திருந்திய உள்ளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 1,885 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரிக்ஷா வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் மாணிக்கம். என்னங்க இன்றைக்கு சவாரி சரியில்லையா என்றாள் மனைவி ரெங்கம்மாள். ஏதோ பரவாயில்லை. கஷ்டப்படுறதுக்குப் பலனாகத் தான் ரெண்டு பிள்ளைங்கள் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். பாண்டித்துரை காலேஜ்ல நல்லா படிக்கிறான். என்ன செய்றது பொம்பளப் பிள்ளையத்தான் ஊனமா படைச்சுட்டான். அதுவும் நல்லா படிச்சாலும் எதிர்காலத்த நெனச்சுத்தான் கவலைப்படுறேன் என்று சொல்லியவாறு மனைவி கொண்டு வந்த நீராரத்தை குடித்தார் மாணிக்கம்.

அப்பா! அடுத்தவாரம் பரீட்சை அதுனால நூறு ரூபாய் பணம் வேணும் என்று முணங்கினான் மகன் பாண்டித்துரை. அதுக்கு ஏனய்யா இந்தா என்றபடி நூற்றைம்பது ரூபாயை கொடுத்தார் மாணிக்கம். “நான் வர்றப்பா என்றவன் வீட்டை விட்டு வெளியே வந்தான். என்னங்க நீங்க செய்றது சரியில்ல. போனவாரம் தான் இருநூறு ரூபாய் வேணும்னு கேட்டான் கொடுத்தீங்க. இப்பவும் கேக்குறான் கொடுக்குறீங்க. அவங்க வாத்தியாரப் பார்த்து உண்மையானு கேட்டுக்கிட்டு வாங்க என்றாள் மெதுவாக ரெங்கம்மாள்.

“போடி, பைத்தியக்காரி நம்ம புள்ளையப் பத்தி நமக்குத் தெரியாதா. படிப்புக்கு மட்டும் வஞ்சகமே செய்யக்கூடாது. நான் ரெண்டாங் கிளாசு தான் படிச்சேன். நீ அது கூட இல்லை. நாமதான் கஷ்டப்படுறோம், பிள்ளைகளையும் கஷ்டப்படுத்திப் பார்க்கக்கூடாது என்றார் மாணிக்கம். அதுக்கு இல்லங்க முடியாதப் பொண்ணு ஒன்னு இருக்கு” என்றாள் மெதுவாக ரெங்கம்மாள்.

“அதைவிடு நான் சவாரிக்கு போயிட்டு வர்றேன்” என்று புறப்பட்டார். பார்க் சாலையில் மாணிக்கம் ரிக்ஷா ஓட்டிச் செல்லும் போது; யாரு பாண்டி மாறி இருக்கு ;யாரு அந்தப்பொண்ணு உட்கார்ந்து இப்படி சிரிச்சுப் பேசுறாங்க. ஓரமா ஒதுங்கி அவங்க பேசுறத கேட்க வேண்டியது தான் என்றபடி கவனித்தார் மாணிக்கம்.

பாண்டி உனக்கு மட்டும் எப்படி பாக்கெட்ல பணம் இருந்துக்கிட்டே இருக்கு. ரொம்பவும் வெயிட் பார்ட்டியோ என்றாள் சிரித்தபடி சுடிதார் அணிந்த சுமதி. அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எங்கப்பா ரிக்ஷா தொழிலாளி. எங்கப்பாகிட்ட படிப்புக்குனு கேட்டா போதும் எப்படியாவது கொடுத்துருவாரு. நீ எனக்கு சொந்தம். எதையும் செய்ய நானிருக்கேன்.

எனக்கு அப்பா எதையும் செய்வாரு என்றான் பெருமிதத்தோடு பாண்டி. நாளைக்கு சினிமாவுக்கு போறோம். பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க என்றாள். “எக்ஸாம் ஒன்று காலேஜ்ல நடக்கப் போது இருநூறு ரூபாய் கட்டாயமா கொண்டு வரச் சொன்னாங்க என்று சொல்லவேண்டியது தான்.’ பரீட்சைனாலும், எக்ஸாம்னாலும் ஒன்று தானே என்றாள் சுமதி. அதெல்லாம் அவருக்கு தெரியாது. அவருக்கு தெரிஞ்சது எல்லாம் ரிக்ஷா ஓட்டுறது தான். நீ போயிட்டு நாளைக்கு வா என்றான் பாண்டி. இதை எல்லாம் கேட்ட மாணிக்கம் தனக்குள்ளேயே அழுதார். இப்படியே சில நாட்கள் சென்றது.

ஒரு நாள் பாண்டி, அந்தப் பொண்ண லவ் பண்றீயா. கல்யாணம் செய்யப்போறியா? அவங்க குடும்பம் எப்படி? விசாரித்தியா என்றார். அதெல்லாம் லவ் இல்ல. யாரு அந்தப் பொண்ணு ண்ணு என்றான். அதைவிடு படிக்கிறதப் பார்த்துப் படிடா. பெண்ணோட வலையில விழுந்தவங்க தப்பித்ததா சரித்திரமே இல்லை என்றார் மாணிக்கம்.

கல்லூரியில் கடைசி தேர்வும் வந்தது. அதற்குள் சுமதிக்கும் வேறு ஒருவனுக்கும் திருமணம் முடிந்தது. கடைசி தேர்வு எழுத சுமதி வரும் போது! எப்போதும் போல் பாண்டித்துரை அவளிடம் பேசினான். அவள் கழுத்தில் தாலியைக் கண்டு அடிப்பாவி ஏமாத்திட்டீயே என்று குமுறினான். அவளோ! எம் புருசன் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்குறாரு. சொந்தமா ஒரு கிணறு தோப்புனு வேற இருக்கு. உன்னக் கட்டிக்கிட்டு வாழ்க்கை முழுவதும் அந்த நொண்டித் தங்கச்சிக்கும், ரிக்ஷாக்காரருக்கும் வடிச்சுக்கொட்டவா முடியும். ரிக்ஷாக்காரன் மகன கட்டிக்கிட்டு மத்தவங்க முன்னால நான் தலைகுனிய முடியாது. காதலுங்கிறது ஏதோ பொழுது போக்குனு நெனச்சுக்க வேண்டியது தான் என்றபடி தேர்வு எழுத சென்றாள் சுமதி. அவனுக்கு அவளைப் பற்றியே எண்ணம் இருந்தது.ஓரளவு தேர்வும் எழுதி முடித்தான்.

“அப்பொழுதுதான் நினைத்தான். அவளுக்காக தன் குடும்பத்தையே ஏமாற்றி விட்டோமே! இவ்வளவு கீழ்த்தரமமா போயிட்டேனே. அப்பாக்கிட்ட எப்படி பேசுவேன் என்று எண்ணியவாறு அந்தப் பார்க்கில் உட்கார்ந்தான். அப்போது, பாண்டி! உன்னை ரொம்ப நாளாவே கவனிச்சுக்கிட்டு வர்றேன். இன்றைக்கும் கவனிச்சேன். இதெல்லாம் கெட்டக் கனவா நெனச்சு மறந்துரு. காலம் ஒன்னும் ஓடிப்போகலை. இனிமேலாவது நீயும் ஏமாறாதே! யாரையும் ஏமாத்தவும் நினைக்காதே என்றவர் தன் மகன் திருந்தியதை எண்ணி தனக்குள்ளே சந்தோசப்பட்டார். தன் தந்தையை ரிக்ஷாவில் உட்கார வைத்து ரிக்ஷாவை ஓட்டினான். திருந்திய உள்ளத்தோடும், தன்னம்பிக்கையோடும் வீட்டுக்குச் சென்றான் பாண்டித்துரை.

– 14.01.2003 செவ்வாய் கிழமை திருச்சி தமிழ்முரசு பொங்கல் மலர் புத்தகத்தில் வெளிவந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *