அப்பறம் சொத்தக்கொடுத்துப்போட்டா போகுது. சோறா போட மாட்டீங்கறாங்க? அப்புடித்தாங் கொழந்த வேணும்னா, உன்ற அக்காளோட மூத்த பொண்ணு ரம்யாவ ரெண்டாந்தாரமா கண்ணாலம் பண்ணிக்கோ…. அவ கெட்டிகாரி. வாரிசப்பெத்துக்கொடுத்துப்போடுவா… சொத்தும் வெளில போகாம சொந்தத்துக்குள்ளயே இருந்துக்கும்” என தாய் காளியாத்தாள் பேசிய பேச்சு பரமனையும், அவன் மனைவி சுந்தரியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“ஏம்மா உனக்கு அறிவிருக்குதா? சுந்தரியும் உன்ன மாதர ஒரு பொம்பள தானே….? பொம்பளைக்கு ஒன்னொரு பொம்பளையே சதி பண்ணுலாமா? அவ மனசு எப்படி நோகும்னு நெனைச்சுப்பாத்தியா?” சொல்லி விட்டு கண்ணீர் விட்ட தன் மனைவிக்கு ஆறுதல் சொன்னான் பரமன்.

தற்போதைய நிலையில் வெளியே சென்றாலும் வாழ வழி தெரியாமலும், இங்கிருந்தும் நிம்மதி பெற இயலாமலும் தவித்த சுந்தரி, மறுதாரமாக சரசுவின் மூத்த மகள் ரம்யாவை மாமியாரின் விருப்பப்படி, தன் மனதைக்கல்லாக்கி கணவனுக்கு மணம் முடிக்க சம்மதித்தாள். பரமனும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டான்.

மணமாகி இரண்டு வருடங்கள் உருண்டோடியும் ரம்யாவுக்கும் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் “ஏங்கண்ணு பரமா… அந்த சோசீரு கந்தன் பூர்வீகம் ஆகாதுன்னு சொன்னது நெசந்தாப்போலிருக்குது. சுந்தரிக்கு கொறை இருக்கும்னு ரம்யாளக்கட்டி வெச்சும் கொழந்த பொறக்கிலியே…? வேணும்னா ஒன்னு பண்ணு. பேசாம அக்கா சரசு ஊட்ல, அதுதான் ரம்யாளோட அப்பனூட்ல ஒரு வருசம் போயி ரம்யாளும் நீயும் இருந்து பாருங்க. கெடைச்சாலும் கெடைக்கும். நேத்து ராத்திரி சரசு ஊட்ல கொழந்த தவுந்து போற மாதர கெனாக்கண்டனில்ல. என்ற கெனாவு எப்பவும் நெசத்துல அப்படியே நடக்குமில்ல…” எனும் தாயின் யோசனையை ஏற்றுக்கொண்ட பரமன் முதல் மனைவி சுந்தரியையும் உடன் அழைத்துச்செல்வதாகக்கூறிய போது ‘கூடவே கூடாது’ என பிடிவாதமாக மறுத்தாள் தாய் காளியாத்தாள்.

“உனக்கு ஒன்னம்மே நாப்பது வருசமாயி அறிவே வருலியா? அவளுக்குத்தான் கொறை. பத்து வருசமாயிங்கெடைக்கலே. அவள கூட வெச்சுட்டு நீயி ரம்யா கூட சந்தோசமா இல்லாததுனால தாங்கொழந்தை இன்னைக்கு வெரைக்கும் கெடைக்கிலே. என்ற பேத்தி ரம்யாளுக்கு கொறை ஒன்னுமே இல்ல. அதப்புரிஞ்சு ஒபகாரமா நானொரு ரோசன சொன்னா மறுபடீமு வேதாளம் முரங்க மரத்துல ஏறுன கதையா ராசியில்லாதவள கூடக்கூட்டீட்டு போறங்கிறே…? அவ இல்லீனாத்தான் எல்லாமே நடக்கும்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்கிறே?” என மாமியார் சொன்னதைக்கேட்டு அளவில்லாத வேதனையடைந்தாள் சுந்தரி.

அப்போது வந்த பரமனின் அக்கா சரசு தன் தாயிடம் சென்று,” அத நாம் பாத்துக்கறேன். சுந்தரி வந்தா எனக்கும் தோட்டங்காட்ல ஆடு, மாடு மேய்க்கிறதுக்கு தொணையா இருக்கட்டும்” எனக்கூறியதும் ,” அப்புடீன்னாச் சேரி” எனச் சொல்லி சுந்தரியையும் அழைத்துச்செல்ல ஒத்துக்கொண்டாள் பரமனின் தாய் காளியாத்தாள்.

நாட்கள் கடந்தன. “வாரிசு வந்தாச்சு” என வந்திருந்த மகள் சரசு கூறிய நல்ல செய்தி காதுக்கு வந்ததும் பூரித்துப்போன காளியாத்தாள், “நாங்கெனாக்கண்டது நடந்து போச்சில்ல…? “என பேசிய போது ” இல்லே” என மகள் சொன்னதும் அதிர்ச்சியாகி, “என்ன…? இல்லியா….? அப்புறம் என்னத்துக்கு இருக்குதுன்னு சொன்னே….?”என கண்ணீருடன் கேட்டாள்.

“வாரிசு தம்பி பரமனுக்கு வந்தது நெசந்தான். அது ரம்யா வகுத்துல வரலே….”

“அப்பறம்….?”

“சுந்தரி வகுத்துல….”

“என்னளே சொல்லறே….?” மயங்கிச்சரிந்தாள் காளியாத்தாள்.

முகத்தில் தண்ணீர் தெளித்த பின் நினைவு வர தேம்பித்தேம்பி அழுதாள்.

“தேளுக்கொட்டுனவளுக்கு நெறிக்கட்டாம, பக்கத்துல இருந்தவளுக்கு நெறிக்கட்டுன கதையா இருக்குதே நீ சொல்லறது. நாம் படிச்சுப்படிச்சு சொன்னனே, அவளக்கூடக்கூப்புட்டு போகாதீன்னு… நீ கேட்டையா? இப்படி ஆயிப்போச்சே…. பரமேஸ்வரா..?” நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.

“நானும் உன்ற கிட்ட ஒரு விசயத்த மறைச்சுப்போட்டேன்”

“என்ன விசயம்?”

“ரம்யாளுக்கு பொறந்ததுல இருந்தே அடிக்கொருக்க வயித்து வலி வருமில்ல…”

“ஆமா. இங்கிருக்கற போது வகுத்த வலிச்சுதுன்னா கோவத்தளைய புழிஞ்சு ஒரு மொடக்கு குடிச்சா செரியாப்போகும்”

“அது வகுத்து வலி இல்லே”

“அப்பறம்….?”

“கெற்பபை கெட்டுப்போச்சு ” என மகள் சொன்னதைக்கேட்டு மூச்சே நின்று வந்தது காளியாத்தாளுக்கு. நின்றிருந்தவள் மனம் சோர்வுர அருகிலிருந்த திண்ணையில் சேலைத்தலைப்பை விரித்து படுத்துக்கொண்டாள்.

“கெட்டுப்போனதுனால ஆஸ்பத்திரில கெற்பப்பைய எடுத்துட்டாங்க. அதனால தான் இருபது வருசம் வித்தியாசத்துல ரெண்டாந்தாரமா தம்பி பரமனுக்கு கொடுக்க நானும் செரின்னு சொன்னேன். ரம்யாளும் செரின்னு சொன்னா. நீங்களும் பூர்வீகத்த உட்டுப்போட்டு தம்பி பரமன ஊடு மாற வேண்டாம்னு புடிவாதமா இருந்தீங்க. பேத்திக்கும் கொழந்த கெடைக்கிலேன்னதும் சுய நலமா சேரின்னு சொன்னீங்க. என்ற ஊட்டுக்கு சுந்தரி வந்து ஒரு மாசத்துல முழுகாம ஆயிட்டா. பூர்வீக தோசம்ங்கிறது செரியாப்போச்சுன்னு நானும் உங்களப்பாக்க வராம என்ற பொண்ணாவே அவள நெனைச்சுட்டு, அங்கயே இருக்க வெச்சுட்டு, இப்ப ஆம்பளப்பையன் பொறந்ததுக்கப்பறம் வந்து சொல்லறேன்னு வெச்சுக்கவே” என சொன்னதைக்கேட்டு 

மகிழ்ச்சியடைந்தாலும் ‘இதை காரணமாக வைத்து பூர்வீகச்சொத்தை விற்க மகன் வந்து விடுவானோ…?’ என பயம்கொண்டாள் காளியாத்தாள்.

“வாரிசு கெடைச்சாலும் நீங்க சந்தோசப்பட மாட்டீங்க. பூர்வீகத்த உட்டுப்போட்டு போயி கொழந்த கெடைச்சதுனால பரமன் இந்தச்சொத்த வித்துப்போடுவான்னு பயப்படுவீங்கன்னு தான் என்ற சொத்த பரமம் பேர்ல எழுதி, கொழந்த கெடைச்ச என்ற ஊட்லயே இருக்கச்சொல்லீட்டு, அந்தச்சொத்துக்கு பதுலா இந்த சொத்த என்ற பொண்ணுங்களுக்கு குடுத்துப்போடலாம்னு நானும் என்ற ஊட்டுக்காரரும் முடிவு செஞ்சுட்டோம்” என மகள் சரசு சொல்லக்கேட்ட பின் பூர்வீகச்சொத்து வேறு நபர்களுக்கு கைமாறாது என்பதையறிந்து நிம்மதியடைந்தனர் பரமனின் பெற்றோர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *