கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 2,353 
 
 

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது

காலையில் எழுந்தவுடன் மனைவியின் மொபைலைப் பார்த்தான் கண்ணன். வழக்கம் போல சார்ஜ் பத்துப் பர்சன்டுக்கும் கீழே. அலுத்துக்கொண்டே சார்ஜரை தேடி மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு தன்னுடைய மொபைலையும் சார்ஜில் போட்டான்.

மல்லிகாவின் இந்த பழக்கம் அவனுக்கு எப்போதும் கோபத்தை ஏற்படுத்தும். மொபைலை சார்ஜில் போடுவது என்றால் அப்படி ஒரு அலுப்பு அவளுக்கு! இவன் தான் பார்த்துச் செய்ய வேண்டும். எத்தனையோ முறை சொல்லிப்பார்த்துவிட்டான். ஆனால் அவள் மாறியபாடில்லை.

பின்னர் காலைப் பொழுது அதன் போக்கில் விரைவாகச் சென்றது. கண்ணனுக்கு ஆபீஸ் பக்கத்தில்தான். ஆனால் மல்லிகாவுக்கு பீச் வரை செல்ல வேண்டும். அதனால் அவள் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி விடுவாள். சமயங்களில் காலை டிபன் கூட அவளுக்கு ட்ரெயினில் தான். டிபன் பாக்ஸ் கட்டுவது கண்ணன் வேலை. மளமளவென்று அவன் தனக்கும் மனைவிக்கும் மதிய லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்தான். இரண்டு பாட்டில்களில் தண்ணீர் நிறைத்து வைத்தான். இதெல்லாம் செய்து நிமிர்ந்தபோது மணி எட்டரை. மல்லிகா ரெடியாகி விட்டாள்.

“மறக்காம மொபைல் எடுத்துக்கிட்டு போ” என்றான். சரியென்று சொல்லி மல்லிகா போனை எடுத்துக் கைப்பைக்குள் பொட்டுக் கொண்டு வெளியே இறங்கிச் சென்றாள்

அவள் சென்றபிறகு கண்ணன் குளிக்கச் சென்றான். பின்னர் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்கு கிளம்பினான். தன் மொபைலை எடுக்கச் சென்றபோதுதான் அவன் கவனித்தான்.

மல்லிகா தன் போனை விட்டுவிட்டு அவன் போனை எடுத்துச்சென்று இருக்கிறாள்!

சரேல் என்றது கண்ணனுக்கு. என்னடா சோதனை என்று தன் நம்பருக்குக் கால் செய்தான்.

“ஆமாங்க, மறந்து போய் உங்க போனை எடுத்து வந்துட்டேன். கோவிக்காதீங்க” என்றாள் மல்லிகா.

என்ன சொல்வான் கண்ணன்? அவனுக்குக் கோபமெல்லாம் இல்லை. பயம். எங்கே அவள் தன் போனைத் திறந்து பார்த்திடுவாளோ என்று பயம். காலை வேளையில் மின்விசிறிக்குக் கீழே நிற்கும் போதும் வெள்ளமாக வியர்வை சிந்தவைக்கும் பயம்!

அவனுக்கு facebookல் நிறைய நண்பிகள். யாரும் எங்கும் எல்லை மீறியது இல்லை என்றாலும் மல்லிகா சற்று பழமைவாதி. அவளுக்கு இது புரியாது. பிடிக்காது.

அது மட்டுமல்ல அவன் பயத்துக்குக் காரணம். பல ஆண்களைப் போல அவனுள்ளும் சற்று அதீதமான காம ஆசைகள் உண்டு. அதற்குத் தீனி போடும் வகையிலான தளங்கள் நிறைய அவன் மொபைலில் புக்மார்க் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை மல்லிகா அதெல்லாம் பார்த்துவிட்டால்?

இடது மார்பு வலிப்பது போல உணர்ந்தான். ஒரே சமயத்தில் சிறுநீர் கழிக்கவும் புகை பிடிக்கவும் அவனுள் ஆசைகள் எழுந்தது.

சரி லைட்டாக அவளை எச்சரிக்கலாம் என்று மீண்டும் போன் செய்தான். போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி சொன்னது.

கண்டிப்பாக மல்லிகா பார்த்திருக்க வேண்டும். கோபம் வந்திருக்கும். அதனால்தான் ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறாள். கண்ணன் நிம்மதி தொலைத்தான்.

அவனுக்கு ஆபீசில் வேலை ஓடவில்லை. பலமுறை போன் செய்தான். ஸ்விட்ச் ஆப்! மல்லிகா மாலை ஏழு மணிக்குத் தான் வருவாள். அந்த நாளின் மாலை ஏழு மணியை கண்ணன் எப்படி எட்டிப்பிடித்தான் என்று அவனாலேயே விவரிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நோயாளி போல ஆகிவிட்டான்.

ஒருவழியாக மல்லிகாவும் வந்து சேர்ந்தாள். “என்ன எவ்வளவு தடவை போன் செஞ்சேன்? ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துதே? என்றான் அவளைப் பார்த்து.

“அத ஏன் கேக்கறீங்க! நீங்க காலைல பேசி வச்சதும் ஸ்விட்ச் ஆப் ஆயிடுத்து. இதுக்குண்டான சார்ஜர் யாருகிட்டயும் இல்லை. அதுனால் நான் இத அப்பவே handbag ல போட்டுட்டேன். இந்தாங்க” என்று சொல்லி அவன் போனை தந்தாள்.

“ஆண்டவா! வாட் எ மிராகிள்!” என்று கண்ணன் தனக்குள் வியந்தான். தன் சார்ஜரில் போனை இணைக்கப் போகும்போது பார்த்தான். போன் ஸ்விட்ச் ஆன் ஆகியிருந்தது. சார்ஜும் முழுவதுமாக இருந்தது.

வியப்புடன் பார்க்கையில் ஒரு தெரியாத நம்பரில் இருந்து ஒரு மெசேஜ்.

திறந்து பார்த்தான்.

“ஹலோ கண்ணா! போன உயிர் திரும்பி வந்ததா? உன் மேல் இருந்த பரிதாபத்தில் நான்தான் என் சக்தியால் அதை செயலிழக்கச் செய்தேன். உன் ரகசியங்கள் உன்னோடு. ஆனால் இதற்குப் பிரதியுபகாரமாக நீயொன்று செய்ய வேண்டும். உன் அலமாரியின் இரண்டாவது தட்டில் அந்த நீல சட்டைக்குக் கீழே ஒரு சிறிய முடிபோட்ட பை இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போய் உன் எதிர்வீட்டு சுப்பிரமணியின் வீட்டில் அவன் படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே வைத்துவிடு. என்னால் அங்கு போக முடியாத சூழ்நிலை. மறுக்காதே! மறைத்த ரகசியங்களை பகிரங்கப்படுத்தவும் முடியும்”

என்று ஒரு செய்தி இருந்தது. கண்ணன் வியர்த்தான். யாராயிருக்கும்? சட்டென்று தன் அலமாரியைத் திறந்து நீல சட்டையைத் தூக்கிப் பார்த்தான். ஒரு துணிப்பை இருந்தது. அதை கையில் எடுத்தான். உள்ளே ஏதோ மிருதுவாக துணிபோல் உணர்ந்தான். அந்தப் பையில் இருந்து பவழமல்லி அத்தர் எல்லாம் கலந்தாற்போல ஒரு வாசனை.

முடியைத் தளர்த்தி பையின் உள்ளே பார்த்தான். அழகாக மடித்து வைக்கப்பட ஒரு நாகப் பாம்பின் தோல்!

கண்ணனுக்கு சகலமும் ஒடுங்கியது. என்ன சோதனை! இந்த நாகக்கன்னி ஏன் என்னை விடாமல் துரத்துகிறாள்?

எப்படி யோசித்தும் அவனுக்கு தப்பிக்கும் வழி தோன்றவில்லை. முடிவாக அதை எடுத்துக்கொண்டு எதிர் வீட்டுக்குச் சென்றான்.

“வாங்க கண்ணன்” என்று வரவேற்ற சுப்பிரமணியிடம் “கொஞ்சம் வாழையிலை வேண்டும் நான் பறித்துக் கொள்ளவா” என்று கேட்டான்.

“இதெல்லாம் கேக்கணுமா கண்ணன்?” என்றான் சுப்பிரமணி.

கண்ணன் பின்பக்கமாக இறங்கிச்சென்று சுப்பிரமணி பார்க்காத அந்த நொடியில் தான் கொண்டுவந்த அந்த சுருக்குப் பையை அவன் பெட்ரூம் ஜன்னல் வெளியே வைத்துவிட்டு வந்ததற்கு ஒரு இரண்டு வாழை இலை வெட்டிக் கொண்டு வெளிய வந்து தன் வீட்டுக்குச் சென்றான்.

அகஸ்மாத்தாக போன வாரம் தனக்கு சர்ப்ப தோஷம் என்று சுப்பிரமணி சொன்னது நினைவுக்கு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *