செத்தும் கொடுத்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 2,292 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெயின் ரோட்டில் இறக்கி விட்டிருந்தார்கள். மோகன் கொஞ்சம் களைப்பாக இருந்தான். இது இந்த மாதத்தில் நான்காவது முறை. இதே ஊர்;இதே பேருந்து; இதே இடம்.. இங்கிருந்து இரு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும்.

மோகனுக்கு இருபத்தி எட்டு வயது. நல்ல களையான முகம். நறுக்கு மீசை.. கொஞ்சம் வெட்டிய உதடுகள் மட்டுமே அவனது அழகைக் கெடுத்தன. அதனால் என்ன பரவாயில்லை. அவன் என்ன சொற்பொழிவா நிகழ்த்தப் போகிறான். வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தேடி அலையும் வேலை. ஒரு நிதி நிறுவனத்தின் கலெக்ஷன் பிரிவில் அவன் ஒரு உறுப்பு. ஒரு உருப்படாத உறுப்பு என்று கூடச் சொல்லலாம். பின்னே என்ன.. வட்டி மற்றும் தவணை வசூல் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அவர்கள் தயவு தாட்சண்ணியம், அறவே அறியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதுதான் மோகனிடம் நிறையவே இருந்தது.

“இந்தரு மோகனு.. இது எல்லாம் யாவாரத்துக்கு ஒத்து வராது! என்னா மண்டையில ஏறிச்சா “ என்று நிதி நிறுவன அதிபர் சந்திரசூடன் சொல்லிக் கொண்டே இருப்பார். பேருக்கேத்தவாறு கோபம் வந்து விட்டால் செம சூடாகிவிடும் சூடன். அப்போது மட்டும் அவர் சூரியசூடன் என்று சொல்வாள் மல்லிகா. மல்லிகா பக்கத்து சீட்டுக்காரி. அலுவலகத்தில் இருக்கும் ஒரே பெண் பிள்ளை அவள்தான். சொன்னால்தான் பெண்.. இல்லையென்றால் பிள்ளைதான்.. அப்படி ஒரு தேகம்! தேஜஸ்!

பொன்னேரி தாண்டி தச்சூர் கூட்டு ரோடுக்கு மேற்குப் பக்கம் இருந்தது அந்தக் குக்கிராமம். கீழப் பனையூர் என்று பேர். மேலப்பனையூர் என்று ஒன்று இருக்கும்போல.. மேற்குப் பக்கம் இருக்கலாம். அல்லது கொஞ்சம் மேடான பகுதியில் இருக்கலாம்.

பிரதான சாலையிலிருந்து கொஞ்சம் சரிவாக இறங்கிப் போனது பாதை. அதனால்தான் கீழப் பனையூர் என்று பேர் வந்ததோ என்னவோ. வழியெங்கும் பனைமரங்கள்.. எண்ணைக் காணாத பரதேசிக் கிழவர்களின் தலைகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓலைகள்.. அதுவும் தென்னையைப் போல நீள் சடையெல்லாம் கிடையாது.. எல்லாம் சம்மர் கிராப்தான்.

“வட்டிக்காரன் வந்துட்டாண்டோய்.. அரைக்கண்ணனுக்கு வேட்டு வைக்க வட்டிக்காரன் வந்துட்டான் டோய்.. “

மாடு மேய்க்கும் சிறுவர்கள் கும்மாளத்துடன் கூக்குரலிட்டார்கள். இவர்களில் ஒருவன் ஓடிப் போய் சொல்லியும் வைப்பான். மோகன் போய் சேருவதற்குள் அவனைத் திருப்பி அனுப்பத் தகுந்த காரணங் களை அரைக் கண்ணன்.. சே எனக்கும் அதே பேர் வருகிறது.. நமச்சிவாயம்.. என்ன பேர் பொருத்தம்! சிவனுக்கு மூன்று கண்கள்.. இவனுக்கு ஒன்றரை.. இவன் பாதி சிவன்.. சுடலை பக்கத்தில்தான் வீடு. இரண்டு மனைவிகள் இரண்டு பிள்ளைகள்.. அதிலும் ஒன்று யானைக்குட்டி.. அதற்கு வைத்தியம் பார்க்க வாங்கிய கடன்தான், இன்னும் வட்டியாக குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது அசல் அசராமல் அப்படியே இருக்கிறது.

“வாங்க தம்பி!” என்று வரவேற்றார் நமசு.. மோகனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இழுத்துப் போர்த்திக் கொண்டு இருமிக் கொண்டு படுத்துக் கிடக்கும் இவரா? அதுவும் எழுந்து நின்று வரவேற்பது? நமசு ஒரு வித்தியாசமான ஆள்.. ஒவ்வொரு முறை வட்டி கேட்கவும், தவணைப் பணம் கேட்கவும் மோகன் போகும்போது,பணம் தரவில்லை என்றாலும், அவன் வந்து போகும் பேருந்துச் செலவை., ஆறும் ஆறும் பனிரெண்டு ரூபாய், எண்ணிக் கையில் தந்து விடுவார். அவரால் அவன் நஷ்டமடையக் கூடாது என்பது அவரது எண்ணம். ஆனால், அதைச் சேர்த்து கைக்காசு கொஞ்சம் போட்டு, அவன் ஏதோ கொஞ்சம் பணம் அவர் கணக்கில் கட்டி வருகிறான் என்பது அவருக்குத் தெரியாது.

“ஆபிசுக்கு போன் போட்டு விசாரிச்சேன்.. வட்டி அசல் எல்லாம் சேர்த்து ஐயாயிரம் ஆயிட்டுதாம்.. இரண்டாயிரம்னு வாங்கின கடன் சரியாக் கட்டாததால இம்புட்டு ஏறிப்போச்சு.. ஆனால் நல்ல காலம் பொறந்திருச்சி தம்பி! ஒரே தவணையில தீர்த்துடப் போறன்.. இப்படி ஒக்காருங்க பணம் எடுத்தாரேன். மோகனுக்கு வியப்பு அதிகமாகியது எப்படி? ஏது இவ்வளவு பணம் ? நேர்மையாக வந்த பணம்தானா? அதெல்லாம் நமக்கெதுக்கு? வசூல் செய்தமா, போனமா என்று இருக்க வேண்டும்? இந்தாங்க தம்பி ஐயாயிரம்.. ரசீது கடன் பத்திரம் எல்லாம் நாளைக்கு நானே டவுனுக்கு வந்து வாங்கிக்கறேன்.. மோர் சாப்பிடறீங்களா.. கொஞ்சம் பொறுத்தீங்கன்னா படையல் வச்சிட்டு, சாப்பாடே சாப்பிடலாம்”

சாமி கும்பிடுகிறார்கள் போலிருக்கிறது. கணேசன் உள்ளே இருக்கலாம்!

எல்லாம் ஐநூறு ரூபாய் தாள்கள். பத்து தாள்கள். மனசு குறுகுறுத்தது. எப்படி இவ்வளவு பணம்?

“ஐயா புள்ளைங்க யாரையும் காணம்? சின்னவனாவது விளையாடப் போயிருப்பான். பெரியவன் கணேசன் வீட்டிலேயே கெடப்பானே?

“அதெல்லாம் எதுக்கு தம்பி.. பணம் சரியா இருக்குதா.. இந்தாங்க மோரைக் குடிங்க, நடையைக் கட்டுங்க “ குரலில் ஒரு கடுமை தெரிந்தது. அதையும் மீறி குரல் கம்மியிருந்தது.

மோகனுக்கு கணேசனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்போது வந்தாலும் கணேசன் அவனருகே உட்காருவான். வாயில் எச்சில் ஒழுக, ஒரு அரை டிராயரைப் போட்டுக் கொண்டு, விரல் சூப்பிக் கொண்டிருப்பான். பேச்சு தெளிவாக இராது. ஆனாலும் என்னவோ பேசிக் கொண்டிருப்பான். பொறந்தப்பவே மூளை வளர்ச்சி அடையாதுன்னு சொல்லிட்டாங்க தம்பி. அவன் அம்மா வயித்துல இருக்கும்போது பிராண வாயு சரியா போய் சேரலைன்னு சொல்றாங்க. பார்வதிக்கு, அதான் என் சம்சாரத்துக்கு சின்ன வயதிலேர்ந்தே கொஞ்சம் இழுப்பு வியாதி. அதும் பத்தாதுன்னு இவன் மார்கழி மாசத்துல பொறந்துட்டான். சித்திரையா இருந்தா சமாளிச்சிருப்பான்!”

மோகன் படித்தவன். இந்தக் குறைபாட்டை நீக்க, நவீன மருத்துவம் வந்து விட்டது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இந்தக் குக்கிராமத்தில் அதற்கு எல்லாம் வசதி இருந்திருக்காது.

பிள்ளை எப்படி இருந்தாலும் நமசுவும் பார்வதியும் அவனைப் பார்த்துக் கொண்ட விதம் அவனுக்கு ஆச்சர்யம். எப்போதும் நெற்றியில் பளிச்சென்று திருநீற்றுப் பட்டையுடன் காட்சி அளிப்பான் கணேசன். தினமும் சுடு தண்ணீரில் குளிப்பாட்டி, ஏதோ மூலிகை எண்ணையை அவன் உடலில் தடவி விட்டிருப்பார்கள். அதன் மணம் பலரை அவனை நெருங்க விடாது. அதனாலேயே அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

மோகன் அவனிடம் ஏதோ ஒரு வித நேசத்தோடு நடந்து கொள்வான். வட்டித் தவணை வாங்க வரும் ஈட்டிக்காரனின் பிரதிநிதி, கையில் காராச்சேவு, தித்திப்பு வாங்கி வரும் அதிசயத்தை இங்கே தான் காண முடியும்.

முதல் தடவை அதை கணேசன் கையிலேயே கொடுத்து விட்டான் மோகன். அதை அவன் சாப்பிடத் தெரியாமல் பேர்பாதி கீழே சிந்தியது அவனுக்கு வலித்தது. அடுத்த முறையிலிருந்து அவனே பொட்டலத்தைப் பிரித்து, சிறிது சிறிதாக அவனுக்குக் கொடுத்தான். கணேசனும் அவனோடு ஒட்டிக் கொண்டான்.

சென்ற முறை மோகன் வந்தபோது பக்கத்து டவுன் ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. கணேசனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. காலை எட்டிப் போட யத்தனித்த சமயத்தில் உள்ளே இருந்து இரண்டு வெள்ளைக் கோட்டு ஆசாமிகள் வெளியே வந்தார்கள். அவர்கள் கையில் ஒரு ஃபைல் இருந்தது.

பின்னால் தத்தி தடுமாறியபடி கணேசன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

‘அப்பா! கணேசனுக்கு ஒன்றுமில்லை’

ஆஸ்பத்திரி வாகனம் பற்றி கேட்க நினைத்தான். சட்டென்று மாற்றிக் கொண்டான். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். இதில் மூக்கை நுழைப்பது சரியாகாது.

வழக்கம்போல வண்டி சத்தமும், வினோத சாக்குகளுடனும் அவனை வழி அனுப்பி வைத்தார் நமசிவாயம்.

கடைசியாகப் பார்த்த கணேசனின் பிம்பமே அவனுள் நிலைத்திருந்தது. இன்று மோகன் கணேசனைப் பார்க்கவில்லை!

மோகன் வித்தியாசமானவன். கிடைக்கும் ஒரே நாள் விடுப்பிலும் அவன் பெரும்பாலும் ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களுக்குச் சென்று விடுவான். அங்கிருக்கும் நபர்களை தன் உறவாக நினைப்பான். அவர்களுக்கு வேண்டியதைச் செய்வான். மாலை திரும்பும்போது ஒரு வார இதயச் சுமை விலகி லேசாக ஆகியிருக்கும்.

அவனது பெற்றோர் காலம் கடந்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதிலும் அவனது தந்தை குள்ளம். கால்களும், பிரசவத்தில் எசகுபிசகாக சிக்கிக் கொண்ட போது, செவிலியர்களால் ஏறுமாறாக இழுக்கப்பட்டு வளைந்து போனவை. அவருக்கு பிராக்கெட் என்று பெயர். பெயர் என்னவோ நடராசன்

தான். ஆனால் அதை மீறி அவரது கால்கள் அவருக்குக் கொடுத்த பெயர் தான் நிலைத்தது. மோகனுக்கும் பல வருடங்கள் பிராக்கெட் பையன் என்றே பெயர். இத்தனைக்கும் அவனது தாய் உயரமாக இருந்த்தால் அவனும் உயரமாகவே வளர்ந்தான். நெடுநெடுவென்று வளர்ந்த அவன் தன் நீண்ட கால்களை வீசி நடக்கும்போது அப்பா பெருமையுடன் பார்ப்பார்.

ஊனமுற்ற எல்லோரும் அவனுக்கு அப்பா ஜாடையாகவே தெரிந்தார்கள். ஊரில் அவரை பித்துக்குளி என்பார்கள். நாள் முழுதும் வெயிலில் வேலை செய்து விட்டு, ஓரணா இரண்டணா கொண்டு வருவதையே அவர் பெருமையாகச் சொல்வார். அவரையொத்த வயதுடையவர்கள் ஐந்தும் பத்தும் சம்பாதித்த காலம் அது.

கடைசி காலத்தில் அப்பா பாரிச வாயு தாக்கி நடமாட முடியாமல் போனார். பேச்சும் குழற ஆரம்பித்தது. கணேசனைப் பார்க்கும் போதெல்லாம் மோகனுக்கு அப்பாவின் கடைசி காலம் நினைவு வரும். கூடவே தன் வெட்டுப்பட்ட உதடுகளும்!

சில சமயம் கணேசன் அவன் பின்னாலேயே ஓடி வருவான். பேருந்து வரும் வரையில் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பான். அவனுக்கு தேன் மிட்டாயும் முறுக்கும் வாங்கித் தருவான் மோகன். அப்பாவுக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப இஷ்டம்.

இப்போதும் கணேசன் எங்காவது வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருந்தான் மோகன். அவன் வரவேயில்லை!

பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது ஊர்க்காரர்கள் இருவர் பேசிக் கொண்டது கேட்டது. ‘நமசு பையன் கணேசன் போய் பதினாறு நாள் ஆயிட்டுது.. இன்னிக்கு விசேசம் செய்யறாங்க.. இருந்தவரையிலும் சீக்காளியா இருந்த பய.. போனது நமசுக்கு நல்லதுதான் ஆனாலும் வருத்தம் இருக்குமில்ல.. பெத்த பிள்ளையாச்சே.. பிள்ளை வைத்தியத்துக்கு வாங்கின கடனை அடைக்க முடியாம, கூட கொஞ்சம் கஷ்டம்.. ஆனால் கணேசன் செத்தும் கடனைத் தீத்துட்டுத்தான் போயிருக்கான்.“

“எப்படி சொல்ற?”

“நமசு, பையன் ஒடம்பை, மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்கறதா எழுதிக் கொடுத்துட்டாரு இல்ல.. அவங்க கூட, பத்தாயிரம் பணம் கொடுத்தாங்களாமே “

மோகனுக்கு பையில் இருந்த பத்து நோட்டுக்களும் கனக்க ஆரம்பித்தன.

– மார்ச் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *