வயித்துக்குள்ள பாம்பு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,839 
 

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். இளைஞனாக இருந்த அந்த இளவரசன் அறிவுக்கூர்மை உடையவனாக விளங்கினான்.

ஒருநாள் குதிரை மேல் அமர்ந்து காட்டு வழியாகச் சென்று கொண்டிந்தான் இளவரசன். வழியில் திடுக்கிடும் காட்சி ஒன்றை கண்டான் அவன்.
மரத்தின் நிழலில் வாயைத் திறந்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த ஒருவனின் வாய்க்குள் பாம்பு ஒன்று நுழைந்து கொண்டிருந்தது. எப்படியும் அவனைக் காப்பாற்ற நினைத்தான் இளவரசன். குதிரையை விட்டு இறங்கி அவன் அருகே வேகமாக ஓடி வந்தான். அதற்குள் பாம்பு முழுவதும் அவன் வயிற்றுக்குள் சென்று விட்டது. நடந்தது எதையும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தான் அவன்.

Vayithukula

தன் கையில் இருந்த குதிரைச் சவுக்கால் அவனை ஓங்கி அடித்தான் இளவரசன். சுரீரென்று சவுக்கடி விழவே அலறி அடித்துக்கொண்டு எழுந்தான் அவன்.
கோபத்துடன் இளவரசன் தன் எதிரே நிற்பதைக் கண்டு திகைத்தான்.

“”டேய்! துரோகி! என் கண் முன் நில்லாதே. ஒரே ஓட்டமாக ஓடு. நான் உன்னைத் துரத்திக் கொண்டு வருவேன். என் அருகில் நீ இருந்தால் போதும் இந்த சவுக்கு உன் முதுகில் பேசும்… ஓடு!” என்று கோபத்துடன் சொன்ன இளவரசன் அவன் முதுகில் மீண்டும் சவுக்கால் அடித்தான்.

வலி பொறுக்க முடியாத அவன் ஓடத் தொடங்கினான். இளவரசன் விடவில்லை. அவனைத் துரத்தித் துரத்தி சவுக்கால் அடித்தான். முனகியபடியே ஓடிக் கொண்டிருந்தான் அவன். சவுக்கடியினால் அவன் முதுகில் ரத்தம் கசியத் தொடங்கியது.

களைப்பு அடைந்த அவன் ஒரு மாமரத்தின் அடியில் நின்றான். அந்த மரத்தின் கீழே அழுகிப்போன மாம்பழங்கள் கிடந்தன. அவனை ஓடி வந்து பிடித்த இளவரசன், “”என்னிடம் மாட்டிக் கொண்டாயா? இந்த அழுகிய பழங்களை நீ சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் சவுக்கடிதான்!” என்று அவனைச் சவுக்கால் அடித்தான்.

வேதனை தாங்க முடியாத அவன், “”கொடியவனே! நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? ஏன் என்னை இப்படிக் கொடுமைப்படுத்துகிறாய்? இதற்குப் பதில் என்னை ஒரேடியாகக் கொன்றுவிடு. உன்னைச் சந்தித்த இந்த நாளே என் வாழ்நாளில் கொடியநாள். மீண்டும் உன் முகத்தை நான் பார்க்கவே கூடாது…” என்று புலம்பிக் கொண்டே அழுகிய மாம்பழங்களைச் சாப்பிட்டான் அவன்.

“”ம்ம்ம்… சீக்கிரம் சாப்பிடு!” என்று கோபத்துடன் சொல்லிக்கொண்டே சவுக்கால் அவன் முதுகில் அடித்தான் இளவரசன்.

“”உண்டதுபோதும் ஓடு. இல்லையேல் சவுக்கடி வாங்கியே இறந்துவிடுவாய்…” என்று கத்தினான் இளவரசன்.

மீண்டும் அவன் ஓடத் தொடங்கினான். கையில் சவுக்குடன் அவனைத் துரத்தத் தொடங்கினான் இளவரசன்.

சிறிது தூரம் ஓடியிருப்பான் அவன். அழுகிய மாம்பழங்கள் அவன் வயிற்றைக் கலக்கத் தொடங்கியது. நின்ற அவன் குமட்டலுடன் வாந்தி எடுக்கத் தொடங்கினான். உண்ட மாம்பழங்களோடு பாம்பும் வந்து வெளியே விழுந்தது.
தன் வயிற்றில் இருந்து பாம்பு வந்து விழுந்ததைக் கண்ட அவன் திகைத்தான்.
மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை புரியத் தொடங்கியது.

நன்றியுடன் இளவரசனை வணங்கிய அவன், “”உங்களால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். உங்களைத் தவறாக நினைத்து நான் கொடுஞ்சொற்களால் திட்டிவிட்டேன். என் அறியாமைக்காக என்னை மன்னியுங்கள். என் வயிற்றுக்குள் புகுந்த பாம்பைப்பற்றி நீங்கள் குறிப்புக்காட்டி இருக்கலாமே!” என்றான்.

“”நான் நடந்த உண்மையைச் சொல்லி இருந்தால் உனக்குத் தண்ணீர் வேட்கை ஏற்பட்டிருக்கும். நீ தண்ணீர் குடித்தால் யாராலும் உன்னைக் காப்பாற்றி இருக்கவே முடியாது. அந்தப் பெரிய பாம்பைப் பற்றி சொல்லியிருந்தால் அச்சத்தால் நீ இறந்திருப்பாய். நான் உன்னை ஓடும்படி விரட்டி இருக்காவிட்டால், உன்னால் இத்தனை அழுகிய பழங்களை உண்டிருக்க முடியாது.

“”அப்படிச் செய்ததால்தான் உன்னால் வாந்தி எடுக்க முடிந்தது. பாம்பும் வெளியே வந்து, நீயும் உயிர் பிழைத்தாய். வேறு வழி இல்லாமல் இப்படிக் கொடுமையாக நடந்து கொண்டேன். எப்படியோ என் திட்டம் வெற்றி பெற்று நீ உயிர் பிழைத்தாய்…” என்றான் இளவரசன்.

“”இளவரசே! தாங்கள் செய்த இந்தச் செயலுக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன். இறைவன் உங்களுக்கு உயர்ந்த பரிசை அளிப்பார்!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் அவன்.

– ஆகஸ்ட் 06,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *