குழந்தை சுமித்ரா

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 2,371 
 

வாசலில் கார் சத்தம் கேட்டதுமே ‘போர்டிகோ’ வரை அவசர அவசரமாக ஓடி வந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே ஓடினாள் சமையற்காரி சம்பகம். எஜமானர் ராகவேந்திரன் அவர் மனைவி கங்காபாய் தான் என்பது தெரிந்ததும் அவள் உவகை பன்மடங்காக ஆயிற்று.

டிபன் செய்து முடித்து வைத்ததும் அவர்கள் வந்துவிட்டார்கள். சுடச்சுடப் பரிமாறினால் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதும் அவள் அறிந்ததுதான்! அவள் அந்த வீட்டில் சமையற்காரியாக நடத்தப்படவில்லை. ஆகவே அவளும் மிகவும் பொறுப்பு உணர்ச்சியுடன் தன் காரியங்களை கவனித்ததில் வியப்பு ஏது?

ஐந்து நிமிஷங்களுக்குள் டிபன் சாப்பிடத் தன்னைத் தயார் செய்துகொண்ட ராகேவேந்திரன் மணையில் அமர்ந்தபடியே, “சுமீ!..” என்று அழைத்தார்.

“நான் ஒருத்தி படடினியாய்க் காய்ந்துகொண்டிருப்பது உங்கள் கண்ணில் படுகிறதா? எப்பொழுதும் சுமி, சுமி, சுமி!” செல்லமாகச் சொல்லியபடியே அருகில் வந்து உட்கார்ந்து ஆவலுடன் ‘டிபனில்’ கையை வைத்தாள் மனைவி கங்காபாய்.

“அதற்குள் எங்கே போனாள்?” – மெல்லிய குரலில் சொன்ன வேலைக்காரி சம்பகம், மறுபடியும் கூடத்துப் பக்கம் வந்தாள். “சுமி………ஈ…….” அன்பும் வாஞ்சையும் குரலில் இழையோடக் கண்களால் அவளிருக்குமிடத்தைத் தேடியபடியே கூப்பிட்டாள்.

ஊஹூம்…! பதிலில்லை.

‘ஒரு வேளை மாடிக்குப் போயிருப்பாளோ?’ அவள் சிந்திப்பதற்குள், ராகவேந்திரனின் குரல் கேட்டது. “இன்னும் அவள் சாப்பிடவில்லையா? மணி மூன்றாகப் போகிறதே!” – கடைக் கண்ணால் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பக்கத்தில் இருக்கும் சுமியின் தட்டையும் பார்த்தார்.

“அவ எங்கே? அவ்வளவு சீக்கிரம் சாப்பிட வந்துவிடுவாளா? சம்பகத்தைப் படாத பாடு படுத்தி வெச்சிருப்பாள். இல்லாதபோனா அடுத்த வீட்டு லல்லியோடு மாடியிலே கொட்டம் அடிப்பா…!” டிபனைச் சுவைத்தபடி கணவனை ஒரு பார்வையில் மயக்கினாள் கங்கா.

மாடி முழுவதும் தேடிவிட்டு உள்ளே வந்த சம்பகம் தயங்கியபடியே “காரிலிருந்து இறங்கியதும் எங்கே போனாள்? உள்ளே வரவில்லையே !” என்றாள் மெல்லிய குரலில்.

“என்ன, காரிலிருந்தா!” குரலில் கலவரம் தொனிக்க நிமிர்ந்து உட்கார்ந்தார் ராகவேந்திரன்.

“என்ன சம்பகம் சொல்றே?” – கங்காபாயின் குரலிலும் அதே கலவரம்.

“காலையிலே நீங்க போனபோது சுமி உங்களுடன் வரவில்லையா?”

“என்ன இது?” பாதி டிபளில் எழுந்திருந்த ராகவேந்திரன், “அப்படியானா அவ எங்கே ? எங்களுடன் வராமல், இங்கேயும் இல்லாமல்… நல்ல வீடு! நல்ல கவனிப்பு!” உரத்த குரலில் கத்தியபடி கையைக் கழுவி விட்டு தொப்பென்று பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தார். அவர் உள்ளம் எங்கோ இருந்தது.

காலைச் சம்பவங்கள் அவர் முன்னால் நிழலாட ஆரம்பித்தன.

காலை மணி ஒன்பதரை அடித்தது. “ரெடியா கங்கா?” மாடியிலிருந்து இறங்கி வந்தபடியே ராகவேந்திரன், தான் கிளம்பிவிட்டதைத் தெரிவித்தார்.

“ஓ, நான் ரெடி! இத பாருங்க இவளை – சுமியும் வர வேண்டுமாம். அடம் பிடிக்கிறாள்.” சுமித்ராவை ஒரு கையில் அணைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தாள் கங்கா. “வந்தா என்ன, வரட்டுமே! லீவு நாள்தானே! என்ன சுமி இப்படியேவா வரப்போறே? சீக்கரம் டிரஸ் பண்ணிக்கோ – ஊம்…” ராகவேந்திரன் வாசற்பக்கம் வந்துவிட்டார்.

டிரைவர் காரைத் துடைத்துக் கொண்டிருந்தான். ‘கேட்’டைத் தாண்டியபடியே இரு புறமும் பார்வையைச் செலுத்திய வண்ணம் தபால்காரன் உள்ளே வந்தான். அவன் கொடுத்த கடிதங்களைப் பெற்றுக்கொண்ட ராகவேந்திரனின் வாய் முணமுணத்தது.

“நல்ல வேளை! இந்த வேலையும் ஆயிற்று!” மேலோட்டமாகக் கடிதங்களின் மீது ஒரு பார்வை! – எல்லாம் சாதாரணக் கடிதங்களே…!

ராகவேந்திரன் சிரித்தபடியே ஒரு கடிதத்தைப் படித்துவிட்டுச் சுமித்ராவிடம் நீட்டினார். அவள் கடிதத்தை வாங்கிக்கொண்டபடியே “போப்பா!” என்று சொல்லி ஓடிவிட்டாள்.பின்… பின்… என்ன நடந்தது. அவள் வரவே இல்லை!

‘அப்படியானால் அவள் எங்கே போயிருப்பாள்? ஒரு வேளை… ஒரு வேளை – சீச்சி! அப்போதே சம்பகத்தை அழைத்து வழக்கம் போல் சொல்லிவிட்டுப் போயிருந்தால்…!’ தன் குற்றம் அவரை உறுத்தியது. ஏதோ ரோசத்தில் கார் ஏறும் சமயத்தில் ‘ நான் வரல்லே போ!’ என்று குழந்தை தோட்டத்துப் பக்கம் போனதும் மறந்து போகவில்லை.

கணவனின் பக்கம் வந்து நின்றபடியே – “இப்படியேயிருந்தால் என்ன செய்வது? – அங்கேயாவது ‘போன்’ பண்ணிப் பார்க்கலாமோ?” தன் சந்தேகத்தை விவரித்தாள் கங்கா. அவருக்கும் அது அப்போதுதான் புரிந்தது. அவசரமாகப் போனைக் கையில் எடுத்தார்.

“ஹலோ…! நான்தான் ராகவேந்திரன்… என்ன வரல்லியா? லெட்டர் வந்ததே? பத்மா இல்லையா? உம்…. ஆமாம்… ஊம்… ஓகோ!… தாங்க்ஸ.” அவர் முகம் வாடிவிட்டது.

கணவனின் அருகில் நின்றபடியே சம்பாஷணையை ஊகித்த கங்காவுக்கும் ‘ரிஸல்ட்’ தெரிந்துவிட்டது. இப்போது என்ன செய்வது? கண்கள் கேட்டன.

“பொறு! சாயந்தரம் வரை பார்க்கலாம்! அவள் அப்படி யொன்றும் அசட்டுக் குழந்தையில்லை. எட்டு வயதுதான் என்றாலும், சமயத்தில் ‘பெரிய மனுஷி’ மாதிரி பேசிச் சமாளிப்பாளே! ஆகவே கவலைப் படாதே! – போலீசுக்குச் சொல்லுவதில் அவசரம் காட்டக் கூடாது.” நிதானமாகச் சொன்னார்.

அவருக்கும் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது. என்றாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

பகலை விழுங்கும் அளவுக்கு நேரம் நகர்ந்தது. அத்துடனா? இரவையும் விழுங்கி மறுபகலைத் தோற்றுவிக்கவும் செய்துவிட்டது.

அடுத்தபடி கவலையின் ரேகைகள் படியவே நேரே ‘கான்வென்ட்’க்கு காரைச் செலுத்தினார் ராகவேந்திரன். அங்கும் அவருக்கு விவரமான தகவல் கிடைக்கவில்லை. ஆயினும் மேலும் இரண்டொரு, அவள் வயதுக் குழந்தைகளின் விலாசத்தை மட்டும் அறிய முடிந்தது. அங்கங்கு போன போது அவர்களையும் பார்க்க முடியவில்லை.

போலீசுடக்குத் தகவல் தர வேண்டியதுதான் கடைசி வழியா? அவள் அப்படி ஒன்றும் எங்கும் தனியாகச் செல்லக்கூடியவள் அல்லவே! நேற்று லெட்டர் போட்ட பத்மா வீட்டுக்குக் கூட வரவில்லை என்றார்களே! என்னென்னவோ குழப்பங்கள் மனத்தை வருத்த, போலீசுக்குச் சொல்வதற்கு முன் வீட்டிற்கு ஏதாவது தகவல் வந்திருக்கலாமோ என்ற நப்பாசையுடன் பங்களாவில் நுழைந்தார் ராகவேந்திரன்.

வாசல் வராண்டாவில் ‘மாதவன்’ – தூரத்து உறவு, பெரியப்பா முறை ஆக வேண்டியவர் – உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் கங்காபாய் இருந்தாள்.

வரும்போதே அவன் கண்களைப் பார்த்து ஏதோ முக்கிய விஷயம் இருக்க வேண்டும் என்பதை ஊகித்து, தாற்காலிக ஆறுதலுடன் “வாங்கோ!” என்றபடியே அவர் எதிரில் அமர்ந்தார் ராகவேந்திரன்.

அவர் சொன்ன செய்திகள் அவனுக்கு ஆறுதலையும், அதே சமயம் ஆச்சரியத்தையும் அளித்தன.

“என்ன?…” அவர் சொன்னதை மறுபடியும் கேட்டார் அவர். “நிஜமாக அப்படியா சொன்னாள்…… எதனால் அப்படி?” என்றார் ராகவேந்திரன் ஆச்சரியத்துடன்.

“நான் பொய்யா சொல்கிறேன்… அப்படியே சொன்னாள்…. ‘தாத்தா உங்க வீட்டுக்கு வந்துட்டேன். இனி நான் அங்கே போக மாட்டேன். நான் வந்ததை நீங்க சொல்லிட்டா அப்புறம் இங்கேயும் இருக்க மாட்டேன். எங்கேயோ போயிடுவேன்’ என்றாள்… ‘இரேம்மா! இதுவும் உங்க வீடுதான்!’ என்று சொல்லிவிட்டேன். பிறகு எவ்வளவு துருவிக் கேட்டும் அவள் வந்த காரியத்தைச் சொல்லமாட்டேன் கிறாள். எவ்வளவு அழுத்தக்காரி தெரியுமா?” மாதவன் விளக்கினார்.

குழந்தை எங்கோ ‘உயிருடன்’ இருக்கறாள் என்ற ஒரு தகவலே போதும். ஆனால் ஏன் இப்படி திடீர் கோபம் வந்து விட்டது அவளுக்கு?’ அதுதான் ஒருவருக்குமே புரியவில்லை.

அடுத்தபடி அவளை எப்படிச் சரிசெய்து அழைத்துக் கொண்டு வருவது என்பதை அவர்கள் எல்லோரும் முடிவு செய்து விட்டார்கள்.

அடுத்த நிமிஷம் மூவருமாக ‘சேவா நிலையத்தை’ அடைந்து, அதன் தலைவியிடம் ஆலோசித்தனர்.

“பெரியவர் சொற்படியே கொஞ்ச நாள் போகட்டும். ஏனென்றால் நாம் குழந்தைதானே என்று சில சமயம் அலட்சியமா நடந்துடறோம். அது அவங்க மனத்தை ரொம்ப பாதித்து விடுகிறது. தவிர நீங்க சொல்வதைப் பார்த்தா, ‘அந்தக் குழந்தை ரொம்ப சூட்சும புத்தி’ யுள்ளதுன்னு தெரியறது. இப்ப ‘ஸம்மர் வெகேஷன்’தானே. ஒரு மாறுதலா, அவங்க கிட்டவே இருக்கட்டும். தவறிப் போய்க் கூட நீங்க இந்த மாதிரி ‘ப்ளான்’ போடுவதை அந்தக் குழந்தை இருக்குமிடத்தில் பேச வேண்டாம், ஆமாம்!….” என்று கண்டிப்புடன் அந்த பாலர் இல்லத்தின் தலைவி லட்சுமிபாய் அவர்களிடம் சொன்னாள்.

பல ஆண்டுகளாக குழந்தைகளை மிகவும் நுட்பமான முறையில் அணுகி, மென்மையான உணர்வுகளும், நோக்கங்களும் நன்கு அறிந்தவர் இல்லத் தலைவி லட்சுமிபாய்.

அடுத்த வாரமே இல்லத்தின் பணிபுரியும் இரண்டு சேவகிகளான ஹேமாவும் மல்லிகாவும் கிராமத்தை நோக்கிக் கிளம்பி விட்டனர்.

அவர்கள் செல்லவேண்டிய இடம் தெளிவாக அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்ததால், அதை அடைவதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

அது சிறிய வீடுதான்! ஆனாலும் அதில்தான் எத்தனை எழில்! வாசலில் சின்னஞ் சிறு தோட்டம். அதில் இப்போதுதான் வைத்து வேர் பிடித்தது போன்ற தோற்றத்தில் சில செடிகள்… எல்லாவற்றையும் கவனித்தபடியே மெதுவாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் மல்லிகா, பின் தொர்ந்தாள் ஹேமா.

“வாங்க, யாரைப் பார்க்கறீங்க?…” எதிர்கொண்டு அழைத்து, பெரியவர்களைப் போல விசாரித்தபடியே திண்ணையில் தூசியைத் தட்டி உட்காரச் சொன்னாள் ‘சுமி’. அவளது அநத்ச் சேயகை அவர்களைத் திகைக்கச் செய்தது. ஹேமா நெகிழ்ந்து போனாள். அவள் விழிக்கடையில் நீர்த் துளி திரண்டது.

மல்லிகாதான் பதிலளித்தாள், “ நீ இங்கேதான் இருக்கயாம்மா. இது உங்க வீடா?” கேள்வி கேட்டாளே தவிர, கள்ளமில்லாத இந்தக் குழந்தையிடம் எதுவும் தெரியாதது போல் நடிக்க வேண்டியிருக்கறதே என்று குற்ற உணர்வும் லேசாகத் தலை தூக்கியது.

ஹேமா சும்மாவே நின்று கொண்டிருந்தாள். ‘இந்தக் குழந்தை எதற்காக அந்தப் பரந்த கடல் போன்ற வீட்டையும், வீடு நிறைந்த விளையாட்டுப் பொருள்களையும், அன்பையும், ஆசையைப் பொழியும் பெற்றோரையும் பிரிந்து வந்திருக்கிறது?’ என்று அவள் மனம் சிந்தனையில் மூழ்கியிருந்தது.

வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டதும், உள்ளேயிருந்து தலையில் ‘சும்மாடு’ சுற்றிய ஒரு பெரியவர் வந்தார். “வாங்க! வாங்க!… யார் குழந்தை? இவங்க, உங்க பள்ளிக் கூடத்து ‘டீச்சர்’மாருங்களா?” சுமித்ராவையும் அவர்களையும் மாறி மாறிப் பார்த்து நின்றார் பெரியவர்.

“தாத்தா எனக்கும் இவங்க யார்னு தெரியாது. இந்தப் பக்கமா வந்து நம்ம வீட்டுச் சின்னத் தோட்டத்தைப் பார்த்தாப்பிலே நின்னாங்க. அப்படியே உள்ளேயும் வந்திருக்காங்க. ஏங்க சிஸ்டர்! நான் சொல்றது சரிதானே?” என்ற சுமித்ரா, ஹேமா, மல்லிகா இருவரையும் பார்த்துக் கேட்டுவிட்டு, ‘கல கல’ வென்று சிரித்தாள்.

“வாங்க, உள்ளேயே வாங்க -” முன்னால் நடந்து சென்று ஒரு ஜமுக்காளத்தை விரித்தார் பெரியவர். குப்பா என்று அழைக்கப்பட்ட குப்புலட்சுமி புதியவர்களைப் பார்த்து வெட்கமும், பயமும் படர்ந்த கண்களுடன் தூண் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள்.

மனைவியிடம் ஏதோ ‘குசு குசு’ வென்று பேசிவிட்டு வந்த மாதவன் – ஆம்! அதுதான் பெரியவரின் பெயர் – குப்புலட்சுமையைக் காட்டி “இவள் என் பெண் வயித்துப் பேத்தி”… என்று சொல்விட்டு – “இவள்…இவள்…” தயங்கியபடியே நிற்க – “பிள்ளை வயத்துப் பேத்தி! – அப்படித்தானே தாத்தா!” கை கொட்டிச் சிரித்தபடியே கூவினாள் சுமித்ரா.

“ ஆமாம்! அப்படித்தான்.” மறுபடியும் உள்ளே போனார் அவர். சின்னஞ்சிறு தம்ளர் இரண்டில் காபியை எடுத்து வந்து, வந்தவர்கள் முன்னிலையில் வைத்து விட்டு, தன் மனைவியின் பக்கம்திரும்பி “டவுனிலிருந்து வந்திருக்காங்க…” மேலும் எதை எப்படி அறிமுகப் படுத்துவதென்பது புரியாமல், அத்துடனேயே நிறுத்தினார். அவருக்குத் தெரிந்ததைக் கூடச் சொல்ல, அந்தச் சூழ்நிலை இடம் தரவில்லை.

மல்லிகாவும், ஹேமாவும் தாங்கள் வந்த காரியத்தைப் பற்றி எப்படிப் பேசுவது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்….

மெல்ல மெல்ல ‘குப்பா’வின்தயக்கமும் தெளிந்து கொண்டிருந்தது. தூணின் மறைவிலிருந்து விட்டு மல்லிகா அமர்ந்திருந்த ஜமுக்காளத்தின் ஓரத்திற்கு வந்து உட்கார்ந்தாள் குப்புலட்சுமி.

“வா! உன் பெயர் என்ன? இவள் பார் ! எவ்வளவு சமத்தா பேசறா…” சுமித்ராவுடன் ஒப்பிட்டபடியே கேட்டாள் மல்லிகா.

“உன் பெயரைச் சொல்லவில்லையே!” ஹேமா கேட்டாள்.

“சுமித்ரா!” பளிச்சென்று பதிலளித்தாள் சுமி.

மெல்ல மெல்லப் பேச்சு மாறி அநுகூலமான சூழ்நிலைக்குத் தாவியது.

“…ஓ! நான் ரெடி! ‘குப்பா’தான் எதையும் பார்த்ததே யில்லையே! இரண்டு பேருமே வரோம்… ஆனா ஒண்ணு! சாயந்தரம் இங்கே கொண்டு வந்து விட்டுடணும்” கண்டிப்பாக இருந்தது ‘சுமி’யின் பேச்சு.

“ஏன் தாத்தா! போய் வரட்டுமா?” சுமித்ரா கேட்டாள்.

பெரியவர் தயங்குவது போல் நடித்தால் கூட, இவ்வளவு எளிதில் காரியம் கை கூடி விட்டதில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் ‘பாலர் நிலையத்தில்’ காணப்பட்டரர்கள். அதன் தலைவியிடம் சுமி பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் பேசப் பேச முன்கூட்டியே பக்கத்து அறையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பெற்றோரின் கண்களில் கண்ணீர் பெருகிற்று.

“ஓகோ! அப்படியா!… அது தப்புதான். சரியான காரியம் செய்தே? மாதவத் தாத்தா வீடு உனக்கு எப்படித் தெரியும்?” இல்லத்தின் தலைவி லட்சுமிபாய் கேட்டாள்.

“ஓ! எனக்கு அவரை தெரியுமே!” என்று தலையை ஆட்டிக் கொண்டு சொல்ல ஆரம்பித்து விட்டாள் சுமித்ரா.

“முந்தி ஒரு தடவை அந்தத் தாத்தா எங்க வீட்டுக்கு வந்திருந்தாரே!” அவள் ‘அவர்’ வந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தாள். தான் அறிந்தபடி அதை விவரித்தாள்.

“அன்றைக்கு எங்க வீட்டில் ஏதோ ஒரு கல்யாணம். யாரெல்லாமோ வந்திருந்தாங்க. ஒரே கூட்டம். அப்பத்தான் மாதவத் தாத்தாவும் வந்திருந்தா – குப்பா வரவில்லை. அன்னிக்குத்தான் அப்பா சொன்னா – எங்க டீச்சர் கூடச் சொன்னாங்க. “

அவள் விவரித்துக்கொண்டிருந்தாள். “அன்றைக்கு நிறைய நிறையத் தபால் வந்தது. எல்லாம் கலர் கலரா பூ போட்ட தபால்களே. அப்போதான் ஒரு கவரை எடுத்து அம்மா பிரிச்சாங்க!” அவள் சொல்லச் சொல்ல விளையாட்டாக நடந்த அந்தச் சம்பவம் ராகவேந்திரனின் முன் தோன்றியது.

அது அவர் பெயருக்கு வந்த வேறு ஏரோ ஒரு சொந்தத் தபால். அதே குவியலில் கங்காவுக்கும் அவளது தோழிகள் அனுப்பிய தபால்கள் இருந்தன. அதையெல்லாம் பொறுக்கி ராகவேந்திரன் மனைவி கங்காவிடம் தந்துவிட்டு… தன் தபாலைப் பிரிக்கும்போது அவளிடம், “இதோ பார், உன் தபால்களை நான் பார்த்தேனா? நீ ஏன் என் பெயருக்கு வந்த தபால்களைப் பிரிக்கிறே?” – சகஜமாகச் சொன்னாலும் அதில் கண்டிப்பு இருந்தது. எதிரே சோபாவில் சுமித்ராவும் அவளது டீச்சர் சரோஜாவும் உட்கார்ந்திருந்தனர்.

“இப்ப ‘க்ரீடிங்ஸ்’ வந்தது. அதை எல்லோரும் பார்த்தோம்…” என்றாள் கங்கா புன்முறுவலுடன்.

“அவரு சொல்றது சரிதான்ங்க…” என்று சரோஜா டீச்சர் அதை ஆமோதித்தபடியே – சுமியின் பக்கம் திரும்பி – “ நீ கூட அப்படித்தான். பிறர் தபாலை அவங்க அனுமதியில்லாம பார்க்கக் கூடாது…ஊம்!” தலையை லேசாக வருடியபடியே சொன்னாள்.

“சரிங்க டீச்சர்!” அவளது சொல்லுக்கு இனி அப்பீலே கிடையாது என்ற நம்பிக்கை சுமியின் கண்களில் ஒளி விட்டது…….

அந்தச் சம்பவம் இவ்வளவு பெரிய செயலுக்கு வித்திட்டு, சிறுமியின் உள்ளத்தில் துணிவை வளர்க்கும் என்று யார்தான் நினைத்திருப்பார்கள்?

“ஊம்… பிறகு?” லட்சுமிபாய் கேட்டாள்.

“அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு, என் தபாலை மட்டும் அப்பா எப்படி என்னைக் கேட்காமல் பார்க்கலாம்?” குரலில் குறை தொனித்தது.

“உங்க அப்பா அம்மாதானே சுமி! அவங்க பெரியவங்க இல்லையா?” லட்சுமிபாய் குறுக்கிட்டாள்.

“பெரியவங்களானா?….” சற்று நிறுத்தி மறுபடியும் தொடர்ந்தாள். “பொய் சொல்லக் கூடாதுன்னு எங்களுக்குச் சொல்றாங்களே? அவங்க மட்டுத் பொய் சொல்லலாமா? எங்க டீச்சர், பெரியவங்களும் கூட நேர்மையா நடக்க வேணும்னு சொன்னாங்களே?” என்று சுமித்ரா ஒரு போடு போட்டாள்.

“சரி, இப்ப உங்க அப்பா அம்மா என்ன செய்யணும்?” என்று சுமியைக் கேட்டாள் லட்சுமிபாய்.

“இனி மேலே என் தபாலை அவங்க பார்க்கக் கூடாது!”

தனக்கு ‘பத்மா’ எழுதின ஒரு தபாலை எடுத்தாள் சுமி. “இதப் பாருங்க. இதையெல்லாம் பார்த்துட்டு அப்பா ஏன் பரிகாசம் பண்ணினார்?” – ஏதோ ஒரு வரியைச் சுட்டிக்காட்டியபடி தலைவியிடம் அதைக் கொண்டுபோனாள் சுமித்ரா.

“அச்சோ! நான் பார்க்க மாட்டேன்; அப்பறம் நீ என்னையும் திட்டுவே…!” குழந்தையைப் போல் வாய் விட்டுச் சிரித்தபடியே அந்த அம்மாள் அந்த வரியைப் பார்த்தாள்.

ஒன்பது வயதுக் குழந்தையின் கள்ளமற்ற விருப்பம், அதன் எழுத்துக்களில் துல்லியமாகத் தெரிந்தது.

“அதெல்லாம் போகட்டும். இனி அவங்க பார்க்க மாட்டாங்க. ஒரு வாரமா நீ அவங்களைப் பார்க்க வீட்டுக்குப் போகவே இல்லையே! இன்றைக்கு வேண்டுமானல் அங்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்கிறேன், போய்ப் பார்த்துவிட்டு, பிறகு வேண்டுமானால் ‘மாதவத் தாத்தா’ வீட்டுக்குப் போ! என்ன கண்ணு?…”

அந்த அம்மாள் சொல்லி முடித்ததும் அந்த அறையில் மௌனம் நிலவியது. உடன் அற்புதத்தையும் விளைவித்து விட்டது.

குழந்தை சுமித்ரா கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டாள். என்ன இருந்தாலும் அவள் குழந்தைதானே!

“சரிங்க டீச்சர்… நான் போறேன் டீச்சர். அம்மாவைப் பார்க்கணும் டீச்சர். அப்பாதான் சொன்னாங்க, அம்மா எதுவும் சொல்லலை. அழுது கொண்டே அவள் சொன்னாள்.

மறுபடியும் மௌனம் சூழ – அந்த அறையின் கதவுப் பக்கம் ஓர் ஓசை. ‘குப்பா’ திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.

“கண்ணே சுமி!…” கங்காபாயின் கரங்கள் குழந்தையை அணைத்தன.

“அம்மா!…” சுமித்ராவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

– ஆனந்த விகடன் – 06–03–1966

Print Friendly, PDF & Email

1 thought on “குழந்தை சுமித்ரா

  1. எனக்கு 4 வயது இருக்கும்போது என் தந்தை தேஜ் அவர்கள் எழுதிப் விகடனில் பிரசுரமான குழந்தை சுமித்ரா இன்று சிறுகதையே சிறுகதை டாட் காம் பார்க்கும் போது எந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுகதை டாட் காம் என் அன்பின் நன்றிகள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *