குணமாலை தூங்கப் போகிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 3,458 
 

“தூக்கம் கண்ணச் சொருவ ஆரம்பிச்சிடிச்சி! நான் போய் தூங்கறேன்,” என்று சொல்லி உடம்பை சோஃபா நாற்காலியில் உட்கார்ந்த வாக்கிலேயே முறுக்கினாள் குணமாலை. கொட்டாவியைச் சத்தமின்றி விட்டுவிட்டு கண்ணைக் கசக்கி என்னைப் பார்த்தாள். நான் ஏதையோ சொல்வேன் என்று எதிர்பார்கிறாளோ என்னவோ. வழக்கமாக நடக்கிறது தானே…

சோம்பேரித்தனத்தின் ஆக்கிரமிப்பில், சரிந்தபடி உட்கார்ந்திருந்த நான் நேராக எழுந்து உட்கார்ந்துகொண்டேன். “நீதான இந்த படத்தப் பாக்கனும்னு அடம்புடிச்ச? பாதிதான் முடிஞ்சிருக்கு, அதுக்குள்ளயும் கொட்டாவி விட்டுட்டியா? நான் ஒழுங்கா பந்து விளையாட்டாச்சும் பாத்துகிட்டு இருந்துருப்பேன். இப்ப அதுவும் பாதியில இதுவும் பாதியில!” மெல்லிய கடுப்பு வந்தது என்னவோ உண்மைதான். ஏதோ ஒருதடவை இருதடவை என்றால் பரவாயில்லை. எப்பவும் இப்படித்தான் இவள்.

ஒன்றும் பேசாமல் பல்லை மட்டும் காட்டி அசட்டுத்தனமாக இளித்துக்கொண்டிருந்தாள் அவள். என்ன செய்வது? ஆரம்பித்தாகிவிட்டது. மிச்சப் படத்தையும் பார்த்துவிட்டுப் படுக்கலாம் என்று நானும் கைகள் இரண்டையும் பிணைத்து உயர்த்தி உடலை முறுக்கிக்கொண்டேன். மீண்டும் புத்துணர்ச்சி உடம்பில் பாய்ந்ததுபோல இருந்தது.

எழுந்துபோய் இரண்டாவது அறைக் கதவைத் திறந்து பார்த்தாள். பிள்ளைகள் இருவரும் தூங்கிகொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாள்தான் அவளுக்கு நிம்மதியே. மறுநாள் காலை பள்ளிக்குக் எழுந்திருக்க இப்போதே தூங்கியிருந்தால்தான் முடியும். “மணி பத்தரை ஆவுது. நீங்க படுக்கலையா? நாளைக்கு வேலைக்கு எழுந்திருக்க இதுங்க மாதிரியே அப்பறம் முண்டிகிட்டு மொனவிக்கிட்டு இருங்க!” என்றபடி குசினியை நோக்கி நடந்தாள். நான் பெத்த அந்த ‘இதுங்க’ அப்புறம் என்னை மாதிரி இல்லாமல் யார் மாதிரி இருக்குமாம்?

குசினிக்குப் போய் பத்து நிமிடத்தில் சார்டின் பிரட்டல் வாசனை சிவனே என்று உட்கார்ந்திருந்த என் மூக்கு வரை வந்து துன்புறுத்தியது. என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆசைதான். ஆனால், சோம்பல் என்னை இருக்கிப் பிடித்து வைத்திருந்தது. வெட்டுகிற சத்தம் கேட்டது; உருட்டுகிற சத்தமும் கேட்டது. சில இடைவெளிகளை நிசப்தம் நிரப்பி சமன் செய்தது. இருபது நிமிடம் கழித்து குசினியிலிருந்து மீண்டும் வரவேற்பரைக்கு வந்தாள். பார்வை தொலைக்காட்சியை மொய்த்துக்கொண்டிருந்தாலும் கால் சரியாக நடந்து அவள் இஷ்டப்படியே வீட்டு முன் கதவை அடைந்தது.

“பின்னால என்னா பண்ணீகிட்டு இருந்த?” என்று கேட்டேன். என் கண்ணும் லேசுபட்டது இல்லை. படத்தில் தீவிரத்தை இழக்காமல் கருத்தூன்றிக் கிடந்தது. குணமாலையைப் பார்க்காமலேயே கேட்டேன். “நாளைக்குப் பசியாற சாண்ட்விச் செஞ்சி வெச்சேன். இப்பவே செஞ்சிவச்சிட்டா நாளைக்கு காலைல அடுக்கிக் குடுக்கிற வேலை மட்டுந்தான்,” என்று சொல்லியபடி கதவைத் திறந்து வெளியே போனாள்.

போனவள் மீண்டும் வந்தாள் கையில் பிள்ளைகளின் பள்ளிக்கூட சப்பாத்தோடு. அவள் ஏன் அதை குசினிக்கு எடுத்துப் போகிறாள் என்று எனக்குத் தெரியும். துவைத்த சப்பாத்தி வெயில் அடிக்காத்தால் காயாமல் இருந்திருக்கும். காயாமல் கிடந்தால் அதைக் கொண்டுபோய் ஐஸ்பெட்டியின் அடியில் வைத்துவிட்டால் காலைக்குள் காய்ந்துவிடும்.

மறுபடியும் தொலைக்காட்சியில் வைத்த கண் வாங்காமல் வரவேற்பறையைக் கடந்து முதல் அறைக்குள் நுழைந்தாள். அந்த அறை நானும் அவளும் படுக்கும் அறை. தூங்கப் போய்விட்டாள் என்று நினைத்தால் மறுபடியும் வெளியே வந்தாள். கை நிறைய துணி. எல்லாம் இன்றைக்குப் போட்டதுதான். சவர்காரத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் துவைத்துக் காயப்போடுவாள். அடுத்து இரண்டாவது அறைக்குள் நுழைந்து அங்கிருந்து கொஞ்ச துணிகளை எடுத்துப்போனாள்.

“ஏய், கண்ணு சொருவுது. தூக்கம் சொக்குதுன்ன? போய் தூங்காம இங்குட்டும் அங்குட்டும் டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்க?” என்று கேட்டேன். கேட்டது காதில் விழுந்ததோ அல்லது விழுந்தும் விளங்காதது பட்டியலில் சேர்ந்ததோ… பதில் ஒன்றும் சொல்லாமல் பின்னால் போய்விட்டாள்.

ஈரக்கையைப் பாவாடையில் துடைத்துவிட்டு தொலைக்காட்சி முன் குறுக்கும் நெடுக்குமாய் இரண்டு தடவை நடந்தாள். முக்கியமான கட்டம் வரும்போதுதான் இவளுக்கு ஏதாவது வேலை வரும் டீவி முன்னுக்கு! கையில் என்னுடைய சட்டையும் பிள்ளைகளுடைய பள்ளிச் சீருடையும் தொங்கிகொண்டிருந்தன. “இப்பத்தான் அயன் போடும். மொதயே செஞ்சி வெச்சிருக்க வேண்டியதுதான?” கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தாள் குணமாலை.

“அதுக்குத்தான் அப்பவே சொன்னேன், அயன் போடற எடத்த பின்னால எங்கயாச்சும் மாத்தி வைங்கன்னு. டீவி பக்கத்துல வச்சிப்புட்டு அப்பறம் ஏங்கிட்ட கத்துவாரு” அவளும் பதிலுக்குச் சிடுசிடுத்தாள்.

குணமாலை துணிகளுக்கு அயன் போட்டு முடிப்பதற்குள் படம் க்ளைமைக்சை எட்டிவிட்டிருந்தது. படம் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் சோஃபாவில் தெனாவெட்டாய் உட்கார்ந்திருந்த நான் இப்போது மும்முரமாகிவிட்டேன். எனக்குத் தெரியாமலேயே நாற்காலியின் விளிம்புக்கு நகர்ந்திருந்தது என் பிட்டம்.

அயன் போட்டு முடித்ததும் சட்டைகளை அலுங்காமல் குலுங்காமல் கசங்கல் ஏதும் விழாமல் ஹெங்கரில் மாட்டித் தொங்கவிட்டாள். அயன் ஸ்விட்சை அடைத்துவிட்டு அங்கிருந்து குணமாலை அகன்றதுதான் எனக்கு அப்போதைய நிம்மதி. இடைஞ்சல் இல்லாமல் படத்தோடு ஒன்றிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் குசினிக்குப் போனாள் அவள். தண்ணீர் சத்தம் கேட்டது. எப்போதும் தூங்கப் போகும்முன் வாயை மருந்து போட்டு அலம்புகிற பழக்கம் எங்களுக்கு உண்டு. அதைத்தான் அவள் செய்திருக்கக்கூடும். வாயைக் கையால் துடைத்தபடி வரவேற்பறை வழியாக மீண்டும் முதல் அறைக்குச் சென்றாள். முகத்துக்கு என்னென்னவோ கிரீம் போட்டுத் தடவிக்கொண்டிருந்தாள். இதுவும் தூங்கப் போகும் முன் வழக்கமாக அவள் செய்வதுதான்.

கிரீமை முகத்தில் அப்பிக்கொண்டு அறையை விட்டு வரவேற்பறைக்கு வந்தாள். கண் தொலைக்காட்சியில் முடியப்போகும் படத்தை விட்டுவைக்க விரும்பவில்லையோ என்னவோ. அதைப் பார்த்தபடியே இரண்டாவது அறைக்குள் நுழைந்தாள். “நீ இன்னும் தூங்காம சுத்திக்கிட்டுதான் இருக்கியா?” என்றேன். “தோ, போறேன்,” என்று உள்ளிருந்து சத்தம் வந்தது.

பிள்ளைகள் தூக்கத்தில் போர்வையைக் கண்ணாபிண்ணாவென சிதற விட்டிருந்தார்கள். அதை சரியாக இழுத்துப் போட்டாள். தூக்கத்தில் மூத்தவனின் உடம்பின்மேல் இளையவன் எப்போதும் காலைத் தூக்கிப் போட்டிருப்பான். அதைத் தூங்கப் போகும்முன் எடுத்துவிட்டுப் போவதை குணமாலை வேலையாகக் கொண்டிருக்கிறாள்.

படம் முடிந்தது. மணி பதினொன்றரை. தொலைக்காட்சியை அடைத்துவிட்டு குசினிக்குச் சென்றேன். வாயை மருந்துத் திராவகத்தால் கொப்பளித்துவிட்டு, கழிப்பறைக்குச் சென்று அன்றைய நாளுக்கான இறுதி சிறுநீரை வெளியேற்றிவிட்டு முதல் அறைக்குச் சென்றேன்.

எனக்குக் கிரீம் பூசும் பழக்கமெல்லாம் கிடையாது. அந்தக் கன்றாவியெல்லாம் குணமாலைதான் செய்வாள். அப்படியே பொத்தென மெத்தை மீது பாய்ந்தேன். குணமாலை மாதிரி பதுசாக வந்து படுக்கையில் சாய்ந்தால் அதில் ஒன்றுமே இருக்காது. இப்படி பொத்தென பாய்ந்து விழுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

மூச்சை டம்கட்டி இழுத்து சத்தமாக ஒரு கொட்டாவி விட்டேன். ஆத்ம திருப்தி கிடைத்ததுபோல இருந்தது. போர்வையை இழுத்துப் போர்த்தி கண்ணை மூடினேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

மருநாள் காலை. மணி ஏழு என்பதை எப்படி கண்டுபிடிப்பேன் தெரியுமா? குணமாலை வாய் இருக்கிறதே, அதை வைத்துத்தான். “ங்க, மணி ஏழாவுது. எழுந்திரிக்கலையா? ராத்திரி லேட்டா தூங்கறது, அப்பறம் காலைல எழுப்புன வேகத்துக்கு எழுந்திரிக்காம முண்டிகிட்டு இருக்கறது! அப்பன், புள்ள எல்லாமே ஒரே மாதிரிதான். எழுந்திரிங்க! மணி ஏழு அஞ்சாச்சி,” என்று கத்திக்கொண்டிருப்பாள்.

முந்தைய ராத்திரி படம் முடிந்து தாமதமாக படுத்ததில் தூக்கம் பத்தவில்லை எனக்கு. கண்கள் எரிந்தன. இருந்தாலும் குணமாலை படுக்க விடமாட்டாள். கத்திக்கொண்டே இருப்பாள். அதற்கு பேசாமல் எழுந்தே விடலாம்.

“சரி, சரி, எழுஞ்சிட்டேன்…” என்றபடி எழுந்து உட்கார்ந்து நிதானித்து பின்னர் எழுந்தேன். பிள்ளைகள் ஆரறை மணிக்கே பஸ்ஸில் பள்ளிக்கு போயிருந்தார்கள்.

நடந்து கழிப்பறையை அடைந்தது இரவு சேமிப்பாக இருந்த சிறுநீரைக் கழித்தவுடன் தான் இன்றைய நாள் சிறப்பான நாள் என்பது போன்ற பிம்பம் தோன்றியது. பல்லை விளக்கிவிட்டு மேசைக்கு வந்தேன். குணமாலை சாண்ட்விச் ரொட்டியில் சார்டின்னை வைத்து எனக்குப் பசியாரை தயார்செய்துகொண்டிருந்தாள்.

நேற்று நான் தூங்கப் போகும்போது குணமாலை என்ன செய்துகொண்டிருந்தாள்? நினைவுக்கு வரவில்லை. இன்று எத்தனை மணிக்கு எழுந்தாள்? கேட்கலாம் என்று தோன்றியது. எதேச்சையாக கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழரை! எட்டு மணிக்கெல்லாம் வண்டியை எடுத்தால்தான் வேலைக்குப் போய்ச் சேரமுடியும். அவசரத்தில் குணமாலையிடம் கேட்க வந்த கேள்வி வழக்கம்போல மறந்துபோக, குளிக்க விருவிருவென்று குளியலைறைக்கு ஓடினேன்.

– ஏப்ரல் 2011

(மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2010ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *