கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 605 
 
 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கால்களை நீட்டி சோபாவில் சாய்ந்திருந்தார் சுபா டீச்சர். அவரது சிந்தனைகள் யாவும் பத்து வருஷம் பின்னோக்கியதாய் இருந்தது. அவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றும் பத்து வருஷங்களாகின்றன. தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார். இந்த தவிப்பிற்குக் காரணம் வைஷ்னவி. அவள் படிப்பில் கெட்டிக்காரி. அவளது பரீட்சைப் புள்ளிகள் பல தடவை சுபாவை குளிர்வித்திருக்கின்றன. வைஷியை உதாரணம் காட்டி எத்தனை பிள்ளைகளை ஊக்குவித்திருப்பார் சுபா டீச்சர்? 

சுபா டீச்சர் வங்கிக்குச் சென்றிருந்தார். கியூவில் வருமாறு இருந்த அறிவித்தல் எரிச்சலைத் தந்தது. அதன் பிரதிபலிப்பாக அங்குமிங்கும் பார்த்தவருக்கு அந்த ஜன்னலினூடாக அங்கிருந்த வைஷி தென்பட்டாள். முதலில் யாரென்று அனுமானிக்க முடியாமல் குழம்பினாலும் தீவிரமாக யோசித்ததில் ஆசிரிய மூளை சட்டென்று இனம் கண்டு கொண்டது. சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பாடசாலைப் பருவத்தில் துருதுரு என்று இருந்த வைஷி தற்போது களையே இல்லாமல் கறுத்து சிறுத்து இருந்தாள். அதையும் விட பல்கலைக்கழகம் போக வேண்டும் என்ற அவளது சதா பிரார்த்திப்பு? 

‘என்ன டீச்சர். பெல் அடிச்சி பத்து நிமிஷம் ஆயிட்டுது’ – வகுப்புத் தலைவியாயில்லாத போதும் வைஷி வந்து கூப்பிட்டாள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருந்த சுபா டீச்சருக்கு அளவில்லா ஆனந்தம். 

‘படிப்பில் எத்தனை ஆர்வம் இந்தப் பிள்ளைக்கு? கட்டாயம் நல்ல நிலைக்கு வருவா’ 

மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார் டீச்சர். ஆசிரியர்களின் பிரார்த்தனை தட்டுப்படுவதில்லையே? இப்போதும் கூட நல்ல ஸ்தானத்திலிருந்து கடமை புரிகிறாள். எனினும் சுபா டீச்சருக்குத்தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை. 

அவர் அப்படி கியூவில் நின்ற போது வைஷியும் அவரைக் கண்டிருக்க வேண்டும். பியூன் வந்து உள்ளே வருமாறு கூற சுபா ஆச்சரியமடைந்து பின் நிதானித்து உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் வைஷி எழுந்து நிற்க 

‘பண்பாடு மாறாத பிள்ளை. இப்போதும் என்ன கண்டு எழுந்து நிண்டிட்டுது’ -வாழ்த்தினார் டீச்சர். 

அவர் வந்த காரணத்தைக் கேட்டு உடனே செய்து கொடுத்ததுடன் அவரது முகவரியையும் வாங்கி தனக்கு லீவு கிடைக்கும் போது வந்து போவதாகவும் கூறினாள். நன்றியுடன் விடைபெற்று வந்த டீச்சரை குறை கூறியவர்களாக கியூவில் இருந்தவர்கள் முணுமுணுத்தார்கள். 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைஷி, சுபா வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சுபாவின் வாழ்க்கை, கணவன், பிள்ளைகள் பற்றி வினவினாள். எதிர்பாராத இக்கேள்வியினால் திக்குமுக்காடிப் போனார் சுபா டீச்சர். அவரது முகமாற்றம் வைஷியின் மனதை என்னவோ செய்தது. செய்யக்கூடாத பெரிய தப்பை செய்து விட்டதாக கருதி தடுமாறினாள். அதை உணர்ந்த சுபா 

‘அவர்கள் யாரும் எனக்கில்லைம்மா’ என்றார். 

இந்த ஒற்றை பதிலில் அதிர்ந்த வைஷி 

‘ஏன் எல்லோரும் எங்கே? வெளியூரிலா அல்லது நாடிருந்த நிலையில் யுத்தத்துக்கு இரையாகி…’ 

இதைக் கேட்க நினைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் வைஷி பற்றி ஆராய்ந்த போது அவள் பாதாளம் நோக்கிப் போவதை உணர்ந்து கொண்டார் டீச்சர். அது பாதாளமா? பூபாளமா? யாருக்குத் தெரியும்? 

‘நீ இன்னமும் அவனைக் காதலிக்கிறியா?’ 

‘இ.. இல்லை டீச்சர்’ – உண்மையாகவே பொய்யைச் சொன்னாள் வைஷி. 

ராகுலின் அப்பா வைஷியின் ஏழ்மை காரணமாகவே அவளை எதிர்ப்பதாக அறிந்த போது கோபம் தலை உச்சியில் ஏறியது சுபா டீச்சருக்கு. ராகுலின் அப்பாவுடன் தான் பேசுவதாக வைஷியை தைரியப்படுத்தினார். 

வைஷியின் காதலாவது வாழட்டுமே? 

சுபாவின் காதல்தான் பட்டமரமாய் போயிற்று. அதை வைஷியிடம் வெளிப்படையாக கூற முடியுமா? குரு சிஷ்ய உறவுக்கு பாதிப்பு என்பதை விட சுபாவுக்கு ஒரு மகளிருந்தால் ஏறக்குறைய வைஷியின் வயது இருந்திருக்கும். அப்படியென்றால் மகளிடமே தன் காதல் தோல்வியை கூறுவது போல் ஆகிவிடாதா? அது அநாகரிகம் அல்லவா? வைஷி நாவலொன்றை பார்த்திருக்க, சுபா டீச்சர் இளமைக்கால நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தார். 


‘சுபா என்னைப் பாரேன் ப்ளீஸ்’ 

‘………..’

‘சொல்றத புரிஞ்சிக்க. உன்ன கலியாணம் செஞ்சா சீதனம் தர மாட்டியள் என்டு அப்பா சொல்றவர். மலேசியாவில் இருக்கும் அப்பாவின் நண்பரின் மகளை யோசிக்கினம். அதனால..’ 

‘அதனால…’ 

அவர் குனிந்த தலை நிமிரவில்லை. அவரைப் பிடித்து உலுக்கிக் கேட்டதில் இனி அவர் தனக்கு சொந்தமில்லை என்பதை சுபா புரிந்து கொண்டாள். இறைவா! கனவில் அவருடன் வாழ்ந்து, பிள்ளைக் குட்டிகள் பெற்று.. ஒரே வார்த்தையில் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டாரே? காதலிக்கும் போது பெற்றோரைக் கேட்கிறார்களா? குதிரைக்கு பசித்தால் வைக்கோலையும் திண்ணும் என்பது எவ்வளவு நிதர்சனம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் பசித்தாலும் புல் திண்ணாத புலி போல் மனம் மாறமாட்டார் என்றல்லவா சுபா ஆழமாக நம்பியிருந்தாள்? அதே நிலைதானா வைஷ்ணவிக்கும்? 


சத்தியமாக வைஷி நாவலை படித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பாவம் அவளின் ஏழை பெற்றோர். வறுமை காரணமாக ராகுலின் அப்பாவிடம் பேசவே தயங்கினார்கள். டீச்சர் ராகுலின் வீட்டாரிடம் சென்று தனக்காக பரிந்து பேசுவதை வைஷி விரும்பவில்லை. அழகு, குணம், மார்க்கம் இருந்து என்ன பயன்? பணத்துக்கு முன் அவை எல்லாமே மண்டியிட்டு காணாமல் போகின்றனவே? அவற்றைக் கண்டு வைஷியினதோ, ராகுலினதோ காதல் நெஞ்சங்கள் மசியவில்லை. அவனும் தன் அப்பாவுடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். அவர்கள் தம் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டார்களோ? அப்படியென்றால் இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுவிட்டு ஓடுமளவுக்கு வலிமையைத் தந்தது எது? காதல் புனிதமானதா? தீய சக்தியா? உண்மையாக காதலிக்கும் அனைவரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு வைஷியும் முகம் கொடுத்திருந்தாள். 


சுபா டீச்சர் கதவைத் தட்டினார். இருபததேழு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான வாலிபன் கதவைத் திறந்து பார்த்து புருவத்தை சுருக்கினான். அவனைப் பார்த்த டீச்சருக்கு முள்ளுக்குத்தியது போல் இருந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? 

அப்போது ‘ராகுல் ஹூ இஸ் தெயார்? (ராகுல் யாரங்கே?) என்று கம்பீரமாக ஒலித்த குரல் டீச்சரை தடுமாறச் செய்தது. அந்த உருவம் அவர்களை நெருங்க நெருங்க டீச்சரின் மனமும் மூளையும் ஒருமித்தே விளித்துக்கொண்டன. 

அடக்கடவுளே! பால் வாங்க பாம்பிடமா வந்திருக்கிறேன்? சுடர்விட்டு எரிந்த டீச்சரின் நம்பிக்கைத்தீ ராகுலின் தந்தையைப் பார்த்ததும் அணைந்தே போயிற்று. இருக்காதா பின்னே? அவன் அப்பன் ராகுலையும் மாற்றிவிட்டால்? இதோ இந்த ராகுலை எங்கும் பார்க்கவில்லை. இதோ இவரில்தான். மனசு ஓலமிட்டு அலறியது. அவரும் டீச்சரை அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பாரா? வந்த வேகம் குறைந்து பணிந்துபோய் இல்லையில்லை கூனிக்குறுகிப்போய் நின்றிருந்தார். 

ராகுலுக்கு சுபா டீச்சரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் 

‘டாடி இவங்களைத் தெரியுமா’ என்றான். 

‘இல்.. ஓம்.. இல்லை.. தடுமாறினார் ராகுலின் தந்தை. 

‘தெரியாதுப்பா. ஆனா உன்னப்பத்தி பேசத்தான் வந்திருக்கேன்’ என்றார் ராகுலிடம் டீச்சர். 

நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட கதிரையில் சாய்ந்து மௌனம் காத்தார் ஐங்கரன். 

ஐங்கரன்! சுபாவின் காதலர், இன்னொரு முறையில் சொன்னால் இப்போது ராகுலின் அப்பா. 

எதை எப்படி சொல்வது என தவித்து, பின் நிதானித்து வைஷியைப் பற்றி கூறி முடித்தபோது ராகுல் மொத்தமாய் உடைந்திருந்தான். சுபா தன் மகளுக்கு ராகுலைக் கேட்டு வந்திருக்கிறாளா என்று நினைத்தாரோ என்னவோ ‘செய்திடலாம்’ என்றார் ஐங்கரன். 

அப்பாடா. வந்த காரியம் இனிமையாக முடிந்ததே. கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினார் டீச்சர். 

திருமணத்தன்று.. 

‘அம்மா! இவங்க தான் எங்கள் விஞ்ஞான பாட டீச்சர்’ என்று வைஷி தன் ஏழைத் தாயிடம் கூறிக் கொள்ள அவள் சுபா டீச்சரைப் பார்த்து கைகூப்பினாள். அவளது விழிகளில் எத்தனை நன்றிப் பெருக்கும், சந்தோஷமும். 

இக்காட்சியைக் கண்ட ஐங்கரனுக்கு கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விட்டது போல் இருந்தது. 

‘இவள்.. இவள் சுபாவின் மகளில்லையா? ஐயோ வைஷி தன் மகள் என்று சுபா என்னிடம் கூறவில்லைதானே? நான் எப்படி கற்பனை பண்ணி… சுபாவைக் கண்டதும் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டேனா? – தவித்த ஐங்கரன் சுபாவை அழைத்து விபரம் கேட்டார். 

‘உங்களைத் தவிர வேறொருத்தன என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல்லீங்க. நான் இன்னமும் கல்யாணமே பண்ணிக்கல. வைஷி என் பொண்ணுன்னு உங்ககிட்ட சொன்னேனா? இல்லையே. நல்ல குணமான மருமகப் பொண்ணு கிடைச்சிருக்கா. பயம் வேணாம். ராகுலை சந்தோஷமா வச்சிக்குவா. ஐயோ கெட்டிமேளம் சொல்றாங்க. வாங்க போகலாம்’ 

சுபா நகர அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டார் ஐங்கரன். 

அங்கே வைஷியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *