ஆமினாவின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட எட்டு சிறிய குறிப்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 1,656 
 

01

டமாரென அலுமீனியப் பாத்திரம் தரையில் விழுந்து எழுப்பிய சகிக்க முடியாத இரைச்சலால் திடுக்கிட்டு எழுந்த சமீம், ஓசை எழாமல் செல்மாவின் குழந்தைகளைத் திட்ட ஆரம்பித்தான்.

‘அறவாப் போன ஹராங்குட்டிகள். ஒரு கண்ணுக்குத் தூங்க வழியிருக்கா நமக்கு?’

சமீமின் முணுமுணுப்புக் கேட்டு அறைக்குள் வந்த ஆமினா, நிலைமை புரிந்தவளாக அவனின் அருகில் போய் அமர்ந்துகொண்டாள். இரவில் குளிரில் அந்தரத்தில் மிதப்பவர்களுக்கு பகற்தூக்கம் அவசியம் என அவள் அறிவுத்தப்பட்டிருந்தாள். நாற்பதாவது மாடியில் இரண்டு கம்பிகளில் தொங்கிக்கொண்டு, காற்றில் மிதந்துகொண்டேதான் கண்ணாடிப் பாளங்களை பொருத்திக்கொண்டிருக்கிறேன் என அவளிடம் சொல்ல அவன் அழைத்த இரவொன்றில், அவள் லண்டன் குளிர்க்கு இதமாக மூடிய கம்பளிக்கு முதுகைக் காட்டி, தலையணையைக் கட்டிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் அவளைத்  தனியே விட்டுவரும் இரவுகளில் குற்ற உணர்ச்சி மேலிட, அழைப்பெடுத்து அவளது தூக்கங் கெடுப்பவனாக அவன் மாறிப்போயிருந்தான்.

பக்கத்துவீட்டில் இருந்து தூய ஆங்கிலத்தில் செல்மா குழந்தைகளைத் திட்டிக்கொண்டிருந்தது இவர்களுக்குத் தெளிவாகவே கேட்டது.

“அந்தப் பொம்புள என்ன சொல்லறா?”

தூக்கக் கலக்கத்தில் விசாரிப்பது போல அவன் பாசாங்கு செய்தான்.

தீப்பெட்டியை அருகருகே அடுக்கி வைத்தது போல ஒரே நிரலில் அமைந்த எட்டு வீடுகள். செல்மாவிற்கு நான்காவதும் இவர்களுக்கு ஐந்தாவதும். இரண்டு வீடுகளுக்குமிடையில் ஒற்றைச் சுவராலான தடுப்பு.  இரண்டு முயற்குட்டிகள் முத்தமிட்டுக் கொள்வதைப் போல அருகருகே அமைந்த முன்கதவுகள். மாடியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு அறைகளும், தரைத்தளத்தில் சமையலறையும் வரவேற்பறையும். Ickenham ரயில் நிலையத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி மூன்று நிமிடம்  நடந்து, அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இரண்டு நிமிடம் நடந்தால் அந்த வீட்டுத்தொகுதி வந்துவிடும். 80களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட வீடுகள். சத்தத் தடுப்பான், வெப்பத் தடுப்பான் என எந்த நவீன அளவுகோல்களும் வரையறுக்கப்பட முன்னர் கட்டப்பட்ட வீடுகள், பனியில் நனைந்த பருந்துகள் போல நின்றிருந்தன.

உள்ளிருந்து பார்ப்பதற்கு பருவமாற்றத்திற்கு ஏற்ப நிறமாறுகின்றன இந்தச் சுவர்கள் என அவளொருமுறை சமீமிடம் சொன்னாள்.

வந்த முதல்நாளே ஆமினாவிற்கு இந்த வீடு பிடிக்கவில்லை. எலிப்பொந்து போல அறைகளும், சூரிய ஒளியோ, காற்றோ புகாத இடங்களும் அவளில் ஒவ்வாமையை உண்டாக்கிற்று. ஊரில் அரை ஏக்கர் காணியில் மாளிகை போல வீடும் தோட்டமும். லன்டன் மாப்பிள்ளை என காசிம் மௌலவியின் மகனை மணமுடித்துக் கொடுத்தார்கள். ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்த பெண்தான் வேண்டும் என மகன் சொல்ல, காசிம் மௌலவி ஊரெல்லாம் சொல்லி வைத்து சல்லடை போட்டுத் தேடிக் கண்டு பிடித்த பெண் ஆமினா. ஆமினாவின் வாப்பா  கோடைக்காய் போல ஒற்றைப் பிள்ளைக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை தேடி, மகளுக்கு இருபத்தைந்து வயதாகும் வரை இலவு காத்திருந்த காலம். நிறைய இன்ஜினியர்கள் பெண்கேட்டும் வந்தனர் தான், வந்தவரெல்லாம் ‘எத்தனை ஏக்கர் வயல் காணி தருவீங்க?, கொழும்புல எங்க வீடு வாங்கி வச்சிருக்கீங்க?, எத்தன லட்சம் கை காசி தருவீங்க?’ என்று அடிமாட்டுக்கு, விலை பேசுவது போல வியாபாரத்துக்கு வந்தார்களே தவிர, வாழ்க்கை நடத்தும் லட்சணங்களோடு ஒருவன்கூட வராதது பற்றி அவருக்கு இன்னமும் புகார்கள் இருந்தது. அவர் மனதால் சோர்ந்து போய் இருந்தார்.

ஊரில் லன்டன் மாப்பிள்ளைக்கு கிராக்கி இருந்த காலம் அது. ஆமினாவின் உம்மா பிடிவாதமாக இருந்தார். ஆயினும் ‘நல்ல சம்மந்தம்’ என்கிற ஓற்றைக் காரணம் ஆமினாவின் வாப்பாவிற்குப் போதுமாக இருக்கவில்லை. காத்திருப்பு மனிதனை பலஹீனன் ஆக்குகிறது எனச் சோர்ந்து போயிருந்த ஒருபொழுதில் அவர் மனைவியிடம் சொன்னார். காசிம் மௌலவின் மகனைக் கேட்கலாம் என்கிற முடிவிற்கு ஆமினாவின் வாப்பா அரைமனதோடு சம்மதித்தார். மௌலவியின் மகன் ஊரில் தங்கைக்கு கட்டிய வீட்டைப் பார்த்து ‘லன்டன் காசி, எழும்பி நிற்கிறது’ என வியந்து பேசாதவர்கள் யாருமில்லை. அந்த வகையில் ஆமினாவின் வாப்பா தன்னை வலிந்து திருப்திப்படுத்திக் கொண்டார்.

“பாத்திரத்த போட்டு உடைச்சதுக்கு புள்ளயல போட்டுத் திட்டிட்டிருக்கா.”

கணவனுக்கு செல்மாவை மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆமினா.

“போன வாரம்தான் போய்ச் சொன்னீங்கல்ல.”

அது சமீம் செல்மாவிடம் முறையிடப் போன மூன்றாவது முறை. அதைப் பற்றி ஆமினா அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

கடந்த மாதம், முதல் வாரத்தின் செவ்வாய்க்கிழமை, முப்பத்தேழாவது மாடியில், கட்டத்திற்கு வெளியில் அந்தரத்தில் கம்பியில் தொங்குகிற கிராடிலில் நின்று கண்ணாடிப் பாளங்களைப் பொருத்திக்கொண்டிருந்த போது தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. ஒரே களைப்பு. கண்ணை மசக்கிற தூக்கும். பகற் தூக்கம் கெட்டால் இரா முழுதும் கெடுதி. கூட வேலை செய்தவன் மூக்கு வியர்த்தவனைப் போல சமீம் களைப்பா இருக்கான்னு மனேஜரிடம் சொல்லிவைத்தான். அரைமணி நேரக்  குறுக்குவிசாரணை செய்து, விபரங்களை எல்லாம் கேட்டுவிட்டு அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் மனேஜர். அன்றைக்கான ஊதியமும் பாதிதான் கிடைக்கும்.

ரயிலேறி வீடு வந்த கையோடு, செல்மாவின் வீட்டுக் கதவைத் தட்டி கடுமையுடன் முறைப்பாடு சொல்லத்தான் போயிருந்தான். கதவைத் திறந்தவள் பாதி உடையில், கடுகடுத்த முகத்துடன் நின்றிருந்தாள். ‘என்ன?’ என அலட்சியமாகக் கேட்பது போல ஒரு பார்வை. அவளது பருத்த மார்பகங்களும் வெளிறிய தொடையும் அவனை சஞ்சலப்படுத்தின. இவனுக்குச் சொல்ல வேண்டியது மறந்து போய்விட்டது. வாய் குழறியது. ‘குழந்தைகள், சத்தம், தூக்கம்’ என ஒற்றை ஆங்கில வார்த்தைகளாக உதிர்த்து ஏதோ சமாளித்துவிட்டு வந்துவிட்டான். இவன் திரும்புகையில் அவள் கதவைச் அடித்துச் சாத்திய விதத்தில் முதுகில் யாரோ அறைந்தது போல ஒரு பிரம்மை.

“என்ன சொன்னா அந்தப் பொம்புள?”

 செல்மாவிடம் அவமானப்பட்டு திரும்பியவனிடம் அன்று ஆமினா கேட்டாள்.

“தெரிஞ்திட்டு நீ என்ன பண்ணப் போற? போய் வேலையைப் பார்.”

வேலையால் பாதியில் வந்த கோவம், செல்மா கதவைச் சாத்திய கோவம் என எல்லாமும் புது மனைவி மீது வசையாய் இறங்கிட்டு, அன்றுதான் முதன்முதலாக ஆமினாவை கடுஞ்சொல் சொல்லித் திட்டி வைத்தான். அழுதுகொண்டே மூலையில் போய் இருந்த ஆமினாவைப் பார்த்து தன்னை நொந்துகொண்டான். என்ன இருந்தாலும் தான் அப்படி நடந்திருக்கக் கூடாது என்பதை புரிந்துகொண்டான். சமையலறையில் முழங்கால் மடித்து முகம் புதைத்து அழுதவளை வாரி அணைத்துக்கொண்டான். முத்தமிட்டான். அவள் சினுங்கினாள். அந்தப் பகல் மசங்கிய பொழுதில் அவர்கள் உறவு கொண்டார்கள். உடற்சூடு இறங்கிய களைப்பில் மாடப்புறாக்கள் அணைத்துக்கொள்வதைப் போல அணைத்துக் கிடந்தார்கள். செல்மாவின் குழந்தைகள் பக்கத்து வீட்டில் சத்தமாக ஏதோ சொல்லி விளையாடிக் கொண்டிருந்தது அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் புன்னகைத்தான். அல்லாஹ் தங்களுக்கும் ஒரு குழந்தையைத்  தருவான் என ஆமினாவின் காதருகில் மெல்லமாகச் சொன்னான். அவள் வெட்கத்தாலும் காமம் உதிர்த்த களைப்பினாலும் பூரித்துப் பூத்துக்கிடந்தாள்.


02

ஒன்பதாவது படிக்கும் போது ஆமினாவிடம் ஆலப்புழாட அன்வர் தன் காதலைச் சொன்னான். ஆமினா அப்போதுதான் வயதுக்கு வந்திருந்தாள். எட்டாவது படித்துக்கொண்டிருந்தாள். திரளத் தொடங்கி இருந்த அவளது மார்பகங்களில் ஊசியால் குத்துவதைப் போலப்  பார்த்துக்கொண்டே ஆலப்புழாட அன்வர் அவன் காதலைச் சொன்னான். கூசிக் குறுகி நின்றவளின் கண்களை நீர் நிறைத்தது. அவன் பார்த்திருக்க அவள் கண்களில் மடைதிறந்தது. அவன் காதலைச் சொல்லி பெண்கள் யாரும் அழுது அவன் கண்டவனில்லை. இந்த முறையும் ஏச்சும் பேச்சும் வாங்க அவன் தயாராகவே நின்றிருந்தான். அவள் அழுத போது அவன் நிலைதடுமாறிப் போனான். அழுகிற பெண்களைச் சந்திக்கிற திராணி ஆண்களிடம் குறைந்து கொண்டே வருகிறது என்பதை ஆமினா பின்னாளில்தான் அறிந்துகொண்டாள். அவளது அழுகையின் வெம்மை தாங்காது நின்ற இடத்திற்கும் செய்தி சொல்லாது காற்று நகர்ந்து விடுவதைப் போல அங்கிருந்து அவன் நகர்ந்து போனான்.

அன்றிரவு முழுக்க ஆமினாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. காய்ச்சல் கண்டது. பருவத்தில் வருகிற காய்ச்சல் எனச் சொல்லி, ‘பாத்திஹா சூறாவும் குல் சூறா மூன்றையும்’ ஓதி ஊதி விடுகிற உம்மாவிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் படுத்துக்கிடந்தாள் ஆமினா. தொடர்ந்து வந்த மூன்று நாட்கள் பாடசாலை போகவில்லை. அடுத்த வாரம் பாடசாலைக்கு வந்த ஆமினாவின் தலையையும் மாரையும் மறைத்து ஸ்கார்ஃப் ஏறி இருந்ததை ஆலப்புழாட அன்வரும் கவனித்தான். அவள் சிறைப்படுத்தப்பட்டுவிட்டாள் என நண்பர்களிடம் புலம்பினான்.

மாலை நேர வகுப்புகளுக்குப் போகும் போதும் வரும் போதும் நண்பர்களுடன் சேர்ந்து தனியே போகிற ஆமினாவை பின்தொடர ஆரம்பித்தான். ஒருவார்த்தை பேசுவதில்லை. அவளைப் பார்ப்பதுகூட இல்லை. ஆனால் இடைவெளியை காற்று பின்தொடர்வதைப் போல அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தான்.

‘ஆமினாவின் வீட்டுத் தெருவில் பள்ளம் விழுந்து வெள்ளம் வருமளவு சுற்றி ஆயிற்று. அவன்ட சைகிள் டயரை சும்மா விட்டாலே அது போய் அவள்ட்ட பேசிட்டு வரும். இவன் மட்டும் பேச மாட்டேன் என்கிறான்’

என்று, வளர்ந்த பின் நண்பர்கள் அவனைக் கேலிசெய்தனர். ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று, அது ஏதோ உன்னிடம் இருக்கிறது’ என சுதி சேராமல் ஆமினாவிற்கு மட்டும் கேட்டும் படி அவர்கள் பாட ஆரம்பித்திருந்ததும் அந்தக் காலங்களில்தான். அவள் அவர்களைப் பொருட்படுத்தாது தலை நிமிராமல் அந்த வீதியால் நடக்கப் பழகி இருந்தாள்.

வளர்ந்த பின்னர் ஆமினாவிற்கு  களுத்துறை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் இடங்கிடைத்தது. அங்கே அவள் இருந்த மூன்றாண்டுகளில்  இரண்டுமுறை அவனைக் கண்டாள். முதல் முறை கல்லூரி வளாக உணவகத்தில் யாரோ ஒருவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு அதே நடுக்கமும் கண்ணீரும் பீறிட்டது. ஆனால் இந்த முறை அவளது உள்ளுணர்வு வேறுவிதமாக இருந்தது. மின்வெட்டி மறைந்ததைப் போல அவளுள் எழுந்த உணர்ச்சிகளை அவள் வெகுவாக ரசித்தாள். ஒருகணம் தோன்றி மறைந்த அந்த அரூபத்தை, பொட்டலில் விழுந்த முதற் சொட்டு மாரி போல பத்திரப்படுத்திக கொண்டாள். அவன் வந்து பேசினால் நன்றாக இருக்கும் என அவளுக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அவன் எப்போதும் போல அவளைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தான். இரண்டாவது முறையும் அப்படியே. ஆதலால் அவளே அவனிடம் பேசிவிடுவது என முடிவெடுத்தாள். சற்றே தள்ளி நின்று பேச வேண்டியதைத் தனக்குள்ளே சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அவள் பார்த்திருக்க அவன் அப்பால் நகர்ந்து போனான், காற்று நகர்ந்து போவதைப் போல. அதற்குப் பிறகு அவள் அவனைச் சந்திக்கவேயில்லை. ஆனாலும் அவளது தலை இப்போதெல்லாம் நிமிர்ந்தை இருக்கப் பார்த்துக்கொண்டாள்.


03

வேறு வீடு மாறுவது பற்றி ஆமினா தொடர்ந்து பேச ஆரம்பித்தாள். தனக்கு மூச்சு முட்டுகிறது என்றும் என்னை ஜெயில் அடைக்கவா நீங்க கலியாணங் கட்டி இங்க கூட்டி வந்தீங்கன்னும் சமீமை நச்சரிக்க ஆரம்பித்தாள். இதை முழுதாகச் சொல்ல அவளுக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. காலம் மனதைத் திடப்படுத்துகிறது என அவள் அறிந்துகொண்டாள். எல்லாவற்றையும் காலத்தின் மீது சாட்ட அவள் பழகி இருந்தாள். எல்லாவற்றுக்கும் காரணங்கள் தேடுவதையும் அவள் கைவிட்டிருந்தாள். தற்செயலான நிகழ்வுகள் மீது அவளுக்கு அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அந்த வீடு பற்றி அவளுக்கிருந்த புகார்கள் மறைந்த பின்பும் கூட அவள் வீடுமாறுவதைப் பற்றி வீம்புக்காக பேசுவதை வாடிக்கையாக்கி இருந்தாள். அது ஒரு தற்செயலான நிகழ்வு என அவள் நம்பினாள். அந்தப் பேச்சு அந்த வீட்டில் அவளது இருப்பை உறுதிப்படுத்துவது போல இருந்தது. அந்தப் பேச்சுக்கள் அவனை அமைதியாக்குவதை அவள் ரசிக்க ஆரம்பித்தாள். இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க அவன் பட்ட பாட்டை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது அவளுக்கு அவசியமில்லாதும் கூட.

 “தோட்டம் தொறவோட வாழ்ந்த பிள்ள வாப்பா. வசதியா பார்த்துக்கணும்.” என காசிம் மௌளவி இந்தியாவில் வைத்து அவர்களின் திருமணம் முடிந்த கையோடு மகனிடம் சொல்லிவைத்தார். லன்டன் திரும்பியவன், இரண்டு மாதங்கள் சல்லடை போட்டுத் தேடி, தன்னுடைய தகுதிக்கும் மீறி £1100 கொடுத்து இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தான். மனைவி லன்டன் வருவதற்கு முதலே புதுப் பெயின்ட் பூசி, வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொஞ்சங்கொஞ்சமாக வாங்கிச் சேகரித்தான். இப்போது அவளுக்கு இந்த வீடு பிடிக்கவில்லை. அவளுக்கு மூச்சு முட்டுகிறது.


04

கையில் இரண்டு பெரிய பைகளுடன் லிடில் சுப்பர் மார்க்கட்டில் இருந்து திரும்பிய ஆமினாவை வீட்டுக் கதவடியில் வைத்து செல்மாவின் குழந்தைகளின் பந்து பறந்து வந்து பலமாகத் தாக்கியது. நிலைதடுமாறி விழுந்தவளது கையில் இருந்த பை தவறி விழுந்ததில் உள்ளே இருந்த முட்டைகள் நொறுங்கி வழிந்தன. முட்டை நொறுங்கி வழிவது அபசகுணம் என உம்மா சொல்வது நினைவுக்கு வந்தது.

சத்தங்கேட்டு வெளியே வந்த செல்மா, குழந்தைகளை திட்டிவிட்டு ஆமினாவிடம் ஓடிவந்தாள். குழந்தைகள் செய்ததற்கு மன்னிப்புக் கேட்டவள், ஆமினா எழும்ப உதவி செய்தாள். விழுந்து சிதறிய பொருட்களைப் பொறுக்கிப் பையில் போட்டாள். சாவியை வாங்கி கதவைத் திறந்துவிட்டவளை, ஆமினா சங்கடத்துடன் உள்ளே அழைத்தாள். வெள்ளை நிறத்திலான பிராவும் சிறிய காற்சட்டை உடனும் இருந்த செல்மா அந்த அழைப்பை ஏற்பாள் என்று ஆமினா நினைத்திருக்கவில்லை.

“இவ்வளவு கனமான பைகளை தூக்கிட்டு நடத்தா வந்தீர்கள்? ஆச்சரியமாகக் கேட்டாள் செல்மா.

“கொஞ்சத் தூரந்தானே, நடந்து வந்துவிடலாம்னு நினைத்தேன்.” ஆமினா செல்மாவைப் பார்க்காமலே பதில் சொன்னாள். இரண்டு பெண்களும் ஆமினாவின் சமையலறைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

“நீ நன்றாக ஆங்கிலம் பேசுகிறாய். குயின் இங்லிஸ்.” செல்மா சொன்னாள்.

நன்றி சொல்லிப் புன்னகைத்தாள் ஆமினா. இருவரும் அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.

“வீட்டில கூட இந்தத் தலைக்கவசத்தைக் கழற்ற மாட்டீர்களா!?” எனக் கேட்டாள் செல்மா.

“பக்கத்து வீட்டுக்கு பிராவுடன்தான் போவீர்களா!? என ஸ்கார்பைக் கழற்றிக்கொண்டே கேட்டாள் ஆமினா. இருவரும் சிரித்தார்கள்.

“குடிக்க என்ன கொடுக்கட்டும்?, டீ, கோஃபி, பழச்சாறு?’ கேட்டுக்கொண்டே, செல்மாவின் பெரிய மார்பகங்களையும், சுருக்கங்கள் நிறைந்த வயிற்றையும் அவதானித்தாள் ஆமினா.

“பியர் கிடைக்குமா?” அப்பாவியாகக் கேட்டாள் செல்மா.

“இப்போதுதான் கொட்டைகளைக் காயப்போட்டிருக்கிறோம். காய்ந்ததும் அரைத்து பியர் தயாரித்துவிடலாம்.”

முகத்தில் சலனமில்லாமல் சொன்ன ஆமினா, எதுவும் புரியாதவள் போல முழித்த செல்மாவைப் பார்த்து வெடித்துச் சிரித்தாள்.

“நாங்கள் பியர் குடிப்பதில்லை. எந்த மதுவகையும் எங்களுக்கு ஆகுமாக்கப்பட்டதில்லை.” சிரித்துக்கொண்டே சொல்லி முடித்தாள் ஆமினா.

“ஓ……….., நீங்கள் முஸ்லிம்கள் குடிப்பதில்லை, இல்லையா? நான் ஒரு அசடு. மன்னிக்க வேண்டும். தெரியாமல் கேட்டுவிட்டேன். மன்னிக்க வேண்டும்.” அசடு வழிந்தாள் செல்மா.

“நன்றியும், மன்னிப்பும் ஒவ்வொரு கிலோ கட்டி இப்போதே என்னிடம் கொடுத்துவைத்தால் நல்லது.” என்றாள் ஆமினா.

மீண்டும் புரியாதவளாக முழித்த செல்மாவிடம், “அது பழைய ஜோக். அதை விடு” என்று சொல்லிக் கண்சிமிட்டினாள்.

இரண்டு பெண்களும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

‘எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.’ எனச் சொன்னாள் செல்மா.

“எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. நான் லன்டன் வந்து தேடிக்கொண்ட முதலாவது நட்பு உன்னுடையதுதான்.” என்றாள் ஆமினா. இருவரும் கட்டி அணைத்து முகங்களை உரசி அன்பை வெளிப்படுத்திக்கொண்டார்கள். செல்மாவின் குழந்தைகள் இன்னமும் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


05

ஊரில் ஆமினாவின் திருமணப் பேச்சு எழுந்த போது அவள் மஹா வித்தியலயத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியில் இருந்தாள். குடும்பங் கூடி அவளது திருமணங் குறித்துப் பேசுகிற இடங்களில் இருந்து தன்னைத் தூரமாக்கி வைத்தாள். எதுவுமே சரிவராமல் திருமணம் தள்ளிப் போகையில், இப்படியே தனியே இருந்து விடலாம் எனக் கூடச் சிந்தித்தாள். கடைசியில் லண்டன் மாப்பிள்ளை என உம்மா சொன்ன போது ஏன் எனத் தெரியாத ஒரு காரணத்திற்காக இது சரி வரவேண்டும் என அல்லாஹ்வை வேண்டினாள். திருமணங் கூடி வந்தது. சமீம் அகதி வீசா விண்ணப்பித்திருப்பதான். இலங்கைக்குப் போக முடியாது என்பதால், தமிழ்நாட்டில் வளசரவாக்கத்தில் இரண்டு மாடி வீடொன்றை இரண்டு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்து, முழுக்குடும்பத்தையும் இந்தியா வரவழைத்திருந்தான். இந்தியாவில் திருமணம் முடிந்து ஒருமாதகாலம் சமீம் உடன் வாழ்ந்த வாழ்க்கை அவளை நிறைத்திருந்தது. சமீம் லன்டன் திரும்புகிற காலைக்கு முந்திய இரவு அவனது மாரில் கிடந்து அழுதாள். பிரிவு எவ்வளவு பெரிய ஆற்றாமை என்பதை இருவரும் புரிந்துகொண்டனர். அல்லாஹ் நமக்கொரு குழந்தையைத் தருவான் என அவளது காதுகளில் அவன் மெல்லமாகச் சொன்னான். அவள் பூரித்துப் போனாள்.

அவளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக லன்டனுக்கு எடுப்பது குறித்து அவன் கொடுத்த வாக்குறுதிகளை ஆமினா மனதார நம்பினாள். அந்த இரவில் இருந்து எட்டுமாதங்கள் ஆயிற்று அவள் லன்டன் வந்து சேர. சமீம் அந்த எட்டு மாதங்களும் நாளுக்கு பதினாலு மணிநேரம் என, வாரத்திற்கு ஆறுநாட்கள் கடுமையாக உழைத்தான். பணம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் மாதத்திற்கு இரண்டு வாரங்கள் இரவில் வேலைசெய்யச் சம்மதித்தான். விசாவுக்கான செலவு, வீடு எடுப்பதற்கான செலவுகள், ஆமினாவிற்கான பயணச் செலவுகள், ஏற்கனவே திருமணத்திற்கு வாங்கிய கடன்கள் என உழைப்பதெல்லாம் அதற்கே போதுமாக இருந்தது.

தனக்குக் குழந்தை கிடைக்கும் என எண்ணி இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வந்தவளுக்கு இரண்டாவது வாரத்தில் வந்த மாதவிடாய், ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும் மன உளைச்சலில் உழன்றவள், சமீமை அழைத்து எப்போது என்னை எடுப்பீர்கள் என நச்சரிக்க ஆரம்பித்தாள்.


06

செல்மாவின் அறையில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள் ஆமினா. ஆன் செய்யப்பட்டிருந்த தடித்த ஆண்குறி பொம்மை ஒன்று கிரீம், லோசன் போத்தல்களுக்குப் பக்கத்தில் கிடந்து ‘கிர்ர்’ எனச் சத்தமெழுப்பித் துடித்துக்கொண்டிருந்தது. ஆமினாவின் உறைவு செல்மாவில் பெரும் சிரிப்பை உண்டாக்கிற்று. வெடித்துச் சிரித்தவள் ஆண்குறி பொம்மையை ஆஃப் செய்துவிட்டு ஆமினாவைப் பார்த்தாள். ஆமினா வாய்க்குள் விரல்களைப் பொத்திப் பொத்தென கட்டிலில் இருந்தாள்.

“நீதானே பார்க்க வேணும்னு அழைக்கச் சொல்லி இருந்தாய். அதுதான் அழைத்தேன்.”

போர்ன் ஓடிக்கொண்டிருந்த மடிக்கணனியை ஒருகையால் மூடிக்கொண்டே சொன்னாள் செல்மா.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த முதலாவது சந்திப்புக்குப் பிறகு அவர்கள் இணக்கமான நண்பர்களாகி இருந்தார்கள். சமீம் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர்கள் ஒன்றாகவே இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்ட விடயங்களில் அவர்களுக்கு ஆச்சரியங்களே அதிகமாக இருந்தன. தனது இரண்டாவது குழந்தைக்கு தகப்பன் யாரெனத் தனக்குத் தெரியாது எனச் செல்மா சொன்ன போது ஆமினா அதை நம்ப மறுத்தாள். தான் வாழ்நாளில் ஒருமுறை கூட சுயமைத்துனம் செய்ததில்லை. அது எப்படிச் செய்வது என்றுகூடத் தனக்குத் தெரியவில்லை என ஆமினா சொன்னதை செல்மா ஏற்க மறுத்தாள். நம்பிக்கையும் ஏற்பும் அவர்களுக்கிடையே விளையாடிக்கொண்டிருந்தது. செல்மாவை பெரும் தன்நம்பிக்கையின் திருவுரு என ஆமினா அழைத்தாள். அதை அவள் மனதாரத்தான் சொன்னாள். செல்மா தன்நம்பிக்கையின் திருவுரு.

கடந்த வாரம் முழுநாளும் சமீம் நைட் ஷிஃப்ட் வேலைக்குப் போக இருப்பதைப் பற்றி ஆமினா செல்மாவிடம் சொல்ல நேர்ந்த போது, ‘அப்படி என்றால் ஒருநாள் இரவு மட்டும் இந்தக் குழந்தைகளை உன்னால் பார்த்துக்க முடியுமா’ எனக் கேட்டாள் செல்மா. சில நாட்களாக பிறரது குழந்தைகள் குறித்து அவளுக்குள் தோன்றியிருந்த ஒவ்வாமை எரிதணல் கங்கு போல அவளுள் கிளர்ந்திற்று. செல்மாவின் இரண்டாவது குழந்தை தனக்கு அருவருப்பாக இருப்பதை சுள்ளென உணர்ந்தாள். எவ்வளவு வன்மமான எண்ணங்கள் என நீர் நீரை மோதுவதைப் போல அவளையை அவள் மறுதலித்தாள்.

அன்றிரவு யாரோ ஒருவனுடன் கிளபிங் போயிட்டு நைட்அவுட் எடுத்திட்டு வருவதாகச் செல்மா சொன்னாள். ஒருமாதத்திற்கும் மேலாயிற்று இந்த உடலை ஒரு ஆணுக்குள் புதைத்து என்று கவிதையாகச் சொல்லிக் கண்ணடித்தாள். பின்னர் அவர்கள் காமங் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் உடல் சுதந்திரம் குறித்து செல்மா அவளுக்கு பாடம் எடுத்தாள். வேட்கை வேட்டை நாயை விட மூர்க்கமானது எனச் செல்மா சொன்னதைப் பற்றி, பின் வந்த பல இரவுகளில் ஆமினா சிந்தித்துக் கிடந்தாள். ஆமாம், செல்மா தன்நம்பிக்கையின் திருவுருதான் என ஆமினா ஆழமாக நம்பினாள்.

‘ஆணுடல் கிடைக்காத போது காமத்தை எப்படிக் கடக்கிறாய் ?’ என ஆமினா ஒருமுறை கேட்டாள்.

ஆணுடல் கிடைப்பதொன்றும் அரிதல்ல. நேரத்தை உருவாக்கிக்கொள்வதுதான் சிரமமான செயல். இரண்டு குழந்தைகளுடன் தனியே இருப்பவளுக்கு காமம் துளிர்க்காது என இந்த அரசு நம்புகிறது. அவளுக்கான நேரத்தைத் தர இந்த அரசு எந்தப் பிரயத்தனங்களும் எடுத்ததில்லை. இந்தப் பிள்ளைகளைப் பகல் முழுதும் பார்த்துப் பராமரித்துக்கொண்டு அம்மாக்களுக்கான நேரத்தைக் கொடுக்க அரசிடம் ஒரு திட்டங்கூட இல்லை என அரசைக் குறை சொன்ன செல்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஆமினா.

‘ஆக இந்த நேரப்பிரச்சினையால் காமப் பிணியால் தான் பாதிக்கப்படுகிற போது, எனக்கு நானே உதவி செய்துகொள்வேன்’ என ஒற்றை நடுவிரலை உயர்த்திச் செய்கையால் விளக்கமளித்தாள் செல்மா.

பின்னர் அவர்கள் அது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். முடிவில் நான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதாகவும், கைமாறாக உன்னைக் காமப்பிணி தொற்றும் நாளில் என்னை அழைத்து செய்முறை விளக்கமும், பாடமும் எடுக்கிறாய் எனவும் கட்டளையிட்டாள் ஆமினா. நடக்கட்டும் மஹாராணி, உங்களது சித்தம் எனது பாக்கியம் என்பது போல கைகளை அகல விரித்து நின்று , முழங்கால் மடிந்து குந்தி எழுந்தாள் செல்மா. இரண்டு பெண்களும் சிரித்துக்கொண்டார்கள்.

அன்றிரவு செல்மாவின் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனக்குள் உருவாகி உள்ள விசித்திரமான உணர்வுகள் பற்றி எண்ணியவளாகப் படுத்துக்கிடந்தாள் ஆமினா. பக்கத்து வீட்டில் கார் வந்து நின்ற சத்தத்திற்கு எழுந்து ஐன்னல் சீலைகளை விலத்திப் பார்த்தாள். ஒருமெல்லிய நீல நிற கௌனில் குலுங்கிக் குலுங்கி வீட்டில் இருந்து வெளியேறிய செல்மாவை யாரோ ஒரு ஆஜானபகுவான ஆண் கட்டிப்பிடித்து முத்தங்கொடுத்து கார்க்கதவைத் திறந்து உள்ளே விட்டான். நகர்ந்த அந்தக் காரை, வீதியின் வளைவுகள் முற்றாக முழுங்கிக்கொள்ளும் வரை வெறித்து நின்றிருந்தாள் ஆமினா.


07

புதிய வீடு பார்க்கிற விடயமாக இரண்டு நண்பர்களை வரச் சொல்லி இருப்பதாகவும் அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்லியும் ஆமினாவை வேண்டினான் சமீம். ஆமினா அந்த வீட்டுக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகி இருந்தது. ஊரில் இருந்து அழைக்கும் உம்மா, மாமி என எல்லோரும் ஏதாவது விஷேசம் உண்டா என அடிக்கடி கேட்க ஆரம்பித்திருந்தார்கள். மாமி ஒருபடி மேலே போய், ‘சந்தோஷமா இருக்காயா மக? அவன் உன்னைய நல்லா வச்சிருக்கானா?’ என நேரடியாகவே கேட்டு விட்டார்.

“ஐயோ மாமி, எனக்கொரு கொறையும் இல்ல. உங்க மகன் என்ன ராணி மாதிரி பார்த்துக்கிறார். நாங்கதான் இப்போதைக்கு குழந்தை வேணாம்னு இருக்கம். பார்க்கலாம் மாமி.” ன்னு குழந்தை விசயங்குறித்து வாய்கூசாது பொய் சொன்னாள்.

மாலை ஆறுமணி அளவில் சமீமின் நண்பர்கள் வந்திருந்தார்கள். ஆமினாவால் நம்பக்கூட முடியவில்லை. கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். ஆலப்புழாட அன்வர், ஒற்றைக் காதில் கடுக்கனும் கைநிறைய டட்டுவும், ஸ்பைக் வைத்த தலையுமாக நின்றிருந்தான். தன்னை ‘அன்வி’ என அறிமுகப்படுத்திக் கொண்டான். அவளை நேராகப் பார்த்து நாவில் ஆங்கிலம் புரளப் புரள கதைத்தான். நீங்கள் அஸ்ஸிராஜில் படித்த ஆலப்புழாட அன்வரா? என நேரடியாகவே கேட்டாள் ஆமினா.

அது என்னடா ‘ஆலப்புழா’ எனக் கேட்ட சமீமிடம் அவனது முப்பாட்டன்மார் கேரளாவின் ஆலப்புழாவை பூர்வீகமாகக் கொண்டதால் அவர்களது குடும்பத்தில் எல்லோருக்கும் ஆலப்புழா என்பதை அடைமொழியாகச் சேர்த்தே பேர் வைப்பதாக அவன் விளக்கமளித்தான். இங்கிலாந்து வந்த பின்னர் ஆங்கில நாவுகளில் புரள மறுத்த நாமம் என்பதாலும், அவனது ‘ஆங்கிலக் காதலி’ அன்வி என அவனைச் செல்லமாக அழைத்ததாலும் அதையே தனக்குப் பெயராக்கிக்கொண்டதாகச் சொன்னான். அவன் காதலி பற்றிச் சொன்ன போது அவள் நிமிர்ந்து அவனது கண்களைச் சந்தித்தாள். அவனது உதட்டோரம் ஒரு நொடிப் புன்னகை தோன்றி மறைந்ததை அவதானித்தாள். பின்னர் ஆண்கள் புதிய வீடு மாறுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் சமையலறையில் இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆலப்புழாட  அன்வர், அன்வியாக மாறியதை அவனது பேச்சு முறைமை நியாயம் செய்துகொண்டிருந்தது.

அடுத்த வாரத்தில் ஒருநாளில், சமீம் வேலைக்குப் போயிருந்த ஒரு பகல்பொழுதில் அவள் கடுங்காய்ச்சல் கண்டிருந்தாள்.  கணவனை அழைத்து தன்னால் முடியவில்லை எனச் சொன்னவளை GP யிடம் ஒரு அப்பொய்ன்மென்ட் போடு, நான் உன்னைக் கூட்டிப் போக யாரையாவது அனுப்புகிறேன் என்ற கணவனை நொந்துகொண்டாள். அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தவள் ஒருகணம் தயங்கினாள். அன்வி காரின் பின் கதவைத் திறந்து வைத்து அவளுக்காகக் காத்திருந்தான். அவளை, அவளது கண்களைச் சந்திப்பதில் தனக்குச் சங்கடங்கள் இல்லை என்பதை எப்படியாவது அவளுக்குப் புரியவைத்துவிட அவன் முயல்வதாக அவள் எண்ணிக் கொண்டாள். அவனைக் கடக்கிற போது அவனது கண்களுக்குள் உற்று நோக்கினாள். அவன் தலையைக் குனிந்து கொண்டான். ஒரு சிலிர்ப்புடன் அவள் அந்தக் காரில் ஏறிக்கொண்டாள். காய்ச்சலுக்காகப் போர்த்தி இருந்த போர்வைக்குள் தென்னம்பாளை வெடித்துத் தென்னம் பூ சொரிந்துகிடப்பது போல உணர்ந்தாள். அவன் கண்ணாடிகளை அவளைப் பார்க்கத் தோதாகத் திருப்பி வைத்துக்கொண்டான். யானையை விழுங்கிய மலைப்பாம்பின் அமைதி போல ஒரு பெரும் அமைதி அவர்களையும் அந்த இடத்தையும் கௌவிக்கிடந்தது.

அன்வி காரின் மியுசிக்கை ஆன் செய்தான். ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று, அது ஏதோ, அது ஏதோ உன்னிடம்….’  அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் நிதனமாகக் காரை ஓடிக்கொண்டிருந்தான்.

செல்மாவிடம் இருந்து அவளது போனுக்கு அழைப்பு வந்தது. அவள் நினைவுகளில் இருந்து மீண்டாள். தனக்கான எல்லா உந்துதல்களையும் செல்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அவள், அந்தக் கணத்தில் வந்த அழைப்பை  நிராகரித்தாள். செல்மா ஏன் இப்போது அழைக்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

‘எப்படி இருக்கீங்க?’ தென்னம்பூச் சொரிந்துகிடந்த போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, நடுங்கிக்கொண்டே கேட்டாள்.

அவன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே ‘நல்லார்க்கன். உங்களுக்குத்தான் சுகமில்ல’ என்றான்.

அவர்களுக்கிடையே இருந்த பெரும் பனிப்பாறை தூள்தூளாக நொறுங்கிவிட்டது போல உணர்ந்தாள்.

‘என்ன இது கோலம்.. ? காதுல கடுக்கன். உடம்பெல்லாம் டட்டு!’ அவள் கேட்டாள்.

அவன் பதிலேதும் சொல்லாமல் சிரித்தான். அவர்களைச் சுமந்த மகிழூர்ந்து கனமேறி ஊர்ந்துகொண்டிருந்தது. அவள் பழைய கதைகளை ஞாபகப்படுத்தினாள். அவன் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தான். அவனது சிரிப்பு அவளுக்கு சங்கடங்களை உருவாக்கிற்று. அவள் அதைத் தாண்டிவிட விரும்பினாள். அவளது முகத்தில் படர்ந்திருந்த தேமல் மறைந்து போயிருப்பதைப் பற்றி அவன் விசாரித்தான். வயதோடு பலதும் மாறி மறைந்து போவதைப் பற்றி அவளும் ஆச்சரியம் தெரிவித்தாள்.

வைத்தியசாலை வந்ததும் காரை நிறுத்தத்தில் விட்டுவிட்டு இறங்கிக்கொண்டார்கள். அவள் பழம் பனி போல சோர்ந்து போயிருந்தாள். அவன் கைத்தாங்களாக அவளைக் கூட்டி வந்தான். சில்லிட்ட உடம்புடன் அவளது தவனைக்காக வைத்தியசாலையின் வரவேற்பறையில் காத்திருந்தார்கள்.

அவன் அவள் பாடசாலையில் அழுததைப் பற்றி அவளுக்கு ஞாபகப்படுத்தினான். அவள் சிவந்து போயிருந்தாள். அவனுக்கு முன்னாள் இனியொரு போதும் தான் அழுதுவிடக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அவளுக்கான முறை வந்த போது அவள் எழுந்து சென்றாள். அவன் காற்றைப் போல காத்திருந்தான். சாதாரன காய்ச்சல்தான் என வைத்தியர் சான்றிதல் கொடுத்ததைச் சொன்னாள். காய்ச்சல் நல்லது என அவன் சொன்னான். இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.

இவர்களால் paracetamol யையும், ibabruphenயையும் தாண்டி வேறு எதையும் தந்துவிட முடியாதா எனக் கேட்டாள். ‘அதுவே போதுமாக இருக்கும். சில நேரங்களில் நாம் நினைத்திருப்பதைவிட மிகச் சிறியவைதான் எமது பிரச்சினகள்’ என அவன் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. கார் நிறுத்தத்தை நோக்கி இருவரும் நடந்து வந்தார்கள். அவன் பின்கதவைத் திறக்கப் போனான். அவள் தான் முன் சீட்டிலே இருப்பதாகச் சொன்னாள். அவன் புன்னகைத்தான். கார் புறப்பட்டது. வழியில் இருந்த சிக்னல்களைப் பொருட்படுத்தாது அவன் மீறிச் சென்றுகொண்டிருத்ததை அவள் ரசித்துக்கொண்டிருந்தாள்.

அவனை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் இரண்டு முறை கண்டதையும், இரண்டாவது முறை தான் பேச எத்தனித்ததையும் அவள் சொன்ன போது, தான் அங்கே பதினாறுமுறை வந்ததாகவும், வந்த ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்ததாகவும் அவன் சொன்னான். இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள். அவள் அவனது காதலி பற்றிக் கேட்டு அந்த அமைதியைக் குலைத்தாள். அவன், சமீம் எப்படி இருக்கார் எனக் கேட்டான். அமைதி மிக ஆழமானதும் மிகக் கனமானதும் என அவர்கள் உணரத்தொடங்கி இருந்தனர்.

அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவள் முன்னிருக்கையில் இருந்து கொண்டாள். அன்வி அவளது சமையலறையில் இருவருக்கும் சேர்த்தே தேயிலை தயாரித்துக்கொண்டு வந்தான். அவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டே முழுத் தேநீரையும் பருகினாள்.

08.

ஞாயிற்றுக் கிழமை. சமீமின் உம்மா அழைத்திருந்தார். அவன் உம்மாவிடம் ஆமினாவிற்கு குழந்தை உண்டாகி இருக்கிற செய்தியை மகிழ்ச்சியாகப்  பகிர்ந்துகொண்டான். ஆமினா தனக்குச் சுகமில்லை எனச் சொல்லி, குழந்தை உன்டான நாளில் இருந்து படுத்துக்கிடந்தாள். செல்மாவின் குழந்தைகள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சத்தம் அந்த வீட்டிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *