தோழருக்குத் தெரியாதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,801 
 

(1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நூலினாற் கட்டப்பட்டிருந்த தன் கண்ணாடியைச் சாவதானமாக மாட்டிக்கொண்டு, பஞ்சாங்கத்தைத் துருவி ஆராய்த்து, ஆவணி மாதததுப் புள்ளியிடப்படாத கடைசிச் சுபதினத்தை விசுவலிங்கச் சாத்திரியார் யார் யாருக்கோ சொல்லி விட்டார்.

கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகக் கலந்து வாழும் நாட்டிலே ‘கல்யாணங்கள் சொர்க்கத்திற் தீர்மானிக்கப் படுகின்றன’ என்ற வாக் கியத்திற்கு ஏதாவது அர்த்தமிருக்கலாம். ஆனால் வயதான பெண்ணைக் கிடுகு வேலிக்குட் சிறைவைத்து இருக்கும் இந்த நாட்டிலே சமூக பொருளாதாரக் காரணங்கள் பொருந்தாக் கல்யாணங்களைத் தீர்மானித் தாலும், அவைகளும் சொர்க்கத்தில் தீர்மானிக்கப் பட்டன என்று பம்மாத்துப் பண்ண எவருமே தயங்குவது இல்லை. விசுவலிங்கச் சாத்திரியார் சொர்க்கத்திற் தீர் மானிக்கப்படும் கல்யாணங்களுக்கு நாள் குறிப்பவர்!

அவர் சொல்லி விட்டார். ‘ஆவணி மாதம் இருபத் தோராந்திகதி புதன்கிழமை இரவு பத்து இருபத்தேழிற் கும் பதினொன்று ஐம்பத்தி மூன்றுக்கும் இடைப்பட்ட சுப முகூர்த்தந்தான் ஆவணி மாதத்திலுள்ள ‘புள்ளி யில்லாத’ கடைசிக் கல்யாண நாள்’ என்று யாருக்கோ சொன்ன இந்தச் சேதி பொன்னம்மாவின் காதுகளிலும் பட்டது.

கொட்டியாரக் குடாக் கடல், கட்டுக்காவலை மீறி ஓட முயன்றும், குடும்பப் பிணைப்பை விட்டுப் பிரிய மன மில்லாத முத்தற் குமரியைப்போல உள்வாங்கி ஊரைக் கிழக்கு மேற்காக இரண்டாக்கிக்கொண்டு செல்லும் ஓடைக்கரையிலே, தளராவளர் தெங்குகள் ஓலைக் குடை, கவித்த குளுமையான நிழலிலே, கிடுகு பின்னிக் கொண்டி ருந்த பொன்னம்மா திடலே இருக்கும் தங்கள் குடிசைக் குப் பின்னால் இராசவள்ளி பயிரிடுவதற்காக நிலத்தைக் கொத்திக் களைத்து வந்த தன் கணவனிடம் சொன்னாள்.

இருவத்தேழாந்தேதி ஊரில நாலு கலியாணம் நடக்குதாம் கூட்டுறவுச் சங்க மனேஜரின் மகளின்ர கல்யாணத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து மேளம் வருகுதாம்.”

பொன்னம்மாவின் பேச்சிலே தேங்கி நின்ற ஆதங் கத்தை உணராமலிருக்கச் சிவசம்பர் மரக்கட்டையல்ல. தன் வீட்டினுள்ளே அவர் மூத்த மகள் இருப்பது இதுவரை பாரமாக இல்லைதான். ஆனால் வைகாசிக்குப் பிறகு அவள் இரும்புக் குண்டாகத்தான் மனத்திற் கனத்து நிற் கிறாள்! ஆயினும் அதனை வெளிக்காட்டாமல்,

“நாமளும் மேளம் பிடிப்பமே” என்று சொல்லித் தமது ஹாஸ்யத்தைத் தாமே இரசித்துச் சிரிக்க முயன்றார்.

“எனக்கென்ன நீங்களாச்சு உங்கள் மகளாச்சு. ஒண் – ணுக்கும் அடங்காத தறுதலையாக இளைய மகனை வளத்திருக்கீங்களே… அவன் எல்லாத்தையும் குழப்பியடிச்சுப் போடுவான்” என்று அலுத்துக் கொண்ட பொன்னம்மா பின்னிய கிடுகிற்குத் ‘தலைக்கட்டை’ அவசர அவசர மாகக் கட்டி முடித்து விட்டு முன்னால் இருந்த குவியலிற் தூக்கி எறிந்தாள். அப்படியும் அவள் கோபம் தணியவில்லைப் போலும்! கத்தியை எடுத்துக்கொண்டு ஓடைக்குச் சென்று நீரில் ஊறிக்கிடக்கும் மட்டைகளை எடுத்துப் பிளக்கத் தொடங்கினாள்.

தென்னையின் சல்லி வேர்களிற் தலை சாய்த்து, ஓடைக் கரைச் சரிவில் கால் நீட்டி ‘ தளராவளர் தெங்கு’ கள் கவித்த ஓலைக்குடை நிழலிலே உடலைச் சாய்த்த சிவசம்பர் ஓடையிலிருந்து வீசிய சீதளக் காற்றால் தாலாட்டப்பட நித்திரையாகி விட்டார்.

எந்த விசாரமுமின்றி அவர் பள்ளி கொண்டதைப் பார்க்கப் பொன்னம்மாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

ஆமாம். சிவசம்பர் வாழ்க்கையை ஒரு சுமையாகக் கருதியவரல்ல. வாழ்க்கை ஒரு போராட்டம் என்று கற் பித்துக்கொள்ள, அவர் அரசியல் சித்தாந்தங்களையோ, பத தத்துவங்களையோ படித்தவருமல்ல. ஐம்பது வயதைத் தாண்டிய அவர் உடலிலே இன்றைக்கும் வலு விருந்தது. அவருக்கென்று சீதனமாக வந்த வயல் வாய்க் கால இல்லாவிட்டாலும், இரு போகங்களிலும் அருவி வெட்டும் சூடுமிதிப்பும் நடைபெறுகையில், ஒருமாசக் கட்டத்திற்கு இராப்பகலாக உடம்பை முறித்து அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான சாப்பாட்டு நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விடுவார். ஓடைக்கரையிலே அவர் நட்டுவளர்த்த தென்னம்பிள்ளை கள் குலைகளைச் சுமந்து நிற்கின்றன. வீட்டுத் தோட்டத்தில் கத்தரியும் வெண்டியும் காய்க்கின்றன. தென்னை மரத்திலே சார்த்தியிருக்கும் மூங்கிலிற் கட்டப்பட்டிருக் கும் வலையை எடுத்து ‘வற்றுக்கணிய’ம் பார்த்து இரண்டு மணலையாவது வீசினால் வலையில்படும். அது வும் இல்லை என்றால் இருட்டியதும் தென்னோலைகளைச் சேர்த்துச் சூள் கட்டிக்கொண்டு ஓடைக்கரையோர மாக நடந்தால் இரண்டு நண்டுகளாவது பிடிக்கலாம்!

இதற்கும் மேலுள்ள தேவைகளைச் சிவசம்பர் சிந்திப்பதேயில்லை. அதற்கும் மேல் ஏதும் தேவை இருப் பின் பொன்னம்மா அவைகளைக் கவனித்துக் கொள் கிறாள். அவள் கிடுகு பின்னுகிறாள்! கோழி வளர்க்கிறாள்.

ஆனால் இந்த அமைதியான வாழ்வைக் கலைத்துக் கொண்டு பூதாகாரமாக எழுந்து நிற்கிறது மகளின் கல்யாணம்!

வைகாசி மாதம்வரை அதுகூட ஒரு பிரச்னையாக இருக்கவில்லை! பெண் சகோதரங்களின்றிப் பிறந்த சிவசம்பருக்கு. அக்குறையே தெரியாமல் நிம்மதியளித்த அவரின் ஒன்றுவிட்ட அக்காவிடம் ஒரு சொல்லு சொல்லி விட்டு “வா தம்பி’ என்று கூப்பிட்டால், அவள் மகன் வளர்த்த பசு வருவதைப்போலத் தன் பின்னால் வந்து, மகளின் கழுத்திலே தாலியைக் கட்டிவிடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு-ஏன் பொன்னம்மாவிற்குக்கூட இருந்தது. ஆனால் இப்போது…?

நேற்றுச் சிவசம்பரோடு அவர் மகன் வேலாயுதமும் சேனைக்காடு வெட்டப் போயிருந்தான். பத்தாம்வகுப்புப் படிக்கும் அவனுக்குப் பாடசாலை விடுமுறை. அவனிடம் சிவசம்பர் கேட்டார்.

“ஏண்டா. நீ அத்தானோட சண்டை பிடிச் சியாமே.”

“நானில்லப்பா. அவர்தான் என்னோட வீணாத் தனகினார். நான் சிங்களக் கட்சில சேர்ந்து சோனகனுக்கு எலெக்ஷன் வேல செஞ்சேனாம்.”

“அவர் அப்படிச் சொன்னா நமக்கென்னடா? அக்காவக் கட்டப்போற அத்தான் என்று கேட்டிற்றுப் போறதானே”

“ஏன் அவர் அப்படிச் சொல்ல வேணும்? இப்படி வகுப்பு வாதம் பேசிப் பேசி இந்த நாடே குட்டிச் சுவராப் போகுது. நம்ம தொகுதியில இருக்கிற இனத் துவேஷத் தையும் மொழி வெறியையும் மீறிக்கொண்டு கந்தளாய்ச் சீனித் தொழிற்சாலையில வேல செய்ற சிறிசேனாவும், கிண்ணியா வயற்காட்டில நெஞ்சு முறியிற அப்துல்லா வும், மூதுர் வத்தையில மூட்ட சுமக்கிற செபமாலையும் ஒன்று சேர்ந்த அணியிலதான் நானும் சேர்ந்திருக்கிறன் என்று எண்ணாம, முட்டாள்த்தனமாக அத்தான் பேசிறத நான் கேக்கணுமா அப்பா?” என்று மிகவும் ஆத்திரத்தோடு கேட்டான் வேலாயுதம். இந்த ரீதியில் அவன் பேசத் தொடங்கி விட்டால் அவனோடு வாதம் பண்ணித் தப்பிக்க முடியாதென்பது சிவசம்பருக்குத் தெரியும். மேலும் அவன் பேசுவதை அவரால் விளங்கிக் கொள்ளவும் முடியாது. அவரைப் பொறுத்த அளவில் ‘ஊரோடினா ஒத்தோடு; ஒருவன் ஓடினாக் கேட்டோடு’ என்ற பழமொழியை நம்பிக் கொண்டு ஊரவரெல்லாரையும் போலத் ‘தமிழ்க் கட்சிக்கு’ வாக்களிப்பதுதான் அவரது அரசியல்! வடக்கே குருக்கள் கங்கைக்கும் தெற்கே வெருகல் கங்கைக்கும் அப்பால் நாடு பந்ந்து விரிந்து கிடக்கிறது என அவர் எண்ணிப் பார்த்ததும் கிடையாது. ஊரிலே ஒருவனாக ஓடிக்கொண்டிருப்பவன் தனது மகனாகவே இருந்தாலும் அவனோடு சேர்ந்து தானும் ஓட வேண்டுமா? என்பதை அவர் யாரிடமும் கேட்கவில்லை. இப்போதும் கேட்க விரும்பாத அவர் “அத்தான் என்னத்தையும் சொல் லட்டும். அவரோட ஏறுக்கு மாறாகக் கதைச்சி அக்காட கல்யாணத்தைக் குழப்பீராத” என்று , கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

கல்யாணத்தை இந்த மாசத்திலேயே நடத்திவிட வேண்டும் என அவர் மனம் முடிவு கட்டிக் கொண்டது.

மேற்கே ஓடைக்கரையில் அணிவகுத்து நிற்கும் கண்டல் மரங்களின் பின்னால் சாய்ந்து கொண்டிருந்த சூரியனின் மஞ்சட் கிரணங்கள் முகத்திற்பட்ட போது சிவசம்பர் விழித்துக்கொண்டார். மருமகனுக்கும் மகனுக் கும் வாக்குவாதம் முற்றி மனத்தாங்கல் ஏற்படும்முன் கல்யாணத்தை நடத்தவேண்டும் என மீண்டும் மனத்துள் எண்ணுகையில்….. – வீட்டு மூலைக்குள்ளே ஐந்து சாக்கு நெல் இருக்கிறது. அதில் இரண்டு சாக்கு நெல்லச் சேனைக்காட்டிலே கொத்த வேண்டும். மீதி மூணு சாக்கு நெல்லும் மாவிற்கும் அரிசிக்கும் போதுந்தான்.

ஆனாற் கல்யாணம் என்றால் அவை மட்டுந்தானா? ஆகக் குறைந்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புதிய உடுப்புக்கள் வாங்க வேண்டும். சில்லறைச் செலவுகள் வேறு உள்ளன.

யோசித்த சிவசம்பர் பெருமூச்சு விட்டார். அந்த மூச்சோடு கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவிய பின்னர் வீட்டு இறப்பிலே தொங்கிய மழமழவென்ற இள நீர்ச் சிரட்டையில் இருந்த வெருகலான் திருநீற்றை விரல் களால் எடுத்துச் ‘ ‘சிவசிவா’ என்ற ‘ உ.சசரிப்போடு நெற்றியிற் பூசிக்கொண்டு வெளியில் நடந்தார், பணம் பற்றிய விசாரம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. கால்கள் வழமைபோல் அக்காவின் வீட்டை நோக்கியே நடந்தன.

அக்கா கொடுத்த கோப்பியைக் குடித்துக் கொண்டே நேரடி நடவடிக்கை’யில் இறங்கினார் சிவசம்பர்.

“இருபத்தேழாந்தேதி நாளிருக்கு அக்கா”

“எனக்கென்னடா. இப்ப எண்டான கூட்டிற்றுப் போவன்”

“அப்ப நீயே தம்பீற்றச் சொல்லிரு. நான் எல்லா அடுக்கும் பண்ண வேணும். நேரமில்ல இருக்க. வாறன் அக்கா”

குறுகியதும் நிறைவானதுமான அச்சந்திப்பு முடிந் ததும் சிவசம்பர் நேராகக் கூட்டுறவுச்சங்க மனே ஜரிடம் போனார் திரும்புகையில் அவர் மடியில் இருநூறு ரூபா இருந்தது!

அவர் வளவுக்குட் காலடி எடுத்து வைக்கையில் எங்கட அரசாங்கம் செப்டம்பர் மாசம் இருபத்தாறாந் திகதி கூப்பனுக்கு இரண்டு கொத்து அரிசி குடுக்கப் போகுது. அன்றைக்கு மூதூரில எங்க அணியைச் சேர்ந்த தேபழர்கள் ஊர்வலமாகச் சென்று அரிசி வாங்கத் தீர்மானிச்சிருக்காங்க. இங்க ஊர்வலம் நடத்த ஏலாட்டியும் சங்கக்கடைக்கு முன்னால ஒரு கட்டுச் சீனவெடியாவது கொளுத்திக் கொண்டாட வேண்டும்” என்று உற்சாகத்துடன் தன் அக்காவிற்குச் சொல்லிக் கொண்டிருந்தான் வேலாயுதம். ஆனாற் தந்தையாரின் முகக் கடுப்பைக் கண்டதும் அடங்கிக் கொண்டான்.

அடுத்த நாட் காலை பொன்னம்மா ஒரு சாக்கு நெல்லைப் புழுக்குவித்தாள். அன்று சாயந்திரம் முற்றத்து வேப்பமர நிழலில் உறவுப் பெண்கள் நெல் குற்றினார்கள்!

மா இடித்தார்கள்! இரவிலே காய்ந்த எண்ணெய்ச்சட்டியின் சிலுசிலுப்பு கேட்டது!

ஒருவாரத்தின் பின் விசுவலிங்கச் சாத்திரியார் சொன்ன சுபயோக சுபதினத்தில், முணுக்கென்றெரியும் குத்துவிளக்கின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் மடைக்கு முன்னால் பூதாக்கலத்திற் சோறு போட்டாயிற்று! திருமணம் நடந்தேவிட்டது!

அந்த வைபவத்தின் பின்னர் பஞ்சப்பாட்டு பாடிய தன் சம்பந்தர், இருபத்து நாலு ரூபா கொடுத்து வாங்கிய இரண்டு சீல் போத்தலை எட்டுப் பத்துப் பேர் ‘நக்கியதாற்’ திருப்தியடையாதவராய், மூதூரிலே இருந்த சாராயத் தவறணையை மூடக்காரணமாக இருந்த ‘சன்மார்க்கர்களை’ மனமாரத் திட்டிக்கொண்டே ஓடைக்கரைப் பக்கமாக ‘வடிசாராயத்து’க்குச் சென்றார். பின்னர் அவர் சாப்பிடவே வரவில்லை. கலாட்டா இல்லாமற் கல்யாணமா?

ஒரு வாரம் கழிந்து விட்டது. சிவசம்பரின் வீட்டிலே இனிக் கூப்பன் எடுத்தாற்தான் அரிசி என்ற நிலை. இரண்டு சாக்கு நெல் குத்திய அறுபது கொத்து அரிசி கல்யாண வீட்டில் எந்த மூலைக்கு? சில்லறைச்செலவுகளுக்காக விதை நெல்லுக்கு வைத்திருந்ததையும் விற்றாயிற்று.

புழுத்துப் போன கூப்பன் அரிசியையா புதுமணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆக்கிப் படைப்பது என்று பொன்னம்மா மனம் நோகிறாள்.

கூப்பனுக்கு இரண்டு கொத்து அரிசி கொடுக்க இருக்கும் சுபதினத்தைப் பட்டாஸ் வெடித்துக் கொண்டாடத் திட்டமிடுகிறார் தோழர் வேலாயுதம்!

தன் வீட்டிலுள்ள எல்லாருடைய கூப்பன்களையும் மனேஜரிடம் விற்றுத்தான், தன் மகளின் கல்யாணத்கை ஒப்பேற்றினார் என்ற விவகாரம் பாவம்-அத்தோழருக்கத் தெரியாது.

– தமிழமுது ’71

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *