குற்றம் பார்க்கில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 127 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“என்ன பொண்ணுடி நீ இதுக்குள்ளே ‘பிராக்கை ச் சுவர் ல தேய்த்து நாசம் பண்ணிட்டியா?” என்று சொல்லிக் கொண்டே விமலா, தன் மகள் நளினாவின் கன்னத்திலும் முதுகிலும் பளார் பளாரென்று ‘மத்தளம்’ கொட்டினாள். நளினா சுவரில் பிராக்கைத் தேய்த்தபோது, விமலா வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். துடைப்பத்தைப் போட்டுவிட்டு, அதே கையோடு மகளுக்குச் ‘செமத்தை’யாகக் கொடுத்தாள். நளினாவின் பிராக் மேலும் அழுக்கானது அதுவரை ஓரளவு உற்சாகமாக இருந்த நளினா, மலங்க விழித்தாள். மனோதத்துவ முறையில் சொல்லப் போனால், நிர்மலமாகப் பார்த்தாள் அவள் கண்கள், எதற்கும் எட்டாத தொலை துரத்தைத் துழாவித் தோல்வி யுற்றவை போல் காட்சியளித்தன. நளினாவுக்கு ஒன்பது வயது. ‘டிராய்ல்’ எடுக்கப்பட்டுத் தைத்த உடைபோலக் கச்சிதமாக இருந்தாள்.

நளினா. எவ்வித மாறுதலும் காட்டாமல் இருப்பதைக் கண்ட விமலாவுக்கு மேலும் எரிச்சல் வந்தது “அதுக்குள்ள கண் மையை நெத்தியில் தேய்ச்சிட்டியா” என்று நெற்றியில் ஒரு தட்டுத் தட்டினாள். அந்தக் குழந்தை, அம்மா டிரஸ்’ செய்வதையும் உணவூட்டுவதையும் எப்படிக் கடமையாகச் செய்கிறாளோ, அதே போல் அடிப்பதும் அவளுடைய கடமை என்று நினைத்துச் சர்வ சாதாரணமாக நின்று கொண்டிருந்தது. பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போக ஆயா வந்துவிட்டாள் விமலா அவசர அவசரமாக மகளுக்குப் பூட்ஸ்களை மாட்டினாள். “காலில் ஏண்டி இவ்வளவு அழுக்கு?” என்று கேட்டுக் குதிகாலில் ஒரு கிள்ளுக் கிள்ளினாள். பிறகு புத்தகங்களைப் பார்வையிட்டாள். கணக்குப் புத்தகத்தில் கணக்கில்லாத கிறுக்கல்கள்: சரித்திரப் புத்தகத்தின் அட்டையைக் காணவில்லை. விமலாவுக்கு ஆத்திரம் அதிகமாகியது. “தரித்திரம்…உனக்கு எத்தனை தடவைடி சொல்றது? இதைக்கூட ஒழுங்கா வைக்கத் தெரியாத உதவாக்கரைச் சனியனுக்கு ஒன்பது வயசாகுது. அஞ்சு வயசுப் பெண்ணுக்கு இருக்கிற அறிவுகூட இல்லை” என்று மகள்ைப் பார்த்தும், ஆயாவைப் பார்த்தும் சொல்லிக் கொண்டே, நளினா ஒரு யோகியைப் போல், ஆயாவைப் பார்த்தாள். நளினா, உதைப் படலத்தை’ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் ஆயாவால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை: அவள் இன்னும் பல வீடுகளுக்குப் போக வேண்டுமே!

“நல்ல பொண்ணு, ஏம்மா இப்படிச் சொல்றீங்க?” கேட்டுக் கொண்டே, ஆயா நளினாவுடன் வெளியேறினாள். வாசல் வரைக்கும் வந்த விமலா பொருமினாள்.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் மம்மிகளுக்கு “டாட்டா” “பைபை” என்று சொல்விக் கொண்டே போகிறார்கள். ஆனால், நளினா அம்மாவுக்கு “டாட்டா” சொல்வது இருக்கட்டும்: திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

விமலாவுக்கு ஆத்திரம் அழுகையானது. ‘இந்தப் பொண்ணுக்கு எப்போ புத்தி வரப்போவதோ? லேசாகக் கையை ஆட்டி போயிட்டு வர்றேம்மான்னு’ சொல்ற புத்தியில்லியே பக்கத்து வீட்டிலுந்தான் அந்தப் பையனை அடிக்கிறார்கள். ஆனால் அந்தப் பையன் ஸ்கூலுக்குப் போகும்போது, எவ்வளவு அழகாக அம்மாவுக்கு மட்டும் பட்டும் பதியாமலும் முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறான்!

வாசலில் இருந்து திரும்பி வந்த விமலா, கதவைத் தாழிட்டுவிட்டு ஹாலில் மாட்டியிருந்த கணவனின் போட்டோவிற்கு எதிரே வந்து நின்றாள். கண்ணிரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மி விம்மி அழுதாள். 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரத பாகிஸ்தான் போரில் அவள் கணவன் வீரமரணம் எய்திய பிறகு, அந்தப் போட்டோவைப் பார்த்துப் பார்த்தே, அவள் கண்ணீரால் கன்னத்தைச் சுத்தி செய்வது வழக்கம். எமர்ஜென்ஸி கமிஷன் ஆபீசராக ராணுவத்தில் சேர்ந்த தன் கணவன் ‘யூனிஃபாரத்தோடு’ லெப்ட் ரைட் போட்டுக் கொண்டே வீட்டுக்கு வருவான் என்று கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்த அவளுக்கு, வெறும் சீருடைகளே பார்சலில் வந்தன.

விமலாவுக்கு, இருபத்தொன்பது வயசிருக்கும். அழகாக இருப்பாள். ஆனால், கவர்ச்சியாக இருக்கமாட்டாள் அப்படிப் பார்க்கவும் மாட்டாள் பழகவும் மாட்டாள். கனவனின் பெற்றோர்கள் கொடுத்த வீட்டில், தாய் தந்தையர் தாராளமாகக் கொடுத்த பணத்தைப் பேங்க்கில் போட்டு, ஒரளவு வசதியாக வாழும் அவளுடைய இளமை, இன்னும் செழிப்பாக இருந்தாலும், அவள் அடக்கமாகவும், எளிமையாகவும் பழகியதால் அவளைப் பற்றி உற்றார் உறவினர் கூட இதுவரை கசமுசா என்று பேசியது இல்லை.

கட்டுக் குலையாத இருபத்து மூன்று வயக வாலிப உருவைத் தாங்கிய பொலிவு பெற்ற அந்தப் போட்டோவின் முன்னால், கண்ணிர் விட்டுக் கொண்டிருந்த விமலா, மணி ஒலி கேட்டு, முன்றானையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே, கதவைத் திறந்தாள். “வாங்க…வாங்க இப்போதான் வழி தெரிஞ்சுதா?” என்று கேட்டுக் கொண்டே வந்தவர்களை வரவேற்றாள். வந்திருந்த அவள் கணவனின் சித்தியும், அவள் மகள் ரேணுகாவும் நாற்காலியில் அமர்ந்தார்கள்

“என்ன விமலா, ஒரு மாதிரியா இருக்கே?” என்று கேட்டாள் அந்த அம்மாள். “பேபி ஸ்கூலுக்குப் போயிட்டாளா?” என்று ரேனுகாவும் தொடர்ந்து கேட்டதால் விமலா இரண்டுக்குமே பதில் சொல்லாமல் லேசாகச் சிரித்தாள்.

“என்ன அண்ணி கண்ணு சிவந்திருக்கு? டாக்டர் கிட்டே டெஸ்ட் பண்ணிக்கக் கூடாது?” என்றாள் ரேணுகா. அவள் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருப்பவள். ரேணுகா அப்படிச் சொல்லும்போது, விமலா கணவனின் போட்டோவைப் பார்ப்பதை அத்தைக் காரி புரிந்துகொண்டு ஆறுதல் சொல்லவம் தொடங்கினாள்.

“எப்போ பார்த்தாலும் அவனையே நினைச்சிக் கிட்டிருந்தி எப்படி? என்ன செய்யறது? நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான். பாழாப்போன பகவான் உன் கிட்ட வ்ந்து சோதிச்சிட்டான். நீ ஏம்மா அழறே? அழாதே. அழாதே”

அத்தை மேற்கொண்டு பேச முடியாமல் ‘அழாதே அழாதே’ என்று சொல்லிக் கொண்டே தான் அழுதாள். இதைப் பார்ததும் விமலா உள்ளங்கையில் நெற்றியைப் புதைத்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழுதாள். அத்தையம்மா, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, “அசடே. ஏன் அழறே? நாம மட்டும் இந்த உலகத்தில் நிரந்தரமாவா இருக்கப் போகிறோம்? அவன் முன்னால போனான். நாம் பின்னால் போகப் போறோம். உன் குணத்துக்கு இப்படி நடக்க வேண்டாம். போனதுதான் போனான் கண் தெரியாத காட்டிலேயா சாகனும்? குண்டு பட்டா சாகனும்? என் பிள்ளை குண்டு விழுந்து எப்படித் துடிச்சானோ, எப்படிச் செத்தானோ, நீ ஏம்மா அழறே? அழாதே அழாதே”

இப்போது விமலாவால் சத்தம் போட்டு அழாமல் இருக்க முடியவில்லை. “சில வீடுகளில் நடக்கிறமாதிரி அவர் கோபத்தில் அடித்திருந்தால் கூட மனசு தேறியிருப்பேன் அத்தே. ஒரு நாள் கூட்ச் சத்தமாப் பேசமாட்டாரு. நான்தான் சில சமயம் சத்தம் போடுவேன் அப்போது கூடச் சிரிப்பார். என் கண் கலங்கினா அவரு கண்ணும் கலங்கிவிடும். அவரு காலிங் பெல்லை அடிச்சதும் கதவைத் திறப்பேன்: கை நிறைய மல்லிகைப்பூ வாசனை எப்படி அடிக்கும் என் வாழ்க்கை வாசனை இல்லாமல் போயிட்டுதே அத்தே! நான் தான் எப்படியோ போறேன். நளினா கூட மூளைக் கோளாறு உள்ளவள் மாதிரி நடந்துக்கிறாள். என் விதியை யார் கிட்டே அத்தே சொல்றது?” என்று புலம்பினாள்.

ரேணுகாவுக்கு மனம் என்னவோ போலிருந்தது. வறட்சியில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட இனம் புரியாத வேதனை மீண்டும் அவளுக்கு ஏற்பட்டது. என்றாலும் விமலாவை ஒரு நோயாளியாகக் கற்பனை செய்து கொண்டு, “அண்ணி எனக்குப் பசிக்குது ஏதாவது சாப்பிடக் கொண்டு வாங்க” என்று பேசி ஒரே பேச்சில் இரண்டு காரியங்களை நிறைவேற்றிக் கொண்டாள்.

அத்தையும் ரேணுகாவும் சாவகாசமாக மாலைவரை தங்கி இருந்தார்கள் அவர்கள் புறப்படுகிற சமயத்தில் கான்வென்டில் இருந்து நளினா உற்சாகத்தோடு வந்தாள். “எப்போ பாட்டி வந்தீங்க?” என்று கேட்டபடி, பாட்டியம்மாளின் நாற்காலியில் செல்லமாகச் சாய்ந்தாள்: விமலாவக்கு உடம்பெல்லாம் எரிந்தது. ஒரு நாள் கூட, பெற்ற தாயான அவளிடம் நளினா இவ்வளவு அன்போடு நடந்தது கிடையாது. திருட்டுக் கழுதை

“பாட்டி நீங்க எப்போ வந்தாலும் ஒன்னும் வாங்கிட்டு வர்றது கிடையாது, புரசைவாக்கம் மாமா வரும்போதெல்லாம் பாக்கெட் பாக்கெட்டாய்ச் சாக்லெட் வாங்கி வருவாரு.”

நளினாவின் விமரிசனம் கேட்டு அத்தை திடுக்கிட்டாள். அவள், ஒரு நாள் கூட நளினாவுக்கு எதுவும் வாங்கி வந்தது இல்லை என்பது உண்மை. அந்த உண்மை அவளைச் சட்டது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமலே, நீயாவது சமாளியேன் என்று கெஞ்சுவது போல் ரேணுகாவைப் பார்த்தாள்.

நளினா இப்படி அடாவடித்தனமாகப் பேசுவதைக் கேட்ட விமலா, “திருட்டுக் கழுதை எவ்வளவு தின்னாலும் திருப்தி யில்லாத ஜென்மம். இதுக்கு வயிறே நிரம்பாது, எப்போ புத்தி வரப் போவுதோ?” என்று கடுகடுத்தபடி மகளைத் தன் பக்கம் இழுத்தாள். “பெரியவர்களைப் பார்த்து இனிமேல் அப்படிப் பேசமாட்டியே, மாட்டியே’ என்று ‘பளார் பளார்’ என அறைந்துவிட்டாள். ‘அத்தையும் ஒருநாள் கூட எதுவும் வாங்கிக்கிட்டு வரல்லியே’ என்ற குற்ற உணர்வில் தவித்ததாலோ அல்லது ‘வாயாடிப் பெண்ணுக்கு, இன்னும் வேணும்’ என்று நினைத்ததாலோ, விமலா அடிப்பதைக் கண்டு கொள்ளவில்லை. அதுவரை அம்மாள் ஒன்றும் பேசாமல் இருந்த ரேணுகா, “என்ன அண்ணி, அவள் குழந்தைதானே?” என்று இரக்கம் மேலிட அண்ணியின் கைக்குள் கசங்கியும், நகங்கியும் இருந்த நளினாவின் முடியை, சிரமப்பட்டுச் சிக்கெடுத்தபடியே விடுவித்தாள். நளினா விடவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கினாள். உள்ளங்கை இரண்டையும் பின் கழுத்தில் வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்தாள். அம்மா அடித்ததற்கான வெளிப்பாடு எதையும் காட்டிக் கொள்ளாமல், ஹாலைவிட்டு உள்ளறைக்குப் போய்விட்டாள்.

அத்தை பிராயச்சித்தம் செய்யத் தீர்மானித்தாள் “ரேணு, நாளைக்கு ஒன் பிரண்டோட பிறந்தநாள் விசேஷத்துக்கு நளினாவையும் கூட்டிக் கிட்டுப் போயேன்.”

“நல்ல ஐடியா அண்ணி, நாளைக்குச் சாயந்திரம் நளினாவுக்கு டிக்கா டிரஸ் செய்து வையுங்க நான் ஆறு மணிக்குள்ளே வந்துடறேன்” என்றாள் ரேணுகா

விமலாவின் மெளனம் சம்மதம் கூறியது. அத்தையும் ரேணுகாவும் போய்விட்டார்கள்: நளினா கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். விமலா மகளைப் பார்த்துக் கொண்டே நின்றாள். கேள்வித்தாளில் இருப்பதை அப்படியே எழுதிவைத்துவிட்டு இதனால் இன்னும் இரண்டாவது வகுப்பிலேயே முடங்கிக் கிடக்கும் மகளின் எதிர்காலத்தை நினைத்த போது, அவளால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. மீண்டும் ஹாலுக்கு வந்து கணவன் படத்துக்கு ஓர் ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டுக் கண்ணிர் விட்டாள். படத்திற்குக் கீழே உட்கார்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். மற்றவர்கள், விழிப்பதற்காகத் தூங்குவார்கள். அவளோ துங்குவதற்காக விழிப்பவள்.

மறுநாள் மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே ரேனுகா வந்து விட்டாள். “அண்ணி பேபி ரெடியா?” என்று அவள் வந்ததும் வராததுமாகக் கேட்டபோது, நீளினா துள்ளிக் குதித்து அவள் கையைப் பிடித்தாள். விமலாவுக்குப் பயங்கரமான கோபம்

“ஏண்டி பறக்கிறே? திருட்டுக் கழுதைக்கு ஊர் சுத்தணுமுன்னாக் கொண்டாட்டம்” என்று மகளை உற்றுப் பார்த்தாள். “ஏண்டி, இதுக்குள்ளே தலையில கட்டின ரிப்பனை எடுத்திட்டியா?” என்று குட்டினாள்.

ரேனுகாவுக்கு என்னவோ போலிருந்தது, ஊர் சுற்றவேணுமென்றால் கொண்டாட்டிம் என்று யாரைச் சொல்கிறாள்? அவள் சந்தேகம் வேறு ரூபத்தில் வெளியானது.

“அண்ணி, உங்களுக்குக் குழந்தையை வளர்க்கவே தெரியலே. இப்படியா குட்டுறது?”

“உனக்குக் கல்யாணம் நடந்து இந்தமாதிரி கோளாறு உள்ள குழந்தை பிறக்கட்டும். அப்புறந்தான். உன் குட்டுத் தெரியும்.”

“ஊரு உலகத்திலே பிள்ளை பெத்தவங்க இல்ல: நீங்க மட்டுந்தானா?”

ரேணுகாவின் குத்தலான கேள்வி விமலாவின் நெஞ்சைக் குடைந்தது. அவள் குமுறினாள்.

“இருக்காங்க, கணவன்மாரோடு இருக்காங்க. இந்தத் தடிக்கழுதையை இன்னும் பத்து வருஷத்துலே ஒருத்தன் கையிலே பிடிச்சுச் கொடுக்கணும். இப்படி விவரமில்லாம இருந்தா எப்படி நடக்குமோ?”

“அண்ணி எனக்குத் தெரிஞ்ச சைக்கியாட்ரிஸ்ட், அது தான் மனநல டாக்டர் இருக்காரு. நளினாவைக் காட்டுவோமா? மனோதத்துவ மருத்துவம் பார்ப்பது நல்லது அண்ணி”

“என் பொண்ணுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”

“பைத்தியக்காரங்கதான் மனோதத்துவ நிபுணரிடம் போகணுன்னு அர்த்தமில்ல. யார் வேணுமுன்னாலும் போகலாம்.”

“வேண்டாம்மா, ஊரே சிரிக்கும்.”

“படிச்சிருந்தும் இப்படிப் பேசுறீங்களே மனநோய், தலைவலி, வயிற்று வலி மாதிரி நம்மை அறியாமலே வருகிற நோய். மேதைகளுக்கெல்லாம் வரும்போது நாமெல்லாம் எந்த மூலை?”

“ஏதேது, இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குக்கூட மனநோய் இருக்குன்னு சொல்லுவே போலிருக்கே இந்த சைக்கியாட்ரிஸ்ட் வம்பே வேண்டாம், பைத்தியம் பிடித்து முத்தட்டும், அப்புறம் பார்க்கலாம் “

விமலா சொல்லிவிட்டுச் சிரித்தாள். ரேணுகா சிரிக்கவில்லை. மனசுக்கு யோசனை கேட்கணுங்கறதைக் கேட்டுச் சிரிக்கிறதே ஒருவித மனநோய்தான்.

விமலாவுக்கு ஒரு சந்தேகம், ஒருவேளை தனக்கும் மனநோய் இருந்து அதனால்தான் சைக்கியாட்ரிஸ்ட்டிடம் போகத் தயங்குகிறாளோ? தனக்கு மனநோய் இல்லை என்று நிரூபிப்பவள் போல் “சரியம்மா, உன்பாடு நளினாபாடு. எப்படியோ போங்க” என்று சொல்லிவிட்டு ஜாக்கிரதையாகச் சிரித்தாள்.

ரேணுகாவும், நளினாவும் பிறந்த நாள் விழாவுக்குப் போய்விட்டார்கள். தன் மகள் மூளைக்கோளாறு உள்ளவள் மாதிரி நடந்து கொள்கிறாளோ என்ற வேதனையில், விமலா கணவன் படத்திற்கு எதிரில் நின்று அதுவரை அடக்கியிருந்த அழுகையை விடுவித்தாள்.

ரேணுகா விமலாவையும் நளினாவையும் சைக்கி யாட்ரிஸ்டிடம் கூட்டிக் கொண்டு போனாள். மனநல டாக்டர் என்றால் கிழவராக இருப்பார் என்று கற்பனை செய்திருந்த விமலாவுக்கு முப்பது வயது இளைஞரைப் பார்த்ததும் வந்திருக்க வேண்டாம்’ என்பது போல் தோன்றியது. ரேணுகா சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, “நான் சொன்னது இவர்களைத் தான். பாவம் அண்ணி அண்ணா பத்து வருஷத்துக்கு முன்னாலே யுத்தத்திலே இறந்துட்டாரு. அண்ணிக்கு அண்ணாமேல் உயிரு. எப்படித்தான் நாளைக் கழிக்கிறாளோ? போதாக் குறைக்கு இந்தப் பொண்ணு மைண்ட் சரியில்லே” என்றாள்.

பிறத்தியார் முன்னிலையில் அதுவும் ஒரு மனநல வைத்தியரிடம் பேசவேண்டிய அளவுக்குத் தன் நிலைமை வந்து விட்டதே என்ற எண்ணமே மனத்தை வாட்ட, விமலா பொங்கி வந்த கண்ணிரை விழிகளிலேயே தேக்கி வைத்தாள்.

சைக்கியாட்ரிஸ்ட் அறை விசாலமாக இருந்தது. ஓர் ஒரத்தில் ரப்பர் மெத்தை தாங்கிய கட்டில் அதற்கு எதிரே சிறிய வட்டங்களை உள்ளடக்கிய பெரிய வட்டம் வரையப்பட்ட ஒரு போர்டு. பலவித வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், தூய வெண்மையான ஒருவித வேற்றுமைக்கு ஒற்றுமை கூட்டியது. விமலாவும், ரேனுகாவும் அந்த அறையைச் சுற்றிக் கண்களைச் சுழலவிட்டபோது நளினா கட்டிலருகே சென்று அதன்மேல் கையை வைத்துக் குத்தினாள். விமலாவுக்கு எரிச்சலுக்குமேல் எரிச்சல்,”சனியனே! இங்கே வந்து உட்காருடி. தரித்திரத்துக்கு உடம்புதான் மிச்சம். மூளை கொஞ்சங்கூட இல்லை” என்று கடுகடுத்தாள். டாக்டரின் அறையைத் தன் வீடாக நினைத்து தன்னை மறந்து சொன்னதற்கு வருந்தித் தலை குனிந்தாள். இந்தத் தலைக் குனிவுக்குத் தன் மகள் தானே காரணம் என்று நினைத்தாள். நளினாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டாள். நளினா திரு திருவென்று விழிக்க, சைக்கியாட்ரிஸ்ட் உதட்டைக் கடித்தார்.

“ரேணு நான் இவர்களிடம் தனியாய்ப் பேசணும்” என்று அவர் சொன்னதும் நாகுக்காக ரேணு அறையை விட்டு நகரத் தொடங்கினாள். நளினாவையும் அழைத்துக் கொண்டு போகும்படி அவர் சைகை செய்தார்.

விசாலமான அறையில் முன்பின் அறியாத இளைஞருடன் தனித்து விடப்பட்ட விமலா தவித்தாள். அதைப் புரிந்து கொண்ட சைக்கியாட்ரிஸ்ட் “தயவு செய்து என் கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்லுங்கம்மா டாக்டரிடம் உடம்பு முழுவதையும் காட்ட வெட்கப்படக் கூடாது. அது போல் ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் உள்ளத்தையும் திறந்து காட்டுறதில் தப்பில்லை” என்றார். விமலா அவரை ஆச்சரியத்தோடும், ஓரளவு எரிச் சலோடும் பார்த்தாள். சைக் கியாட் ரிஸ்ட் இளைஞர் சோதனையைத் தொடங்கினார்,

“உங்கள் கல்யாணம் காதல் கல்யாணமா?”

“காதலுன்னும் சொல்ல முடியாது, இல்லேன்னும் சொல்ல முடியாது “

“அதாவது ஒருவரை ஒருவர் மானசீகமாக நேசிச் சிங்க: பெற்றவர்கள் புரிஞ்சிக்கிட்டுக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அல்லது உங்க இருவருக்கும் திருமணம் நடக்கும் என்ற எண்ணமே உங்களுக்கிடையே ஒருவித அன்பை ஏற்படுத்தியது இல்லை?”

விமலாவுக்கு அந்த இளைஞன் மீது நம்பிக்கை பிறந்தது. “ஆமாம்” என்று தலையை ஆட்டினாள்.

“ஓங்க புருஷர் எப்போதாவது உங்களிடம் கோபமாய் நடந்திருக்கிறாரா?”

“ஒருநாள் கூடக் கிடையாது.”

“தாம்பத்திய வாழ்க்கையில்?…”

“குறை கூற இடமில்லை.”

“ஐ ஸீ! அவரு எதுக்காக ராணுவத்தில் சேர்ந்தாரு?”

“அவருக்கு வேலை கிடைக்குமுன்னாலேயே திருமணம் ஆயிட்டுது அதுவரைக்கும் அவருக்குப் பாக்கெட்மணி’ கொடுத்த பெற்றோர்கள் கொஞ்சம் அலட்சியமாக நடந்துகிட்டாங்க. என்னையும் மதிப்புக் குறைவா எண்ணினாங்க. எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்திடணுமுன்னு அவரு பல ஆபீஸ்களுக்கு நடந்தாரு, ஆனால்…”

“கிடைக்கலே. எமர்ஜென்ஸி ரெக்ரூட்மெண்ட் வந்ததும் சேர்ந்துட்டாரு.”

“கரெக்ட்.”

“அவரு ராணுவத்திலே சேரும்போது உங்களுக்கு திருமணமாகி எத்தனை மாதம்? குழந்தை பிறந்திருந்ததா?”

“ஒண்ணே கால் வருஷம், நான் எட்டு மாதக் கர்ப்பம்.”

“அவரை ராணுவத்தில் சேர வேண்டாமுன்னு நீங்க தடுக்கலியா?” வினாவை எழுப்பிய டாக்டர் விமலாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார்.

“எவ்வளவோ சொன்னேன் வழக்கத்துக்கு விரோதமாய் இருந்திட்டாரு. அவ்ரு போகும்போது என் கையால் உணவு கொடுக்காத பாவியாயிட்டேன்.”

“அதாவது, அவர் மேல் இருந்த கோபத்துல சமைக்காமல் இருந்திட்டிங்க.”

விமலா விக்கி விக்கி அழுதாள். அவள் அழுது முடியட்டும் என்று நிதானமாகக் காத்திருந்து விட்டு சைக்கியாட்ரிஸ்ட் மீண்டும் கேட்டார்.

“போகட்டும் இப்போதான் நாம் உண்மைகிட்ட நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். நான் உங்க சகோதரர் மாதிரி. எட்டுமாத கர்ப்பிணி மனைவியை விட்டுப் போறவரு ஒரு புருஷனா என்று நினைத்ததோடு, வேறு யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றியதா?” என்ற வினாவைக் கேட்டு விமலா திகைத்துப் போனாள்

“உங்களுக்கு எப்படி இது தெரியும்?”

“எப்படியோ. உங்க பொண்ணு ஒழுங்கா ஆகணுமுன்னா, உண்மையைச் சொல் விடுங்க. இன்னாரைக் கட்டியிருக்கலாமுன்னு யாரையாவது நினைச் சீங்களா?”

“காலேஜில் என்னையே ஒருவன் சுற்றிச் சுற்றி வந்தான். ஆனால், நான் லட்சியம் பண்ணலே!”

“உங்கள் கணவர் ராணுவத்தில் சேர்ந்ததும், காலேஜ் பையனைக் கட்டியிருக்கலாமே போயும் போயும் இரக்கமில்லாத ஒருவரைக் கட்டினோமே’ன்னு வருத்தப்பட்டீங்க இல்லையா?”

விமலா மெளனமாகத் தலை குனிந்தாள். டாக்டர் விமலா வின் நிலைமையை உணர்ந்து பேச்சைத் தொடர்ந்தார்:

“சும்மா சொல்லுங்க.”

“அந்தப் பையனை மனத்தில் நினைத்தது உண்மைதான். ஆனால், நளினா பிறந்த பிறகு அவனைப் பற்றிய சிந்தனை அடிக்கடி வரலே. இப்போ என் லட்சியம் எல்லாம் என் மகள் நல்ல நிலையில் வாழனும் என்பதுதான். ஆனால், அவளும் மனக் கோளாறு உள்ளவளாய் இருக்கிறாள்.”

“கோளாறு உங்ககிட்டதான் இருக்கு குழந்தை சாதாரணமாய்த்தான் இருக்கிறாள்.”

“ஸார்?”

“எஸ் மேடம். கணவர் மேலே உங்க மனத்தின் அடித்தளத்திலே இருந்த கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாகி, தங்கிட்டு, நளினாவைப் பார்க்கும் போதெல்லாம் மனைவியை அநாதையாய் விட்டுட்டுப் போனவருடைய மகள் தானேன்னு உங்களை அறியாமலே, வெறுக்கிறீங்க. இந்த வெறுப்பை, உங்கள் வெளி மனமும் இயல்பான தாய்மையும் அங்கீகரிக்கத் தயாராய் இல்லே. அதனால் அடிமனத்தில் குழந்தையைத் திருத்தணுங்கற பாசாங்கு உணர்வாக வெளிவருது. இது நின்றால் நளினா சீராக வளர முடியும்.”

“அப்படின்னா நான் குழந்தையை வெறுக்கிறேன் என்கிறீர்களா?”

“நிச்சயமாக, ஆனால் வேணுமுன்னு வெறுக்கலே, அடி மன உணர்வ. சந்தர்ப்பக் கோளாறால் வந்துட்டுது இதனால், எந்தச் சராசரி சின்னப் பொண்ணும் செய்யக்கூடிய காரியங்களை நளினா செய்ததும் உங்க வெறுப்பு குற்றம் கண்டு பிடிக்கும் போலீசாகவும், அவற்றைத் தண்டிக்கும் நீதிபதியாகவும் போலி உருவங்களோடு வெளி வருகிறது.”

விமலா கையைப் பிசைந்தாள்.

“வருத்தப்படாதீங்க. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எந்தப் பொண்ணும் உங்களை மாதிரியே நடந்துக்குவாள். ஆனால், ஒன்று. உங்கள் கணவர், தம் சுயமரியாதையைவிட, ‘உங்க சுயமரியாதையைப் பெரிசா நினைத்திருக்காரு பெற்றோர்கள் உங்களை இன்சல்ட்’ செய்தவுடன், அவர் தாம் உழைக்கிற பணத்தில்தான் நீங்க சாப்பிடணுமுன்னு ஆசைப்பட்டிருக்காரு. சுகபோகமாய் வாழ்ந்த அவர், ராணுவத்தில் சேரக் காரணமே அவர் உங்கள் மீது வைத்திருந்த அன்புதான்”

“இப்போ புரியுது ஸார். நான்தான் புரிஞ்சுக்காத பாவியாய் இருந்திட்டேன் “

“கழிவிரக்கம் தேவையில்லை. அந்த உணர்வே வேண்டாம். அபாயமானது இந்த மாதிரி அசாதாரண நிலைமை வருவது சகஜந்தான் உங்கள் கணவர், உங்களுக்காகவே உயிர் விட்டதை நினைச்சுப் பாருங்க! உங்களிடம் எப்படியெல்லாம் அன்பைக் கொட்டி நடந்து கொண்டார் என்பதைச் சிந்தியுங்கள் துங்கப் போகும் போதெல்லாம் என் கணவர் என் மீது வைத்திருந்த பாசத்தாலேயே ராணுவத்தில் சேர்ந்தார் என்று திரும்பத் திரும்ப மனத்தில் சொல்லிக் கொள்ளுங்கள் இந்தச் சுயசிந்தனை அடி மனத்தில் இருக்கிற வெறுப்பை நீக்கிடும் அப்படியும் உங்க பெர்ண்ணு திருந்தாவிட்டால் என்னிடம் வாங்க மெஸ்மெரிக் டிரீட்மெண்ட் கொடுக்கிறேன் அந்த வசீகரமான முறை மருத்துவத்தில் குழந்தை திருந்திடுவாள் “

“மிக்க நன்றி லார் “

“குழந்தை திருந்திடுவாள்” என்ற அந்த இளைஞன் தனது குறையை நாகுக்காகச் சொன்னவிதம், விமலாவைப் பெரிதும் கவர்ந்தது. லேசாகச் சிரித்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

விமலா மீண்டும் சைக்கியாட்ரிஸ்ட்டிடம் வரவுமில்லை இப்போது நளினா மலங்க மலங்க விழிக்கவும் இல்லை.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *