ஆதர்ஷ தம்பதி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 12,796 
 
 

“பாருக்குள்ளே நல்ல பாரு…!”

ஈ.ஸி. சேரில் சாய்த்தபடி பாடிக்கொண்டிருந்த கணவர் எதிரில் வந்து நின்ற பார்வதி,
அவரை விநோதமாக பார்த்தாள்.

“பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்றுதானே பாட்டு? நீங்க பாட்டுக்கு ஏதேதோ வார்த்தைகள யூஸ் பண்றீங்க?”

“அடியே ! இது நான் இட்டுக்கட்டின பாட்டு. பாருக்குள்ளே நல்ல பாரு. எந்தன் பாரு!” தன் வலது கையைத் தூக்கி பார்வதியை   நோக்கிக் காட்ட, 68 வயதிலும் பார்வதி முகத்தில் செம்மை படர்ந்தது.

“இந்த உலகத்தில் , நான் ஓருத்திதான்  நல்லவளா?”

“அடி அசடே ! எம் பொண்டாட்டியான  உன்னைப் பத்திதான் நான் பாட முடியும். மத்தவாள  நாம ஏன் அநாவசியமா இதுல  இழுக்கணும்? ஏதேது, பெரிய வில்லங்கத்த உண்டு பண்ணிடுவேப் போல இருக்கே?”

மெல்லச் சிரித்தபடி பார்வதி, “அதெல்லாம் ஒண்ணுமில்ல…சரி, இப்போ எதுக்கு பாட்டு…பாடணும்?” என்றார்.

பெருமூச்சொன்று விட்டவர், “என்ன செய்றது ! நாம இப்படியே பாடிண்டும் , பேசிண்டும் பொழுதைக் கழிக்கவேண்டியதுதான்!”  வெறுப்புடன் சொன்னார்.

“என்னாச்சு இன்னிக்கு? இப்படி விட்டேர்த்தியாப் பேசறேள்?”

“நாம பெத்தது கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒண்ணே ஓண்ணு ! பொண்டாட்டி, பசங்களோட அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டான். எப்பவாவது வரான்.  கொஞ்ச நாள் தான் இருக்கான். ஓடிப்போயிடறான். பெத்தவாளை வயசான காலத்துல இப்படி தனியா தவிக்க விட எப்படி அவனுக்கு மனசு வருது?”

“ஏன் இப்படி பேசறேள்? வாரா வாரம் விடியோ கால்ல குடும்பத்தோட பேசறானோல் லியோ?”

“ஆமா…என்னத்தப் பேசறது! அவன் பேசறது எனக்குப் புரியல்ல . நான் பேசறது அவனுக்கும் புரியல்ல.  வெறும் உருவம் மட்டும்தான் தெரியறது!”

“ரெண்டு பொட்டப் பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கான்.  அதுங்களை கரை சேர்க்க பணம் தேவை.  வயசும் , சந்தர்ப்பமும் ஒண்ணா சேர்ந்து அமைஞ்சிருக்கு…இப்போ சம்பாரிச்சாதான் உண்டு ! …அநாவசியமா கவலைப்படாமல்  இருங்கோ!”

“சரி,  ராத்திரிக்கு என்ன டிஃபன்?”

“இட்லிதான்.”

“தெனமும் இட்லிய சாப்டு சாப்டு நாக்கு செத்துப்போச்சு!”

“அதை சாப்பிடவே உங்களுக்கு மணிக்கணக்காயிடும் . வேற எது செஞ்சாலும் வெறும் வாயால எப்படி சாப்பிடுவேள்?”

“எனக்குப் பல்லு பூராகவும் கொட்டிப்போச்சுன்னு குத்திக் காட்டறே…”

“அடாடா!  நல்லதுக்குச் சொன்னால் குதர்க்கமாப் பேசறேள். சரி, என்ன வேணும்?”

“பூரி கிழங்கு சாப்டு வருஷக் கணக்கா  ஆயிடுத்துடி பாரு! நாலு பூரி கிழங்கு வெச்சு கொடுத்தா உனக்கு புண்ணியமாப் போகும்.”

“சரி,  பூரி வேணா பண்ணித் தரச் சொல்றேன்.  ஆனால் கிழங்கு கிடையாது.  ஏற்கனவே வாய்வு! இந்த அழகுல கிழங்கு சாப்பிட்டால் கால் கொடையறது கை கொடையறதுன்னு சொல்லுவேள்.”

“என்ன மாமி ! ராத்ரிக்கு இட்லி ரெண்டு தட்டு போடட்டுமா?” சமையல்காரன் ரங்கமணி கேட்டான்.

“இல்ல ரங்கா ! மாமா இன்னிக்கு பூரி, தால் கேட்கறார். ஆளுக்கு மூணு பூரின்னு மொத்தமா ஆறு பண்ணிடு.”

தட்டில் பூரியும் பக்கத்தில் தாலும் வைத்து கணவரிடம் நீட்டினார் பார்வதி.

வாயெல்லாம் காற்றாக (பல்லுதான் இல்லையே) தட்டை வாங்கி தன் முன்னால் உள்ள ஸ்டூல் மீது வைத்தவர், காதல் பொங்க பார்த்தார். திடீரென அவர் முகம் மாறியது..

“பாரு நன்னாப் பாரு. ஓரே ஓரு பூரிதான் இருக்கு ! நான் என்னச் சின்னக் குழந்தையா…இன்னும் ரெண்டு வெச்சாதான் சாப்டுவேன்!” அடம் பிடித்தார்.

“முதல்ல அந்த ஓண்ணை சம்ஹாரம்  பண்ணப் பாருங்க. மத்தத அப்பறமா பார்க்கலாம்.”

பார்வதியை கடு கடுப்புடன் பார்த்தவர், இப்போது தட்டைப் பார் த்த போது மீண்டும் காதல் பொங்கியது.

உப்பியிருந்த பூரி அவர் கை பட்டதும் அமுங்கியது. வலது கை பூரியை பிய்க்க முயன்றது. முடியாமல் போய் , இடது கையையும் உபயோகித்து வெற்றிகரமாக ஒரு துண்டைப் பிய்த்து தாலோடு சேர்த்து ஒரு விள்ளலை வாயில் போட்டுக் கொண்டவருக்கு ஏக குஷி!

உடம்பு தத்திக்கினத்தோமில் ஆடியது. வாய்க்குள் அடைபட்டிருந்த அந்த பூரித்துண்டும் பற்கள் இல்லாததால் உள்ளேயே மேலும் கீழுமாய் தத்திக்கின்னத்தோமில் ஆடி , பவனி வந்துகொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக தட்டில் இருக்கும் தால் மொத்தமும் காலி செய்தும் அந்தப் பூரித்துண்டு தொண்டையில் இறங்காமல் ஸ்ட்ரைக் பண்ண, பார்வதியை பார்த்து பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் , ஒரு தடவை பூரித்துண்டை நாக்கினால் சுழற்றினார்.  போனால் போகிறதென்று, பச்சாத்தாபப்பட்டு துண்டு தானாக தொண்டையில் இறங்க….இசகு பிசகாக மாட்டிக்கொண்டது.

புரையேறிப்போய் பயங்கரமாக இரும ஆரம்பித்தார். வாய் , மூக்கில் எல்லாம் நீர் ஒழுக ஆரம்பித்தது. சட்டென பார்வதி கொண்டு வந்து கொடுத்த தண்ணீரைப் பருகியவர் ஆசுவாசப்பட்டுக்கொண்டார்.

மேல் துண்டால் தன் முகத்தை துடைத்தபடி சாய்ந்துகொண்டார்.

“இதுக்குதான் தலையால அடிச்சுக்கிட்டேன்.  வீம்பு பண்ணுனீங்க..இப்போ என்ன ஆச்சு பார்த்தேளா?”

“தப்புதான் பாரு! ஏதோ ஓரு நப்பாசை!  பூரி சாப்டணும்னு….”

“சரி கொஞ்சநேரம் கழிச்சு தரட்டுமா?.”

“என்னது?”

“மீதி இருக்கற உங்களோட ரெண்டு  பூரியை?”

“ஐயய்யோ…வேணாமா வேணாம்.  இனிமேல் இந்த ஜென்மத்தில் நான பூரியே கேட்க மாட்டேன்.” கையெடுத்துக் கும்பிட்டார்.

“சரி , இன்னிக்கு உபவாசமா?” பார்வதியின் கேள்விக்கு, “ஏன் இன்னிக்குஏகாதசியா உபவாசம் இருக்க?.” என்றார் தாத்தா.

“பூரி உங்களுக்கு ஓத்துக்கல்ல…..அதான் இருக்கு.”

“பாரு….தயவுசெஞ்சு ரெண்டு இட்லி வார்த்துக் கொடேன். ” கெஞ்சியவரைப் பார்க்க பாவமாயிருந்தது.

ரங்கமணியும் டிஃபன் பண்ணிவிட்டுச் சென்றுவிட்டான். சரியென்று கணவருக்காக ஓரு தட்டில் மூன்று இட்லி வார்த்து வேறோரு தட்டில் தாலுடன்  வைத்துக் கொண்டு வந்த பார்வதி ஸ் டூல் மீது வைத்தார். பூரித் தட்டை எடுத்துச் சென்றார்.

கணவர் சாப்பிடாமல் தட்டையேப் பார்த்துக் கொண்டிருக்க, கிச்சனில் இருந்து கவனித்த பார்வதி வெளிப்பட்டு அவர் அருகில் வந்தவர் , ” சூடா இருக்கு. சாப்பிடாம என்ன ஆராய்ச்சி?” என்றார்.

“இல்ல….தொட்டுக்க தால்தான் இருக்கு. தேங்காய் சட்னி இல்லையான்னு…..”

“என்னது…”

கட கடவென்று இட்லியை சாப்பிட ஆரம்பித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *