அனுலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 6,714 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் ஒரு கர்வியாவதற்குக் காரணம் அவள் தான்; மண்டைக் கர்வம் பிடித்து நான் அலைந்தேன் என்று கூற முடியாது. ஆனால், அகம்பாவம் என்னும் திரை என் கண்களை மறைத்திருந்தது.

என் முகத்திலே கோபத்தைக் கண்டால் அவள் பயப்படுவாள். கண்கள் அங்குமிங்கும் அலை பாயும்.

எனக்கு அதிலே பெருமை கூட.

காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் இனக் கவர்ச்சி ஏற்படுவது உண்டுதான் – ஆனால் காதல் என்ற தன்மையை நான் என்றுமே நம்பியது கிடையாது.

காதல் சுழலின் மத்தியில் சிக்கி நான் திணறிய போது கூட ‘இது காதல் தானா?’ என்ற சந்தேகம் எனக்குக் கடைசி வரையில் இருந்து கொண்டு தான் வந்தது.

ஆனால் அனுலாவுக்கு அப்படிப்பட்ட சந்தேகம் ஒரு போதும் இருந்ததாகத் தெரியவில்லை. என்னை மனமார அவள் நேசிக்க விரும்பினாள்; நேசித்தாள். அதனால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப்பற்றி அவள் சிந்தித்ததாகவே தெரியவில்லை.

எனக்கு மாற்றல் கிடைப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருந்தன. அதன் பிறகு நான் இலங்கைத் தீவின் ஏதாவதொரு மூலையில் கிடக்கும் போஸ்டாபீஸில் போய் முடங்கி விடுவேன். இன்று நான் குடியிருக்கும் இந்த அறையும் காலியாகி விடும்.

அனுலாவின் மனம்?

அந்தப் பிஞ்சு உள்ளத்தோடு நான் விளையாடினேன். புதிய சோதனைக்கு என்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தேன்.

காதல் எப்போது உதயமாகிறது என்று யாராலும் கூற முடியாது என்று சொல்வார்கள். இரவிலிருந்து பகல் பிறப்பது போல் ஏதோ ஒரு கணத்தில் அதுவும் பிறந்து விடுகிறது.

ஆனால் எங்களுடைய காதல் எப்பொழுது பிறந்த தென்று என்னால் கூற முடியும்போல் தோன்றுகிறது.

மத்தியானச் சாப்பாட்டுக்கு மாத்திரம் சில்வா என்னுடன் உட்கார மாட்டார். நான் தனியாகத்தான் உட்காருவேன். எனக்கெல்லாம் அப்போது அவர் களுடைய உணவு நன்றாகப் பழகிப் போய் விட்டது. அனுலா தன்னுடைய கையால் போட்டு வைத்த ‘அச்சாறு’ இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது.

மேஜையிலே வைத்த பீங்கான் தட்டிலே , அவள் ஒவ்வொன்றாக எனக்குப் பரிமாறினாள். நின்றபடியே அவள் கரண்டியால் எடுத்து வைத்தாள். குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், என் உள்ளுணர்ச்சி ஏதோ கூறவே, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன்.

வைத்த கண் வாங்காமல் அவள் என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுடைய கண்களில் அன்று என்றைக்குமே இல்லாத ஒருவிதக் கவர்ச்சி ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.

அவள் மெதுவாகச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு எனக்குப் புதியதாக இருந்தது.

அவ்வளவு காலமும் அவள் ஒரு சிறுமி. திடீரென்று அன்று, அவள் இளமையின் வாயிலில் நின்று என்னை ஆகர்ஷிப்பது போல் பட்டது.

அந்தச் சிரிப்பில் நிறைய அர்த்தமிருந்தது.

***

நாளுக்கு நாள் அவளுடைய அழகு விபரீதமாக அதிகமாகிக் கொண்டே வந்தது. எப்பொழுது பார்த்தாலும் அவள் ஏதாவது ஒரு புது விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு என் முன்னே தோன்றுவாள். சில வேளைகளில் அவளுடைய அலங்காரம் சிறு பிள்ளைத்தனமான தாகக்கூட எனக்குப்படும்.

ஆனாலும், அதைக் கூட நான் மகிழ்ச்சியுடனேயே ரசித்தேன். என்னை யறியாமல் என் மனம் அவளைப் பற்றிச் சிந்திப்பதை நான் உணரலானேன்; என் அன்பு நிதானமாக வளர்ந்தது.

அப்பொழுதுதான் அவள் அந்தத் தவறைச் செய் தாள். அவளுடைய அன்பு நிதானம் தவறிவிட்டது. ஒரு கணமாவது என்னைப் பிரிந்திருக்க அவளால் இயலவில்லை. தன் தகப்பனாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட மறந்து அவள் என்னுடனேயே ஐக்கியமாகிவிட்டாள்.

என்னுடைய அன்பிலும் பார்க்க அவளுடைய அன்பு அதிகம் என்பதை நான் உணரலானேன். அப் போதுதான் என்னிடத்தே கர்வம் பிறந்தது.

நான் இல்லாமல் ஒரு கணமாவது அவள் வாழ முடியாது என்று நிதர்சனமாக எனக்குத் தெரியத் தொடங்கியதும், சிறிது சிறிதாக அவளை உதாசீனம் செய்யத் தலைப்பட்டேன்.

அவளிடமுள்ள சிறிய குறைகள் கூட எனக்குப் பூதாகாரமாகத் தெரியத் தொடங்கின.

பூப்போன்ற அவளுடைய இதயத்தை அடிக்கடி கொடூரமான வார்த்தைகளால் புண்படுத்தினேன். வேண்டுமென்றே அவள் நெஞ்சம் நோகப் பேசி, அந்த முகம் படும் வேதனையை ரசிக்கத் தலைப்பட்டேன். ஏதோ ஒரு மகிழ்ச்சி எனக்கு அதனால் ஏற்பட்டது போலத்தான் தெரிந்தது.

அவளுக்கு என் போக்கு விசித்திரமானதாகப் படவில்லை. என் சுபாவம் அதுதானென்று எண்ணினாள் போலும்; ஒரு குறையையும் அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கிடைப்பதோடு திருப்தியடைந்தாள்.

என்னை நேசிக்காமல் ஒரு கணமும் வாழ முடியாது என்பதை வெளிப்படையாகக் காட்டவும் செய்தாள்.

***

சில்வாவுக்கு, படங்களுக்குச் சாயம் பூசி விற்பது தான் தொழில். சில வேளைகளில் அனுலாவும் தகப்ப னாருக்கு உதவியாகச் சாயம் பூசுவது உண்டு. அன்றைக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். நான் வரும் நேரமானதும் உள்ளே சென்று கைகளைக் கழுவிவிட்டு எனக்காகக் காத்திருந்தாள்.

எப்படித்தான் கழுவினாலும் அந்த நிறம் கையி லிருந்து இலகுவில் போய்விடுமா?

அவள் வாசல் வரையில் ஓடோடியும் வந்து என் முன் வந்து நின்றாள்; என்னைப் பார்த்துத் தன்னுடைய மகிழ்ச்சி முழுவதையும் கொட்டிப் புன்னகை பூத்தாள்.

நான் கண்களைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “இது என்ன நாற்றம் – சாயம் பூசினாயா?” என்று அருவருப்புடன் கேட்டேன்.

அவள் முகம் கூம்பிச் சிறுத்தது. அந்த மெல்லிய இருதயத்தை வேதனை செய்வதில் ஏனோ எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அவளுடைய துக்கம் என்றுமே நிலையான தல்ல. என்னிடமிருந்து ஒரு சிறு புன் சிரிப்புக் கிடைத்தாலும் போதும், அவள் தன் கவலைகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு என்னிடமே சரண் புகுந்துவிடுவாள்.

நாணப்படக் கூடத் தெரியாத அவள், தன் குழந்தைப் பிள்ளை சுபாவத்தினால் மாத்திரம் என்னைக் கவர்ந்து விட்டாளா?

***

நான் சாய் மனையில் படுத்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். அவள் வந்து ஒரு பக்கத்துச் சட்டத்தில் சாய்ந்து கொண்டு, தானும் ஏதோ வாசிப்பதுபோல் தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் தமிழ் பேசுவது அழகாக இருக்கும். ஆனாலும் அவள் அடிக்கடி அப்படிக் குனிந்து வாசித்தபோது, அவளுடைய நீண்ட பின்னல்களி லொன்று என் மார்பில் விழுந்து கூச்சத்தைக் கொடுத்தது.

எனக்கு அவளைக் கோபமாகப் பார்க்க விருப்பம் வரவில்லை. நிமிர்ந்து அவளைப் பார்த்தேன், அவள் பயந்துவிட்டாள். அவள் பயப்படும் போதுகூட ஓர் அழகு. அந்த அழகை ரசிப்பதற்குத்தானா நான் அவளை அடிக்கடி கோபித்திருக்கிறேன் என்றே நான் நினைப்பதுண்டு.

பயத்துடன் அவள் என்னையே பார்த்துக்கொண் டிருந்தாள். தன் கண்களை அவள் எடுக்கவே இல்லை.

“அனு போகிறாயா, இல்லையா?”

அவள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். கண்கள் குளமாகின. எனக்கு இரக்கமாக இருந்தது.

என்ன நினைத்துக் கொண்டேனோ, “அனு, ஒரு பாட்டுப் பாடு” என்றேன்.

நான் எதற்காகப் பாடச் சொன்னேன் என்று எனக்கே தெரியாது. பாடச் சொல்லிக் கேட்டதும் அவள் வெட்கத்துடன் மௌனம் சாதிப்பாள் என்று தான் நினைத்துக்கொண்டேன்.

ஆனால், நான் சொல்லி வாய் மூடுமுன் திடீரென்று அவள் பாட ஆரம்பித்தாள். அவ்வளவு நாளும், எனக்கு, அவளுக்குப் பாட்டு வரும் என்று கூடத் தெரிந்திருக்கவில்லை.

எனக்கு முன்னால் நிமிர்ந்து நின்று, பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாருக்குப் பாடம் ஒப்பிப்பதுபோல, அடக்க ஒடுக்கமாக, அவள் பாடிக் கொண்டிருந்தாள்.

“நான் ஒரு ராசா மகள்” என்று ஆரம்பிக்கும் ஒரு சிங்களப் பாடல் அது.

‘எங்களிடம் ஆயிரம் யானைகள் இருந்தன.
ஆயிரம் குதிரைகள் இருந்தன.
ஏராளமான செல்வம் இருந்தது.
எங்கள் புகழ் எங்கெல்லாமோ பரவியது;
இருந்தும் என்ன?
இன்று எங்கள் செல்வமெங்கே, புகழ் எங்கே?” என்று தொடர்கிறது அந்தப் பாட்டு.

என்னுடைய மனமானது அனுலாவை ராசா மகளாகக் கற்பனை செய்து பார்த்தது. நான் அந்தச் சிந்தனைகளில் மூழ்கியிருந்த போது, பாட்டு முடிந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

அவள் ஓர் அடி முன்னுக்கு வந்து “பாட்டு எப்படி இருந்தது?” என்ற பாவனையில் நின்றாள்.

நான் திடுக்கிட்டு விட்டேன்.

அவளுடைய கன்னத்தை மெதுவாகத் தட்டி “உன்னைப்போலவே உன் பாட்டும் அழகாக இருந்தது” என்றேன்.

அவள் மனம் சந்தோஷப்படும்படியாக நான் செய்தது அது ஒன்றுதான். மகிழ்ச்சியால் அவள் பூரித்துப்போனாள்.

மாற்றல் உத்திரவு வந்துவிட்டது. சில்வாவிடம் அதைக் கூறும்போதே அனுலா கேட்டிருக்க வேண்டும்.

“அனு”

அவளைக் காணவில்லை. வெளியே வந்து தேடி னேன். எதிர் பார்த்தபடியே அவள் அந்த “மொற” மரத்தின் கீழிருந்து அழுதுகொண்டிருந்தாள். அந்த மரம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் காய்க்கு மாம். அடுத்த வருடம் அது காய்ப்பதாக இருந்தது. எனக்கு அந்தப் பழத்தைப் பறித்துத்தர வேண்டு மென்று அவளுக்கு எத்தனை ஆசை.

அனுவை அழவேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. அப்படி நான் கூறியிருந்தால் ஒருவேளை உடனேயே அழுகையை நிறுத்தியிருப்பாள். அழுவதற்குக் கூட அவள் என்னிடம் தான் உத்தரவை எதிர் பார்த்தாள்.

அனு” முகத்தை மூடியிருந்த கைகளை மெதுவாக நீக்கி அவள் என்னைப்பார்த்தாள்.

“அனு, நான் எப்படியும் போகத்தானே வேண்டும்.”

“அப்போ நானும் வருகிறேன்.”

“நீயா?”

“ஏன், வந்தால் என்ன?”

அனு விளையாடவில்லை; உண்மையைத்தான் பேசினாள்; ‘வா’ என்றால் வரத்தான் செய்திருப்பாள்.

“அனு, நீ என்ன குழந்தையா?”

அப்போது அவள் தன் முகத்தை நிமிர்த்தி என்னைப் பரிதாபகரமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அடக்கமுடியாத துயரம் தொனித்தது.

“உண்மையிலேயே என்னை விட்டுப் போகிறீர்களா?” முதன் முறையாக அவள் விக்கி விக்கி அழலானாள்.

அவளுக்கு என்னுடைய முடிவு மிக மிக ஆச்சரி யத்தைக் கொடுத்திருக்கவேண்டும்.

என்னுடன் அதற்குப் பிறகு அவள் பேசவே இல்லை; நேரே போய்ப் படுத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை பெட்டி படுக்கைகளை நான் அடுக்கிக்கொண்டிருந்தேன். அனுலா கைகள் இரண் டையும் பின்னுக்குக் கட்டியபடி மெதுவாக நடந்து வந்தாள். ரகசியமாக என் பெட்டிக்குள் எதையோ வைத்துவிட்டு என் முகத்தையே ஆர்வத்தோடு பார்த்தபடி நின்றாள்.

“அனு, இது என்ன?”

போன கண்டிப் பெரஹராவின்போது அவள் வாங்கிய ஒரு சிறிய புத்தர் சிலை; யானைத் தந்தத்தி னால் செய்தது. எவ்வளவு ஆசையாக அதை வாங்கினாள். எனக்கு அதைப் பெற்றுக்கொள்ள மனமே இல்லை; ஆனால், அவளுடைய கண்களைப் பார்த்ததும் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.

“இனிமேல் இங்கே வரவே மாட்டீர்களா?”

எனக்கு அவள் முகத்தைப் பார்க்க இரக்கமாக இருந்தது.

“அனு, உன்னைப் பார்க்காமல் இருப்பேனா – நீ “கிரிபத்” செய்து தருவாயல்லவா?”

நான் கடைசியாக விடைபெற்றபோது அவள் திக்கித்திக்கி, என் காதோரமாக முகத்தை வைத்து “என்னிலே உங்களுக்கு ஆசையில்லையா” என்று கேட்டாள்.

அப்போது கூட அவள் முகத்தில் நான் நாணத் தைக் காணவில்லை.

அவளுடைய அன்பு ஆழமானதில்லையா? இல்லா விட்டால் எப்படிச் சிரித்தபடியே அவளால் விடை கூற முடிந்தது?

ஆனால் அவளை விட்டுப் பிரிய வேண்டும் என்ற விசித்திரமானதோர் ஆவல் என் அடிமனத்தில் நெடுநாளாக உறைந்துகொண்டுதானிருந்தது. பிரிவின் வேதனையை உண்மையிலேயே நான் அனுபவிக்க வேண்டுமென்ற தணியாத ஆசையாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால், ஆசை இருந்த அளவுக்கு அதைத் தாங்கும் சக்தி எனக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எந்நேரமும் என் மனத்தை அனுலாவின் வேதனை நினைவுதான் நிறைத்துக்கொண்டது. ஒரு காரியமும் என்னால் செய்ய இயலவில்லை. பைத்தியம் பிடித்து விடுமென்ற நிலையில் இருந்தேன்.

என் வேதனையே இப்படியென்றால் – அனு – அவள் பிஞ்சு உள்ளம் இதைத் தாங்குமா?

நானே ஏற்றுக்கொண்ட சுமையை நான் சுமக்க முடியாமல் தவித்தேன்.

அனுலா தூணோடு உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு, பாடிக்கொண்டிருக்கிறாள்.

“நான் ஒரு ராசா மகள்”

மிரண்டு பார்க்கும் அவளுடைய விழிகள் என் முன்னே வந்து நின்றன. பயத்தைத் தவிர அவள் என்னிடம் வேற எதைக் கண்டாள்?

***

என் நீண்டகால வாழ்க்கையில் அனுலா ஒரு குமிழ் என்று ஒதுக்கிவிடத்தான் நான் நினைத்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையே அவள் என்று நிலைமை மாறிவிட்டது. அனுலா இல்லாத ஒவ்வொரு கணமும் வேதனை தான் என்பதை உணரலானேன். “அனு”, “அனு” என்று என் மனம் அவளையே நினைத்துக்கொண்டது. தோல்வியை ஒப்புக்கொள்ள அவமானமாக இருந்தது.

என்னுடைய கர்வமெல்லாம் எங்கே?

***

மனத்திலே மிகப் பெரிய பாரம் அழுத்திக்கொண்டிருந்தது.

தூரத்தில் வரும்போதே, ஆவல் தேம்பிய என் கண்களில் அனுலா தென்பட்டு விட்டாள்.

கால்கள் இரண்டையும் மடித்து, உட்கார்ந்திருந்தாள்! என் நிழல் தான் முதலில் விழுந்திருக்க வேண்டும்; திடுக்கிட்டுத் திரும்பிய அவளுடைய கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றன. அடுத்த கணம் இனந்தெரியாத சோகம் அந்த முகத்தைக் கப்பியது.

அவள் உள்ளே ஓடி விட்டாள்.

ஏற்கனவே சாயம் பூசிய படங்கள் சில வெய்யி லிலே காய்ந்து கொண்டிருந்தன. தூரத்திலே, எமக்கு மிகவும் பழக்கமான அந்த ‘மொற’ மரம் ஒன்றிரண்டு பூக்களை உதிர்த்தபடியே நின்று கொண்டிருந்தது. கொடியிலே சில்வாவின் சாரம் – அதே பழைய சாரம் தான் – காய்ந்து கொண்டிருந்தது.

அனுலா வரவில்லை.

“அனு”

என் குரலில் அப்போது கூட, அன்பிலும் பார்க்க அதிகாரந்தான் நிமிர்ந்து நிற்பதாகப்பட்டது. உள்ளே போனேன். அவள் கையிலே உள்ள சாயத்தை மண் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.

“அனு”

அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“அனு, கோபமா?”

அவள் மெதுவாகத் தலையை நிமிர்த்தி அசைத் தாள் அவளுடைய இயல்பான புன்னகை அப்போது கூடத் தோன்றவில்லை.

“அப்பா எங்கே?”

“புது டவுனுக்குப் போயிருக்கிறார்”

கேள்வியும் பதிலுமாகத்தான் இருந்தது. பழைய பிடிப்பு இப்பொழுது இல்லை.

என்னுடைய அந்தப் பழைய அனுலா எங்கே?

‘கிரியத்தின்’ நறுமணம் மெதுவாக மிதந்து வந்தது. நாலு தாள்கள் கிழிக்கப்படாமல் காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் புத்தர் சிலை இருந்த இடம் இப்போது வெறிச்சென்றிருந்தது.

மேசையிலே, சில்வாவுக்கு வந்த கடிதம் ஒன்று, உடைக்காமலே கிடந்தது.

“அனு, விளக்கைக் கொளுத்த வில்லையா?…”

கை விளக்கை ஏற்றிக்கொண்டு வந்து மேசை மேலே வைத்துவிட்டு, அவள் தூரப் போய் நின்றாள்.

சிறிது அழுக்குப் படிந்த மேற்சட்டை; இடையிலே விசிறிக் கொய்யகம் வைத்து உடுத்திய சேலை; சோகம் கவிந்த முகம்; அந்த நிலையிலுங்கூட அவள் சிகிரியா சித்திரத்தைத் தான் எனக்கு நினைவூட்டினாள்.

முதன் முறையாக அனுலாவின் முன்னிலையில் நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னால் அதிகாரம் செய்யவும் முடியவில்லை; பணிந்து போகவும் இயலவில்லை.

பரிதாபமாக அவளையே பார்த்தபடியிருந்தேன். அவள் முகத்தைப் பார்க்கக் கூடியதாக விளக்கை எடுத்து வைத்தபோது ஏனோ எனது கை சிறிது நடுங்கியது.

“நான் வந்தது உனக்குப் பிடிக்கவில்லையா?”

அவள் முகம் சிறுத்துக் கறுத்தது; மௌனமாகக் குனிந்தாள்.

“அப்பா என்னைப் பியதாசாவுக்குப் பேசுகிறார்….”

என் மனமானது இதற்கு முன் ஒரு போதும் அடைந்திராத ஒரு வேதனையை அந்தக் கணத்தில் அனுபவித்தது. அனுலா இன்னொருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள், என்பதையே என்னால் நினைக்க முடியவில்லை. என்றாலும் கூட அடிமனத்தின் தளத்திலே ஒருவித நிம்மதி நிலவியதையும் என்னால் உணர முடியாமல் போகவில்லை.

அனுலாவைப் பார்த்தேன். மங்கிய விளக்கின் ஒளியிலே அவள் கண்கள் பளபளத்தன. அவள் பொல பொலவென்று கண்ணீர் உகுத்த நாட்களைப் போல் இதையும் என்னால் உதாசீனம் செய்ய முடியவில்லை. அந்த ஒரு சொட்டுக் கண்ணீரே என் இதயத்தைத் தகர்த்து விடும்போலப்பட்டது. அவள் அழுவதை நான் விரும்பவில்லை. பழைய அனுலாவாயிருந்திருந்தால் அந்தக் கண்ணீர் என்னை ஒன்றும் செய்திருக்க முடியாது.

ஆனால், என் முன்னே நின்ற அனுலாவின் கண்ணீரைத் தாங்க என்னுடைய இதயத்தில் வலுவில்லை.

“அனு! அந்தப் பாட்டைப் பாடுகிறாயா?”

அவள் மௌனமாக இருந்துவிட்டாள். அந்தப் பிடிவாதமான மௌனத்தை என்னால் தாங்க முடியவில்லை.

நான் பாடச் சொன்ன போது முழு மனத்தோடு அவளைக் கேட்காது போனாலும் கூட என் வேண்டு கோளை அவள் நிராகரித்தாள் என்றிருக்க என் மனம் ஒப்பவில்லை.

“அனு எனக்காகப் பாடமாட்டாயா…?”

அவள் ஏதோ சொல்ல விரும்பினாள்; உதடுகள் மாத்திரம் படபடவென்று துடித்தன.

“இன்னும் எத்தனை நாளைக்கு உன்னிடம் இப்படி யாசிக்கப் போகிறேன்?”

அவளுடைய வலது கையின் நீண்ட விரல்கள் என் வாயை மெத்தென மூடின.

சாயத்தின் மெல்லிய நாற்றம் மூக்கிலே இலேசாகப்பட்டது.

படங்கிலே இருந்து இழையை ஒவ்வொன்றாகப் பிய்த்தபடி அவள் மெதுவாகப் பாடத்தொடங்கினாள்.

“நான் ஒரு ராசாமகள்!”

அவள் பாடிக்கொண்டு போகும்போது துடிக்கின்ற விளக்கின் ஒளியில் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பாடலின் இறுதி வரிகளுக்கு வந்தபோது உலகத்துச் சோக இசையெல்லாம் அவள் குரலில் இழைந்து விட்டதாகத் தான் எனக்குப்பட்டது.

“நான் அணியும் நகையெல்லாம்
பித்தளை தான் – பொன்னல்ல;
நான் உடுத்தும் சேலையெல்லாம்
கிழிந்தவைதான் – பட்டல்ல
என்றாலும் கூட –
என்னைப் பார்த்து சிரிக்காதே,
தெருவிலே பொறவனே!
நான் ராசா மகள் –
நான்…நான்…”

அந்தக் கடைசி வரிகளை அவள் பாடவே இல்லை. அதற்குப் பதில் ஒரு மெல்லிய விக்கல்தான் அவளிட மிருந்து வெளிப்பட்டது .

விளக்கு எப்போது அணைந்தது?

ஒரு துளி கூட காற்று வீசவில்லையே.

– 1959-61

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *