கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 8,970 
 

(2021ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

அந்த பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றாற் போல் பசுமை போர்த்தி காணப்பட்டது. கிராமத்தை ஒட்டிச் செல்லும் ஏரி. அந்த இடத்தை குளுமைப்படுத்தி அந்த கிராமத்திற்கே ஒரு அழகை தந்தது. 

சுற்றிலும் மரம், செடி, கொடிகளுடன் உள்ளடங்கி இருந்த பண்ணை வீட்டிற்கு சொந்தக்காரனான சண்முகம் வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். 

“இன்னைக்கு தேங்காய் பறிக்க டவுனிலிருந்து ஆள் வர்றாங்க இல்லையா ஏழுமலை” 

தோட்டத்தை பெருக்கி கொண்டிருந்த ஏழுமலை வேலையில் ஈடுபட்டபடியே 

“ஆமாங்க ஐயா. மணிக்கு வந்திடுவாங்க. இதோ பத்து நிமிஷம் முடிச்சுட்டு தோப்புக்கு கிளம்பிடறேன். நீங்க மெதுவா வாங்க” 

“சாப்பிட்டியா ஏழுமலை” 

“நேரத்துக்கு சாப்பிடலைன்னா… அம்மா கோபப்படுவாங்க. எதுக்காக உழைக்கிறோம். எல்லாம் இந்த வயித்துக்குத்தான்னு அம்மா சொல்வாங்க. மகாராசி அவங்க கையால இட்லி, சாம்பார் திவ்யமா சாப்பிட்டேன்” 

சிரித்தபடி அவனை பார்க்கிறார். ரொம்ப வருஷமாக அவரிடம் வேலை பார்ப்பவன் விசுவாசமானவன். 

“ஐயா, நாளைக்கு ஊரிலிருந்து தம்பிங்க குடும்பத்தோட வர்றதாக அம்மா சொன்னாங்க. இளநீர் குலை நாலைஞ்சு பறிக்க சொல்லி வீட்டுக்கு கொண்டு வரணும்” 

பேசியபடி பின்பக்கம் போக, 

வாசலுக்கு வருகிறாள் வைதேகி. 

“என்ன வைதேகி முகத்தில் ஒரு ஜொலிப்பு தெரியுது. உன் மகன்கள் வரப்போகிற சந்தோஷமா…” 

“பின்னே இருக்காதா… இரண்டு பேரும் ஊர் பக்கம் வந்து ஆறு மாசமாச்சு. நம்ப கிரி மகனுக்கு ஒன்றரை வயசாயிருக்கும். குழந்தை பிடிச்சிட்டு நடப்பதாக சொன்னான். பேரனையும், பேத்தியையும் பார்க்கணும்னு மனசு தவிக்குது” 

“ரகு பேசினானா வைதேகி” 

“எப்படியும் மதியம் சாப்பாட்டிற்குள் வர்றதாக சொன்னான் இரண்டு பேரும் காரில் தானே வர்றாங்க. வந்திடுவாங்க” 

அவள் குரலில் வருத்தம் தெரிகிறது 

“ஏன்ம்மா பெரிய மகன் ரகுவை நினைச்சதும் மனசு வேதனை படுதா” 

“ஆமாங்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பிள்ளைகளையும் அருமை, பெருமையாக வளர்த்தோம். பெரியவன் டாக்டராகவும், சின்னவன் என்ஜினீயராகவும் நம்மை பெருமைப்பட வச்சாங்க. குறை சொல்ல முடியாத தங்கமான பிள்ளைகள். 

நமக்கு வந்த மருமகள்களும் அப்படியே. அன்பும், பாசமுமாக பழகறாங்க. எல்லாம் இருந்தும் சின்னவனுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த கடவுள், பெரியவனுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகியும், இன்னும் குழந்தை பாக்கியத்தை தரலையே அதை நினைக்கும்போது மனசு வேதனைப்படுதுங்க” 

“வருத்தப்படாதே. கால தாமதமானாலும் கடவுள் நிச்சயம் நல்லதை செய்வாரு. இப்ப டிரீட் மெண்டில் இருப்பதாக ரகு சொன்னான் இல்லையா. இப்ப நேரில் வரும்போது நிச்சயம் நல்ல செய்தி சொல்வாங்க.’ 

”உங்க வாக்கு முகூர்த்தம் பலிக்கட்டும். நம்ப காத்தாயி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யறேன்” 

சண்முகம், வைதேகிக்கு ரகுவரன், கிரிதரன் இரண்டு பிள்ளைகள். ரகுவரன் டாக்டருக்கு படித்து திருச்சியில் நர்சிங் ஹோம் வைத்து நடத்திக் கொண்டிருக்க கிரிதரன் கோயமுத்தூரில் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்தான். 

ரகுவரன் திருமணமானவுடன் அப்பா, அம்மவை தன்னுடன் வந்து இருக்கும்படி அழைத்தான். 

“இல்லப்பா. எங்களோட வாழ்க்கை இந்த கிராமத்திலேன்னு முடிவாகிடுச்சு. வயல்வரப்பு, தோட்டம்னு பராமரிக்கணும். நமக்கு சோறு போட்ட பூமி. நம்மை நம்பி நாலு குடும்பங்கள் பிழைக்குது. உடம்பில் தெம்பு இருக்கிற வரை. இப்படியே ஓட்டுறோம். உங்க காலத்தில் எப்படி பண்றதுன்னு யோசிங்க. உங்க வாழ்க்கையில் முன்னேற்றத்தை பாருங்க. பிள்ளைகளை நல்ல முறையில் ஆளாக்கியிருக்கோம்ங்கற திருப்தி உங்களுக்கு இருக்கும்ப்பா” 

ரகுவுக்கு திருமணமாகி இரண்டு வருடத்தில் நல்ல சம்பந்தம் வர, கிரிதரனின் திருமணத்தை சிறப்பாக முடித்தார்கள். 

கிரிதரனுக்கு திருமணமாகி மூன்று வருடத்தில் இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக பிறக்க, ரகுவரனுக்கு ஐந்து வருடமாகியும் குழந்தை பிராப்தம் இல்லாதது, எல்லாருக்குமே பெரிய குறையாக இருந்தது. 


கார்பூஞ்சோலை கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த ரகு யோசனையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தான். 

அருகில் அமர்ந்திருக்கும் நந்தினி கணவனை கவனித்தாள். அழகில் குறை சொல்ல முடியாதவன். நல்ல உயரம். உயரத்திற்ே கற்ற உடலமைப்பு. அடர்த்தியான மீசையும், குறுந்தாடியும் அவன் அழகை மிகைப்படுத்தி காட்டியது. 

“நந்தினி என்ன என்னையே பார்க்கிற மாதிரி தெரியுது”

“ஆமாம் என் புருஷன் எவ்வளவு அழகுன்னு ரசிச்சேன்”

“என்ன பண்றது, என்அழகோடு ஒப்பிடும்போது நீசுமார்தான் இருந்தாலும் பரவாயில்லை நீயும் பார்க்கிற மாதிரி இருக்கே” 

குறும்பு சிரிப்போடு சொல்கிறான். 

திடீரென்று சிரிப்புடன் இருந்த நந்தினியின் முகபாவம் மாறுவதை கவனித்தவன். 

“நந்தினி…என்னாச்சு ஜாலியாக பேசிட்டு போயிட்டு இருக்கோம் மூட் அவுட் ஆகிறே” 

“உங்க மனசில் மட்டும் வருத்தம் இல்லையா. அதை மறைக்க தானே இப்படி பேசறீங்க” 

“ப்ளீஸ்… நந்தினி உன்கிட்டே இதோடு எத்தனையோ முறை சொல்லிட்டேன். குழந்தைங்கிறது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, அதுவே வாழ்க்கை ஆகிடாது. நமக்கு வாழ்க்கையில் கிடைச்சுருக்கிற மற்ற நல்ல விஷயங்களை நினைச்சு சந்தோஷமாக வாழலாம் நந்தினி” 

“நீங்க என்ன தான் சமாதானம் சொன்னாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு தோணுதுங்க. எனக்குள் இப்படி ஒரு குறை இருக்கும்னு தெரியலை. எப்படியாவது குழந்தை பிறந்திடும்னு நம்பிக்கையோடு டீரிட்மெண்ட் ஆரம்பித்தோம். கடைசியில் கடவுள் கை விரிச்சுட்டாரு” 

அவள் குரல் உடைந்து ஒலித்தது. 

“உன் வயிற்றில் உருவாகும் கருமுட்டைக்கு ஒரு குழந்தையை உருவாக்கும் திறன் இல்லைன்னு தெரிஞ்சப்ப நானும் தான் உடைஞ்சு போயிட்டேன். ஒரு டாக்டராக என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன். 

என் நந்தினியால் ஒரு குழந்தைக்குதாயாக முடியலைன்னாலும் ஒரு நல்ல மனைவியாக என்னோடு கடைசி வரை வாழ்ந்தால் போதும்னு முடிவு பண்ணிட்டேன். 

நமக்கு குழந்தை வேண்டாம் நந்தினி. உனக்கு நானும் எனக்கு நீயுமாக வாழ்ந்துட்டு போவோம்” 

“உங்ககிட்டே எந்த குறையும் இல்லையே! ஒரு குழந்தைக்கு அப்பாவாகிற தகுதி உங்க கிட்டே இருக்கு. அதை நான் தட்டி பறிச்சுட்டேன். 

இப்பவும் சொல்றேன் நீங்க வேறு ஏதும் முடிவு எடுத்தாலும் அதற்கு முழு மனசோடு சம்மதிக்க தயாராக இருக்கேன்.” 

அவள் சொல்லி முடிக்க நடுத்தெரு என்றும் பார்க்காமல் சட்டென்று காரை ப்ரேக் போட்டு நிறுத்தினான். 

“இப்ப கிராமத்துக்கு போகலாமா இல்லை திரும்ப ஊருக்கு திரும்பிடலாமா” 

அவன் குரலில் கோபம் தெரிந்தது. 

‘ஐயோ என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோபப்படறீங்க” 

“வேண்டாம் நந்தினி இனி இப்படியொரு முறை சொல்லாதே. எனக்கு ஏதாவது குறை இருந்தா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா? அப்ப நாம் வாழ்ந்த இந்த ஐந்து வருட வாழ்க்கையின் அர்த்தம் என்ன நந்தினி? எனக்கு குழந்தையில்லைங்கிறது ஒரு பிரச்சனை இல்லை. நீயும் நானும் மனநிம்மதியோடு வாழ்ந்தால் போதும். 

அப்பா அம்மாவை பார்த்துட்டு தம்பி குடும்பத்தோடு ஒரு நாலு நாட்கள் சந்தோஷமாக இருந்துட்டு வரலாம்னு புறப்பட்டிருக்கோம். 

உனக்கு இஷ்டமில்லைன்னா திரும்ப ஊருக்கே போயிடலாம்”. 

“ஸாரி ஸாரிங்க தப்பா தான் பேசிட்டேன். சத்தியமா இந்த நந்தினி இந்த அழகான புருஷனை ரசிச்சுக்கிட்டு காலமெல்லாம் கூட வருவா எனக்கு நீங்க மட்டும் போதுங்க” 

மனம் விம்ம சொல்பவளை தோள் சேர்த்து அணைத்தவன்.

“இப்ப தான் நீ என்னோட நந்தினி போகலாமா” 

காரை ஸ்டார்ட் செய்ய நந்தினி கவலை மறந்து சிரிக்கிறாள். 


கார் வந்து நிற்க, 

குழந்தையை தூக்கியபடி புவனா இறங்க சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று வயது மகள் அதிதியை இறக்கி விட்ட கிரி 

“ஓடு ஓடு தாத்தா, பாட்டி வீடு வந்தாச்சு” சொல்ல தளிர்நடை பயின்று வரும் பேத்தியை எதிரில் வந்து வாரி அணைக்கிறார் சண்முகம். 

கார் சப்தம் கேட்டு வாசலுக்கு வந்த வைதேகி. புவனாவிடமிருந்து குழந்தையை வாங்குகிறாள். 

“வாங்க வாங்க பர்ஸ்ட் பர்த்டே இங்கே கொண்டாடும்போது பார்த்தது. குழந்தை பெரியவனாகிட்டானே. அஜய் என்னடா கண்ணா இந்த பாட்டியை அடையாளம் தெரியுதா?”

குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவள், பேத்தியை பார்த்து 

“அதிதி குட்டி எப்படிடா இருக்கே செல்லம்” 

“நான் நல்லா இருக்கேன் பாட்டி. நான் சமர்த்து ஆனால் தம்பி பாப்பா தான் விஷமம் பண்றான்.” 

பெரிய மனுஷத்தனமாக பதில் சொல்ல 

சண்முகம் பேத்தியின் கன்னத்தில் முத்தமிட 

“அம்மா அப்பா வாங்க முதலில் எல்லாரும் உள்ளே போகலாம் பேரன், பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் எங்களை வாசலிலேயே நிக்க வச்சுட்டீங்க” 

சிரிப்புடன் சொன்ன கிரி, பெட்டியுடன் உள்ளே போக அனைவரும் அவனை தொடர்கிறார்கள். 


“கோயமுத்தூரிலிருந்து நாங்க வந்துட்டோம். இன்னும் ரகு வர்றலையே எப்ப கிளம்பினான். போன் பண்ணினானா” 

“மதியம் சாப்பாட்டிற்குள் வந்துடுவான் என்ன பண்றது அவன் தொழில் அப்படி” 

சொன்ன சண்முகம் பேத்தி பேரனை கொஞ்சுவதில் மும்முரமாக வைதேகி, மருமகளுடன் சமையல் அறைக்கு போகிறாள். 

எல்லோரும் ரகுவரனின் வரவை எதிர்பார்த்து. சாப்பிடாமல் காத்திருக்க இரண்டு மணிக்கு வீட்டிற்குள் வருகிறான். 

காரிலிருந்து இறங்குபவர்களை எல்லோரும் வரவேற்க நந்தினி முதலில் மாமியாரிடம் இருக்கும் குழந்தையை வாங்கி கன்னத்தில் மாறி மாறி முத்தமிடுகிறாள். 

“என் செல்லம் பர்த்டே அப்ப பார்த்தது பாரேன் முகமெல்லாம் கூட மாறிப் போச்சு. புவனா அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்.” 

நந்தினி சொல்ல,

“அண்ணி பசி உயிர் போகுது. வாங்க முதல்ல சாப்பிடலாம் உங்களுக்காக தான் வெயிட்டிங். அம்மா செய்த மட்டன் பிரியாணி சாப்பிட வா வான்னு கூப்பிடுது.” 

கிரி சிரித்தபடி சொல்ல, 

தம்பியின் தோள் மீது கை போட்டு பேசியபடி உள்ளே போகிறான் ரகு. 

வீடு கலகலப்பாகவும் சிரிப்புமாக நிறைந்திருக்க இரவு சாப்பாட்டிற்கு பிறகு வாசலில் நிலவொளியில் வந்து உட்காருகிறார்கள். 

“அப்பாநம்ப கிராமத்திற்கு வந்தாலே மனசுக்கு தனி நிறைவு கிடைக்குதுப்பா. ஜன சந்தடி இல்லாமல் மரங்கள் சூழ அமைஞ்ச நம் வீடு, சில்லென்ற காற்று குடும்பத்தோடு இருக்கிற மகிழ்ச்சி இதெல்லாமே அங்க என்னன்னு தெரியலை. 

நாங்க எவ்வளவு தான் சம்பாதித்து வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தாலும் இந்த நிறைவு கிடைக்கிறதில்லப்பா” 

ரகு சொல்ல ,

“ஆமாம்பா ரகு சொல்றது ரொம்ப சரி இங்கே வந்தாலே பழைய நாட்கள் ஞாபகம் வருது. பம்ப் செட்டில் குளித்து தோப்பில் கிரிக்கெட் விளையாடியது, ஏரிக் கரையில் மணல் வீடு கட்டியதுன்னு எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள்” 

“நாங்க மட்டும் என்ன பிள்ளைகள் பக்கத்தில் இல்லாட்டியும் உங்க நினைவுகளோடு இங்கே இருக்கோம். நீங்க இரண்டு பேரும் எங்களோடு இருக்கும் நாட்கள் எங்களுக்கு சொர்க்கம்”. 

வைதேகி அன்போடு அவர்களை பார்த்து சொல்கிறாள். 

சமையல் ஆளிடம் இரவு சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்த ஏழுமலை, அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சிரித்து பேசியபடி இருப்பதை பார்த்தவன். 

“ஐயா என் கண்ணே பட்டுடும் தம்பிங்க ஊருக்கு போறதுக்கு முன்னால் பூசணிக்காய் சுத்தி போடணும்” 

“என்ன ஏழுமலை வீட்டுக்கு கிளம்பியாச்சா. ஒத்த ஆளாக இருக்கே. சாப்பிட்டு இங்கேயே படுக்க வேண்டியது தானே.” 

கிரி கேட்க, 

“பொழுதுக்கும் இங்கே தான் கிடக்கிறேன். ராத்திரி மட்டும் என் குடிசையில் போய் தலை சாய்ந்துட்டு வரேன். இதுவே பழக்கமாகிப் போச்சு. ஐயா இருப்பதாலே தனி மனுஷனாக இருந்தாலும் எந்த கவலையும் இல்லாமல் இருக்கேன்” 

“சரி நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு உள்ளே போங்க. பனிகாத்து வந்தால் உடம்புக்கு ஆகாது” 

“ஏழுமலை பக்கத்தில் டாக்டர் இருக்காரு. ஞாபகம் வச்சுக்க” கிரி சிரிப்புடன் சொல்ல 

“இருக்கட்டுமே ஊருக்கெல்லாம் தான் அவர் டாக்டர். எனக்கு என்னைக்குமே நான் தூக்கி வளர்த்த பெரிய தம்பி தான்” 

சொன்னவன் கிளம்பி போக, 

“ஏழுமலை ரொம்ப நல்ல மனுஷர் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்காரு இல்லையாப்பா”

“ஆமாம் ரகு. இந்த காலத்தில் இப்படிப்பட்ட விசுவாசமிக்க வேலையாள் கிடைப்பது கஷ்டம்” 

“ரகு நந்தினி வந்ததிலிருந்து நானும் பொறுமையாக ஏதாவது நல்ல செய்தி சொல்வீங்கன்னு பார்க்கிறேன். ட்ரீட்மெண்ட் எடுப்பதாக சொன்னீங்களே ஏதாவது விசேஷம் உண்டாப்பா” 

வைதேகி கேட்கவும் உள்ளே தொட்டிலில் தூங்கும் குழந்தை அழ, 

“புவனா அஜய் அழறான்” பரபரப்புடன் நந்தினி எழுந்திருக்க “நீங்க இருங்கக்கா நான் போய் பார்க்கிறேன்” 

புவனா எழுந்து உள்ளே போக, 

உட்கார்ந்திருந்த வைதேகி நின்று கொண்டிருக்கும் நந்தினியின் கை பிடிக்கிறாள். 

“உட்காரும்மா டாக்டர் என்ன சொல்றாங்க. கூடிய சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும் தானே.”

“அம்மா அவளை தொந்தரவு பண்ணாதீங்க நானே விபரமாக சொல்றேன் இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை ப்ராப்தம் இல்லம்மா” 

“என்னப்பா சொல்ற” 

அனைவரது முகத்திலும் அதிர்ச்சி தெரிகிறது. 

நந்தினி பொங்கி வரும் கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கி தலை குனிகிறாள். 

“ஆமாம்மா எல்லா விதத்திலும் முயற்சி பண்ணியாச்சு நந்தினியின் கருமுட்டை சரியான வளர்ச்சி இல்லாததால் குழந்தையை உருவாக்கும் திறன் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இனிமேல் குழந்தையை பற்றி பேசறதை நிறுத்திடுங்க. நாங்க இரண்டு பேரும் சந்தோசமாக இருக்கோம் அவ்வளவு தான்” 

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அனைவரும் அமைதியாக இருக்க 

“ரகு நீ சொன்னதை கேட்டதும் உண்மையில் மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருக்கு, அண்ணியை சிங்கப்பூர் எங்காவது கூட்டிட்டு போய் பெரிய ஹாஸ்பிடலில் காட்டலாமா?”

“இல்லை கிரி! நான் ஒரு டாக்டர் எனக்கு தெரியும் எந்த வாய்ப்பும் இல்லை, விட்டுடுங்க. இப்ப என்ன உன் குழந்தைகளும் எங்க குழந்தை மாதிரி தான். நந்தினி சங்கடப்படுவா இந்த விஷயம் பேச வேண்டாமே” நந்தினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரகு சொல்ல, 

”ரகு, நந்தினி கவலைப்படாதீங்க, நமக்குன்னு கிடைப்பதை கடவுள் நிச்சயம் தட்டிப்பறிக்கமாட்டார். காலங்கள் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியிருக்கு. உங்க வாழ்க்கையிலும் அற்புதம் நடக்கும். உங்க இரண்டு பேரையும் அம்மா அப்பான்னு கூப்பிட நிச்சயம் ஒரு குழந்தை வரும். என் மனசு சொல்லுது”. 

சண்முகம் சொல்ல ரகுவின் இதழ்களில் விரக்தி சிரிப்பு படர அதற்கு மேல் தாங்கமாட்டாதவளாய் வைதேகியின் மடியில் படுத்து நந்தினி அழ, அவளை சமாதானம் பண்ண கூட தோன்றாமல் சிலையாக அமர்ந்திருக்கிறாள் வைதேகி.

அத்தியாயம்-2

தோட்டத்தில் பூத்த மல்லிகை மொட்டுகளை பறித்து வந்து சரமாக தொடுத்தாள் புவனா. 

அருகில் குழந்தையை மடியில் படுக்க வைத்து நந்தினி தூங்க வைத்துக் கொண்டிருக்க 

“அக்கா நான் ஒன்று சொன்னால் தப்பா நினைக்க மாட்டீங்களே” 

பீடிகையுடன் புவனா ஆரம்பிக்க. 

‘அப்படியென்ன கேட்கப் போற கேளு புவனா” 

“நேத்து ரகு அத்தான் விவரமாக சொன்னாரு. இருக்கட்டுமே இப்ப எவ்வளவோ ட்ரீட்மெண்ட் வந்தாச்சு டோனர் மூலம் கருமுட்டை வாங்கி ஏன் ட்ரை பண்ணக் கூடாது” 

சிறிது நேர மவுனத்திற்கு பிறகு 

“அதை பத்தியும் பேசியாச்சு புவனா. என் மூலமாக வர்ற குழந்தையை தான் அவர் எதிர்பார்த்தாரே தவிர அவருக்கு இதில் இஷ்டமில்லை புவனா. நானும் அதை தான் நினைக்கிறேன். இந்த பேச்சை விட்டுடுவோம். இதோ இந்த அஜய் செல்லம் என்னை பெரியம்மான்னு கூப்பிடுவானே அதுபோதும் எனக்கு” 

தூங்கும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுகிறாள். 

”உங்களை நினைச்சா கஷ்டமா இருக்குக்கா உடம்பில் நல்ல ரத்தம் ஓடும்போது குழந்தையின் அருமை தெரியாது, நாளாக ஆக மனசுக்குள் ஒரு வெறுமை வந்து உட்கார்ந்துக்கும்.” 

அவர்கள் பேசுவதை கேட்டபடி அங்கு வந்த கிரி 

“புவனா என்ன பேச்சு இது அதான் அண்ணி இந்த பேச்சை விட சொல்றாங்கல்ல அப்புறம் திரும்பதிரும்ப அவங்க மனசு கஷ்டப்படறமாதிரி பேசற அவங்கவங்க வாழ்க்கையை எப்படி நடத்தணும்னு அவங்களுக்கு தெரியும். 

கல்யாணமாகி மூணு வருஷத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாகிட்டோம்னு கர்வத்தில் பேசற மாதிரி இருக்கு” 

கிரி கோபமாக சொல்ல. 

“நான் நல்லதை நினைச்சு சொன்னது உங்களுக்கு தப்பாக தெரியுது. இனி நான் வாயை திறக்க மாட்டேன் போதுமா” 

ஆத்திரம் அடைக்க சொன்ன புவனா கட்டிய மல்லிகை சரத்தை அப்படியே போட்டுவிட்டு நந்தினியின் மடியில் தூங்கும் குழந்தையை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே போக 

“என்ன தம்பி இது. ஏன் இப்படி கோபமாக பேசினீங்க. பாவம் புவனா மனசு கஷ்டப்பட்டிருக்கும். 

“இல்லை அண்ணி அவங்கவங்க இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதோட வலி தெரியும்.நான் சரியாக தான் பேசினேன்.”


தோட்டத்தில் தனிமையில் ஏதோ யோசித்தபடி நின்று கொண்டிருக்கும் ரகுவிடம் வருகிறாள் வைதேகி. 

“ரகு எங்களுக்கு குழந்தை இல்லாதது ஒரு பிரச்சனையில்லை நாங்க சந்தோஷமாக இருப்போம்னு சொல்லிட்டே… பார்த்தால் அப்படி தெரியலையேப்பா” 

இதற்கு மாற்று வழி இல்லையாப்பா 

“என்னம்மா வழி விஞ்ஞான பூர்வமாக நடக்காதுன்னு தெரிஞ்சாச்சு அப்பா சொன்ன மாதிரி ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் தான் உண்டு. நீங்க ஏன் வருத்தப்படறீங்க பேரன் பேத்தின்னு கிரி மூலமாக பார்த்தாச்சு. அப்புறம் என்னம்மா”

“என்னப்பா இப்படி பேசற உன் குடும்ப வாரிசை நாங்க பார்க்க வேண்டாமா டாக்டருக்கு படிச்சு மக்கள் உயிரை காப்பாற்றும் புனிதமான தொழிலை செய்யற கடவுள் உன்னை போய் சோதிக்கிறாரே சரி பார்ப்போம். இதுக்கும் ஏதாவது வழி கிடைக்கும். நீயும் நந்தினியும் மனசு விட்டுவிடாமல் தைரியமாக இருங்க.” 

மகனிடம் ஆறுதலாக பேசுகிறாள் வைதேகி. 


காரில் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 

“நீ கவனிச்சியா நந்தினி வழக்கமாக கிராமத்துக்கு போனால் வர்ற உற்சாகம் குறைஞ்ச மாதிரி இருக்கு இல்லையா. நம்ம விஷயம் கேள்விப்பட்டபிறகு ஆளுக்கொரு யோசனையில் இருந்தாங்க. அம்மா ஆறுதல் சொன்னாங்களே தவிர அவங்க மனசில் ஆயிரம் யோசனை. 

நம்மால அவங்க சந்தோஷம் குறைஞ்சிடுச்சு” 

“அது மட்டுமில்லைங்க உங்க தம்பி தேவையில்லாமல் புவனாவை கோவிச்சிக்கிட்டாரு எனக்கு யோசனை சொல்ல போயி பட்டுனு சப்தம் போட்டு பேசிட்டாரு. எனக்கே சங்கடமாக போச்சு” 

“எனக்குஒண்ணு மட்டும் தோணுது நந்தினி. இப்போதைக்கு கிராமத்து பக்கம் போக வேண்டாம். அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும்.” 

பதில் சொல்லாமல் மவுனமாகிறாள் நந்தினி. 


“அதிதி வெளியே போய் விளையாடும்மா. அப்பாவுக்கு ஆபீசுக்கு லேட்டாகுது கிளம்பணும்” 

“அப்பா… தம்பி பாப்பா கூட விளையாடவா” 

“ஓகே அவன் பக்கத்தில் உட்கார்ந்து சமத்தாவிளையாடணும்” ரூம் கதவை திறந்து உள்ளே வருகிறாள் புவனா. 

அதிதி லட்சுமி அக்கா கூப்பிடறா போய் குளிச்சிட்டு வா” குழந்தைகளை கவனிக்க ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருந்தாள். 

அதிதி போக 

“உங்களுக்கு டிபன் ரெடியா இருக்கு சாப்பிடலாம்” 

“என்ன புவனா இன்னும் உன் கோபம் குறையலையா. கிராமத்திலிருந்து வந்ததிலிருந்து சரியா முகம் கொடுத்து பேச மாட்டேங்கிறே” 

மனைவியின் அருகில் வருகிறான் கிரி.

“போதும் இனி உங்க குடும்ப விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன். நல்லதை தானே சொன்னேன். உங்க அண்ணன் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் என்ன பிறக்காட்டி என்ன தேவையில்லாமல் என்னை டென்சன் பண்ணிட்டீங்க” 

“சாரி புவனா கோபப்படாதே இது ரொம்ப சென்சிடிவ் வான விஷயம். அவங்க முடிவு பண்ண வேண்டியது. அண்ணன் குடும்பமாக இருந்தாலும் நாம் தலையிடமுடியாது.” 

“இருக்கட்டும் அதுக்காக கல்யாணமாகி மூணு வருஷத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாகிட்டோம்ங்கிற கர்வத்தில் பேசறேன்னு சொன்னீங்க. அதை எப்படி சொல்லலாம்” 

“அதான் ஸாரி சொல்றேன் இல்லையா” 

“அவள் முகவாய்கட்டையை பிடித்து கெஞ்ச” 

“சரி சரி எங்க பரம்பரைல அப்படி யாருக்குமே குழந்தை இல்லாமல் இருந்ததில்லை எனக்கென்னவோ உங்க அண் ணனுக்கு வேறு நல்ல இடத்தில் பெண் பார்த்திருக்கலாம்னு தோணுது. அவர் இருக்கிற அழகுக்கும், படிப்புக்கும் இவங்க பொருத்தமே இல்லை அதுமட்டுமில்லாம ஒரு தடவை பேசும்போது நந்தினி அக்கா சொன்னாங்க அவங்க ரொம்ப வருஷமா பெரிய மனுஷி ஆகலையாம் சாமிக்கெல்லாம் வேண்டி பத்தொன்பது வயசில் தான் வயசுக்கு வந்தாங்களாம். ஆரம்பத்திலிருந்தே அவங்க கிட்டே குறை இருந்திருக்கு. 

அதை மறைச்சுகூட அவங்க வீட்டில் கல்யாணம் பண்ணியிருக்கலாம்.” 

“எதுக்கு புவனா தேவையில்லாத பேச்சு. விட்டுடு” 

“அப்படி சொல்ல முடியுமா அத்தை மாமா எவ்வளவு வேதனைப்படறாங்க தெரியுமா” 

“இந்த பேச்சை இத்தோடு விடுவோம் என் புவனாவுக்கு கோபம் போயிடுச்சு இல்லையா அது போதும்” அவளை தன்னோடு சேர்த்து அணைக்கிறான். 


கிரி ஆபீசுக்கு கிளம்பி போக அஜய் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க அதிதி லட்சுமியுடன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். 

குளித்துவிட்டு வந்த புவனா செல்போன் அழைப்பதை பார்த்து ‘அம்மா தான் கூப்பிடுகிறார்கள்’. ஆவலாக ஆன் செய்கிறாள். 

“அம்மா எப்படிம்மா இருக்கே” 

“நான் இருப்பது இருக்கட்டும். என்ன புவனா கையில் போன்வச்சுருக்கே. அப்பா இல்லாமல் அம்மாதனி மனுஷியாக இருக்காளேன்னு ஒரு போன் பண்ணி விசாரிக்கிறியா” 

“என்னம்மா இது. இரண்டு பிள்ளைகளை வச்சுக்கிட்டு பொழுது விடியறது பொழுது போறதே தெரியலை. நேரம் சரியா போகுது. அப்பா இல்லாட்டி என்ன, சமையலுக்கு ஒரு ஆள், மேல் வேலைக்கு ஒரு ஆள், உன்னை கவனிக்க ஒரு ஆள்னு சவுகரியமாக தானே இருக்கே” 

“அது நான் செய்த புண்ணியம் புவனா. உங்கப்பா பிசினஸில் நிறைய சம்பாதித்து நாளைக்கு வேணும்னு சேர்த்து வச்சதால் உன்னையும் நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து சவுக்கியமாக இருக்கேன். 

உன் சித்தியை பாரு ரொம்பவே கஷ்டப்படறாஉன் சித்தப்பா இரும்பு கடை வச்சு ஏகப்பட்ட நஷ்டம். கடன் அதிகமாக இருக்காம். அது மட்டுமில்லை உன்னோட இரண்டு வயசு பெரியவள் உன் சித்தி மகள் புஷ்பா. அவளுக்கு ஒரு நல்ல இடம் அமையலை. வயசாகிட்டே போகுது இரண்டாம் தாரமாக இருந்தாலும் கொடுக்கலாம்கற முடிவுக்கு வந்துட்டாங்க என்ன செய்யறது உன் சித்தியை நினைச்சால் தான் எனக்கு கஷ்டமா இருக்கு. 

“அதுக்கு நாம என்னம்மா பண்ண முடியும். அவங்கவங்க தலையெழுத்து நீ கண்டதையும் நினைச்சு உடம்பை கெடுத்துக்காதே. சரி… சரி குழந்தை அழற மாதிரி இருக்கு போய் பார்க்கிறேன். நீ இந்த பக்கம் வந்து நாளாச்சு, வந்து பத்து நாள் இருந்துட்டு போயேன்மா, பேரன், பேத்தியோடு இருந்த மாதிரி இருக்கும்.” 

“நானும் அதை தான் நினைச்சேன். அடுத்த வாரம் புறப்பட்டு வரேன். நீ போய் குழந்தையை கவனி. நான் போனை வைக்கிறேன்.” 

அத்தியாயம்-3

அது சிறிய நர்சிங் ஹோமாக இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. 

ரிசப்ஷனில் இருந்த பெண், டோக்கன் போட்டு வருபவர்களை உட்கார வைத்துக் கொண்டிருந்தாள். 

அங்கு வந்த நர்ஸ் சாந்தி 

“வர்ற பேஷண்டோட போன் நம்பர், அட்ரஸ் நோட் பண்ணி வச்சுருக்கிறியா மாலதி.” 

கேட்க 

“ஆமாம் சிஸ்டர் நீங்க சொன்னபடி ரிஜிஸ்டரில் எழுதி வச்சுருருக்கேன்.” 

“நீ வேலைக்கு சேர்ந்து இரண்டு நாள் தானே ஆகுது. அதான் விசாரிக்கிறேன். டாக்டருக்கு எல்லாம் பர்பெக்ட்டாக இருக்கணும். ” 

“சிஸ்டர் அந்த பெரியவருக்கு டிரிப்ஸ் போடணும்னு சொன்னீங்களே எல்லாம் ரெடியா இருக்கு” 

அட்டெண்டர் வந்து சொல்ல 

“சரி சரி நான் வரேன். நீ போ டாக்டர் வர நேரமாச்சு. பேஷண்ட்களை டோக்கன்படி வரிசையாக அனுப்பு”

சொன்னவள் பரபரப்பாக உள்ளே போகிறாள். 

அங்கே சாந்தியுடன் சேர்த்து பத்து பேர் வேலை செய்கிறார்கள்.

எல்லா இன்சார்ஜூம் சாந்தி தான். வயது நாற்பதை நெருங்குகிறது. ரகுவரனுக்கு சாந்தியின் மேல் நல்ல அபிப்ராயம். அவள் ஹாஸ்பிடல் ஆரம்பித்ததிலிருந்து அங்கு வேலை பார்க்கிறாள். அனுபவம் மிக்கவள். 

வாட்ச்மேன் கேட்டை திறக்க ரகுவரன் காரை ஓரமாக நிறுத்தி உள்ளே வருகிறான். 

ரிசப்ஷனில் இருந்த மாலதி. டாக்டரை பார்த்ததும் எழுந்து நின்று விஷ் பண்ண புன்னகையுடன் அதை ஏற்றபடி தன் ரூமிற்குள் நுழைகிறான். 

ஓ.பி. முடிய இரண்டு மணி ஆகிறது. டாக்டர் ரூமிற்குள் வருகிறாள் சாந்தி. 

“என்ன சாந்தி அந்த பெரியவர்நல்லாஇருக்காரே இன்னைக்கு வீட்டுக்கு அனுப்பிடலாமா” 

“ஆமாம் டாக்டர் ப்ரஷர் நார்மலுக்கு வந்தாச்சு. அனுப்பிடுவோம். நீங்க இன்பேஷன்ட் வச்சுருக்கிறதில்லை. இப்படி எமர்ஜென்ஸியாக ஒன்று இரண்டு பேரை மட்டும் தானே அட்மிஷன் பண்றீங்க” 

சிரித்தபடி சொல்கிறாள். 

“அவுட் பேஷண்ட் பார்க்கவே நேரம் சரியா இருக்கு. அதுவுமில்லாமல் அப்புறம் இருபத்திநாலு மணி நேரமும் இங்கேயே இருக்கும்படி ஆகிடும்”. 

“நீங்க சொல்றது சரிதான் டாக்டர். அப்புறம் வீட்டில் நேரம் செலவிட முடியாது. அப்புறம் உங்க வொய்ப் எப்படி இருக்காங்க. கிராமத்துக்கு போனீங்களே, அம்மாஅப்பா நல்லா இருக்காங்களா குட்டி பையன் அஜய் எப்படி இருக்கான். பர்ஸ்ட் டே பர்த்டே உங்க கிராமத்தில் செலிபரேட் பண்ணியபோது நான்பக்கத்து ஊருக்கு ஒரு கல்யாணத்துக்காக வந்ததால் என்னை உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணினீங்க. உங்க குடும்ப உறுப்பினர்களை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சது. உங்கப்பா மேலே தனி மரியாதையே ஏற்பட்டுடுச்சு. ரொம்ப நல்ல மனிதர். அதுமட்டுமில்லை உங்க தம்பி பையன் என் கண்ணிலேயே நிக்கிறான்.” 

சாந்தி சொல்ல 

“எல்லாரும் நல்லா இருக்காங்க சாந்தி. குட்டி பையன் சூப்பரா வளர்ந்துட்டான். சரி ஓகே நான் கிளம்பறேன்.’ 

“வழக்கம்போல் ஈவினிங் பைவ் தேர்ட்டிக்கு வரேன். நீங்களும் லஞ்ச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க” 

“ஓகே டாக்டர்” 

ரகுவரன் எழுந்திருக்க 

“அப்புறம் கேட்க மறந்துட்டேன் நான் வரும்போது ரிசப்ஷனில் இருந்த பெண் தான் புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களா சாந்தி ” 

“ஆமாம் டாக்டர் பழைய ஆள் டெலிவரின்னு போயாச்சு. இந்த பொண்ணும் டெம்பரவரி தான் ஆஸ்திரேலியாபோகட்ரை பண்ணிட்டு இருக்காளாம். அவ ஹஸ்பெண்ட் வெளிநாட்டில் இருக்காராம். நாலு வயசில் ஒரு பையன் இருக்கான். நர்சிங் படிச்சிருக்கா. ஹாஸ்பிடல் பக்கத்தில் வீடுங்கிறதாலே வேற நல்லஆள்கிடைக்கும் வரை இருக்கட்டும்னு சேர்த்திருக்கேன்”. 

கதவை திறந்து விட்டவள் 

“டாக்டர் குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்குன்னு சொன்னீங்க கேட்கக்கூடாது இருந்தாலும் ஒரு சகோதரியாக நினைச்சு உங்க மேல் உள்ள அக்கறையில் கேட்கிறேன்.” 

“ஒண்ணும் பிரச்சனையில்லை சாந்தி. டாக்டரெல்லாம் பாஸிட்டிவ் ஆக தான் சொல்றாங்க பார்ப்போம்.’ 

“நிச்சயம் நடக்கும் டாக்டர்” அன்புடன் சொல்கிறாள் சாந்தி. 


“ஹலோ நான் ரகு பேசறேன்” 

“சொல்லு ரகு நல்லாயிருக்கீங்களா. அண்ணி எப்படி இருக்காங்க.” 

”ஊருக்கு வந்துட்டு போன பிறகுகூப்பிடவேயில்லை.நானும் கொஞ்சம் பிஸியாகிட்டேன். நீயாவது கூப்பிடக் கூடாதா. அப்புறம் உங்க அண்ணி சொன்னா ஏன் தேவையில்லாமல் புவனா மேலே கோபப்பட்டே நம் குடும்பத்து மேல உள்ள அக்கரையில அவ சொல்லியிருக்கா நீ அப்படி பேசினது தப்பு கிரி.” 

“புரியுது ரகு. அண்ணி மனசு சங்கடப்படுமேன்னு பேசிட்டேன். அது ஒண்ணும் பிரச்சனையில்லை. புவனா ஒண்ணும் பெரிசா எடுத்துக்கலை.” 

“அம்மா அப்பாநம்ப இரண்டு பேர் மேலேயும் அளவு கடந்த பாசம் வச்சிருக்காங்க. என் விஷயத்தை நினைச்சு கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க அவங்க மனசு சங்கடப்படும்படி எதுவும் நடக்கக்கூடாது கிரி. கடைசி வரை நல்ல பிள்ளைகளை பெத்தோம், அவங்களால் பெருமைப்பட்டோங்கிற மனநிறைவோடு அவங்க வாழணும்.” 

“எதுக்கு ரகு இப்படி மனசை போட்டு குழப்பிக்கிறே” 

“இல்லை கிரி நம்ம குடும்ப ஒற்றுமை ரொம்ப முக்கியம் அதுவுமில்லாமல் புவனா பணக்கார வீட்டு பொண்ணு. அப்பா இல்லாமல் அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தவள். நம்ப குடும்பத்தோடு எல்லா விதத்திலும் அனுசரிச்சு போறா நந்தினியும் புவனாவும் அக்கா, தங்கை போல பாசத்துடன் பழகணும். 

சொல்லப் போனா உன் குழந்தைகளை எங்க குழந்தைகளாக தான் நானும் நந்தினியும் நினைக்கிறோம்.” 

“ஒண்ணும் பிரச்சனையில்லை. நீகவலைப்படாதே உனக்கும் கடவுள் அருளால் நல்லது நடக்கும். நீ நினைக்கிற மாதிரி குற்றம் குறை சொல்ல முடியாத நல்ல பிள்ளைகளை பெத்தோங்கிற மன நிறைவோடு அவங்க வாழ்வாங்க போதுமா” 

“ஓகே கிரி. இன்னும் பத்து நாளில் கோயம்புத்தூரில் ஒரு கான்ப்ரன்ஸ் இருக்கு அப்ப வரும்போது கட்டாயம் வந்து புவனாவைப் பார்த்து பேசறேன்.” 

“வரும்போது அண்ணியையும் கூட்டிட்டு வா ரகு”

“பார்ப்போம். ஓகே வச்சுடறேன் பை” 


தட்டில் சாதம் காய்கறிகளை வைத்து விட்டு ஏதோ யோசனையில் இருக்கும் மனைவியை பார்த்தார் சண்முகம். 

“என்ன யோசனை வைதேகி? குழம்பை ஊத்து சாதத்தில்.” 

குழம்பை ஊற்றியவள். 

“பிள்ளைங்க வந்துட்டு போனதிலிருந்து ஒரு வாரமாக பெரியவன் நினைப்பு தாங்க. முகத்தில் இருந்த மலர்ச்சி தொலைஞ்சு போச்சு. 

அவங்க சந்தோஷத்தை மீட்டெடுக்க என்ன தான் வழின்னு தெரியலை. கடவுள் அவனுக்கு இப்படியொரு கஷ்டத்தை கொடுத்திருக்கக் கூடாது. எந்த குறையுமில்லாத மருமகள்கள் கிடைச்சுருக்காங்கன்னு நினைச்சேன். ஒரு குழந்தைக்குதாயாகிற தகுதிகூட இல்லாதவளாக வந்துட்டாளே. இதில் யாரை குற்றம் சொல்றது” 

“நீ புலம்பி எந்த பிரயோசனமுமில்லை வைதேகி. உன் மகன் ஒண்ணும் விபரம் தெரியாதவன் இல்லை. அவன் ஒரு டாக்டர். நிச்சயம் அவன் வாழ்க்கை சுபிட்சமாக இருக்க வழிதேடத்தான் செய்வான். நாம் பொறுமையா இருப்போம். 

எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் இருக்கு இரண்டு பேரும் முழுமனசோடு தத்தெடுக்க முடிவு பண்ணினால் அவங்க குறை விலகவும் வாய்ப்பிருக்கு” 

அவர் சொல்லி வாய் மூடுவதற்குள். 

“போதும் நிறுத்துங்க என்ன பேச்சு இது. யாரோ பெத்த குழந்தைக்கு என் மகன் அப்பாவாக இருப்பதா இந்த நினைப்பே எனக்கு பிடிக்கலை அதுக்கு குழந்தை இல்லாமலேயே இருந்திடலாம். 

நீங்க சொன்ன இந்த யோசனைக்கு பதிலாக ரகுவரனுக்கு இன்னொரு பெண்ண பார்த்து கட்டி வைப்போம்னு சொல்லியிருந்தால் கூட யோசிச்சிருப்பேன்.” 

“வேண்டாம் வைதேகி பிள்ளைகளுக்கு நல்ல தாயாக இரு. நல்ல சிந்தனையோடு இருக்கிறவங்க மனசில் விஷயத்தை கலக்காதே. இப்ப நீ சொன்னது தப்பான யோசனை. அதுக்கு ரகுவரன் மட்டுமில்லை நானும் எந்த காலத்திலும் சம்மதம் சொல்ல மாட்டோம். கஷ்டமோ, நஷ்டமா அவன் வாழ்க்கை நந்தினியுடன் தான்.”
தட்டிலிருந்து எழ 

“என்னங்க மோர் போட்டுக்குங்க” 

“வேண்டாம் நீ பேசிய பேச்சிலேயே வயிறு நிறைஞ்சுருக்கு”

எழுந்து போகிறார் சண்முகம். 

– தொடரும்

– உயிர் தொடும் அமுதம் நீ!, தேவியின் கண்மணி இதழில் (03-11-2021) வெளியான நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *