கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,683 
 

பஞ்சாயத்து. ..! ஊர் மொத்தமும் கூடி இருந்தது. தலைவர் தணிகாசலம் ஆலமரத்து மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் உபதலைவர், பொருளாளர், இன்னும் சில முக்கியமானவர்கள்.

கீழே…. வலப்பக்கம் ராமசாமி, அவர் மகன்கள் ராமு, சோமு, சிவா, சிங்காரம்.

அவர்களுக்கு நேரெதிர் இடப்பக்கம் கணேஷ். துபாய் காசு… கழுத்தில் கையில் தடித்தடியாய் தங்க சங்கலிகள், மோதிரம்கள்.

அவனை ஒட்டி கூட்டத்தோடு கூட்டமாய்….இவன் மாமனார், மாமியார், மனைவி.

தலைவர் தணிகாசலம் கூட்டம் , குற்றவாளிகளாய் நிற்பவர்கள் எல்லோரையும் ஒரு முறை ஏறிட்டார். கடைசியில் ராமசாமி பக்கம் திரும்பினார்.

” உங்க குறையைச் சொல்லுங்க. .? ” என்றார்.

ராமசாமிக்கு வயது 60. துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். வாயைத் திறந்தார்.

” ஐயா ! நான் நடுத்தர வர்க்கம். கூரைவீடு. நாலு ஏக்கர் நிலம் உள்ள சின்ன விவசாயி. விவசாயக் கூலி. விலைவாசியேற்றம், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாய் விவசாயத்துல பாதிப்பு. நான் உழைச்சு சம்பாதிச்சாதான் வீட்டில ஓரளவுக்குப் பசி, பட்டினி இல்லாம இருக்கலாம் என்கிற நிலை.

என் குடும்பம் கொஞ்சம் பெரிசு. பொட்டைப் புள்ள வேணும் என்கிற ஆசையிலேயே வரிசையாய் அஞ்சு ஆம்பளை புள்ளைங்க. எதிர்ல நிக்கற கணேஷ்தான் மூத்தவன். மத்த நாலு பேரும் என் பக்கத்துல நிக்கிறாங்க.

நான் அத்தனைப் புள்ளைங்களையும் அரசாங்கப் பள்ளிக்கூடத்துலதான் படிக்க வச்சேன். ஓரளவுக்குப் படிச்சாங்க. மூத்த மகன் கணேஷ் பத்தாம் வகுப்பு பெயிலானான். அதுக்கு மேல படிக்க விருப்பமில்லாம தாய்க்குத் தலைப்பிள்ளை பொறுப்பை உணர்ந்து என்னோட சேர்ந்து குடும்ப பாரம் சுமக்க வந்தான். கூலி வேலை செய்து பணத்தை அம்மா கையில் கொடுத்தான். மத்த நாலு புள்ளைகளும் வரிசையாய் படிச்சிக்கிட்ருந்தானுங்க.

இருபத்தஞ்சு வயசுல கணேசுக்கு அதிர்ஷ்டம். திடீர்ன்னு ஒரு நாள். ..

” அப்பா ! நான் துபாய் போய் சம்பாதிக்கலாம்ன்னு விருப்பப்டுறேன் ” சொன்னான்.

எனக்கு வியப்பு, திகைப்பு.

‘ என்ன, எப்படி ? ன்னு விபரம் கேட்டேன். ‘

‘ துபாயிலேருந்து பக்கத்து ஊர் டவுனுக்கு ஒருத்தர் வந்திருக்கார். அவர் எனக்கு ரொம்ப பழக்கம், வேண்டியப்பட்டவர். இங்கே கிடந்து கஷ்டப்படவேணாம். துபாய் வா, சம்பாதிக்கலாம். உன் வருமானத்துல ஒட்டு மொத்த குடும்பத்தையும் காப்பாத்தி நீயும் நல்லா இருக்கலாம். பாஸ்போர்ட், விசா பொறுப்பு என்னுது. ஒரு லட்சம் செலவாகும்ன்னு ‘சொன்னார் ன்னு சொன்னான்.

‘ இங்கே கால் காசு சேர்க்க முடியாம வயித்துப் பாட்டுக்கேக் கஷ்டம். ஒரு லட்சம் எப்படி முடியும்..? ன்னு ‘ நான் கணேசைத் திருப்பிக்கேட்டேன். ‘

‘ அதுக்கு அவன், வழி இருக்குப்பா. இருக்கிற நிலத்தை வித்தா முக்கால் வாசி தேறும். மீதியைக் கடனோ உடனோ வாங்கி புறப்பட்டுலாம். சம்பாதிச்சு மொதல்ல கடனைத் திருப்பிட்டு.. அடுத்து ஒண்ணுக்குப் பத்தாய் நிலம் வாங்கி, வீடு கட்டலாம்ப்பா! ‘ சொன்னான்.

எனக்கு அது சரியாய்ப்பட்டது. இருந்தாலும்…. எல்லா புள்ளைங்க, தாய்க்காரியைக் கூப்பிட்டு கலந்தேன். அவுங்களும் சரி சொன்னாங்க. உடனே நிலத்தை வித்தேன். முப்பது ஆயிரம் துண்டு விழுந்தது. பையன் சம்மத்தத்தோட அஞ்சு பைசா வட்டிக்குக்கடன் வாங்கினேன். பையன் விருப்பப்படி காட்டின ஆள்கிட்ட குடுத்து, ஒரு மாசத்துல சொன்னபடி செய்ஞ்சு அவனைத் துபாய்க்கு அழைச்சுக்கிட்டார்.

‘ இங்கே சம்பளம் சரி இல்லே.! என் செலவுக்கே கஷ்டம். ஒரு வருச காலம் இப்படித்தான். அப்புறம் ஒரு நல்ல வேலைக்குப் போய் பணம் அனுப்புறேன் !’ னு அங்கிருந்து எழுதினான்.

எனக்கு, என்ன செய்யறதுன்னு தெரியல. இருந்த நிலத்தை வித்துட்டதுனால ரொம்ப கஷ்டம். என் ஒருத்தன் சம்பாத்தியம் எல்லார் வயித்தையும் இட்டு நிரப்ப முடியல. கஷ்டம் தாங்காம ஒவ்வொரு பையன்களா படிப்பை விட்டானுங்க. ஒருத்தன், வயல் வேலைக்குப் போய் தினம் கிடைச்சதைக் கொண்டுவந்து கொடுத்தான். அடுத்தவன், அச்சாபீஸ் வேலைக்குப் போய் தினம் பத்து கொடுத்தான். இன்னொருத்தன், கடைக்கு எடுபிடி வேலைக்கு அமர்ந்தான். கடைசி பையன், சித்தாள் வேலைக்குப் போய் அரைக் கூலி கொண்டு வந்தான். குடும்பம் குலையாம விழுதுகள் சேர்ந்து தாங்கிடுச்சு.!

கணேசு சரியா ஒன்னேகால் வருஷம் கழிச்சி அம்பதாயிரம் பணம் அனுப்பினான். வட்டிக்கு வாங்கின கடன். கையில ஒத்தப்பைசா இல்லாம சரியாப்போனது. பெரிய சுமை நீங்கிடுச்சு.

கணேசு அடுத்த ஒரு வருசம் பணமே அனுப்பல. ஆனா புள்ள. .. கொஞ்சம் கணிசமான தொகையோட மூணு மாச விடுப்புல வீடு திரும்பினான். வீட்டுக்குத் கூரை மாத்தினான். பையனுக்கு வரன் நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு வந்து குவிஞ்சுது. கணேசுக்குக் காலா காலத்துல கழிச்சு முடிச்சு கடமையை முடிப்போம்ங்குற எண்ணத்துல பையன் சம்மதத்ததோட காரியத்துல இறங்கினோம். அருமையாய் ஒரு பொண்ணு கெடைச்சாள். முடிச்சோம்.

கொண்டு வந்த பணம் குடும்ப செலவுக்கும், புதுமணத் தம்பதிகள் உல்லாசமாக செலவு பண்ணவும்தான் சரியாய் இருந்தது.

கணேசு திரும்ப துபாய் போகும் சமயம் என்கிட்டேயேயும், தாய்க்காரிகிட்டேயும் வந்தான்.

‘அப்பா ! அம்மா ! நான், அடுத்து திரும்ப கண்டிப்பா மூணு வருசம் ஆகும். இந்த வருசத்துல மீனா இங்கே இருக்க விருப்பப்படாமல் தாய் வீட்டில இருக்க விருப்பப்படுறாள். அவள் சொல்ற காரணமும் சரியா இருக்கு. தாய் வீட்ல இருந்தா… அம்மா, அப்பாவோட மனம் விட்டுப் பேசி, புருசன் இல்லாத குறை தோணாத அளவுக்கு இருப்பேன்னு சொல்றாள். அவள் விருப்பப்படி விட்டுடலாம்ப்பா. சொன்னான்.

‘சரி’ ன்னோம்

கணேசு துபாய் போனான். மீனா தாய் வீடு போனாள்.

துபாய் போனவன் எங்க குடும்ப செலவுக்கு காசு அனுப்பல. ஆனா. .. மாசம் தவறாமல் மனைவிக்கு மட்டும் பணம் அனுப்பினான். ரெண்டு மாசம் பொறுத்திருந்து கடிதம் எழுதி காரணம் கேட்டேன்.

‘ மீனா பெத்தவங்களோட இருந்தாலும் நம்ம வீட்டு சொத்துப்பா. அங்கே அவுங்க அவளுக்கு செலவு செய்யிறது நமக்கு வீண் கெட்ட பேர். அவுங்க பின்னால வச்சு தாங்கினேன்னு சொல்லாம இருக்கிறதுக்காகதான்ப்பா அங்கே பணம் அனுப்புறேன்னு பதில் எழுதினான்.

ஆனா… என் மனைவி மட்டும் சொன்னாள். பையன் பாதை மாறிட்டான்னு. நான் நம்பலை.

கணேசு மனைவிக்குப் பணம் அனுப்பி மனை வாங்கி, வீடு கட்டி, ஒரு டிராக்டர், கொஞ்சம் நிலமாச்சு.

மத்த புள்ளைங்களுக்கு அவன் ஏமாத்தினது தெரிஞ்சு போச்சு.

‘ எங்க பங்கு பாகத்தையெல்லாம் வித்ததுனாலதானே நாங்க பாழானோம். அவன் துபாய்க்கு போய் முன்னேறினான். இதுக்கு அடித்தளம் நாங்க. அவன் சொத்துல பங்கு வேணும்ன்னு கேட்குறாங்க. கணேசு. .. இது என் சொந்த உழைப்பு, சம்பாத்தியம்ன்னு மறுக்கிறான். சகோதரர்களுக்குள்ளே சண்டை வந்து வெட்டுப்பழி, குத்துப்பழி ஆகுமோன்னு பயமா இருக்கு. நீங்கதான் இதுக்கு நல்ல வழி காட்டனும். ” முடித்தார்.

எல்லாவற்றையும் கவனமாக கேட்ட தணிகாசலம். ..

” நீ என்னப்பா சொல்றே. .? ” கணேசைப் பார்த்துக் கேட்டார்.

” பெரியவர் சொன்னதெல்லாம் சரிங்க. அதே மாதிரி என் சொத்துல மத்தவங்களுக்குப் பங்கு கிடையாதுன்னு நான் சொன்னதும் சரிங்க. நிலம் வித்ததுதுனாலதான் தங்கள் படிப்பு பாழாப்போச்சு, முன்னேறலைன்னு சொல்றதெல்லாம் சரி இல்லேங்க. கஷ்டப்படணும்ன்னு விதி கஷ்டப்படுறாங்க. என்னைச் சொல்லி குத்தமில்லே. என் முன்னேற்றத்துல தம்பிகளுக்கு மட்டுமில்லாம அப்பா, அம்மாவுக்கெல்லாம் பொறாமை. நிலத்துல எனக்கும் பங்கு உண்டு. வித்தது தப்புன்னா. .. என் பங்கு போக மீதி தர்றேன். எடுத்துப் போகச் சொல்லுங்க. இதுதான் என் முடிவு. .” கறாராக சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட கூட்டம் அமைதி யாக இருந்தது. தணிகாசலமும் பேசவில்லை.

ரொம்ப நேரத்திற்குப் பிறகு தணிகாசலம். …

” உங்க தம்பிங்க கேட்கிறது சரி. அவனுங்க சொத்தையெல்லாம் வித்ததுனாலதான் உன்னால துபாய் போக முடிஞ்சுது, அங்கே சம்பாதிச்சு கலியாணம் காட்சி முடிச்சு முன்னேற முடிந்தது. உன் முன்னேற்றத்துல அவனுங்க பங்கு இருக்கு. அவனுங்க சொல்றபடிதான் கேட்கனும். அதன்படிதான் செய்யனும், நடக்கனும். இதுதான் சரி. என் தீர்ப்பு. ” சொன்னார்.

” சரிதான் ! ” எல்லோரும் எழுந்தார்கள்.

” கொஞ்சம் இருங்க. .” உரத்துச் சொன்னான்.

எழுந்தவர்கள் அமர்ந்தார்கள்.

” பஞ்சாயத்தார் சொல்லுக்கு நான் கட்டுப்படுறேன். அந்த ஐயா தீர்ப்புக்கு நான் தலை வணங்குறேன். இந்த நியாயம் எனக்கும் தெரியும். ஆனா. .. ஏன். . முரண்டு பண்ணினேன். .? என் மனைவி மீனா, அவ அம்மா, அப்பா.!!

தாங்களும், தங்கள் மகளும் நல்லா வாழனும் என்கிற எண்ணத்துல…. ‘ நிலம் வித்ததுல உங்க பங்கு இருக்கு. மேலும்…புள்ளைங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டியது பெத்தவங்க செய்ய வேண்டிய கடமை !’ ன்னு சொல்லி அவளுக்கு ஏத்தி விட்டு… மீனா மட்டுமில்லாம.. மாமனார், மாமியாரும் என்னை நேரடியாவும் தடுத்தாங்க. முரண்டு பிடித்தால் மனைவிக்கு வருத்தம் வரும். அவுங்களுக்கும் என் மேல் கோபம் வரும். இவுங்களுக்கு நியாயம் நல்லது கேட்டது தெரியனும்ன்னா இவர்கள் போக்குக்கு விட்டு, என்னை மாதிரி உள்ளவங்களும் நியாயம் தெரியணும், புத்தி வறட்டும்ன்னுதான் பஞ்சாயத்து வரை வந்தேன். இது தப்புன்னா மன்னிச்சுடுங்க. உங்க தீர்ப்புப்படி நான் செய்யிறேன் ! ” சொன்னான்.

கணேசு அம்மா, அப்பா, தம்பிகள்…. அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

மீனா, அவள் தாய், தந்தை தலை குனிந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *