கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 7,651 
 

மாடு கத்தும் சத்தம் அவருக்குக் கேட்டது. அது சாதாரண கத்தல்ல. அவலக்குரல்.

அது மாட்டின் கதறலா அல்லது பிரமையா என அஸீஸ் டொக்டருக்குக் குழப்பமாயிருந்தது. மோட்டார் சைக்கிளை அந்த இடத்தை நோக்கி இன்னும் விரைவுபடுத்தினார். முஸ்தபா சொன்ன தகவல்கள் அவரை உந்தித தள்ளியது.

‘நல்லதொரு பசுமாடு. இறைச்சிக்கு வித்திட்டாங்க!”

தனது அன்றாடக் கடமைகள் முடிந்து வீடு திரும்புவதற்கு அஸீஸ் டொக்டருக்குப் பொழுது பட்டுவிடும். ஊர் மக்களால் டொக்டர் என அழைக்கப்பட்டாலும் மருத்துவத்துறையை கற்றுத் தேர்ந்த பட்டம் பெற்ற டாக்டரல்ல. மிருக வைத்தியமும் விவசாயக் கல்வியும் பயின்றவர். விவசாய அபிவிருத்தி அதிகாரியாகக் கடமையாற்றுகிறார். கடமையுணர்வு என்பதற்கு மேலாக மனப்பூர்வமான ஈடுபாட்டுடன் குடிமனைகளுக்குச் சென்று அவர்களது கால்நடைகளைக் கவனிப்பார். அவற்றுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவார். கால்நடைகளை வளர்த்துப் பயன் பெறுவதற்கு ஊர் மக்களை ஊக்கப்படுத்துவார். அதனால் அவருக்கு ஊர் மக்களால் இயல்பாகவே டொக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

எலுவன்குளம் பக்கத்தில் சில அலுவல்களை முடித்துவிட்டு அவசர வேகத்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். மைமல் பொழுது. புத்தளத்துக்கு விரைவாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று மனது சொல்லிக்கொண்டிருந்தது. ‘இன்றைக்காவது கொஞ்சம் நேரத்தோட வந்திடுங்க!’ என மனைவி கூறியிருந்தாள். ‘இரண்டு நாட்களாக இருமலும் உடற்சோர்வுமாக இருக்கிறது. டொக்டரிட்டைக் காட்டி மருந்து எடுக்கவேண்டும்..’ எனக் கூறியிருந்தாள். அதை நினைத்துக்கொண்டு வேகமாக ஓடினார்.

எட்டாம் கட்டையடியில் வந்தபோது யாரோ கையைக் காட்டி மறிப்பது தெரிந்தது. மோட்டார் சைக்கிளின் லைட்டை அவர் முகத்தில் திருப்பிப் பார்த்தார். முஸ்தபா கைகளைக் காட்டி மறித்துக்கொண்டு நின்றார்.

‘என்ன முஸ்தபா?”

‘டொக்டர்! உங்களைத்தான் பாத்திட்டு நிக்கிறன்… ஒரு நல்ல பசுமாடு. யேசி! பத்துப் பதினைஞ்சு லிட்டர் பால் கறக்கக் கூடியது. அதை இறைச்சிக்கு வித்திட்டாங்க!”

அவ்வளவுதான். அஸீஸ் டொக்டருக்கு மற்ற அலுவல்கள் எல்லாம் மறந்து போனது. மனைவியின் சுகயீனம்.. டொக்டரிடம் மருந்து எடுக்கப் போகவேண்டும் என அவள் கூறியிருந்தது எல்லாம் பெரிய வி~யமாகத் தெரியவில்லை.

‘எங்க? எங்க முஸ்தபா? யாரிட மாடு?”

‘காலித்திட மாடு. சேரக்குழியில வள்ளத்துக்குக் கொண்டுபோறாங்க.. கல்பிட்டிக்கு ஏத்தப்போறாங்க போல!”

அஸீஸ் டொக்டருக்கு அந்தப் பகுதியிலுள்ள கால்நடைகளின் விவரங்கள் எல்லாம் தெரியும். உறவினர்களையோ, நண்பர்களையோ பார்க்கப் போவதுபோல் முறை வைத்து ஒவ்வொரு வீடாகச் சென்று கால்நடைகளைக் கவனித்து வருவார். வீடுகளுக்குப் போனால் நேரடியாக மாட்டுத்தொழுவத்திற்கே போய்விடுவார். படுத்திருக்கும் மாடுகள் அவரைக் கண்டதும் எழுந்து நிற்கும். அவற்றைத் தடவிக்கொண்டு சுகநலன்களை சோதித்துப் பார்ப்பார். தேவையான ஆலோசனைகளை உரிமையாளருக்கு வழங்குவார். மருந்து மற்றும் விட்டமின் வகைகளை வேண்டிவந்து கொடுப்பார்.

காலித்தின் மாட்டை அஸீஸ் டொக்டருக்கு ஏற்கனவே தெரியும். ஒரே ஒரு ஈற்று மட்டும் ஈன்ற கன்னி மாடு. இடுப்பு பெருத்த மாடு. மடி இறங்கிய நீண்ட முலைக்காம்புகள். நல்ல கறவை மாடு.

‘அவனுக்கென்ன பயித்தியமா…? இந்த மாட்டைப் போய் விக்கிறானா?” ஒரு யூ வளைவெடுத்து மோட்டார் சைக்கிளைத் திருப்பினார். வந்த பாதையில் ஓடினார். ஆள்காட்டிக் குருவிகள் ஓலமிட்டுப் பறந்தன.

சேரக்குழி கடற்கரையை அடைந்தபோது இன்னும் இருட்டியிருந்தது. மோட்டார்சைக்கிள் வெளிச்சத்தை அவர்களது முகத்தில் அடித்தபடி நிறுத்தி இறங்கினார். கடல்காற்று ஓங்கி வீசிக்கொண்டிருந்தது. அது பெரிய சத்தமாக காதுகளை அடைத்தது.

மாட்டை ஒரு வள்ளத்தில் ஏற்றுவதற்குப் பிரயத்தனப்பட்டுக்கொண்டு நின்றார்கள். வள்ளத்துக்குள் ஒருவர் நின்று அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து இழுத்தார். இன்னும் இருவர் பின்பக்கம் நின்று மாட்டின் இடுப்பைப் பிடித்துத் தள்ளினார்கள். அது ஏற மறுத்து காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருந்தது. கழுத்துக் கயிறு இறுக்கியதால் தொண்டை அடைத்துக் கத்தியது. சாணமும் சலமும் ஒன்றடி மன்றடியாகப் போனது. மாடு மரண பயத்தில் ஓலமிடுவதைக் காண அஸீஸ் டொக்டருக்கு இரக்கமாயிருந்தது.

‘கொஞ்சம் நில்லுங்க… பொறுங்க! அத ஏத்தவேண்டாம்!”

மாட்டுக்கு அண்மையாக அஸீஸ் டொக்டர் போனார். அதன் கழுத்தைக் கட்டியணைத்து மறு கையால் அதன் கண்ணீரைத் துடைத்தார். முதுகில் தடவிக்கொடுத்தார். கன்னத்திற் தட்டி ‘பயப்பட வேண்டாம்..’ என உணர்வூட்டினார். மாடு மேனி சிலிர்த்தது. செவிகளை அசைத்து தன்னை ஆசுவாசப்படுத்தியது. முதுகை வளைத்து அலுப்பு முறித்தது. தலையை நிமிர்த்தி இன்னொரு தடைவ அழுதது. அதன் மிரட்சி அஸீஸ் டொக்டரைக் கண்டதும் அடங்கிப்போனது.

இந்த நேரத்தில் அஸீஸ் டொக்டரை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவர்கள் முகங்களில் மிரட்சி ஏற்பட்டிருந்தது. அஸீஸ் டொக்டரிடம் ஏதும் பேச அவர்களுக்குத் துணிவில்லை. உண்மையைச் சொல்வதானால் அவர்மேல் அவர்களுக்கு ஒருவித மதிப்பும் இருந்தது. எனினும் தங்கள் முயற்சி தடைப்பட்டுப்போன ஏமாற்றம் அவர்கள் முகங்களில் தெரிந்தது.

அஸீஸ் டொக்டர் காலித்திடம் கேட்டார்: ‘ஏன் விக்கிறீங்க காலித்து? நல்ல மாடெல்லா?”

‘க~;டம் தொரை! பெருநாளும் வருது… கையில் ஒரு சல்லிக் காசில்லை…”

‘இது நல்ல கறவ மாடு. இறைச்சிக்கு விக்கிறது வீண்தானே?”

‘என்ன செய்யிறது தொரை! எனக்கும் மனமில்லதான். ஆருக்காவது வளர்க்கிறவங்களுக்கு குடுக்கத்தான் நினைச்சன். வில சரிப்படல்ல.”

‘இப்ப என்ன விலைக்கு குடுக்கிறீங்க?”

‘பதினாறாயிரம்!”

‘காலித்து! அந்தக் காசை நான் தாறன். மாட்டை என்னட்ட விட்டிருங்க.”

மாட்டை ஏற்கனவே பணம் கொடுத்து வாங்கியவர் முணுமுணுப்பாகக் கூறினார்:

‘இவ்வளவு தூரம் வந்து மினக்கெட்டிருக்கிறன்.. என்னை சும்மாவா போகச் சொல்றீங்க!”

அஸீஸ் டொக்டர் அவரைச் சமாதானப்படுத்தினார்.

‘பாருங்க! இத கொண்டுபோய் இறைச்சிக்கு வெட்டினா எவ்வளவு லாபம் சம்பாதிப்பீங்க? அதவிட இந்த மாடு உயிரோட இருந்தா எத்தன கன்றுக்குட்டிகளை ஈனும்? நாளொன்றுக்கு பத்து பதினைந்து லிட்டர் பால் தரக்கூடிய மாடு. இத இப்ப வெட்டுகிறது அநியாயம்!”

அவரது கையில் ஐநூறு ரூபாவை வைத்தார். என் சார்பா இத வைச்சிருங்க… மாட்டை விட்டிருங்க!”

மாடு தப்பிப் பிழைத்துவிட்டது. கயிற்றைத் தளர்த்தினார்கள். ஒரு பக்கமாகக் கொண்டுவந்து கட்டினார்கள்.

அஸீஸ் டொக்டருக்கு ஒரு பசுமாடு வாங்கவேண்டுமென்று ஆசை பலகாலமாகவே இருந்தது. அதை ஒரு கனவு என்று கூடச் சொல்லலாம். வாப்பா இருந்த காலத்தில் வீட்டோடு மாட்டுப்பட்டி இருந்தது. சிறுவனாயிருந்தபோது மாடுகள் தனது வாழ்க்கையின் ஓர் அம்சம்போல் சேர்ந்து வளர்ந்ததெல்லாம் அவரது மனதில் பதிந்திருந்தது. கன்றுக்குட்டிகளுடன் சேர்ந்து துள்ளி விளையாடுவார்கள். மாடுகளைக் குளிப்பாட்ட ஆற்றுக்கோ குளத்துக்கோ கொண்டுபோகும்போது அவரும் சேர்ந்து போய்விடுவார். கன்றுக்குட்டிகளை தண்ணீரில் இழுத்தெடுப்பதே பெரிய விளையாட்டாயிருக்கும். மாடுகள் ஏதோ மிருகங்கள் என்று அவருக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆனால் பிற்காலத்தில் தனது மேற்படிப்புக்காக கண்டிக்குப் போன பிறகு மாடுகளுடனான தொடர்பு குறைந்துவிட்டது. அவரை மிருகவைத்தியம் படிக்கும்படி தூண்டி ஊக்கமளித்தவரும் வாப்பாதான். வாப்பா தன் பிள்ளைகளுக்கு எப்போதும் கூறுவது ஞாபகமிருக்கிறது.

‘உங்களயெல்லாம் வளத்து ஆளாக்கியது நானில்ல. உங்கட உம்மாவும் இல்ல.. இந்த மாடுகள் தான்!” இப்படி மாடுகள் மேல் ஒருவித பாசப்பிணைப்பையே ஊட்டியவர் வாப்பாதான். ‘மிருக வைத்தியம் படிச்சு வந்து, ஊரிலுள்ள வாய் பேசாத சீவன்களுக்கு வாற நோய் நொடிகளுக்கு மருத்துவம் பார்க்கவேணும்… அதுதான் என்ட விருப்பம்!” என வாப்பா கூறுவார்.

ஒரு காலத்தில் என்.சீ.எஸ்.மரிக்கார் என்றால் புத்தளத்தில் மாடுகள் சம்பந்தப்பட்ட வி~யங்களுக்கெல்லாம் பிரசித்தமானவர். அதில் அஸீஸ் டொக்டருக்கு நிறையப் பெருமை உண்டு. கால காலத்தில் தந்தையின் பட்டியிலிருந்து மாடுகளின் தொகையும் குறைந்துவிட்டது. வாப்பாவுக்கும் வயதாகிவிட்டது. அஸீஸ் டொக்டருக்கும் அவற்றை வைத்துப் பராமரிக்கும் நேரவசதி வாய்ப்பில்லை. ஊரினுள் க~;டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாடாகக் கொடுத்துவிட்டார்.

காலங்கள் பல கடந்துவிட்டாலும் பசுமாடொன்று வளர்க்கவேண்டுமென்ற ஆசை அவரை விட்டுப் போகவில்லை. இப்போது காலித்தின் மாட்டை சந்தர்ப்பவசமாக வாங்க நேர்ந்திருக்கிறது. ஓர் ஆர்வமேலீட்டால் மாட்டை வாங்குவதாக ஒப்புக்கொண்டாயிற்று. இனி அதை எங்க கொண்டுபோய் கட்டுவது? அதற்கு சம்மதித்த பணத்தை எங்கிருந்து பிரட்டிக் கொடுப்பது என்றெல்லாம் தலையிடிப் பிரச்சினைகள் அவர் முன் தோன்றின. புத்தளத்தில் நெருக்கமான குடியிருப்புக்களின் இடையிலுள்ள அவரது வீட்டில் ஒரு மாட்டுத்தொழுவம் அமைக்கக்கூடிய வசதி இல்லை. மாசா மாசம் அரசாங்க சம்பளத்தை மட்டும் எடுத்து ஐPவனோபாயத்தை நகர்த்திச் செல்வதே மந்திர ஐhலவித்தை போலிருக்கையில் ஒரு மாடு வாங்குமளவிற்குச் சுளையாகக் கையிற் பணமேது?

மாடு இன்னொருமுறை குரல் கொடுத்து அவரது கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தது.

காலித்திடம் முற்பணமாக ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார் அஸீஸ் டொக்டர். அடுத்தநாள் மிகுதிப்பணத்தைத் தந்துவிட்டு மாட்டை எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.

மோட்டார் சைக்கிளை உதைத்து வீடு நோக்கிப் போகும்போதே தலையிடிப் பிரச்சினைகளுக்கு ஓர் தீர்மானத்தை எடுத்தார். மோட்டார்சைக்கிளின் வேகத்தை விடவும் மிக வேகமாக வேலை செய்த அவரது மனசு அந்த முடிவை எடுத்தது. மனைவியின் நகையை ஈடுவைத்து மாட்டுக்குரிய பணத்தைக் கொடுக்கலாம். மாட்டை எலுவன்குளம் பியதாசவிடம் கொடுத்து விடலாம்.

பியதாச இரண்டு ஏக்கர் குடியேற்றத்திட்டத்தின் கீழ் களுத்துறைப் பக்கமிருந்து வந்து குடியேறியவன். கூலி வேலைகளுக்குப் போய் வருபவன். அப்படிப் பல தோட்டங்களில் வேலை செய்த வகையில் அஸீஸ் டொக்டருடன் நீண்ட நாள் பழக்கமுடையவன். ஐந்து பிள்ளைகள். பிள்ளைகளுக்கு அன்றாடம் சாப்பாடு குடுப்பதற்கே க~;டமாயிருப்பதாக அடிக்கடி கவலையுடன் கூறுவான். மாட்டை அவனிடம் கொடுத்துவிடலாம். அவனுக்கும் உதவி செய்ததாயிருக்கும். வாப்பா முன்னர் செய்வதுபோல ஒரு கன்றுக்குட்டி மாட்டை வளர்ப்பவனுக்கு.. அடுத்த ஈற்று எனக்கு. அதற்குள் ஒரு சிறிய இடத்தை வாங்கி மாட்டுத்தொழுவமும் போட்டுவிடலாம். இப்படியொரு தீர்மானமெடுத்ததும் அஸீஸ் டொக்டரின் மனசு குதூகலித்தது. மோட்டார் சைக்கிளை இன்னும் வேகமாக ஓடவேண்டும் போலிருந்தது.

‘பியதாச… இந்தா பாருங்க… இதோட உங்கட க~;டமெல்லாம் போயிட்டுது என்று நினைச்சுக் கொள்ளுங்க… உங்களுக்குப் பின்னால இப்ப ஒரு சக்தி வந்திருக்கு என்று நினைச்சுக்கொள்ளுங்க.. அதுதான் இந்த மாடு! இது மாடு இல்ல.. ஒரு தொழிற்சாலை. சரியாகப் பராமரிச்சா நாளொன்றுக்கு பதினைஞ்சு லிட்டர் பால் தரும். வரு~த்துக்கு ஒரு குட்டி ஈனும். ஒரு முறை ஈன்ற கன்றுக்குட்டி எனக்கு மற்றது உங்களுக்கு..”

பியதாச பௌத்த முறைப்படி தலைகுனிந்து அஸீஸ் டொக்டருக்கு வணக்கம் தெரிவித்தான். ‘நீங்க எங்கட தெவியோ” எனக் கூறினான்.

‘பியதாச.. நீங்கள் பிற தேசத்தில் இருந்து இங்க வந்திருக்கிறீங்க.. எங்கட இடத்துக்கு வந்து எந்த மக்களும் க~;டப்படக்கூடாது. அதுதான் என்ட விருப்பம்.” பியதாசவிடம் மாட்டைக் கையளித்தபோது கூறிய விடயத்தை அஸீஸ் டொக்டர் இப்போது நினைத்துப் பார்த்தார்.

0

அஸீஸ் டொக்டர் இப்போதும் அதே இடத்திற்தான் நின்றார்;. ஏழெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. மாடு ஆறு கன்றுகள் வரை ஈன்று கொடுத்திருக்கிறது. இப்போது ஏழாவது ஒரு மாதக் குட்டியாக நிற்கிறது. பியதாசவின் குடும்பம் தலைநிமிர்ந்து விட்டது. இன்னும் இரண்டு ஏக்கர் காணி வேண்டி, தன் நிலத்தோடு சேர்த்திருக்கிறான் பியதாச. மூத்த மகள் மணமுடித்துப் போய்விட்டாள். மகன் வேலை செய்கிறான். ஆனால் அவர்களுடைய நிலையை உயர்த்திய மாடு இப்போது சோபை இழந்து நிற்கிறது. விலா ஒடுங்கிக் குழி விழுந்திருக்கிறது. பால் கொடுத்த முலைக் காம்புகள் சூம்பிப்போயிருக்கின்றன. கன்றுக்குட்டி முட்டி முட்டிச் சூப்பிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் விலகிப் போகிறது. உரிய கவனிப்பு எடுத்தால் மாடு நிச்சயம் தேறிவிடும். காணி முழுவதும் நடந்துதிரிந்து மேய்ந்த மாடு.. இப்போது கட்டில் போடப்பட்டிருக்கிறது. பியதாசவிடம் அஸீஸ் டொக்டர் பலமுறை முறையிட்டுவிட்டார். அவனுக்கு ஏதும் காதில் ஏறுவதாயில்லை. மாட்டை மேய்ச்சலுக்கு விட்டால் பயிர் பச்சைகளைத் தின்று தீர்க்கிறது என்கிறான். வேறு தோட்டங்களிலாவது கொண்டுபோய் மேய்ச்சலுக்கு விட்டுக்கொண்டு வரலாமே என்று சொன்னால், ‘அதற்கெல்லாம் யாருக்கு நேரமிருக்கு?’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறான். இப்போதெல்லாம் அஸீஸ் டொக்டர் வரும்போதெல்லாம் அவன் வீட்டை விட்டு மறைந்துபோய் விடுகிறான்.

முறைப்படி பார்த்தால் இதுவரை மூன்று கன்றுக் குட்டிகளாவது அஸீஸ் டொக்டருக்குக் கிடைத்திருக்கவேண்டும். எழுதப்படாத ஒப்பந்தம். பியதாசவுக்கு அதை மதித்து நடக்கும் நேர்மை இல்லாமற் போய்விட்டது.

மாடு வரும்.. கன்றுக்குட்டி வரும் என்ற கனவுகளோடு அஸீஸ் டொக்டர் கரத்தீவில் சுமாரான விலைக்கு வந்த நாலு ஏக்கர் கஐ_ தோட்டத்தையும் இக்காலகட்டத்தில் வாங்கியிருந்தார். அங்கு மாட்டுத் தொழுவத்தையும் அமைத்திருந்தார். கன்றுக்குட்டியை தாயுடன் வரளவிட்டு உரிய காலம் வந்ததும் அதைக் கொண்டுபோகும் நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் வந்தால், பியதாச அவற்றை விற்றுவிட்டிருப்பான். ‘கன்றுக்குட்டி காணாமற் போய்விட்டது.. பாம்பு கடித்துச் செத்து விட்டது..’ என ஒவ்வொரு முறையும் ஏதாவது பொய்க் காரணங்களைக் கூறுவான். அஸீஸ் டொக்டர் எதுவும் பேசமாட்டார். ‘க~;டப்பட்டவன்.. எப்படியாவது நல்லாயிருக்கட்டும்..’ என எண்ணிக்கொள்வார். இந்த ஏழாவது குட்டியாவது தனக்குக் கிடைக்குமோ என்னவோ?

கன்றுக்குட்டியுடன் விளையாடிக்கொண்டு நிற்கும் அஸீஸ் டொக்டருக்கு அண்மையாக பியதாசவின் மனைவி வந்தாள்.

‘மஹத்தயா..” அவள் அவருக்கு ஏதோ கூற விரும்புவது தெரிந்தது.

‘பியதாச செய்யிற வேலைகள் சரியில்ல.. உங்கள நல்லா ஏமாத்தியிட்டான். எங்களுக்கெல்லாம் சரியான கவல. இப்ப இந்த மாட்டயும் விக்கப்போறான்.. அவன் கசிப்பு குடிக்கிற ஆள்.. சொல்லுறது கேட்கமாட்டான்… மஹத்தயா.. இந்த பசுமாட்டை கொண்டு போங்க..!”

அஸீஸ் டொக்டருக்கு அது சரியாகவே பட்டது. இப்படியே விட்டால் அவன் மாட்டைத் தொலைத்தேவிடுவான். அவர்களது குடும்பத்துக்கு ஆதாரமாக இருந்த மாட்டைக் கொண்டு போகவும் சங்கடமாயிருந்தது. ஆயிரம் ரூபாயை எடுத்து பியதாசவின் மனைவியிடம் கொடுத்தார்.

‘நாளைக்கு வந்து மாட்டைக் கொண்டுபோறன்..”

அஸீஸ் டொக்டர் நேராக தனது கஐ_ தோட்டத்துக்குச் சென்றார். தோட்டத்திற் பணிபுரியும் ராஐhவிடம் விபரத்தைக் கூறினார். ‘நாளைக்கு மாடு வரப்போகுது.. நல்ல அழகான கன்றுக்குட்டி.. புல்லு வெட்டிப் போடவேணும்.. தவிடு பிண்ணாக்கு, தண்ணீர் வைப்பதற்கெல்லாம் பாத்திரங்கள் தேவை. எல்லாவற்றையும் ஒழுங்கு செய்யுங்க..!” என அஸீஸ் டொக்டர் மகிழ்ச்சி பிடிபடாமல் நின்றார்;

அடுத்தநாள் ராஐhவையும் அழைத்துக்கொண்டு கைக்கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஒரு லாண்ட் மாஸ்டர் வாகனத்தையும் ஒழுங்கு செய்துகொண்டு பியதாச வீட்டுக்குப் போனார்;. மாடு எலும்பும் தோலுமாக நிற்கிறது. இவ்வளவு துரம் நடத்திக்கொண்டுவர முடியாது.

போனால்.. அங்கு பியதாசவும் இல்லை மாடும் இல்லை.

‘மஹத்தயா…” சொல்ல வந்த வி~யத்தை மெல்லவும் முடியாமல் தயக்கத்துடன் நின்றாள் பியதாசவின் மனைவி.

‘பியதாச… இரவு சண்டை போட்டான். இன்றைக்கு யாரையோ கூட்டிவந்து மாட்டை விற்றுப்போட்டான்” அஸீஸ் டொக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருமுறை மூச்சு அடைத்தது.

கன்றுக்குட்டி ‘அம்மா… அம்மா…’ எனக் கத்திக்கொண்டு நின்றது. அஸீஸ் டொக்டர் அதைக் கையைக் காட்டிக் கேட்டார்.

‘பாவம்…. இது?…. தனிய நிக்குதே?”

‘இறைச்சிக்கு மாட்டை வேண்டியவனுக்கு குட்டி எதுக்கு? வேணாமென்று போயிட்டான்..!” பியதாசவின் மனைவி சற்று சீற்றத்துடன்தான் கூறினாள். அந்தக் கோபம் யார் மேலென்று புரியவில்லை. அஸீஸ் டொக்டர் உறைந்துபோனார்.

ராஜாவைப் பார்த்தக் கூறினார்.

‘இதைத் தூக்கிக்கொண்டு வா!”

கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். அதைத் தோட்டத்தில் விட்டபிறகும் ‘அம்மா… அம்மா..’ எனக் கத்திக்கொண்டே நின்றது. பால்மா எடுத்துவந்து கரைத்து போத்தலில் விட்டு கன்றுக்கு பாலூட்டும் பக்குவத்தையெல்லாம் ராஜாவிடம் விளக்கிக் கூறினார்.

00

ஐந்தாறு நாட்களாக அஸீஸ் டொக்டர் அலையாத அலைச்சல் இல்லை. வேலைநேரம் போக மிகுதி நேரமெல்லாம் தனக்குத் தெரிந்த, அறிந்த இடங்களிலெல்லாம் சென்று விசாரித்தார். பியதாச யாருக்கு மாட்டை விற்றிருப்பான் என்று பார்த்தார். பியதாசவைத் தேடிப்போனால் அவன் தலைமறைவாகியிருந்தான். இடையிடையே தோட்டப்பக்கம் போனால் கன்றுக்குட்டி ‘அம்மா… அம்மா…’ எனக் கதறிக்கொண்டே நின்றது.

வேலைக்கும் லீவு போட்டுவிட்டு அலைந்து திரிந்தார். அறிந்த தெரிந்த இடங்களிலெல்லாம் சென்று விசாரணை செய்தார். அதை இப்போது வெட்டி அதன் கதையையே முடித்திருப்பார்களோ என நெஞ்சு துடிதுடித்தது. இரவு படுத்தால் கனவுகள் வந்தன. மாட்டின் வெட்டப்பட்ட தலை கோரமாகக் கனவில் தெரிந்தது. திடுக்குற்று எழுந்து நித்திரையின்றி குழம்பித் தவித்தார்.

ஓர் ஏழெட்டு நாட்கள் கடந்திருக்கும். கரத்தீவுப் பக்கம் வேறு அலுவலாகப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் களைத்துப் போயிருந்தார். பொழுதுபட்டுக் கொண்டிருந்தமையால் தனது தோட்டத்துக்கும் போக நேரமில்லாதிருந்தது. வீட்டில் வேறு அலுவல் காத்திருந்தது. மோட்டார் சைக்கிளில் ஓடியபடியே தோட்டப்பக்கம் நோட்டம் விட்டவாறு சென்றார்.

சில மாடுகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. ஊர் மாடுகள் மேய்ச்சலுக்கு வருவது வழக்கம். அப்போது அந்த அழைப்புக்குரல் கேட்டது. சைக்கிளை நிறுத்தி உற்றுப் பார்த்தார். தலையை நிமிர்த்தி ரோட்டுப் பக்கம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றது அது.

மாடு மீண்டும் கத்தியது.

சைக்கிளைத் திருப்பிக்கொண்டு தோட்டத்தக்குள் ஓடினார். அதுதான்.. அதே மாடுதான்! கன்றுக்குட்டியைச் சேர்த்துக்கொண்டு நின்றது. அஸீஸ் டொக்டர் கிட்டச் சென்றதும் மாடு உணர்ச்சிவசப்பட்டு மூச்சை அடக்கி அடக்கிக் கத்தியது.

தோட்டப் பணியாள் ராஜா வந்தான். அவனிடம் அஸீஸ் டொக்டர் கேட்டார்:

‘என்ன இது? எப்படி வந்தது?”

‘தெரியாது தொரை…. கன்றுக்குட்டியும் ஓயாமல் கத்திக்கொண்டே நிண்டுது. இருந்தாப்போல பார்த்தால் ஊரைப் பிரட்டியமாதிரி கத்திக்கொண்டு இந்த மாடு ஓடி வருது. அது வந்த வீச்சைப் பார்த்தால் ஒரு சிங்கம்போல இருந்தது…”

அஸீஸ் டொக்டருக்கு கண்கள் பனித்தன. ‘ராஜா… அது வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கு.. மாட்டை தேடி நாளைக்கோ… மறுநாளோ… அடுத்த கிழமையோ ஆராவது வருவாங்க… குடுக்கவேண்டாம். மாட்டுக்குரிய விலையைக் குடுத்துவிடலாம். யார் வந்தாலும் என்னைக் கூப்பிடு!”

மாட்டைத் தேடி வருபவர்கள் அதற்கு பதினைந்தோ இருபதோ விலை கூறலாம். அதை எப்படியாவது தேடியாகவேண்டும் என்ற எண்ணத்துடன் மோட்டார் சைக்கிளைப் பார்த்தார் அஸீஸ் டொக்டர்.

(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது – 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *