கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 4,193 
 

கஞ்சியில், மொட மொடத்த காட்டன் சேலையை சரி செய்தபடி, கண்ணாடியில், தன் பிம்பத்தை பார்த்த யாமினிக்கு, லேசான கர்வம் எட்டிப் பார்த்தது. 48 வயதிலும், இத்தனை இளமையான தோற்றத்தை, நடிகைகள் கூட பெற்றிருக்க முடியாது. நல்ல உயரம்; செதுக்கிய சிற்பம் போன்ற உடல் வாகு; சாயம் பூசாத அடர்ந்த தலைமுடி; புகழ் பெற்ற கல்லூரியின் துணை முதல்வர் பதவி; நகரத்தின் மையத்தில், பெரிய வீடு; வாசலில், எப்போதும் காத்திருக்கும், இரண்டு உயர் ரக கார்கள். உண்மையில், கொடுத்து வைத்தவள் தான் யாமினி!

வளைகுடா நாட்டில், அதிக சம்பளத்தில், வேலையில் இருந்தான், கணவன் ரித்திஷ். ஆண்டிற்கு, 45 நாட்கள் விடுமுறையில் வருவான்; அந்த நாட்கள் குதூகலமாய் கழியும். இந்தியாவில், இவர்கள் பாதம் படாத இடமே இல்லை.

‘யாமினி… என் பொண்ணுக்கு, உன் பேரு தான் வச்சிருக்கேன்; நீ வாழ்றதுல, பாதியாவது, வாழ்ந்தா கூட போதும் பாரு…’ என்று, தோழிகள் சொல்லும் போது, அந்த வார்த்தைகளில் தெரியும் பொறாமையில், குதூகலப்படுவாள், யாமினி.

ஒரே மகள் நிதர்சனா, கல்லூரி முடித்த கையோடு, காதல் என்ற போது தான், கொஞ்சம் கலங்கிப் போனாள்.

கண்ணீரோடு கணவனுக்கு போன் செய்த போது அவன் அலட்டிக்காமல், ‘எதுக்கு இப்படி படபடக்கிற… அவளுக்கு பிடிச்சதுன்னா, செய்ய வேண்டியத கவனி. அவ தானே, வாழப் போறா… அவளா தேடிக்கிட்டாங்கிறதால, அது சரியா இருக்காதுன்னு நினைக்கிறது முட்டாள்தனம். நீ, எல்லா ஏற்பாடுகளையும் செய்; கல்யாணத்திற்கு, மூணு நாட்களுக்கு முன் வந்துடறேன்…’ என்றான்.

யாமினிக்கு, கணவனை நினைக்கையில், பெருமிதமாக இருந்தது. சொன்னபடி, கல்யாணத்திற்கு, மூன்று நாட்களுக்கு முன் வந்தான். திருமணம் முடிந்து, ஒரு வாரம், இவர்களோடு சேர்ந்து சுற்றிய பின், கிளம்பிப் போனான்.

நிதர்சனாவின் கணவன் கணேஷ், இப்போது தான் படித்து முடித்திருந்ததால், சிறு வேலையில் இருந்தான். தான் தனியாக இருப்பதை காரணம் காட்டி, அவர்களை தன்னோடு தங்க வைத்துக் கொண்டாள், யாமினி.

நல்ல மருமகன் அதுவும், வீட்டோடு இருக்க சம்மதித்ததில், யாமினியின் பெருமை, இன்னும் ஒரு பங்கு, கூடித்தான் போனது.

“அம்மா… அவருக்கு இன்னைக்கு தான் முதல் சம்பளம்; நாம, ஓட்டலுக்கு போயிட்டு வரலாமா…” அம்மாவின் கழுத்தைக் கட்டியவாறு, கொஞ்சினாள் நிதர்சனா.

மூவரும் ஓட்டலுக்கு வந்த போது, யாமினியின் முகம், அதிருப்தியில் நெளிந்தது.

“என்ன நிதர்சனா… இந்த ஓட்டலுக்கு கூட்டிட்டு வந்துருக்காரு உன் வீட்டுக்காரரு… இது, நல்ல ஓட்டல்ன்னாலும், நமக்கு இந்த, ‘அட்மாஸ்பியர்’ல்ல சாப்பிட்டு பழக்கமில்லன்னு உனக்கு தெரியாதா…” என்றதும், நிதர்சனாவின் முகம், நொடியில் மாறி, பின் மீண்டது.

“அம்மா… பழக்கம்ங்கிறது இடையில வர்றது… எனக்கு, அது நிரந்தரம் இல்ல; இதுதான் நிரந்தரம். என் வீட்டுக்காரர் வருமானத்துக்குள்ள செலவு செய்ய நான் பழகிக்கணும்; இல்லாட்டி, என் சந்தோஷத்திற்காக, அவரை, எங்கேயாவது அடகு வைக்க வேண்டியதாகி விடும்,” என்றாள் வெடுக்கென்று!

மகளின் பதில், யாமினியின், ‘ஈகோ’வில், கீறல் போட்டது.

“இதுக்கு தான், உன்னை வசதியான இடத்தில கட்டிக்குடுக்க ஆசைப்பட்டேன் கேட்டியா…” என்று அவர்கள் வாதம் துவங்கும் முன், கணேஷ் வரவும், பேச்சு தடைப்பட்டது.

பார்த்து பார்த்து, ‘ஆர்டர்’ செய்தான், கணேஷ். நிதர்சனா, அடம் பிடித்தும், ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கித் தர மறுத்தான்.

“நிதர்சனா… இப்போ உனக்கு ஜலதோஷம் இருக்கு; இதோட ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, வெளில போனா, ‘டெம்ப்ரேச்சர்’ மாறி, அது, ‘அபெக்ட்’ ஆகும். ஜலதோஷம் சரியானதும், நீ கேட்கிற எல்லா, ஐஸ்க்ரீமையும் வாங்கித் தர்றேன்; அடம் பிடிக்காத,” என்றான்.

மகளின் கொஞ்சலும், மருமகனின் அரவணைப்பும், அக்கறையும் யாமினிக்கு புதிதாய் இருந்தது.

இரவு, 12:00 மணிக்கு கணவனுக்கு போன் செய்து பேசுகையில், “என்னங்க… நம்ம நிதர்சனா, ‘லோ கிளாஸ்’ பீப்பிள் மாதிரி ஆயிட்டாங்க…” என்று அங்கலாய்த்த போது, “விடு யாமினி… இதெல்லாம் ஒரு விஷயமா… எனக்கு, வேலை அதிகமா இருக்கு; ‘ரெஸ்ட்லசா’ இருக்கேன். அப்புறம் பேசறேன்…” என்று வழிப்போக்கன் போல், பேசி வைத்தான்.

ஹாலில், பேச்சுக்குரல் கேட்க, ‘பெட் ரூமை’ விட்டு வெளியில் வந்து, எட்டிப் பார்த்தாள், யாமினி. கிச்சனில், ஏதோ செய்தபடி இருந்தான், கணேஷ்.

“இந்த நேரத்துல கிச்சன்ல என்ன செய்றீங்க மாப்பிள்ள…” சட்டென்று, யாமினியின் குரல் கேட்டு, திரும்பி பார்த்த கணேஷின் முகத்தில், அசடு வழிந்தது.

“ஒண்ணுமில்ல ஆன்ட்டி… சும்மா தான்… நிதர்சனாவுக்கு, நாளைக்கு செமினார்; படிச்சிட்டு இருக்கா… அதான், கொஞ்சம், ‘சர்ப்ரைசா’ டீ போட்டு தரலாம்ன்னு கீழே வந்தேன்; கொஞ்சம், அதிகமா உருட்டிட்டேன் போலயிருக்கு,” என்றான்.

உள்ளே வந்து படுத்த யாமினிக்கு, மனதில், ஏதேதோ எண்ணங்கள் அலை பாய்ந்தது.

‘இது போல், தன்னிடம் அன்யோன்யமும், அக்கறையும் காட்டுகிற மனிதர்கள் யாருமே இல்லயே…’ என்று தோன்றவும், அதை தொடர விரும்பாமல், கண்களை, இறுக மூடினாள்.

மாறு நாள் மாலை —

கல்லூரி முடிந்து, வீடு திரும்பிய யாமினிக்கு, சூழ்நிலை, கொஞ்சம் கனமாக இருப்பதை, புரிந்து கொள்ள முடிந்தது.

நிதர்சனாவுக்கும், கணேஷுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்து, ஓய்ந்திருக்க வேண்டும்; இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த மவுனப் போர், இரண்டு நாட்கள் வரை நீடித்தது.

மூன்றாவது நாள் யாமினி, கல்லூரியில் இருந்து வரும் போது, நிதர்சனாவிடம், வலுக்கட்டாயமாய் பேசி, சமாதானம் செய்தபடி இருந்தான், கணேஷ்.

“என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்… சின்ன பிள்ளைங்களாட்டம், சண்டை போடவும், சமாதானம் ஆகவும்,” என்றாள் சிரித்தபடியே!

“ஆன்ட்டி… உங்க பொண்ணை, ரொம்ப அடமா வளர்த்து வச்சுருக்கீங்க… ஒரு சின்ன பிரச்னைக்கு ரெண்டு நாளா மூஞ்சிய தூக்கி வச்சுட்டு உட்கார்ந்துருக்கா. நானே, வலிய வந்து பேசணுமாம்… எப்படி இருக்கு பாருங்க,” என்றான்.

“நீங்கயேன் மாப்பிள்ளை இறங்கி வர்றீங்க… அவ பேசாட்டி போறான்னு, ரெண்டு நாள் விட்டு பாருங்க; தன்னால சரியாயிடும்,” என்றாள், மகளை சீண்டிப் பார்க்க!

உடனே நிதர்சனாவின் முகம், சட்டென்று இருண்டு, “பேசுனா பேசு, பேசாட்டி போன்னு சும்மா இருக்க, கணேஷ் ஒண்ணும், அப்பா இல்லம்மா… அவரு, நிஜமாவே என்னை காதலிக்கிறாரு,” என்றாள்.

மகளின் வார்த்தைகளில், ஆடிப் போனாள் யாமினி. இரவு முழுக்க, தூக்கம் வரவில்லை. ‘பேசுனா பேசு, பேசாட்டி போன்னு தன் கணவர் நினைப்பாரா என்ன… இத்தனை வசதியும், ஆடம்பர வாழ்க்கையும், பெருமையும் அவரால் அல்லவா வழங்கப்பட்டது. அதற்காக தானே, அவ்வளவு தூரத்துல போயி கஷ்டப்படுறார்…’ என்று, மனம் சண்டையிட்டது.

அதேநேரம் மகள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. உடனே, அதை சோதித்துப் பார்க்க நினைத்தாள்.

இதோ கடந்த, 10 நாட்களாக கணவனுக்கு போன் செய்யவில்லை யாமினி.

காலம், அதன் இயல்பான வேகத்தில் தான், நகர்ந்தது. ஆனால், யாமினிக்கு தான், சூரியனின் மடியில், தலை வைத்து படுத்திருப்பது போல், வெம்மையாகவும், வெதும்பலாகவும் இருந்தது.
அதேநேரம், இந்த மவுனம் பல விஷயங்களை, அசை போட உதவியது. இத்தனை ஆண்டு வாழ்க்கையில், சில அத்தியாவசிய சந்தர்ப்பங்களை தவிர்த்து, யாமினி தான், கணவனுக்கு போன் செய்து பேசுவது வழக்கம்.

இப்போது, தவறிப் போன போது, பெருசாய், அவன் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த எண்ணம் சுட்ட போது, கதறி அழ வேண்டும் போலிருந்தது.

“அம்மா… நேத்து சுடிதார் வாங்கினோமே… அந்த, ‘பில்’ உங்ககிட்டயா இருக்கு,” கேட்டபடி, உள்ளே வந்தாள் நிதர்சனா. அவள் பார்த்து விடுவதற்குள், புறங்கையால், கண்ணீரை, ஒற்றி எடுத்து, “எதுக்குடா?” என்று கேட்டாள்.

“மாத்த தான்ம்மா… நீங்க சொன்னீங்கன்னு எடுத்தேன். ஆனா, அந்த கலர், எனக்கு நல்லா இருக்காதுன்னு கணேஷ் சொல்றாரு; நாங்க போய், மாத்திட்டு வந்துடறோம்.”

அவள் பில்லை எடுத்து, விலகிப் போனாள். கல்யாணம் ஆன இத்தனை ஆணடுகளில், ஒருநாள் கூட, ‘யாமினி, உனக்கு இந்த கலர் நல்லாயிருக்கு; இது நல்லாயில்ல…’ என்று, ரித்திஷ் சொல்லி, கேட்டதில்லை. ‘வாழ்க்கையில், நிறைய விஷயங்களை தொலைத்து விட்டோமோ…’ என்று, மனம் தவித்தது.

மொட்டைமாடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில், தளர்வாய் அமர்ந்தாள் யாமினி.

“என்னம்மா… ரொம்ப, ‘டல்’ அடிக்கிறீங்க; காலேஜ்ல எதுவும் பிரச்னையா?”

“நிதர்சனா… நீ சொன்னது நிஜம் தான்; நான், உங்கப்பாவுக்கு, 15 நாளா, போன் செய்யல; அவரும், ‘நீ ஏன், செய்யல’ன்னு ஒரு வார்த்தை கேட்கல,” என்றாள்.

என்ன பதில் சொல்வது என்றறியாமல், அமைதியாக இருந்தாள் நிதர்சனா.

“இப்போ தான் எனக்கு ஒரு விஷயம் புரியுது; வருஷத்துக்கு ஒருமுறை வந்து போக, புருஷன் என்ன, சம்மரா, வின்டரா… முதன் முதலா, இவர் வெளிநாட்டுக்கு போகணும்ன்னு சொன்ன போது, அதை எதிர்த்தது எங்க அம்மா தான்… ‘வசதி வரும்; வாழ்க்கை போயிடும்’ன்னு அவங்க சொன்ன வார்த்தையோட பொருள், இப்ப தான் புரியுது. பணம் அனுப்பறதோட, தன் கடமை முடிஞ்சுதுன்னு, உங்கப்பா நினைக்கிறார். குடும்பத்து மேல அவருக்கு இருந்த பாசம், இல்லாம போயிடுச்சு. இத்தனை வருஷத்துல, நான், அவர் கூட, எந்த, பங்ஷனுக்கும் போனதா, ஞாபகம் இல்ல. இப்ப நினைச்சா, எல்லாமே, சீன்னு தோணுது.”

அம்மாவின் முகத்தையே, ஆழமாய் பார்த்த நிதர்சனா, “எனக்கு புரியுதும்மா… அதனால தான், கணேஷுக்கு வந்த வாய்ப்புகளை மறுத்தேன். அப்போ, நீங்க உட்பட, எல்லாருமே என்னை, பைத்தியக்காரி மாதிரி பாத்தீங்க.

“சிட்டியில, ஒரு நல்ல வீடு வாங்கிட்டாப் போதும்ங்கிற தேவையோட மட்டும் தான் வெளிநாடு போனாரு அப்பா. வீடு, கார் வாங்கியாச்சு. ஆனாலும், எத்தனையோ கிளை பரப்பி இன்னும் அந்த தேவைகள் தொடருது.

“ஆனா, அப்பா, நம்ம கூட இருந்து வாழலே. மகளா, நான் நிறைய இழந்திருக்கேன்; அந்த நிலைமை, எனக்கும், என் குழந்தைகளுக்கும் வரக்கூடாதுன்னு தான், ஆடம்பரத்தை, அத்தியாவசியமா நம்பி வாழ்ற பேதமையை கடந்து வர பழகிட்டேன்,” தாயுமானவளாகி, நிதர்சனம் பேசி, எழுந்து போனாள் நிதர்சனா.

குழப்பமும், கோபமும் போட்டி போட, முடிவில், கணவனுக்கு போன் செய்த போது, “என்ன யாமினி, எப்படி இருக்க… என்ன, இந்நேரத்துல போன் செய்துருக்க; எதுவும் பிரச்னையா…” என்றானே தவிர, ‘ஏன் இத்தனை நாளாய், போன் செய்யவில்லை…’ என்று கேட்கவில்லை.

“எதுவும் பிரச்னை இல்ல… ஆனா, எந்த பிரச்னையும் வர்றதுக்குள்ள, ஊர் வந்து சேருங்க,”என்றாள்.

“வாட் நான்சென்ஸ்…” என்றான் கோபமாக!

“நான் இன்னைக்கு தான், ‘சென்ஸ்’சோடு பேசறேன். உங்கள இப்பயே முடிவு எடுக்கச் சொல்லலே. ஆனா, அடுத்த முறை வரும் போது, எல்லாத்தையும் முடிச்சுட்டு, திரும்ப போறதில்லங்கற முடிவோடு வாங்க. அதுக்கான வேலைகளை, இப்பவே ஆரம்பிங்க,” என்றாள் அழுத்தமாக!

“என்னாச்சு யாமினி உனக்கு… இன்னும், ‘பார்ம் ஹவுஸ்’க்கு வாங்கின, லோன் இருக்கு; நிதர்சனா புருஷனுக்கு, நல்ல உத்யோகம் இல்ல; இப்ப, அவளுக்கும், நாம தான, நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும். இப்படி திடீர்ன்னு வரச் சொன்னா…” என்றவனை இடைமறித்து, “ப்ளீஸ் ரித்திஷ்… நம்மள விட, நிதர்சனாவுக்கு வாழ்க்கை புரியும்; அவளுக்கு, நாம சேர்த்து வைக்க வேண்டிய தேவையே இல்ல. வீட்டில் வாழாத நமக்கு எதுக்குங்க, ‘பார்ம் ஹவுஸ்!’ நான் சொல்லிட்டேன் அவ்வளவு தான்… மிச்சமிருக்க என் வாழ்க்கையாவது, எனக்கு திருப்பி தாங்க… இதுதான், என் வேண்டுகோள்,” உடைந்து போன குரலில் சொன்னவள், போனை வைத்து விட்டாள்.

தான் பற்ற வைத்த நெருப்பு, ஆனந்த புஸ்வாணமாய் வெடிக்கும் என்ற நம்பிக்கையில், காத்திருக்க ஆரம்பித்தாள்.

– நவ 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *