கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2024
பார்வையிட்டோர்: 2,791 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

7.குருஸ்வாமி மறைந்தார் 

இருபதினாயிரத்துக்கு நோட்டுக்களும் ஏதோ சில சில்லரைகளும் இருந்தன. அவற்றில் நோட்டுக்களை மட்டும் காணவில்லை. 

சிறிது நேரம் பிரமித்துப்போய் நின்றார் குருஸ்வாமி எப்படிப் போயிருக்கும்? யார் எடுத்திருப்பார்கள்? என்று சிந்திக்க அவருக்கு அதிக நேரம் தேவையாக இல்லை. 

சீதாராமன் தான் எடுத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார், அவர் ஒரு நொடியில், அன்று எல்லாக் குமாஸ் தாக்களும் போன பிறகும் அங்கு வேலை இருக்கிறது என்று தங்கியிருந்தவன் அவன்தான். காவல்காரன்கூட இல்லாத சமயத்தில் குருஸ்வாமியும் காபி சாப்பிடப் போயிருக்கும் போது பாங்கில் தனியாக இருந்தவன் அவன்தான். அவன் முன்பின் கேட்காமல் அன்று – அந்த இருபதினாயிரம் பாங்கில் கட்டப்பட்ட தினத்தன்று அவன் திடீரென்று லீவு கேட்ட தற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? வேறு என்ன இருக்கமுடியும்?… 

இதற்குள் பாங்குக் காவலாளியும் வந்துவிட்டான். அவனுக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டு குருஸ்வாமி டெலிபோன் மூலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத் தனுப்பினார். அரைமணி நேரத்திற்குள் போலீஸார் வந்து விட்டார்கள். 

தன் சந்தேகங்களைத் தெளிவாகவே குருஸ்வாமி போலீஸாருக்குத் தெரிவித்தார். அவர் சீதாராமனைச் சந்தேகித்ததே சரி என்று போலீஸ் அதிகாரிகளுக்குப் பட்டது. விஜயபுரம் போலீஸாருக்கு சீதாராமனின் விலாசத்தைத் தெரிவித்து அவனை உடனே கைது செய்து சென்னைக்குக் கொண்டு வரும்படி உரிய அதிகாரிகளிடம் உத்தரவு வாங்கி அனுப்பிவிட்டுப் போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள். 

தன்னுடைய முயற்சிகளும் யுக்திகளும் பலிக்காமல் போய்விட்டனவே என்று குருஸ்வாமிக்கு அளவு கிடந்த வருத்தம். சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தபின் சீதாராமனைப் பற்றி அவருக்கேற்பட்டிருந்த சந்தேகம் மறைந்துவிட்டது. சீதாராமன் அப்படிச் செய்திருக்கக் கூடியவனல்ல. யாரோ தன் உத்தேசங்களை அறிந்திருந்தவன்தான் அப்படிச் செய்திருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. இந்த இருபதினாயிரம் போனதை வைத்து அதிகாரிகள் பாங்கிக் கணக்குகளைச் சோதனை போடுவார்கள். குருஸ்வாமியின் பழைய விவரங்க ளெல்லாம் வெளிவந்து விடும். சீதாராமனுடன் அவனும் ஜெயிலுக்குப் போகும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும்…. 

இரவு பூராவும் தூங்காமல் யோசனைகள் செய்தார் குருஸ்வாமி. 

மறுநாள் காலையில் வழக்கம்போல் பாங்கி திறந்ததும், எல்லா அலுவல்களையும் நேரிலேயே கவனித்தார். சீதா ராமனை மறுநாள்தானே போலீஸார் கொண்டு வருவார்கள் என்று போலீஸைக் கூப்பிட்டு விசாரித்தார். பாங்கி டைரக்டர்களுக்கு இருபதினாயிரம் திருட்டுப்பற்றிச் சொல்லி விட்டு, திருடியவன் பதுங்கிவிடாதிருப்பதற்காக அத்திருட்டை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். போலீஸுக்கும், பாங்கி ரைடக்டர்களுக்கும் அது நியாயம் என்றே பட்டது. இதற்குள் மணி பன்னிரண்டாகி விட்டது. சாப்பிடப் போனார் குருஸ்வாமி. பிறகு பன்னிரண்டரை மணிக்குத்தான் தலைமைக் குமாஸ்தாவுக்குச் சீட்டுக் கொடுத் தனுப்பினார். தனக்கு உடம்பு சரியாக இல்லை என்றும், மாலையில் பாங்கிக்கு வரவில்லை என்றும், பாங்கி அலுவல்களைத் தலைமைக் குமாஸ்தாவே பார்த்துக் கொள்ளலாம் என்றும் சீட்டு எழுதி அனுப்பினார். அன்று மாலைப் பொழுது வரையில் அவர் செய்ய நினைத்திருந்த ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான பொழுது இருந்தது. 

மாலையில் பாங்கி சாத்தும் வேளையில் மறுபடியும் போலீஸைப் போன்லே கூப்பிட்டு ஏதோ பேசிவிட்டு எல்லாக் கதவுகளையும் சாத்திக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார் குருஸ்வாமி. 

பட்டணத்து பாங்கிக் கட்டிடத்திலிருந்து கடைசித் தடவையாக அவர் வெளிப்பட்டது அதுதான். 

மறுநாள் காலையில் விஜயபுரத்திலிருந்து கொண்டுவரப் பட்ட சீதாராமனைப் பந்தோபஸ்து செய்துவிட்டுப் போலீஸார் மேலே கேஸ் எடுப்பது எப்படி என்று விசாரிக்க குரு ஸ்வாமியைத் தேடியபோது குருஸ்வாமியைக் காணவில்லை! 

அன்று பட்டணத்து பாங்கி பன்னிரண்டு மணிக்குத் தான் திறக்கப்பட்டது. பாங்கிக் குமாஸ்தாக்கள் ஆச்சரியத்துடன் வெளியே நின்றார்கள் பத்தரைமணியிலிருந்து, இரண்டு நாட்களுக்குமுன் பாங்கியில் இருபதினாயிரம் கொண்டுவந்து போட்ட அதே ஆசாமி ஒரு ஐந்நூறு ரூபாய் பணம் வாங்க வேண்டும் என்று வந்து, அவனும் பூட்டியிருந்த கதவுக்கு வெளியே, பாங்கிக் குமாஸ்தாக்களுடன் காத்திருந்தான். 

பாங்கி டைரக்டர்களையும் மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு போலீஸார் ஸ்தலத்துக்கு வரும்போது மணி பன்னிரண்டு. குருஸ்வாமியின் வீட்டில் பாங்கிச் சாவிகள் மேஜைமேலே கிடந்தன. அவற்றுடன் வந்து பாங்கிக் கதவுகள் திறக்கப்பட்டன. அன்று அலுவல்கள் எதுவும் நடக்காது என்று கூறிப் போலீஸார் பாங்கிக் குமாஸ்தாக் களையும் டைரக்டர் ஓரிருவரையும் உள்ளே விட்டுவிட்டுக் கதவைச் சாத்தி விட்டார்கள். 

இருபதினாயிரம் போட்டுவிட்டு ஐந்நூறு ரூபாய் வாங்கிப் போக வந்திருந்தவன் வெளியே வராந்தாவில் இரண்டு நிமிஷம் நின்றான். உடனே வக்கீலைக் கேட்க வேண்டியது தான். இருபதினாயிரத்துக்கும் ஆபத்து வந்துவிட்டது என்று அவனுக்குப் புரியச் சிறிது நேரம் பிடித்தது. 

பாங்கிப் பணப் பெட்டியில் முதல்நாள் மீதியிருந்த சில்லரையையும் இப்போது காணவில்லை. வழவழவென்று தேய்ந்து போயிருந்த ஒரு விக்டோரியா காலத்துக் காலணா தான் கிடந்தது. 

“பணம் இருந்த இடத்தை முழுவதும் காலிபண்ணி விடக் கூடாதே என்று காலணாவைப் போட்டுவிட்டுப் போயிருக் கிறான்” என்றார் பாங்கி டைரக்டர்களில் ஒருவர். 

“நம்ப மானேஜிங் டைரக்டர் நல்லவர் தான்” என்றார் வேறு ஒருவர். 

தன் மேஜைமேல் எல்லோர் கண்ணிலும் படும்படியாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான் குருஸ்வாமி. அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தான்: 

“என்னை நீங்கள் தேடுவதில் லாபம் சிறிதும் இராது. நான் என்னுடையது என்று திட்டம் போட்டிருந்த இருபதினாயிரத்தை அவன் அடித்துப்போனது எனக்குச் சகிக்கவில்லை. அதைத் தேடிக்கொண்டு போயிருக் கிறேன். அந்த இருபதினாயிரத்துடன் சேர்த்து என்னால் பாங்கிக்குச் சேரவேண்டிய தொகை முப்பத்திரண்டா யிரத்து நானூத்துச் சொச்சம்.” 

தங்கள் 
குருஸ்வாமி, 

இவ்வளவையும் கண்ட பிறகு போலீஸ் அதிகாரி கேட்டார்: “விஜயபுரத்திலிருந்து கொண்டு வந்திருக்கிற பையனை என்ன செய்வது? இந்த அயோக்கியர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவன்தான் திருடியிருப்பான் என்று அரெஸ்ட் செய்ய உத்தரவு வாங்கினேன்!” 

“அவனை விசாரித்து விட்டுவிடுவதுதான் நல்லது” என்றார் டைரக்டர்களில் ஒருவர். 

போலீஸ் லாக்கப்பிலேயிருந்த லாக்கப்பிலேயிருந்த சீதாராமனைப் பட்டணத்து பாங்கிக்கே அழைத்து வந்தார்கள். போலீஸ் அதிகாரி உரிய தோரணையில் அவனை விசாரித்தார். ஆனால் அவன் தனக்கு அந்த இருபதினாயிரத்தைப் பற்றியோ, குருஸ்வாமியைப் பற்றியோ எதுவும் தெரியாது என்று ஒரேடியடியாகச் சாதித்தான். அவன் சொல்வதை நம்ப மறுக்கப் போதிய சாக்ஷியமும் இல்லை. ஓடிப்போன குருஸ்வாமியே திருடன் என்று தீர்மானிப்பதில் யாருக்கும் எவ்வித ஆக்ஷேபமும் இராது. அதுவும் ருஜுவாகாமல் போகும் வரையில் அப்படியே வைத்துக் கொள்வதே நியாயம் என்றும் பட்டது எல்லோருக்கும். 

சீதாராமனைத் தீர விசாரித்துவிட்டு விடுதலை செய்து விட்டார்கள். 

பாங்கி டைரக்டர்களில் ஒருவர் மற்றவர்களைவிட சிறிது கெட்டிக்காரர். அவர் சீதாராமனைச் சொந்த ஹோதாவில் விசாரித்தார். “குருஸ்வாமி எதற்காக முதல் நாள் உன்பேரில் குற்றம் சாட்டிவிட்டு மறுநாள் மறைந்திருக்க வேண்டும்? பணத்தை அவரே எடுத்திருந்தாரானால் ஏன் ஒரு நாள் தாமதித்தார்! உடனே அவர் போயிருக்கலாமே!” என்றார். 

பாங்கி டைரக்டராயிற்றே என்று சற்று மரியாதை யாகவே, “எனக்கு எப்படித் தெரியும்? குருஸ்வாமியின் காரியங்களை நான் எப்படிச் சொல்லமுடியும்?” என்றான். 

பிறகு அவன் மனத்திலிருந்த இன்னொரு விஷயத்தை அவன் அந்த பாங்கி டைரக்டரிடம் சற்றுப் பிரத்யேகமாகவே பிரஸ்தாபித்தான். “கையில் பத்துப் பன்னிரண்டு ரூபாய் தான் இருக்கிறது. அடுத்த மாதச் சம்பளத்தில் அட்வான்ஸாக ஏதாவது பணம் தரச் சொன்னால் தேவலை” என்றார். 

கெட்டிக்கார டைரக்டர் சொன்னார்: “அதெப்படி யப்பா முடியும்? அடுத்த மாதம் நம்ப பாங்கி நடக்கிறதா என்கிறதே சந்தேகம் அந்தப் பாவி குருஸ்வாமி எங்கள் தலையிலும் கையை வைத்துவிட்டுப் போய்விட்டானே” என்றார். 

பணம் பெயராது, உத்தியோகமும் போனமாதிரிதான் என்று கண்டு கொண்டவுடனே சீதாராமனின் பாவனையும் மாறிவிட்டது. அந்த டைரக்டர் அவனை வேறு ஏதோ கேள்வி கேட்டவுடனே, “போமையா! சும்மா தொண தொணத் துண்டு” என்று பதில் கூறினான். 

கெட்டிக்கார டைரக்டர் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. 

போலீஸ் அதிகாரியிடம் விடைபெற்றுக் கொண்டு சீதாராமன் வெளியேறினான். 

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, மத்தியானம் சினிமா ஒன்றைப் பார்த்துவிட்டு, சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் போதுதான் சீதாராமன் அன்றிரவே மீண்டும் விஜயபுரம் போவது என்று தீர்மானித்தான். முதல் நாள் தன் தமக்கை வீட்டில் போலீசார் வந்தது முதல் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பது ஞாபகம் வந்தது இவனுக்கு. மிகவும் சாத்வீகமான வைதிகரான அவள் புருஷனுக்கு அவனால் விஜயபுரம் அக்கிரகாரத்தில் மதிப்பே குறைந்திருந்தாலும் குறைந்திருக்கும். அவன் அன்றே விஜய புரம் திரும்பினானானால், ஒன்றுமே இல்லை விஷயம் ஏதோ தவறுதலாக நேர்ந்துவிட்டது என்று எல்லோர்க்கும் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். இதை உத்தேசித்தே விஜயபுரம் போவது என்று தீர்மானித்தான் சீதாராமன். 

அப்பொழுது மணி ஆறு அடித்தது. ரயிலுக்குப் போவதற்கு இன்னும் இரண்டு, இரண்டரை மணி நேரம் இருந்தது. சென்னையில் அவன் செய்ய வேண்டிய காரியங்களுக்குப் போதும் அந்த நேரம். இரண்டொருவரைப் பார்க்க வேண்டி யிருந்தது; இரண்டொரு இடங்களுக்குப் போக வேண்டி யிருந்தது. அவ்வளவையும் முடித்துக் கொண்டு சரியான சமயத்துக்கு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டான் சீதாராமன். 

ஒரு கத்தை நோட்டுகளிலிருந்து இரண்டு நோட்டுகளை அலட்சியமாக விட்டெறிந்து விஜயபுரத்திற்கு இரண்டாவது வகுப்பு டிக்கட் வாங்கினான் சீதாராமன். கும்பலோடு கும்பலாக மறைந்து நின்று இதைக் கவனித்த குருஸ்வாமியை சீதாராமன் பார்க்கவே இல்லை! பார்த்திருந் தாலும் லக்ஷ்யமே செய்திருக்க மாட்டான் அவன்.

பெரிய வக்கீல்! 

விஜயபுரத்துக்குத் தன் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த போது ஸ்ரீனிவாசனை எல்லோரும் – அதாவது விஜயபுரத்தில் எல்லோரும் – பெரிய வக்கீல் என்றுதான் எண்ணிக் கொண்டிருந் தார்கள். ஆனால் விஜயபுரத்திலே விசுவரூபம் எடுத்த சீனிவாசன் சென்னைப் பட்டணத்திலே சாதாரண மனிதனையும் விடச் சின்னவனாகத்தான் காட்சியளித்தான். 

விஜயபுரத்திலேயாகட்டும் வேறு இடத்தில்தானா கட்டும் – அவனுடைய அண்ணன் வைத்தியநாதனுக்கு மதிப்பு ஒரே மாதிரிதான். அவனுக்கு ஒரு மளிகைக் கடையிருந்தது. சுமாரான மளிகைக்கடை ரொம்பச் சின்னதுமில்லை. மிகப் பெரியதுமில்லை. தினசரி இருபது முப்பது ரூபாய்க்கு வியாபாரம் ஆகும். அதற்குமேல் அதிக வரும்படியுள்ளவன் போல வைத்தியனாதன் வேஷம் போடுவதும் இல்லை. அவனுடைய அந்தஸ்தும் மதிப்பும் விஜயபுரத்திலே எல்லோருக்கும் தெரியும். 

அண்ணனைப் போலவேதான் தம்பியுமிருப்பான் என்று தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யரைப் போலவே விஜயபுரம் அக்கிரகாரவாசிகள் எல்லோரும் எண்ணியதிலே ஆச்சரியம் ஒன்றுமில்லை. “வைத்தியனாதன் தம்பி ஸ்ரீனிவாசன் வந்திருக் கான்; அவன் பட்டணத்திலே பெரிய வக்கீல்னு சொல்றா. நாளைக் காலம்பற வாங்கோ. நம்ப ரெண்டு பேருமாப் போய்ப் பார்த்து என்ன செய்யறதுன்னு விசாரிப்போம்” என்று விசுவநாதய்யர் எதிர்வீட்டுக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் சொல்லியபோது மனத்தில் ஸ்ரீனிவாசனைப் பெரிய வக்கீல் என்று நினைத்துதான் சொன்னார். 

இருவரும் போய்ப் பார்த்தபோதும் ஸ்ரீனிவாசன் பெரிய வக்கீல் மாதிரியேதான் பேசினான். அவன் பேச்சை மட்டும் கொண்டு மதிப்பிடுவது என்று வந்துவிட்டால் பட்டணத் திலேயே அவனைவிடப் பெரிய வக்கீல் கிடையாது என்று சொல்லும்படியாக இருக்கும். கட்டுக் கட என்று தந்தி ஆங்கிலம் அறிந்த விசுவநாதய்யருக்கும் ஆங்கிலமே அறியாத வைதிகப் பிச்சுக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியாருக்கும் அவன் பேச்சு பிரமிப்பைத் தருவதாகத்தான் இருந்தது. அவர்கள் அர்த்தமே புரிந்து கொள்ள முடியாதபடி உச்சரிக்கக்கூட முடியாதபடி எவ்வளவு வார்த்தைகளை அவன் எவ்வளவு லாகவமாக உச்சரித்தான்! உபயோகித்தான்! 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மிரண்டு போனதிலே ஆச்சரியம் இல்லை. தன் மனைவியின் தம்பி சீதாராமனிடம் அவருக்கு உள்ளூர நல்ல அபிப்பிராயமே கிடையாது. என்றாலும் அதற்காக அவன் எக்கேடு வேண்டுமானாலும் கெடட்டும் என்று விட்டுவிட்டிருக்கவும் முடியாது அவரால். இயற்கை யிலேயே பிறர் கஷ்டத்தைத் தம்மாலான அளவுக்கு நிவர்த் திக்க வேண்டும் என்கிற ஆசையும் கொள்கையும் உள்ளவர் அவர் தம் உறவுக்கே வந்துவிட்ட ஓர் ஆபத்தை தவிர்க்க முன்வந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது மட்டுமல்ல. அவர் அப்படித் தாமாக முன் வந்திராவிட்டால் அவருடைய தர்மபத்தினி பர்வதத்தம்மாள் சும்மாவிட மாட்டாள்; அவளுக்கு அந்தத் தம்பியிடம்தான் பிரியம் அதிகம்! 

பட்டணத்துப் பெரிய வக்கீலின் பேச்சைக் காலையில் கேட்டு விட்டு வந்த பிறகுதான் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி யாருக்கும் தெரிந்தது தன் மைத்துனன் எவ்வளவு பெரிய குற்றத்தை இல்லை குற்றங்களைச் செய்திருக்கிறான் என்பது. பாங்கிலிருந்து இருபதினாயிரம் ரூபாய் திருடி விட்டான் என்று மட்டும் எண்ணியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். வக்கீல் ஸ்ரீனிவாசனின் பேச்சைக் கேட்டை பிறகு சீதாராமனின் குற்றம் பன்மடங்காக நூறு மடங்காகப் பெருகிவிட்டது. வக்கீல் ஸ்ரீனிவாசன் சரமாரியாக வர்ணித்தான் அவன் குற்றங்களை. அவை குற்றங்களாக மட்டுமில்லாமல் ஏதோ சட்ட புஸ்தகத்தின் நம்பர்களாகவும் உருமாறி விசுவரூபம் எடுத்துக் காட்சியளித்தன. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் மனத்திலே. அந்த வார்த்தை மழையிலே திக்குமுக்காடிப் போனார் அவர். 

‘அப்படியானால் ஒன்றும் செய்வதற்கில்லையாக்கும்? ஈசன் விட்ட வழி. என்ன பண்றது?’ என்று எழுந்திருந்து கிளம்பிய கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளை மடக்கி உட்கார வைத்து மீண்டும் பேசினார் வக்கீல். ஈசன் விட்ட வழியல்ல விஜயபுரத்தில் இல்லாவிட்டாலும் சென்னைப் பட்டிணத்தில் எல்லாமே வக்கீல் சீனிவாசன் விட்ட வழிதான். வேறு வழி கிடையாது என்பது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் மனசிலே பசுமரத்தாணிபோலப் பதிந்தது. அடாடா! வக்கீல் சீனிவாசன் என்று ஒருவன் இப்பூவுலகில் சென்னை மாநகரில் இருக்கும் போது, பாவம்! புத்திகெட்ட மனிதர்களே. என்ன மடத்தனம் என்று கடைசியில் எண்ணத் தொடங்கிவிட்டார் சாஸ்திரிகள். 

வெகு விநயமாக, விழுந்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லாத குறையாக சாஸ்திரிகள் சொன்னார்: “என்னமோ எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களாகப் பார்த்துக் கருணை பண்ணியாகணும். பிள்ளையாண்டானைக் காப்பாற்றிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு” என்றார். 

வக்கீல் சீனிவாசன் தாழ்மையுடனே சொன்னார். “என்னவோ என்னாலானது செய்கிறேன்.” சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பிறகு சொன்னார்: வேலைத் தொந்தரவு தாங்காமல் சிலநாள் நிம்மதியாக அண்ணாவோடே இருந்து விட்டுப் போகலாம்னு வந்தேன். வந்த இடத்திலேயும் வேலைத் தொந்தரவு தொடர்ந்து வரது. நம்ம சௌகரியத்தை மட்டும் கவனித்தால் போதுமா? நமக்கு ஏதோ கொஞ்சம் உள்ளது. பொருள் அறிவு எல்லாத்தையும் தான், கடவுள் பரோபகார்த்தமாகத்தானே கொடுத்திருக்கிறார்? மறுபடியும் பட்டணம்போய் நுகத்தடியிலே தலையைக் கொடுக்க வேண்டியது தான். தவிரவும் உங்களைப் போன்றவர்களுக்குச் செய்யாமே வேறு யாருக்குத் தான் செய்யப்போகிறேன்?” 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குப் புரியவேயில்லை – தன் நன்றியை அந்தப் பெரிய வக்கீலுக்கு எப்படித் தெரிவித்துக் கொள்வது என்று அவர் எழுந்தார்; விசுவநாதய்யரும் எழுந்தார். 

சாஸ்திரிகள் சொன்னார்: “நான் வரட்டுமா? போய்ப் பட்டணத்துக்குக் கிளம்ப மூட்டை முடிச்செல்லாம் ஏற்பாடு செய்கிறேன், அவளும் வருவாள்…” 

வக்கீல் சீனிவாசன் கேட்டார்; “சாயந்திரத்துக்குள்ளே எல்லாம் ஏற்பாடாகி விடுமா?” என்று. 

“எதெல்லாம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

சாஸ்திரிகளுடைய அந்தக் கேள்வி சீனிவாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒன்று அவர் பெரிய அப்பாவியாக இருக்கவேண்டும். அல்லது பணக்காரராக இருக்க வேண்டும் எதுவாகயிருந்தால் அவருக்கென்ன? இரண்டுமே லாபகர மானதுதான். 

“இன்று சாயங்காலம் கிளம்பினால் நாளைக்காலையில் பட்டணம் போயிடறோமா?” என்றான் சீனிவாசன். 

“ஆமாம்” என்றார் சாஸ்திரிகள். ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்று. 

“உடனே ஏற்பாடு செய்து பெயில் வாங்கலாம். மற்றப்படியும் நடவடிக்கை எல்லாம் எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கையிலே ஐந்நூறு ரூபாய் இருந்தால் போதும். மேலே வேண்டுமானால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்றார் சீனிவாசன். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மூர்ச்சை போட்டு விழுந்து விடாமல் நிமிர்ந்து நின்றதையே பெரிய ஆச்சரியம் என்று தான் சொல்லவேண்டும். அவர் இதயம் ஐந்நூறு…. ஐந்நூறு…. ஐந்நூறு என்று ஒவ்வொருதரமும் சொல்லிக்கொண்டே அடித்துக்கொண்டது. மூச்சுத் திணற வாய் திறவாமல் நின்றார் அவர். 

அவர் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக அர்த்தம் செய்து கொண்டான் சீனிவாசன். “வீட்டிலேயும் நன்றாக விசாரி யுங்கள். சீதாராமன் என்னென்ன சொன்னான் என்று விசாரித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஏதாவது அக்காளிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொன்னானா என்று விசாரியுங்கள்” என்றான். 

இதெல்லாம் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் காதிலேயே விழவில்லை. அவர் ஐந்நூறு – ஐந்நூறு – ஐந்நூறு ஜபத்திலேயே ஆழ்ந்திருந்தார். 

சீனிவாசன் மேலும் சொன்னான்: “நாழியாகிறது. நானும் கிளம்புவதாக இருந்தால் அண்ணாவிடம் ஜோலி பேச வேண்டியது நிறைய இருக்கிறது. சாயந்திரம் வாருங்கோ சாஸ்திரிகளே” என்றான். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் விசுவநாதய்யரும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். வழியிலே விசுவ நாதய்யரை விசாரித்தார் சாஸ்திரிகள், “ஐந்நூறு ரூபாயா பிடிக்கும்?” என்று. 

விசுவநாதய்யர் ஆறுதல் கூறினார். “அப்படி ஒண்ணும் ஆகாது. இருந்தாலும் ஆபத்து சமயத்துக்குத் தயாராகத்தானே இருக்கணும்? அதுவும் பட்டணத்துக் கரையிலே செலவு கொஞ்சம் ஜாஸ்திதான் ஆகும். ஐந்நூறு வேண்டாம். இருநூறு, முன்னூறு எடுத்துக் கொண்டு போறதுதான் நல்லது” என்றார். 

“இருநூறு முன்னூருக்கு நான் எங்கே போவேன்?” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

விசுவநாதய்யர் இதற்குப் பதில் எதுவும் சொல்ல வில்லை. தவிரவும் அவர் ஆபீஸ் போக நாழியாகி விட்டது. அவசர அவசரமா சாஸ்திரிகளைப் பிரிந்து வீடு சென்றார். 

விசுவநாதய்யர் வீட்டுக்குள் வந்ததுமே நளினி கேட்டாள்; “ஏன் அப்பா! வக்கீல் என்ன சொன்னார்?” 

வழக்கத்துக்கு விரோதமாக விசுவநாதய்யருக்கே நளினி யிடம் கோபம் வந்தது. “போடி கழுதை! போய் இலையைப் போடச் சொல்லு. நாழியாறது. குளிச்சுட்டு வரேன். சாப்பிட்டு விட்டு ஆபீஸ் கிளம்பணும் ” என்றார். 

சாப்பிடும்போது விசுவநாதய்யர் தனக்கு ஏன் நளினியிடம் கோபம் வந்தது என்று தனக்குள்ளாகவே விசாரணை செய்து பார்த்துக் கொண்டார். காரணம் எதுவும் புலனாகவில்லை. ஆபீஸுக்குப் போகும்போது நளினியை அருகில் அழைத்து ஒரு வார்த்தை சொல்லாமல் அவள் தலை மயிரை ஒரு தரம் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார் விசுவநாதய்யர். 

எதிர் வீட்டிலே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும், பர்வ தத்தம்மாளும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஐந்நூறு… ஆயிரம் என்று சாஸ்திரிகள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் பர்வதத்தம்மாளின் கட்சி தான் கடைசியாக வெற்றி பெற்றது. ஆனால் தான் பெற்ற வெற்றி காரணமாகப் பர்வதத்தம்மாள் தன் கழுத்திலிருந்த ஒரே ஆபரணமாகிய இரண்டு வடம் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தாள். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் பல வருஷங்களா அணா அணாவாக மிச்சம் பிடித்துத் தபாலாபீஸ்ல் கட்டி யிருந்த நூற்றிருபதில் நூறு ரூபாயை வாங்கி வந்தார். 

கையில் முந்நூறு ரூபாய் சில்லரையுடன் பட்டணத்துக்குக் கிளம்பினார்கள். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும், பர்வதத் தம்மாளும், பட்டணத்துப் பெரிய வக்கீல் சீனிவாசனும். 

விஜயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் குமாஸ்தாக்களில் சிலர் தன்னைப்பற்றி பேசிக்கொண்டிருந்தது ஸ்ரீனிவாசனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் அவன் லயம் செய்திருக்கமாட்டான். அவனைப் போலப் பெரிய வக்கீல்கள் இதை எல்லாம் லக்ஷ்யம் செய்தால் கட்டுமா? 

ஒரு டிக்கட் குமாஸ்தா மற்றவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்; “மாயவரம் டிக்கெட்டைக் கொடுத்து விட்டு விஜயபுரத்திலே இறங்கினவனை நம்ம வைத்திநாதன் தம்பியாச்சே என்று கவனிக்காததுபோல இருந்தோம். இப்போ என்னடான்னா, சிகரெட்டும் கையுமாவந்து ஸெகண்டுகிளாஸ் டிக்கெட்டு வாங்கி வண்டியிலே ஏறி உட்கார்ந்துக்கறான் பெரிய மனுஷன்… என்ன சொல்றது?” என்றான். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் அவர் மனைவியும் மூன்றாவது வகுப்பிலேதான் பிரயாணம் செய்தார்கள். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கோ அவர் மனைவிக்கோ ஸ்ரீனிவாசனுக்கோ தெரியாது – அதே இரவு எழும்பூரில் விஜயபுரத்துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு சீதாராமன் கிளம்பிக் கொண்டிருந்தான் என்பது. அவர்கள் ஏறியிருந்த வண்டி பட்டணத்திலிருந்து வந்த வண்டியைத் திண்டிவனத்தில் சந்தித்தது; ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வில்லை! 

– தொடரும்…

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *