பட்டு தெரியும் வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 2,191 
 

நல்ல இருள் சூழ்ந்த வேளையில் மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.

‘பாலு’ விஜயமங்கலம் தாண்டி கொஞ்ச தூரத்துலயே ரைட்டுல ஒரு கட்டு வரும் பாரு, அதுல திரும்பு, மறந்திடாதே, விக்ரம் சொல்லி விட்டு சிகரெட் ஒன்றை வாயில் வைத்து தீப்பெட்டியால் பற்ற வைத்தான்.

காருக்குள்ளும் விளக்கு எதுவும் போடாததால் விகரம் பற்ற வைத்த தீக்குச்ச்சியின் வெளிச்சம் அவனருகே உட்கார்ந்திருந்த இருவரையும் வெளிச்சமாக்கி காண்பித்து விட்டு புகையாய் காணாமல் போனது. குச்சியை வெளியே எறிந்தவன் இப்ப எங்க போயிட்டிருக்கே? பாலு.

அவிநாசி தாண்டிட்டோம், அரை மணி நேரத்துக்குள்ள நம்ம ஏரியாக்குள்ள போயிடலாம்.

ம்..ம்.. இன்னும் புகையை சற்று ஆழமாய் இழுத்தவன், பசிக்குது, ஓட்டல் கடை இருக்கற பக்கம் எங்கியாவது ‘ஸ்லோ’ பண்ணிட்டு நீ மட்டும் போயி எங்க மூணு பேருக்கும், டிபனை வாங்கிட்டு அப்படியே நீயும் ஏதாவது வாயில போட்டுட்டு வந்துடு. லேட் பண்ணிடாதே, சிக்கலாயிடும். நாங்க காருக்குள்ளயே இருக்கறோம்.

சரி என்று தலையாட்டிய பாலு கொஞ்ச தூரத்தில் மங்கிய வெளிச்சத்துடன் ஒரு ஓட்டல் கடை ரோட்டோரம் இருப்பதை பார்த்தான். வெளியில் தோசைக்கல் தீயில் காய்ந்து கொண்டிருப்பதையும், ஒருவன் அதில் எதையோ கொத்தி கொண்டிருப்பதையும் பார்த்தவன் காரை மெதுவாக்கி அந்த கடை அருகே கொண்டு சென்று நிறுத்தினான்.

இந்தா கையில் ஒரு ‘நோட்டை’ காட்டியபடி அழைத்த விக்ரம், ஆளுக்கு இரண்டு பரோட்டா பார்சல் போட்டுட சொல்லிட்டு நீ சாப்பிட உட்காரு, அப்பத்தான் நீ சாப்பிட்டு முடிக்கவும், அவனுங்க பார்சல் கட்டி வைக்கவும் சரியா இருக்கும், ம்ம் தலையசைத்த படி பணத்தை வாங்கி கொண்டு கடைக்கு விரைந்தான்.

அவன் இறங்கி கடைக்குள் போவது வரை அமைதியாய் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் விக்ரம் இந்த பையனை நம்பலாமா?

நம்பலாம் காளி, கவலைப்படாதே,

காளியின் பக்கத்தில் இருந்தவன் முணுமுணுத்தான், நாம ‘சரக்கு’ கொண்டு போறோமுன்னு அவனுக்கு தெரியுமா?

அதெல்லாம் நான் ஒண்ணும் சொல்லலை ரங்கா, நீங்க இரண்டு பேரும் பேசாம இருங்க, அது போதும், அவன் எங்கிட்டே வந்து ஒரு வருசம் ஆச்சு, அவனை நல்லா நோட் பண்ணீட்டுத்தான் வேலைக்கு வச்சிருக்கேன்.

இந்த நேரத்துல நாம் எங்க போயிட்டு வர்றோமுன்னு அவனுக்கு தெரியுமா?

ஒண்ணும் தெரியாது, அவனை வ.உ.சி பார்க் கிட்ட நிக்க சொல்லிட்டு நான் ஊட்டியில இருந்து வர்றேன், அப்படீன்னு சொல்லி வச்சிருக்கேன். அவன் இப்ப உங்க இரண்டு பேரையும் ஊட்டியில இருந்து கூட்டிட்டு வர்றதுக்காக அங்க போயிருப்பேன்னு நினைச்சுகிட்டிருப்பான்.

சரி..நான் இறங்கணும், காளி நெளிந்தான், வயிறு “டொம்”முனு ஆயிடுச்சு.

நீங்க இரண்டு பேரும் இறங்கி போயிட்டு வாங்க, நான் பாலு வந்த பின்னால அவனை உட்கார வச்சுட்டு வர்றேன்.

சொன்ன நிமிடத்தில் இருவரும் கீழே இறங்கி இருளில் பாதையோர புதர்களை தேடி ஓடினர். அவ்வப்பொழுது அவர்கள் மீது வெளிச்சப்புள்ளிகளை வீசியபடி சென்று கொண்டிருந்த வாகனங்களை கண்டு கொள்ளாமல் புதரோரமாய் நின்றனர்.

உள் புறமாய் இரண்டு நீள பெஞ்சுகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. டியூப் லைட் வெச்சம் அழுதபடி இருந்தது. அந்த நேரத்திலும் இருவர் இலை முழுக்க அசைவ அயிட்டங்களை வைத்து வாயில் சுவைத்து கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்தவன் “மூணு செட் புரோட்டா” பார்சல் பண்ணுடுப்பா, அப்படியே சீக்கிரமா எனக்கும் ஒரு செட் பரோட்டா கொண்டு வா, கைகளை கழுவியபடி பெஞ்சின் முன் வந்து உட்கார்ந்தான்.

சுவாரசியமாய் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இருவரும் ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர்கள் பணியை தொடர்ந்தனர்.

அந்த கணத்தில் உட்கார்ந்த பாலு ஒருவனை நன்கு அடையாளம் கண்டு கொண்டான். தான் முன்னர் வேலை செய்து கொண்டிருந்த லாரி சார்வீசில் இவனும் கிளீனராய் இருந்தவன். அவனை கூப்பிட்டு பேசலாம் என்று நினைத்தவன் வேண்டாம் இந்த நேரத்தில் அவனை கூப்பிட்டு பேச ஆரம்பித்தால் நேரமாகி விடும். முதலாளி திட்டுவார்,

இலையில் போட்ட பரோட்டாவை பிய்த்து பக்கத்தில் வைத்த சால்னாவுடன் பிரட்டி வாயில் போட்டுக்கொண்டான்.

கூடுமானவரை எதிரில் சாப்பிடுபவன் இவனை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்னும் ஜாக்கிரதை உணர்வுடன் வேகமாக சாப்பிட்டு முடிப்பதற்குள் இந்தாங்க பார்சல், அவனருகில் மூன்று செட் பார்சலை கொண்டு வந்து வைத்து விட்டு சென்றான், மாஸ்டர்.

சரக்கென எழும் சத்தம் கேட்டது, சாப்பிட்டு முடித்து அவர்கள் எழுந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவன் சாப்பிடும் வேகத்தை குறைத்தான். அவர்கள் கை கழுவி விட்டு போகட்டும், நான் பின்னாடி போகலாம். வேகத்தை குறைத்து மெல்ல சாப்பிட ஆரம்பித்தான்.

எவ்வளவு ஆச்சு? அவர்கள் கேட்பது, அப்புறம் கச கசவென்ற பேச்சு சத்தமும், அந்த இடத்தை விட்டு போய் விட்டார்கள் என்பதை உறுதி செய்து விட்டு எழுந்தவன் வேகமாக சென்று கையை கழுவி விட்டு பார்சலை எடுத்துக்கொண்டு முன்னால் வந்து விக்ரம் கொடுத்த பணத்தை நீட்டினான்.

சாப்பிட்டுவிட்டு அவர்கள் சற்று தள்ளி நிறுத்தியிருந்த லாரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரு நபர்களில் பாலு பார்த்துவிட்டு தயங்கியவன், மெல்ல பேச்சை ஆரம்பித்தான், அண்ணே எதிர்ல உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தவன் யாருன்னு தெரிஞ்சுதா?

தெரியலையே, தோளை குலுக்கி சொன்னான், ஏண்ணே நம்ம முதலாளி அம்மா கிட்டயே ரூட் விட பாத்துட்டு முதலாளி அடிச்சு விரட்டுனாரே, அவந்தான்.

ஓ அவனா, என்ன பண்ணிகிட்டு இருக்கான்,

தெரியலை, யார்கிட்டயோ டிரைவரா இருக்கான்னு நினைக்கிறேன், அநேகமா அதா அங்க நிக்குது பாருங்க கார் ஒண்ணூ, அதையத்தான் ஓட்டிட்டு

வந்திருப்பான். பாருங்க இறங்கி காட்டுக்குள்ள போறானுங்க, அவனுங்களுக்குத்தான் பரோட்டா பார்சல் வாங்கியிருப்பான்.

சரி விடு, எங்கியோ நல்லா இருந்தா சரி.. சொல்லிக்கொண்டிருந்தவன் திரும்பி அந்த காரை பார்க்க அதில் இருந்து இறங்கிய ஒருவன் திரும்பி காருக்குள் ஏறு முன் டீக்கடை விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அவன் முகம் தெரிய,

டேய் காளி,,! கூவினான். ஏறப்போனவன் திடீரென இவன் பேரை இந்த இடத்தில் ஒலிக்கவும், திரும்பி பார்த்தான். அடையாளம் தெரியாமல் சற்று யோசிக்க

வேகமாக அருகில் வந்து அவனது தோளை பற்றி ராமையாடா, அடையாளம் தெரியுதா? உங்க சித்தப்பண்டா, அதாவது தெரியுதா?

சித்தப்பா..இந்த ஆளு இப்ப எங்க இந்த நேரத்துல..! சித்தப்பா எப்படியிருக்கீங்க? அவரை காரை விட்டு தள்ளிக்கொண்டு அந்த பக்கம் போனான்.

நல்லா இருக்கேன் ஆமா நீ எங்க இந்த பக்கம்? ஊட்டில இல்ல இருந்தே?

ஆமா அங்கதான் இருக்கேன், பிரண்டு ஒருத்தர் கூட வந்திருக்கேன், காருக்குள்ள உட்கார்ந்திருக்காரு, டிரைவரை டிபன் வாங்க அனுப்பிச்சுட்டு இறங்கி ஒண்ணுக்கு போயிட்டு வந்தேன். சரி நாங்க கிளம்பறோம், அப்புறம் பாப்போம்.

என்னடா உன் பிரண்டுகிட்ட என்னை அறிமுகப்படுத்த மாட்டியா? எனக்கு காலி லோடுலதான் வண்டி போகுது. நாளைக்கு சாயங்காலம் மேட்டுப்பாளையம் போனா போதும்,

காளி நெளிந்தான், அது வந்து சித்தப்பா..

அதற்குள் மற்றொருவன் அங்கிருந்தே குரல் கொடுத்தான், சீக்கிரம் வா, டிரைவர் வந்துட்டான். பாலு, பரோட்டா பார்சலுடன் தயங்கி தயங்கி காருக்கு சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு முகத்தை காட்டாமல் திருப்பி காருக்கருகில் வந்தான்.

டேய் தம்பி எப்படியிருக்கறே? காளியின் அருகில் பேசிக்கொண்டிருந்தவனின் பக்கத்தில் அதுவரை அமைதியாய் நின்றிருந்த ஆள் பாலுவை நோக்கி சென்றான்.

பாலுவுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை, பேச மறுத்து காருக்குள் உட்கார்ந்து கொண்டாலும் விக்ரம் கேட்பான் யார் அது? என்று, பேசாமல் அவனிடம் பேசிவிடலாம், ஆனால் அவன் ஏடாகூடமாய் ஏதாவது கேட்டு விட்டால் !

திரும்பிய பாலு அசட்டையாய் சிரித்து நல்லாயிருக்கேன், நீங்க எப்படியிருக்கீங்க?

நான் நல்லா இருக்கேன், நீ என்ன பண்ணறியோன்னு நினைச்சுகிட்டே இருந்தேன், இது யாரு? உங்க முதலாளியா? விக்ரமை பார்த்து வணக்கம் சொன்னான். முதலாளி இந்த பையன் நம்ம பையன், பொறுப்பான பையன், பல்லை காட்டினான். சொல்லும்போதே குரலில் ஒரு நக்கல் இருந்ததை பாலு கவனித்தான்.

அவனை வெட்டி விடும் நோக்கில் சரி சரி நான் அப்புறமா பேசறேன், கார் முன் கதவை திறந்து உள்ளே உட்கார்ந்தவன் விக்ரமை திரும்பி பார்த்து வண்டியை ஸ்டார்ட் பண்ணலாங்களா?

ஏற்கனவே அங்கும் இங்கும் ஆட்கள் நெருக்குவதை எரிச்சலுடன் கவனித்து கொண்டிருந்த விக்ரம் நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு, காளி வரட்டும், கோபமாய் சொன்னான்.

பாலு இக்னீஷியனை உசுப்ப, காளி சித்தப்பா, அப்புறம் பாப்போம், காருக்குள் ஓடி வந்து ஏறிக்கொண்டான்.

கார் விஜயமங்கலம் அருகில் வந்து விட்டது, ஹைவேசிலிருந்து வலது பக்கம் திரும்பியது. எரிச்சலில் இருந்த விக்ரம் சே..காளி உன்னால எவ்வளவு லேட்டாயிடுச்சு பாரு, இதுல இவன் வேற பாலுவையும் ஏசினான்.

காளி நெளிந்தான், சாரி பாஸ், திடீருன்னு அந்த ஆளை அங்க பாப்பேன்னு நினைக்கலை. பாருங்க பசி உசிரு போகுது, சாப்பிட முடியலை.

விக்ரம் வழி சொல்ல அந்த தோப்பு வழியாக கார் உள்ளே போய்க்கொண்டே இருந்தது. சுற்றி வர இருட்டாகவும் காரின் வெளிச்சம் மட்டுமே அந்த பாதையை புலப்படுத்தி கொண்டிருந்தது.

சட்டென ஒரு திருப்பத்தில் கார் திரும்ப எதிரே பிராமாண்டமாய் ஒரு பங்களா தென்பட்டது. காம்பவுண்டில் இருந்தவன் இவர்கள் காரின் அருகில் வந்து உள்ளே பார்த்து விட்டு விக்ரமை பார்த்தவுடன் கேட்டை திறந்து விட்டான்.

வாசலில் அந்த நேரத்திலும் ஒருவர் நின்று இவர்களை எதிர்பார்த்து கொண்டிருந்தார். என்ன ஆச்சு?

எல்லாம் முடிஞ்சிருச்சு, கையில் இரண்டு பெட்டிகளுடன் மூவரும் இறங்கினர்.

பாலு மரியாதைக்காக இறங்கி முன்புறம் வந்து நின்றான். விக்ரம் உள்ளே போகுமுன் இந்தா பாலு கேட்டுக்கு பக்கத்துல ஒரு ரூம் இருக்கு, நீ அங்க போய் படுத்துக்க, காலையில கூப்பிடறோம், விறு விறுவென நால்வரும் உள்ளே சென்றனர். பாலு கேட்டுக்கு அருகில் செல்ல, அங்கிருந்தவன் இந்தா தம்பி சாவி, ‘அதா பாரு’ அந்த ரூமை திறந்துக்கோ, உங்களை மாதிரி ஆளுங்க தங்கறதுக்குத்தான். எல்லா வசதியும் இருக்கு.

சாமி சாமி… பங்களா முன் இவன் பேரை கூவிக்கொண்டிருந்தாள் பொன்னம்மாள், என்ன பொன்னம்மா இப்படி சத்தம் போடறே, வந்துட்டேன். சொல்லிக்கொண்டே ஓடி வந்தான் சாமி.

அம்மா கூப்பிடறாங்க, பொன்னம்மாள் சொல்லி விட்டு பின் பக்கமாய் சென்றாள். அம்மா கூப்பிடறாங்க, இவனுக்கு கருக்கென்றது, எதற்கு கூப்பிடறாங்க, தயக்கத்துடன் உள்ளே சென்றான்.

முன்னறையில் எந்த அரவமும் இல்லை, எங்கே இருக்கிறார்கள் மாடியில் இருப்பார்களோ மேலே பார்த்தான், எந்த அரவமும் தெரியவில்லை. சரி நிற்போம், கூப்பிட்டால் போகலாம், அப்படியே நின்றான்.

மூன்றாவது அறையில் இருந்து சத்தம் வந்தது, சாமி, சாமி, அந்த அறையை நோக்கி சென்றான். கதவு ஒருக்களித்து இருக்க, அதை மெல்ல திறந்தான். அவள் உடை மாற்றிக்கொண்டிருந்தாள். சட்டென்று திரும்பினான். கதவை தொட்டு திரும்பிய சத்தத்தில் அவள் கதவு பக்கம் பார்த்து காரை வாசல்ல கொண்டு வந்து நிறுத்து, இதா வந்துட்டேன், சொல்லியபடியே அரை குறை உடையுடனே வெளியே வந்தவள் அவன் முன்னாலேயே சரி செய்தபடி அவனை அனுப்பினாள்.

சாமி தடுமாறினான், இருபத்தி ஐந்து வயது இளைஞன், இவள் செய்தது வேண்டுமென்றே என்றுதான் இவன் புத்திக்கு உறைத்தாலும் மனசு அவளின் அங்க லாவண்யங்களை திருட்டுத்தனமாக நினைத்து இரசித்து கொண்டுதான் இருந்தது. முதலாளியம்மா விசாலினிக்கு இருந்தால் நாற்பது இருக்குமா? ஆனால் உடல்வாகு இன்னும் முப்பதை தாண்டாதது போல வைத்திருந்தாள்.

காரை முன் வாசலில் கொண்டு வர நிறுத்தவும் எதிர்புறமாய் ஒரு கார் வந்து எதிராய் நின்றது. ஐயோ முதலாளீ பயத்துடன் காரை விட்டு இறங்கி பய பக்தியுடன் நின்றான்.

என்னடா எங்கே கிளம்பிட்டே? காரை விட்டு இறங்கி அதிகாரமாய் கேட்டபடி பெரிய மீசை வைத்து சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தகுந்தவர் உள்ளே நுழைந்தார் இவன் பின்னாலேயே ஓடி அம்மா காரை கொண்டு வந்து நிறுத்த சொன்னாங்க, பதில் சொன்னான்.

அதற்குள் தன்னுடைய சேலையை இருபக்கமும் சரி செய்தபடி முகத்தில் படிந்த வேர்வைகளை துடைத்து லிப்ஸ்டிக்கையும் சரி செய்தவாறு வெளியே வந்தவள், நாந்தான் காலையிலயே சொன்னேனில்லை, தோப்பு பங்களா வரைக்கும் போகணும்னு, சொல்லியபடியே வந்தாள்.

அவள் அலங்காரங்களையும் முக ஒப்பனைகளையும் ஒரு முறை பார்த்தவர் ஏண்டி தோப்பு பங்களாவுக்கு போறதுக்கு இவ்வளவு மேக்கப் தேவையா? கிண்டலாய் கேட்டார்.

ஆமா உங்களுக்கு எல்லாமே கிண்டல்தான். எனக்கு என்ன உங்களை மாதிரி வயசு ஆயிடுச்சுன்னு நினைச்சீங்களா? நான் டவுனுக்கு போயிட்டு அப்படியே எங்க கிளப் மீட்டிங் முடிச்சுட்டுத்தான் தோப்பு பங்களாவுக்கு போயிட்டு நாளைக்கு இல்லையின்னா மறு நாள்தான் வருவேன். உங்களை கூப்பிட்டா வர மாட்டேங்கறீங்க? இதா இவனைத்தான் கூப்பிட்டுட்டு போக வேண்டியிருக்கு, சலிப்பாய் சொன்னாலும், உள்ளே எக்காளத்துடன் அவள் குரல் இருந்தது.

சாமி கவனமாய் காரை ஓட்டிக்கொண்டிருக்க பின்னால் உட்கார்ந்திருந்த விசாலினி என்ன சாமி உனக்கு பங்களாவுல எல்லாம் செளரியமா இருக்கா?

இருக்குதுங்க.

உன்னைய நாந்தான் நம்ம பங்களா காருக்கு டிரைவரா போட சொல்லி ஏற்பாடு பண்ணேன் தெரியுமா?

எனக்கு தெரியாதுங்க,

இல்லேண்ணா நீ நம்ம டிரான்ஸ்போர்ட் லாரியில ஊர் ஊரா அலைஞ்சிக் கிட்டிருக்கணும்.

அதுதான் எனக்கு நிம்மதி, இப்படி மனதுக்குள் நினைத்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும்.

உன்னைய ஏன் பங்களாவுக்கு வர சொன்னேன் தெரியுமா? நீ நம்ம பையன், நாலும் தெரிஞ்சுக்கணும், புரியுதா நான் என்ன சொல்றேனுன்னு.

இதற்கு ஒன்றும் பேசவில்லை, அமைதியாய் காரை ஓட்டியபடி கோயமுத்தூரின் எல்லைக்குள் நுழைந்தான்.

கிட்டத்தட்ட நான்கைந்து இடங்களுக்கு சென்றாள் விசாலி. முதலில் ஒரு பங்களா போன்ற இடத்துக்கு போனவள், அங்கு இவளின் வயதொத்த ஒரு பெண் இவளுக்காக காத்திருந்தாள், அவளையும் கூப்பிட்டு கொண்டு ஒரு பெரிய ஹோட்டலின் முன்னால் நிறுத்த சொன்னாள். அவனை முன் டேபிளிலேயே டிபன் சாப்பிட சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் உள்புறமாய் நுழைந்தனர். இவன் சாப்பிட்டு விட்டு காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்து நான்கு பேராய் வந்தனர். அவர்களுடன் இரு ஆண்கள் சேர்ந்து வந்தது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவர்கள் எப்பொழுது உள்ளே போனார்கள்? ஒரு வேளை முன்னரே சென்று அமர்ந்திருக்க கூடும், முடிவு செய்தவன் காரை எடுத்தான்.

ஆனால் ஆச்சர்யமாக விசாலினியும், ஒரு ஆணும் இவன் வண்டியில் ஏறிக்கொள்ள மற்ற இணை அவர்கள் வந்த காராய் இருக்கலாம் அந்த காரில் ஏறிக்கொண்டது.

மாலைவரை எங்கெங்கோ கூட்டி சென்றான், இரவு அந்த இணை வேறு பக்கம் பிரிந்து செல்ல இவர்கள் தோப்பு பங்களாவுக்கு போக சொன்னார்கள். அவர்கள் இருவரையும் இறக்கி விட்டு நின்றவனை நீ போய் படுத்து தூங்கு, காலையில கூப்பிடறோம், அனுப்பி வைத்தார்கள்.

கதவை தட்டும் சத்தம் கேட்டு விழித்தவன் இந் நேரத்தில் யார் கதவை தட்டுவது? கண்களை கசக்கியபடி வந்து கதவை திறந்தான். வெளியே விசாலினி அரை குறை உடையுடன் நின்று கொண்டிருந்தாள். அம்மா…நீங்க

சீக்கிரம் கதவை சாத்து, அவரு வந்துட்டாரு..பட்டென அவளே கதவை சாத்த இவன் பிரமையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

விசாலினி கண்ணீருடன் நின்று கொண்டிருக்க மீசை வைத்த முதலாளி கையில் ஒரு கம்புடன் உனக்கு ‘சோத்தை போடற’ முதலாளிகிட்டயே கை வைச்சுட்டயேடா, இரண்டு மூன்று அடியும் அடித்தவர், சே..உன்னைய மாதிரி ஆளுங்களை அடிச்சு..என் பேரை கெடுத்துக்கறதா?

அந்த இருளில் வெளியே துரத்தபட்டு நடுக்காட்டில் நின்றவன், தடுமாறி தடுமாறி முக்கிய பாதைக்கு வந்து சேர்ந்தான். இனி என்ன செய்வது? மறுபடி ஊருக்கு போய் வேறு வேலை தேட வேண்டும்..

திடீரென விளக்கு வெளிச்சப்புள்ளிகள் அந்த கேட்டின் மீது விழ வாட்ச்மேன் எழுந்து வெளியே வந்தவன் ‘காவல்துறை ஜீப்’ என்பது தெரிந்தவுடன் பதட்டத்துடன் கதவை திறந்தான். உள்ளே வந்த ஜீப்பை பின் தொடர்ந்து ஓடி வந்தான்.

உள்ளே வந்து நின்ற ஜீப்பிலிருந்து இறங்கிய காவல் அதிகாரியும் உடன் இரண்டு காவலர்களும் வீட்டுல யாருய்யா?

ஐயா உள்ளேதான் இருக்கறாங்க, கதவை தட்டினான், ஐயா, ஐயா..

அதற்குள் பொறுமையின்றி கூட வந்த காவலரை அலாரத்தை அழுத்த சொல்ல, உள்ளே கி..கி..க்கி என்ற சத்தம் கேட்பது இவர்கள் காதுகளிலும் விழுந்தது.

ஐந்து நிமிடத்தில் உள்ளிருந்து கோபமாய் கதவை திறந்தவர் எதிரில் போலீஸ் நிற்பதை பார்த்த்தும் சற்று சுதாரித்து, வாங்க, இன்ஸ்பெக்டர், என்ன இவ்வளவு தூரம் நம்ம பங்களாவுக்கு..அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.

சோமு எல்லாம் விஷயமாத்தான், உங்க பங்களாவுக்கு இப்ப ஒரு கார் உள்ளே வந்துச்சே, அதுல யார் வந்திருக்கா?

சோமு தடுமாறினார், அது வந்து..என் பிரண்டுதான், அவங்க நண்பர்களோட வந்திருக்காரு, ஏன் என்ன விசேஷம்,

எப்படி அதை வாசல்ல வச்சே விசாரிச்சுடலாமா? இல்லை…

அச்சோ, சாரி சாரி, வாங்க வாங்க உள்ளே அழைத்து சென்றார் மூவரையும்

அவர்கள் என்ன பேசிக்கொண்டார்களோ தெரியாது, இன்ஸ்பெக்டருடன் விக்ரம் வெளியே வந்தவன் அந்த டிரைவரை எழுப்பி கூட்டியா? வாட்ச்மேனிடம் சொன்னான்.

வந்து நின்ற பாலுவுக்கு எதுவும் புரியவில்லை. இங்க பாரு நீதானே இப்ப காரை எடுத்துட்டு இங்க வந்தே? விக்ரம் கேட்டான்.

ஆமாங்க, நீங்கதான……

போதுங்களா இன்ஸ்பெக்டர். உன்னைய ஸ்டேசனுக்கு கூட்டிகிட்டு போகணுமாம்,

என்னைய எதுக்குங்க போலீசுகிட்ட..

ஒண்ணுமில்லை, கவலைப்படாதே, நான் பார்த்துக்கறேன், நீ இவர் கூட போ..காலையில வக்கீலோட வந்துடறேன்.

தூக்க கலக்கம் தெளியாத நிலையிலேயே அவர்கள் வந்த ஜீப்பில் பின்புறம் ஏறினான் பாலு.

கிட்டத்தட்ட விடியும் வரை தரையில் உட்காரவைக்கப்பட்டான், ஏன் எதுக்கு என்று தெரியாமலேயே. இதில் விக்ரம் வக்கீலோடு வருவதாக எதற்கு சொன்னான் என்னும் நினைவிலேயே காத்திருந்தான். காலையில்தான் அவனை கோர்ட்டுக்கு கூட்டி போவதாக சொன்னார்கள்.

போதை மருந்து கடத்தி வந்ததாக தகவல் வந்ததாகவும், அதனால் இவன் ஓட்டி வந்த காரை வழி மறித்து சோதனை செய்த போது எதுவும் கிடைக்கவில்லை, என்றாலும் சந்தேகத்தின் பேரில் ஓட்டுநரை கைது செய்து அழைத்து வந்துள்ளதாகவும், விசாரிக்க பத்து நாள் அனுமதி கேட்டு…

பத்து நாளும் கொசுக்கடியில் உட்காரவைக்கப்பட்டு அங்குள்ளவர்களுக்கு ஊழியம் செய்ய சொல்லி எப்படியோ யாரோ ஒரு புண்ணியவான் வக்கீலின் உதவியால் வெளியே வந்தான்.

அம்மா நான் டிரைவராவே போறேன், அம்மா பொங்கி விட்டாள், வேணாண்டா, அதுக்காகவா உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு ‘டிகிரிக்கு’ படிக்க வச்சேன், உங்கப்பா கிட்டே சீரழிஞ்சதே போதும். சாராயம், கண்ட பொண்ணுக

கிட்டே கூத்தடிச்சு வியாதிய வாங்கி கடைசியில போய் சேர்ந்து நம்மளை சிரமப்படுத்தனது போதாதா? நீயும் நாளைக்கு உனக்கு வரப்போற பொண்ணையும் என்னைய மாதிரி சீரழிய வைக்கப்போறியா?

இல்லைம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோ, நான் எல்லா இடத்துலயும் வேலைக்கு அப்ளை பண்ணிட்டுதான் இருக்கேன், எல்லாத்துக்கும் எக்ஸாம் கூட எழுதிட்டு இருக்கேன். அதுக்காகவாவது பணம் தேவைப்படுது, அப்பா வேலை செய்யற ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியிலயே கிளீனரா கூப்பிடறாங்க. கொஞ்ச நாளைக்கு நேஷனல் பர்மிட் லாரியில, கிளீனரா போனா அப்படியே ஆறு மாசத்துல ‘கம்பெனி வேன்’ ஏதாவது ஒண்ணூல டிரைவரா போட்டுடறேன்னு சொல்லியிருக்காங்க. நீ கொஞ்சம் ஒத்துக்கம்மா, இது ரொம்ப நாளக்கொண்ணும் கிடையாது, சீக்கிரம் எனக்குன்னு நல்ல ஒரு வேலை கிடைச்சா மாறிக்குவேன்.

டேய் உங்கப்பா லாரி ஓட்டறதை பத்தி கதை கதையா சொல்லியிருக்காரு, எங்க போனாலும் கடைசியில சிக்கிக்கறது நாமளாத்தான் இருக்கும், அப்புறம் கொஞ்சம் ஜாக்கிரதையா இல்லையின்னா நம்மளை போட்டு மிதிச்சிருவானுங்க..அப்படி சொல்லி சொல்லியே கடைசியில அவரும் அந்த புதைகுழியில விழுந்து கடைசி வரைக்கும் எழுந்திருக்காமலேயே நம்மளை விட்டு போயிட்டாரு, நீயும் அப்படி ஆயிரக்கூடாதுண்ணு தான் நான் இப்படி பாடா அடிச்சுக்கறேன்.

அத்தனையும் காதில் வாங்கினாலும் இவன் அப்பா வேலை செய்த ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் கிளீனராக ஓடிக்கொண்டுதான் இருந்தான். இரண்டு மாதங்கள் கூட ஓடியிருக்காது. முதலாளி வீட்டில் கூப்பிடுகிறார்கள் என்றார்கள், போனான், அங்கேயே காருக்கு ஓட்டுநராய் இரு என்று சொல்லி விட்டார்கள்.

என்னடா ஆச்சு ? அவன் உடை அழுக்காகி, பஞ்சத்தில் அடிபட்டவனாய் விடியற்காலையில் வீட்டு வாசலில் வந்து கண் கலங்கி வந்து நின்றதை பார்த்ததும் அடிவயிற்றிலிருந்து அம்மா ஆங்காரமாய் கேட்டாள்.

அம்மா ‘அப்பா சொன்னது’ எல்லாமே உண்மைதாம்மா, இந்த தொழில்ல எப்ப வேணா நம்மளை மாட்டவச்சு மத்தவங்க தப்பிச்சுக்கறாங்கம்மா, சொல்லிவிட்டு கோவென அழுதான்.

அம்மா அவனை தேற்றினாள். நான் தான் தலை தலையா அடிச்சுகிட்டேனேடா வேண்டாம் இந்த தொழிலுக்கு போகாதே அப்படீன்னு, நீதான் போயே ஆவேன்னு போனே, இப்ப அவங்களால அடிபட்டு சீரழிஞ்சு வந்து நிக்கறே, அவன் தலையை வருடியபடி, சரி நடந்து நடந்துடுச்சு, விட்டு தொலை, போய் குளிச்சுட்டு வா,

அம்மா கொதிக்க கொதிக்க வைத்த தண்ணீரில் குளிர்தண்ணீரை தலையில் மடேர் மடேர் என விழும் வண்ணம் ஊற்றியவன், சே..நாம எந்தளவுக்கு ஏமாளியா இருந்தா நம்மளை சிக்க வச்சிருப்பானுங்க, விடக்கூடாது, இனி நான் முழிச்சுக்குவேன். இனி நான் பாலுசாமி அப்படீங்கறதை அவங்களுக்கு காட்டத்தான் போறேன்.

அம்மா நீ அப்பா அப்படியிருந்தவரு இப்படி ஆயிட்டாருன்னு சொன்னியே அது உண்மைதான், இனி நான் பாலுசாமியா இந்த தொழில்ல எப்படி சம்பாதிக்கணும்னு காட்டத்தான் போறேன், அது மட்டும் நிச்சயம்.

அவனுடைய உள்ளக்கொதிப்பெல்லாம் அந்த சுடு நீரில் ஆவியாகி போவது போல் குளியல் அறையை விட்டு வெளியே வந்தான்.

அம்மாவின் கையால் திருப்தியாக சாப்பிட்டவன், அம்மா நான் தூங்க போறேன்மா, இனி நான் மறுபடி எங்காவது வேலை தேடி போயிட்டன்னா என்னால தூங்க முடியாது, ஆனா இனி மத்தவங்களையும் தூங்க விட மாட்டேன்.

அம்மா அதிர்ச்சியாய் பார்த்தாள், மறுபடி இந்த வேலைக்கு போகப்போறியா? நான் இவ்வளவு சொல்லியும்..!

என்னை என்னம்மா பண்ண சொல்றே? ஒரு பொம்பளை சொல்றதை நம்பற முட்டாள், இந்த நேரத்துல உன்னை அவன் ரூமுக்குள்ள இழுத்துட்டு போனான்னு சொன்னா, கூப்பாடு போட்டிருக்க முடியாதா? அப்படீன்னு கேக்கத்தெரியாத..

அவ கூட இருக்கறவனை பின்புறமா தப்பிச்சு போறதுக்கு வழி பண்ணறதுக்கு என்னைய பழி கடாவாக்கிட்டு..

அடுத்து நான் வேலைக்கு சேர்ந்த முதலாளி ஏதோ கடத்திட்டு வந்திருக்கானுன்னு எனக்கு தெரிஞ்சும், முதலாளிதானேன்னு நான் கண்டுக்காம இருந்துட்டேன், கொஞ்சம் உஷாரா இருந்திருந்தா அந்த இடத்தை விட்டு அப்பவே நகர்ந்திருக்கலாம், இனி ஏமாறமாட்டேன். நான் எல்லாரையும் நம்பினது போதும், எப்படி ஒரு இடத்துல டிரைவரா வேலை செய்யணும்னு எனக்கு இவங்க கத்து கொடுத்துட்டாங்க.

அம்மா அவனை வெறித்து பார்த்தாள், இதுதான் உன் முடிவுன்னா நான் இதுக்கு தடை சொல்ல மாட்டேன். ஆனா முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க, உலகம் பெரிசு, நான் என்னென்னவோ எதிர்பார்ப்போடத்தான் உங்கப்பாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். ஆனா இவரு போற போக்கை பார்த்தவுடன். எதுவுமே முடியாம போச்சு.

எங்கப்பா அந்த காலத்துல ஏழெட்டு லாரி வச்சு நல்லா சம்பாரிச்சுகிட்டு இருந்தவர்தான். எங்களோட போதாத காலம், எல்லாம் போயி கடைசியில என்னை உங்கப்பாவுக்கு கட்டி வைக்கும்போது ஒண்ணுமில்லாத ஆளா இருந்தாரு.

அப்படியும் நான் மனசு தளராம கஷ்டப்பட்டு உன்னை பட்டபடிப்பு வரைக்கும் படிக்க வச்சிருக்கேன்னா நீயாவது இந்த நிலையிலிருந்து மேல வருவேன்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா நீயும் இப்படித்தான்னு போகறேன்னு சொன்னா நான் என்ன பண்ணமுடியும்?

உன்னுடைய படிப்பை வச்சு ஏன் முயற்சி பண்ண மாட்டேங்கறேன்னு எனக்கு புரியலை. அப்ப உன்னுடைய பட்டபடிப்பு வேஸ்டா? இதுக்கு ஆரம்பத்துல இருந்து இந்த தொழிலுக்கு போயிருந்தா நெழிவு சுழிவு தெரிஞ்சிருக்குமே !

சரிம்மா..எனக்கு தூக்கம் தூக்கமா வருது, அவளின் பேச்சை தட்டி கழிப்பது போல போய் படுத்துக்கொண்டான்.

பனிரெண்டு மணிக்கு மேல் பாலுசாமி, பாலுசாமி வெளியே சத்தம் கேட்க பாலுவின் அம்மா எட்டி பார்த்தாள். தபால்காரர் நின்று கொண்டிருந்தார். வேகமாக வெளியே வந்தாள் என் பையந்தாங்க, ஏனுங்க?

அவருக்கு ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கும்மா கையெழுத்து போட்டு வாங்கணும்,

கொஞ்சம் இருங்க, அவன் தூங்கிட்டு இருக்கான், எழுப்பி விடறேன், உள்ளே சென்று அவனை உசுப்பினாள். பாலு, பாலு, உனக்கு ஏதோ தபால் வந்திருக்காம்.

என்னவோ ஏதோவென்று எழுந்தவன் அடித்து பிடித்து வெளியே வந்து கவரை கையெழுத்து இட்டு வாங்கினான்.

பிரித்து படித்து கொண்டிருந்தவன் முகத்தை பார்த்தபடி அவன் அம்மா நின்று கொண்டிருந்தாள். பாலுவின் முகம் சற்று பிரகாசமாவதை பார்த்தவள் மனம் ஏதோ நல்ல செய்தி என்று அவள் உள்ளம் சொல்லியது.

அம்மா நான் எழுதியிருந்த ‘பேங்க் எக்ஸாம்’ பாஸ் பண்ணிட்டேன், சர்ட்டிபிகேட்ஸ் வெரிபிகேசன்ஸுக்கு கூப்பிட்டிருக்காங்க, அடுத்தவாரம் சென்னைக்கு வர சொல்லியிருக்காங்க.

இந்த குடும்பத்தில் முதன் முதலாக ஒரு நல்ல செய்தியை கேட்ட மகிழ்ச்சியில் அவனின் அம்மா நிற்க, இதுவரை இவன் கண்டு அனுபவித்த எல்லா சிரமங்களையும் தாண்டி தனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைத்து விட்டதன் பலனை அன்றுதான் உணர்ந்தான்.

அம்மா அவன் தோளை தொட்டு கடவுள் உனக்கு கொடுத்த சிரமங்கள் எதுக்குன்னு இப்ப புரிஞ்சுகிட்டியா? போ நல்லா தூங்கு, இந்த சிரமம் உனக்கு

வாழ்க்கையோட நிஜத்தை காண்பிச்சிருக்கு, அதுல எதுலயும் சிக்காம இருக்கணும் அப்படீங்கறதை அனுபவமா உணர்த்தியிருக்கறதா நினைச்சுக்க..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *