பிரை மோர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 135 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1

செல்வப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே விளம்பரம் வேண்டாத சரக்கு. தட புடல் அலங்காரத்தின் அவதாரங்கள் தாம் அந்தக் கல்லூரியில் இடம்பெற முடியும். கல்லூரிப் படிப்பு என்ற காரணத்தைச் சொல் லிச் சென்னைக்கு வருவார்கள். பாடம் படிப்பது அவர்களுக்குப் பொழுது போக்கு. பரீட்சை வருகிறதே என்ற அபாய அறிவிப்பு அவர்களை ஒன்றும் செய்யாது. கவலையற்ற பிழைப்பு. பொறுப்புணர்ச்சி என்று மற்றவர்கள் சொல்லுகின்றபோது உடை அலங்கார ஆடம் பரம்தான் செல்வப்பன் கல்லூரி மாணவர் களுக்கு நினைவுவரும். வெளிநாட்டான் ஒருவன் சென்னைக்கு வந்துபோனால் நம்நாட்டைப்பற்றிக் கேவலமாக நினைத்துவிடக் கூடாதே என்பதில் அவர்களுக்கு மிகவும் அக்கறை. வருங்காலத்தின் வாரீசுகள் என்ற பொறுப்புணர்ச்சிதான் அவர் கள் ஆடம்பரத்தின் அடிப்படை. “பரீட்சை என்ன சார், அது கிடக்கிறது. நம்மைப்பற்றி மற்றவன் கேவலமாக நினைக்காமல் இருக்க வேண்டும். அதுதான் பெரிது. கெட்டிக்காரன் எல்லாம் தேறவேண்டும் என்றில்லை ; தேறின முட்டாள் எல்லாம் கெட்டிக்காரன் என்பதும் இல்லை ” என்று விவா தமிடும் பாணியில் அரட்டை அடிப்பதில் அந்த மாணவர்களுக்கு இணை அவர்களே தான். ‘ஜமீன் தார் காலேஜ்’ என்று அந்தக் கல்லூரியைப்பற்றி மற்றக் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் சொல்வார் கள். ஏனைய கல்லூரிகளில் இருக்கும் பேராசிரி யர்கள் செல்வப்பன் கல்லூரி மாணவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்……. சுருக்கமாகச் சொல்லவேண்டு மானால், கல்லூரி வாழ்க்கை என்பது கேளிக்கை செய்து கழிக்க வேண்டிய காலம், ஆடம்பரத்துக்கே ஏற்ற பருவம் என்று செல்வப்பன் கல்லூரி மாணவர் கள் நினைக்கிறார்கள். செல்வப்பன் மாணவர் விடுதி மற்ற விடுதிகளுக்கு விதிவிலக்கு: ஆடம் பரத்தின் புகலிடம் ; ஆரவாரத்தின் செவிலித் தாய். 

பரற்கற்களுக்கு நடுவே கிடக்கிற வைரக் கல்லைப் பொறுக்கிவிடுவது எளிய காரியம். வைரக் குப்பையில் உயர்ந்த வைரம் எது என்று தேர்ந்தெடுப்பது சற்றே கடுமையான வேலை தான். வைரக் கற்கள் ஒளி பரப்புவதில் ஒன்றை யொன்று வெல்லப் பார்க்கும். என்றாலும், ஒளி வீச்சில் மற்றவற்றைப் பிறக்கிடச் செய்யும் வைரம் ஏதாவது ஒன்று இருந்துதானே தீரும்! அப்படிப்பட்ட தலைமாணிக்கமாகச் செல்வப்பன் கல்லூரியில் விளங்கினவன்தான் குமாரதேவன். குமாரதேவ் என்ற பெயர் செல்வப்பன் விடுதி யில் எல்லோருக்கும் தெரிந்தது. குமாரதேவ் என்ற பெயரோடு விளம்பரமும் ஆடம்பரமும் தொடர்ந்தே வரும். 

2 

ஜமீன்தார்கள் என்றால் ஜமீன் பெறு மானத்தைவிட மிகுதியான கடன் உடையவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். கடன் என்பது பெரிய மனிதர்களின் இலக்கணம் என்கிற அளவுக்கு வந்துவிட்டது. 

குமார தேவனின் தகப்பனாரும் ஒரு ஜமீன்தார்தாம். விதிவிலக்கான ஜமீன்தார் அல்ல. ஜமீன் ‘ஆட்ட பாட்டங்கள்’ ஆடம்பரக் கேளிக்கைகள் யாவும் அங்கே உண்டு. இசைக் கலை ரசிகர் ; நாட்டிய வள்ளல் ; நாடக வேள் ; திரைப்பட முதலாளி…. இப்படி ஒரு பக்கம் காட்சி யளிப்பார். சிலம் பம் ஆடும் கூட்டம், குஸ்தி போடும் குழு, சேவல் சண்டை விடும் திருக்கூட்டம்—இங்கேயும் காட்சி யளிப்பார். பெரிய மனிதர் என்றால் ‘ வைப்பு ‘ 
வேண்டுமல்லவா ? அந்த விதியையும் ஜமீன்தார் ‘சாகிப்’ மதியாதவ ரில்லை. தாரங்களும் பலர் தாம். தசரத மன்னரைப்பற்றிக் கதை கேட் டிருக்கிறீர்களா? அறுபதினாயிரம் அணங்குகள் அவருடைய அந்தப்புரத்தில் இருந்தார்களாமே! சக்கரவர்த்திக்கு— இராமனைப் பெற்றெடுத்த வர்க்கு—அது தகும். அவ்வளவு தூரம் குமார தேவனைப் பெற்றெடுத்தவருக்கு எட்டாது. அந்தப்புரத்தை அணிசெய்தவர்கள் ஏழு பேர் தாம். ஏழு ‘ராணி’களுக்கும் ஏக புத்திரனாக வந்த பிள்ளைதான் குமாரதேவன். 

குமாரதேவன் ஏன் படிக்க வேண்டும் என்று அவன் உறவினரில் சிலர் கேட்டதுண்டு. ‘பத்தாம் படி படித்தாயிற்று. போதும். படிப்பை நிறுத்திவிட்டால் காலா காலத்திலே நடக்க வேண்டியதை முடித்துவிடலாம் அல்லவா’ என்று பழுத்துதிரும் கிழப்பழங்கள் அறிவுரை கூறின. கிழட்டு வாதங்கள் குமாரதேவனின் பேச்சுக்கு முன் நிற்க முடியவில்லை. 

“இனிமேல் ஜமீன்தார்கள் என்றால் கிள்ளுக் கீரை மாதிரி. ஜமீன்தாரி முறை வேண்டாம் என்றெல்லாம் பேசுகிற காலம் இது. படித்துப் பட்டம் பெற்றால் சட்டசபைக்காவது போக லாம்……..” என்றெல்லாம் என்னென்னவோ பேசி அவன் சென்னைக்குப் படிக்க வருவதை உறுதிப்படுத்திவிட்டான். ஜமீன்தாருக்கு மட்டும் உண்மை தெரியும். வித்தொன்று போட முளை வேறொன்றா தோன்றும்? ‘சரிதான், பிள்ளை யாண்டானைப் பட்டினம் இழுக்கிறது. நியாயம் தானே! போகட்டும். ஆடிப் பாடி இருக்க வேண்டிய பருவம். அவன் என்ன செய்வான்… ‘ என்று முடிவு செய்துகொண்டார். “படித்துத் தான் சட்டசபைக்குப் போகவேண்டும் என்று எந்த மடையனடா சொன்னான்? நான் சட்ட சபையில் இருக்கிறேனே, அது உனக்கு என்ன மாய்ப் படுகிறது? இல்லை, கேட்கிறேன். எல்லாம் பணம் இருந்தால் சரியாய்ப் போகும். இதெல்லாம் நமக்குத் தண்ணீர்ப் பாடம். அப்பா, குழந்தை! பட்டணத்திலே இருக்கவேண்டும் என்பது ஆசை என்று நேராகச் சொல்லு. அதை விட்டு என்னவோ சுற்றி வளைக்கிறாயே !” என்று பேசினார்…. எப்படிப் பேசினால் என்ன? குமாரதேவன் பட்டினத்துக்கு வந்துவிட்டான். செல்வப்பன் கல்லூரியிலும் சேர்ந்தாயிற்று. ‘படிக்கிறான்.’ 

3 

கல்லூரியில் சேர்ந்த பதினைந்து நாளைக் கெல்லாம் ஜமீன்தார் மகன் குமாரதேவன், ‘குமாரதேவ்’ ஆனான். புரட்சிக் காலம் அல்லவா? பெயரைக் குறுக்குவதில் தொடங்கிய நாகரிக மனப்பான்மை ஜமீன்தாரி நெறியில்-பணக்கார வேகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தது. அவன் மனம் நாடாத கேளிக்கை இல்லை. அவன் அடைய முடியாத ஆடம்பரமும் கிடையாது. கேட்பா னேன்! மாதம் ஒன்றுக்கு ‘ ரூபாய் ஐந்நூறு மட்டும்’ குமார ஜமீன்தாருக்குச் செலவாயிற்று. ஜமீன்தாருக்கு இந்த விவரம் தெரியாது. கணக் குப் பிள்ளை, ஏஜண்டு இவர்கள்தாமே ஜமீன் நிர்வாகிகள் ! அவர்களுக்குத்தான் தெரியும். ஜமீன்தார் காதுக்கு ஏதாவது எட்டினாலும் அவர்கள் தாம் சொல்ல வேண்டும். ஜமீன் தாருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. ‘சரி தான்’ என்று ஜாடையாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. ஏன், கண்டிப்பாய் இருக்கக்கூடாதா என்று கேட்கிறீர்களா? அதெல்லாம் பெரிய இடத்துக் காரியம்; அப்படித்தான் இருக்கும். அதை நினைத்தாலும் அந்த நினைப்பில் ஆயிரம் ஆயிரம் கதைகள் எழும். 

கல்லூரிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிவதற்குள் இளைய ஜமீன்தார் பெரிய ஜமீன் தாரையே தோற்கடிக்கக் கூடிய அளவுக்குப் ‘பெரிய மனிதர்’ ஆகிவிட்டார். அவர் திருவடி படாத இசை மன்றம் கிடையாது. நாடகக் கொட்டகைகளில் முன் வரிசையில் அவர் இருப் பார். நடன நங்கையர் கைவழி நயனம் சென்றால், இவர் கைவழி பணமே செல்லும். “வாழ்க்கைக்கு ‘ஸ்டிமுலண்ட்’ கட்டாயம் வேண்டும், அது இல்லாமல் கலை இல்லை ” என்பது அவர் மூளை கண்டுபிடித்த வாதம். ஊக்க மருந்தாக ஒயின் வகைகள் அமைந்தன. 

ஜமீன் நிர்வாகத்தையே தாங்கக் கூடிய அளவுக்குக் குமாரதேவின் கேளிக்கை வளர்ந்து விட்டது. ‘படிப்பு என்ன ஆவது’ என்று கேட்கிறீர்களா? அது என்ன, சின்ன விஷயம். பணம் பாதாளமட்டும் பாயும் அல்லவா? 

கலை ரசனை என்ற சாக்கில் பெண்களைப் பார்ப்பது ஒரு நாகரிக வழக்கம். “ இதென் ன’ப்பா தப்பல்லவா?” என்று கேட்டால் “ஈஸ் தட்டிக் ஸென்ஸ் கொஞ்சம்கூட உனக்குக் கிடையாது ” என்று சொல்வது சாதாரணமான விடை. இப்படியாக ஆரம்பிக்கிற அழகுணர்ச்சி என்னென்னவோ உணர்ச்சிகளைக் கிளப்பும். அதென்ன இயற்கைதானே? மனித வாழ்க் கையே உணர்ச்சியின் விளைவு. இயற்கையான உணர்ச்சிக்குப் பணிவது தப்பா ” என்ற சமாதானம் அந்த இரண்டாவது கட்டத்தில் தலையெடுக்கும். 

இந்தச் சமாதானம் தன் வரையறையைக் கடந்து ஆதிக்கம் செலுத்துவதும் உண்டு. அங்கேதான் எழுத்தாளர்களுக்கும் நாவல்களுக் கும் வேண்டிய நிகழ்ச்சிகள் பின்னிப் பின்னிக் கிடக்கும். ஒழுக்கம் என்பதையும் மூட நம்பிக் கையில் சேர்த்துவிடுகிற ஒரு கூட்டம் உண்டு. அந்தக் கூட்டத்தினர் தயவால்தான் அழ குணர்ச்சியில் தொடங்கி, கவர்ச்சியாய் மலர்ந்து, கைவிடுதலில் முடிந்த பல காமக்கூத்துகள் நடந்தன. 

குமாரதேவனின் பணம் இந்தக் கேளிக் கையின் எல்லையையும் அவனுக்குக் காட்டிற்று. நஞ்சை ஒத்த நண்பர்களை அவனுக்குச்சேர்த்து விட்டது, அவன் பணம் ; நாகரிக மினு மினுப்பிலே மிதந்து செல்லவிடுத்தது அவன் பணம் ; தன்னைத் தேவன் என எண்ண வைத்தது அவன் பணம். கெட்ட பழக்கமெல் லாம் மனிதன் அனுபவிக்க வேண்டிய இன்பம் என்ற சாக்கில் அவனை அடைந்தன, வளர்ந்தன. பணம் அவனை ஆட்டிவைத்தது. அவன் பணத்தை வாரி இறைத்தான். பணம் அவனை உரு மாற்றிவிட்டது. அது ஆட்டிற்று; அவன் ஆடினான். 

பணம் எல்லாம் வல்லது என்று நினைத் தான். எது வேண்டுமானாலும் பணத்தால் அடையமுடியும் 

என்று நினைத்தான். ஆம். உண்மைதான். ஆனால், அந்த வல்லமையின் கீழ்க் கேவலம் குமாரதேவனின் சிறப்பெல்லாம். குன்றிவிடும், தற்சிறப்பெல்லாம் மாய்ந்துவிடும். என்று அவன் உணரவில்லை. அவன் என்ன ? பெரிய பெரிய ஜமீன்தார்கள் எல்லாரும் உண ராத போது குமாரதேவன்-பணக்கொழுப்பின் இளவாரிசு, பரம்பரைக் கொழுப்பின் கான் முளை – அவன் எங்கே உணரப் போகிறான்! 

குமாரதேவன் தன்னை அறியாமலேயே பணக் கொழுப்பின் அடிமையானான். பணம் அவனை ஆட்டிற்று; அவன் ஆடினான். சாராயம் மட்டும்தான் அவனை ஆட்டிற்று என்றில்லை. சாராயம் ஆட்டுவது கண்ணுக்குத் தெரியும். பணம் ஆட்டுவது யாருக்குத் தெரியும்? அது ஆட்டிற்று; அவன் ஆடினான். தன்னை அறியா மல் ஆடினான் ; தலைகீழாய் ஆடினான். 

அவன் ஆட்டத்திலே கூடச்சேர்ந்து ஆடப்பார்த்துத் தோல்வி எய்திச் சளைத்து விழுந்து நசித்த நங்கையர் பலர். இளமை வளத்தால் இன்ப உலாப் புறப்பட்ட அவர்கள், பணக் கொழுப்பால் பகட்டித் திரிந்த குமார தேவின் வலையிற் சிக்கித் திணறி இறுதியில் கை விடப்பட்டு….பாவம்… பரிதாப நிலையை அடைந் தார்கள். காதல் என்று பேசிக் கடைசியில் கைவிட்டான் காதகன் ‘ என்று அவர்கள் ஏசினர். ஆனால், உண்மை அதுதானா? இல்லை. அவன் காதல் என்று பேசினால் அவன் பணக் கொழுப்பு “காமக்கூத்துக்குக் கருவி ” என்று விளக்கம் கூறும். பணக் கொழுப்பு என்பது எரியும் விளக்கு-இது தெரியாத நாகரிக நங்கையர் விட்டில் ஆகின்றனர். குமாரதேவன் பகட்டும் பணக்காரன். விளக்கு எரிந்தது; விட்டில்கள் இறந்தன. 

பணமும் பகட்டும் அவனிடம் இணைபிரியா தன. குமாரதேவன் பகட்டின் வடிவம். பாவம், அவன் பகட்டிய பகட்டில் பாவையர் தங்கள் தூய உள்ளங்களைப் பறிகொடுத்தனர். உள்ளத்தை அவன் கொழுப்பு உணரவில்லை. உடல் நசையை உணர்ந்தது, அவ்வளவுதான். நசித்த உள்ளங்கள்……! பாவம் ! அவற்றைப்பற்றி எண்ணியவர்கள் மனிதக் கூட்டத்திலேயே மிக மிகச் சிலர்தாம். இத்தனை கூத்தாடியும் இண்ட்டர்மீடியட் தேர்வையும் அவன் மறக்க வில்லை. அதாவது ஆனர்ஸ் வகுப்புக்குப் போக வேண்டும் என்பதை நினைவில் கொண்டான். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, வேண்டிய வற்றைச் செய்து தேறிவிட்டான். ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தான். அதே கல்லூரி ; அதே விடுதி. அதே அறை; அதே கூட்டம்; அதே வாழ்க்கை முறை. கேளிக்கை கூத்து ஆட்டம்-பாட்டம்…. 

5 

இண்ட்டர்மீடியட் வகுப்பைத் தாண்டிவிட் டால் அரசியல் என்பது கல்லூரி மாணவர் களுக்கு அவசியமான ஒரு விளையாட்டு. முதலில் அது வெறும் ஹாபி’யாகத் தொடங்கும். பிறகு விவாதம், கூட்டம்…. இப்படியாக வளரும். உண்மையாக மனமும் அறிவும் கலந்து அரசி யலில் ஈடுபடுகிற மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், எல்லா மாணவர் களும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இளம் பருவத்தில் காதல்’ ஏற்படுவது எவ்வளவு இயற்கையோ அவ்வளவு இயற்கை கல்லூரி மாணவனுக்கு அரசியல் கவர்ச்சி ஏற்படுவது. 

காதலை நெறிப்படுத்தி வெற்றி பெறும் இளைஞர்கள் மிகமிகச் சிலர். அப்படியே அரசியல் வெறியை ஒழுங்குறச் செலுத்தி உருப்படியான பணிகளில் ஈடுபடுகிற மாணவரும் மிக மிகச் சிலர்தாம். ‘எதிர்கால வாரீசு நாமல்லவா’ என்று மார்பு தட்டி, கையை ஓங்கி விண்ண கத்தே மோதி மோதிப் பேசுகின்ற ‘மாணவ மணிகள்’ எல்லோருமே நாட்டுக்குத் தலைவர்க ளாக வந்துவிடுவ தில்லை ; வரவும் முடியாது. 

கல்லூரிகளிலே இதெல்லாம் எடுத்துப் பேசி விளக்கப்போகிறவர்கள் யார்? மாணவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். ஆசிரியர் களோ, அரசியலைத் தொடக் கூடாது. இளைஞர் உலகமும், அந்தச் சிறிய உலகத்தை நம்பி யிருக்கும் பெரிய உலகமும் எப்படி உருப்பட முடியும்? 

போகட்டும். குமாரதேவனிடம் வருவோம். அரசியல் உணர்ச்சி என்ற பருவ நோய் ’ அவனையும் தாக்கிற்று. மாணவர்களிடையே ‘தலைவன்’ என்ற பெயரை எளிதாகப் பெற்று விட்டான். கதர் ஜிப்பாவும் காந்திக் குல்லாவும் அவனை அணிசெய்ய லாயின. கூட்டங்களில் பேசினான் – முழங்கினான். மாணவர் உள்ளங்களில் இடம் பெற்றான்; ஆசிரியர் சிந்தனையில் இடம் பெற்றான். மாணவர் அவனைப் போற் றினர்; ஆசிரியர்கள் அவனை எண்ணி வருந் தினர். ஆனாலும் அவன் பண வலிமையும் மாணவர் ஆதரவும் அவர்கள் வாயை அடைத் தன. குமார தேவனின் பேச்சுத் திறமையும், சிரித்த முகமும் தூய கதர் ஆடையும் மாணவர் உள்ளங்களில் அசைக்கமுடியாத இடத்தை அவனுக்கு அளித்தன. அவனுடைய கேளிக்கைக் கூத்துக்களின் எண்ணம் மாணவர் மனத்தில் எழவில்லை. முன்னே அவனைப் பழித்துரைத்த அதே வாய்கள் இப்போது புகழ்ந்துரைத்தன. முன்னே அறியாதார் இப்போது அறிமுகமாயினர். முன் வணங்காத கரங்கள் வலிய வணங்கின. அவனை ஒரு தெய்வம் என்றே மதித்தனர் என்றால் மிகையல்ல. 

பழைய வழக்கம் நின்றுவிட வில்லை. பழைய கேளிக்கை அவனை ஈர்க்காமல் இல்லை. அவனும் அந்த இன்ப விளையாட்டுக்களை விட்டு விடத் தயாரா யில்லை. முன்னே வெறும் குமார தேவ் ஈடுபட்டான். இப்போது தலைவன் என்ற சிறப்போடு ஈடுபடுகிறான். அவ்வளவுதான். 

பழைய காமக் கூத்துக்கள் நடந்தன ; பழைய சாராயப் புட்டிகள் அவன் கரத்திலே ஏறின! பழைய சாராயம் அவன் வயிற்றை நிரப்பி, உடலை ஆட்டிற்று. பணம் அவனை ஆட்டிற்று; அவன் ஆடினான்; வெறியாட்டம் ஆடினான். 

பழைய நாடகம், பழைய பின்னணி; புதிய திரை. 

நங்கையர் முகத்தில் அழகு இருந்தது. குமாரதேவ் மனதில் அழகுணர்ச்சி என்ற பழைய பாவப் பல்லவி இருந்தது. கவர்ச்சி ஏற்பட்டது….பழைய நாடகம். ஊழிக்கூத்து. விளக்கு எரிந்தது; விட்டில்கள் செத்தன. 

எல்லாம் பழைய நாடகம். புதிய திரை. முன்னே வெறும் குமாரதேவன். இப்போது அரசியல் வீரன்-மாணவர் தலைவன். மற்றப் படி பழைய நாடகம். 

புதிய திரை எல்லோரையும் ஈர்த்தது. நாடகம் வளர்ந்தது. புதிய கட்டங்கள் சேர்ந்தன. நாடகப் பாங்கு மட்டும் மா றவில்லை. கேளிக்கை- ஆரவாரம்—ஆடம்பரம் ஒன்றும் குறையவில்லை. பழைய நாடகம்தான் நடந்தது. 

பழைய விளக்கு எரிந்தது. விட்டில்கள் மாண்டன. முன்னே பட்டாடை ஆதிக்கம் செலுத்திற்று. இப்போது கதராடை ஆட்சி செலுத்திற்று; நாடகம் என்னவோ பழைய நாடகம்தான். பணம் அவனை ஆட்டிற்று; அவன் ஆடினான்; வெறியாட்டம் ஆடினான். 

7 

பால் இருக்கும் பாத்திரத்தில் மேலும் மேலும் எவ்வளவுதான் பாலைக் காய்ச்சி ஊற்றி னாலும் தயிராக மாறப்போவ தில்லை. ஆனால், ஒரு சொட்டு மோர் கலந்துவிட்டால் அவ்வளவும் தயிராக மாறிவிடும். 

பழைய நாடகத்தில் புதிய கட்டங்கள் சேர்ந்தன. உண்மைதான். ஆனால், அவை யெல்லாம் பாலோடு சேர்ந்த பால்போலத்தான். குமாரதேவனின் போக்கை அவை ஒரு சிறிதும் மாற்றவில்லை. குமாரதேவன் எதிர்பாராத ஒரு கட்டம் கடைசியாக நாடகத்தில் சேர்ந்தது. அது கதையின் முழுப் போக்கையும் மாற்றிவிட்டது. பால் முழுவதையும் தயிராக மாற்றும் வல்லமை ஒரு துளி மோருக்கு உண்டு. கேளிக்கை, ஆடம் பரம் இவையே குறிக்கோளாகக் கொண்ட குமாரதேவனின் வாழ்க்கைக் கதையின் போக்கை அடியோடு மாற்றிவிடும் வல்லமை மங்கையர்க்கரசிக்கு இருந்தது. 

குமாரதேவனின் கூட்டத்தில் மங்கையர்க் கரசிகளுக்கு இடம் கிடைக்காது. அவள் ஏழை ; ஆடம்பரம் அறியாதவள் ; அமைதியின் கோலம். இப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சந்திக்க நேரிடும் என்று குமாரதேவன் எப்போதுமே நினைத்தது கிடையாது. சந்தித்த பிறகும்கூடத் தன் வாழ்க்கை முழுவதையும் அமைதி நிறைந்ததாக அவள் ஆக்கிவிடுவாள் என்று அவன் உணர வில்லை. ஒரு சொட்டு மோர் விழுந்தவுடனே பால் தயிராக மாறிவிடுவதில்லை. ஆனால், மோர் உள்ளூர வேலை செய்கிறது. பால் தன்னை அறியாமலே -பிறர் வியக்கும்படி-தயிராக மாறிவிடுகிறது. குமாரதேவனின் ஆடம்பர நாடகத்தில் நுழைந்த மங்கையர்க்கரசியும் அந்த ஒரு துளி மோரை போலத்தான் ஆனாள். மெல்ல மெல்லக் குமாரதேவன் தன்னை அறியா .மலேயே மாறிவந்தான். 

அமைதி என்ற மாளிகையின் முதற்படியாக ஏற்பட்டது அந்தச் சந்திப்பு. ஆரவாரம் நிறைந்த தெருவி லிருந்து வீட்டுக்குள்ளே சென்று அமைதியாக இருக்கவேண்டு மானால் பல படிகள் ஏறவேண்டும். அப்படியேதான் குமாரதேவனும் படிப்படியாக மாறி இறுதியில் அமைதி வாழ்வை அடைந்துவிட்டான். 

அரசியலால் உந்தப்பட்டு மேடைகளில் ஏறிப் பெரிய பேச்சு வீரனாகக் குமாரதேவன் ஆனான் அல்லவா? அந்தப் பேச்சு வல்லமை தான் மங்கையர்க்கரசியைக் காணும் வாய்ப்பைத் தந்தது. நகரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி பேச்சுப் போட்டி நடப்பதுண்டு. அத்தகைய ஒரு போட்டியின்போது தான் முதன் முதலாக மங்கையர்க்கரசியும் குமாரதேவனும் ஒரே மேடையில் கண்டனர். 

திலகவதியார் கல்லூரி மாணவி, மங்கையர்க் கரசி இண்ட்டர் இரண்டாம் வகுப்பில் படித் தாள். ஆடம்பரப் பொம்மைகளின் நடுவே அவள் ஓர் அமைதித் தெய்வமாக விளங்கினாள். திலகவதியார் கல்லூரி மாணவிகள் அரசிகள் என்றே தங்களைக் கருதினர்-ஆடம்பரத்தில் மட்டும். அந்தக் கல்லூரியிலேயே தெறிப்பாகமங்கையர்க்கரசியை எளிதாக அறிந்துகொள்ள லாம். ஆடம்பரத்தில்தான் அழகுண்டு, கவர்ச்சி ஏற்படும் என்று மற்றப் பெண்கள் கருதுவதைப் பொய்யாக்கினவள் மங்கையர்க்கரசி. அமை தியே அழகு என்றால் நம்பலாம். எளிமையில் கவர்ச்சியுண்டு என்பதை மங்கையர்க்கரசியை அறிந்தவர்கள் உணர்வார்கள். 

மங்கை அழகாகப் பேசுவாள். சொல்லில் அழகிருக்கும்; இனிமை பொங்கித் ததும்பும். குரலில் இனிமை; கருத்தில் ஆழம்; கொள்கை யில் உறுதி ; வாதத்தில் வலிமைஇவை அவள் பேச்சுத் திறமைக்குக் காரணமாய் அமைந்தன. நல்ல நல்ல தமிழ்ப் பாடல்கள் அவள் சொற் பொழிவில் ஆங்காங்கே கலந்து வரும். தமிழில் நன்றாய்ப் பேசுவாளா, ஆங்கிலத்தில் நன்றாய்ப் பேசுவாளா என்று முடிவுகட்ட முடியாது. இரண்டு மொழிகளிலும் அவள் மனம்போல் தெளிந்து வேகமாய்ப் பொழிவாள். வாயைத் திறந்து பேசுவதாகவே தோற்றாது. புல்லாங் குழல் வாசிப்பவன் முயற்சியில்லாமல் அனாயாச மாக ஊதுகிறான் அல்லவா? அதைப் போலவே உதடுகளின் வழியே காற்று ஊதுவது போலப் பேசுவாள். தெளிவும் திண்மையும் ஒருங்கே கலந்த பேச்சு மங்கையர்க்கரசிக்குக் கிடைத்த பேறு. 

ஆரவாரமும் அமைதியும் ஒரே பேச்சு மேடையில் காணவேண்டு மென்றால் குமார தேவனும் மங்கையர்க்கரசியும் பேசும்போது தான் பார்க்க வேண்டும். 

குமாரதேவன் அரசியல் உணர்வால் செல்வப்பன் கல்லூரி மாணவர்க ளிடையே தலைவனாய் விளங்கியதுபோலவே, திலகவதியார் கல்லூரி மாணவிகளின் தலைவியாய் மங்கை விளங்கினாள். 

அரசியல் சங்கம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு கழகம் அமைத்தனர். செயலாளர்களாகக் குமார தேவனும் மங்கையர்க்கரசியும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அடிக்கடி கூட்டங்கள் ஏற்பாடு செய்தார்கள். 

சங்க வேலை சம்பந்தமாக அடிக்கடி மங்கை யின் வீட்டுக்குக் குமாரதேவன் வந்து போனான். வரும்போ தெல்லாம் அவனுடைய பழைய வழக்கமான கேளிக்கை எண்ணம் இருக்கத்தான் இருந்தது. இருந்தாலும் மங்கையின் அமைதி யும் உறுதியும் நிறைந்த முகத்தைக் காணும்போ தெல்லாம் குமாரதேவன் தன் வலிமையும் கருத்தும் இழந்தான். அவள் அழகு அவனைக் கவர்ந்தது; அமைதி, தடுத்தது; உறுதி, நிலை மாற்றிற்று. 

அவன் பணக்காரன்-ஜமீன்தார். அவனைக் கேட்க அவன் வீட்டில் யாரும் இல்லை. அவன் யாரோடு வேண்டுமானாலும் எப்போதும் உற வாடலாம். ஆனால், மங்கையின் நிலை அப்படி இல்லையே! குமாரதேவன் அடிக்கடி வருவது மங்கையின் அன்னைக்கு விருப்பமில்லை. 

மங்கையின் தந்தை ஒரு கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். திடீரென்று மங்கையைத் தம் மனைவிக்கு ஒரே துணையாக வைத்துவிட்டு மண்ணுலக வாழ்வை நீத்தார். மங்கையர்க்கரசியைப் பட்டதாரியாக ஆக்கிப் பெரிய நிலையில் பார்க்கவேண்டு மென் பது பேராசிரியர் சுந்தரத்தின் பேராவல். அதை அடிக்கடி சொல்லுவார். ஆனால், அவள் ஆறாம் பாரம் படிக்கையிலேயே மாண்டார். அவர் மனைவி சரசுவதிக்கு எப்படியாவது கணவரின் ஆவலை நிறைவேற்றிவிட வேண்டு மென்று ஒரே வெறி. அவள் ஐந்தாவதுவரை யில்தான் படித்தவள். பெண்களுக்கு உயர்ந்த படிப்பு வேண்டியதில்லை என்று சொல்லுகிற காலத்தையும் கட்சியையும் சார்ந்தவள்தான். ஆனால், ‘அவர்’ சொன்னது என்பதற்காக மங்கையர்க்கரசியைப் படிக்க வைத்தாள். பேரா சிரியர் சுந்தரம் வைத்துச்சென்ற தெல்லாம் ஐயாயிர ரூபாய்தான். இதை வைத்துக் குடித் தனம் நடத்தவேண்டும்; மங்கை படிக்க வேண்டும். பிறகு, திருமணம், சரசுவதி அம்மாளின் வாழ்க்கை -இவ்வளவும் ஆக வேண்டும். எனவே, மிகவும் சிக்கனமாய்ச் செட் டாகக் குடும்பத்தைச் சரசுவதி அம்மாள் நடத்தினாள். மங்கையும் தன் பொறுப்புணர்ந்து நடந்தாள். 

குமாரதேவனைப்பற்றிச் சரசுவதியம்மாள் விசாரித்துப் பார்த்தாள். அவள் கேள்விப் பட்டது ஒன்றாவது நல்ல மாதிரியாகப் பட வில்லை. ‘எத்தனையோ பெண்களின் மானத் தைப் போக்கினவன்’ என்று கேட்டபோது அவள் உடம்பின் ஒவ்வோர் அணுவும் நடுங் கிற்று. மகளிடம் பேசிப் பார்த்தாள்; பலன் ஒன்றுமில்லை. “மற்றப் பெண்களுக்கு மன உறுதி இல்லை என்றால், அதற்கு யார் என்ன செய்யலாம்?” என்று ஒருதடவை சொல்லு வாள். அவரை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா? அப்படி யார் முடிவு செய்தது?” என்று ஒருதடவை கேட்பாள். அவருக்கென்ன குறை? அவரைத் திருமணம் செய்துகொள்ளப் புண்ணியம் செய்திருக்க வேண்டுமே ” என்று ஒருதடவை பேசுவாள். “என்ன அம்மா! சுத்தப் பைத்தியக்காரியாக இருக்கிறாயே! அவரைக் கலியாணம் செய்து கொண்டால் நான் என்ன ஆவது?” என்று ஒரு தடவை கேட்பாள். ஒவ்வொரு
சமயத்தில் சரசுவதியம்மாள் எவ்வளவுதான் கேட்டாலும் மங்கை வாயையே திறக்கமாட்டாள். ஆக, மகள் என்னதான் நினைத்திருக்கிறாள் என்று தாயா ருக்குத் தெரியவில்லை. அதற்காக அவள் செய்த முயற்சி யெல்லாம் சிறிதாவது பலன் தரவே யில்லை. 

இனி ஒன்றும் நம்மால் முடியாது என்ற நிலை ஏற்படுகிறபோது, ‘நாமென்ன செய்யலாம்? எல்லாம் விதி விட்ட வழி ஆகட்டும். அன்றைக்கு எழுதியவன் இன்று அழித்தா எழுதுவான்’ என்று அறிவை அடைக்கலம் புகச்செய்து மனத்துக்கு அமைதியைப் புகட்டுவது மனித இயல்பு. சரசுவதியம்மாளுக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. “எல்லாம் இந்தக் கோணல் எழுத் தால் வந்த வினை. இரண்டு எழுத்துப் படித்து என்னமோ தஸ்புஸ் என்று பேசினால் போதுமா? உலக விவகாரம் தெரியவேண் டாமா?” என்றெல்லாம் அலுத்துக்கொள்வாள். “கோணல் வகிடும் கோணல் புத்தியும்தவிர வேறு என்ன இந்தக் காலத்தில் இருக்கிறது?” என்று காலத்தைப் பழிப்பாள். “எல்லாம் அவர் செய்தது” என்று தன் கணவனை நினைந்து புழுங்குவாள். கடைசியில் ஆண்டவன் விட்ட வழி ஆகட்டும். நாம் என்ன செய்யக் கிடக்கிறது? தலைவிதிப்படிதானே நடக்கும் என்று மனத்தைச் சமாதானப் படுத்திவிடப் பார்ப்பாள். ‘இதற்கெல்லாம் மன அமைதி கிட்டுமா? பெற்ற மனமல்லவா ? அது பித்துக் கொண்டு திண்டாடிற்று. 

வீட்டிலேயே இவ்வளவு குழப்பம் என்றால் வெளியே கேட்பானேன்! அதுவும் இளமைத் துடிப்பும் மிடுக்கும் குறும்பும் பெற்றுள்ள கல்லூரித் தேவர்களும் தேவதைகளும் சும்மாவா இருப்பார்கள் ? கல்லூரி மாணவர்களுக்குள் எவ்வளவோ பேச்சுக்கள் நிகழ்ந்தன. குமார தேவனையும் மங்கையையும் பல சுட்டுவிரல்கள் கரந்திருந்து சுட்டிக் காட்டின. உதடுகள் காற்றூதுவதுபோல் எவ்வளவோ கதைகளை மெல்லெனப் பேசின. 

குமாரதேவனுக்கும் மங்கைக்கும் இந்தச் சுட்டுதல்களும் காற்றில் கலந்த குரல்களும் தெரியவந்தன. குமாரதேவனுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். அதைப்பற்றி அடிக்கடி மங்கை யிடம் வலிய எடுத்துப் பேசுவான். மங்கையின் புன்முறுவல்தான் அப்போதெல்லாம் அவன் கண்டது. அந்தப் புன்முறுவலை அடிப்படை யாக வைத்துக் குமாரதேவன் இன்ப மாளிகை கள் எழுப்பினான். 

மங்கையர் புன்முறுவல் அவனுக்குப் பழக் கந்தான். ஆனால், மங்கையின் புன்முறுவல் மற்றவர் புன்முறுவலினும் மிகுதியாக அவனை ஈர்த்தது. மகுடியின் இசைக்கு ஏற்ப நாகம் படம் விரித்து ஆடும். மகுடி இசையின் இனிமை அளவிறந்து செல்லுமானால் நாகம் அசையாமல் நின்றுவிடும் என்பார்கள். அதுபோலவே மற்றப் பெண்களின் முறுவலில் திளைத்த குமார தேவன் மங்கையின் முறுவலில் சிக்குண்டு அடிமையாய்ச் செயலற்று நின்றான். 

நாகம் அசைவற்று நிற்கிறது—இசையில் மயங்கிக் கிடக்கின்ற அதனைப் பாம்பாட்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் மகுடியின் பெருமை. 

மங்கையின் முறுவலுக்குக் குமாரதேவன் அடிமை. முல்லைப் பற்களின் முறுவலி லிருந்து கிளம்பும் ஒளிக்கற்றைகள் பின்னிய வலையில் குமாரதேவன் சிக்கினான். மங்கை அவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவள் மனம், அவன் வாழ்வு. 

முறுவலுக்கு அடிபணிந்த குமாரனை மங்கை பற்பல கேள்விகள் கேட்பாள். அவை அவனுடைய ஆடம்பரங்களைப் பற்றியன. அதனால் என்ன? பணம் எதற்குத்தான் இருக் கிறது? ஆடைகள் வாங்குவது பாவமா? ஆனந்தமாய் வாழ்வது தவறா ?” என்றெல்லாம் பேசுவான். என்னதான் அவன் குரலிலே தெளிவு இருப்பதாக எண்ணிக்கொண்டாலும் மங்கையிடம் பேசுகின்றபோது அவன் மனம் உறுத்தத்தான் செய்தது. தன் காமக் கூத்துக் களை மறைத்து மறைத்துப் பேசினான்; மனம் போராடிற்று. ‘ இதெல்லாம் தெரிந்தால் மங்கை நம்மைப்பற்றி என்ன நினைப்பாள்?” என்ற எண்ணத்தால் அவற்றை மறைத்தான். 

அவனுடைய ஆடம்பரத்தைப்பற்றிமட்டும் வினவிய மங்கையர்க்கரசி அவன் மறைத்ததாக எண்ணியவற்றைப் பற்றியே ஒருநாள் கேட்கத் தொடங்கினாள். குமாரதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வாய் மூடி மௌனியாக நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. 

நின்றான்; அசைவற்று நின்றான். மனத் திலே கொந்தளிப்பு ; மூளையிலே கொதிப்பு. சிந்தனை சிதறிற்று; மூளை குழம்பிற்று. திடீரென உடலெல்லாம் தீக்குளித்ததுபோல ஆயிற்று. அகத்துப் போராட்டத்தை மறைத்து விடப் பார்த்தான்-அசையாமல் நின்றான். அவன் இப்போது மங்கையின் அடிமை. குற்றம் செய்யும்போது கையும் களவுமாய் அகப்பட்ட குழந்தை நிற்கின்றதைப்போல் நின்றான், குமாரதேவன். தவறுதான் என்று உணர்ந்த குழந்தை, ‘கண்டுபிடித்துவிட்டார்களே’ என்ற அவமானத்தோடு நிற்பதைப்போல அவன் நின்றான். இனிமேல் செய்யவில்லை. செய்த தெல்லாம் தப்பு’ என்று சொல்லாமல் சொல்லும் குழந்தையைப் போலக் குமாரதேவன் நின்றான். ‘ ஐயையோ! தெரியாமல் செய்துவிட்டேன். பக்கத்து வீட்டு அம்பி சொன்னான். அதனால் செய்தேன்’ என்று பரபரவென்று விழியுருட்டி நயனத்தால் பேசும் குழந்தையைப்போல விழித்துக்கொண்டு நின்றான் குமாரதேவன். 

குழந்தை தண்டனையை எதிர்பார்த்து நிற்கும். நல்லாசிரியன் விரல்நீட்டி மெல்லென அதனைப் ‘போ’ என்று சொல்லுவான். குழந் தை தலைகுனிந்து செல்லும். 

குமாரதேவன் ஒன்றும் புரியாமல் நின்றான். ‘இவளுக்கு எப்படித் தெரிந்தது’ என்று தெரியாமல் நின்றான். மங்கையின் அன்பை இழந்துவிட்டோமே’ என்று மனம் கசிந்து நின்றான். மங்கை புன்னகை செய்தாள். அப்போது குமாரதேவனுக்கு அந்தப் புன்முறு வல் கொலைத் தண்டனை-அல்ல அல்ல-மனப் புண்ணுக்கு மருந்து போன்றிருந்தது. 

குனிந்த தலை நிமிரவில்லை. மங்கை தன் அன்னையிடம் சென்றாள் ; குமாரதேவன் தலையை நிமிர்த்தாமல் சுமந்துகொண்டு விடுதிக்குச் சென்றான். 

பிறகு பதினைந்து நாட்களுக்கு மங்கையைப் பார்க்க வரவில்லை. மங்கையை மறந்துவிடப் பார்க்கிறானா ? இல்லை. அதுதான் முடியாதே! 

10 

அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். தன் மாசு முழுவதையும் கரைத்து அக்கடிதத்தில் இறக்கிவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். மங்கையின் அன்புள்ளம் புன்முறுவல் வாயி லாகத் தந்த தண்டனை அவனை அப்படி எழுதச் செய்தது. தன் உடலே ஒரு பாவ மூட்டை- பாவ மூட்டைகளின் பரம்பரையிலே தோன்றிய பாவமூட்டை என்றெல்லாம் எழுதினான். அவன் எழுதியிருந்த தீவிரம் மங்கையின் மனத்தைப் பிடித்து மிகவும் பரிதாபகரமாக ஆட்டிவிட்டது. குமாரதேவன் தற்கொலை செய்துகொள்வான் என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள். கசிந்த உள்ளத்தின ளாகிய மங்கையர்க்கரசிக்கு மனிதன் தற்கொலை செய்துகொள்வது என்ற கருத்தை நினைக்கக்கூட முடியவில்லை. 

ஓடினாள், செல்வப்பன் மாணவர் விடுதிக்கு ஓடிவந்தாள். மாணவர்க்கு ஒரே வியப்பு ! “ என்ன துணிச்சலடா இவளுக்கு! தேடி வந்து விட்டாளே! ” என்று பேசாத மாணவன் இல்லை. அவர்களுக்கு என்ன! மாதர் சிரித்தால் காதல் என்று எண்ணுகிறவர்கள் தாமே ? தெருவில் பேசுகிற இருவர் ஆடவனும் பெண்ணுமாக இருக்க நேர்ந்தால் அவர்களைக் காதலராகவே ஆக்கிவிட எண்ணுகிற இளைஞர் கள்!-இது இன்றைய உலகம். நெடுநாளாகக் குமார-மங்கையர் கூட்டுறவுபற்றி என்னென் னவோ கட்டிவிட்டுக்கொண் டிருந்த மாணவர் களுக்கு மங்கையர்க்கரசியின் வருகை பெரிய விருந்தாக ஆயிற்று. சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரிதான். 

விடுதியின் வாசலில் நின்றுகொண்டு குமாரதேவனை அழைத்துவர அனுப்பினாள், மங்கை. குமாரதேவனுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. மங்கையை அவன் எதிர்பார்க்க வில்லை. ஆடவர் விடுதிதேடி ஒரு பெண் வருவாள் என்று யார்தான் எதிர் பார்க்க முடியும்? எதிர்பார்க்கிறதாவது! வந்தே விட்டாள். என்ன செய்வது! ‘ அவள் முகத்தில் எப்படி விழிப்பது’ என்ற கேள்வி அவன் சிந் தனையை ஆட்டிப் படைத்தது. ஒருவாறு புறப் பட்டான். அவன் வரும் முன்னரே அநேகமாக விடுதியிலிருந்த எல்லா மாணவர்களும் திறந்த வெளியிடத்துக்கு வந்து, தொலைவிலே அங்கங்கே நின்றுகொண் டிருந்தார்கள். காசில்லாமல் திரைப்படம் பார்ப்பதாக அவர்கள் நினைவு! 

குமாரதேவனும் மங்கையர்க்கரசியும் கடற் கரைக்குச் சென்றார்கள். மங்கை பேசினாள். குமாரன் கேட்டான். சொற்கள் வடிவில் உணர்ச்சியைக் கிளப்பிவிடும் அறிவுரைகள் அவன் செவிவழியாகப் புகுந்தன. 

கடைசியாக மூளை தெளிந்தது. குனிந்த தலை நிமிர்ந்தது. 

கண்களில் நீர் மல்கி இருந்தது. அவன் கண்களில்மட்டு மல்ல, அவள் கண்களிலும். 

குமாரதேவன் கைகள் குவிந்தன. மங்கை யை வணங்கினான். 

“சீ, இதென்ன அசட்டுத்தனம் ? ஏன் அழுகிறீர்கள்?” 

“அரசி !…….” 

குமாரதேவனுக்கு வார்த்தை எழவில்லை. சிறந்த சொற்பொழிவாளன்தான். ஆனால், சொல் அப்போது கைகொடுக்க வரவில்லை. உதடு கள் துடித்தன. ஒன்றோடொன்று பொருந்த மாட்டாமல் துடித்தன. ஆனால், சொல் ஒன்றாவது பிறக்கவில்லை. 

“அரசி !…….” 

“அசடுபோல் நடந்துகொள்ள வேண்டாம். நான் சொன்னதுமட்டும் நினை விருக்கட்டும். நாட்டைச் சீர்படுத்துவதற்குமுன் நம்மைச் சீர்படுத்த வேண்டும். பிறர் வாழ்வைப்பற்றிச் சிந்திக்குமுன் நம் வாழ்வைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 

“பிறரை அடிமைகளாய் நசுக்காதீர்கள் என்று மேடைமேல் ஏறிப் பேசப்போவதற்கு முன் அதை நம் வாழ்விலே நடத்திக் காட்ட வேண்டும். உள்ளொன்று, புறத்தே வேறொன்று; பேச் சொன்று, செயல் வேறொன்று என்ற நிலை வேண்டாம்…. 

“பிறர் ஒழுக்கத்தைப்பற்றிக் கேவலமாகப் பேசுகிறாமே …. நாம் நம் ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? சமூகச் சீர்திருத் தத்தைப்பற்றி எவ்வளவு பேசுகிறோம் நாம்! மனம் ஒன்றித்தான் அவ்வாறு பேசுகிறோமா? ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் சந்தித்தால் பழித்துப் பேசுகிற நாம் சமூக சீர்திருத் தத்தைப்பற்றிப் பேசலாமா ? பெண் ஒருத்தி சிரித்துப் பேசினால்-புன்முறுவல் அவள் இதழ் ஓரத்திலே மலருமானால்-அவள் நம் காதலி என்று எண்ணுகிற நீங்கள் நாட்டுப்பணி செய்கிறேன் என்று எப்படிச் சொல்லலாம்? பல நங்கையர் வாழ்வுக்குக் குழிதோண்டிய நீங்கள் காந்தியடி களின் பெயரைப் பேசலாமா?”…. 

மங்கை பேசிக்கொண்டே போனாள். அவள் தன்னை மறந்து பேசினாள். குமாரதேவன் குழந் தைபோல் அழுதான். மங்கையின் புன்முறுவலைத் தவறாக உணர்ந்ததற்காக அவன் அழ வில்லை. அந்த அன்புள்ளத்திலே இவ்வளவு தீயைக் கிளப்பிவிட்டோமே என்றுதான் அழுதான். 

கடல் இரைச்சலுக்குத்தான் ஓய்வு கிடையாது. மழை இரைச்சலுக்குமா ஓய்வு இல்லை ? மங்கை பேச்சை நிறுத்தினாள்; களைத்து நிறுத்தினாள். 

11 

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. குமார தேவன் ஆனர்ஸ் தேர்வில் வெற்றி பெற்றான். திருமணமும் செய்துகொண்டான். யாரை? 

மங்கையர்க்கரசியை அல்ல. அவள் குறித்த– குமாரதேவன் வாழ்க்கைத் துணை யாகக் குறித்த—அல்லியை மணந்தான். அல்லி கல்லூரி வாழ்வில் குமாரதேவனை நாடி நலிந்த பெண். மங்கையின் அன்பால் குமாரதேவன் மனைவியானாள். 

இன்னமும் மங்கையர்க்கரசியைச் சுட்டிச் சுட்டிப் பல சுட்டு விரல்கள் நீளுகின்றன. கல்லூரிகளின் சுவர்களிலே குமாரதேவன் பெய ரோடு இணைத்து என்றோ எழுதப்பட்ட அவளு டைய பெயரைச் சுட்டி மாணவர்கள் கதைகள் பேசுகிறார்கள். அல்லி பாவம், அறியாப் பெண். உண்மை தெரியாமல் அவனை மணந்து கொண்டாள்” என்று மாணவ ‘மணிகள்’ இரக்கப்படுகிறார்கள். 

மங்கை எல். டி. படிக்கிறாள்-ஆசிரியையாக வேண்டுமென்பது அவள் முடிவு. 

பாத்திரம் நிறையப் பால் இருந்தது. ஒரு சொட்டு மோர் பிரையாகக் கலந்தது. பால் முழுவதும் தயிராகிவிட்டது. அந்தப் பிரைத் துளியைத் தனியாகப் பிரிக்க முடியுமா ? பிரை யாக விழுந்த துளி தன்னை இழந்துவிட்டது. பாலோடு கலந்து-தயிரோடு உறைந்து தன்னை மாய்த்துக்கொண்டது. 

மங்கை தன்னை இழந்துவிட்டாள். தூய்மை கெடாத மோர்த்துளிதான். பாலோடு கலந்து தன்னை இழந்தது. குமாரதேவன் வாழ்வில் புகுந்து மங்கை தன்னை இழந்தாள். குமாரன் அல்லி வாழ்வு மலர்ந்தது. அந்த மலர்ச்சியிலே மங்கையின் வாழ்வு மறைந்தது. மங்கை தன்னை இழந்தாள்; எல்.டி. படிக்கிறாள். 

சமூகத்தின் சுட்டு விரல்கள் அவளைச் சுட்டு கின்றன. தன்னை இழந்துவிட்ட மங்கை- யாரையுமே இலட்சியம் செய்யாத மங்கை- சுட்டு விரல்களிடையே கவலையின்றி உலவுகிறாள். கவலைப்பட்டு முடியுமா ? தயிரிலிருந்து பிரைமோர் தனியாகப் பிரிந்து வர முடியுமா?

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *