சர்க்கரை கசக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 2,259 
 

வருடம் 2022 . மாதம் மார்ச். எனக்கு வயது 72.

பொதுவாக , சாயந்திர வேளைகளில் நான் கிட்டதட்ட மூணு – நாலு கிலோமீட்டர் அசால்டாக பூங்காவில் நடப்பது வழக்கம். ரொம்ப வேகமா நடக்க மாட்டேன் . மூச்சு வாங்கும் . ஓரளவு வேகமா நடப்பேன் . என் நண்பர் யாராவது அப்ப மொபைல்லே பேசினா கேப்பாங்க “ என்ன பாஸ், வாக்கிங் போறீங்களா?“. எனக்கு ஆச்சரியமா இருக்கும் “ஆமா! எப்படி கண்டு பிடிச்சீங்க?”. அவங்க சொல்வாங்க “மூச்சு வாங்குதே!”

வாரத்திலே ஒரு நாள், நாலு கிலோமீட்டர் நடந்தே கோவிலுக்கு போய், நடந்தே திரும்பி வருவேன். அதுக்கு அடுத்த நாள் ரெஸ்ட். இது தான் என் வழக்கம்.

ஆனால், கொஞ்ச நாளாவே எனக்கு மாலையில் நடக்கையில் ஒரு லேசான மயக்கம் . போதும் நடந்தது என்பது போல ஒரு தளர்ச்சி. இனம் புரியாத ஒரு சோர்வு.. பேசாமல் உட்கார்ந்து கொள்ளலாம் போல ஒரு அயர்ச்சி.

எனக்கு லேசான ரத்தக் கொதிப்பு உண்டு . மாத்திரை எடுத்து, அதனாலே கன்ட்ரோல் . ஆனால், இப்போ எதற்கும் ஒரு தடவை பார்த்துக் கொள்ளலாமே என்று அடுத்த நாள் , என் வீட்டிற்கு அருகில் ஒரு ரத்த பரிசோதனை நிலையம் சென்றேன் . ரத்த கொதிப்பு நார்மல். சரி, எதற்கும் இருக்கட்டுமே என்று ரத்த சர்க்கரை எவ்வளவு என பரிசோதனை செய்தேன் .

சாயந்தரம் வந்த முடிவு . எனது சர்க்கரை 530. ஆச்சரியப் பட்டு போனேன். இருவது வருடம் முன்பு எனக்கு உணவுக்கு பின் 170 இருந்தது . கொஞ்ச நாள் மாத்திரை எடுத்து நிறுத்தி விட்டேன் . அதற்கு பின் எப்போது எடுத்தாலும் காலை உணவுக்கு முன் 100- 115 , உணவிற்கு பின் 130-140 என்றே இருக்கும் .

530 எனக்கு பெரிய அதிர்ச்சி. அடுத்த நாள், பெரிய ரத்த பரிசோதனை நிலையத்தில் டெஸ்ட் கொடுத்தேன் . இன்னும் பெரிய அதிர்ச்சி . உணவிற்கு முன் 610 உணவிற்கு பின் 703 என்று காட்டியது . வீட்டில் பயந்து விட்டார்கள். வீட்டின் ஒரே சம்பாத்தியம் எனது பென்ஷன், சேவிங்க்ஸ் மட்டும் தான் . என் மனைவிக்கு வேறு உடல் நிலை சரியில்லை.

அடித்து பிடித்து என்னை பெரிய கார்பொரேட் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள். முதல் தடவையாக ஆஸ்பத்திரி. ஆம்புலன்ஸ் ஐந்து ஸ்டார் ஆஸ்பத்திரி . எல்லாம் நீட் அண்ட் கிளீன். ஆனால், எல்லாத்துக்கும் காசு!

காசேதான் கடவுளடா!

எல்லா டெஸ்டும் எடுத்தார்கள் . எக்ஸ்ரே, ஈசிஜி, எக்கோ, ஈஈஜி , பல் டெஸ்ட், கண் டெஸ்ட், ரத்த பரிசோதனை . ஒரு டெஸ்ட் விடலை ஆனால், ஒன்றும் பயப்படும் படியாக இருக்க வில்லை . இதயம் , கிட்னி, மூளை, பல்,எல்லாம் நல்ல படியே .

பெரிய டாக்டர்கள் தினமும் மூன்று தடவை வந்து பார்த்தார்கள் . ஊசி வழியே இன்சுலின் இறக்கி மூன்று நாளில் சரி செய்து விட்டார்கள். இப்போது ரத்த சர்க்கரை 240. ஆனால், என் ரத்த கொதிப்பு தான் அதிகமாகி விட்டது. பின்னே, ஆஸ்பத்திரி பில் மூணு நாளில், செலவு எழுபதாயிரம் தாண்டி விட்டது. இருக்காதா?

ஆஸ்பத்திரி எனக்கு பிடிக்க வில்லை. விட்டு விட்டு போனால் போதும் போல இருந்தது . கெஞ்சி கூத்தாடி , ஒரு வழியாக ஐந்தாம் நாள் விடுதலையானேன். போவதற்கு முன், பெரிய டாக்டர் சொன்னது.

“இனிமேல் உங்களுக்கு வாழ் நாள் முழுவதும் இன்சிலின் ஊசி தான். டெய்லி ரெண்டு தடவை . வேறு வழியே இல்லை” .

ஒரு நாளைக்கு இரண்டு தடவை இன்சுலின் ஊசி போட்டாக வேண்டும் . காசு பணத்திற்கு நான் எங்கே போவேன் ? எனது மனைவி உடம்பை கவனிப்பேனா? இல்லை என்னை கவனித்து கொள்வேனா ?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. வாழ்க்கை வெறுத்து விட்டது.

பத்து நாள் கழித்து மீண்டும் அந்த பெரிய மருத்துவ மனைக்கு போனேன். அவுட் பேஷன்ட். பீஸ் மட்டும் 1000. . டாக்டர் சொந்த கதை எல்லாம் பேசி விட்டு, ஏற்கெனவே கொடுத்த மருந்து சீட்டை காபி அடித்து கொடுத்தார் . இன்சுலின் ஊசி தான். வேறு மாற்றே இல்லை.

நான் ஏக்கமாக “டாக்டர், மாத்திரைக்கு மாற்றிக் கொள்ளலாமா ?“

டாக்டர் சிரித்துக் கொண்டே “ சான்சே இல்லை. இன்சுலின் மட்டும் தான் உங்களை காப்பாத்தும் “

நொந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்.


இருபது நாள் கழித்து . கிட்ட தட்ட 40 இன்சுலின் ஊசிக்கு பிறகு நடைப் பயிற்சி முடித்து திரும்புகையில், ஒரு போர்ட் பார்த்தேன் . டாக்டர் குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) , சர்க்கரை நோய் நிபுணர். இதுவரை இந்த போர்டை பார்க்கவே இல்லையே.

எது தேவையோ, அப்போது தான் அது கண்ணில் படும் போல.

நேரே உள்ளே நுழைந்தேன் . கூட்டம் கொஞ்சம் இருந்தது. எனது சர்க்கரை அளவை, கையில் ஒரு பொட்டு ரத்தம் எடுத்து உடனே கணக்கிட்டார்கள். 130.

டாக்டரை பார்த்தேன். எல்லாம் விசாரித்தார். “கவலை படாதிங்க. நான் சில மாத்திரை தரேன். சாப்பாட்டை குறைங்க இந்த மாத்திரையே உங்க பசியை குறைத்து விடும். கொஞ்சம் உணவு கட்டுப்பாடு, நடை பயிற்சி, போதும். கொஞ்சம் கொஞ்சமா இன்சுலின் ஊசி அளவை குறைச்சிடலாம். மாத்திரை மட்டுமே போதும். கவலைப்படாதீங்க. கவலைப் படறதை கொஞ்சம் குறைச்சிக்க முயற்சி செய்யுங்க. அது கூட, உங்க சுகருக்கு காரணமா இருக்கலாம் “

அவரது பேச்சு ஆறுதலாக இருந்தது .

பத்து நாள் கழித்து சக்கரை அளவு கிட்டதட்ட 80 க்கு வந்து விட்டது டாக்டர் “இனி இன்சுலின் வேண்டாம், மாத்திரையை போதும்” என்று மாத்திரை மட்டும் எழுதிக் கொடுத்தார். எனது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. சில அந்த கால சினிமா நடிகர்கள், தொப்பையை வைத்துக் கொண்டு குத்தாட்டம் போட்டால் எப்படி இருக்கும்? கிட்ட தட்ட வீட்டுக்கு வந்து, கண்ணாடி முன் அந்த மாதிரி ஒரு சின்ன டான்ஸ் போட்டேன் .

மூன்று மாதம் கழித்து, hba1c ( மூணு மாத ரத்த அளவு) எடுத்தேன். என்ன அதிசயம்?. எனக்கு சக்கரை நோய் இல்லை என ரிசல்ட் வந்தது . Hba1c 4.9. எனது சக்கரை அளவு 90/115 . டாக்டர் கிட்டே காட்டினேன்.

இப்போதும், மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, hba1c எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு வருஷமாக எனக்கு சக்கரை நோய் இல்லை என ரிசல்ட் வந்து கொண்டிருக்கிறது .

இன்சுலின் ஊசி ஒரு வருடமாக இல்லை. மாத்திரை மருந்தின் அளவும் மிகவும் குறைந்து விட்டது.

அப்போ, பெரிய மருத்துவ மனையின் கணிப்பு என்னானது? இந்த பெரிய டாக்டர்களை நம்புவதா? கூடாதா?

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ன அழகா சொல்லியிருக்கிறார் வள்ளுவர். ( குறள் 948) .

நோயாளியின் உடல் மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும். — (சாலமன் பாப்பையா)

இதை அந்த பெரிய ஆஸ்பத்திரி செய்ய வில்லையோ?. காசு வாங்குவதிலேயே குறியா இருந்தாங்களே! ஒரு வேளை என் கணிப்பு தவறோ?

என் மனைவிக்கு இன்னி வரைக்கும் நாப்பது லட்சம் செலவு பண்ணி, அந்த ஆஸ்பத்திரியில் வைத்தியம் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் குணமாக வில்லையே . வீட்டிலே சொன்னா கேக்க மாட்டாங்க. நான் காசிலே குறியா இருக்கேன்னு என்னையே குறை சொல்வாங்க. அதனால வாய பொத்தி , அடக்கமா இருக்கறது நலம் . நடக்க நடக்க நாராயணன் செயல் . முடியாத போது, வீட்டை வித்தால் போயிற்று. மனைவிக்காக இது கூட செய்யாக்கூடாதா என்ன?

டாக்டர் குமார் கிட்டே கேட்டேன் “உங்க கிட்டே முதலிலேயே வந்திருந்தா, இந்த ஊசி, செலவு எல்லாம் மிச்ச்சமாயிருக்குமே டாக்டர்”

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் “அப்படி சொல்ல முடியாது . உங்களுக்கு அப்போ இருந்த நிலையிலே அங்கே போனது தான் சரி. எல்லா டெஸ்டும் உடனே எடுத்து, உங்களை ஆபத்திலிருந்து விலக்கி இருக்காங்களே? அது பெரிய விஷயம் இல்லையா?”

இவரல்லோ டாக்டர்?. இப்படியும் சிலர் இருக்காங்க.

(உண்மை நிகழ்வு . பெயர் மட்டும் மாற்றப் பட்டிருக்கிறது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *