கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 7,248 
 

ராமகிருஷ்ணனும் கமலாவும் துணிந்து வந்து விட்டார்களேத் தவிர விஷயத்தை எப்படி விசுவத்திடம் சொல்வது என்று தயங்கினார்கள்.

“முக்கியமான விஷயமா பார்க்கணும்னு சொன்னீங்க. ஒண்ணுமே பேசாம இருக்கீங்களே ராமகிருஷ்ணனின் தயக்கத்தைப் போக்கி துணிவு கொடுத்தான் விசுவம்.

“எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆயிட்டுது, என் வம்சம் விளங்க வாரிசு உருவாகலே. இனிமேலும் அதற்கு வழி இல்லேன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. என்னுடைய ஏகப்பட்ட சொத்துக்கு வாரிசு இல்லாமப் போயிடும் அதான் உங்களை . . .”

“என்ன செய்யணும் சொல்லுங்க, உங்களுக்குச் செய்யாம வேறு யாருக்கு செய்யப் போறேன்?”

“என் தங்கை வயித்திலே இருக்கிற சிசு ஆணா இருந்தா . . அதை நாங்க தத்து எடுத்துக்கலாம்னு நினைக்கிறோம் என்ன சொல்றீங்க?”

“இதுக்கா இப்படி தயங்கினீங்க . . செஞ்சுட்டாப் போச்சு . . .”

“நீங்க சரின்னு சொல்லிட்டீங்க. ஆனால் என் தங்கை ஒத்துக்கணுமே, வெளியில் ஒரு பிள்ளையை தத்து எடுத்துக்கிறதைவிட என் தங்கை குழந்தையை எடுத்துக்கிறது மேலில்லையா?

“உங்க தங்கச்சியை சம்மதிக்க வைக்கிறது, என் பொறுப்பு, நீங்க கவலைப்படாம போங்க!”

எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ராமகிருஷ்ணனும், கமலாவும் விடைபெற்றுக் கொண்டனர்.

விசுவம் அவர்களுக்கு சம்மதம் கொடுத்து விட்டானே தவிர தன் மனைவி கல்யாணி இதை ஒத்துக் கொள்வாளா? என்று பயப்பட்டான்.

கோவிலுக்குப் போயிருந்த கல்யாணி உள்ளே வந்தவள், மேசை மீது இருந்த பழங்களையும், பூவையும் பார்த்தாள். “என்னங்க, யார் வந்தாங்க?” என்று கேட்டாள்.

‘உன் நலனில் அக்கறை கொண்ட உங்க அண்ணாவும் அண்ணியும்தான் உன்னைப் பார்க்க வந்தாங்க, வந்துடுவேன்னுதான் சொன்னேன். ஆனால் அவங்க அவசரமா யாரையோ பார்க்கணும்னு கிளம்பிட்டாங்க.”

“அதற்கென்ன, அடுத்த வாரம் நாம அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்தா போகுது.”

“ஏன், கல்யாணி உங்க அண்ணாவுக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் இருக்குமா?”

“இருக்குங்க, அண்ணனுக்கும் அண்ணிக்கும் இருக்கிற நல்ல குணத்துக்கு அவங்க வம்சம் வளர ஒரு பிள்ளை இல்லேயேன்னு எனக்கும் மனசுக்கு கஷ்டமா இருக்குங்க.” வருத்தப் பட்டாள் கல்யாணி.

இதுதான் சமயமென்று ராமகிருஷ்ணன் சொன்னதை மெல்ல சொன்னாள் விசுவம்.

“என்னங்க சொல்றீங்க? என் குழந்தையையா? அதிர்ச்சியுற்றாள் கல்யாணி.

“ஊர் பேர் தெரியாத குழந்தையை தத்து எடுத்து, அவங்க சொத்தை அது ஆள்றதைவிட தங்கையோட மகன் ஆள்றது தப்பா? அதிலும், உங்க அண்ணன் பெற்றோர் இல்லாத என்னை கண்ணின் இமைபோல காத்தவர். அவர் ஆசைப் படறது தப்பா?”

“என் உயிரையும் அண்ணனுக்காக கொடுப்பது தான் முறை. ஆனால் என் குழந்தையைத் தெய்வம் எனக்குத் தந்ததை. . “

“உன் வேதனை புரியுது நமக்கென்ன வயசாயிட்டுதா என்ன? இன்னொன்றை பெத்து கிட்டாப்போச்சு அப்படியே பொறக்கலைன்னாலும் நம் குழந்தை வேறு எங்கே இருக்கிறது. நம் கண் முன்னாலதானே?”
வேறு வழியின்றி அரை மனதோடு ஏத்துக் கொண்டாள் கல்யாணி.
அன்றிலிருந்து –

ராமகிருஷ்ணனும், கமலாவும் கல்யாணியை எப்போதையும்விட மிக கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

பிரசவ காலம் நெருங்க நெருங்க கல்யாணி மட்டும் கலவரமடைந்தாள்.
பிரசவ வலி கண்டதும் ராமகிருஷ்ணனும், கமலாவும் பரபரப்படைந்தனர் விசுவமே கல்யாணி படும் அவஸ்தை கண்டு துவண்டான். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள்.

டாக்டர் பரிசோதித்து விட்டுச் சொன்னார். ‘குழந்தை குறுக்கே இருக்கு. ஆபரேஷன் பண்ணித்தான் எடுக்கணும்!”

ராமகிருஷ்ணனும், கமலாவும் வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டினர்.

சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் குழந்தையோடு வெளியில் வர –
ராமகிருஷ்ணன், கமலா, விசுவம் மூவரும் ஆவலோடு ஓடி வர –
நர்ஸ் சொன்னாள்.

“பெண் குழந்தை, தாய் நல்லாயிருக்காங்க.”

மூவர் முகத்திலும் ஏமாற்றமும், கவலையும் குடிகொள்ள, மயக்கம் நீங்கிய கல்யாணியைப் பார்க்க விரைந்தனர்.

கல்யாணி எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த விசுவம் ராமகிருஷ்ணனும், கமலாவும் வெளியில் சென்றதும் அவளிடம் கேட்டான்.

“என்ன கல்யாணி, அண்ணனும், அண்ணியும் கவலையோடு இருக்க, நீ இத்தனை மகிழ்ச்சியோடு இருக்கியே ஏன்?”

“கடவுள்கிட்டே நான் பிரார்த்தனை பண்ணிகிட்டேன், அது பலிச்சுட்டுது . . அதான் . . . .”

“கல்யாணி நீ என்ன சொல்றே?”

“ஆமாங்க இது ஆண் குழந்ந்தயா இருந்தா அதை தத்து கொடுக்கணும்னு சொன்னீங்க. ஒப்புக்காக ஒத்துக்கிட்டேன். அதான் பெண்ணாக இருந்தால் கொடுக்கவேண்டாம் பாருங்க. பெண்ணாக பிறக்கணும்னு சதா கடவுளை வேண்டிகிட்டேன் பலிச்சிடுத்து என்னை மன்னிச்சிடுங்க.”

விசுவம் மட்டுமல்ல வெளியில் நின்று அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனும், கமலாவும்கூட அந்தத் தாய்மையின் சிறப்பை எண்ணி நெகிழ்ந்து போனார்கள்.

– சுமங்கலி 1-6-91

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *