கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 2,491 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மென் காற்றின் இதம் உடலின் மயிர்க்கால்கள் வழி உட்புகுவது உணர்கிறாள். அந்த நினைவு வரும்போதே, ‘கம்’ மென்று ஒரு குளிர்ச்சி!

முற்றத்தில் நிற்கும் ரோஜாக்களுக்குச் சேகர் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான்.

ம்மா… என்ன மாதிரி ஒரு நெளிவுடன் தண்ணீர் விரைகிறது! இந்த நீர் அவளைப் போலவே, அவசரமாக வேலைக்குப் போகிற மாதிரி, பகிடி விடுவது மாதிரி, சிரிப்பது மாதிரி, வெட்கப்பட்டுத் தயங்குவது மாதிரி… என்ன அழகு !

இந்த ரோஜாச் செடிகள் இலைகளும், முட்களும், தண்டுகளும், கிளைகளும், வேர்களும் நிரம்பி எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் யார் அதைக் கவனிக்கிறார்கள்?

ஆனால், அதன் மேல் ஒரு மொட்டுப் பிடித்து, மொட்டு வளர்ந்து, ஒரு பூ விரிந்தால்….. அன்றைக்கு முழுதும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

எட்டு வருடங்களாக இவளும் தன்மேல் அப்படி ஒரு பூப் பூக்கும் என்று ஏங்கி….

எட்டு வருடங்கள் கீழிறங்கி நின்று பார்க்கும் போது தெரியும் கவிதை !

‘என்னைப் பாரேன்’ என்று சுண்டி யிழுக்கிற சேகரின் ஆண்மை , வாள் வீச்சு மாதிரித் தண் தண்’ னென்று பிசிறின்றி வந்து விழுகின்ற அவனுடைய பேச்சு , மனதெல்லாம் சாரலடித்த மாதிரி ஒரு நாள் அவர்களது கல்யாணம், அவள் நன்றாகவே வியர்த்திருந்த முதலிரவு எல்லாமே ஒவ்வொரு கவிதை போல ……..!

ஆனால் அதன் பின் எட்டு வருடமாய் …

ஒவ்வொரு மாதமும் அவள் பூப்பதற்கு எதிர்பார்ப்பாள். மாத முடிவில் அவளது கருப்பை குருதி வடித்து அழுது ஓயும்.

அவளுக்கும் அவளது கருப்பைக்கும் நடக்கும் நிழல் யுத்தத்தில் அவள் எப்போது வெற்றி பெறப் போகிறாள்?

காத்திருத்தல் என்பது அது எதற்காக இருந்தாலும்… மிகவும் அவஸ்தை தருவது!

திடீரென ஒரு தோட்டம் போல் கொத்துக் கொத்தாய்ப் புஷ்பிக்க முடிந்தால் .. கொத்துக் கொத்தாய் வேண்டாம்… ஒரு பூப் பூக்க முடிந்தால் … எவ்வளவு நன்றாய் இருக்கும்?

மாலை நேரங்களில், சேகர் வெளியே நண்பர்களுடன் பேசிப் பொழுது போக்கப் போய்விடுகின்ற பொழுதுகளில் இப்படியே கிணற்றடிக் கல்லில் அமர்ந்து கனகாம்பரப் பூக்களுடன் பேசுவது எத்தனை நாளைக்கு அமைதி தரும்?

இந்த நேரத்தில் அவள் அருகில் பிஞ்சுப் பாதங்கள் மெல்ல நிலத்தில் பதிய விழுந்து எழுந்து ஓடி வரும் மழலை ஒன்று இருந்தால் …..?

‘ஓ….’ என்றொரு கும்மாளக் கூத்துடன் நெஞ்சு பொங்கி வழியாதா?

அம்மாவும் இப்படிப் பதினேழு நீண்ட வருடங்கள் ‘காத்திருத்தல்’ செய்தாளாம். இறுதியில் இவளைப் பெற்று வெற்றி பெற்றாள்.

அம்மா திருமணம் செய்யும் போது அவளுக்குப் பதினேழு வயது! பதினேழு வடங்கள் ‘இறை வணக்கமும் நம்பிக்கையுமே துணை’ எனக் காத்திருந்த பின் முப்பத்து நாலு வயதில் பூத்தாள். அப்போது கூட உயிர் பிழைத்தது அதிசயம் எனும் வகையில் ‘சிசேரியன்’ தந்த வெற்றி!

இவள் படித்து, உத்தியோகமாகிக் காதலித்துக் கஷ்டப்பட்டுக் கலியாணம் ஆகும் போதே இருபத்தெட்டு . அம்மாவைப் போல் பதினெட்டு வருடம் காத்திருக்க நாற்பத்தைந்து ! பிறகென்ன ? மென போஸ்’ காலம் வந்து விடும். மயிர் நரைத்த பின் வாழ்வு பச்சையாகுமா?

இம்முறை இவள் தெரிவு செய்த கலண்டரில் கூட ஒரு மழலைப்பையன் சுட்டு விரல் நீட்டிச் சிரிக்கிறான். சிவப்பு, வெள்ளைக் கோடுகள் கொண்ட அந்த ‘ரி சேட் அவனது சுருட்டத்தலை படத்தின் பின்னணியில் தெரியும் நீலவானம், தென்னங் கீற்றுகள், சிட்டுக் குருவி எல்லாமே இவளுக்குப் போதை ஊட்டினால்……

இடையிடையே ஒருவரும் பார்க்காத சந்தர்ப்பங்களில் இவள் அந்தக் கலண்டரைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்வதுண்டு. யாரும் கண்டால் பைத்தியம் என்று மந்திகைக்குத் தான் அனுப்புவார்கள் !

முற்றத்தில் இறங்கி நடந்தாலும் வெறும் பாதத்தில் குறுணி மண் வேதனையைக் கிளறும்.

அலை காற்றும் கூட ஜீவனைச் சுடுவதாய் உணர்ந்த பிறகு, ஒரு நாள் இவளும் சேகரும் ‘கைன கோலோஜிஸ்ற்’ றிடம் சென்றனர்.

“ப்பமிலி பிளானிங் ஆலோசனை கேக்க வாறவையை விடப் பிள்ளை இல்லை எண்டு வாறவையின்ரை தொகை கூடிட்டுது இப்ப…” வைத்திய நிபுணர் சிரித்தார்.

“ரென்சன் தான் காரணம். வாழ்வை அனுபவிக்கத் தெரியேல்லை எங்களுக்கு – அல்லது முடியேல்லை எங்களாலை…. வாழ்க்கைக்குத் தேவையான வசதியள் எல்லாத்தையும் விஞ்ஞானம் எங்களுக்குச் செய்து தந்திருக்கு. ஆனால் வீடோன் ஹாவ்ரைம்…’ எங்களுக்கு நேரமில்லை. ‘வீ ஆர் ஒல்வேய்ஸ் ரயாட்’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வந்ததை நிறுத்தி, வழமையான சில கேள்விகளைக் கேட்டார்.

பெயர், வயது, தொழில், திருமணமாகி எவ்வளவு காலம் பீரியட்ஸ் ஒழுங்காக வருமா என்று…..

பிறகு சில சோதனைகள்……

சில வாரங்கள் கழித்து எல்லாச் சோதனைகளும் முற்றாக முடிந்த பின் அவர் சொன்னார்,

“நான் முதலே ஊகிச்சன் , உங்கள் இரண்டு பேரிலையும் உடல் ரீதியாக ஒரு குறையும் இல்லை . யூ ஆர் பெர்ஃபெக்ட்லி ஓல் றைற் …… பிள்ளை இல்லை எண்ட கவலை, ரென்சன் இதுகள் மனதிலை இருக்கப்பிடாது . ரிலாக்ஸ்… கடவுளைக் கும்பிடுங்கோ …. நம்பிக்கையோடை இருங்கோ ….. இதுதான் நான் சொல்லலாம்… ‘ரெஸ்ற் ரியூப் பேபி’ உருவாக்கித்தாற காலம் இது. இங்கை இன்னும் வரேல்லை. நான் வேறை என்ன செய்யலாம்?”

இவள் விரதம் பிடித்தாள். ஆசனங்கள் செய்து பழகினாள். நிலாக் சேஷன் எக்ஸசைர்சஸ் செய்தாள், சேகருடன் சண்டை போட்டு அவனைக் கொண்டும் சிலவற்றைச் செய்வித்தாள்.

நிலவு பொழியும் துளியில் ஒவ்வொரு இரவும் அமிழும் அந்திப் பொழுதில் வீட்டில் நின்ற கறுப்பு மறி ஆட்டுக்குட்டி இவள் மடியில் ஏறிப் படுத்து உறங்கும்.

“குட்டீ….. “மே….” “உனக்கு முருக்கங் குழை வேணு மோடீ?” “மே…..”

“முருக்கங் குழை வேண்டாமே அப்ப என்ன வேணும்? முசுட்டை வேணுமே?”

”..மே…”

“இப்ப யாழ்ப்பாணத்திலை, சாப்பாடே கிடையாத நேரத்திலை உனக்கு முசுட்டை வேணுனே? அது கிடந்தால் நாங்கள் சொதி வைக்கலாம், வறை வறுக்கலாம் போடி …. உனக்கு முசுட்டை இல்லை …..”

“மே ….”

புதினம் பார்க்கும் மேகத் தலைகள் தம்முட் குழம்பித் தவித்துத் திரியும்…

குளிர்ந்து இருண்ட பகற்பொழுதுகள் அடுக்கடுக்காய் நின்ற பல மாரிகளுக்குப் பிறகு மாலையில் மேற்கு வானில் ஒரு நட்சத்திரம் மினுங்கியது.

பக்கத்து வீட்டுப் பாப்பா மான் விழியைத் தூக்கிக் காற்றில் எறிந்து ஏந்தினாள் இவள்.

“அன்ர்… என்னை விடுங்கோ ….”

சென்ற மாதம் இருபத்தாறாம் திகதி சனிக்கிழமை…

சனியோடு சனி எட்டு, மூன்று சனி இருபத்திரண்டு, நாலு சனி இருபத்தொன்பது, ஞாயிறு முப்பது, இன்றைக்குத் திங்கள் சோமவாரம்… முப்பத் தொரு நாள் ..

இருபத்தாறு நாள் எங்கே என்று பார்த்துத் தவறாமல் வருவது …. இம்முறை….

‘ஓ….’ மலர் ஒன்று விரிந்தது ரோஜாவில்!

“இஞ்சாருங்கோ ….. இண்டைக்குச் சோமவாரம்… ஒருக்காச் சிவன் கோயிலுக்குப் போட்டு வருவமோ?”

“என்ன? என்ன விசேஷம் இண்டைக்கு ….. வேலையாலை வந்தால் களைப்பாய் இருக்கெண்டு படுக்கிறனீர்…. இண்டைக்குக் கோயிலுக்கு வெளிக்கிடுறீர்…”

இவள் சேகரை நெருங்கி வந்தாள்.

“இந்த முறை நாலைஞ்சு நாள் தள்ளிப் போட்டுது. ஒருக்கால் போய்க் கடவுளைக் கும்பிடுவம்…….”

சேகர் சிறிதாய்ச் சிரித்தான். மலர்ந்த சிரிப்பு!

கோயிலுக்கு நடந்து போனார்கள்.

“என்னாலை உங்கடை சைக்கிளிலை இருக்கேலாது… நீங்கள் குலுக்கி எடுத்துப் போடுவியள் ….” காலுக்கு மேல் கால் வைத்து மெல்ல நடந்து போனாள்.

“கவனம் பிள்ளை தேகம் நோகத் தக்கதாய் ஒரு வேலையும் செய்யாதை இடிக்கிறது, அரைக்கிறது ஒண்டும் செய்ய வேண்டாம்..” அம்மாவின் அறிவுறுத்தல் மனதில் அடிக்கடி ஒலித்தது.

“நாப்பது நாள் முடிய டொக்டரிட்டைக் காட்டுவம்.. என்ன?” சேகர் நம்பிக்கையோடிருந்தான்.

மாமி இவளைக் கண்ட போதெல்லாம் வெட்டவெளியை வழித்து நெட்டி முறித்தாள்.

அடி வயிற்றில் ஏதோ பிராண்டுவது மாதிரி ஓர் உணர்வு. மெதுவாக வயிற்றைப் புரட்டுவது போல!

‘மோர்னிங் சிக்னெஸ்’ அறிகுறிகள் இவ்வளவு விரைவாகவே தோன்றி விடுமா? அப்படியானால், காலை நேரத்தில் அல்லவா அவை தோன்ற வேண்டும்?

அடுத்த வாரமும் கோயிலுக்குப் போய் வந்து சிறிது சாப்பிட்டாள். வயிறு ‘உம்’ மென்று ஊதி உப்பினாற் போல் இருந்தது. ஏன் அவளால் வழமை போல நிறையச் சாப்பிட முடியவில்லை ?

கருப்பையும், இரைப்பையும் வேறு வேறு அல்லவா? கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

வயிறு மிகச் சிறிதளவு பெருத்திருக்குமாறு.. உணர்ந்தாள். முகத்தில் ஒரு மினு மினு மினுப்பு!

வெள்ளரிப் பழத்தைப் பிளந்து வைத்த மாதிரி ஒரு நிறமும் குளுமையும்!

பிளவுஸ்’ எல்லாம் இனி அவிழ்த்துத் தைக்க வேண்டும் அண்டர் ஸ்கேட்டும் புதிதாக வாங்க வேண்டிவரும். ‘பிரா’ அட்ஜஸ்ட் பண்ணலாம்.

அன்றும் வழமைபோல் விடிந்தது. ஒவ்வொரு நாளும் நகரும் போது ஒரு புதுவித மகிழ்வு!

இரு நூற்றெண்பது நாளில் நாற்பத்தைந்து நாள் போனால், இன்னும் இருநூற்று முப்பத்தைந்து நாள் இருக்கு. அம்மாடி!

“என்னப்பா இண்டைக்கு ரீ இல்லையே?”

“இண்டைக்கு என்னாலை எழும்பேலாது. நீங்கள் தான் அடுப்பை மூட்டிச் சுடுதண்ணிவையுங்கோ … தலையைச் சுத்தது ….”

சேகர் வழமையான சிரிப்புடன் விறகை வைத்து அடுப்பை மூட்டினான். அவன் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு ஒரு நாளும் இல்லாமல் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளித்தாள் இவள்.

“மெய்யேங்கோ ….. எங்கயும் குங்குமப்பூ வாங்கலாமோ?”

“பிள்ளை.. குங்குமப்பூ பத்தாம் மாதத்திலை தான் சாப்பிடுறது. இப்ப தொடக்கம் வாங்கக் கட்டுமே பிள்ளை….”

கிணற்றடியில் முகம் கழுவி வந்த அம்மா, விபூதி பூசிய அரைவாசியிலேயே மகளுக்குப் பதில் சொன்னாள்.

மனதில் ஒரு சந்தோஷம்… குளிர் காற்று அடித்த மாதிரி வேகமாய் ஒரு கணம் வந்து மோதிவிட்டுப் போனது.

கலண்டர்த் தம்பியைப் பார்த்துச் சிரித்தாள் இவள்.

‘நான் உண்மையாகவே நீ போட்டிருக்கிற மாதிரி ஒரு ‘ரி சேட் வாங்கப் போறான்….. ஓ….. பார்…’

ஓடி வந்து துள்ளிய ஆட்டுக்குட்டியிடம் சொன்னாள், “உன்ரை சின்னச் சின்னக் கறுப்பு மயிர், என்ரை மடியிலை இனி விழப்பிடாது.. மே… தள்ளி நில் …”

திடீரென்று ஒரு… “என்னப்பா?”

காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.

“பொம்மர் வாறான் …. பொறும் பாப்பம் எங்கை போறான் எண்டு …..”

பக்கென்று வயிற்றில் ஒரு பயம் பந்தாய்ச் சுழன்றது. “ஐயோ… டைவ் பண்றான்… நீர் ஓடும்… கோயில் பக்கம் ஓடும்…”

சொல்லிக் கொண்டே சேகர் மேற்கு நோக்கி ஓடினான். இவளும் ஓடினாள். ஓடும்போது ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். ஏதோ ஒன்று கறுப்பாய், சிறு புள்ளியாய், இவர்களின் வீட்டுக்கு மேலே இறங்கி வந்து கொண்டிருந்தது.

“ஐயையோ…. போட்டிட்டான் …” வயிறு நிரப்பி வந்த விமானம் கறுப்பு முட்டை ஒன்றைப் பிரசவித்து விட்டது.

இன்னும் வேகமாய் …… முடிந்தளவு வேகமாய் ஓடினாள். எழுபத்தைந்து மீற்றர் ஓடியிருப்பாள்.

கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சம். காது உடையும் சத்தம்… இதயம் நின்றுவிட்டது போன்ற உணர்வு. சுற்றிவர இருந்த நாற்பது ஐம்பது வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் சலங்கை என அதிர்ந்து வெடித்தன.

பொம்மர் பொழிந்த பின் போய்விட்டது. வீட்டின் முன்புறம் சேத மடைந்து கிடந்தது. முன் விறாந்தைச் சீலிங்கில்’ வேட்டை வாளி கட்டியிருந்த கூட்டை முற்றாய்க் காணவில்லை. பக்கத்து வீட்டு மலர்விழியின் வீடு முற்றாகச் சேதம்.

நெஞ்சு அடைக்க , துயரம் அதை உடைத்துக் கண்களில் நீராய் நிறைய , இவளுக்கு பாத்ரூம் போக வேண்டும் போல இருந்தது. போனாள், திரும்பி வந்தாள்!

“அம்மா! எனக்குச் சுகமில்லைமல் வந்திட்டுது…”

“என்ன ?”

சேகரிடம் ஒரு அதிர்வு தெரிந்தது. விரக்தி, ஏமாற்றம், இழப்பு அல்லது சோகம்! இவற்றுள் ஒன்று அல்லது இவை எல்லாம் கலந்த ஒன்று!

ஒரு நினைவு முகம் வெளியில் சிரித்தது போன்ற …. கொழுத்திக் கொண்டிருக்கும் வெயில்!

தகித்துக் கொண்டிருக்கும் மனம் ! தகித்துக் கொண்டிருக்கும் வெயில் கொழுத்திக் கொண்டிருக்கும் மனம்! கொழுத்தி … தகித்து …. தகித்து … கொழுத்தி …. கொழுத்தி…. கொழுத்தி….. ஓ! எரிக்க வேண்டும்… எரிக்க வேண்டும் எல்லாரையும் !

– மல்லிகை – மார்கழி ’91

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *