பேச்சுப்பதிவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 1,482 
 

மனதில் பட்டதை வெள்ளந்தியாகப்பேசும், யதார்த்தமாக பழகும் பழக்கம் கொண்டவர் ராம்கி. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் குடும்பத்துக்காக படிப்பைத்துறந்து, தன் தந்தை நடத்திய மளிகைக்கடையை நடத்தி தன் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து, சீர் சிறப்பு செய்த பின் தனக்கென ஒரு பெண் தேடி ஓர் ஏழைக்குடும்பத்துப்பெண்ணை வரதட்சணை வாங்காமல் மணம் முடித்தவர்.

உறவினர் ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரத்தை விரிவு படுத்தியதை இன்னொரு உறவினரான விக்கி குடும்பத்தினர் பொறாமைப்பட்டுப் பொறுத்துக் கொள்ளாமல் ராம்கியின் வளர்ச்சியைத்தடுக்க எண்ணி அவரது வீட்டிற்கு நல்லவர்கள் போல் வந்து பழகுவதும், இவர்களுக்கு வட்டிக்கு கொடுக்கும் நபரான மோகியை மோசமாக பேசுவதும் வாடிக்கையானது.

“மோகியை நம்பவே கூடாது. பணம் கொடுக்கும் போது வெற்றுப்பேப்பரில் வாங்கும் கையெழுத்தை வைத்து மோசடி செய்து பலரது சொத்துக்களை முழுவதும் அபகரித்துள்ளார்” என பேச, ராம்கியும் ‘தனக்கு வட்டிக்கு கொடுக்கும் மோகி அவ்வளவு கெட்டவரா? உடனே எனது கையெழுத்திட்ட பேப்பரை வாங்க வேண்டும்’ என பயத்தில் சொன்னதோடு, வட்டியும் அதிகமாக வாங்குவதாக யதார்த்தமாகப்பேச, தங்களது போனில் அவர் பேசுவதைப்பதிவு செய்து , பின்னர் ராம்கி பேசுவதை மட்டும் எடிட் செய்து மோகிக்குப்போட்டுக்காட்ட, கோபம் தலைக்கேறிய மோகி அன்றே ராம்கியிடம் வந்து தனது பணத்தைக்கேட்டு வற்புறுத்தியதோடு, பழகுவதையே நிறுத்தியதால் தொழில் நடத்தப்பணம் இல்லாமல் போக தொழில் முடங்கி வேறு யாரும் பணம் கொடுக்காததால் வேலைக்கு போகும் நிலைக்கு ஆளானார் ராம்கி.

விக்கி குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு விசித்திர மன நோய் உள்ளது. எந்த உறவினர் வீட்டிற்கு, நண்பர்கள் வீட்டிற்குச்சென்றாலும், யாராவதுடன் போனில் பேசினாலும் தங்களது போனில் பேசுவதைப்பதிவு செய்யும் பழக்கத்தையும், பேசியதைப்பதிவு செய்து வைத்துக்கொண்டு,பேசியவர்களின் உறவுகளிடம் போட்டுக்காட்டி, ஒற்றுமையுடன் நல்ல நிலையில் உள்ளவர்களின் மனதைக்கெடுத்து, உறவைப்பிரித்து அவர்களது வேதனையில் மகிழ்ச்சியடைவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விக்கியின் உறவினர் ரவி என்பவர் மீது அவரது சகோதரி ரமாவுக்கு அளவு கடந்த பிரியம். ரமாவிற்க்கு குழந்தை இல்லை. தம்பி ரவிக்கு தனது சொத்துக்களை முழுவதும் கொடுக்க நினைத்தவரை உடன் பிறந்த இன்னொரு சகோதரியான விக்கியின் மனைவி சின்ன மனசங்கடத்தில் தன் அக்கா ரமாவைப்பற்றி ரவி பேசிய பேச்சை பதிவு செய்து, ரமாவிடம் போட்டுக்காட்டி, ரவியை வெறுக்கச்செய்ததால் அன்று முதல் ரவியிடம் பேசுவதை நிறுத்திய ரமா, சூழ்ச்சி செய்த சகோதரிக்கே சொத்துக்களை முழுவதும் எழுதிக்கொடுத்து விட்டாள்.

இதேபோல விக்கியின் மகன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பணக்கார வீட்டுப்பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தானும் பணக்காரணாகி விடலாம் என திட்டம் போட்டு அப்பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்து அவளது போன் பழுதான போது அதை தானே சரிசெய்து தருவதாக கூறி வாங்கி வந்து அவள் யாரிடம் பேசினாலும் தனது போனில் அப்பேச்சு பதிவாகும் வகையில் செட்டிங்கை மாற்றி, பேசுவதை பதிவு செய்து, பதிவு செய்ததை போட்டுக்காட்டி தன்னைத்திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளச்செய்து விட்டான்.

இவ்வாறு தொடர்ந்து பலரது பேச்சை பதிவு செய்து வலைத்தளங்களில் பரவ விடுவதும், பிறருக்கு போட்டுக்காட்டுவதுமான இழிவான பழக்க நிலை கொண்ட விக்கி குடும்பத்தினரை,’ பிறர் பேசியதைப்போட்டுக்காட்டும் இவர்கள், ஒரு நாள் நாம் பேசுவதையும் பிறருக்குப்பதிவு செய்து போட்டுக்காட்டத்தான் செய்வார்கள் ‘ என நினைத்த நட்புகளும், உறவுகளும் எந்த விசேச நிகழ்வுகளுக்கும் அழைக்காமல், நேரில் கண்டாலும் பேசாமல், வீட்டிற்கு வந்தாலும் கண்டு கொள்ளாமல் விட்டதின் நிலையால் விக்கி குடும்பமே ‘நமது செயலால் உறவுகள், நட்புகளால் ஒதுக்கப்பட்டு தனித்து விடப்பட்டு விட்டோமே…’ என நினைத்து கண்கலங்கி விக்கித்து நின்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *