கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 38,547 
 

அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.

“”உமது கருத்து என்ன?” என அக்பர் கேட்டார்.

“”மன்னர் பெருமானே, இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு என்ன இடம் இருக்கிறது? கடவுளை விடத் தாங்கள்தானே பெரியவர்?” என்று கேட்டார் பீர்பால்.

அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

“”மதியூகி பீர்பாலே, உமது கூற்றைத் தக்க காரணத்துடன் விளக்கும்…” என்றார் அக்பர்.

“”சக்ரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்னை நாடு கடத்திவிடத் தங்களால் முடியும்! ஆனால் கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது” என்றார் பீர்பால்.

“”எப்படி?” என்று வினவினார் அக்பர்.

“”உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதிகள் ஓரளவுக்குத்தான்! அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும்? ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்?” என்று கேட்டார் பீர்பால்.

பீர்பால் தனக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டார் என்பதை அக்பர் உணர்ந்தார். இருந்தாலும் பீர்பாலின் கூற்றிலுள்ள உண்மையை உணர்ந்து அவருக்குப் பரிசுகளை அளித்தார்.

– தேனி முருகேசன் (மே 2012)

Print Friendly, PDF & Email

2 thoughts on “யார் பெரியவர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *