நம்பிக்கை மனிதர்கள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 2,461 
 
 

“இருந்தா நம்ம சுகியோட புருசன் மாதிரி இருக்கனம். எவ்வளவு டீசன்டா நடந்துக்கறாரு. சுகியத்தவிர வேற எந்தப்பொம்பளைங்க கூடவும் பேசியே நான் பார்த்ததில்லை. விசேசத்துல அக்கா, தங்கச்சி முறையுள்ளவங்க கூடவும் அளவா நாலு வார்த்த பேசீட்டு நகர்ந்து போயிடுவாரு” என பெருமிதமாக சுகியின் தோழி கவிதா இன்னொரு தோழியான விகிதாவிடம் பேசினாள்.

“ஒன்னுந்தெரியாத பாப்பா போட்டுக்குவாளாம் தாழ்ப்பாங்கிற கதை தான். அவரு கிட்ட தனியா இருக்கும் போது பேசிப்பாரு. தனியா ஒரே வீட்ல ஒரு நைட் தங்கிப்பாரு. அப்பதான் உண்மை முகம் தெரியும். கூட்டத்துல நடிச்சுட்டு தனியா பேச வாய்ப்பு கெடைச்சா மணிக்கணக்குல கதைக்கறதோட, கண்ணாலயே பொண்ணுங்கள முழுசா சிதைச்சிடுவானுக இந்த ஆம்பளைங்க. என்னோட அனுபவத்துல இந்த மாதிரி ஆளுங்களோட குணத்த நான் நெறையாத்தடவ பார்த்திருக்கிறேன்” என விகிதா சொல்ல கவிதா மறுத்தாள்.

“நூத்துக்கணக்குல ஆண்கள் வேலை செய்யற எடத்துல நான் வேலை பார்க்கிறேன். யாரோட பார்வை எப்படிப்பட்டதுன்னு நல்லாத்தெரியும். சுகியோட புருசன் நளன் நம்பிக்கைக்குரிய மனுசன். எதார்த்தமான பார்வை கூட சில சமயம் தவறான பார்வையாத்தெரியும். அதே மாதிரி தவறான பார்வை எதார்த்தமாவும் படும். மத்தவங்க செய்யற தப்ப இவரும் செய்வாருன்னு நீ நெனைக்கிறது கூட தப்பு தான்” என கவிதா உறுதியுடன் கூறும்போது பேருந்து வர அதில் விகிதா ஏறிச்செல்ல, தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப்புறப்பட்டாள் கவிதா.

பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குச்சென்ற போது வீடு பூட்டியிருந்தது. தன் தாயை அலைபேசியில் அழைத்துக்கேட்ட போது ஊருக்கு போன இடத்தில் வேலை முடியாததால் நாளைக்கு வருவதாகவும், இன்று ராத்திரி சுகி வீட்டில் தங்குமாறும் கூற வேறு வழியின்றி தன் வீட்டிற்கு அடுத்த தெருவிற்கு சமீபத்தில் குடி வந்த தோழி சுகி வீட்டிற்குச்சென்றாள் விகிதா.

காலிங் பெல்லை அடித்தாள். வீட்டின் கதவை அவளது கணவன் நளன் திறந்து விகிதாவை உள்ளே அழைத்து சுகி அவளது தாய் வீட்டிற்குச்சென்றிருப்பதாகவும், நாளை வருவாள் எனவும் கூறி விட்டு சோபாவில் அமரச்சொன்னவன் கதவைச்சாத்தினான்.

விகிதாவிற்கு இனம் புரியாத பயம் மனதைக்கவ்வியது. தோழி கவிதாவிடம் சற்று முன் தான் நளனைப்பற்றி மோசமாக கூறியதை நினைவு படுத்திப்பார்த்துக்கொட்டாள். ‘கடவுள் உடனே சோதனையைக்கொடுத்து விட்டாரே….?’ என நினைத்தவளாய் வேறு வழி தெரியாமல் விழித்தாள்.

“கொசு தொல்லைங்க. கதவை திறந்தே வைக்க முடியல. நீங்க இருங்க. காஃபி போட்டு எடுத்திட்டு வாரேன்” என கூறி சமையலறைக்குள் சென்றவர் காஃபியுடன் வந்தார். 

காஃபியை சுவைத்துக்குடித்து விட்டு வந்த விசயத்தை விகிதா சொல்ல, மகிழ்ச்சியடைந்தவர் “தாராளமா சுகி ரூம்ல தங்கிக்கங்க. பசிச்சா தோசை மாவு இருக்கு, சட்னி பிரிடஜ்ல இருக்கு. சுட்டு சாப்பிடுங்க. இந்தாங்க வீட்டு சாவி. வீட்ட உள் பக்கமா பூட்டிக்குங்க. எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு” என கூறியவரிடம், “நீங்க எனக்காக வெளில போற மாதிரி தெரியுது. நாந்தங்கறதுக்காக நீங்க ஏன் வெளில போகனம்? தோசைய நானே சுடறேன். உங்களுக்கும் சேர்த்து” எனக்கூறி சமையறைக்குள் சென்றாள்.

தனக்காக வெளியே செல்வதென திடீரென அவனெடுத்த முடிவை வைத்து அவன் மீது அளவு கடந்த நம்பிக்கை தனக்குள் ஏற்பட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டாள். ‘வெளியே செல்ல இருந்தவனைத்தடுத்திருக்கக்கூடாதோ?’எனவும் நினைத்தாள். 

‘சிங்கக்குகையில் புள்ளி மானைப்போல மாட்டிக்கொண்ட பின்பு சிங்கம் குகையை விட்டு வெளியேறுவதை யாராவது தடுப்பார்களா?

தவறு செய்து விட்டோமோ? அவனது அழகு நம்மை வசியமாக்கி விட்டதோ? நம்மை அவன் தவறானவளாக நினைத்து விடுவானோ?எதற்கும் தனியறையில் உள்ளே தாழிட்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என மனதால் உறுதிப்படுத்திக்கொண்டாள்.

சாப்பிட்டு முடித்து நளனுடன் பேச ஆரம்பித்த போது, கவிதாவிடம் சொன்னது போலவே மணிக்கணக்கில் பேச்சு தொடர்ந்தது. பேசும் நேரம் அவள் நினைத்தது போல அதிகமாக இருந்ததே தவிர பேசிய கருத்து அனைத்தும் முத்து. அவன் மீதுள்ள அதீத  பயம் மனதை விட்டு விலகி நம்பிக்கை ஏற்பட்டதோடு ஏக்கம் தூக்கம் வருவதைத்தடுத்தது. பேசி முடித்ததும் தனியறையில் தாழிட்டுப்படுத்தும் ‘இது போல ஒரு கணவன் தனக்கு அமைவாரா?’ எனும் ஏக்கம் தான் அவளது தூக்கத்தைக்கெடுத்தது. 

சுகிக்கு போன் செய்து வந்த விசயத்தைக்கூறினாள் விகிதா. 

“நீ வந்ததும் அவர் எனக்கு மெஸேஜ் பண்ணினார். எனக்கு கவலையெல்லாம் அவரு உன்னை இன்னைக்கு தூங்க விட மாட்டாரேங்கிறதுதான். அந்த அளவுக்கு ம்னு கேட்டா போதும் மனுசன் தத்துவமா பேசிட்டே இருப்பார்” என்றாள். 

‘தூக்கம் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். மிகச்சிறந்த புத்திசாலியான அவருடன் பேசும் சந்தர்ப்பம் இன்று மட்டும் தானே.‌‌?’ என நினைத்தபடி “தேங்க்ஸ்” என்றாள் சுகியிடம்.

படுக்கச்சென்று உறக்கம் வராததால் சற்று நேரம் கழித்து அறைக்கதவைத்திறந்து பார்த்த போது ஹாலில் உள்ள தரையில் படுத்தவாறு போர்வை கூட இல்லாமல் உறங்கிப்போயிருந்தான் நளன். தான் படுத்திருந்த அறையிலிருந்து ஒரு போர்வையை எடுத்துச்சென்று அவன் மீது போர்த்தி விட்டு நம்பிக்கையுடன் அறையின் கதவைச்சாத்தி தாழிடாமலேயே தனக்கான கட்டிலில் வந்து படுத்து உறங்கினாள் விகிதா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *