முல்லை மொட்டாக…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 7,632 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அடக்க முடியாத ஆர்வத்தோடு பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் பவானி. திரும்பிப் பார்த்த போது அமலதாஸ் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பவானி, “என்ன தாஸ், பிளைட்டுக்கு நேரமாச்சு இப்படி எதையோ போட்டு வளையிலே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் நண்பர் வேலையா காரில் வந்து இறங்கி விடுவார். ஏன் துணி மணி எல்லாம் கூட எடுத்து வைக்க யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இந்தியாவிற்கு போவதில் விருப்பமில்லையா? இல்லை நம்மூர் உறவினர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வு இன்னும் குறையவில்லையா?” என்று அருகில் வந்த அவனை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தவாறு கேட்டாள்.

“…”

“ஏன் பேசாமல் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்? நான் என்ன சர்க்கஸ் கோமாளி மாதிரியாகவாத் தெரிகிறேன்” என்றாள் குரலை உயர்த்தியவாறு.

“அதை விட மோசமான ஜோக்கர் மாதிரி தான் தெரிகிறாய் பவானி” எழுந்து ஜன்னலில் போய் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் அமலதாஸ். “அய்யோ திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிட்டதா வேதாளம். இந்த வீட்டிற்கு புதிய தலைமுறை வரப் போகிறது. அப்போது புகை நாற்ற மடிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கிறேன்”

ரோத்மான்ஸ் பாதியிலே ஆஸ்டிரேயிலே நசுங்கிப் போக, “இந்த வயதிற்கு பிறகும் இப்படி ஒரு தேவை தானா பவானி. நீ எனக்கு குழந்தை. நான் உனக்குக் குழந்தை என முடிவு செய்து வாழ்க்கையின் எல்லைக்கு வந்துவிட்டோம்.

இராஜவல்லிபுரத்திற்கு திரும்பப் போக ஏனோ மனசுக்குள் கசப்புகள் தான் எழுகிறது. இந்த ஐம்பத்தைந்து வயதிலும் இப்படி ஒரு ஆசை.

யோசித்து பார். நான் அறுபது தாண்டியாகி விட்டது. எத்தனையோ முறையோ இந்தக் குவைத் நண்பர்கள் தங்கள் குழந்தைகளை நமக்கு தத்துக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அவர்கள் விருப்பத்தையெல்லாம் தடை சொல்லி விட்டு திடீரென்று உன் அண்ணன் மனைவி தன் நான்காவது குழந்தையை அதுவும் பிறந்த அன்றே நமக்கு தந்து விட சம்மதித்ததும் ஏன் போய் தத்து எடுத்துக் கொள்ளத் துடிக்கிறாய்? மனசுக்குள் கேள்விகள் எழுந்து குமைந்து கொண்டிருக்கின்றனவே, ஒழிய நீ சொன்ன எதுவுமே ஏற்றுக்கொள்ளும்படி பதில்கள் இல்லாமல் போய் விட்டது தான் ஆச்சரியமாகப் போய் விட்டது. ஏறக்குறைய இருபத்திரெண்டு வருடங்களுக்கு பிறகு ஊர் திரும்பிப் போய்.. அங்கு எதை எதிர்பார்த்து-” என்று அமலதாஸ் முடிப்பதற்குள் “தாஸ்… நாம் ஊருக்குப் போகவில்லை. நமக்கு ஒரு வாரிசு எடுத்துக் கொள்ளத்தான் அந்தப் பக்கம் போகிறோம்.

நேற்று தான் போன் பண்ணிய போது அண்ணிக்கு வலி எடுப்பதாக அண்ணன் சொன்னார். ஏறக்குறைய ஓரிரு நாட்களில் குழந்தை பிறந்து விடும். பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நாம் குவைத்துக்கு உடனடியாக திரும்பி விடுகிறோம்.

நாம் சம்பாதித்த இந்தச் சொத்துக்கள் இந்தக் குவைத் கடைகள்.. நான் சேர்த்து வைத்திருக்கும் இந்த தங்க, வைர நகைகள் நாம், நமக்கென வரப்போகும் வாரிசுக்கு சொத்தாக வைத்து விட்டும் போகலாமே…

ஏன் நடந்ததையே நினைத்துக் கொண்டு – என் மாமா பையனை எடுத்து வந்து வளர்த்து… ஊருக்குப் போனதும் மாமா கூட்டிக் கொண்டு போனதற்காக… நாம் வில்சனை எடுத்து வந்தபோது… முல்லை மலர் போல இருப்பதாக…”

“பவானி அந்த விஷயம் வேண்டாம். மனதுக்குள்ளேயே நிறைய வலிகளை ஏற்படுத்தி விட்டு போன புண்ணின் வடுக்களை திரும்பவும் கிள்ளிப் பார்க்க வேண்டாம்.

இப்போதும் சொல்கிறேன். எனக்கு இங்கே நல்ல செல்வாக்கு உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் உனக்கும் ஓர் அந்தஸ்து உள்ளது.

என் வியாபாரம், உன், பணி என்று நம் நேரங்களே முழுங்கிப் போகும். நமக்குப் பணிகள் தாராளமாக இருக்கிறது. இதை விட்டு விட்டு இன்னும் வாரிசு அடுத்த, தலைமுறையில் நம் பெயர் விளங்க வேண்டும் என்று ஏன் ஆலாய் பறக்கிறாய்.

அன்புத் துணைவியே! உன் எழுத்துக்கள், உன் கவிதைப் புத்தகங்களை நாம் இறந்த பிறகும் தமிழ் கூறும் நன்னுலகம் எல்லாம் உன் பெயர் கூறுமே. தவிர்க்க முடியாமல் அடுத்து ஒரு ரோத்மான்ஸ் பற்ற வைத்தான் அமலதாஸ்.

“செந்தமிழிலே பேச ஆரம்பித்து விட்டால் எல்லாம் சரியாகப் போய் விடும் என்று நினைப்பா தாஸ். நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே.. எனக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று, இதைத்தான் செய்யச் சொல்கிறேன். வாருங்கள் கிளம்புவோம். கீழே பாருங்கள் வேலைய்யா காரை நிறுத்தி விட்டு இங்கே வருகிறார்” என்று ஜன்னலுக்கு வந்து சுட்டிக் காட்டினாள்.

“இப்படிச் சொல்லியே என்னை விழ வைத்து விடு” என்று துணிமணிகளை அள்ளி பெட்டியில் வைத்து மூடினான அமிலதாஸ்.

உள்ளே வந்த வேலைய்யா, “என்ன சிஸ்டர் தாஸ் ஒரு மாதிரி உட்கார்ந்திருக்கிறார். என்ன விஷயம்?” தாஸின் சிகரெட் பாக்கெட் டிலிருந்து இன்னொரு ரோத் மான்ஸ் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் வேலைய்யா.

“இருங்கள் கூல்டிரிங்ஸ் எடுத்து வருகிறேன்” என்று சமையலறைக்குள் கிளம்பினாள் பவானி.

“ஏன் வேலைய்யா, நீங்களே சொல்லுங்கள். ஒரு முறை சுட்டுக் கொண்டது போதாதா? எங்கே யாவது அநாதை ஆசிரமத்திலோ நண்பர்கள் வட்டாரத்திலோ ஒரு நல்ல குழந்தையை எடுத்து வளர்ப்போம் என்று சொல்வதைக் கேட்காமல் சொந்தத்தில் வளர்த்தால் சொத்து வெளியே போகாது என்று..” அவன் சொல்லி முடிப்பதற்குச் சமையலறையிலிருந்து வெளிப்பட்ட பவானி “ஆரம்பிச்சாச்சா? வேலைய்யா சார், எத்தனை முறை பேசி முடித்த விஷயம் இப்போது அதைப் போய் – பேசிக்கொண்டு கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று நீட்டினாள்.

எக்காளச் சிரிப்போடு பருகிக் கொண்டே, “எல்லாம் இங்கே பெண்கள் மயம் இல்லையா, வேலைய்யா, இவர்கள் சொல்வது போல ஆட வேண்டிய சூழ்நிலையில் நாம் நிற்கிறோம்! வாருங்கள். போகலாம்” என்று பெட்டியை எடுத்துக் கொண்ட, அமலதாஸ் “உனக்கு இந்த ஒரு பையும் தானே?” என்று பவானியிடம் கேட்டான்.

“ஆமாம், அதை தூக்கிக் கொண்டு காருக்கு கிளம்புங்கள். நான் சின்னப் பையை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்றவாறு சமையலறைக்கு வந்து குளிர்பான பாத்திரங்களை கழுகி முகம் துடைத்து விட்டு கிளம்பினாள் பவானி.

எல்லோரும் காரில் விமான நிலையம் வந்திறங்கியதும் “சரி.. அமலதாஸ் நல்ல முறையில் சென்று வாருங்கள். வரும் போது வாரிசோடு வாருங்கள்” என்று வாழ்த்தி விட்டுக் கிளம்பினான் வேலைய்யா.

விமான நிலையத்திற்குள் நுழைந்து சோதனைகளெல்லாம் முடிந்து விமானத்திற்கு வந்த போது “இப்போது கூட எனக்கு ஊருக்குப் போவதில் எந்த விருப்பமுமில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்.

எவ்வளவு தெளிவாக நீ எனக்கு பெண் குழந்தை, நான் உனக்கு ஆண் குழந்தை என்று சந்தோசமாக வாழ்வோம் என்று முடிவு செய்தோம்.

அப்படியே உன் ஆசைப்படி நான் இங்கே நண்பர்கள் வட்டத்திலோ இல்லை அனாதை இல்லங்களிலோ ஒரு நல்ல குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் பவானி” என்றான் அமலதாஸ் பணிப்பெண்ணிடமிருந்து குளிர்பானம் வாங்கி அருந்தியவாறு.

“நாம் ஓடி..ஓடி சேர்த்து வைத்ததெல்லாம் இன்னொரு குடும்பத்தின் வாரிசுக்குப் போய்ச் சேர வேண்டாம் தாஸ். என் அண்ணன் குழந்தை நம் வாரிசாக நாம் சேர்த்து வைத்திருக்கும் இந்த ஆஸ்தியை அனுபவிக்கட்டும். இனி நீங்கள் அதைப் பற்றி பேச வேண்டாம்.. சரியா” என்றாள்.

“சரி பவானி உன் விருப்பம்” என்று பேப்பர் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

“எப்பபாரு… பேப்பர், டி.வி. வியாபாரம் இப்பவாவது ஏதாவது பேசலாமே” என்றாள் பவானி.

ஊரில் வந்து இறங்கிய போது அண்ணனும் அண்ணியும் மருத்துவமனைக்குப் போயிருப்பதை அறிந்து நேராக நாகர்கோவில் மத்தியாஸ் டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள்.

அண்ணியை வயதான கோலத்திலும் பிரசவ உபத்திரவப் படுவதைப் பார்த்து கொஞ்சம் வருத்தமாக இருந்தது பவானிக்கு.

அண்ணன் ராமு “என்ன மாப்பிள்ளை பயணம் எல்லாம் எப்படி இருந்தது?. டாக்டர் டெலிவரி நாளைக்குத்தான் என்று சொல்லிவிட்டார். நீங்கள் வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு நாளை வாருங்கள்” என்றார்.

“அதுவும் சரி தான். அண்ணா நாங்கள் சொன்னதெல்லாம் டாக்டரிடம் சொன்னீர்களா? நாளைக்கே நாங்கள் குழந்தையை எடுத்துக் கொண்டு பயணம் செய்யலாமா? டாக்டரிடம் தெளிவாகக் கேட்டீர்களா?” என்று கேட்டாள் பவானி.

“ஒரு நாள் கழித்து அதாவது நாளை கழித்து நீங்கள் குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பலாம், அதிலே ஒன்றும் பிரச்சினை இருக்காது” என்றார் ராமு.

“ரொம்ப வசதியாகப் போச்சு. நாங்கள் நாளை கழித்து போவதற்கு தான் டிக்கட் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் ரெஸ்ட் எடுங்கள் அண்ணி வருகிறோம்” என்று கிளம்பினாள் பவானி தாஸையும் அழைத்துக் கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளோடு மருத்துவமனைக்கு வந்த போது “நீங்கள் போய் அண்ணாவிடம் சொல்லி குழந்தையை வாங்குங்கள். நான் அண்ணிக்கு கொஞ்சம் குங்குமம், பூ, பழம் வாங்கி வருகிறேன்” என்றாள் பவானி.

மருத்துவமனைக்குள் வந்து ராமுவின் மனைவி தங்கியிருந்த அறைக்கு மாடி ஏறி வந்த போது “நம்ம பொண்ணு முல்லை மொட்டாக எவ்வளவு அழகாக இருக்கிறது, ஏங்க ரொம்ப நாளைக்கப்புறம் நமக்கொரு பொண்ணு பிறந்திருக்கு. நாமளே வளர்த்துக் கொள்ளலாம். உங்கள் தங்கைக்கு வேறு இடத்திலே தத்து எடுத்துக் கொள்ளச் சொல்லலாமே” என்ற உரையாடல் கேட்டதும், ஒதுங்கி நின்று சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான் அமலதாஸ்.

வேகமாக மேலே வந்த பவானி “என்னங்க நீங்கள் இங்கேயே நின்று விட்டீர்கள் பயணத்திற்கு நேரமாகி விட்டது. ஏன் சிரிக்கிறீர்கள்? பைத்தியம் புடிச்சிருச்சா” என்றவாறு அந்த அறைக்குள் நுழைந்தாள் பவானி. பின்னால் உள்ளே வந்தான் அமலதாஸ்.

“அண்ணா டாக்டரிடம் தெளிவாகப் பேசி விட்டேன். பெண்ணை எடுத்துக் கொண்டு நாங்கள் கிளம்புகிறோம்” என்று வேகமாக தொட்டிலிலிருந்த குழந்தையைத் தூக்கினாள்.

ராமு “பவானி- அது வந்து.” என்று இழுக்க ஆரம்பிக்க, பவானியின் அண்ணி, “என்னங்க இழுக்துக்கிட்டு வந்து போய்… இதெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டிய விஷயம்.

பவானி எங்களுக்கு இதுவரை பெண் குழந்தை இல்லை. அதுவும் இந்த வயதில் ஒரு பெண்ணை பெற்றதனால் நாங்களே வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

உனக்கு நம்ம உறவுக்குள்ளேயே ஒரு அழகான பிள்ளை தத்தெடுத்து தர அரேன்ஜ் பண்ணுகிறேன்” என்றாள் ராமுவின் மனைவி.

குபுக்கென்று வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பவானி, “அண்ணா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கோபமாக கீற, “நான் என்னம்மா சொல்றதுக்கு இருக்கு” என்று கையை விரித்தார் ராமு.

தலைக்கு மேலே கோபம் பொங்கி வழிய அமலதாஸோடு திருவனந்தபுரம் வந்து விமானத்தில் ஏறிய பவானி குவைத் ஏர்போர்ட் வரும் வரை எதுவும் பேசவில்லை.

விமானம் குவைத் இறங்கப் போகிற அறிவிப்பு வர, அமலதாஸின் கையை பிடித்துக் கொண்ட பவானி “முல்லை மொட்டுப் போல அழகாக சிரிக்கின்ற அன்பரே… இனி நீங்கள் தான் என் குழந்தை” என்று அமலதாஸின் நெற்றியில் முத்தமிட்டாள்.

– தினபூமி – ஞாயிறு பூமி, 12-09-2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *