கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 4,713 
 

அங்கம் ஒன்று

டவுனிலிருந்து ஏழெட்டு மைல் தொலைவில் இருக்கிற அந்தச் சிறுகிராமம் எரிந்து கருகிப்போன ஒரு பழைய நகரத்தின் புதிய வார்ப்புப் போலவே கண்களை எரித்தது, புறப்பார்வைக்கு கம்பீரமாக இருப்பதுபோல் தோன்றினாலும், மனதுக்கு குறை ஏதோ இருப்பது போல் தோன்றியது

இப்போதெல்லாம் டவுனிலிருந்து யாருமே அங்கு வருவதில்லை. அப்படி வரவேண்டிய அவசியம் இனிமேல் என்ன இருக்கிறது? இந்தக் கிராமத்தின் பழம் பெருமைகளையெல்லாம் கறைபடுத்த வந்த இது ஒரு புதிய கழுவாயே! கலி தான் மிஞ்சியது என்று சொன்னால் கோபம் வரும்.

ஆனால் என்ன செய்ய? இந்த சாபத்துக்கு விதி விலக்காய், ஓர் ஆத்ம பரிகாரம் தேடிச் சாந்தி பெற நினைப்பது போல் உண்மையை நினைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. இது எங்கோ சிலருக்கு மட்டுமே பொருந்தும்.

துளசிக்கு அப்படி நினைப்பதே ஆறுதலைத் தந்தது. அவள் கொஞ்சநாளாய், பாதி கனவில் விழித்துக் கொண்டிருக்கிற மாதிரி, அறை ஜன்னலருகே நின்றவாறு, அகல விரிந்த கண்களை நிமிர்த்தி, ஓயாமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்பா சுந்தரம் கூப்பிட்டாலும் காதில் விழாது, அவர் எண்பது வயதுக் கிழவன். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர்இ துணையாக இருந்து வருவது போல், ஒரு பிரமையில் அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு ஓர் இலக்குமில்லாமல், அப்படிப் பயணம் செய்வதே சுகமாக இருந்தது.

அப்பாவோடு அவள் வாழ்க்கை முடிந்தாலும் முடிந்து போய்விடலாம் அல்லது தனியாகவே வாழ்ந்து ஒரு யுகம் கழிந்து போன பெருமையில் காலம் ஒரு சவாலாகவே நின்று அவளிடம் தோற்றுப்போகும். சுந்தரம் அந்தக்காலத்தை எண்ணிக் கொண்டு காத்திருக்கிறார். அவளுக்கோ மனசு மரத்துப்போய், வாழ்வில் ஒன்றுமே மிஞ்சாமல், காலம் ஒரு சவாலாகவே, அறிவில் விழிப்பும், மனதில் ஒளிரும் சத்தியப் பிழம்புமாக அவள் இருட்டில் நடக்கிறாள்.

அவளுக்கு வயது முப்பத்தெட்டாகிறது. இருபது வயதிலே கல்யாணமாகிப் புருஷனோடு போனவள்இ திடீரென்று ஒரு நாள் அவனைப் பிரிந்து, ஒற்றை மரமாகத் திருப்பி வந்தாள். அவள் தவறு செய்ய மாட்டாள் என்று முடிவான பட்டியாலே, இதிலே தர்க்கம், குறுக்கு

விசாரணைஇ நீதிக்காக அழுதல், எதுவுமில்லாமல் சுந்தரம் அவளை தம்முடனேயே, ஆயுள் பூராகவும், வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்ற பிரக்ஞையோடு, அவளை மனதால் அங்கீகரித்து, மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டார். அவளும் புருஷனிடம் திரும்பிப் போவதை விரும்பாமல் அவர் நிழலிலேயே தங்கி வாழத் தொடங்கிப் பத்து வருடத்துக்கு மேலாகிறது.

சுந்தரம் வருமானவரி இலக்காவில், உயர் பதவி வகித்து ஒய்வுபெற்றவர். கை நிறையப் பென்ஷன் வருகிறது. துளசியைத் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது. மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட்டாள். துளசியைச் சிரமமில்லாமல் வளர்ப்பதற்கு உதவியாக இருந்தவள் அவளுடைய தாயாரே. அவளும் இப்போது இல்லை. மறைந்து போன உறவுகளுக்கிடையே ஒற்றை மரமாக பிரிந்து நிற்கும் துளசியின் உறவு மாத்திரம் எப்படி ஒரு காவியமாகும்?

ஒருநாள் அவள் கையில் ஒரு கடித்தத்தோடு, அவர் படுத்திருக்கும் அந்த அறைக்குள் வந்தாள். சாத்திக்கிடக்கும் ஜன்னலைத் திறந்துவிட்டு அவர் பக்கம் திரும்பினாள். கட்டில் சட்டதோடு சாய்ந்து, தலையணையில் நிலைகுத்திப் படுத்தவாறு, முகட்டையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வெறித்த அவரின் திரை விழுந்த கண்களினூடே உயிரைத் தேடிப் பார்க்கிற பிரமையில் அவள் நின்றிருந்தாள். பிறகு மெல்ல மெல்ல அந்த உருவம் மறைந்து, அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஜன்னலுக்கு வெளியே, நிழல் மயங்கிய காட்சித் தொடரில், உயிர்; அற்று வரும், தன்னுடைய கிராமத்தின் வெறுமையைக் கண்ட பிறகுஇ அவளுக்கு எல்லாமே மறந்துபோயிற்று

அப்போது கண்ணை விழித்துச் சுந்தரம் கேட்டான்.

‘என்ன துளசி? வெளிநாட்டுக்கு கடிதமே, விசாகனா போட்டிருக்கிறான்?’

‘தெரியேலையப்பா! இது லண்டனிலே இருந்து வந்திருக்கு. ஆர் கடிதம் என்று புரியவில்லை. எதற்கும் பிரித்துப் பாக்கிறேனே!’

அவள் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, உணர்ச்சி நடுங்கியது. அதை அவசரமாக படித்து முடித்துவிட்டுக் குழம்பிச் சிவந்த முகத்தை நிமிர்த்திக் கண்கள் கலங்க, அவரைப் பார்த்துக் கொண்டே, ஒட்டாமல்இ அவள் அடித்தொண்டை வரண்டு பேசுகிற போது குரல் கம்மியது.

‘அப்பா! உங்கள் கதையைக் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கு. விசாகனாம்! விசாகன்! அவன் எங்களையெல்லாம் நினைத்துக்கொண்டு,

இனிமேல் ஏன் வரப்போகிறான்? அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு? அதை மறந்து விடுங்கோ! இந்த வேடிக்கையைப் பார்த்தியளே! அவன் அன்னை நரேந்திரனைத் தெரியுமல்லே, அவர்தான் லண்டனிலிருந்து, உங்களை வாழ்த்தி எழுதியிருக்கிறார். நீங்கள் நூறு வயதுக்கு மேல் இருக்க வேண்டுமென்று, அவர் பிரார்த்திக்கிறாராம் இந்த எண்பது வயதிலே, இப்படியொரு ஆசிர்வாதத்திற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே’

அவர் புன்னகை செய்தார்

‘என்ன இருந்தாலும்இ நரேன் நல்ல பிள்ளை தான் என்னை நினைத்துக் கடிதம் போட்டிருக்கிறானே’

அது மட்டுமா? அவர் குடும்பத்தோட திடீரென்று ஒரு நாளைக்கு இங்கு வரப்போகிறாராம். வந்து உங்களைப் போட்டோ எடுத்துக்கொண்டு திரும்பிப் போவாராம் இதெல்லாம் பெரிய காரியமில்லையா? அவர் அந்தஸ்து என்ன ? அவரது காலடி பட்டாலேஇ எங்களுக்கு சாபவிமோசனம் ஆகிவிடுமல்லே! அவர் எப்ப வருவாரோ என்று இருக்கு. நான் விழி ஆடாமல் வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறன். என்னப்பா மௌனமாகி விட்டீர்கள்? இன்னும் கேளுங்கோ? இருபது வருடங்களுக்கு முன் எங்களைச் சுற்றித் துருவ நட்சத்திரம் மாதிரி ஜொலித்துக்கொண்டிருந்த விசாகன் கதை தெரியுமா? நரேன்ணண்ணா அவனைப் பற்றித்தான் கவலையாக எழுதியிருக்கிறார். அவன் நாடோடி மாதிரித் தேசம் தேசமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறானாம். அவன் எங்கேயிருக்கிறானென்று தெரியவில்லையாம்’

‘சரி இனிமேல் எதுவும் நமக்குத் தெரிய வேண்டாம். துளசி காலம் எவ்வளவு கொடூரமாக மாறிவிட்டது பார்த்தாயா?’

இல்லையப்பா! இதுக்கு காலம் என்று நினைக்கிறதே ஒரு சமாதானப் போர்வையாக இருக்கு. வெறும் காலம் மனிதனை விழுங்குமா? நான் ஏன் இப்படி வைரமரமாக நிற்கிறன். வாழ்க்கை இலட்சியத்தில், குலையாமல் தேர்விடப் பழகியவனுக்கு பாதை சறுக்குமா என்ன? போங்கோவப்பா! இதுகளையெல்லாம். மறந்துவிட்டு தூங்கப் பாருங்கோ! நான் போறன்.

‘நில் துளசி, கெட்டகனவை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கு’

‘அப்பா! கெட்டகனவு தான் சதா உறுத்திக் கொண்டேயிருக்கு. நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போதே, நான் எரிந்த ஜடமாய் திரும்பிவந்தது உண்மையில்லையா? அந்த உண்மையையே, ஒரு கெட்டகனவு என்று நினைத்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கு, இதுக்காக ஒரு பொய்யைத்

தேடிக்கொண்டு போய்ச் சாக முடியுமா? எது முக்கியம் சொல்லுங்கோவப்பா!’

இதைச் சொல்லிக் கொண்டிருந்தவள், பொங்கி வரும் அழுகையை அடக்க முடியாமல், முகத்தை திருப்பிகொண்டு, அவருக்குத் தெரியாமல் கண்ணீர் வடித்தாள், அவளின் கன்னமெல்லாம் வழிந்தோடிய அந்தக் கண்ணீர் மனதில் ஏற்பட்ட கறையைக் கழுவுவதுபோல, மார்பிலே விழுந்து தெறித்தது.

அவள் வெகுநேரமாய், அப்படியே தன்னை மறந்து நின்றிருந்தாள். நரேந்திரனின் கடிதம், இன்னும் கையில் உறுதிக்கொண்டிருந்தது. அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஒரு யுகம் கழித்து அது வந்து சேர்ந்திருக்கிறது. இது துருவங்களாக ஒட்டாமல் பிரிந்து போன உறவை நினைத்துப் பெருமைப்பட என்ன இருக்கிறது? என்று தான் அவள் நினைத்தாள்.

அப்பா வேறுவிதமாக நினைக்கலாம், அவரின் திருப்திக்காகப் பதில் எழுதிப்போட வேண்டியதுதான் என்று யோசித்தவாறு, அவள் அக்கடிதத்தை மேசை மீது பத்திரப்படுத்தி வைத்துவிட்டுஇ அப்பாவிடம் திரும்பினாள்.

அவர் தன்னை மறந்து, தூங்கிக்கொண்டிருந்தார். பகல் முழுவதும், பேப்பர் வாசித்துக்கொண்டு கிடப்பார். இரவு ஏழு மணிக்கே தூக்கம் வந்துவிடும். யாரும் சத்தம் போட்டு, அவரை எழுப்பக்கூடாது.

பகலில் துளசியைத் தேடிக்கொண்டு, நிறையப்பேர் வருகிறார்கள். அவளுக்கு எல்லோரிடமும் சிரத்தையான அன்பு உண்டு. பேதமின்றி அவள் எல்லா மனிதர்களோடும், மனம்விட்டு இயல்பாக பழகிவருவதால், அவளுடைய உறவு ஊரை இழுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் ஓயாமல் வருவார்கள். அவர்களை இழுத்து வைத்துக் கொண்டு, அவள் கதை சொல்லிக் கொண்டிருப்பாள், பகலில் ஒரே அமளிதான். இரவு ஆறு மணிக்குப்பிறகு பூட்டிய கதவுகளுடன், அவளின் வீடு ஒரு தவச்சாலை மாதிரி இருக்கிறது. அப்பா தூங்கியதும், அவள் நிச்சிந்தையாக, வாசல் தூணருகே சாய்ந்து கொண்டு, விழித்துக் கொண்டிருப்பாள். அவள் படுப்பதற்குப் பத்து மணிக்கு மேலாகும்.

நிலவு தெரிய ஆரம்பித்துவிட்டது. இரவு கனத்த அமைதியினிடையே, அப்பாவின் குறட்டை ஒலி, காற்றுப் பிரவாகமாய், காதை நெருடிவிட்டுப் போகிறது.

அவள் அதைக் கேட்டவாறே, மனமில்லாமல் ஏதோ சாப்பிடுவதாகப் பெயர் பண்ணிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பினாள். அவளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? எப்படிப் பார்த்தாலும் அவள் ஒரு திக்கற்ற பேதைதான். சுந்தரமும், இன்னும்

எவ்வளவு நாளைக்கு இருக்கப் போகிறார்? தந்தை போனால் ஒரு பெண்ணுக்குப் புருஷன் நிழல், அதுவும் போனால், பிள்ளை பார்;த்துக் கொள்வான்.

நான் யாருடைய நிழலில் தங்கப் போறன்? என்ன இருந்தாலும், நான் ஒரு பெண்தானே, இதை மறந்துவிட்டு. உணர்ச்சியை விளையாட்டாக, நினைத்துக் கொண்டு வாழ்க்கை லட்சியத்தைக் கடைப் பிடிக்கிறதாய் சொல்லிக் கொள்வதிலே, என்ன லாபமிருக்கு? என்னை உரிய வழியில், பவுத்திர உணர்வோடு காப்பாற்றிக் கொள்ள இது மட்டும் போதுமா? அப்ப நான் ஏன் தனியாய் இருக்கிறேன்? அவரை நம்பிக் கொண்டு, நான் சேற்றிலே புதைந்தது போதும். டைவேர்ஸ் எடுத்துக் கொண்டு வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கலாமே! ஏன் முடியேலை?’

அவள் இதையெல்லாம், மிகவும் கவலையோடு, மனம் குழம்பியவாறே, இரவு வெகுநேரம், தூக்கம் வராமல் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்தாள். தலைக்கு மேலே தூரத்தில், நிலா பிரகாசமாக எழுந்து கொண்டிருந்தது. வாழ்க்கையின் வஞ்சகக் கறையே படியாமல், குணங்களாலும் அன்பு காட்டுகிற மனங்களாலும், உயர்ந்து நிற்கிற மனிதர்களைப் போல், கறையே படியாத அதன் முகம், வானத்துத் திரையில் பிரகாசமாக ஒளிர்ந்தது, அவள் முகத்தை நிமிர்த்தி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன் முடியேலை? என்று மீண்டும் தன்னையே கேட்டுக் கொண்டாள்.

ஒரு பெண்ணைப் பொறுத்தவரை, எது அவசியமோ, அது புருஷன் அன்பு, அவனாலேயே கிடைக்கிற உண்மையான சந்தோஷங்கள். நம்பிக்கை கொள்ளவைக்கிற துணை இவையெல்லாம் கிடைக்காமல் போனால், அந்த நிழலிலிருந்து நிலையாகவே ஒதுங்கிவிட வேண்டியதுதான். இன்னொரு நிழலை நம்பி எப்படிப் போறது? நான் இனிமேல் இப்படிக் கறைபட்டுப்போக விரும்பேலை. வாழ்விலே, இதைவிட எவ்வளவோ இலட்சியங்களெல்லாம் இருக்கு. புருஷன் துணை இல்லை என்ற நினைப்பிலே, நான் வெறுமைப்பட்டு நிற்கிற மாதிரித் தோன்றினாலும், உண்மையில் எனது இயல்பான குணங்களை இழந்துவிட்டு, நான் மாறவேயில்லை. ஒரு சாதாரண மனித உறவின் விருத்திக்காக, வாழ்வின் புனிதங்களைப் பங்கப்படுத்திக் கொள்வதிலே, என்ன நியாமிருக்கு? இப்படி வருகிற, எதற்கும் மாறாத, அன்பின் புனிதமே, எல்லாப் பாவங்களையும் சுட்டெரிக்கப் போகிறது. இதுவே எனக்கு ஒரு சாபவிமோசனம் ஆகிவிடாதா?

நிச்சயம் ஒரு நாளைக்கு என்னைத் தேடிக் கொண்டு விசாகன் வந்து நிற்கத்தான் போகிறான். அவனைப் பார்த்து ஒரு யுகமாச்சு. சின்னவயதிலே எங்கள் கிராமத்தை நினைத்துக் கொண்டு, டவுனிலிருந்து அடிக்கடி அவன் வந்து நிற்கிறபோ தெல்லாம் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்பவெல்லாம் அவன் மனம் எத்தனை தெளிவாக இருக்கும்

களங்கமில்லாத அவனின் நட்பு, எனக்கு இயல்பான, மாறவே முடியாத என்னுடைய கிராமத்துப் பாமர குணங்களுக்கு ஈடாகவே சந்தோஷத்தை அளித்தது. அப்போது அவன் துருவநட்சத்திரம். இப்ப எதுக்கோ கறை பூசிக் கொண்டு அலைகிறான். வானத்திலே உயர நின்று ஒளிவீசிப் பிரகாசித்த அந்தத் துருவ நட்சத்திரத்தை, உண்மையில் காலம்தான் விழுங்கியதா? மீண்டும் அவன் வருவானா?

‘விசாகா? உன்னை உறவென்று நினைத்து நான்; அழவில்லை. இந்த மண்ணிலே கறை பூசிக் கொண்டு விழுந்த ஒரு எரிநட்சத்திரம் நீ, நீ விழுந்த இடத்தில் எல்லாம் எரிந்து போகும். அப்படிப் போனால் மிஞ்சுவது யார்? உலகம் எங்கே திரும்பிக் கொண்டிருக்கிறது? எனக்கு இதுக்கு ஒர் பதில் சொல்லத் தெரியேலை, கிழக்குத் திசையையே பார்த்து, என் விழியெல்லாம் நனைந்து போகிறது. இருட்டிலே சூரிய நமஸ்காரத்துக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறன். சதா அரித்துத் தின்னும் மனித உறவுகளிடையே, சிறு வயதிலே எனக்கு உன்மீது ஏற்பட்டுப்போன, அன்பு, நம்பிக்கை ஒன்று மட்டும்தான். என் மனதிலே சாசுவத உண்மையாக, நிலைத்திருக்கு. அது கற்பனை என்று தோன்றுகிறபோது, ரொம்ப வேதனையாக இருக்கு, உண்மையும், கற்பனையுமாக, வாழ்க்கையில் நிழல் பிரிந்து நிற்கிறது. இந்த நிழலிலே தூங்கிச் சாகிறதை விட இப்ப தூக்கமே ஒரு சுகமாக இருக்கு!’.

அதன்பிறகு தரையிலே அவள் பாயை விரித்துப் போட்டுக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கினாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *