முற்றிய கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 2,407 
 

‘குப்’ பென வியர்த்தது எனக்கு. ராஜி என்ன சொன்னாள்? அவள் குரலில் மெல்லிய நடுக்கம் ஒன்று இழையோடியதே!

“மேகலாவுக்கு இரண்டாந்தாரம் வேண்டாம்.”

அதைச் சொல்ல அவள் தயங்கவில்லை. ஆனால் சொல்லி உள்ளே சென்றவள்தான், இன்னமும் திரும்பி வந்து கணவன் முகத்தில் விழிக்கவில்லை. இதில் புதைந்துள்ள பொருளுக்கு விளக்கம் தேவையில்லை போலும், தேவை போலும் தோன்றுகிறது.

வேகமான அவள் நடையில் தொய்வு காணப்பட்டது. சட்டெனக் கூறிய பதிலின் பின்னே தயக்கம் ஒளிந்திருந்ததே! அவள் ஏன் இப்படிக் கூற வேண்டும்? நிறைவுறாத அதிருப்தி ஏதேனும் அதில் கலந்திருந்ததோ? சலனமற்ற அவள் எண்ணத்தை அவன் இடறி விட்டிருந்தால்! கடந்த எட்டு வருடங்களாக அவளை அறுதியிட்டுக் காணமுடியாத ஏமாற்றம்தான் மிச்சமா? இது என்ன வாழ்வு? அவள் அருள்முகம் கண்டு விழிப்பெருக்க நின்றதெல்லாம்  ஏமாற்றக் கனவுதானா? அந்த நிம்மதி மாந்திய மதிமுகத்தை விரிந்த விந்தையாய் ஏற்றது பொய்யா? அவள் ஏன் துடித்தாள்.

ராஜி காலி டம்ளரை மேஜை மீது வைத்துவிட்டுத் திரும்பினாள். இது என்ன இயந்திர மாற்றம்?

“ராஜி!”

போகத் திரும்பிவிட்ட அவள் முகம் சட்டெனத் திரும்பிக் குனிந்தது. அந்தப் பார்வையின் ஒரு கணத்தில், மின்னலில் தெரியும் எல்லாம்போல் உள்ளமெல்லாம் தெரிந்தது. எனக்குப் புரிந்தது. என்னை மணந்துவிட்ட சோகம் அதில் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தெளிவே உருவாக அவள் நின்றாள்.

மெள்ள மெள்ள அவள் உணர்வு பொங்கி எழுவதுபோல் வாய் திறந்தாள். “நான்…நான்…”, அவள் உதடுகளின் நடுக்கம் விளங்கவில்லை. அவளது திணறல் புரியவில்லை. நான் நிமிர்ந்து நேருக்கு நேராக அவளைப் பார்த்தேன். அவள் ஒரு கணம் நிதானித்துவிட்டு, மறுபடியும் என் கண் மறைவுக்கு ஓடிவிட்டாள். அப்படியானாள் அவள்…? அப்படியும் இருக்குமோ? அலை கடல் முத்து ஆலயத்தில் ஒதுங்கியதுபோல் வந்த பயன் இது என்று நினைத்தது பொய்யோ? அப்படியானால் எனது இயல்பான கட்டளைகளைச் சுவையான நிறைவாக ஏற்றதெப்படி? அவளது அன்பின் மதர்பில் நான் தலை நிமிர்ந்திருந்த தெல்லாம் வீணான சுய நினைவா? வேனிலின் கானல் மூச்சு, தேன் தென்றலில் குளிர்வதுபோல் ராஜி குளிர்ந்திருக்கிறாளா? தென்றல் ஒடுங்கியபோது கானல் சீறுகிறதா? பூரணத்தில் ஒன்றிவிட்ட அவள், மோனத்தில் கலந்துவிட்ட அவள், என் அடிச்சுவட்டில் கால் பதித்து, என் மன ஏட்டில் கருத்தொதுக்கி நடந்தபோதும், அவள் உள்ளத்தில் இரண்டாம் தாரம் எண்ணம் பதிந்திருந்ததோ? காணாமற் கண்ட அதிசயமாய், அவளை ஏந்தி மாந்தியபோது, அவள் உள்ளத்தில் அதிருப்தி நிலவியிருந்ததென்றால், அதைத் துய்த்த பாபத்திற்கு இனி செய்ய வேண்டிய பிராயச்சித்தம்தான் என்ன?

இப்போது மேகலாவுக்கு என்ன செய்வது? ராஜி சொல்கிறபடியே அவளை இரண்டாம் தாரமாகக் கொடுக்காமல் இருப்பதா?  அல்லது நம் நிலைக்கு வேறென்ன செய்ய முடியும் என்று ஏற்பாடுகள் செய்வதா? ஆமாம், அவளை ஒரு வார்த்தை நான் நேராகக் கேட்காமல் ஏன் இப்படிக் குமைகிறேன்?

“ராஜீ! இந்த வரனை வேண்டாம் என்றுவிடவா?”

இதற்கு மேல் விரிவாகக் கேட்க என் மனம் துணியவில்லை.  “அப்படியேச் சொல்லிவிடுங்கள்.” என்று கூறிவிட்டு, என்னை நிமிர்ந்து பார்க்காமலேயே சென்றாள் அவள். எங்களுக்கும் புரியாமல் கலங்கிய நீர்போல், வேண்டாத விரக்திச் சூழல் ஒன்று விரிந்தது.

நான் பெருமூச்சு விட்டேன்.

சுவரில் என் மூத்த மனைவி அபிராமி புன்சிரிப்போடு, புகைப்படமாகி இருந்தாள். அபிராமியின் மறு அச்சுதான் மேகலா. அதே அழகு, அதே சிரிப்பு, அதே அமைதி!

அபிராமி விடைபெற்றுக்கொண்டபின் இந்த ராஜி வந்தாள். வாழ்வில் அபிராமியால்  முற்றுப் பெறாமல் அறைகுறையாகிவிட்ட எல்லாப் பாகங்களையும் ஏற்று, முற்றிய கனவாக நின்றாள் ராஜி. இன்று அவள் மனத்திலும் ஏதோ குறை ஒளிந்திருப்பதாகத் தெரிகிறதே!

ச்சீ! மறுபடியும் நினைவு ராஜியிடமே தாவுகிறதே… தாவாமல் என்ன செய்யும்… அவளல்லாத எந்த நிகழ்ச்சிகள் என் வாழ்வில் தனித்துப் பிரித்துப் பார்க்குப்படியுள்ளன? வாழ்வின் எந்த நூலை இழுத்தாலும் அதன் அடிமுடிச்சாக ராஜி தேங்கி நிற்கிறாள்.

நிலவொளி உச்சிக்கு ஏறிவிட்டது. அன்றாடங் கதைகள் பேசித் துயில வரும் ராஜி வாயடைத்துப் படுத்துவிட்டாள். உண்மையை உணர்ந்துவிட்ட, வஞ்சம் தீர்த்துவிட்ட நிம்மதியா அவளுக்கு? அவளின் எட்டு வருடத் தவிப்பையெல்லாம் ஒரு சொல்லில் எடுத்தெறிந்துவிட்டு, என் அமைதியைப் பறித்துக்கொண்ட ஆறுதலா அவளுக்கு? இந்த மனவுளைச்சல்களைச் சமாதானப்படுத்தி, சமனமாக்காமல் இருப்பதே எனக்களிக்கும் தண்டனையாக எண்ணி, தனித்துவிட்டாளா? பின் ஏன் ராஜி வரவில்லை?

தென்றல் தழுவிய உடல் ஜிகு ஜிகுவென்று  சூடேறியது. நான் துண்டை விரித்துத் தரையில் படுத்துக் கையை தலைக்கிதமாக வைத்தவாறே வானத்தை அண்ணாந்தேன்.

ராஜி…! ராஜி.! … அவள்தான் என் ஒரே குழப்பமாகிவிட்டாள். இப்போது மேகலாவின் திருமண விஷயம்கூட மனத்திலிருந்தே ஒதுங்கிவிட்டது.


எட்டு வருஷங்களுக்கு முன் பதினைந்து வயதுச் சிறுமியாக என் கரம் பற்றிய ராஜி தெம்பும், தைரியமுமாக, பொறுப்பேற்கும் பண்புப் பெண்ணாகத்தானிருந்தாள். என் வயது முப்பத்தாறு என்று ஞாபகம். எங்களிடையிருந்த இருபத்தியொரு வருட வித்தியாசமோ, இரண்டாம் தாரம் என்ற பேதமோ இல்லை போலத்தான் தோன்றியது. அடக்கமும் அன்புமாக அவள் வளைய வரும்போதும், எனக்குப் பணிபுரியும்போதும், மேகலாவைச் சீராட்டி வளர்த்தபோதும். அவள் இம்மியளவும் அதிருப்தியுற்றதாக எனக்குக் காணக்கிடைக்கவில்லையே…! இந்தப் புதிய ஏமாற்றம் உண்மைதானா?

சட்டெனக் காதுகள் கூர்மையாயின. மெல்லடி வைத்து ராஜி வந்தாள். நான் கண்களை இறுக மூடிக்கொண்டுவிட்டேன். ராஜி தலையணையை எடுத்து வந்து, என் தலையைத் தூக்கி வைத்தாள். சிறிது நேரம் அவள் நின்றிருக்க வேண்டும்.  பிறகு மெல்லடிகள் தேய்ந்து மங்கின. நான் கண் திறந்தேன். வானத்தில் உச்சியில் பால் மேகங்கள் தவழ்ந்துகொண்டிருந்தன. நிம்மதியற்றிருந்த முற்றிய கனவு என் மனத்திலும், ஒரு துளி நிம்மதியைக் கலந்தது.


காலைப் பேப்பரை விரித்து அதில் லயித்தபோது தரகர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்தேன். ஒரு புதிய என்ஜினீயர் வரன் வந்திருப்பதாகவும் ஆனால் ரொக்கம் கையில் தரவேண்டும் என்றும் கூறினார். நான் உள்ளே விரைந்தேன்.

அங்கே ராஜி மேகலாவின் கூந்தலை அழகாகச் சீவித் தலையைப் பின்னிக்கொண்டிருந்தாள்

“வருகிறாயா ராஜி, தரகர் வந்திருக்கிறார்.”

ராஜி எழுந்து ஹாலுக்குள் வந்தாள்.

தரகர் புதிய வரனைப் பற்றிப் பேசிவிட்டு, “ஏனம்மா! உங்கள் கணவர் அந்த இரண்டாம் தார வரனை வேண்டாமென்கிறாரே! இன்றைக்கிருந்தால், அவருக்கு வயது முப்பத்தெட்டிருக்கும். பார்ப்பதற்கு முப்பது வயது மாதிரித்தான் இருப்பார். நமக்கு எந்தச் செலவும் கிடையாது. நகை நட்டு எல்லாம் அவர்களே போடுகிறார்கள். நம்ம பெண்ணும், நாளை செல்வமும், சீருமாக இருக்கும். என்ஜீனியர் பையனைப் பாருங்களேன். ஆஸ்தி கிடையாது; இனி சம்பாதிப்பதுதான் வருமானம், சேமிப்பு எல்லாம். இதற்கே பெண்ணையும் கொடுத்துப் பணத்தையும் கொடு என்கிறார்கள்…!”

“அதனால் பரவாயில்லை.  நீங்கள் அந்த எஞ்ஜினீயர் வரனையே பாருங்கள். பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். வரன் நல்ல குணம், நன்னடத்தை உள்ளவனா என்பதுதான் முக்கியம்… எல்லாம் விசாரித்துவிட்டு ஜாதகத்தோடு வாருங்கள்…”

தரகர் விடைபெற்றார்.

“பணத்திற்கு…?” ராஜியின் முகத்தைப் பார்க்க எனக்குத் துணிச்சல் இல்லை.

“நமக்கிருப்பது அவள் ஒருத்தி, என் நகைகளை விற்றுப் பணமாக்கலாம்.”

ராஜி உள்ளே போய்விட்டாள்.

மேகலாவை நல்ல பையனுக்குத் தருவதில் எனக்குத்தான் சந்தோஷமில்லையா? ஆனால் ஊடே ராஜியின் துயரம் நெஞ்சை வெட்டியது. அவளுக்குத் தீங்கு செய்துவிட்டதுபோல் என் மனம் துடித்தது. நான் திரும்பி உள்ளே நோக்கினேன். மேகலா ராஜியின்மேல் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.


“என்ன… ஆபீசுக்கு டயமாகவில்லை?” ராஜி என்னருகே வந்து என் தோளைத் தொட்டாள். மறுபடி பதட்டத்தோடு நெற்றியைத் தொட்டாள். “ஐயோ! உடம்பு சுடுகிறதே, மேகலா கொஞ்சம் டாக்டரைப் போய்க் கூட்டி வாம்மா! அப்பாவுக்கு உடம்பு சரியில்லை….. இரவெல்லாம் பனியில் படுத்திருந்தது ஆகவில்லை போலிருக்கிறது. நானும் எழுப்பி உள்ளே வந்து படுக்கச் சொல்லாமலிருந்துவிட்டேனே…” அவள் குரலில் தொனித்த பரிவும், பயமும் எனக்கு இதமாகவே இருந்தது. தன் மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு, அபிராமியின் படத்தைப் பார்த்துக் கை கூப்பித் தொழுதாள் ராஜி.


இந்த மூன்று நாட்களாக ராஜி மிகவும் இளைத்து வெளுத்துவிட்டாள். ஜீவனற்ற புன்னகையோடும், நிம்மதியற்ற நெஞ்சோடும் அவள் மௌனப் பிராணியாகிவிட்டாள்.

காய்ச்சிய எண்ணையில் தலை முழுக வைத்து என்னைக் கொண்டு வந்து உட்காரவைத்தாள் ராஜி. சுடச் சுட வெந்நீரில் குளித்த களைப்போடு, அவள் ஏந்திக் காட்டிய சாம்பிராணிப் புகையை முகத்தில் சூழவிட்டேன். மேகலா ரசம் சாதம் பிசைந்து எடுத்து வந்தாள்.

“நீ ரொம்ப இளைத்துவிட்டாய் ராஜி. என் உடம்பைப் பார்க்க, உன் உடம்பைக் கெடுத்துக் கொள்வதா?”

ராஜி தலைகுனிந்தாள். சொட்டுச் சொட்டாகக் கண் முத்துக்கள் உதிர்ந்தன.

“என்ன ராஜி இது…?” நான் பதறினேன்.

“நீங்கள் ஜுரத்தில் உளறினீர்கள்..!”

“உளறினேனா?”

“ஆம்! நான் நினைக்காததை எல்லாம் உண்டு என நினைத்து, நீங்கள் குழம்பிவிட்டீர்கள்…!”

“நான் குழம்பிவிட்டேன், உண்மைதான். நீ… உன்னை… நான் தவறு செய்துவிட்டேனல்லவா? நீ அதைத் தவறு என்று எண்ணி இன்னும் மறுகுவதால்தானே, மேகலாவுக்கும் வேண்டாம் என்றாய், என்று நினைத்தேன்…”

“அப்படி நினைத்திருந்தால் அதில் தவறு இருக்க முடியும் என்று கருதுகிறீர்களா?… ஆனால் … நான் அப்படி நினைக்கவில்லை. நான் விரும்பி ஏற்ற வாழ்வு என்னுடையது. அதில் உங்கள் தவற்றுக்கு இடமே இல்லை… அப்படியே நீங்கள்  தவறு செய்தீர்கள் என்று வைத்துக் கொண்டாலும், அதை இப்போது நினைத்து உருகுவதால் பயன் ஏற்படும் என்று கருதுகிறீர்களா…?

“ஆனால் நீ முன்பு கண்ணீர் வடித்திருப்பாய். வேறு வழியில்லையென்று துணிந்திருப்பாய். நீ விரும்பிய உல்லாசங்களை என்னால் தரமுடியவில்லையென்று பிற்காலத்திலும் ரகசியக் கண்ணீர் வடித்திருப்பாய்…”

“இல்லை! அப்படி ஒரு குறையே எனக்கு ஏற்பட்டதில்லை. நம்மிடையேயுள்ள வயது வித்தியாசம் என்னையறியாமல் என்னுள்ளே பயமாகப் பரிணமித்தது. உங்களுக்கு ஒரு தலைவலியென்றாலும், நான் நடுங்கி தெய்வத்திடம் முறையிடுவேன். எனக்குரிய மங்கலங்களை நான் இழக்காமல், உங்களுக்கும் முன்னதாக நான் உயிர் துறக்க வேண்டும் என்னும் என் கனவு சிதைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும். அதன் பிடியில் நான் பட்ட அவதிகளை நினைத்தாலே, என் நெஞ்சு நடுங்குகிறது.  சுகமானக் கனவுகளுக்காகக் கண்ணீர் விடுவதில் இதம் காணலாம். ஆனால் என் திகிலுக்கு… அதற்கு மருந்து நீங்கள்தான். உங்களை இழந்துவிடுவேனோ என்ற அச்சமே என் வாழ்வாகிவிட்டது. அதனால்தான் மேகலாவிற்கு மறுத்தேன். நாளை மரணம் என்று விதியறிந்த ஒரு ரகசியத்தை நாம் உணராவிட்டாலும், ஒரு இளைஞனைப் பார்க்கும்போது மரணம் நினைவில் வருவதில்லை. ஆகவே மேகலாவுக்கு நினைத்து, நினைத்து அஞ்சும் வாழ்வு வேண்டாம் என்று துணிந்தேன்… உண்மையில் செயலின் கொடூரத்தைவிட, எண்ணத்தின் கொடூரம்தான் மிகப் பெரியது……”

“நீ மிகவும் பரிதாபமானவள்தான் ராஜி. இருபத்தி மூன்று வயதில் பெண்கள் திருமணமே ஆகாமல் எதிர்காலக் கனவுகளில் மூழ்கிக் கிடக்கும்போது, நீ அதே வயதில், எனக்கு முன் போய்விடவேண்டும் என்று நோன்பு நோற்கிறாய்… அப்படியானால் அந்த அச்சம் குரூரமானதுதான் ராஜி… ஆனால் நீ கொண்ட அச்சம் என்னை இழந்துவிடும் ஓலத்திற்குச் சமமானதுதான் ராஜி.”

“இப்படி… இப்படித்தானே பேசவேண்டாம்மென்கிறேன். நான் இதைக் காட்டிக்கொண்டதற்கு என்னை நீங்கள் தயவு செய்து வதைக்காதீர்கள்!” அவள் உதட்டைக் கடித்தாள்.

“ராஜி!” நான் கனிவாக அழைத்தேன்.  “நீ மிகவும் உயர்ந்தவள்! வாழ்வின் அசாதாரண ஆசைகளை ஏற்கக் கிடைக்காமல் அதைத் துறக்கும் துணிவு படைத்துவிட்டவள் நீ. இந்த அச்சத்தைத் தவிர மனத்தின் பலவீனமான எந்த ஆசைகளையும் மடி மறைத்து ஏங்கிவிடவில்லை என்று உணரும்போது… எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கிறது ராஜி…” கையிலிருந்த டம்ளரைக் கீழே வைத்தேன் நான்.

ராஜி ஈரத்தில் கையை நனைத்து என் வாயைத் துடைத்தாள். அவள் கைத்தாங்கலினால் படுக்கையில் வந்து உட்கார்ந்தேன்.

“உடனே படுத்துவிடாதீர்கள், மேகலா காத்திருக்கிறாள். நான் சாப்பிடப் போகிறேன்.”

“ராஜி! இதோ பாரேன். உனக்காக இந்த உடம்பை இனி எத்தனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் தெரியுமா?”

ராஜி நிமிர்ந்து நோக்கினாள். அதில் கீழ்மையான சபலங்கள் இல்லை; ஆழ்ந்த பாசம் சுரந்திருந்தது. அதில் தெய்வீக மணம் கமழ்ந்தது.

– நன்றி: ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *