தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,432 
 

அப்பா! எங்க மிஸ் நாளைக்கு உங்களைப் பள்ளிக்கு வந்து அவங்களைப் பார்க்கச் சொன்னாங்கப்பா!’

“ஆமாண்டா… மாசம் ஒரு தடவை உங்க மிஸ் கூப்பிட்டு உன்னைப்பத்தி ஏதாவது புகார் பண்றதும், அதைக் கேட்டு நான் தலைகுனிந்து வர்றதும் வாடிக்கையாப் போச்சு. ஏண்டா, இப்படி இருக்கே? வெளியில் என்னைப் பார்த்து நூறு பேர் வணக்கம் சொல்றாங்க… நான் உனக்காக எல்லார்கிட்டேயும் வணங்கிப் போகவேண்டியதாயிருக்கு… எல்லாம் என் தலையெழுத்து!’ விருட்டென்று எழுந்து சென்றார் உமாபதி.

துளிர்அழுதுகொண்டு நின்ற முரளியை அவனுடைய தாத்தா அருகில் அழைத்துச் சமாதானப்படுத்தினார்.

“ஏண்டா, கண்ணு… அப்பா சொல்ற மாதிரி கொஞ்சம் நல்லாப் படிச்சு, நல்ல பேர் வாங்கக்கூடாதா?’

“நான் என்ன தாத்தா பண்றது? படிச்சுப் படிச்சுப் பார்க்கறேன். மண்டைல ஏறவே மாட்டேங்குதே…’ கேவிக் கேவி அழ ஆரம்பித்தான் முரளி.

தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை ஓடிக் கொண்டிருந்தது. நாளை புயல் அபாயம் இருப்பதால் பொதுமக்களைப் பத்திரமாக இருக்கும்படி ரமணன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இரவு முழுவதும் புயல் கோர தாண்டவமாடி விடியற்காலையில் ஓய்ந்தது.

காலையில் கண்விழித்து வெளியில் வந்து பார்த்த முரளி அதிர்ந்து போனான். மரங்களும் செடிகளும் தலைகீழாக வீழ்ந்து கிடந்தன. சுவர்கள் இடிந்து கிடந்தன. சன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் கிடந்தன.

ஒருவாரம் கழித்துத்தான் நிலைமை ஓரளவு சீரானது.

வழக்கம்போல அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு வெளியில் வந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான் முரளி.

தாத்தா மெல்ல அவனருகே வந்து, அவனை அணைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“இதோ பார், முரளி… அங்கே வீழ்ந்து கிடக்கின்ற சுவரும் சன்னல் கண்ணாடிகளும் ஒரு வாரமாகியும் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கு!

ஆனா, இவ்வளவு புயலையும் சமாளித்துக் கொண்டு மீண்டும் பறந்து திரியுது பார் பறவைகள்! அவைகளுக்கெல்லாம் எங்கிருந்து வந்தது இந்த மனதிடம்?

வீழ்ந்து கிடக்கின்ற மரங்களைப் பார். வேரே பிடுங்கப்பட்டாலும் தன்னுள் இருக்கின்ற சத்துக்களைக் கொண்டு மீண்டும் துளிர்த்திருக்கின்றன!

யோசிச்சுப் பார்,முரளி… உயிரில்லாத சுவரையும் சன்னலையும் மீண்டும் சரிசெய்ய அடுத்தவர் முயற்சி எடுக்கவேண்டும் என்று காத்துக் கிடக்கின்றன. ஆனால் உயிருள்ள தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் தங்களால் ஆன முயற்சிகளைச் செய்து மீண்டும் எழுந்து சந்தோஷமாகத் திரிகின்றன.

நல்லா யோசி..! மனிதனும் உயிருள்ளவன்தானே! முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால்தானே வாழ்க்கையில் முன்னேற முடியும்? புரிகிறதா?’

தாத்தாவின் சொற்கள் முரளியின் உள்ளத்தைத் தட்டியெழுப்பின. அவனுள் புத்துணர்வு பிறந்தது. தன்னாலும் நன்றாகப் படிக்க முடியும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல அவனுள் துளிர்விடத் தொடங்கியது.

– டி. கவிப்ரியா, 9-ம் வகுப்பு, புனித மரியன்னை மெட்
பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *