தூர்த்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 2,673 
 

வெந்த முகத்தைக் காட்டி, வந்த வழியிலேயே விருந்தாளிகளை அனுப்பிவிட்டு, விருந்துக்கான செலவை மிச்சப்படுத்த தெரிந்தவள் மாலதியாயி. இவளை எப்போதும் சந்தோசமாகவும், சவுண்டு பார்ட்டியாகவும் பார்த்துப் பழகிப் போன ஊரான் கண்களுக்கு, வரவர மாமியா கழுதையாகிப் போனாள் என்பதைப் போல, ஏதோ ஒரு மாதிரியாக, மந்திரித்து விட்ட கோழியாகத் தெரிந்தாள். குழாயடிக்கு வந்தால், குடிநீர்க் குழாயில் தண்ணீர் வருமோ இல்லையோ, அவள் வாயில் வார்த்தைகளோடு வந்துவிழும் எச்சில் தூறல், அவளுக்காகவே காத்திருக்கும், மரகதத்தையும், மாரியம்மாளையும் நனைக்காமல் கீழே விழாது.

குழாயடிக்கு வந்தவளை அருகில் அழைத்தவர்கள், பனித்தூறலுக்கு பிரியப்படடவர்களைப்போல, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் சிரித்து வைத்தார்கள்.

“..என்னடி ஆச்சு உனக்கு, குளிச்சு பலநாளு ஆனவமாதிரி இருக்கே, பல்லாவது வெலக்குனியா..?”

“என்னத்த அத்தாச்சி விலக்கச் சொல்றீக, உங்களோட மருமக எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, அதா மனசு ஒப்பாம கிறுக்காட்டம் திரியிறேன்.. “

“..வயசுக்கு வந்து மூணு வருசம் ஆகப்போகுதுல்ல, யாரு கைலேயாவது புடிச்சுக் குடுத்துருடி, உன்னை மாதிரியாயிடாமே..”

“ஆமாடி.. அக்கா சொல்றதைக் கேளு, உனக்கு, ஏந்தம்பி கெடைச்சான். அவளுக்கு ஏதாவது ஒண்ணுனா, நீ சிக்கிக்கிவா பாத்துக்கோ.. “

“..சரி நாங்கெளம்புறேன், என்னோட வீட்டுக்காரர்ட்டே போட்டு வையுங்கோ..” என இடுப்பில் ஏற்றிய குடத்தோடு நடந்து விட்டாள். மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது. ஹெட்மேன் மகன் ஒருவனுக்கு பேசி முடிக்கப்பட்டு, திருமணம் நடைபெற்றது. கல்யாணம் முடிந்த கையோடு, ரமணிப்ரியாவை அழைத்துக் கொண்டு, புதுமாப்பிள்ளை சென்னைக்குப் புறப்பட்டு விட்டான்.

சுகஜீவனம் செய்யுமளவுக்கு சம்பளம் இல்லாவிட்டாலும், “அதுக்கென்ன டவுனுதானே, எல்லாமும்தா இருக்கும்” என இவர்களின் தாம்பத்ய வாழ்க்கை உருள, “அடப்போங்கடி என காலமும் அதே கதியில் நகர்ந்து கொண்டிருந்தது. அடுத்த சில நாட்களில், உறவினர் வீட்டுத் திருமண விழாவிற்குச் சென்ற ப்ரியாவிடம் குசலம் விசாரித்தவர்கள், என்னடி பாத்து மூணு வருசமாச்சு, புள்ளைகுட்டி உண்டுமாடி என, புத்திரப் பேறை அரிய ஆர்வம் காட்டினார்கள்.

குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்றவர்களில் வாயாடிகளும் இருந்திருப்பார்கள் போல். கல்யாணம், கருமாதியில வாயாடாமல் இருந்தால் விழா எப்படிக் களைகட்டும்..

“இவளோட தாத்தா பண்ணி வச்ச பாவத்துக்கு, புள்ளைகுட்டி எப்புடி பெக்க முடியும். இந்த ஊருச்சனம் கேக்குற மாதிரி புழுப்பூச்சி வேணா உண்டாகும்” என்று சொல்லிச் சென்றார்கள். கூட்டத்தில் சண்டைக்குச் செல்ல வெட்கப்பட்டவள், கணவனை கடித்துவிட வேண்டும் என்ற அளவுக்கு கோபப்பட்டாள். விசேஷம் முடிந்து மூன்றாவது நாள் கணவனுடன் சென்னைக்குத் திரும்பினாள் ப்ரியா.

ஒருநாள் கணவன் அலுவலகம் சென்றுவிட்டதால், மதியச் சமையலுக்கான, எந்த முஸ்தீபுகளையும் முன்னெடுக்காத ப்ரியா, கட்டிலில் கூரையைப் பார்த்தபடி மல்லாக்கச் சாய்ந்து விட்டாள். சயனரேகை கண்ணுக்குக் கீழே கட்டித் தொங்க, இமைகளை மூடி உறக்கத்திற்குப் போனாள். அப்போது அடித்த காலிங்பெல், உறக்கத்தைக் கலைத்தது.

யாரு என்றபடி கதவைத்திந்தாள். திறக்கும் இடைவெளிக்குள் சத்தம் நுழையுமாறு “‘நாந்தான்” என்றான் ஒருவன்.பார்த்ததும் வெட்கத்தால் முகத்தை கோண வைத்துக் கொண்டவள், “வாங்க மச்சான்” என்றாள்.

“இதை எதிர்பார்த்திருக்க மாட்டியே” என்றான்.

“இப்ப எதிர்பாக்கலை, ஆனா நீங்க ஏன் வரலைனு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன், உங்க தம்பிக்கிட்டேக்கூட அடிக்கடி கேட்டிருக்கேன்..”

“எங்க அந்தப்பய..?”

“..அது ஆபீஸ் போய்டுச்சு” என வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் ப்ரியா. இதில் ஏதோவொன்றைப் பூடகமாக உணர்தவன்போல, “இந்தா வர்றேன்” என கடைக்குச் சென்றவன், குளோப் ஜாமூனோடு திரும்பினான். அடுக்களையில் நின்றவளைத் தொட்டு திருப்பியவன் “.. இந்தா இனிப்போடு நாம சந்திப்பைத் தொடங்குவோம்” என்றான்.

அவன் வாங்கி வந்த குலோப்ஜாமூனுக்கு அவகாசம் அளிக்காமல், எடுத்து வாயில்போட எத்தனித்தாள். மிருதுவான குலோப் ஜாமூன் இரண்டாகப் பிளந்து, ஒரு பாதி வாய்க்குள்ளேயும், இன்னோர் பாதி தரைக்கும் போனது. இதைப்பார்த்த மைத்துனன், குலோப் ஜாமூன் டப்பாவை வாங்கி, ஒவ்வொன்றாக லாவகமாக எடுத்து, ப்ரியாவின் வாய்க்குள் திணித்தான்.

வரவேற்பு பலமான நிலையில், வேலைக்குச் செல்கிறானோ இல்லையோ, ப்ரியாவைப் பார்ப்பதற்காக நாள்தோறும் தம்பி வீட்டுக்கு விஜயம் செய்தான்.

ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு வந்த மைத்துனனுக்கு, காபியுடன் வீட்டில் செய்த உளுந்த வடையைப் பறிமாறினாள். கழிப்பறைக்குச் சென்று திரும்பியவள், “டேஸ்டா இருக்கா” என்றாள்.

“..காச்சுறவ காய்ச்சுனா, கழுதை மூத்திரம்கூட இனிக்கும்”

“..பிச்சை எடுக்கிற சோத்துலே, கொழஞ்ச சோறு கேக்குற ஆளாச்சே, இப்ப இப்புடிச் சொல்றாரு” என்ற முனகல் வார்த்தை, வெளியேறாத வண்ணம், படுக்கை அறைக்குச் சென்றாள். கையைக் கழுவியபின், பேக்கில் இருந்த பொட்டலத்தோடு ப்ரியாவின் அறைக்குச் சென்றான் மைத்துனன்.

“இது என்ன சொல்லு” என சர்ப்ரைஷ் கொடுத்தான். பேச்சை வளர்க்க வேண்டாம் என நினைத்தவள் போல், உதட்டைத் திறக்காமல் இருந்தாள். பொட்டலத்தை அவள் கையில் கொடுக்காமல், முன் ஜாக்கிரதையாக பிரித்தவன், அவள் வாயில் நெழுநெழு வென்றிருந்த அல்வாவை ஊட்டி விட்டான். பின்னர் தனது வாயில் போட்டுக் கொள்ள அல்வைத் தொட்ட போது, அவனது கையைப் பிடித்து தடுத்தாள். உடலோடு உரசியவண்ணம் மூச்சுக் காற்றின் உஷ்ணம் முகத்தில்படும் தூரத்திற்கு முன்னேறியவள், வாய்வழியே அவன் வாய்க்குள் ஊட்டினாள். ஏற்கனவே நெகிழ்ந்திருந்த அல்வாவை எச்சிலோடு இறக்கி, சப்புக் கொட்டினான்.

இனிப்புச் சுவையுடன் எச்சிலை இறக்கியவள், “இது எப்டி இருக்கு” என இமைகள் பறவையைப்போல படபடக்க கேட்டாள்.

வெளியே மேகத்தின் போர்வை, பகலை இருட்டாக்கி இருந்ததது. சென்னை முழுவதும் தூறல். வீட்டுக்குள் சில்லிட்ட காற்றால் படுக்கையில் விழுந்தவன், வெகுநேரம் தூங்காமல், மலைப்பாம்பைப் போல அசிங்கமாக நெளிந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ப்ரியா, பக்கத்தில் அமர்ந்து எழுந்திருக்குமாறு, அவனைப் பிராண்டினாள்.

“..நிம்மதியா இருக்க விடமாட்டியா” என, எரிச்சலாகி விழித்தவன், மௌனமாகி விட்டான். இருப்பை அனாவசியமாக காட்டிக் கொண்டிருந்த, அவளது கழுத்துக்கு கீழேயிருந்த பகுதி அவனை ஊமையாக்கியது. பார்வையினாலும், முகப்பாவனைகளாலும் ஏதோவொன்றை யாசித்தான். ஆனால் பேசவில்லை… புத்திரப் பாக்கியம் இல்லாததால் பட்ட அவமானங்கள், அவளைச் சும்மா விடவில்லை. படுக்கை விரிப்பு காந்தமாக மாற, இரும்பான பிரியா, நெளிந்து கொண்டிருந்த மலைப்பாம்பு மீது விழுந்தாள்.

காலங்கள் நகர்நதன, ஓடின.. ஆனால் நிற்கவில்லை, இவர்களின் காதலும் நிற்கவில்லை. பார்க், பீச் தவிர, பார்க்காத விடுதிகளையெல்லாம் பார்த்தாள். ஒருநாள், கணவன் அலுவலகம் சென்று திரும்பியபோது, தாழிட்ட கதவைத் தாமதமாகத் திறந்தவள், உள்ளே இருந்த மைத்துனனைப் பார்த்து கண்சிமிட்டினாள். “மேயிற மாட்டை மெனக்கெட்ட மாடு கெடுத்த மாதிரி ஆகிப்போச்சு என்னோட வாழ்க்கை” என்று, கணவனுக்கு உறைக்கவும், மைத்துனனுக்கு இனிக்கவும் மறைமுகமாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

காலங்கள் கடந்தன. திருமண வாழ்க்கை சூன்யமாகிக் கொண்டிருப்பதை ஜீரணிக்கக முடியவில்லை, ப்ரியாவின் கணவனுக்கு.. மனக்குழப்பம், எரிச்சலால் சோர்வடைந்தான். ஓரு பக்கம் தனது மனைவி, மற்றொருபுறம் உடன்பிறந்த சகோதரன். என்ன செய்ய.. எதைச் செய்தால் பிரச்சினை தீரும்.. இதற்கு முடிவுக்கு வர இயலாத நிலையில், அவனைப் படுக்கையில் கிடத்தியது நோய். காலம் எட்டிய தூரத்தில் செல்வதற்கு முன், காலன் அவனைப் பாடையில் தள்ளினான். ஆனால் பாவம் செய்த பாவிகளுக்கு படுக்கை. எங்கே பாசக்கயிறு…? எமன் தொலைத்து விட்டானா என்றபடி இருந்து, எழவு கேட்க வந்தவர்களின் ஆதங்கம்.அப்போ யுதிர்ஷ்டிரருக்கு, பீஷ்மர் காட்டிய கலிகாலமா இதுதானா? தூர்த்தர்கள் ஒருநாளும் மிஞ்சக்கூடாது ஆண்டவா என்ற சேலை கட்டிய கிழங்கள், கிருஷ்ணா.. கிருஷ்ணா…என போகவர இருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *