குரங்கு மனம்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 2,357 
 

மனம் ஒரு குரங்கு என்பதை நம் முன்னோர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் தான் சொல்லியிருப்பார்கள். கற்பனை எதுவும் கலப்பில்லை என்பதை நடை முறை வாழ்வில் பல முறை அனுபவப்பட்டு நானும் புரிந்து கொண்டேன்.

காலை கண் விழித்தது முதல் இரவு உறங்கப்போகும் வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் செய்த பின் ‘இப்படி செய்திருக்கக்கூடாது, அப்படி செய்திருக்க வேண்டும்’ என பல் துலக்குவதிலிருந்து, ஆடை, உணவு என ஆரம்பித்து, நட்பு, உறவு, படிப்பு, பணம், பயணம் என அனைத்தையும் தலை கீழாக மாற்றி யோசிக்க வைக்கும் நம் மனம். தியானம் பண்ணினாலும், யோகா செய்தாலும் மூக்கணாங்கயிறு இல்லாத காளை போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருக்கும். குறிப்பாக நடை முறைக்கு சாத்தியமில்லாதவற்றையே விரும்பி ஏங்கும்.

நடை முறையில் நிறைவேறாததை மனம் தன் கற்பனைக்குதிரையை ஓட விட்டு உலகில் பல இடங்களுக்கு சில நொடிகளில் சென்று வந்து திருப்திப்பட்டு சாந்தமாகி விடும். எந்த செயலும் செய்யாத போது மனம் சுற்றித்திரிந்தால் கூட பரவாயில்லை. நாம் பாதையில் வாகனம் ஓட்டும் போது அதைக்கவனிக்காமல் நமக்கு வேறு விசயங்களை ஞாபகப்படுத்தும். மனதுக்கு பொய்யான, நடை முறைக்கு சாத்தியமில்லாத விசயங்கள் மிகவும் பிடிக்குமென்பதால் சினிமா பார்க்கும் போது மட்டும் நம்மோடு இணங்கி, வேறு சிந்தனைகளுக்குள் செல்லாமல் இருந்து அதை மட்டுமே ரசித்து மகிழ்ந்து விடும். காரணம் சினிமா என்பது முழுக்க முழுக்க ஒருவரின் மனதால் உருவாக்கப்பட்ட கற்பனை. அதனால் நம் மனதுக்கும் பிடித்துப்போகிறது.

மனம் போற போக்கில் வாழ்பவர்களால் சாதனைகள் எதுவும் செய்ய முடியாது. பின் விளைவுகளைச்சிந்தித்து மனதைக்கட்டுப்படுத்தியவர்கள் தான் சாதனையாளர்களாக உள்ளனர். நேரத்துக்கு உணவு கூட இல்லாமல், உழைக்காமல், எதிர்காலம் பற்றி துளியும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் மன வாழ்க்கை எனும் நடக்காமல் நடந்தது போல் மாயையை உருவாக்கும் கற்பனை உலகத்திலேயே சதா சர்வ காலமும் சஞ்சரிப்பவர்கள். இந்த மாய உலகில் வாழ்ந்து பழகியவர்கள் எதிரிகளைக்கூட கற்பனையிலேயே பழிவாங்கி சமாதானமடைந்து விடுவர். விரும்பியவரை கற்பனையிலேயே காதலித்து மகிழ்வர். அப்பெண்ணை நேரில் பார்க்க நேர்ந்தால் கூச்சப்பட்டு ஒதுங்கியே செல்வர். யாரிடமும் சகஜமாக பேசும் திறனற்றவர்களாகவே இருப்பர். இதில் பெண் ஆண் பேதமில்லை. 

அனைவருமே மன உலக வாசிகள் தான் என்றாலும் சதவீதத்தைப்பொறுத்து வேறு படுவர். நானும் முப்பது வயது வரை மன உலகில் நூறு சதவீதம் வாழ்ந்து கொண்டிருந்தவன் தான். 

என் வயதொத்தவர்களின் செயல்பாடுகளால், அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்ததும், திருமணம், குழந்தைகளென மகிழ்ச்சியாக வாழும் நிஜ உலகத்தில் நான் நுழைந்த போது என்பதை விட நான் சார்ந்த குடும்பத்தினர் என்னை வலுக்கட்டாயமாக நுழைத்து விட்ட போது வாழ்வில் பல பொன்னான வருடங்களை வீணடித்திருப்பது தெரிந்து எனது மனம் வேதனைப்பட்டது.

குரங்கு, மனிதன், மற்ற ஜீவராசிகளும் பெரும்பாலும் மனத்தின் இயக்கப்படியே செயல் பட முடிகிறது. ஆரம்பத்தில் மனம் வளர்ச்சியற்றே‌ இருக்கும். அம்மனதை மனம் வளர்ச்சி பெற்றவர்களே வளர்க்க முற்பட வேண்டும். வயதுக்கும் மன வளர்ச்சிக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. எழுபது வயது கொண்டவர் பத்து வயதினர் போலவும், பத்து வயது கொண்டவர் எழுபது வயதினர் போலவும் நடந்து கொள்வதை நடை முறையில் பார்க்க முடியும். மன வளர்ச்சி வேறு, உடல் வளர்ச்சி வேறு என்பதை முப்பது வயதிலாவது புரிந்து கொண்டோமே என்று நிம்மதி பெற்றேன்.

அனுபவசாலிகளை, அறிவாளிகளைத்தேடிச்சென்று பேசினேன். கேள்விகள் கேட்டேன். அறிவு தரும் புத்தகங்களைப்படித்தேன். பின்பு நானே சிந்திக்க ஆரம்பித்தேன். நான் எதைப்பற்றிச்சொன்னாலும் “உனக்கு ஒன்னும் தெரியாது. கம்முனு பெரிவிங்க சொல்ற பேச்சுகேட்டுப்பழகு. ஊட்டுப்பெரியவங்கள எதுத்துப்பேசப்படாது” என்று கூறி சிறுவர்களின் சிந்தனைகளை சிதையில் போட்டு சிதைத்து விடுவதாலேயே உரிய வயதாகியும் வெளி உலகம் புரியாமல் பலர் போனதற்கு முக்கியமான காரணம் என நினைப்பேன்.

நிஜ உலகத்துக்கு வந்தாலும் முழுமையாக வர இயலவில்லை. நிஜ வாழ்வில் உடல் படும் சிரமங்கள், தேவையற்ற ஏச்சுப்பேச்சுக்கள் கற்பனையான மன வாழ்வில் இருப்பதில்லையென்பதால் மனம் திரும்பவும் முழுமையாக தன் உலகத்துக்குள் என்னை இழுக்கவே முயன்றது. 

தந்தை கட்டி வைத்த கடனில்லாத வீடு இருக்கிறது. அன்றாடம் குடும்பத்தினர் வாழத்தேவையான அளவுக்கு உழைத்தால் போதும். விவசாய நிலத்தில் மானாவாரியாக மழை பெய்யும் போது விதைத்தாலே அதில் விளையும் கம்பு, சோளம், துவரை, அவரை உணவுக்கும் எள் எண்ணைக்கும் பூர்த்தியாகி விடும். சோளத்தட்டு மாடுகளுக்கு பயன் படும். மாட்டுப்பால் அதில் கிடைக்கும் தயிர், மோர், நெய் வீட்டுத்தேவைக்கு போக விற்பதால் அன்றாட மற்ற செலவுகளுக்கு பயன்படும். நிலத்தின் மதிப்பு கூடி வருவதால் சொத்து நானாக சம்பாதித்து சேர்க்க வேண்டியதில்லை. குழந்தைகளை அரசு பள்ளியில் செலவில்லாமல் படிக்கவைப்பதால் சேமித்து சொத்து சேர்க்க வேண்டியதில்லை.பின் எதற்க்காக உழைக்க வேண்டும்? என எனக்கு அறிவுரை கூறி, உழைக்காமலிருக்க திசை திருப்புகிறது மனம். மனம் சொல்வதை உடல் மகிழ்ந்து ஏற்கிறது. இப்படியொரு வாழ்வை வாழ்பவர்களால் சமுதாயத்தில் யாருக்கும் நன்மை ஏதும் நடந்து விடப்போவதில்லை. ஆக நானும் ஒரு சுயநல வாதி தான். 

“என்ன முருகா சௌக்யமா…? நீ சௌக்கியமா இல்லாம என்ன…? உங்கொப்பஞ்சம்பாரிச்சு வெச்ச சொத்தும், கட்டி வெச்ச வீடும் இருக்குது. பொண்டாட்டி படிக்காட்டியும் நல்ல பாட்டாளியாப்பாத்து விவரமா கண்ணாலம் பண்ணினதுனால தப்பிச்சிட்டே. காடும் நல்லா வெளையுது. ம் நானுந்தான் இருக்கறனே … எதுக்கு பொறந்தோம்னு இருக்குது. மாடா பாடு பட்டாலும் மாசமானா பத்து ரூபா சேத்தி வெக்க முடிய மாட்டேங்குது. பத்து செண்ட் எடம் வாங்கி ஊடு கட்ட முடியல” என சம வயது உள்ள பெருமாள் ஆதங்கத்துடன் பேசிய போது தான் நாம் வாழ்வதும் சுய நலமான சுக வாழ்க்கை என புரிந்தது.

சில பேர் செய்யும் தொழில், வாழும் வாழ்க்கை அவர்களை சிறப்பாக மகிழ விடாமல் பிறரின் நலன் சார்ந்தே இருக்கிறது. ஆனால் பலர் அந்த சிலரின் தியாகத்தை பயன் படுத்தி வாழ்ந்து விடுகின்றனர். அந்த வகைக்குள் நான் இருப்பதை புரிந்த போது என் மீது வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இவ்வுலக நடைமுறையில் அனைவருக்கும் தேவையானது கிடைக்கும் வகையில் தொழில் அமைப்புகளை உருவாக்கி செயல் படுத்தும் பொருட்டு பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலின் மீது விருப்பத்தை ஏற்படுத்தி லாபமோ, நஷ்டமோ என பாராமல் விவசாயி முதல் விஞ்ஞானி வரை இயங்கி வாழும் நிலையில் நாம் மட்டும் மற்றவர்களின் உழைப்பை பயன்படுத்தி நாம் மற்றவர்களுக்கு பயன் படாமல் வாழ்வது சமுதாய அமைப்பு முறைக்கு செய்யும் துரோகம் என புரியும் போது மனம் என்னை நிஜ வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க அனுமதித்தது. 

ஒரு நாள் எனது மனைவி வயிற்று வலியால் துடித்த போது ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்து வேகமாக மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கே ஒரு விசேச நிகழ்ச்சிக்காக தனது காரில் ஏறத்தயாராக இருந்த மருத்துவர் அந்த பயணத்தை ரத்து செய்து விட்டு எனது மனைவியின் வயிற்று வலிக்கான காரணத்தை அறிய பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார். அவரும் என்னைப்போலவே உண்டுறங்கி வாழ்ந்திருந்தால், போதும் என நினைத்திருந்தால், நிஜ உலகத்துக்கு வராமல் மன உலகத்தில் வாழ்ந்திருந்தால் என் மனைவியின் உயிரை காப்பாற்றியிருக்க முடியாமல் போயிருக்கும் என நினைத்த போது, மருத்துவரைப்போல நாமும் பிறரின் நலன் காக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது மன உலகத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வர என்னால் முடிந்தது.

தற்போதெல்லாம் சாப்பிட்டு முடித்த உணவைக்கூட முடித்தபின் வேறு உணவை சாப்பிட்டிருக்க வேண்டுமென நினைப்பதில்லை. நினைப்பதற்கான நேரமில்லை. இடை விடாமல் வேலை செய்யும் வாய்ப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டால் மன உலக சஞ்சார கதவு தானாக அடைத்துக்கொள்ளும் என்பதை புரிந்த போது கடன் வாங்கி சில மாடுகளை வாங்கி எனக்கு ஓரளவு பார்த்து பழக்கப்பட்ட குடும்பத்தொழிலான உணவுத்தொழிலை விரிவு படுத்த பால் கறந்து ஊருக்குள் சென்று விற்பனை செய்தேன். அதில் வரும் வருமானத்தில் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன். சமுதாயத்தால் எனக்கும், என்னால் சமுதாயத்துக்கும் நன்மை ஏற்பட்டதை நினைத்து கட்டுப்படுத்தப்பட்ட, சுயநலமற்ற, வளர்ச்சியடைந்த மனம் பூரிப்படைந்தது.

 இப்போதெல்லாம் மனம் விரும்புகிற போக்கில் நான் போவதில்லை. பின் விளைவுகளை சிந்தித்து நான் செய்யும் செயலுக்கு மனம் கட்டுப்படுகிறது. ‘மனம் போற போக்குல போகாதே’ என பாட்டி என்னை சிறு வயதில் திட்டி கூறிய அறிவுரையின் பொருள் எனக்கு தற்போது தான் நன்றாக புரிய ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “குரங்கு மனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *