வைரமானது கரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 833 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கங்கா, ரவி சேர்ந்து சென்றால் காகங்களும் மைனாக்களும் கூட திரும்பிப்பார்க்கும். இந்த ஆண்டுதான் நடந்தது திருமணம். தேன்நிலவுக்கு நார்வே வேண்டுமாம். முதலாண்டில் குழந்தை வேண்டாமாம். முடிவு செய்து கொண்டார்கள். எல்லா இரவுகளும் வெளியேதான் உணவாம். ஒரு ஜோடிக் கிளிகளாய் பறந்து திரிய திட்டமாம். குழந்தையைப் பற்றி இரண்டாமாண்டுதான் சிந்திப்பார்களாம்.

இரண்டாம் ஆண்டு. குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும். இருவரும் சேர்ந்து செய்த முடிவு. கங்காவுக்கு சில மாதங்கள் தேதி தள்ளிப்போனது. ஆனால் கரு தங்கவில்லை. முடியப் போகிறது இரண்டாமாண்டு. மருத்துவர் சொன்னார். குழந்தையைத் தாங்கும் அளவுக்கு கர்ப்பப்பையில் பலமில்லையாம். ரவியின் உயிரணுவிலும் கோளாறாம். சில மருந்துகள் தந்தார். தொடர்ந்தார்கள். தொடர்ந்தார்கள். தொடர்ந்தார்கள்.

ஐந்தாம் ஆண்டு இது. பொது நிகழ்ச்சிகளை, பண்டிகைகளை நினைத்தாலே சுட்டது. வீசப்படும் முதல் கேள்வி,

‘குழந்தை இருக்கிறதா?’

ரவியின் பெற்றோரிடமும், கங்காவின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் வீசப்பட்ட வாள்

‘கங்காவுக்கு குழந்தை இருக்கிறதா?’

‘மலடுகள் என்று சொல்வார்களே. அந்தக்கூட்டத்தில் சேர்ந்துவிட்டோமோ?’ கங்கா புழுங்கினாள்.

‘ஆண்மகன் இல்லை என்பார்களே. அந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டோமோ?’

ரவியும் புழுங்கினான்.

ஆனால் புன்னகைத்துக் கொண்டார்கள்.

ஆறாம் ஆண்டு. வழக்கம்போல் தள்ளிப்போனது தேதி. வழக்கம்போல் மருத்துவர் ஏதாவது சொல்வார். கங்கா ஒரு பொம்மைபோல் மருத்துவரைக் கவனித்தாள். மருத்துவர் சொன்னார்.

‘நீ கருவுற்றிருக்கிறாய்’

உடம்பெல்லாம் புல்லரிக்க இரண்டு சொட்டுக் கண்ணீர் அதை ஆமோதித்தது. அன்று இரவு பனானாலீஃப் அப்பல்லோவில் ஐம்பது பேருக்கு விருந்து. பெண்ணாகப் பிறந்தால் அனுசூயா. ஆணாகப் பிறந்தால் அருண். பெயரும் வைத்தாகிவிட்டது.

பனிக்குடம் உடைந்தது பத்து மணிக்கு. பிரசவம் ஆனது 4 மணிக்கு. அனுசூயா பிறந்துவிட்டாள். அதிகமாக ஒரு வாரம் தங்கவேண்டுமாம். சில மருத்துவச் சோதனைகள் அவசியமாம். உண்மைதான். குழந்தை சத்தமாக அழவில்லை. சப்பிக் குடிக்கத் தெரியவில்லை. அசைவுகள் குறைவாகவே இருந்தது.

இன்றுதான் அவர்கள் வீட்டுக்குச் செல்லவேண்டும். காலாட்டிக் கொண்டே மருத்துவர் கங்காவின் வயிற்றில் வெடிமருந்தைக் கிடித்தார்.

‘குழந்தைக்கு இடது காலில் இடது கையில் இயக்கம் இல்லை. சப்பிக் குடிக்கத் தெரியாது. உண்பதைவிட ஒழுகுவது அதிகமாக இருக்கும். அழுது எதையும் கேட்காது. கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.’

மருத்துவர் கிளம்பிவிட்டார். வெடி மருந்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் செயலிழக்கச் செய்தாள் கங்கா. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாள். காரணமின்றி கடவுள் எதையுமே செய்வதில்லை. ஆரம்பம் முதல் இன்றுவரை அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை இதுதான்.

‘நான் மலடியல்ல.’

அவளுக்குக் கிடைத்த இன்னொரு அசைக்க முடியாத சமாதானம்.

பணிப்பெண்ணை நிராகரித்தாள் கங்கா. பணத்திற்கு வருபவர்களிடம் பாசம் இருக்காதாம். பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தாள். பார்க்க வீட்டுக்கு வர விரும்புகிறவர்களை நாசூக்காக ஒதுக்கினாள். மருத்துவ விடுப்பை நீண்டநாள் விடுப்பாக மாற்றினாள். விருந்துண்ண வெளியே செல்வது வேண்டாமாம். பண்டிகைகளில் தடபுடல்கள் வேண்டாமாம். அனுசூயா மட்டுமே வேண்டுமாம். முடிவு செய்துவிட்டாள் கங்கா.

மூன்று மணிக்கு ஒரு தடவை பெம்பர்ஸ் மாற்றவேண்டும். நான்கு மணிக்கு ஒரு தடவை கைகால்களை அசைத்துவிட வேண்டும். பாலூட்டும்போது புரையேறிவிடும். பால் கொடுப்பது ஊசியில் நூல் கோர்ப்பது போல. பத்து நிமிடம் கங்காவால் தொடர்ந்து தூங்க முடியவில்லை.

அனுசூயாவுக்கு இரண்டு வயது. ஒரு நாள். கழிவறைக்குச் சென்ற கங்கா திரும்பி வருவதற்குள் அனுசூயா வலது தோள்பட்டையைக் கடித்துக் கொண்டு அசைவற்றுக் கிடந்தாள். ரத்தம் கசிகிறது. மெதுவாக விரலை விட்டு தோள்பட்டையை விடுவித்தாள். மருத்துவரிடம் சென்றாள். இரண்டு மணி நேரம் சிகிச்சைகள். கைகளில் முழங்கையை மடக்க முடியாதபடி இரண்டு உரைகள். தலையைத் திருப்ப முடியாதபடி கழுத்தில் பட்டை. இரண்டு வயதுக் குழந்தைக்கு கவசம் அணிவித்தது மருத்துவமனை. மருத்துவர் சொன்னார்.

‘ஏதேனும் தேவையென்றால் கேட்கத் தெரியாது. தலையைத் தரையில் முட்டிக் கொள்ளும். வாயில் உடம்பின் எந்தப் பகுதி கிடைத்தாலும் கடித்துக் கொள்ளும். வலி தெரியாது. உடம்பின் எந்தப் பகுதியும் வாய்க்கு எட்டக் கூடாது. அதற்காகத்தான் இந்த கவசங்கள். வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லையம்மா.

கங்கா ஏற்கனவே மரத்துவிட்டாள். இனி எந்த அடியும் அவளைத் தாக்கமுடியாது. காரணமின்றிக் கடவுள் எதையுமே செய்வதில்லை. மீண்டும் சொல்லிக் கொண்டாள்.

பள்ளிக் கூடத்தில் சேர்க்க ஆணை வந்தது. அனுசூயா மாதிரி இன்னும் பல குழந்தைகளுக்கு அந்தப் பள்ளிக்கூடம்தான் கோயில். கங்கா வீட்டிலிருந்து பள்ளி ஐந்து கிலோமீட்டர் தூரம். கங்காவும் ரவியும் ஒரு முடிவு செய்தார்கள். பள்ளிக்குப் பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கிச் சென்றுவிடுவது.

பள்ளிக்கூடத்துக்கு எதிரிலேயே கிடைத்தது ஒரு வீடு. வீடு மாற்றும் வேலைகள் நடந்தது. பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் சாமான்கள் திணிக்கப்பட்டன. கங்காவின் பழைய புத்தகக் குவியலை அள்ளியபோது அந்தப் புகைப்படம் நழுவியது. கங்காவின் கல்லூரி நாட்களில் எடுக்கப்பட்ட படம். ஓர் இளைஞனோடு நெருக்கத்தில் கங்கா.

‘நானும் பிரசாந்த்தும் 29 நவ 1990.’

புகைப்படத்தின் பின்னால் கங்காவின் குறிப்பு. சட்டைப் பையில் வைத்துக் கொண்டான் ரவி. திரும்பத் திரும்பப் பார்த்தான். அவன் நெஞ்சில் அவனே வரைந்திருந்த கங்காவின் ஓவியத்தை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்தது.

வீடு மாற்றம் முடிந்தது. பழகிப் போனது புதிய வீடு. ஒரு நாள் இரவு 9 மணி. அனுசூயா தூங்கும் நேரம் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கங்கா.

‘பெண்ணாகப் பிறந்துவிட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை’

சித்தி படப்பாடலை வாய்க்குள்ளேயே பாடினாள் பாவத்துடன். ரவிதான் பேச்சைத் தொடங்கினான்.

‘கல்லூரியில் உன்னால் மறக்க முடியாத நண்பன் பிரசாந்த் தானே.’

‘ஆம். அதுதான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே.’ பாட்டை முறித்துக்கொண்டு பதில் சொன்னாள் கங்கா.

‘எந்த அளவுக்கு நெருக்கம்’

‘பிரச்சினைகளை அலசிப் பார்ப்போம். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்’.

‘என்ன மாதிரி அனுபவங்கள்.’

சுட்டது அந்தக் கேள்வி. ரவி எதையோ கற்பனை செய்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறான். புரிந்து கொண்டாள் கங்கா. ஆனால் புரளவில்லை. அனுசூயாவும் தூங்கிவிட்டது.

‘அந்த வயதின் அனுபவங்கள்தான்.’ கங்கா சொன்னாள்.

‘தாம்பத்திய அனுபவமுமா?’ உடைத்தான் ரவி.

சிரித்துக் கொண்டாள் கங்கா.

‘சிரித்தால் என்ன அர்த்தம்.’

‘உன்னிடம் ஒரு குழந்தை பெற்றிருக்கிறேன். மூன்றாண்டுகளாகிவிட்டது நான் மூன்று நிமிடம் தொடர்ந்து தூங்கி. வசந்தங்கள் மொத்தத்தையும் இழந்து நிற்கிறேன். வேலையை விட்டுவிட்டேன். அனுசூயாவை உயிராக்கிக் கொண்டேன். அனுசூயாவுக்கு முன் நான் செத்துவிடக் கூடாதென்று கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். காரணமின்றிக் கடவுள் எதையுமே செய்வதில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்கிறேன். என்னைப் பார்த்து இப்படிக் கேட்டால் சிரிக்காமல் அழச் சொல்கிறாயா? கண்ணீர் வற்றிவிட்டது ரவி.’

‘அதனால்தான் கேட்கிறேன். காரணமின்றி கடவுள் எதையுமே செய்வதில்லை. இந்தத் தண்டனை நீ எனக்குச் செய்த துரோகத்திற்கான சம்பளம்.’

பதிலை எதிர்பார்க்காமல் தூங்கப் போய்விட்டான் ரவி. அந்த இரவு கனமான இரவானது இருவருக்குமே. ஒரு வழியாக பொழுது விடிந்தது.

‘வருகிறேன்’

சுவற்றிடம் சொல்லிவிட்டு ரவி அலுவலகம் சென்றுவிட்டான். இரவு முழுவதும் கங்கா தன் தாயார் காவேரியிடம் ஒன்றுவிடாமல் பேசிவிட்டாள். காவேரி ஒரு தமிழாசிரியர். மொத்தத்தையும் ஒரே மூச்சில் கிரகித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து முடிவு செய்துவிட்டார்கள்.

என்ன முடிவு?

இதோ தொடங்குகிறது அந்த முடிவு.

கங்கா தன் பொருள்களை மட்டும் பெட்டிகளில் அடைத்தாள். ரவி வாங்கித் தந்த ரப்பர் வளையல்களைக் கூடத் தொடக் கூசினாள். அவன் தந்த பொருள்களை வரவேற்பறையின் மையத்தில் குவித்தாள். அதில் எழுதி வைத்தாள்.

‘உனக்கு துரோகம் நினைக்காத பெண்ணை துணையாக்கிக் கொள். சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ செய். எதற்கும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். சட்டப்படி ஜீவனாம்சம் தருவதாகச் சொல். ஆனால் முள்ளெடுக்கக்கூட ஊசி உன்னிடம் கேட்கமாட்டேன்.’

கங்கா இப்போது காவேரியிடம். அவர்களின் திட்டம் இதுதான். காவேரி வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாள். கங்கா அந்தப் பழைய வேலையில் சேர்ந்துவிட்டாள். கங்காவை விட காவேரி இரட்டிப்பாகக் கவனித்தாள் அனுசூயாவை.

ஒரு மாத காலம் ஒண்டிக் கட்டையாய் உழன்றுவிட்டு ரவி காவேரியின் வீட்டுக்கு வந்தான்.

‘வாங்க ரவி.’ காவேரி வரவேற்றாள்.

‘பரவாயில்லை. நான் கங்காவைப் பார்க்கவேண்டும்.’

‘கங்கா, ரவி வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கவேண்டுமாம்.’

‘அனுசூயாவுக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறேன். என்ன சேதி என்று கேளுங்கள். ஏதும் கையெழுத்து வேண்டுமென்றால் பேப்பரை வாங்கி வாருங்கள்.’

‘இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம்.’

கங்கா வந்தாள். ரவி சொன்னான்.

‘உன் பிரிவு எனக்கு மரண தண்டனை. என்னை மன்னித்துவிடு. சேர்ந்து வாழ்வோம்.’

‘காரணமின்றி கடவுள் எதையுமே பிரிவதற்காகத்தான் அந்த வார்த்தைகள் செய்வதில்லை. ஊற்றெடுத்தது. மன்னிப்பதற்கு நான் கடவுளல்ல. மறக்கமுடிந்தால் நானே வருகிறேன். இப்போது போய்விடு.’

போய்விட்டான் ரவி.

அன்று அலுவலகம் முடிந்து திரும்பியிருந்தாள் கங்கா. இரவு 9.தொலைபேசி அழைத்தது.புதிய எண்.

‘ஹலோ.’ என்றாள் கங்கா.

‘நான்தான் மணிசுந்தரம் பேசுகிறேன். ஒரு சில நிமிடம் பேசலாமா?’

‘எந்த மணிசுந்தரம்?’

‘திரைப்பட இயக்கநர் மணிசுந்தரம்.’

‘இந்த ஆண்டு ஜனாதிபதி பரிசு பெற்ற அந்த மணிசுந்தரமா?’

‘ஆம்.’

‘ஆச்சரியமாக இருக்கிறது. உங்களைப் பார்க்க நான் பல முறை விரும்பியதுண்டு.’

‘இன்று உங்களைப் பார்க்க எனக்கு விருப்பம். இப்போது உங்கள் வீட்டுக்கு வரலாமா? நாளை நீங்கள் அலுவலகம் சென்று விடுவீர்கள்.’

‘உடனே வாருங்கள். உங்களுக்கு மாற்று நேரம் தருகின்ற அளவுக்கு நான் பெரிய மனுஷியல்ல.’

இரண்டு மூன்று படகுக் கார்கள் காவேரியின் வீட்டு முகப்பில் வந்து நின்றன. நாலைந்து பேர் இறங்கிய பின் மல்லியப் பூவாக இறங்கினார் மணிசுந்தரம்.

வரவேற்பறையில் வட்டமாக அமர்ந்தார்கள். அனுசூயா தூங்கிக் கொண்டிருந்தது. காவேரியும் வந்து உட்கார்ந்துகொண்டார். தேர்வு தொடங்க மணியடித்துவிட்ட அமைதி. தூணாக நின்று கொண்டிருந்த கடிகாரம் மட்டும் டிக் டிக் என்றது. மணிசுந்தரம் தொடங்கினார்.

‘அனுசூயாவைப் படமாக எடுக்க விரும்புகிறோம். ஸ்கிரிப்ட்டெல்லாம் தயார். உங்கள் அனுமதி தேவை’

‘ஏற்கனவே அஞ்சலி வந்துவிட்டது. கையைச் சுட்டுக் கொள்வீர்கள் சார்.’ கங்கா சொன்னாள்.

திரைப்படம் பற்றி பல தகவல்கள் கங்காவுக்குத் தெரிந்திருந்ததில் மணிசுந்தரத்துக்கு மகிழ்ச்சி.

‘நன்றி கங்கா. ஆனாலும் இது வித்தியாசமான முயற்சி.’

‘எப்படி?’

‘அனுசூயாவாக நடிக்கவிருப்பது அனுசூயாதான். கங்காவாக நடிக்க விருப்பது நீங்களேதான்.’

கங்கா முதலில் சம்மதிக்கவில்லை. தொடர்ந்தார் மணிசுந்தரம்.

‘உங்களைப்போல் 40 பெற்றோர்கள் சிங்கையில் மட்டும். உங்களின் தியாகம் அவர்களைப் பெருமையடையச் செய்யும். உங்கள் வாழ்க்கையை இந்த சமுதாயம் அறிந்தே ஆகவேண்டும் கங்கா. அனுசூயா போன்ற பிள்ளைகளைப் பெற்றவர்கள் பெருமைப் படவேண்டும் கங்கா’

கங்கா ஒப்புக் கொண்டாள். எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்தன. சிங்கையிலேயே முடிந்தது மொத்தப் படமும். 28 நாட்களில் மொத்தப் படமும் முடிந்து சென்சாருக்குச் சென்றது.

மணிசுந்தரத்தின் மாபெரும் படைப்பு ‘அனுசூயா’ ஓர் உண்மைக் கதை என்று உலகம் முழுவதும் அறிமுகமானது. உண்மைக் கதை என்ற அடைமொழி படத்துக்கு இன்னொரு பரிமாணத்தைத் தந்தது. அனுசூயாவின் முகம் உலகத்திற்கே அறிமுகமானது. நவம்பர் 29, 2008. படம் உலகம் முழுவதும் திரையீடு கண்டது. ஆயிரம் பிரதிகள் போடப்பட்டன. சிங்கப்பூரில் மட்டும் ஐந்து அரங்குகளில் படம் வெளியீடு கண்டது. பிரார்த்தனை முடிந்து கோயிலிலிருந்து வருவதுபோல் மக்கள் படம் பார்த்து வெளியேறினர். ஒரே நாளில் அத்துனை தாய்மார்களுக்கும் அனுசூயா பிள்ளையானாள். காவேரியின் வீட்டை ரசிகர்கள் தினந்தோறும் முற்றுகையிட்டனர். தன்னை கங்காவின் கணவன் என்று சொல்லிக் கொள்ள கூசினான் ரவி. பத்திரிகைகள் விமர்சனம் இவ்வாறு எழுதியது.

‘நடிப்பு, கதை, இயக்கம் அனைத்துக்குமான ஆஸ்கார் விருதை இப்படத்திற்குத் தந்து பெருமையடையட்டும் ஆஸ்கார்.

ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. பத்திரிகைகள் எழுதியது போலவே பல பரிசுகளை அனுசூயா தட்டிச் சென்றது. சிங்கப்பூரே வழியனுப்பிவைக்க ஆஸ்கார் விருது வாங்க கங்காவும் அனுசூயாவும் புறப்பட்டார்கள். காவேரியும் கூடத்தான். சிறந்த படம் அனுசூயா. சிறந்த இயக்குநர் மணிசுந்தரம். சிறந்த நடிகை கங்கா. சிறந்த குழந்தை நட்சத்திரம் அனுசூயா. காரணமின்றி கடவுள் எதையுமே செய்வதில்லை. வைரமானது கரி.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *