கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 2,535 
 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

9.விஜயபுரத்தில் 

“நளினி! அடீ நளினி! எங்கேயடிம்மா தொலைஞ்சு போயிட்டே!” என்று சமையல் அறையிலிருந்தபடியே குரல் கொடுத்தாள் சின்னம்மா. 

“ஏன் சின்னம்மா! இதோ இருக்கேனே. முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரத்துக்குள்ளே எட்டுத் தரம் கூப்பிட்டுடறயே!” என்று கூறிக்கொண்டே. அந்தக் கோபத்திலும் தன் விளை யாட்டுத் தனத்தை மறக்காமல், குதித்துக் குதித்துக் கொண்டே உள்ளே வந்தாள் நளினி. 

“கெட்ட கேட்டுக்கு வாய்வேறே கிழியறது! திண்ணை யிலே நின்னுண்டு தெருவோட போற தடியனை எல்லாம் பார்த்துண்டு… கல்யாணம் பண்ணிக் குடியும் குடித்தனமுமா நாலு பிள்ளை பெத்தெடுக்க வயசாச்சு!” என்றாள் சின்னம்மா. 

“நாலு பிள்ளையா?” என்று கேட்டுவிட்டுக் கலகல வென்று சிரித்தாள் நளினி. 

அவள் சிரித்தது சின்னம்மாவுக்கு அதிக ஆத்திரத்தை ஊட்டியது. “வர வர நன்னாத்தானிருக்கு உன் காரியம் எல்லாம்! சொன்னா சித்தி படுத்தறா அப்படீம்பா ஊரெல்லாம். ஒங்கப்பாவுக்கு வேறே பயந்துண்டு கிடக்கவேண்டியிருக்கு!” என்றாள். 

இதைக் கேட்டுக்கொண்டே தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் உள்ளே வந்துவிட்டார்: “பாவம், அந்தப் பொண்ணைப்போட்டு ஏன் சதாப் படுத்திண்டே இருக்கே! தாயில்லாப் பொண்ன்ணு கொஞ்சம் கரிசனமாகத்தான் இரேன்” என்றார். 

“அதெல்லாம் சரி; தாயிருக்கிற பிள்ளை பசியாலே துடித்து வாடறது கேப்பாரில்லை. அதுக்குச் சாதம் பிசைஞ்சு வைச்சு அரைமணியா உலர்ந்து போறது. சாதத்தை ஊட்டுடின்னு கூப்பிட்டுச் சொன்னால் நான் பொல்லாதவள்; அவள் தாயில்லாப் பெண்…” என்றாள் சின்னம்மா. 

“ஏண்டியம்மா நளினி! காலாகாலத்திலே அந்தக் குழந்தைக்கு வேண்டியதைச் செய்துவிட்டு அப்புறம் ஏதாவது கூத்தடிக்கப்படாதா?” என்றார் விசுவநாதய்யர். 

“இல்லேப்பா; மளிகைக்கடை வைத்தா மாமா பிள்ளை ராமு வந்தான். அவங்கிட்டே அவன் சித்தப்பாவைப்பத்தி விசாரிச்சுண்டிருந்தேன்….” என்றாள் நளினி. 

“உம்….” என்றார் விசுவநாதய்யர். 

“பத்து வயசு ஆறதுக்குள்ளே எத்தனை ஊர் வம்படி அம்மா உனக்கு!” என்றாள் சின்னம்மாள். 

“ராமு சொன்னான் – அவன் அம்மா சொல்லிண்டிருக் கானு. இந்தக் கட்டுப்பெட்டியும் அந்த அசட்டுப் பொம்மனாட்டியுமா அந்த வக்கீலை நம்பிப் பணத்தை எடுத்துண்டு பட்டணத்துக்குப் போயிருக்காளே, என்ன ஆகுமோன்னு சொன்னாளாம்” என்றாள் நளினி. 

“வைத்தியநாதய்யர் என்ன சொன்னாராம்?” என்று கேட்டார் விசுவநாதய்யர். 

“வைத்தா மாமா சொன்னாராம்: ‘கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அப்படி ஒண்ணும் ஏமாந்து பணத்தை விட்டு விடமாட்டார். கெட்டிக்காரர்தான்’ அப்படின்னாராம். “உங்க தம்பி சாமர்த்தியம் உங்களுக்கே தெரியாது.’ என்றாளாம் அவர் மனைவி. “என்னத்தை பண்றது. ஸ்ரீனிவாசனை எனக்குக் கூடத்தான் பிடிக்கவில்லை. ஆனால், தம்பியாச்சே; எங்காதுக்கு வராதடா”ன்னு எப்படி மனந் துணிஞ்சு சொல்றது? அப்படின்னாராம் வைத்தா மாமா, அவர் மனைவி பதில் சொன்னாளாம். “இந்தக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், அவர் பெண்டாட்டி; அவர் மச்சினன் இவா விஷயமா உங்க தம்பியாலே சிவனேன்னு இருக்கிற நம்மபேரு சந்தி சிரிக்கப் போகிறது” என்றாளாம். மற்றதை எல்லாம் கேக்கறதுக் குள்ளே சின்னம்மா கூப்பிட்டா – “வந்துட்டேன்” என்றாள் நளினி. 

“உனக்கு அக்கிரகாரத்திலே ‘நியூஸ் பேப்பர்’னு நல்ல பேர் தாண்டி வச்சிருக்கா” என்றாள் சின்னம்மா சிரித்துக் கொண்டே. 

“ராமு எங்கே இப்போ?” என்று விசாரித்தார் விசுவநாதய்யர். மற்ற விஷயங்களையும் அவனைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று எண்ணினார் அவர். 

நளினி சொன்னாள்: “நீ கேட்டால் அவன் ஒண்ணும் சொல்லவே மாட்டான். எங்கிட்ட சொல்றான்னா உங்கிட்டேயும் சொல்வானா என்ன? தவிர, மேட்டுத் தெருவிலே குத்துப் பம்பரம் ஆடப் போயிட்டான்” என்றாள். “இனிமே சாயந்தரம் பார்த்தாத்தான் அவனைப் பாக்கியை விசாரிக்கலாம்” என்று வருத்தத்துடன் சொன்னாள் நளினி. 

பிறகு குதித்துக்கொண்டே சமையலறைக்குள் போய் அழ ஆரம்பித்துக் கொண்டிருந்த ராஜுவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, டதுகையில் சாதம் பிசைந்து வைத் திருந்த வெள்ளிப் பேலாவை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். “அம்மு சாப்பிடறயாடா?” என்று தன் இடுப் பிலிருந்த ராஜுவைக் கேட்டுக்கொண்டே, கூடத்தில் இருந்த சின்னம்மாவை லக்ஷ்யமே செய்யாமல் மீண்டும் வாசல் பக்கம் போய்விட்டாள். 

“நன்னாருக்குடி -கேட்பாரில்லே! இந்தப் பெண் அடிக்கிறகூத்து?” என்று முணுமுணுத்தாள் சின்னம்மா. 

“கெட்டிக்காரக் குட்டி! ஊரிலே எத்தனை அசடும் அசமஞ்சமும் இருக்கு! அவாளை எல்லாம் போலவா இருக்கா நம்ம நளினி?” என்று பெருமையுடனேயே சொன்னார் விசுவநாதய்யர். 

இதை மறுத்துச் சொல்லச் சின்னம்மாவாலும் முடியாது. அவள் சொன்னாள்; “இருந்தாலும் அடங்காப் பிடாரியாக, வம்பு அளக்கரவளாக இருக்கப்படாது!” 

“தானே சரியாகப் போறது, சின்னப் பெண் தானே!” என்றார் விசுவநாதய்யர். 

“நாளைக்குக் கல்யாணம் பண்ணிண்டு ஒத்தராத்திலே. போய் அடங்கி நடக்கத் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றாள் சின்னம்மா. 

“ஏதோ நம்ம நளினியைப் பிரியமா வச்சுக்கிறவனாகத் தான் ஒருத்தன் வருவான்” என்றார் விசுவநாதய்யர். 

“அது எப்படியானாலும் சரி. எங்கேயாவது இளையாளாக மாத்திரம் கொடுத்துடாதேங்கோ! எவ்வளவு பிரியமாக இருந்தாலும் சரிதான். மூத்தாள் குழந்தைகளைப் படுத்தறான்னு ஊரிலே அபவாதம்  சொல்லிண்டுதான் இருப்பா” என்றாள் சின்னம்மா. 

விசுவநாதய்யருக்கும் கோபம் வந்தது. ஆனால் பேச்சை வளர்த்திக் கோபத்தையும் வளர விடுவானேன் என்று பேச்சை நிறுத்துகிற சாக்கில் சொன்னார்: “சரி சரி வம்பளந்துண்டு நிக்க எனக்குப் பொழுதில்லை. வெந்நீர் எடுத்து வை; ஸ்நானம் பண்ணிவிட்டு ஆபீசுக்குக் கிளம்பணும்.” 

இடுப்பில் குழந்தையுடன் வாசல் திண்ணைக்குச் சென்ற நளினி, வழக்கம் போலச் சாப்பிடமாட்டேன் என்று பிடி வாதம் பிடித்த குழந்தையிடம் பயமுறுத்தலாகவும் வேடிக்கை யாகவும் “பூச்சி! பூச்சி!” என்று கூப்பிட்டாள். 

“ச்சி… ச்சி….” என்று மழலை பேசியது குழந்தை. 

“சாப்பிடறயா! அம்முவை எல்லாம் பூச்சிக்குப் போட்டுடட்டுமா?” என்றாள் நளினி. 

“ச்சி… ஓடு” என்றது குழந்தை. 

வாலை ஆட்டிக்கொண்டு நாலு கால்ப் பாய்ச்சலாக அங்கு ஓடிவந்த பூச்சிக்கு ‘அம்மு’ நிறையவே கிடைத்தது. பருப்பும் நெய்யும் விட்டுப் பிசைந்த சோற்றைத் தினம் சாப்பிட்டு அந்தப் பூச்சி கொழு கொழுவென்றுதான் இருந்தது. அதன் வால் பிய்ந்துவிடும்போல ஆடிக்கொண்டிருந்தது. 

பூச்சிக்குக் கண்டு மிஞ்சிய சாதத்தைக் குழந்தைக்கு ஊட்டி விட்டு வெள்ளிப் பேலா காலியானதும் உள்ளே போக நளினி யோசனை செய்த சமயத்திலே அக்கிரகாரத்து பிள்ளையார் கோவிலைத் தாண்டிக்கொண்டு ஒரு குதிரை வண்டி வந்தது. விஜயபுரத்துக்குப் பக்கத்திலே வெள்ளைக் குதிரை, அதுவும் அந்த மாதிரி வெள்ளைக் குதிரைபூட்டிய வண்டி அது ஒன்று தான் உண்டு. சாதாரணமாக அக்கிர காரத்திற்கு வரும் யாரும் அந்த வண்டியை அமர்த்திக் கொண்டு வருவதில்லை. யாராவது மைனர்ப் பிள்ளைமார்களோ, உல்லாச புருஷர்களோ அல்லது பட்டணத்துப் பெரிய வக்கீல் ஸ்ரீனிவாசனைப்போலப் பிறர் செலவில் பிரயாணம் செய்கிறவர்களோதான் அந்த வண்டியில் ஏறுவார்கள். அந்த வண்டிக்காரன், தன் வண்டியின் மதிப்புப் பூராவையும் உணர்ந்தவன். சற்று அதிகமாகவேதான் கூலி கேட்பான். 

அந்தக் குதிரை வண்டி அக்கிரகாரத்துக்குத் திரும்பி வருவதைக் கண்ட நளினி, இடுப்பில் வயிறு நிறைந்த குழந்தையுடன், கையில் காலி வெள்ளிப் பேலாவுடனும் “அதோ பார், குதிரை வண்டி” என்று குழந்தையிடம் சொல்லி விட்டுத் தானே குதிரை வண்டியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். இரண்டு நாள்களுக்கு முன் ஒரு குதிரை வண்டி அதேமாதிரி வந்து கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டு வாசலில் நின்றதும், அதிலிருந்து “பட்டணத்து மாமா?” என்று தான் பெயர் சூட்டிய வாலிபன் இறங்கியதும், அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வந்தன நளினிக்கு. 

இந்தக் குதிரை வண்டியும் நேரே வந்து நளினியின் வீட்டிற்கெதிரேதான் நின்றது! அதே வாலிபன்தான் அதிலிருந்து இறங்கினான். இறங்கிய சீதாராமன் தன் தமக்கையின் வீட்டைப் பார்க்குமுன் நளினி வீட்டைத்தான் பார்த்தான். நளினி இடுப்பில் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தான். போன தடவையும் விஜயபுரம் அக்கிரகாரத்தில் இவளைத் தான் முதலில் பார்த்தேன். இப்பொழுது இவளையேதான். பார்க்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே திரும்பித் தன் தமக்கையின் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைத்தான். வீடு பூட்டியிருந்தது அவன் கண்ணில் பட்டது. 

திரும்பி நளினியின் வீட்டுப் பக்கம் வந்து, ‘அவாள்ளாம் எங்கே?” என்றான். 

“ஊரிலில்லை” என்று முதலில் சுருக்கமாய்ப் பதில் அளித்தாள் நளினி. பிறகு அது போதாதென்று எண்ணிய வளாக விவரமாகச் சொன்னாள். “உங்க கேஸை நடத்தப் பட்டணத்துக்குப் போயிருக்கா” என்றாள். 

“கேஸா! என்ன? கேஸா?” என்றான் சீதாராமன் பிறகு, “அட, பரமசிவா!” என்றான். 

“உங்க அக்காதான்….” என்று சொல்ல ஆரம்பித்தாள் நளினி. 

“அது சரி; உங்கப்பா இருந்தாக் கூப்பிடு” என்றான் சீதாராமன். 

தன் தகப்பனாரிடம் விஷயத்தைச் சொல்ல உள்ளே போனாள் நளினி. சொல்லிவிட்டு இரண்டே நிமிஷத்தில் வெளியே வந்தாள். “பெட்டி படுக்கையைக் கொண்டு வந்து இங்கே வைக்கச் சொன்னா. உங்களை உள்ளே வரச் சொன்னா” என்று சீதாராமனை உள்ளே அழைத்துச் சென்றாள். 

பெட்டி படுக்கையை உள்ளே கொண்டு வந்து வைத்து விட்டுக் கூலியை வாங்கிக்கொண்டு வண்டிக்காரன் போய் விட்டான். விசுவநாதய்யரும் சீதாராமனும் உள்ளே முன் கூடத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப் பங்களில் நளினி சாதாரணமாக வந்திருக்க மாட்டாள். ஆனால், என்னவோ தெரியவில்லை இடுப்பிலிருந்த குழந்தையைக் கூடக் கீழே விடாமல் வெள்ளிப் பேலாவை மட்டும் சமையல் அறையில் வைத்து விட்டு மீண்டும் திண்ணைக்கு நகர்ந்தாள். 

வாசல் திண்ணையில் ஒரு புது மனிதன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். 

“யாரு மாமா?” என்று விசாரித்தாள் நளினி. 

“சீதாராமன் இங்கேதான் இருக்கான்?” என்று விசாரித்தான் புது மனிதன். 

“ஆமாம், நீங்க யாரு?” என்று விடாமல் கேட்டாள் நளினி. 

“என் பெயர் குருஸ்வாமி” என்றார் வந்தவர். 

“நீங்க வந்திருக்கிறதாகப் பட்டணத்து மாமா கிட்டச் சொல்லட்டுமா?” என்றாள் நளினி. 

“வேண்டாம். தானே வருவான். பத்து நிமிஷம் கழித்துப் பார்க்கிறேன்” என்றார் குருஸ்வாமி. 

இவ்வளவு நேரம் நளினியின் இடுப்பிலே சும்மா இருந்த குழந்தை ராஜு குருஸ்வாமியைப் பார்த்துக் கையையும் காலையும் வீசினான். 

“ஓடா… போடா….” என்றான் ராஜு. 

குருஸ்வாமி சிரித்தார். 

நளினிக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தை ராஜுவுக்கு அந்த குருஸ்வாமியைக் கண்டால் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் சும்மா பேசாமல்தான் உட்கார்ந்திருந்தார்.

10.சீதாராமனும் குருஸ்வாமியும் 

உள்ளே முன் கூடத்தில் உட்கார்ந்து பேசத் தொடங்கிய சீதாராமனுக்கும் விசுவநாதய்யருக்கும் இடையே பேசுவதற்கு அதிக விஷயம் இல்லாததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. 

புதுசாக சீதாராமனை அன்றுதான் சந்தித்த விசுவநாதய்யர் முக்கியமான பல விஷயங்களைப் பற்றி எதுவும் பேச முடிய வில்லை. 

சீதாராமன் சொன்னான்: “தப்பாக ஏதோ அரெஸ்டு பண்ணிக்கொண்டு போய்விட்டார்கள். சென்னை சேர்ந்ததுமே என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுவித்து விட்டார்கள்.” 

தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். “என்னவோ எல்லாம் நல்லபடியாக முடிந்தது” “கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் அவர் சம்சாரமும் நேற்றுத் தான் கிளம்பினார்கள். பாவம்! வீண் செலவு” என்றார் சட்டென்று இப்படிச் சொன்னது தவறோ என்று அவருக்கே தோன்றியது. “நீங்கள் விடுவிக்கப்பட்டது பற்றி அவர்கள் ரொம்பவும் சந்தோஷப் படுவார்கள்” என்றார். 

“ஆமாம்: அக்காதான் என்னைப் பற்றி ரொம்பவும் கவலைப் பட்டிருப்பாள்” என்றான் சீதாராமன். 

“ஆமாம் ஆமாம்” என்று சொல்லித் தலையை ஆட்டினார் விசுவநாதய்யர். 

“அக்காவுக்கு எப்பொழுதுமே என்னிடம்தான் பிரியம் ஜாஸ்தி. என்னைத்தான் அவள் பிள்ளைபோல வைத்து வளர்த்தா” என்றான் சீதாராமன். 

“நேத்திக்கித்தான் கிளம்பிப் போனார்கள்” என்றார் விசுவநாதய்யர். மறுபடியும், வேறு என்ன சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. 

“இன்றே தந்தி அடிக்கிறேன். இன்றே புறப்பட்டு நாளைக்கு வந்துவிடலாம்” என்றான் சீதாராமன். 

“ஆமாம், அதுதான் நல்லது; நம்ம வைத்தா தம்பியோடு கூடத்தான் போயிருக்கா, விலாசம் விசாரிச்சு நானே ஆபீஸ் போனதும் தந்தி அடிச்சுடறேன்” என்றார் விசுவநாதய்யர். 

“உடனே புறப்பட்டு வந்துவிடச் சொல்லி அடியுங்கோ” என்றான் சீதாராமன். 

இவ்வளவு உரிமை கொண்டாடிக் கொண்டு அவருடன் பேசிக் கொண்டிருப்பது தவறு என்று பட்டது சீதாராமனுக்கு. அவர் யார்? தன் அக்காவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் என்பதனால் அவருடன் உறவாட அவனுக்கு ஏற்பட்டு விடுமா என்ன? தவிர, திருடியதாகக் குற்றம் சாட்டப் பட்டு ஜெயிலுக்குப் போனவன் எப்படிப் பட்டவனோ என்று அவர் ஆச்சரியப்படாமல் இருப்பாரா? இந்த மட்டும் உட்கார வைத்துப் பேசினாரே. அதுவே பெரிசு என்று எண்ணினான் சீதாராமன். 

எழுந்தான்: “நான் போய் வரட்டுமா?” என்றான். 

விசுவநாதய்யரும் எழுந்தார். “எங்கே போகப் போறேள்! நாளைக் காலையிலே அவாள் வந்துடறா. அதுவரையில் இங்கேயே தங்கலாமே!” என்றார். 

“என்னால் உங்களுக்கு அசௌகரியம்” என்றான் சீதாராமன். 

“அசௌகரியம் என்ன? ஒன்றுமில்லை; ஒருநாள் நீங்கள் இங்கே தங்கினதால் எனக்கு ஒன்றும் அப்படி அசௌகரியம் ஏற்பட்டு விடாது. இங்கேயே இருக்கலாம்” என்றார் விசுவநாதய்யர். 

“முன்னே பின்னே தெரியாதவனிடம் நீங்க ரொம்ப ஆதரவா இருக்கேள்” என்றான் சீதாராமன். 

“அப்படி ஒண்ணும் இல்லே. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். அவர் சம்சாரமும் எங்காத்துக்கு ரொம்பவும் சிநேகிதம்தான். சட்டையைக் கழட்டி விட்டு ஸ்நானம் பண்ணுங்கோ. இரண்டாங் கட்டிலே வெந்நீர் இருக்கு. நான் ஆபீஸுக்குப் போய்ப் பதினோரு மணிக்கு வரேன். அப்புறம் சாப்பிடலாம்” என்றார் விசுவ நாதய்யர். 

“நளினி! நளினி!” என்று கூப்பிட்டார். 

இடுப்பில் ராஜுவுடன் நளினி உள்ளே வந்ததும் அவளிடம் சொன்னார்: “இந்த மாமாவுக்கும் குளிக்க வெந்நீர் எடுத்து வை. சின்னம்மா கிட்டேச் சொல்லு – இவரும் இங்கே சாப்பிடுவார்னு.” 

நளினி சொன்னாள்: “சரி: ஆனால் இந்த பட்டணத்து மாமாவைத் தேடிண்டு வாசல்லே யாரோ ஒத்தர் காத்திண்டிருக்கார்!” 

“யார் அது?” என்றான் சீதாராமன் திடுக்கிட்டவனாக. 

அவன் முகத்தில் படர்ந்த கவலைக் குறியை நளினியும், விசுவநாதய்யரும் கவனிக்காமல் இல்லை. 

“யாரோ குருஸ்வாமியாம். வந்து பத்து நிமிஷமாச்சு. வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கார்” என்றாள் நளினி. 

“குருஸ்வாமியா?” என்றான் சீதாராமன். அவன் முகத்தில் படர்ந்த கவலைக் குறி மறைந்தது. அவன் குரலிலே ஓர் அலட்சியம் தொனித்தது. ஆனால் ஓர் அசட்டுக் குறியும் படர்ந்தது; ஏதோ விஷயம் தெரியாது தடுமாறுகிறவன் போலிருந்தான் அவன். 

இரண்டொரு வினாடியில் சமாளித்துக் கொண்டான். பிறகு சொன்னான். “என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் போனான். 

விசுவநாதய்யர் சட்டையை மாட்டிக் கொண்டு ஆபீசுக்குக் கிளம்பத் தயாரானார். 

நளினி தன் இடுப்பிலிருந்த ராஜுவைக் கீழே விட்டு விட்டு அவளுடைய பட்டணத்து மாமாவைப் பின் தொடர்ந்து வாசல் பக்கம் போனாள். 

வாசலில் வந்த சீதாராமனைக் கண்டவுடன் குருஸ்வாமி எழுந்து திண்ணையிலிருந்து இறங்கி சீதாராமனை நோக்கி வந்தார். இருவரும் எதிரும் புதிருமாகத் தெரு திண்ணையில் நெருங்கி உட்கார்ந்தார்கள். 

சீதாராமன் கேட்டான்: “எப்பொழுது நீங்கள் இங்கே வந்தீர்கள்?” என்று. 

“நீ வந்த ரெயிலிலேயே தான் நானும் வந்தேன்” என்றார் குருஸ்வாமி புன்னகையுடன். 

“ஓஹோ!…. உங்களுக்கு விஜயபுரத்தில் யாரும் உறவு இருப்பதாக எனக்குத் தெரியாதே!” என்றான் சீதாராமன். 

“நானும் விஜயபுரம் வரதாக நினைக்கவேயில்லை” என்றார் குருஸ்வாமி. இரண்டொரு நிமிஷங்களுக்குப் பிறகு அழுத்தமாக “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்!” என்றார். 

“என்னைப் பார்க்கவா?” என்றான் சீதாராமன் ஆச்சரியத்துடன். 

“ஆமாம். உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்!” என்றார் குருஸ்வாமி. 

“நான் வந்த ரெயிலிலேதான் வந்தேன் என்கிறீர்கள்; ஆனால் நான் பார்க்கவில்லையே!” என்றான் சீதாராமன். 

“நீ இரண்டாவது வகுப்பில் வந்தாய். நான் மூன்றாவது வகுப்பில் வந்தேன்” என்றார் குருஸ்வாமி. 

“அது சரி…” 

“அதுதான் சரியல்ல என்று சொல்ல வந்தேன். நீ இரண்டாவது வகுப்பில் ஏறியது இதுதான் முதல் தடவை. நான் மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்ய நேர்ந்ததும். பல வருஷங்களில், இதுதான் முதல் தடவை” என்றார் குருஸ்வாமி. 

“அப்படியா?” என்றான் சீதாராமன் ஓர் ஏளனச் சிரிப்புடன். 

“அந்த நிலைமையை மாற்றிக்கொண்டு போவது என்கிற உத்தேசத்துடன்தான் உன்னைப் பார்க்க இப்போது வந்தேன்” என்றார் குருஸ்வாமி. 

“என்னை நீ பார்த்ததால் நிலைமை மாறிவிடும் என்று எனக்கு நம்பிக்கையில்லையே!” என்றான் சீதாராமன். 

“எனக்குப் பூரண நம்பிக்கையிருக்கிறது” என்றார் குருஸ்வாமி. 

“அதைப்பற்றி எனக்கு ஒரு ஆக்ஷேபமும் இல்லை. விஜய புரத்திலே இரண்டு நாள் தங்கினால் நீ என்னை மறுபடியும் வந்து பார். எனக்கு இப்போ நாழியாகிறது” என்று எழுந்தான் சீதாராமன். 

அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் குருஸ்வாமி. அவர் பிடியிலிருந்து உதறமுடியவில்லை சீதாராமனால். உதறித் தள்ளிவிட்டு நகர்ந்துவிட முடியாது. 

“என்ன வேண்டும் உனக்கு?” என்றான் சீதாராமன். 

“அப்படிப் பேசு; அதுதான் சரி” என்றார் குருஸ்வாமி. சற்று நேரங் கழித்துச் சொன்னார்: “உட்காரப்பா உட்காரு. பிறத்தியார் கவனிக்காமல் காதோடு காது வைத்த மாதிரி காரியத்தை முடித்துக் கொள்வதுதான் பரஸ்பரம் லாபகரமான வழி. உட்காரு.” 

சீதாராமன் உட்கார்ந்தான். தோல்வியுற்றுவிட்டதைக் காட்டிக்கொண்டால் ஆபத்து என்று உணர்ந்தவனாகச் சொன்னான்: “உன்னைப் பட்டணத்திலே ரொம்பப் பேர் தேடிண்டிருக்காளாமே?” 

“தேடட்டுமே! இந்தக் குருஸ்வாமி அதற்கெல்லாம் பயந்துவிடற ஆசாமியில்லை” என்றார் குருஸ்வாமி. 

“தெரிகிறது.” 

“தெரிந்தா? இன்னொன்றும் தெரிந்துகொள் உனக்கு நல்லது. நான் சொல்றபடி கேட்காது போனால் உன்னையும் நாளைக்கே பலர் தேட ஆரம்பித்து விடுவார்கள்” என்று பயமுறுத்தினார் குருஸ்வாமி. 

“தேடட்டுமே! குருஸ்வாமி செய்கிற காரியத்தை சீதாராமனால் செய்ய முடியாதா?” என்றான் சீதாராமன். 

“அவ்வளவு நன்றாகச் செய்ய முடியாது என்றுதான் நான் சொல்கிறேன். சீதாராமனுக்கு இம்மாதரி விஷயங்களில் அனுபவம் போதாது” என்றார் குருஸ்வாமி. 

“இதென்ன வெட்டிப் பேச்சு? வந்த காரியத்தைச் சொல்லு” என்றான் சீதாராமன் பொறுமை இழந்தவனாக. 

“அப்படி வா தம்பி!” என்றார் குருஸ்வாமி. மேலும் சொன்னார்: “நான் நியாயப்படி நடக்கிறவன். தவிர உன் சாமர்த்தியத்தையும் ஒப்புக்கொள்கிறேன். என்னையே ஏமாற்றி விட்டாயே நீ! சபாஷ்! எனக்கு வேண்டியது நியாயம்தான்.” 

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” “புரியறதுக்கு அவசியமே கிடையாது தம்பி. எனக்குச் சேரவேண்டியது பதினாயிரம்தான்” என்றார் குருஸ்வாமி. 

“பதினாயிரமா? ஏதப்பா எங்கிட்டப் பதினாயிரமும் இருபதினாயிரமும்!” என்றான் சீதாராமன். 

‘ஏது எப்படி என்றெல்லாம் உரக்கச் சொல்லலாமா?’ என்று கூறி நகைத்தார் குருஸ்வாமி. 

இதற்குள் ஆபீசுக்குக் கிளம்பத் தயாராக விசுவநாதய்யர் வெளியே வந்தார். அவர் சீதாராமனிடம். “குளிச்சு விட்டுத் தயாராக இருங்கள்; நான் பதினோரு மணிக்கு வரேன்” என்றார். 

“சரி” என்றான் சீதாராமன். “தந்தியை அடித்து விடுங்கள்” என்றான். 

விசுவநாதய்யர் போனபிறகு குருஸ்வாமியிடம் சீதாராமன் சொன்னான்: “நீ சொல்ற விஷயங்களைக் கவனத்தில் வைக்கிறேன். எதற்கும் சாயங்காலம் வா நீ.” 

குருஸ்வாமி சிறிது நேரம் யோசித்து விட்டுச் சொன்னார்: “வரேன். ஆனால் அதற்குள் எங்கிட்ட ஏதாவது விளை யாடலாம்னு ஏற்பாடு செய்யாதே உன்னால் சமாளிக்க முடியாது.” 

குருஸ்வாமி போனபிறகு கொல்லைக் கூடத்திற்குக் குளிக்கப் போனான் சீதாராமன்.

– தொடரும்..

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *