கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 547 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நண்பன் அண்ணாமலை தனது சோகக் கதையைச் சொல்லிவிட்டுச் சென்றதும் என் மனம் இரக்கமும், பச்சாதாபமும் நிறைந்து அதையே சிந்தித்துக்கொண்டிருந்தது. ஆம், பிரிவுத் துயரம் சகிக்க முடியாததுதான். அதிலும் இளம் தம்பதிகளைப் பிரிப்பது போன்ற கொடுமை. வேறென்றுமில்லை. சீதையை விட்டுப் பிரிந்து செல்ல எண்ணிய ராமன். தன்னுடன் வந்தால் கொடுவெங் கானத்தில் அவள் பட வேண்டிய கஷ்டங்களை விவரித்துக் கூறியபோது, “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று சீதை பதில் சொன்னதாக கம்பர் சித்தரிக்கிறார் அல்லவா? ஆம். காதலர் பிரிவுத் துன்பம் காதலர்தான் அறிவரேயல்லாது மற்றோர்க்கு அது பிரமாதமாகத் தோன்றாது. அண்ணாமலையின் மாமனார் தன் மகளுடையவும், மருமகனுடையவும் பிரிவுத் துயரை அறிந்திருந்தால் அன்று அவர் அவ்வாறு பிடிவாதம் பிடித்து, தம் மகளிடமிருந்து மருமகனைப் பிரித்திருப்பாரா? அதன் விளைவாக அண்ணாமலையின் வாழ்க்கைதான் இவ்வாறு கெட்டுக் குட்டிச் சுவராகி இருக்குமா?

உதாரணமாக,

அண்ணாமலை மலாய் நாட்டுக்கு வரும்போது பதின்மூன்று வயது பையன்தான். தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து, ‘அக்கரை சீமை’யைப் பார்க்க வேண்டுமென்ற ஒரே ஆவலுடன், தன் பெற்றோர்களுக்குக் கூடத் தெரியாமல், திருட்டுத்தனமாக நாகப் பட்டிணத்திற்கு வந்து கப்பலேறி வந்தவர் அண்ணாமலை.

பினாங்கில் வந்திறங்கியதும் அவருக்குக் கண்ணைக் கட்டிக்காட்டில் விட்டதுபோல் இருந்தது. எப்படியோ சிரமப்பட்டு ஒரு வங்கு சாக்கடையில் கையாளாகத் தொற்றிக்கொண்டார். அங்கிருந்தபடியே இரவு நேரங்களில் ஆங்கிலம் கற்று ஒரு கம்பெனியில் கணக்கரானார். நாளடைவில் அக்கம்பெனியின் தலைமைக் கணக்கராகி விட்டார். அவருடைய திறமையைக் கண்டு வியந்த கம்பெனியின் டைரக்டர்கள் தங்கள் கம்பெனியின் தலைமைக் காரியாலயம் இருந்த சிங்கப்பூருக்கு அவரை மாற்றினார்கள். அண்ணாமலை இங்கு வந்த பிறகுதான் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நண்பர் அண்ணாமலை வாக்கு சாதுர்யத்தில் வல்லவர். கல்லில் நார் உரிப்பவர் என்று இவரைத் தெரிந்தவர்கள் சொல்வார்கள். குழையப் பேசி தமது காரியத்தைச் சாதித்துக்கொள்வதில் கெட்டிக்காரர். அப்படிப் பட்ட அவரே தமது மாமனார் மகாலிங்கத்திடம் படுதோல்வியுற்றார் என்றால், அது ஆச்சர்யப்படத்தக்க ஒன்றுதான்.

ஒருநாள் அண்ணாமலை என்னிடம் ஒரு கடிதத்தைக் காண்பித்தார்.

அது அவர் மாமனார் மகாலிங்கம் எழுதியது. தம் மகள் பங்கஜவல்லி பருவமடைந்து விட்டதாகவும், உடனே வந்து மணமுடித்துக் கொள்ளும் படியும், இனியும் வேலையே பெரிதென்று அங்கேயே வாழ்நாளை வீண் நாளாகக் கடத்த வேண்டாமென்றும், தம்மிடமுள்ள சொத்துக்களுக்கும் தம் ஒரே மகள் பங்கஜவல்லியைத் தவிர வேறு வாரிசு இல்லையாதலால், அண்ணாமலை தம் வீட்டோடு வந்திருக்கலாமென்றும் அவர் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

“அப்புறமென்ன? போய் ஜாம் ஜாமுன்னு கலியாணத்தை முடித்துக் கொண்டு நிம்மதியா வாழ்க்கை நடத்தப்பா, அண்ணாமலை! ” என்று நானும் என் நண்பரை ஊக்குவித்தேன்.

‘அட போப்பா! நீ ஒண்ணு! நான் என்ன அவ்வளவு அல்பனென்றா எண்ணிட்டே அவர் சொத்து எனக்கு வேண்டாம். இந்தக் கையும் காலும் இருக்கும் வரையில் நான் உழைத்தே சாப்பிடுவேன். எனக்கு என் வேலைதான் பெரிது. கலியாணம் முடிந்ததும் அவளையும் அழைத்துக் கொண்டு, இங்கு திரும்பி வந்துவிடுவேன். இப்போது நான் லீவு எடுத்துக் கொண்டு போவேனே தவிர, வேலையை ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன். கம்பெனியில் தற்போது எனக்குக் கிடைத்திருக்கும் பிரமோஷனை இழக்க என் மனம் ஒருபோதும் துணியாது. அத்துடன் எனக்குப் பிறர் தயவில் வாழவும் பிரியமில்லை” என்றார்.

அண்ணாமலை என்னிடம் சொன்னபடிதான் செய்தார். ஆறுமாதம் லீவு எடுத்துக்கொண்டு இந்தியா சென்றார்.

அவர் சென்ற மறு மாதத்தில் அண்ணாமலை – பங்கஜவல்லி திருமணப் பத்திரிகை எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அவருடைய மாமனார் மகாலிங்கம் தமது சொத்துக்களைத் தம் மகள் பங்கஜவல்லி பேருக்கு எழுதி வைத்துவிட்டாரென்றும், தம்மை இங்கேயே தங்கிவிடும்படி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார் என்றும் அண்ணாமலை கடிதம் எழுதியிருக்கிறார்.

“போகட்டும். எவ்வாறவாது என் நண்பர் சுகமாய் இருந்தால் சரி’ என்று மனத் திருப்தியுடன் இருந்தேன்.

அதன் பிறகு கடிதமே வரவில்லை. அவர் லீவு முடிய இன்னும் சில நாட்களே இருந்தன. திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து ஒரு தந்தி வந்தது. தாம் மட்டும் புறப்பட்டு வருவதாகவும், மற்றவை நேரில் தெரிவிப்பதாகவும் அத் தந்தியில் கண்டிருந்தது.

நண்பர் அண்ணாமலை வெறும் வாய்ப்பேச்சு வீரனல்ல; சொன்னதைச் செய்கையில் செய்து காட்டக் கூடியவர் என்று நான் அவர் மேல் கொண்டிருந்த அபிப்பிராயம் அவர் அங்கு நடந்தவைகளைச் சொல்லக் கேட்ட பிறகு உறுதியாயிற்று. தாம் நீண்ட நாட்களாக கம்பெனியில் பொறுப்பான உத்தியோகம் வகித்து வருவதால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஓய்வு பெற்று, திரும்ப இந்தியா வந்து சேரவிருப்பதாகவும், ஆதலால் பங்கஜவல்லியையும் தம்முடன் அனுப்பி வைக்கும்படியும் தன் மாமனாரைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மாமனார் இந்த யோசனையை ஏன் கலியாணத்திற்கு முன்னமேயே தெரிவித்திருக்கலாகாதென்றும் சொத்துக்களைப் பங்கஜவல்லிக்கு எழுதி வைத்த பிறகு இப்போது எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமென்ற எண்ணமாவென்றும், தம் உயிர் உள்ளவரை ஒரு போதும் தம் மகளைக் கப்பல் ஏற்றி அனுப்பப் போவதில்லையென்றும் வீராவேசத்துடன் பேசியதாகவும், அவர் எவ்வளவோ வாதாடியும் ஒன்றும் பலிக்காததால் தம் மனைவியை விட்டு விட்டுத் தாம் மட்டும் சிங்கை வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மற்றோர் விஷயத்தையும் வெளியிட்டார். தமது மனைவி பங்கஜவல்லி கருவுற்றிருப்பதாகவும், தான் கப்பலேறும்போது தன்னை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவ்வம்மையார் கோவென்று கதறி அழுததையும் கூறியபோது, அவர் கண்களில் கண்ணீர் கலங்கியதைக் கண்டேன்.

ஓராண்டு உருண்டோடியது. நண்பர் அண்ணாமலை இப்போது ஓர் ஆண் மவுக்குத் தந்தையானார். பையன் அப்பாவை உரித்துக்கொண்டு வந்திருப்பதாக அவர் மாமனார் எழுதிய கடிதத்தை என்னிடம் காண்பித்தார். மேலும் ஐந்தாண்டுகள் விரைந்து சென்றன.

இதற்கிடையில் மாமனாருக்கும் மருமகனுக்குமிடையே எத்தனையோ கடிதங்கள் வந்து போயின. அண்ணாமலை தாம் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் பங்கஜவல்லியைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கும்படி எழுதுவதும், அதற்கு அவர் மாமனார் மறுத்து எழுதுவதும் வழக்கமாக இருந்தது.

இதன் பிறகு அண்ணாமலையை நான் சந்திக்க முடியவில்லை. ஏனெனில் அவர் திரும்பவும் பினாங்கு சென்றுவிட்டார். மேலும் ஐந்தாண்டுகள் கழிந்த பிறகு, இன்று தான் அவரைத் திரும்பக் கண்டேன். இதற்கிடையில் ஒன்றிரண்டு கடிதங்களே அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தன. அவைகளுள் பினாங்கில் நடந்த சம்பவங்களைப் பற்றி அவர் எனக்கு யாதொன்றும் தெரிவிக்கவில்லை.

இப்போது அவர் என்னை நேரில் சந்திக்கும்போது இரண்டு குழந்தைகளுடன் (மூத்த பெண் குழந்தைக்கு 5 வயதும், இளைய ஆண் குழந்தைக்கு மூன்று வயதும் இருக்கலாம்) காணப்பட்ட போது, “என்னப்பா, அண்ணாமலை! உன் மனைவி எப்போது வந்தார்கள்? என்னிடம் இந்த முக்கிய விஷயத்தைத் தெரிவிக்கலையே!” என்று குறைபட்டுக் கொண்டேன்.

“அவள் இன்னமும் வரவே இல்லை.”

‘அப்படியாயின், இவை யாருடைய குழந்தைகள்?”

“என்னுடைய குழந்தைகள்தான்”

“என்னப்பா, புதிர் போடுகிறாய்?… ஒருவேளை இந்நாட்டிலேயே, மறுமணம் ஏதாவது….” என்று மேலே கூறுவதற்கு மனமில்லாமல் மழுப்பினேன்.

“இதில் மறைக்க வேண்டிய விஷயம் யாதொன்றுமில்லை” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் அண்ணாமலை, “மிஸ்டர்! என் மனைவியை அனுப்பி வைக்கும்படி நான் எவ்வளவோ மன்றாடியும், என் மாமன் செவி சாய்க்கவில்லை. ஆனால் பங்கஜம் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டி ருந்தாள். ஒவ்வொரு கடிதத்திலும் அவள் என் பிரிவாற்றாமையைத் தாளாது வருந்துவதைப் புலப்படுத்திக் கொண்டிருந்தாள். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வராதுபோல் தோன்றிற்று. என் மாமனாருக்குப் புத்தி கற்பிக்கும் எண்ணத்தோடு, நாம் பிரம்மச்சாரி என்று பொய் சொல்லி பினாங்கிலேயே தாய் தந்தையரற்ற ஒரு அனாதைப் பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன். திருமண இதழை வேண்டுமென்றே இந்தியா விலுள்ள என் மாமனாருக்குத் தபாலில் அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தோ! இந்தச் செய்தியே என் முதல் மனைவி பங்கஜத்துக்கு எமனாக முடிந்தது. ‘நான் இங்கு மணம் முடித்துக் கொண்டேன்; இனி இந்தியா திரும்ப வரமாட்டேன்’ என்ற அதே கவலையினால் தனது பத்து வயது பையனை விட்டு விட்டு பங்கஜம் காலஞ்சென்றாள்.

“மாமனார் பழி எல்லாவற்றையும் என் மீதே சுமத்தினார். ஆனால் நான் சட்டை செய்யவில்லை. இனி இந்தியாவுக்கே திரும்புவதில்லையெனத் தீர்மானித்தேன்.

“அடுத்த மூன்றாண்டுகளில் எனக்கு இரண்டாவது மனைவி லட்சுமியின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். ஆனால் என்ன துர்அதிர்ஷ்டம்! தாய்க்கு லேசாகத் தொற்றியிருந்த காச நோய் வரவர முற்றி அவளும் கண்ணை மூடினாள். இப்போது நானும், இந்த தாயில்லா இரண்டு குழந்தைகளும்தான் மீதம். அங்கே இந்தியாவிலும் எனக்குப் பிறந்த தாயில்லா ஒன்று. என்னுடைய வாழ்க்கை எவ்வாறு முடிந்தது பார்த்தாயா? இந்த இரண்டு அறியாக் குழந்தைகளை நான் தனியாக எவ்வாறு வைத்துக் காப்பாற்றுவது? அனாதைச் சிறுவர் இல்லத்தில் விடவோ அல்லது யாரிடமாவது கொடுத்து வளர்க்கச் சொல்லவோ என் மனம் ஒப்பவில்லை. இப்பிள்ளைகள் அவ்வளவு உயிராக என்னிடம் அன்பு காட்டுகிறார்கள். அடிக்கடி இந்தியாவிலுள்ள என் மூத்த மகளின் ஞாபகமும் வருகிறது. ஆனால் என்ன செய்வதென்று தோன்றவில்லை” என்று கூறி முடித்தார். “ஏன் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் என்ன?”என்றேன். ‘அவள் மட்டும் என் பிள்ளைகளை அன்புடன் நடத்துவாளென்பது என்ன நிச்சயம்? வேண்டாம்ப்பா அந்த விஷப்பரீட்சை” என்று கூறிச் சென்றார் அண்ணாமலை.

இவ்வளவும் இளந்தம்பதிகளைப் பிரித்த கொடுமையால் ஏற்பட்ட விளைவல்லவா என்பதை என் மனம் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தது.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *