கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 945 
 

பொன்னம்மா, “அப்போ நான் கிளம்பட்டுமாம்மா..?” என்றார் ஈரக்கையை கொசவத்தில் துடைத்தபடி.

“டிபன் ரெடி பண்ணிட்டாயா…?”

“பண்ணி அந்த ஆட்பெட்டியில் (ஹாட்பேக்) வச்சிருக்கேன். பார்த்திரங்கள் கழுவிட்டேன். வீடு பெருக்கியாச்சு.”

“பூச்செடிகளுக்குத் தண்ணீர்.“ கனகாம்பாள் விடாப்பிடி விடித்தாள்.

“ஊத்திட்டேம்மா.”

கனகம், கடிகாரத்தை எட்டி பார்த்து “மணி ஏழுதானே ஆகறது.. ஐயா வந்ததும் காபி போட்டு கொடுத்துட்டுப் போகக்கூடாதா?”

“இருட்டி போக்சும்மா. குடிசைல எம்மவன் தனியா இருப்பான்.”

“தினம் தினம் அவனை சொல்லிதான் ஓடிப்போகிறாய்! வீட்டுல எல்லோரும் சாப்பிட்டு முடிச்சதும் பத்து பாத்திரமெல்லாம் குமிஞ்சு போறது!“

“பரவாயில்லைம்மா. நாளை காலைல வந்து கழுகி வச்சுக்கிறேன்!”

“நான் அதுக்காக சொல்லலே பொன்னம்மா. இங்கே வசதியில்லையா? இல்லை டமில்லையா? எதுக்காக நீ குப்பத்துல போய் தங்கணும்? பேசாம இங்கே அவுட்ஹவுஸிலேயே தங்கிகிட்டால் அலைச்சலும் மிச்சம் உனக்கு பாதுகாப்பவும் இருக்குமில்லே…?”

பொன்னம்மா அதற்குப் பதில் சொல்லாமல் கிளம்பினாள்.

எட்டி நடை போட்டு வியர்க்க விறுவிறுத்து குடிசைக்கு வந்த போது ல்ட் கம்பத்தின் கீழ் முத்து அமர்ந்திருபபது தெரிந்தது. மடியில் ஸ்கூல் புத்தகம் விரிந்துவிடக்க, வாய் பிளந்தபடி அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றிலும் கொசுக்கள் வளையமிட்டிருந்தன. ஈசல்கள் லைட்டை தாக்கி தோற்றுப் போய் தரையில் மொய்த்திருந்தன.

“எலே முத்து.”

அவன் திடுக்கிட்டு விழிததான். வாயிலிருநது ஒழுகின எச்சிலை துடைத்துக் கொண்டு சோர்வுடன் எழுந்தான்.

“தூக்கம் வந்தால் உள்ளே போகலாமில்லே.”

“டீச்சர் நிறைய வீட்டு பாடம் கொடுத்திருக்காங்கம்மா” என்று தாயின் பின்னாலேயே நடந்தான். “எனக்கு திங்கறதுக்கு என்ன கொண்டு வந்தாய்..?” என்றான் ஆவலுடன். அவன் சரியான தீனிப் பிரியன்.

“திங்கறதுக்கு தினம் படைப்பாங்களா…? முதலாளி வீட்டுல இன்னைக்கு ஒண்ணும் செய்யலே.”

“பட்டானியாவது வாங்கி வந்திருக்கலாமில்லே…? எனக்கு பசிக்கிது”

“இதோ இப்போகஞ்சி வச்சுடறேன்” என்று அடுப்பை மூட்டினாள்.

“படிச்சுட்டுரு. இதோ ஆச்சு!”

குடிசையின் மேல் பாகம் கரிபிடித்திருந்தது. வெளியே மழைச் சாரல் ஒழுகிற்று அவனது புத்தகத்தின் மேல் சொட்டிற்று.

“நாம எப்போம்மா மாளிகைக்குப் போவோம்…?”

“மாளிகையா…?” கனகம் சிரித்து சமாளித்து “நீ படிச்சு வேலைக்குப் போனதும்“ என்றாள்.

“அதுவரை இருட்டிலேயே படிக்கணுமா…? இந்த பல்பு பீஸாகி எத்தனை நாளாச்சு…!”

“கவர்மெண்ட்டுல கரண்ட்தான் இலவசமா தராங்க. பல்பு தரலியேப்பா!”

சாப்பிடும் போது முத்து “நமக்கு விமோசனமே கிடையாதாம்மா…?”

“குளிருது. ஒழுகுது. கொசு கடிச்சு புடுங்குது.”

“சாப்பிட்டு பேசாம தூங்குடா!”

அவனை அதட்டி படுக்க வைத்தாளே தவிர அவளக்குத் தூக்கம் வரவில்லை. செத்துப் போன புருஷன் மேல் கோபம் கோபமாய் வந்தது. ஒரு குடிகாரனுக்கு வாக்கப்பட்டிருக்கக் கூடாது. அப்படியே வாக்கப்பட்டிருந்தாலும் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது. அவனுக்கென்ன சீக்கிரம் நிம்மதியாய்ப் போய் சேர்ந்துவிட்டான்.

‘கஷ்டமோ நஷ்டமோ நாம் மட்டும் என்றால் அனுபவித்துக கொள்ளலாம். இவனுக்கு வருத்தம் தெரிகிறதா…? மாளிகை வேண்டுமாம். மாளிகை! அப்போது அவளுக்கு மூளையில் ஒரு பளிச். எஜமானியம்மா சொன்னாங்களே அவுட்ஹவுஸில் தங்கிக் கொண்டால் இத்தனை தூரம் வந்துப் போக வேண்டியதில்லை அங்கே லைட் இருக்கிறது. காத்தாடி இருக்கிறது. ஒழுகாது கொசுக் கிட்டே வராது.

மறுநாள்.

வீடு துடைக்கும் போது கனகம், “என்ன முடிவு பண்ணினாய்..?” என்றாள்.

“எதுக்கும்மா….?”

“அவுட்ஹவுஸிற்குதான். ஐயாகூட சஜஸ்ட் பண்ணினார். என்ன சொல்கிறாய்…”

“உங்க இஷ்டம்மா.”

அடுத்த வாரத்திலேயே அவர்கள் அவுட்ஹவுஸிற்கு மாறினர்கள். முத்துவிற்கு சந்தோஷம் பிடிபடிவில்லை. லைட்டைப் போட்டுப் போட்டு நிறுத்திப் பார்த்தான். ஃபேனை இம்சை பண்ணினான்.

“அய்..! பளிங்குத் தரை!” என்று கால்களால் வழுக்கினான். “அய்… ஷவரு! அய்… டேபிள்! சோபா! அய்…. சுவத்துல கண்ணாடி!

பொன்னம்மாவிற்கும் பெருமிதம் பிடிபடவில்லை. “எஜமானர் நல்லவர். அவருக்குதான் எத்தனை பரந்த மனசு! இல்லாவிட்டால் இப்படி ஒரு பளிங்கு வீட்டை நமக்கு ஓசியில் விடுவார்களா?”

“ஏய்… முத்து! லைட் லைட்டுன்னாயே இனி ஒழுங்காய் படிக்கணும் என்ன…“

“சரிம்மா…” என்றானே ஓழிய அவனால் படிக்க முடியவில்லை. சொகுசு வந்ததும் கவனம் பிசகிற்று. மனது பூக்களின் மேல் போயிற்று. உல்லாசத்தில் பறந்தது.

முதலாளியின் மகன்கள் பேட்மிட்டன விளையாட, அவர்கள் பின்னால் ஒடிற்று. புத்தகத்தைப் போட்டுவிட்டு வெளியே வந்தான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும அடிபடும் பந்தை ஆவமுடன் பார்த்தான்.

பந்து கோபித்துக் கொண்டு காம்பவுண்டின் கண்ணாடிச் சிதறலில் குத்திக் கொண்டு நிற்க, அவர்கள் குதித்துக் குதித்துப் பார்த்தார்கள். பந்து எட்டவில்லை. பிறகு இவன் பக்கம் ஏக்கத்துடன் திரும்பினர். முத்துவிற்கு கைகள் பரபரத்தன. என்னால் எடுக்க முடியும் நான் எடுத்து தரட்டா…? நான்?”

அவன் கேட்கவில்லை மெல்ல நகர்ந்தான். காம்பவுண்டின் உயரத்தைக் கண்களால் அளந்து பார்த்தான். எட்டாது. ‘நிச்சயமாய் ஏறவும் முடியாது. என்ன செய்யலாம்…? எப்படியாவது இவர்களுக்கு உதவ வேண்டும.’

‘நாம் ஒரு உதவி பண்ணினால் பதிலுக்கு தின்பத்திற்கு ஏதாவது தருவார்கள். காசு தருவார்கள். கடலை மிட்டாய் வாங்கி திண்ணலாம். ‘சட்டென மூளையில் ஒரு யோசனை உதித்தது.

இரும்பு கேட்டிடம் ஓடினான். அதன் மேல் ஏறி அப்படியே காம்பவுண்டிற்க தாவி வித்தைக்காரன் கம்பியின் மேல் நடப்பது போல நடந்து பந்தை எடுத்து போட்ட போது அவர்கள் நன்றியுடன் பார்த்தனர்.

“தாங்க்ஸ்டா.”

அந்தக் பெருமிதப்பில் திரும்பின போது பாதத்தில் கண்ணடிகுத்தி ரத்தம் ஒழுகிற்று. நமநமத்தது. அதை மறைக்க முயன்றும் முடியவில்லை. காயம் வெளியே தெரியக்கூடாது! வீரசெயலுக்கு அது ஒரு இழுக்கு.

ஆனாலும் கூட அவர்கள் பார்த்து விட்டனர்.

“அச்சச்சோ ரத்தம். கண்ணாடி குத்திருச்சா…?”

“இல்லை… “

“பொய் சொல்லாதே. வா மருந்து போட்டு விடறோம்” என்று வீட்டிற்குள் அழைத்துப் போயினர். “அம்மா! இவன் கால்ல கண்ணாடி வெட்டிருச்சு!”

முத்து தயங்கித் தயங்கி நிற்க, கனகம் அவனை அருவருப்பாய் பார்த்து மருந்து எடுத்துக் கொடுத்தான். ஹாலில் டைனிங்டேபிளும் அதன் மேலிருந்த பழவகைகளும் பதார்த்தங்களம் அவனை ஈர்த்தன. நாக்கு சுரந்தது.

கட்டுப்போட்டதும் மூத்தவனான அருண், “இந்த பிரட் ஜாம்!” என்று நீட்டினான். “சாப்பிடு. ”

அந்தச் சமயம் பொன்னம்மாள் கிட்டசனிலிருந்து முறைக்க “எனக்கு வேண்டாம்” என்றான் பயத்துடன்.

“சும்மா வாங்கிக்க” என்று அவனது கையில் திணித்து வெளியே அழைத்து வந்தனர். “சீக்கிரம் சாப்பிடு விளையாடலாம்!”

அன்று மட்டுமில்லை தினமும் அவனுக்கு சந்தோஷமாடியருந்தது ஜாலியாகவும். அவர்களுடன் சேர்ந்து கொண்டு சைக்கிள் விடுவான். கண்ணாமூச்சி,

உள்ளே போய் டி.வி. பார்ப்பான். அவர்களின் டிரஸ்களின் பார்த்து வியப்பான். உனக்கு இத்தனை சட்டைகளா…? இத்தனை செருப்புகளா..? இத்தனை விளையாட்டுப பொருட்களா?

அந்த வியப்பு பிரமிப்பாயிற்று. பிரமிப்பு பெருமூச்சில் வந்து நின்றது. பெருமூச்சு படிப்பைத் தடை பண்ணிற்று. புத்தகத்தை வைத்துக கொண்டு சுவற்றையே வெறித்துக கொண்டிருப்பான். சதா யோசனை.

எனக்கும் மட்டும் ஏன் இந்த நிலமை? நானும் ஏன் பணக்காரனாய் பிறந்திருக்கக் கூடாது? அவர்கள் விதம் விதமாய் சாப்பிடுகிறார்கள். ஐஸ்க்ரீமாய் சுவைக்கிறார்கள். காரில் சினிமாவிற்கப் போகிறார்கள். அவர்கள் வீட்டு நாய்க்கு கூட பிஸ்கெட்! கோழிக்கறி! ஆனால் நமக்கு…? தினம் கஞ்சி. நாம் என்ன குற்றம் செய்தோம்?

அந்த நினைப்பு படிப்பை கெடுத்தது, சஞ்சலத்தை உண்டு பண்ணிற்று. அவற்றை போக்கிக் கொள்ள வேண்டி அல்லது ஆசையை அடக்கிக் கொள்ள முடியாமல் அவர்களிடம் நெருங்கி நெருங்கிப் போவான். அவர்களும்-

அவனைக் கண்டதும் பரிதாபபட்டு எச்சில் சாக்லெட் தருவார்கள். கேக்! பாடித கப் ஐஸ்! எல்லாம் தந்துவிட்டு அவன் மேல் குதிரை ஏறுவார்கள். அவனுக்கு வால் வைத்து விளையாடுவார்கள். அவனுக்கு மீசை வரைந்து நகைப்பார்கள்.

எல்லாவற்றையும் அவன் ஏற்றுக்கொள்வான். திண்பண்டம் கிடைக்கிறதே!

பொன்னம்மாள் அவனது போக்கை கவனிக்கவே செய்தாள். ஆனாலும் கூட கண்டிக்க முடியலில்லை. அதற்கு நேரமில்லை. முன்பு தள்ளியிருந்த போதாவது மகனுடன் பனிரண்டு மணிநேரம் கழிக்க முடிந்தது.

ஆனால் இப்போதோ ராத்திரியில் கூட வேலை ஒழிவேயில்லை ‘பக்கத்தில் தானே இருக்கிறாய், இதை செய்துட்டு போ, அதை செய்துவிட்டு போ’ என்று ஒன்று மாற்றி ஒன்றாய் வேண்டாத வேலைகளையெல்லாம் தலையில் விழும், ஓய்வில்லை, மறுக்கவும் முடிவதில்லை.

எப்படி முடியும்? அவுட் ஹவுஸை கொடுததிருக்கிறார்களே!

ஒரு சமயம் பரீட்சை மார்க்குகளைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. முன்பெல்லாம் தட்டுத்தடுமாறி பாஸ் மார்க் வாங்கிக் கொண்டிருந்தது முத்து இப்போது எல்லாவற்றிலும் பெயில்.

பொன்னம்மாவிற்கு கோபத்தை அடக்க முடியவில்லை. அவனை போட்டு நொறுக்கித் தள்ளிவிட்டாள், “ஏண்டா? ஏண்டா பெயில்? ‘லைட் வேணும் ஃபேன் வேணும்னாயே! மாளிகை வேண்டும் என்று அழுதாயே! ஏன் அப்புறம் ஏன் பெயில்?”

அவன் பதில் பேசவில்லை. அழுதுகொண்டே படுத்துவிட்டான் அரைமணி நேரத்தில் அவளது கோபம் அடங்கிற்று.

பாவம்! தகப்பனில்லாத பையனை இப்படி அடிக்கலாமா? சுகம் வந்ததும் விளையாட்டு நினைப்பில் இருந்திருப்பான்.

போகப் போகச் சரியாகி விடுவான்.

அவன் சயிகவில்லை. “முத்து உன்க்கு என்னடா ஆச்சு?”

“என்னால் படிக்க முடியலேம்மா.”

“அது தான் ஏன்?”

“நான் மட்டும் என்ன பாவம் பண்ணினேன். முதலாளி மகன்கள் உல்லாசமா இருக்காங்க. வாய்க்கு ருசீயா சாப்பிடறாங்க. போர்ன்விட்டா! ஹார்லிக்ஸ்! ஆப்பிள்! மாங்காய் ஜூஸ்! எனக்கு மட்டும ஏம்மா கஞ்சி! அவங்களை ஸ்கூலுக்கு கொண்டுப் போக வேண் வருது. நான் மட்டும ஏம்மா நடக்கணும்? அவங்களுக்கு புதுசு புதுசா டிரஸ். எனக்கு மட்டும் ஏம்மா கிழிஞ்ச சட்டை? நான் என்ன குத்தம் பண்ணினேன்? சொல்லும்மா சொல்லு.“

“குத்தம் நீ பண்ணலேடா. நான் நான்தான்! உனக்கு வசதியாயிருக்கட்டுமேன்னு இங்கே வரசம்மதிச்சேன் பார். அதுதான் குத்தம்!”

மறுநாளே அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். தன் மூட்டை முடிச்சுக்களை கட்டி, அவுட்ஹவுஸை பூட்டி “இந்தாங்கம்மா சாவி” என்று கனகத்திடம் நீட்டினாள். “நாங்கள் எங்களோட குடிசைக்கேப் போறோம்”.

“ஏன் உனக்கு இங்கே என்ன குறை வைத்தோம்? எதுக்காக நீ போகணும்?”

“குறை உங்ககிட்டையில்லேம்மா. எங்கிட்டதான். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படகூடாது. யாருக்கு என்னென்ன விதிச்சிருக்கோ அதுதான் நிலைக்கும். அதுதான் ஓட்டும. அவங்கவங்க இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாதான் நிம்மதியும் கிடைக்கும். சுகமும் நிலைக்கும். நாங்க வரோம். ” சொல்லிவிட்டு –

பொன்னம்மாள் முத்துவை இழுத்துக கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *