நினைவுகளைத் தேடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 3,086 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரில் வந்து இறங்கினார் ராமதுரை. தோட்டக்காரன் “வாங்கய்யா” என்றான்.

கீழே கார் வந்து நின்ற சப்தம் கேட்ட திவ்யா, பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள். ராமதுரை தோட்டக்காரனிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஏன் மாமா இவ்வளவு அதிகாலையிலே வந்திருக்கிறார்’ என்று யோசித்தவாறு மாடியிலிலிந்து கீழே இறங்கி வந்தான்.

வெளியே பனி பெய்து கொண்டிருந்தது. ‘ஆ’வென்று வாயைத் திறந்த போது கூட புகை மண்டலமாய் பனி தெரிந்தது. “அம்மா ஜாகிங் போகலையா” என்று கேட்டார் ராமதுரை.

“கொஞ்ச நாட்களாக அம்மா ஜாகிங் போறதில்லை அய்யா” என்றான் தோட்டக்காரன்.

“ஏன்?”

“தெரியாதய்யா”

“சரி நான் திவ்யாவிடமே கேட்டுக் கொள்கிறேன்” என்று ராமதுரை காரிடாருக்கு வர, “வாங்க மாமா, என்ன இவ்வளவு விடியகாலமே இந்தப் பக்கம்!” என்றவள் உள்ளே திரும்பி “மங்கம்மா மாமாவிற்கு ஒரு காபி, எனக்கு ஒரு டீ கொண்டு வா” என்றாள்.

சோபாவில் அமர்ந்த திவ்யா, “உட்காருங்க மாமா, என்ன யோசிக்கிறீங்க” என்றாள்.

சோபாவில் உட்கார விருப்பமில்லாத ராமதுரை, “என்ன திவ்யா எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறதே. என்ன விஷயம்!” என்றார்.

“எதைச் சொல்கிறீர்கள் மாமா” என்றாள் அவளும் எழுந்து நின்றவாறு.

“இப்போது நேரமென்ன திவ்யா?”

“ஆறு முப்பது”

“போன மாதம் வரைக்கும் நான் எப்போது வந்தாலும் சரி, நீ காலையிலே ஐந்து மணிக்கு எழுந்து ஜாகிங் ஓடக்கூடியவள். திடீரென்று வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, காலையிலே ஆறரை மணிக்கு நைட்டியோடு எழுந்து வருகிறாய், என்ன ஆயிற்று?”

“இவ்வளவு தானா? நானும் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். திடீரென்று ஒரு சோம்பல்… வாழ்க்கையில் அலுப்புத்தட்டிய மாதிரி. அவ்வளவு தான்”

“எனக்குப் புரியவில்லை திவ்யா. உனக்கு இப்போது வயதென்ன இருபத்தைந்து இருக்குமா? இதற்குள்ளாகவே வாழ்ந்து முடிந்து விட்ட கிழவி மாதிரி பேசுகிறாய்?”

“இனி என்ன இருக்கிறது மாமா. என் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களும் தெரிந்த நீங்களுமா இப்படி பேசுகிறீர்கள். இனி எதைத் தேடி எதற்காக ஓட வேண்டும், என்று தான் புரியாமல்.” முடிக்க விரும்பாமல் அரும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் திவ்யா.

“சும்மா வியாக்யானம் பேசுவதில் அர்த்தம் இருப்பதாக எனக்குப் புரியவில்லை திவ்யா. எப்போது உன் அப்பாவும் அம்மாவும் இறந்தார்களோ அப்போதிலிருந்து நான் தான் உண்னையும் இந்த காபி எஸ்டேட்டையும் கட்டிக் காத்து வருகிறேன். இதுவரை எதற்கும் கலங்காத நீ கலங்கலாமா? வாழ்க்கையில் யாராவது இறந்து போனதற்காக சூரியன் ஒரு போதும் நின்று போனதில்லை காற்றும் வீசாமல் இருப்பதில்லை” என்று ராமதுரை முடிப்பதற்குள் “என் அம்மாவின் தம்பி என்ற முறையில் உங்களிடம் எதையாவது மறைத்திருக்கிறேனா மாமா” என்று கேட்டாள் திவ்யா.

“ஏன் அப்படி கேட்கிறாய்?”

“நானும் பிரபாகரும் எத்தளை வருடங்கள் காதலித்தோம். திருமண தேதி முடிவு பண்ணி நீங்கள் தான் எங்கள் திருமணத்தையே முடித்து வைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தீர்கள், அவரே என்னை விட்டு இந்த உலகை விட்டுப் போய் விட்ட பிறகு இனி என்ன செய்ய வேண்டும்? எதற்காக வாழ வேண் டும் இந்த பொழுது எதற்காக விடிகிறது? ஏன் பசிக்கிறது? ஏன் சாப்பிடுகிறேன்? ஏன் இந்த எஸ்டேட்டையும் ஆஸ்தியையும் கட்டிக் காக்க வேண்டும் என்று புரியலை மாமா”

பெரிதாக மூச்சு விட்ட ராமதுரை சமையல்கார கொண்டு வந்து வைத்த காபியை எடுத்துக் கொண்டு “டீ எடுத்துக்கோ திவ்யா. ஆறிடப் போகுது” என்றார்.

“பரவாயில்லை மாமா. ஆறின பிறகு குடிக்கிறேன்”

“சூடாகத் தானே எப்போதும் குடிக்க விரும்புவாய்?”

“ம்ம். எல்லாமே தலை கீழாக மாறிப் போச்சு. சில நேரங்களிலே இனி வாழ வேண்டுமா என்கிற கேள்வி கூட எழுகிறது?”

“நான் புதிதாக உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது? உனக்கு எத்தனையோ முறை ஆறுதல் சொல்லியாகி விட்டது. நீ மாறித்தான் ஆக வேண்டும். அதற்காகத் தான் ஒரு திட்டத்தோடு வந்திருக்கிறேன். விடியற்காலம் எழுந்ததும் இன்று காலை உன்னிடம் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தேன். அது தான் இங்கே வந்தேன். இங்கே வந்தால் வீட்டிலே எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கிறது.நீ ஒழுங்காக எஸ்டேட் ஆபீஸிற்கும் போவது கிடையாதாம். எஸ்டேட் மானேஜர் போன் பண்ணிச் சொன்னார். ஒன்று மட்டும் சொல்கிறேன் திவ்யா, இறந்து போனவர்கள் திரும்ப வருவதுமில்லை. நாமும் அவர்களோடு சேர்ந்து போகப் போவதுமில்லை. அதனால் நாமாகவே நமது வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்”

“என்ன திட்டத்தோடு வந்தீருக்கீங்க மாமா”

“நீ எவ்வளவு நாளைக்குத் தான் இப்படியே தனியா இருக்க முடி யும். அதனாலே என் மகன் கிருஷ்ணனுக்கும் உனக்கும் திருமணம் செய்து விடலாமென்று…” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்..

“எப்படி மாமா உங்களுக்கு இந்த ஒரு எண்ணம் வந்தது? இப்படி நீங்களே பேசுகிறீர்களே? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இனி என் வாழ்க்கையில் இன்னொருவருக்கு இடம் கிடையாது. அது நடக்காத காரியமும் கூட”

“அப்படியாளால் என்ன தான் செய்வதாக உத்தேசம் திவ்யா?”

“தேடப் போகிறேன். என் வாழ்க்கையைத் தேடப் போகிறேன். தொலைந்து போன என் வாழ்க்கையைத் தேடப் போகிறேன். எப்படியெல்லாம் பிரபாகருடன் வாழ்ந்தேனோ என்னென்ன கனவுகளோடு இருந்தேனோ. அவைகளை யெல்லாம் தேடிப் பார்க்கப் போகிறேன் மாமா?”

“புரியும்படியாகச் சொல் திவ்யா?”

“எனக்கே என் வாழ்க்கையைப் பற்றி புரியாத போது நான் உங்களிடம் என்ன சொல்லப் போகிறேன் மாமா?”

“இப்படியே தனியாக நீ வாழ முடியுமா திவ்யா?”

“என் பிரபாகருடைய நினைவுகளோடும் எண்ணங்களோடும் என் வாழ்வின் மீதிப்பாகத்தையும் தேடிப் பார்க்கப் போகிறேன் மாமா”

“திவ்யா, வாழ்க்கை அவ்வளவு சாதாரண விஷயமில்லை. ஒரு பெண் தனியாக இருந்தால் எத்தனை சோதனைகளும் பிரச்சினைகளும் வரும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை”

“பரவாயில்லை நான் முயற்சி செய்து பார்க்கிறேன்”

“முடிவாக என்ன தான் சொல்கிறாய்?”

“இப்படி ஏதாவது விஷம எண்ணங்களோடு இனி என்னைப் பார்க்க வராதீர்கள், அது போதும்,” என்று சொல்லியவாறு திரும்பவும் மாடிக்கு ஏறிப் போனாள் திவ்யா. ராமதுரை அவள் போவதையே பார்த்துக் கொண்டு ‘என்ன பெண் இவள்’ என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார்.

– 24-10-2004, தினபூமி – ஞாயிறுபூமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *