இன்பத்திற்கு ஓர் எல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 4,991 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு மாதங்களின் முன்பு ஒரு முறை மாமா வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்தேன்.

அப்போது….

பார்வதியின் வீடு மாமா வீட்டுக்கு அடுத்த வீடுதான். பார்வதி அடிக்கடி அங்கே வருவாள். மாமாவின் குழந்தைகளோடு விளை யாடுவாள். என்னை முதல் முதல் கண்டபோது ஒரு பார்வை பார்த் தாள். அவ்வளவோடு சரி. அந்தப் பார்வையிலே என்ன அர்த்தம் இருந்த தென்று சொல்ல முடியாது. பிறகு அநேக தடவைகள் என்னுடைய பார் வையோடு அவள் பார்வை சந்தித்தது. ஆனால் அடுத்த நிமிஷம் என்ன செய்வதென்று தெரியாமலே அவை பிரிந்து விடும்.

பிறகு மெல்லிசாக ஒரு இளமுறுவல் அந்தப் பார்வையோடு கலந்து வந்தது. நானும் பதிலுக்கு முறுவல் காட்டினேன். அவளுடைய உள்ளத்திலே இருந்தது எனக்கென்ன தெரியும். ஆனால் என்னுடைய உள்ளம் பட்டபாட்டைக் கடவுளே அறிவார். சதா அந்தப் பார்வையும் இள முறுவலும் என் மனக் கண்முன்னே அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தன. வாழ்வுப் பாதையிலே அவளோடு கை சேர்த்து நடக்க நான் பேராவல் கொண்டேன். ஆனால் ஐயோ அது இந்த ஜன்மத்தில் நடக்காதென்பது எனக்குச் சர்வ நிச்சய மாகத் தெரியும்!

எனக்கும் என் தங்கைக்கும் சேர்த்து ஒரே வீட்டில் பெண்ணும் மாப்பிள்ளையும் எடுக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இந்தப் பார்வதிக்காக நான் அந்த இடத்தை உதறித் தள்ளினால், என் தங்கைக்குத் துரோகம் செய்தவனாவேன். என் தங்கைக்குத் தனியாக ஒரு மாப்பிள்ளை தேடித் திரிவதென்றால், அத்தகைய ஒரு வாலிபன் அகப்படவேமாட்டான்! என் னுடைய காதல் லீலைக்கு முன்னால் என் தங்கையின் வாழ்வையா பலி கொடுப்பேன்.

என் நிலைமை இவ்வளவு நிச்சயமாக இருந்தும், ஏனோ பார்வதியைப் பார்ப்பதிலும் சிரிப்பதிலும் தீராத தாகம் கொண்டேன். அவளோடு பேசுவதற்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக் காதா என்று ஏங்கினேன்.

நானும் அவளும் ஒருவரோடொருவர் நன்றாகப் பேசவில்லையென்பது உண்மை தான். ஆனால் எங்களுக்குள் எத்தனையோ ஆசை விளையாட்டுக்கள் நடந்தன. கண் பார்வையிலும், வாய்ச்சிரிப்பிலுமே எத்தனையோ விதமான லீலைகள்!

அவள் என்னைக் காதலிக்கிறாள் என்பது சந்தேகமில்லாமல் எனக்குத் தெரிந்துவிட்டது. என் மனமுந்தான் கொள்ளை போய்விட்டது. ஆனால்… ஐயோ, இது ஈடேறாத காதலல்லவா?

இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளலாமென்றாலோ, பேய்மனம் கேட்கிறதா? எனது நிலைமையை அவளுக்குச் சொல்லி விடலாமென்றாலோ. எப்படிச் சொல்வது!’ அழகான ரோஜாப் புஷ்பத்தைத் தூர வீசிவிட முடியுமா? ரோஜாவுக்கும் ஜீவன் இருந்தால்?….. ஜீவன் உள்ள ரோஜா தான் பார்வதி.

அவளுடைய உள்ளத்தில் காதல் தீயை ஏற்றிக் கொண்டேயிருந்தேன். என்னையுமறி யாமல். இந்த இன்ப விளையாட்டை நிறுத்தவுமோ முடியவில்லை. ஊருக்குப் போகும் நாட் களையும் பிற்போட்டுக்கொண்டே வந்தேன். மலையிலிருந்து கால் தவறிப் பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பவன் இடையிலே நின்றுவிட முடியுமா? அதே மாதிரித்தான் எங்கள் விளையாட்டும் இருந்தது. ஆரம்பமாகிவிட்டது நிறுத்த முடியவில்லை .

என் மனதில் பல்வேறுபட்ட உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த இந்த நிலை மையில்தான். இதற்குப் முற்றுப் புள்ளி வைத்தது போல் ஒரு நாள் மாமா பேசினார். “இங்கே வருவாளே, பக்கத்து வீட்டுப் பெண்; அவளைப் பார்த்தாயா?” என்றார்.

“பார்த்தேன்.”

“அவளைக் கல்யாணம் செய்து கொள்ளேன்!”.

நான் சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தெரியாததா மாமா என் நிலைமை?” என்றேன்.

மாமாவும் அசட்டுச் சிரிப்புடன், “ஆமாம், சும்மாதான் கேட்டேன். பெண்ணுடைய தகப் பனார் உன்னைப்பற்றி விசாரித்துக் கேட்டார். நான் உடனேயே அவருக்குப் பதில் சொல்ல விட்டேன்.”

“என்ன சொன்னீர்கள்?”

“சொல்வதென்ன! அவள் விஷயம் இன்ன இன்ன மாதிரியிருக்கிறது. நீங்கள் அதில் தலையிடுவதால் பிரயோசனமில்லை” என்று சொல்லிவிட்டேன்.”

மாமாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டபின். நான் என் உள்ளத்தை மிகவும் கண் டித்துக் கொண்டேன். இனிமேல் பார்வதியுடன் விளையாட்டு வைத்துக் கொள்ளக்கூடாது. உடனே இந்த இடத்தை விட்டு வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

அடுத்த நாள் காலையில் பார்வதி வந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பற்றி மாமா விடம் கேட்ட விஷயம் அவளும் அறிந்திருந்தாளோ இல்லையோ தெரியாது.

என்னைக் கண்டாள்.

அதே பார்வை ; அதே சிரிப்பு.

என் மனம் கூசிற்று. என் முகத்திலும் அது தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

அன்று மாலையில் உண்மையாகவே புறப்பட்டுவிட்டேன். புறப்படும்போது என் பக்கத்தில் மாமியும் குழந்தைகளும் நின்றார்கள். பார்வதி கொஞ்சத் தூரத்துக்கப்பால் என் னையே பார்த்துக்கொண்டு நின்றாள். மாமி வேறு எங்கேயோ கவனமாயிருந்த சமயத்தில், பார்வதியைப் பார்த்து “போய்வரட்டுமா?” என்கிற மாதிரியில் தலையசைத்தேன். அவளும் தலையசைத்து விடை கொடுத்தாள். ஐயோ, அந்தப் பார்வையிலே ஏதோ ஒரு ஏக்கம்! மலர்ந்த இதழிகளிலே விவரிக்க முடியாத ஒரு சோகம். அவைகளின் அர்த்தம் எனக்கு நன்றாகத் தெரிந்துதானிருக்கிறது. எனினும், என் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

இரண்டு மாதங்களின் பின் இப்போது மறுபடியும் வந்திருக்கிறேன், அவளைத் தேடிக் கொண்டு, அவளுக்கு விவாகம் நடந்துவிட்டது. கையிலிருந்த ஒரு புதையலைத் தவற விட்டது போல ஒரு ஏக்க உணர்ச்சி என் உள்ளத்தில் தோன்றிய போதிலும், ஒரு நல்ல அமை தியும் ஏற்பட்டது. ஆயினும் தீராத ஆசை ஒன்று மனதைக் கிளறிக்கொண்டிருந்தது. “இன்னொரு வாலிபனைக் கைப்பிடித்த பார்வதியின் முகம் எப்படியிருக்கும்? அவளுடைய உள்ளத்தில் எனக்குரிய அந்தஸ்து குறைந்து போயிருக்குமா? என்னைக் கண்டால் அந்த மனோகரமான பார்வையைக் காட்டுவாளா? இன்பம் சொரியும் அந்த இதழ்கள் என்னைக் கண்டதும் அழகாக மலருமா…?” என்பன போன்ற விஷயங்களையெல்லாம் அறிந்துவிட வேண்டுமென்ற புதிய ஆவல் உள்ளத்தில் குமுறியது.

ஒரேயொரு சமயம் மனச்சாட்சி என்னைப் பலமாகக் கண்டிக்கும். “இன்னொரு வாலிப னுக்கு உரியவளாகி விட்டவளோடு இனி உனக்கு என்ன விளையாட்டு? உன்னுடைய விளையாட்டு அவள் ஹிருதயத்தில் புண்ணிட்டுவிடும். அவளைத் துன்புறுத்தாதே! உன் கௌரவத்தையும் குறைத்துக் கொள்ளாதே…!” என்று மனச்சாட்சி எச்சரிக்கும். ஆனால் தடுக்க முடியாத மன ஆவலின் முன்னே அவை பிரயோசனமற்றவையாகி விட்டன.

என் உள்ளத்தில் இன்னும் எத்தனையோ சிந்தனைகள் வந்து குவிந்தன. பழைய இன்பகரமான நினைவுகளெல்லாம் சினிமாவைப்போல மனத்திரையில் காட்சியளித்தன. என் உள்ளம் கட்டுக்கு மீறி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தது.

திடீரென்று யாரோ வரும் சப்தமும், அதைத் தொடர்ந்து கைவளைகளின் ஒலியும் கேட் டன. சந்தேகமில்லை அது பார்வதிதான்! என் நெஞ்சு படபட” வென்று அடித்தது. அவள் போகும் போது நான் இருந்த அறையின் பக்கம் பார்க்க நேரிடும். அப்போது…..? நான் எதிர் பார்த்த சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதை எவ்விதம் சமாளிப்பதென்று தெரியாமல் மனம் பதறிற்று.

“அக்கா! அக்கா!” என்ற குழந்தைகளின் ஆரவாரம். அதைத் தொடர்ந்து, “அக்கா அத்தான் வந்திருக்கிறார்!” என்ற (மாமாவின் மூத்த பையன்) பாலுவின் குரல்.

காலோசை நெருங்கிவிட்டது. நான் சமாளித்துக்கொண்டு, உள்ளப்பதட்டத்தைக் காட்டாமல், முகத்தில் புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு தயாராகி விட்டேன்.

இதோ… வந்து விட்டாள்!

என்னைப் பார்த்தாள். ஆஹா, அதே பார்வை! அதே சிரிப்பு! கொஞ்சமேனும் மாறுத லில்லை. சிறிது நாணத்தின் சாயல் மாத்திரம் லேசாகப் படர்ந்திருந்தது போல் தெரிந்தது. ஒரு சமயம் என் கண்களுக்கு அப்படித் தெரிந்ததோ என்னவோ!

அவள் அப்பாற் போய்விட்டாள். “அத்தானைக் கண்டாயா அக்கா?” என்ற பாலுவின் குரல்.

“கண்டேன்; கண்டேன்” என்ற அவளுடைய பதில். அந்த வார்த்தையில் தொனித்தது ஏளனமா, சந்தோஷமா?….

நானிருந்த அறைக்குப் பக்கத்து அறையில்தான் அவளும் குழந்தைகளும் போயிருந் தார்கள். அங்கே பேசுவதெல்லாம் ஸ்பஸ்டமாக எனக்குக் கேட்டன.

“அக்கா, நேற்று ஒரு ‘சாத்திரக்காரன் வந்தான். என் கையைப் பார்த்துச் சொன்னான்.”

“என்ன சொன்னான்?”

“என்னவோ சொன்னான். அவன் பேசியது எனக்கு விளங்கவில்லை.”

“எங்கே, உன் கையைக் காட்டு?”

“உனக்கும் ‘சாத்திரம்’ தெரியுமோ அக்கா?”

“தெரியும். எங்கே… பாலு! உனக்கு அப்பா ஒருவர் இருக்கிறாரென்று ரேகை சொல்லுகிறது. அம்மா கூட ஒன்றுதான்… உனக்கு இப்போது எட்டு வயது…. நான் சொல்வதெல்லாம் சரிதானே?…”

இந்தக் குறும்புக்காரியின் விளையாட்டைக் கேட்டதும் எனக்கு ஒரு தைரியம் உண் டாயிற்று. அந்தத் தைரிய உணர்ச்சி மாறிப்போகுமுன்னரே எழுந்து, ‘விறு விறு’ என்று அடுத்த அறையில் நுழைந்தேன். என்னைக் கண்டதும் சாஸ்திரம் சொல்லுவது நின்று போயிற்று. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நானும் சிரித்துக் கொண்டே பார வதியைப் பார்த்து, “என்னுடைய கையையும் பார்த்துச் சொல்கிறாயா?” என்றேன்.

முன்போல அவ்வளவு கூச்சம் கூட இல்லாமல், “என்ன சொல்கிறது?” என்றாள் அவள்.

நான் கொஞ்சம் திகைத்துப் போனேன். என்றாலும் சமாளித்துக் கொண்டு, “சாஸ்திரம்” என்றேன்.

“அது சரி; எதைக் குறித்துச் சொல்ல வேண்டும்?”

அவளுடைய உள்ளத்தைக் குத்திக் கிளறி வேடிக்கை பார்க்க வேண்டுமென்ற என் ஆவல் இப்போது வெறி மாதிரியாகிவிட்டது. நான் ‘டக்’கென்று சொன்னேன்; “இன்னும் எத் தனை பேர் என்னை ஏமாற்றுவார்கள் என்று சொல்லேன்!”.

அவள் முகத்தில் திடீரென்று ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால்…”

“என்ன தோன்றுகிறது?”

“இதற்கு முன்…”

“ஆமாம். நம்பி ஏமாந்து போனேன்…”

“யார்….?”

“யார்….? நீதானே ஏமாற்றிவிட்டாய்!” என்று நான் துடுக்காகப் பதில் சொன்னேன். முழுப் பொய்தான். ஏமாற்றியது அவளா, நானா? இத்தகைய துணிவான பொய்யைச் சொல்லி, ஒரு விவாகமான பெண்ணின் உள்ளத்தைக் கிளறிவிட எனக்கு எங்கிருந்துதான் தைரியம் வந்ததோ!

அவள் ஒரு நிமிஷம் ஒன்றும் பேசவில்லை. என் சொல்லை மிகவும் நம்பிவிட்டாள் என்று நான் மிகவும் தைரியம் அடைந்தேன். உற்சாகமில்லாத குரலில் ஏக்கத்துடன் அவள் சொன்னாள்.

“நீங்கள் பரிகாசம் செய்கிறீர்கள்…”

“பரிகாசமா? உன்னிடம் பரிகாசம் பண்ண எனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

அடிபட்ட மான் போல அவள் சோர்ந்துவிட்டாள். அவள் முகத்திலிருந்த குதூகலம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. என்னுடைய இரும்பு மனதுக்கு இதெல்லாம் வேடிக்கையாகவே இருந்தது.

அவள் மறுபடியும், “நீங்கள் நம்பக்கூடிய விதமாகவா நடந்தீர்கள்?” என்றாள்.

நான் ஆத்திரம் கொண்டவன் போல, ஆகா, வேறு எவ்விதமாக நடந்தேன்? உன்னைப் பற்றி எனக்கு அக்கறையில்லாவிட்டால் உன்னைத் திரும்பிப் பார்த்திருப்பேனா?.. பழைய விஷயமெல்லாம் அதற்குள்ளாகவா மறந்து போய்விட்டாய்?” என்றேன்.

நெருப்பிலே காட்டிய ரோஜவைப் போல அவள் வாடிப் போய்விட்டாள். என்னுடைய வெறியோ மேலும் மேலும் அதிகரித்தது. “ஆலகால விஷத்தையும் நம்பலாம்; ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்; இன்னும் எதை எதையெல்லாமோ நம்பலாம்; ஆனால் சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தயங்கித்தவிப்பரே… என்று சும்மாவா சொன்னார்கள்?” என்றேன்.

அவள் நடுங்கிய குரலில் மெதுவாக, “நானும்தான் அப்போது உங்களை நம்பியிருந்தேன். நீங்கள் திடீரென்று போய்விட்டதும்…” என்றாள். இதைக் கேட்டதும், வெறிமூண்ட என் உள்ளத்தில் ஒரு விபரீத உணர்ச்சி தோன்றிற்று.

“பொய் சொல்லாதே?” என்றேன். “ஏன் சொல்கிறேன்?”

சீ…. இதற்குமேல் நான் செய்த காரியத்தைச் சொல்லவும் வெட்கமாயிருக்கிறது. ஒரு மிருகத்தைப் போல நான் அவளை நோக்கி எட்டி ஒரு அடி வைத்து “பார்வதி! நீ சொல்வது உண்மையானால்…” என்று சொல்லிக் கொண்டு நெருங்கினேன்.

என் கண்களிலே உணர்ச்சியின் விபரீதப் போக்கை அவள் கண்டிருக்க வேண்டும். ‘ஆ!’ என்று, அவள் பின்வாங்கினாள். அந்த அதிர்ச்சியில் நான் திகைத்து நிற்கும் போதே, மின்னலைப் போல மறைந்துவிட்டாள்!

கண்ணியம் வாய்ந்த நிரபராதி ஒருவன், பொய் வழக்கினால் சிறை செல்வது போல, நானும் என் அறையில் நுழைந்தேன். உண்மையில் அந்த நிரபராதியின் மனவேதனை விட, என் மனவேதனை ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிதாகவே இருந்தது. மனச்சாட்சி என்னை வாள் கொண்டு அரிந்தது; வேல் கொண்டு குத்தியது. நான் துடித்தேன் தூண்டிற் புழுவினைப் போல் துடித்தேன்.

‘ஆகா, மிருக வெறியின் போதையிலே எத்தகைய கொடிய காரியத்தைச் செய்யத் துணிந்தேன்? மதிப்புடன் கொலுவீற்றிருந்த ஒரு பெண்ணின் இதய சிம்மாசனத்திலிருந்து சாக்கடையிலல்லவா குதித்து விட்டேன்! மீண்டும் எழுந்திருக்க முடியாதபடியல்லவா ஆழப் புதைந்துவிட்டேன்! இனி…

மன்னிப்பு!

சீ. மன்னிப்பா? எனக்கா?…. பார்க்கக் கூடத் தகுதியற்றவனாகிவிட்டேன்.! ஐயோ, அந்தத் தகுதி எனக்கு மீண்டும் வருமா?

– மறுமலர்ச்சி – 02 சித்திரை – 1946, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *