கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 2,746 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“அக்கா நாளைக்கு ஜான் கல்யாணத்துக்குப் போறிங்களா?” என்று கேட்டார் ஜேசுதாஸ்.

எலிஸபெத், “நான் குளோரி பிரசவித்ததற்காக அவர்கள் வீட்டுக்குப் பிராத்தனை செய்யப் போக வேண்டும், நீயும் ஜோஸப்பும் கல்யாணத்துக்குப் போயிட்டு வாங்க,” என்றாள்.

“அத்தானும் திருச்சியிலயிருந்து கல்யாணத்துக்காக வாறாராம்.”

எலிஸபெத் நிமிர்ந்து பார்த்தாள். உதடுகள் துடித்தன. தம்பிக்காரர் அந்த உதடுகள் இதயமாக இயங்குவதைப் புரிந்து கொண்டார்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு, எலிஸபெத், “ஆமாம். ஜான் அவங்களுக்கு பெரியம்மா பேரன். நானும் வாரேன். நீ அத்தான் பக்கத்திலேயே உட்கார்ந்து, நான், அவங்கள பார்க்கிற வரைக்கும் பிடிச்சி வச்சிருக்கணும்,” என்றாள்.

அன்றிரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. காலையில் எழுத்ததும், “ஜான்ஸ்பி மாமாவுக்கு இடியாப்பம் பிடிக்கும். பிரமாதமா செய்து வை,” என்றாள். “ஏய் பேபி, விட்டை சுத்தமா வைம்மா, ரேடியோ மேல துசைப் பாரு. ஹேங்கர உள்ளகொண்டு மாட்டு. நாற்காலியில் கிடக்கிற பாவாடய எடு, அவங்களுக்கு எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும். சிதறிப் போறது பிடிக்காது. ஜோஸப்! நீ என் ராஜா இல் லியா… எல்லாத்துட்டயும் தமாஷ் பண்றது மாதிரி அவருக்கிட்ட பேசாத நீ ஒண்னு கிடக்க ஒண்னு சொல்ல, அவங்க குத்திக்காட்டுறதா நினைக்கப் போறாங்க இன்னுமா டிரஸ் பண்ற தம்பி? வா நேரம் ஆவுது.”

அக்காளும், தம்பியும் நேரத்திற்கு முன்னதாகவே சர்ச்சுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அங்கிருந்த ஒரு சிலரில் அவங்களைத் தேடினாள். காணவில்லை. “இனிமேல் தான் வருவார். அவங்க முந்தியும் வர மாட்டாங்க. பிந்தியும் வரமாட்டாங்களே.”

மணமக்கள் அணி திரண்ட ஊர்வலத்துடன் வந்தார்கள். எல்லோரும் மணமாகப் போகும் ஜோடியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எலிஸபெத் தன் மாஜி ஜோடியைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தாள்.

எலிஸபெத், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். ஐம்பது வயதுவரை சென்னையில் அவள் தந்தை பாதிரியாராக இருந்தவர். அவள் இளம் வயதிலேயே அன்னையை இழந்துவிட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு செகண்ட்ரிகிரேட் ஆசிரியர் பயிற்சிக்கும் படித்துவிட்டு, சென்னையிலுள்ள ஒரு பள்ளிக் கூடத்திலேயே வேலை பார்த்தாள். திருச்சியில் தாலுகா அலுலகத்தில் குமாஸ்தாவாக இருந்த அருளய்யாவிற்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற்றது.

இரு வ ரு ம் அ ன் னி யோ ன் னி ய மாகத் தா ன் வாழ்ந்தார்கள். அருளய்யாவும், அவள் தம்பிகளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளையெல்லாம் அவள் தூண்டுதல் இல்லாமலேயே செய்தார். ஆசிரியையான அவள், அவரிடம் மாணவியாக நடந்து கொண்டாள். குரு சிஷ்யை உறவு. அது ஒரு நாள் கூட, ஆண்டான் – அடிமை உறவாக மாறியது இல்லை.

இப்படி நெருக்கமாகவும், நேசமாகவும் இருந்த அவர்கள் இல்லறம், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, படிப்படியாக நேசத்தை வைத்துக்கொண்டு, அதன் நெருக்கத்தை அழித்துக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே விளையாடிக் களிப்பதற்கு பிள்ளை இல்லை.

இவ்வளவுக்கும் அருளய்யா அவளிடம் வாய்விட்டு ‘ஹலிம், உன்னால எனக்கு ஒரு குழந்தை தர முடியவில்லையே’ என்று நேராகக் கேட்டதில்லை. போன வருஷம். கல்யாணமானவனுக்கு இந்த வருஷம் பிள்ளை, என்று சுற்றுப்புறக்காரனைச் சுட்டிக் காட்டுவார். பின்னர் ஒரு நாள், “நம்ம ஜோஸப் டில்லியில் இருந்து வந்திருக்கான். வழில பாத்தேன். அவனுக்கும் பேர் சொல்ல பிள்ளையில்ல. என்னைப்போல ஆண்மை இல்லாதவன் போலிருக்கு,” என்று அவர் சொன்னதை, அவளால் பொறுக்க முடியவில்லை.

அவள் தூரத்து உறவில், ஏழ்மையில் வாடிய இளம்பெண்ணைத் திருச்சபைக்குத் தெரியாமல் மூன்று வருடத்திற்கு முன்பு, தனது ஐம்பது வயது கணவனுக்கு மணமுடித்து வைத்தாள். அருளய்யாவும், அவளுக்காகப் போனால் போகிறது என்று திருமணம் செய்து கொள்வது போல், அவளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றிக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில், கணவனை இன்னொருத்தி பகிர்ந்து கொள்கிறாள் என்பதில் எலிஸபெத்திற்குக் கொஞ்சம் பொறாமைதான். ஆனால் அவள் வந்த வேகத்திலேயே ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததும் எலிஸபெத் அந்தக் குழந்தையை, தான் வைத்துக்கொண்டு, குழந்தைக்காரி கணவனுடன் குதுகலாமாய் இருக்க வழி செய்தாள். ஆனால், வழி செய்தவளுக்கு விழி பிதுங்கத் துவங்கியது. சக்களத்தி இரண்டாவது தாரம் மட்டுமல்ல. தரமும் அப்படித்தான் என்பது போல் அவளுக்குப் பட்டது. அவள் பட்டாடைகளை வாங்குவதும், அக்கம் பக்கத்திலே போய் அரட்டையடிப்பதும், அடிக்கடி சினிமாவுக்குப் போவதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் பிறரைப் பேசுவதும், கணவனையே அதட்டுவதும் இவளுக்குப் பிடிக்கவில்லை.

தேவாலாயப் பள்ளியில் வாங்குகிற சம்பளத்தைக் கணவரிடம் அப்படியே நோட்டு கசங்காமல் கொடுத்துப் பழகியவள் எலிஸபெத். தம்பி பிள்ளைகளுக்கு, பிறந்த நாட்கள் வரும்போதும், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரும்போதும், சுமாரான விலையில் பரிசுகள் வாங்குவதற்காக மட்டுமே கட்டியவரிடம் பணம் கேட்பாள். இப்போது, கட்டியவரிடம் பணம் கேட்டால், அவர், இரண்டாவதாகக் கட்டியவளிடம் கேட்டுக் கொள்ளும்படி கைகாட்டி விட்டார்.

என்றாலும், எலிஸபெத் அவளிடம் கேட்டாள். அவளோ இனிமே இந்த பழக்கமெல்லாம் கூடாது’ என்று கைவிரித்தாள். எலிஸபெத் அருளய்யாவிடம், ஜாடை மாடையாகவும் பண்டாகவும் சொன்னாள். “அவள் சொன்னதில் என்ன தப்பு?” என்று திருப்பிக் கேட்டார் அவர்.

எலிஸபெத், மாதச் சம்பளத்தில், ஐம்பது ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டு, மீதியைக் கொடுத்தாள். இதை இளையவள், மூத்தவளின் அன்பில்லாமைக்கும், அவ நம்பிக்கைக்கும் அடையாளம் என்று வாதிட்டாள். அவர், ‘ஒனக்கு என் மேல நம்பிக்கையில்ல. நான் பெத்த பிள்ளைய ஒன் பிள்ளையா நினைக்கல. இன்னும் தம்பி பிள்ளைங்களையே நினைச்சிக்கிட்டு இருக்கிற, ஒண்ணு, சம்பளம் முழுதையும் கொடுத்து இரு இல்லன்னா தனியா இரு அல்லன்னா தம்பிங்கக் கூடப் போயி சேரு,” என்றார்.

எலிஸபெத் துவண்டு போனாள். இருபது ஆண்டுகளுக்கு மேலான பந்தம், கேவலம் ஐம்பது ரூபாயில் பரீட்சிக்கப்படுவது கண்டு பரிதவித்தாள். அதே சமயம், பணமில்லாமலேயே தன்னால் பந்தத்துடன் வாழ முடியும் என்று நிரூபிப்பவள் போல், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள். தம்பிகளும் சரி, தம்பி பிள்ளைகளும் சரி, அவளைக் கண் போல் நேசிக்கிறார்கள். என்றாலும், அவளுக்கு மனம் கேட்கவில்லை. அருளய்யாவின் பந்தத்தை அவளால் விட முடியவில்லை. கடிதம் எழுதினாள். மன்னிக்கும்படி மன்றாடி எழுதினாள். ஆனால் அருளய்யா பழைய அருளய்யாவல்ல. அவர் ஆன்மாவை இளையவள் ஆட்சி செய்கிற காலம். குடும்பம் கெட வேண்டும், குழந்தை நல்ல முறையில் வளர்க்கப்படலாகாது என்ற வஞ்ச உணர்வில் வேலையை விட்டுப் போனவள், உறவையும் விட்டுவிட வேண்டியதுதான் என்று நாலு வரியில் ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டு, இளையவளிடம் சபாஷ் வாங்கிக் கொண்டார். ஆனால் எலிஸபெத்தின் மனத்தில் இன்னும் நம்பிக்கை இருந்தது.

எலிஸபெத்தின் கண்கள் திருமணக் கூடத்தில் கணவனைத் தேடின. எப்படியோ, அருளய்யாவும், அவள் கண்ணில் சிக்கினார். தம்பி ஜோஸப் அவங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவங்க பலமாய்த் தலையை பக்கவாட்டில் ஆட்டுறாங்க. ஏன் முகம் இப்படிக் கோபமா இருக்கு?

எலிஸபெத் அப்போதே எழுந்து, அவர் அருகில் போய் உட்காரத் துடிப்பவள் போல் தவித்தாள். மணமகன் மணமகளின் வலது கையைப் பிடித்திருந்தான். ஆராதனை செய்யும் பாதிரியார் சொல்லச் சொல்ல, அவன் திருப்பிச் சொன்னான்.

எலிஸபெத், கணவன் இருந்த இடத்தைப் பார்க்கிறாள். அவரையும், அவள் தம்பியையும் காணவில்லை. இருவரும் ஆலயத்திற்கு வெளியே நின்றார்கள். அருளய்யா தற்செயலாக அவளைப் பார்த்துவிட்டு, முகத்தை வன்முறையாகத் திருப்பிக் கொண்டார். அவளாலும் பார்க்க முடியவில்லை. நீர்த் திவலைகள் பார்வையை மறைத்தன.

‘கர்த்தர், இவர்களை சகல ஆசீர்வாதத்தினாலும், கிருபையினாலும் நிரப் பக்கடவர், ஆமென்’ என்று மாங்கல்யம் தரித்து, மணமுடிந்த இருவரையும் வாழ்த்தி, பாதிரியார் விவாகத்தைப் பூர்த்தி செய்து வைத்தார். உடனே வேத சங்கீதம் துவங்கியது. எலிஸபெத் மங்கல நன்னாளில், அமங்கலக் கண்ணிரைச் சிந்தக்கூடாது என்று உறுதியோடு வெளியே வந்தாள். தம்பி மட்டும் அங்கே நின்றார். எலிஸபெத்தைப் பார்த்ததும், அவர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பேசினார்.

“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் மனசு இளகல. நீ இளையோடிய பிள்ள உருப்படக் கூடாதுன்னு நினைக்கிற வளாம். ஒன் வாடையை வே ண்டாமாம் . இப்படிச் யிசொன்ன வாயில குத்தலாமோன்னு நினைச்சேன்.”

எலிஸபெத் காதுகளைப் பொத்திக் கொண்டபோது, தம்பி, அக்காவின் தலையைக் கோதி விட்டார்.

“நாங்கல்லாம் இல்லியாக்கா? இந்த மூணு வருஷத்துல, எப்பவாவது ஒன் மனங்கோணும்படியா பேசியிருக்கேனா? அப்படி என்னக்கா பெரிய புருஷன்? அவருக்கு முன்னாலயே நாம ஒண்ணா பிறந்து ஒண்ணா பழகுனவங்க. ஏக்கா அழுவுற? அட வாக்கா. சரிதான். அந்த மனுஷன் கிடக்கான்.”

இருவரும் மெளனமாக வீடு நோக்கி நடந்தார்கள்.

“பெரியம்மா!’ அவளை ஒரு குரல் அழைத்தது. பக்கத்து ஊரிலிருந்து குளோரியின் மகன், “பெரியம்மா! அக்கா உங்களைப் பிராத்தனைக்கு அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. குழந்தைக்கு உடம்பு சுரமா கொதிக்குது.” என்றான்.

பிராத்தனை ஊராருக்குப் பிரார்த்திக்கும் நிலையிலா கர்த்தர் அவளை வைத்திருக்கிறார்?

அவள் குமுறினாள். “வருவதற்கில்லை. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது.

கர்த்தரே! ஊராருக்காப் பிராத்தனை செய்யும் எனக்கு இப்படிப்பட்ட பரிதாபு நிலையை ஏற்படுத்திவிட்டீர்களே.

கர்த்தரையே கேட்டு விடவேண்டும் என்ற தார்மீக கோபம் அவளுக்கு. தாங்க முடியவில்லை. தாளவும் முடியவில்லை. முன் அறைக்கு வந்து முழங்காலிட்டாள். ஜெப புத்தகத்தில் நினைவுக்கு வந்த வாக்கியங்களைத் தன் சொந்த வாசகங்களோடு சேர்த்துக் கொண்டு தனக்குள்ளேயே கர்த்தரை முன்னிலைப்படுத்திப் பேசினாள்.

“பரலோகத்தில் இருக்கும் எனது பிதாவே! நான், பல நாள், பல்லாண்டு எனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று வேண்டியும், உரக்க சத்தமாய் உமது ஜபத்தைச் சொல்லியும் தேவகிருபை கிட்டவில்லை. இ த னா ல் , எ ன் பி ரிய மா ன வ ைர , நா ன் பி ரி ய வேண்டியதாயிற்று. கர்த்தாவே! என் இதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலர்ந்திருக்கிறது. என் பெரு மூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாமிசத்தோடு ஒட்டிக் கொள்கின்றன. நான் நித்திரை இல்லாமல், வீட்டின் மேல் தனித்திருக்கும் குருவிக்கு ஒப்பானேன். நீர் என்னை உயரத் துக்கி, தாழத் தள்ளியது ஏன்? என் நாட்கள், புகையைப் போல் ஒளியக் காரணமேன்? இதுவரை வருந்தி ஜெபம் செய்த இந்த அடியாள், இப்போது உம்மை வருத்தித் துதிக்கிறேன். நான் உமக்குப் பயந்து உம் வழியில் நடந்து, உம் மகிமையை உணர்ந்து உபதேசம் செய்பவள் என்பது உண்மையானால், நீர் என்னைத் திடப்படுத்த வேண்டும். ஆமென்.”

எலிஸபெத் பிராத்தனையை முடித்துவிட்டு, நாற்கட்டில் மேலே உட்கார்ந்தாள். குடும்பத்தினர் அனைவரும் அவளை ஆச்சரியமாகவும், அனுதாபமாகவும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அவள் தம்பி மகன்கல்லூரிக்காரனான அருண், கையில் ஒரு காகித புத்தகத்துடன் வந்தான். அத்தைக் காரி, மனத்தை மறைப்பதற்காக, அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“கையில என்னது அருண்?”

“நாவல் அத்தே.”

“இதுக்கு பதில புைபிளைப் பார்த்தால், எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன்”

“நீங்க நினைச்சது மாதிரி எல்லா நாவலும் மோசமில்ல ஆன்ட்டி. இது சாமர்ஸெட் மாம் எழுதின ஹ்யூமன் பாண்டேஜ் என்கிற நாவல். இதுல ஒரு அற்புதமான இடத்த சொல்றேன் கேளுங்க. பிலிப்ஸ் ஒரு நொண்டிப் பையன். அங்கஹlனமானதுக்காக வருத்தப்படுற அவனை, தலைமையாசிரியர், தன் அறைக்கு வரவழைத்து பிலிப்ஸ் தொண்டிக்காலுக்காக நீ வருத்தப்படலாகாது. உலகத்தின் பாவங்களைச் சுமப்பதற்காக கடவுள் சில நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மாதிரி உடற்குறைகளையும், இதர கஷ்டங்களையும் பிறரின் பாவ நிவர்த்திக்காக கிராஸாக கொடுக்கிறார். உண்மையில் பிறர் பாவங்களைச் சுமக்க நீயே தகுதியானவன், வலுவானவன் என்று நினைத்து உன்னைத் தேவன் தேர்ந்தெடுத்ததற்கு, நீ பெருமைப்பட வேண்டும். உன் கால், ஊனமுற்ற பிண்டம் அல்ல, ஆண்டவனின் சிலுவையைச் சு மக்கும் பாவ மரிப்பு அங்கம்’ என்று சொல்றார். பாத்திங்களா ஆன்ட்டி எவ்வளவு அருமையாச் சொல்லி யிருக்கிறார். பாருங்க.”

எலிஸபெத்திற்கு, திடீரென்று தலையில் ஒரு பொறி விலகி, பிறிதொரு பொறிக்கு வழிவிட்டது போல் தோன்றியது.

“அருண்” என்று தம்பி மகளை அழைத்தாள். “அந்த ஆட்டோ ரிக்ஷாவை கூப்பிடு”

“எங்கே போக வேண்டும் ஆன்ட்டி?”

“பக்கத்து ஊருக்கு. குளோரியின் குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம்.”

– குமுதம் 2.3.1978

– ஆகாயமும் பூமியுமாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *