பெற்றால்தான் பிள்ளையா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 1,746 
 
 

ஏன்டி காமாட்சி  இவ்வளோ கஷ்டப்படற. இங்கேருந்து டெய்லி டவுனுக்கு பஸ் புடிச்சி போய் வைத்தியம் பாத்து கூட்டிட்டு வராறு உன் வீட்டுக்காரரு. உன் பையன்தான் வெளியூர்ல நல்லா சம்பாதிச்சி அனுப்பறான் அவன் பொன்டாட்டிக்கு. அவனுக்கும் டவுன்ல வீடு இருக்கு. பேசாம அங்க போய் ஒரு ரெண்டு மாசம் தங்கி வைத்தியம் பாத்துட்டு வரலாம் இல்ல..மருமக பாத்துக்க மாட்டாளா என்ன.. ஏழையா இருந்தாலும் பறவால்லேன்னு பாத்து பாத்து நல்ல பொண்ணாதான கட்டி வெச்சீங்க..

என் பையன் கூப்பிடாம எப்பிடி போறது பாக்கியம். இவருக்கு அதெல்லாம் பிடிக்காது. 

நீதான் எடுத்து சொல்லணும் புள்ளைக்கு. பாரு ஒழைச்சி ஒழச்சி ஓடா போய்ட்ட. நானும் தூக்கி வளத்த பையன்தான் அவன். நான் பேசறேன் அவங்கிட்ட. நம்பர குடு..

பாக்கியம் சொன்னது நடந்தது. 

அம்மாவுக்கு அடிக்கடி போன் செய்வான் ராகுல். அவன் கேட்கும் முதல் கேள்வியே அங்க ஒண்ணும் ப்ரச்சன இல்லையே உனக்கு என்பதுதான்.. 

ஏன்? எதற்காக அப்படி கேட்கிறான் என்று யோசிக்காதீர்கள்.. நல்ல பொண்ணு..ஏழை வீட்டு பொண்ணு.. நல்லா நடந்துப்பான்னு கட்டி வெச்ச ப்ரீத்தி மெல்ல மெல்ல குணம் மாறினாள். பணம், செல்வாக்கு ராஜபோக வாழ்க்கை அப்படி மாற்றிவிட்டது அவளை.

குழந்தை இல்லாத குறையை சொல்லி அடிக்கடி இடித்துக்காட்டுவாள். சொத்து சொகம் இருந்து என்ன பிரயோஜனம். அனுபவிக்க சந்ததி இல்லையே என்று. 

அம்மா..எல்லா டாக்டரையும் பாத்துட்டேன். நான் என்ன பண்றது என்பான் ராகுல. 

வர்றவங்க போறவங்களுக்கு தான் வெளியில டாய்லட் கட்டி வெச்சிருக்கேன். அங்க போய் போங்கன்னு சொல்றாடா. அப்பாவால இன்டியன் டாய்லட்ல முடியாதுன்னுதானே கிராமத்துல வெஸ்டர்னா மாத்தி குடுத்த. என்னத்த சொல்றது ராகுல்..

நீங்க வளக்கிற நாய் கூட அவ கூட பெட்ல படுத்துக்குது. எங்களுக்கு ஹால்தான். ரென்டு பாய். 

வேளா வேளைக்கு சமைக்கிறது இல்ல. அடிக்கடி ஜோடி போட்டுட்டு்  கும்பலா எங்கயாவது போயிடறா. நாங்க சமையல் செஞ்சி சாப்டாலும் குறை சொல்றா. கிச்சன் சுத்தமாவே இல்லேன்னு. 

கல்யாணத்துக்கு முன்னால இவ கூட வேலை செஞ்ச வாத்யாராம். ஒருத்தன் வீட்டுக்கே வரான். மாடி வரைக்கும் போறான். என்ன கண்றாவியோ.  

ஏன்டா ..படகு மாதிரி கார் இருக்கு. ஆனாலும் நாங்க ஆட்டோ பிடிச்சிதான் போறோம் ஹாஸ்பிடலுக்கு. இவ எடுத்துட்டு போறா வெளியில. கார்ல எங்கள ஏத்திட்டு் போக முடியாதுன்னே சொல்றா.. 

கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட பவுசு எப்பிடி இருந்துதுன்னு கேக்கவா முடியும்? 

அம்மா.. இதனால தான் உங்கள இங்க கூப்பிடல. புரிஞ்சுதா.

அந்த வாத்யார் பத்தி் கேட்டதுக்குத்தான் எங்கிட்ட சண்டை அடிக்கடி. நாங்க நல்ல friends னு சொல்றா. 

கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பாங்கன்னு சொல்வாங்களே.. அந்த வாத்யாருக்கு ஏதோ பணம் குடுக்கிறா மாதிரியும் தெரியுதுடா.  

ஹும் எனக்கும் தெரியும். எங்கிட்ட சொல்லிட்டே ஒரு முறை குடுத்திருக்கா. தெரியாம எவ்வளோ help பண்றான்னு தெரியலே..என் காது படவே நெறைய பேர் அவங்க ரெண்டு பேரையும்  எணச்சி பேசிருக்காங்க. கண்ணால பாக்காம எதையும் முடிவு பண்ணக்கூடாதுன்னு அமைதியா இருக்கேன் வெளிவேஷம் போட்டுகிட்டு..

கண்ணால பாக்காமன்னு சொல்றதால, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன். போன வாரம் ஒரு ரெண்டு நாள் வீட்டுக்கே வர்ல. கார்ல அந்த வாத்யார்தான் கொண்டு வந்து இறக்கினான். ரொம்ப டய்ர்டா இருந்தா.. அப்பா ஓடிப்போய் என்னம்மா என்ன ஆச்சி. ஏன் ரெண்டு நாளா வீட்டுக்கு வர்ல. என்ன உடம்புக்குன்னு கேட்டதுக்கு.. உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லணுமா. போங்க தூர. பெரிய இம்சையா இருக்குங்கிறா. அவன்தான் கைத்தாங்கலா பிடிச்சி மாடிக்கு கூட்டிட்டு போனான்.

ஏதோ தப்பா இருக்கு காமாட்சின்னு சொன்ன உங்க அப்பா.. ஒரு முறை நம்ம கார் ஒரு நர்ஸிங் ஹோம் வாசல்ல நிக்கறத பாத்திருக்காரு. அந்த வாத்யார் அங்க இருந்த பார்மசியில ஏதோ மருந்து வாங்கிட்டு இருந்தான். அவன வழிமறிச்சி கேட்டதுக்கு பிடிகுடுத்து பேசல. வாய்வார்த்தை முத்திப்போய் எல்லாரும் கூடின பிறகு நர்சிங் ஹோம் ரிசப்ஷன்லேந்து ஓடிவந்தாங்க. 

அப்பாவே introduce பண்ணிகிட்ட பிறகு அவங்க சொன்ன விஷயம் தூக்கிவாரிப் போட்டது. சார்.. நீங்க அந்தப் பொண்ணுக்கு மாமனார்ங்கிறீங்க. இவரு உங்க பையன் இல்லையா..இவருதான் ரிஜிஸ்டர்ல husband னு sign பண்ணிருக்காரு. அதுக்குப்பிறகு தான் கருக்கலைப்பு ஆப்ரேஷன் பண்ணோம். 

இதைக்கேட்ட ராகுல் சுக்குநூறாக உடைந்து போனான்.. மாமனாருக்கு விஷயம் தெரிந்து விட்டதை உணர்ந்த ப்ரீத்தி பயப்படாமல் அவள் இஷ்டத்துக்குத் தான் திரிந்தாள். ஆனாலும் பூகம்பம் வெடிக்கப் போவதை உணர்ந்திருந்தாள்..

ஒரு நாள்.. போர்டிகோவில் கார் வந்து நின்றது. கதவைத்திறந்து வேகமாக இறங்கினான் ராகுல்.. அம்மா.. அப்பா.. எங்க அவ. கார் எங்க? காணோம் எங்க போயிருக்கா என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே காரின் முன் சீட்டிலிருந்து வந்து  இறங்கினாள். வாத்யார்தான் காரை ஓட்டி வந்தான்.. 

வாடி..எங்க போய்ட்டு வர இவ்வளவு காலங்காத்தால. முடியைப்பிடித்து தரதர வென இழுத்து வந்தான். காரை நிறுத்திவிட்டு வாத்யார் ஓட்டம் பிடித்தான். 

ச்சீ கைய எடு..ஒரு கொழந்தைய குடுக்க யோக்கியத இல்ல..கொழந்தைய கலச்சிட்டு வந்தனேன்னு சந்தோஷப்படு. பெத்துட்டு வந்திருந்தா சந்தி சிரிச்சிருக்கும் உன் மானம்.. 

டேய் ராகுல் அமைதியா இரு. பேசிக்கலாம். அவ திருந்திறதுக்கு ஒரு வாய்ப்பு குடு. 

ஹேய் கெழவி. என்ன கொழந்தைய கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டி விடறயா. கொழந்தையும் கிள்ள முடியாது, தொட்டிலையும் ஆட்ட முடியாது. அதுதான் உன் பையன் லட்சணம்.

பளார் பளார் என இடிபோல் இறங்கியது அடி அவளது கன்னத்தில். வெளியபோடி உனக்கு இந்த வீட்ல இடமில்ல இனிமேல் இழுத்துக்கொண்டு வந்து கேட்டை திறந்து வெளியே தள்ளினான். போடி போய் போஸ்டர் அடிச்சி ஒட்டு நான் ஆண்மை இல்லாதவன். அதனாலதான் வாத்யார்கூட தொடர்பு வெச்சிகிட்டேன்னும் சேர்த்து போஸ்டர் அடி. யார் மானம் போகுதுன்னு பார்ப்போம்.. அந்த வாத்யார் உங்கிட்ட புடிங்கித் தின்னலாம்னுதான் ஒட்டிகிட்டிருக்கான்..

புருஷன் விரட்டி விட்டால் போக்கிடம் ஏது பெண்களுக்கு. 

ஏன்டி ஏதோ எங்களுக்கு அப்பப்போ ஹெல்ப் பண்ணிட்டு இருந்த அங்க இருந்தவரைக்கும். உன் தம்பியும் உன் தயவுல படிச்சிட்டிருக்கான். இப்போ அதுவும் போச்சா. 

போன் செய்து வாத்தியாரிடம் முறையிட்டாள். ஓரிறு முறை அவள் சொல்வதை கேட்டவன்.. அவள் போன் செய்தால் எடுக்காமல் இருந்தான். பிறகு போனை கட் செய்ய ஆரம்பித்தான். மாற்றலாகி வேறு ஊருக்கே சென்று விட்டதை அறிந்தாள்.  அந்த வாத்யார் உங்கிட்ட புடிங்கித்தின்ன தான் ஒட்டிகிட்டிருக்கான் என்று ராகுல் சொல்லிய வார்த்தை மின்னலடித்தது.

நாட்கள் ஓடின. ராகுலும் அவனது அப்பா அம்மாவும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ப்ரீத்தியும் அவளது அப்பா அம்மாவும் வந்து இறங்கினர். 

மாப்ள..உங்க முகத்த பாக்கிறதுக்கே எங்களுக்கு அசிங்கமா இருக்கு.

அதுக்கு நான் என்ன பண்ண முடியும். உங்க பொண்ணு பண்ண அசிங்கத்த வெளியில சொல்ல முடியுமா.. எங்க அப்பா அம்மா வந்து ஒரு ரெண்டு மாசம் தங்கப்போறாங்க. மரியாதையா இருன்னு சொன்ன பிறகும் அவ நடந்துகிட்ட விதம் உங்களுக்கு தெரியுமா. மொதல்ல ஒரு பொம்பள அவங்க கணவன பத்தியும் தங்கிட்ட இருக்கிற பணம் செல்வாக்கு பற்றி எல்லாம் மற்ற ஆம்பளைங்க கிட்ட மூச்சு விடக்கூடாது. அதை சாதகமா பயன் படுத்திப்பாங்க சிலர். இவ விஷயத்துல அது தான் நடந்திருக்கு. இல்லேன்னு சொல்லச் சொல்லுங்க பாக்கலாம்? இப்ப திருந்திட்டான்னு எப்படி நம்பறது..

ஓடிவந்து காலில் விழுந்து.. என்னை மன்னிச்சிடுங்க என்றாள்.. மாமா.. அத்தை என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.. எனக்கு ஒரு சான்ஸ் குடுத்தா திருந்திடுவேன்னு நீங்கதான சொன்னீங்க. அந்த சான்ஸ் கேட்டு நிக்கறேன்..

எந்திரிம்மா.. டேய் உள்ள கூட்டிட்டு போ. 

உன்னோட சான்ஸ் பீரியட் ஆறுமாசம் என்றான் ராகுல். 

உண்மையிலேயே அந்த ஆறு மாதமும் நல்ல மருமகளாகவும் மனைவியாகவும் நடந்துகொண்டாள். ஆயினும்  அவளுக்கு ஒரு குழந்தை இல்லாத குறையை அவள் வெளிப்படுத்தாமல் தர்ம சங்கடத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தனர் ராகுலும் அவனது பெற்றோரும்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அவளது பிறந்த நாள் வந்தது. ப்ரீத்தி.. அம்மா..அப்பா கெளம்புங்க.. சீக்கிரம்..

எங்கங்க?  எங்க போறோம். 

மாமா.. அத்தை எங்க போறோம். 

வெயிட் பண்ணுமா. பாக்கத்தான போற. கார் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நின்றது. 

சார் வாங்க.. Procedure எல்லாம் முடிஞ்சிது. இந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போடுங்க. கிட்டதட்ட ப்ரீத்தியின் சாயலிலேயே ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்தனர்.. 

பெற்றால் தான் பிள்ளையா என்று கேட்டனர் ப்ரீத்தியை பார்த்து மூவரும்.. 

இல்லிங்க.. கண்டிப்பா இல்ல.. இவதான் என் குழந்தை என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *