குரலும் பதிலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 1,128 
 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முகுந்தன் வெறிபிடித்தவன்போலக் கட்டிலின்மேல் உட்கார்த்திருந்தான். பக்கத்தில் ராதை நின்றுகொண்டிருந்தான். கடைசியாக அறையை விட்டுச் சென்ற புரோகிதர் தன் பின்னால் கதவைச் சாத்திக் கொண்டு போனார். எழுந்து போய் அதைத் தாழிடக்கூடத் தோன்றாமல் அவன் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தான். ஓர் அழகிய கோபப் பார்வையுடன் ராதை அவன் சும்மா உட்கார்ந்திருப்பதைக் கடிந்துகொன்பவள்போல மெதுவாகச் சென்று கதவைத் தாழிட்டான். பிறகு கட்டிலண்டை வருவதற்காகக் காலெடுத்து வைக்கும்போதே கண்ணெடுத்து ஒருதரம் புருஷன் முகத்தைப் பார்த்தாள். அதில் ஒருவிதமான உணர்ச்சியையும் அவள் காண முடியவில்லை. ஒருவிதமான திகில் அதில் இருந்தது போல அவளுக்குப் பட்டது. பாதி வழியில் மேஜையருகே அப்படியே நின்று போய்விட்டாள்.

முகுந்தன் அவளைப் பார்த்தான் கண்களால்; அந்தப் பார்வையே, ஒவ்வொரு தடவையும் அவன் பார்த்த பொழுது அவன் எண்ணங்களை எங்கேயோ கொண்டு போயிற்று. ஆகையால் அவளை அவன் உண்மை யில் பார்க்கவே இல்லை. அவன் எண்ணங்கள் அவனைப் பார்க்க விடவில்லை.

அன்று காலையில் அவளை முதல் முதலில் பார்த்ததிலிருந்துதான் அவனுக்கு அந்தத் திக்பிரமை. கல்யாணமான பிறகு எட்டு வருஷங்கள் கழித்து அப்பொழுதுதான் அவனை அவன் பார்த்தான். அவளுக்குப் பத்து வயசு; அவனுக்கு இருபது – கல்யாணத்தின்பொழுது.

கல்யாணத்திற்கு வந்திருந்த அவன் நண்பன் சுந்தரம் கேலி செய்தான். ‘இந்த எலிக்குஞ்சை எங்கேயடா தேடிப் பிடித்தாய்? இன்னும் பத்து வருஷமாகுமே இது வீட்டிற்கு வருவதற்கு? உன் முழங்காலுக்கு வருவான்! பேஷ்!”

ஆமாம், அன்று எலிக்குஞ்சுபோல இருந்தவள் சாந்தி முகூர்த்தத்தன்று காலையில், மணையின் முன்பு அவன் பக்கத்தில் குதிரைப்போல நின்றாள். அவள் உடலில் பொங்கி நின்ற இளமையின் ஜ்வாலை அவன்மேல் சூடாக அடித்தது; அவன் உடல் குன்றிற்று; உள்ளங்கூடக் குன்றிற்று. அவளுடைய மேனியின் மினுமினுப்பு அவன் கண்களைக் கூசச் செய்தது.

கல்யாணம் ஆன தினத்தன்றே சம்பந்திகளிடையே மனஸ்தாபம் ஆரம்பித்தது. காரணங்கள் என்னவென்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. முகுந்தன், மாமியார் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட அவன் தாய் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு சமயத்தில் முகுந்தனுக்கு மட்டும் மனச்சாட்சி வந்து முள்நிற்கும்.

ஆனால் தாயின் கோபத்திற்குப் பயத்து அவன், தொட்டுத் தாலி கட்டினவள் ஒருத்தி இருந்தாள் என்பதையே நாளடைவில் மறந்தான். முதலில் அவளுக்கு ஆறுதலாகக் கடிதங்கள் ரகசியமாக எழுதிக் கொண்டிருந்தான். அந்த விஷயம் தாய்க்கு எப்படியோ தெரித்து விட்டது. பிறகு அதையும் நிறுத்திவிட்டான்.

ராதை அப்பொழுது ஒல்லியாகவும் இளைத்தும் சின்னஞ் சிறுமி யாகவும் இருந்ததால் முருந்தன் மனத்தில் கல்யாணத்தின்போது ஒரு விதமான கிளர்ச்சியும் ஏற்படவில்லை. அவளை ஒரு குழந்தை போலத் தான் பாவிக்க முடிந்தது அவனால். நலங்கின் போதும், ஊஞ்சலின் போதும் அவன் எதிர்பார்த்திருந்த புல்லரிப்பும் ஆனந்தமும் அவனுக்கு ஏற்படவில்லை. ராதையின் கை அவன் கையில் துடிக்கவில்லை என்று அவன் மனத்தில் சலிப்பு ஏற்பட்டது. அவளுடைய முகத்தில் ஆவலோ, உணர்ச்சியோ எதிர்பார்த்த அளவு ஒன்றும் அவனுக்குத் தென்பட வில்லை. ‘சரிதான், சுந்தரம் சொன்னதில் ஒன்றும் பிசகில்லை’ என்று தீர்மானித்துவிட்டான்.

அவன் கலாசாலைப் படிப்பு முடிந்தது; வேலையில்லாமல் ஊர் சுற்றினான்; பொழுதை வெட்டியாகக் கழித்தான்; எழுதினான்; சிறை சென்றான்; இப்படியாக மூன்று வருஷங்கள் கழிந்தன. அதன் பிறகு அவன் சர்க்கார் வேலையில் அமர்ந்து வாழ்க்கையின் உன்னதத் தூண்டுதல்கள் எல்லாம் அற்றுப் போய், சுகத்தையும் அதைக் கொடுக்கும் என்று அவன் எண்ணின பணத்தையும் தேடிப் பொறி தட்டித் திரிந்தான். அப்பொழுதெல்லாம் பழைய சுந்தரம் தான் அவனுக்குத் தோழன்.

வருமான வரி இலாகா குமாஸ்தாவாக முகுந்தன் ஏராளமான பணம் சம்பாதித்தான். அவன் தாயும் தகப்பனாகும். கிராமத்தில் இருந்தார்கள். அவளை யாரும் கேட்பாரில்லை. அவ்வளவுதான். சுந்தரத்தின் உதவிக் கொண்டு அதளப்பாதாளத்தில் இறங்கினான்.

அந்த வாழ்வில் அவன் ஒன்றையுமே விலக்கென்று வைத்துக்கொள்ளவில்லை. மற்றோர் மூன்று வருஷங்களுக்குப் பிறகு உடம்பும் மணமும் உடைந்து வியாதிஸ்தனாக அந்தச் சகதியிலிருந்து வெளியேறினான்- ஒரு தினுசாக. அதற்கு அப்புறந்தான் அவனுடைய தாய் தான் செய்த பிசகை அறிந்தாள். பிள்ளையை ஒரு குடித்தனத்தில் வைத்து நிலை நிறுத்த வேண்டுமென்று மறு விவாகப் பிரயத்தனங்கள் செய்தாள். ஆனால் முகுந்தனுடைய நடத்தையைப் பற்றிய விவரங்கள் எங்கும் பரவிவிட்டன. பெண்களை வைத்துக்கொண்டு திண்டாடுகிறவர்கள் கூடக் கிட்ட வர யோசித்தார்கள்.

பிறகு அவள் தாய் வேறு வழியின்றிச் சம்பந்திகளுடன் சமரசப் பேச்சு நடத்த ஆரம்பித்தாள். மற்றும் ஒரு வருஷம் கழிந்த பிறகு சம்பத்தி களும் சாந்தி முகூர்த்தம் செய்து பெண்ணைக் கொண்டு வந்து விடச் சம்மதித்தார்கள்.

அன்று காலையில் ராதையைப் பார்த்த பிறகுதான் தன் மனைவி யென்று ஒருத்தி, தனியாக எங்கோ வளர்ந்து கொண்டு வந்திருக்கிறாள் என்பது ஓர் ஆச்சரியமான உண்மைபோல் அவன் மனத்தில் தாக்கிற்று. அதை உணர்ந்ததும் அவனை அறியாமல் அவன் உடல் நடுங்கிற்று.

அவன் பத்மா வீட்டில் பகலும் இரவுமாகக் கழித்த காலமெல்லாம் ராதையின் அழகு அதன்பாட்டிற்கு, அதை அறியாமல், தான் வளர்வதே வீண் என்பதை உணராமல், வளர்ந்துகொண்டு வந்தது! அவளுடைய வாழாவெட்டி நிலைமையால்தான் அந்த வளர்ச்சியைத் தடுக்க முடிந்ததா? தடைப்பட்ட கொடி நுனி எங்காவது சுற்றி வளைத்து வெளியேறி விடுவதுபோல, ராதையின் யெளவனம் எப்படியோ தலையெடுத்து நின்றது, அவள் துக்கத்தையும் மீறிக்கொண்டு.

நிமிஷத்திற்கு நிமிஷம் ராதை திரும்பித் திரும்பிக் கணவன் முகத்தைக் கவலையுடன் கவனித்தாள். அவள் தன் ஆவற் பெருக்கையே அடக்க முயலுபவள்போல் உதட்டைப் பல தடவை கடித்துக்கொண்டாள். ஆனால் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை அவள்.

மின்சார விளக்கைத் தவிரக் குத்துவிளக்குக்கூட ஒன்று அறையில் இருந்தது. அதிலிருந்து எண்ணெய் குறைந்து திரி படர்ந்தெரிய ஆரம் பித்தது. அதை உற்றுப் பார்ப்பவன் போல முகுந்தன் தன் பார்வையை அதில் செலுத்தினான். அது அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் வாழ்க்கை இன்பத்தையே அவனுக்குச் சூசனை செய்து காட்டுவதுபோல் இருந்தது.

சற்றுத் தூரத்தில் பூமியே வெடித்து அதிலிருந்து வெளியே வந்த ஒரு வியப்புப்போல ராதை விசித்திரமாக நின்றாள். முகுந்தன் விளக்கையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.

ஆமாம்! அன்று, கல்யாணத்தின்பொழுது, முகுந்தன் ஒரே துடிப்பாக நின்றாள்; ராதை அதற்குப் பதில் சொல்லத் தெரியாத பச்சைக் குழந்தை யாய் இருந்தான். இன்று அவள் சௌந்தர்யத்தைச் சுமந்துகொண்டு மெய் நிறைந்த யுவதியாக நின்றாள். அவனை எதிர்பார்த்து. ஆசை யோடு எழுந்தோடி அவளை வரவேற்க அவனுக்கு அப்பொழுது அவா இல்லை; ஊக்கம் இல்லை.

பெண்ணழகு அளிக்கும் பெருமகிழ்ச்சியை அவன் அடைத்து அநுப வித்துச் சலித்துப் போய்விட்டான். பெண்ணின் பார்வை-ராதை யின் பார்வை-இப்பொழுது அவன்மேல் விழுந்தபொழுது வெறும் கரிக்கட்டையின் மேல்தான் விழுந்தது. முன்போலப் பளிச்சென்று பிரதிபலிக்கும் கண்ணாடிமேல் அல்ல. அவளுடைய இளமையின் அழைப்புக் குரல் அவன் காதில் பட்டது; படாமல் இருக்கவில்லை. அதற்குப் பதில் குரல்கொடுக்க அவன் தொண்டையில் தொனிப்பு இல்லை.

தீராதென்று மெல்ல எழுந்துபோய் முகுந்தன் ராதையின் கையைப் பற்றமுயன்றான். அதுவரையில் சிலைபோல நின்றிருந்தவள், ஏதோ பாம்பு தன்னைத் தீண்டவந்தது போலச் சடக்கென்று ஒதுங்கி நின்றாள். ஏன் அப்படிச் செய்தாள் என்பது அவளுக்கே தெரியாது. அந்தக் கணம் வரையில் முகுந்தன் ஏன் எழுந்து பாய்ந்துவந்து தன்னைக் கைப்பற்ற வில்லை என்று பிரமித்து நின்றவன், திடீரென்று அவன் அருகே வந்ததும் விலகி நின்றாள்.

‘ராது, கிடக்கிறது, வா!” என்று முகுந்தன் மறுபடியும் நெருங்கினான்.

‘வேண்டாம்!’ என்று வாய்க்கு வந்ததைச் சொன்னாள் ராதை.

‘என்ன வேண்டாம்!’ என்று முகுந்தன் ஆச்சரியப்பட்டுக்கொண்டு பின்வாங்கி நின்றான்.

தான் சொன்ன வார்த்தையை முகுந்தன் திரும்பிச் சொன்ன பிறகுதான் தான் சொன்னது என்னவென்று ராதைக்குத் தெரிந்தது.

அறைக்கு வெளியில் பெண்கள் படுக்கையுள் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். நாகஸ்வரக்காரன் வெகு உற்சாகத்துடன் சௌராஷ்டிர ராகத்தை அக்கு அக்காக அலசிக்கொண்டிருந்தான். தவில் காரன் வெறி பிடித்தவன்போல அடித்துக்கொண்டிருந்தான். ஏழரை மணிக்குள் முகூர்த்தமாதலால் வெளியே சாப்பாட்டிற்கு இலைபோட ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன.

முகுந்தனுக்கு அதிக நேரம் நிற்க முடியவில்லை. அவ்வளவு பலவீனம் அவனது தேகம். திடீரென்று படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டான். ‘அப்பாடா’ என்று இடுப்பைப் பிடித்துக்கொண்டான். அப்பொழுது எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அவன் உருவம் தெரிந்தது.

ஒட்டின முகத்தில் உதடுகள் வெளுத்திருந்தன. வெற்றிலைக் காவி அவற்றில் பொருந்தாமல் ஒவ்வோரிடத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. மாலை தாங்கிய மார்பு அவனுக்கே பார்க்க அருவருப்பாக இருந்தது. அதைக் கண்டதும் அவன் முகம் விகாரம் அடைந்தது. கொஞ்ச தூரத்தில் அம்மன்போல அலங்காரத்துடன் நின்ற ராதையையும் பார்த்தான். ‘வேண்டாம்!” என்று அவள் அர்த்தத்துடன் சொன்னாளோ இல்லையோ, அவனுக்கு அந்த வார்த்தையில் அர்த்தம் தோன்றிற்று. அவனுக்கு, ‘குப்’ என்று வியர்த்தது.

‘ராது! இங்கே வாயேன்!’ என்றான் முகுந்தன் அயர்ந்த குரலில்.

ராதையின் முகம் அனல்பட்ட பூப்போல வாடிவிட்டது நிமிஷத்தில் மாலையைக் கழற்றி மேஜையின்மேல் போட்டாள்; காசுமாலையையும் கழற்றி அதன்மேல் வைத்தாள்.

‘ராதா, வரமாட்டாயா?’ என்று முகுந்தன் இரக்கம் தோய்ந்த குரஸில் கேட்டான்.

‘இத்தனை வருஷகாலம் ஆயிற்றா, இந்த வார்த்தைகளைச் சேர்ப்பதற்கு?’ என்றாள் ராதை.

‘ராதா-‘

‘என் பெயர் நினைவில்லை, இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது-?’

‘என்னை மன்னி, ராதா’

‘இப்பொழுது ஏது நினைவு வந்தது, திடீரென்று?’ முகுந்தன் வாய் அடைத்துப்போய்விட்டது.

‘இவ்வளவு வருஷம் கூப்பிடவேண்டாம் என்று தோன்றினால், என்னை எதற்காகக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?’

‘என் தாயார்’

‘உங்கள் தாயா என்னைக் கல்யாணம் செய்து கொண்டாள்? பத்து வருஷங்கள்! அடடா! நீங்கள் கூப்பிடுவீர்கள் என்று ஏங்கி ஏங்கி, பொங்கிப் பொங்கி, என் உள்ளம் அடங்கிப்போய்விட்டது. இன்று வந்து கூப்பிடுகிறீர்கள். நான் இப்பொழுதும்… ஆனால் உங்கள் குரலில் ஆர்வம் இல்லையே!’

முகுந்தன் தலை குனிந்துகொண்டு படுக்கையின்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லிலும் எவ்வளவு உண்மை இருந்தது! எவ்வளவு பெரியவள்போலப் பேசினாள்!

‘வா!’ என்று நீங்கள் உண்மையாகக் கூப்பிட்டாலல்லவா நான் முன்னால் அடி எடுத்துவைக்க முடியும்? இத்தனை நாள் இருந்தீர்களே திரும்பிப் பாராமல்,- இன்று ஏன் வந்து என்னை ஏமாற்றுகிறீர்கள்? நான் பாட்டிற்கு அடைத்துக் கொண்டு கிடந்தேனே; என்னை ஏன் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்?’ என்று கண்கள் சிவக்கக் கேட்டான் ராதா.

‘இப்பொழுதுதான் ராதா புத்தி வந்தது. இனி மேல்..’

‘நீங்கள் இஷ்டப்பட்டபொழுது கூப்பிடலாமோ-வேண்டா வெறுப்பாக?’ என்று அடக்க முடியாக் கோபத்துடனும் வெறுப்புடனும் கேட்டாள் ராதா.

முகுந்தன் திடீரென்று படுக்கையை விட்டுக் கீழே இறங்கினான்.

‘ராதா, உன்னையும் கெடுத்தேன்; தானும் கெட்டேன். என்னை மன்னித்துவிடு. அன்று நம் கைகள் கலந்த குற்றத்தோடு நிற்கட்டும். களங்கமின்றிச் செழித்திருக்கும் இந்தச் சௌந்தரியத்தைத் தீண்ட என் கை கூசுகிறது… ஆமாம்! உன்னைத் தொட யோக்யதை அற்றவள் நான்.’

முகுந்தன் உணர்ச்சி மேலிட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து அழுதான். ராதா ஸ்தம்பித்துப்போய் நின்றாள் அப்படியே, உயிரற்ற பதுமை போல்.

– பாரததேவி 01.09.1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *