கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 2,549 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையில் கத்திக் குத்து விழுந்திருந்தது.

கட்டுப் போட்டிருந்தாலும் சுதாவுக்கு வலி இருந்து கொண்டிருந்தது. கழுத்திலோ மார்பிலோ விழுந்திருக்க வேண்டிய கத்திக் குத்து, குறி தவறியிருக்கலாம் அப்படி ஏதாவது ஆகியிருந்தால் சுதா இந்த நேரம் வீட்டில் படுத்திருக்க முடியுமா?

விடியுமுன் அந்தக் களேபரம் நடந்தது. சாதாரண சம்பவமாக நினைக்க முடியவில்லை. ஒரு கொலை முயற்சியா? அந்தக் காலை நேரத்திலும் கூட்டம் வீட்டில் திரண்டு விட்டது. சீனர்கள் மலாய்க்காரர்கள் உட்பட.

“கத்தியும் கையுமா களவாணிப் பசங்க புறப்பட்டிருக் கானுங்க போல இருக்கு. போன வாரம் சினிமாவுக்குப் போயிட்டு வந்த சித்ராவை, கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறிக்கப் பார்த்தான் ஒரு கொலைகாரன். வரவர இந்த எஸ்டேட்டே மோசமாயிட்டது” என்று ஒரு மலாய்க் காரமாது நீட்டி முழக்கினாள். தொடர்ந்து பல குரல்கள் பேட்டையைப் பற்றி, திருட்டுகளைப் பற்றி, மிரட்டல்களைப் பற்றி விமர்சனங்கள்.

சுதா கலங்கவில்லை வலியைக் காட்டிலும் அறியாத ஒரு சுமை அவளை அழுத்திக் கொண்டிருந்தது.

பணிப்பெண் காமாட்சி முன்பே சொல்லியிருந்தாள்.

“அம்மா, நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்..”

“எனக்கு என்ன ஆச்சு இப்போ?”

சுதா சிரித்துக் கொண்டாள். ‘நகைக்காக

“நீங்க முன்னை மாதிரி இல்லே. ராத்திரிலே லேட்டா வர்றீங்க. நகைநட்டுகளோட போறீங்க…”

சித்ராவை ஒருவன் தொடர்ந்திருக்கலாம். ஆனால் என்னுடைய ஒரு புன்னகைக்காக…!’ அவள் எதையோ நினைத்துக் கொண்டபோது முகம் கொள்ளாத முறுவல் கட்டவிழிந்தது. அச்சமாவது, ஆபத்தாவது என்று முணு முணுத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் காமாட்சி வாயை மூடிக் கொண்டாள்.

இன்றைக்கு நடந்து விட்டது சுதா மட்டுமல்ல, யாரும் எதிர்பார்க்கவில்லைதான். அதிகாலையில் அவளுக்கு நல்ல உறக்கம் ஒத்திகைக்குப் போய்விட்டு இரவு நேரங்கழித்துதான் சுதா வீடு திரும்பினாள். மாதவன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. அறையில்தூங்கிக் கொண்டிருந்தான் கணவனை எழுப்ப விரும்பாமல்வெளியே காற்றோட்டமாகப் படுக்கையை விரித்துக் கொண்டு விழுந்ததுதான் தெரியும் இருள் பிரியாத அந்த அதிகாலை வேளையில் தோளருகே கையில் கத்திக் குத்து விழுந்தபோது துடி துடித்துப் புரண்டாள். என்ன நடந்தது என்பது புரியாமல் தூக்கக் கலக்கத்தில், நாக்குழற சுதா கூச்சல் போட்டாள்.

ஒரே இருட்டு.

அறைவிளக்கைப் போட்டுவிட்டு அவளருகே மாதவன் வந்தான். தெருக் கதவு திறந்து கிடந்தது.

“ரத்தம்ரத்தம்” என்று அவள்வாய்விட்டு அலறினாள் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ‘சரசர’ வென்று வந்து திரண்டு விட்டார்கள்.

“என்ன நடந்தது, மாதவா?” என்றார் பக்கத்துவீட்டு சீனர் ஹான். அவன் படபடப்பில் நின்றிருந்தான்.

“சத்தம் கேட்டது விளக்கைப் போட்டேன். யாரையும் காணோம்.”

சுதாவை விசாரித்தர்கள்., இருட்டில் யாரோ குத்திவிட்டு ஓடிப் போனதாக அவள் சொன்னாள். கையில் ‘குபு குபு’ வென்று குருதி கொட்டியது படுக்கையிலும் ரத்தம். டாக்டரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள்.

ஒருவர் மாற்றி ஒருவராக ஏதாவது பேசினார்கள், போலீஸில் புகார் கொடுத்தாயிற்று. அதிகாலையில் வீடு புகுந்து கொள்ளை யடிக்க முயன்ற ஒருவன், சுதாவைக் குத்திவிட்டு ஓட்டமெடுத்திருக்கிறான் என்று பேட்டை எல்லாம் பேச்சு.

“இப்ப வலி எப்படிம்மா இருக்கு?” காமாட்சி கேட்டாள்.

சுதா பதிலின்றி அவளை வெறித்துப்பார்த்தாள்கையில் மட்டுமல்ல, நெஞ்சிலும் வலி இருக்கிறது என்பது போல் இருந்தது அந்தப் பார்வை. காமாட்சிக்கு சுதாவின் மன ஓட்டம் ஓரளவுக்குப் புரியும் காலையில் வேலைக்கு வந்தவள் இன்னும் திரும்பவில்லை சுதாவுடன் இருந்து கவனிடத்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு மாதவன் போய் விட்டான்.

“ஆபீஸில் முக்கியமான வேலை இருக்கு இல்லேன்னா போகாமெ இருந்திடுவேன். எதனாச்சும்அவசரத்தேவைன்னா காமாட்சிகிட்டே சொல்லி போன் பண்ணச் சொல்லு…” சுதாவிடம் முணு முணுத்து விட்டுத்தான் அவன் போனான். பகலில் அலுவலகம் தான் அவனுடைய உலகம்.

“காமாட்சி, நீ வீட்டுக்குப் போகலையா? நேரமாகலையா?’ என்று தணிந்த குரலில் சுதா கேட்டாள்.

“உங்களுக்குத் துணையா இருக்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே!”

“பரவாயில்லை, நீ போறதா இருந்தால் போகலாம்…” “நான் இருக்கிறேம்மா! என்றாள் காமாட்சி. அடுத்த கணமே அவள் மனம் விழித்துக் கொண்டது ‘இந்த நேரம் நான் இங்கே இருப்பது சுதாவுக்குப் பிடிக்கவில்லையோ?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

கொஞ்ச நாட்களாக இங்கே நடப்பது காமாட்சிக்குத் தெரியும். சுதா போகச் சொன்னால் கூட இன்னும் கொஞ்ச நேரம்இருந்துவிட்டுப்போகவே அவள்விரும்புவாள். அப்படி ஓர் ஒட்டுறவு ஏற்பட்டுப் போயிருந்தது. சுதா மீது அத்தனை ஆசை! “லட்சுமிகரமா இருக்கிறீங்க… உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என் கண்ணே பட்டுடுமோன்னு பயமா இருக்கும்மா!” என்று சில முறை வாய் விட்டுச் சொல்லியிருக்கிறாள். உண்மைதான் சுதாவிடம் அப்படி ஒரு வசீகரம், ஆர்க்கிட் மலர் மாதிரி ஒரு முறைக்கு நாலு முறை பார்க்கத் தூண்டும் முக காந்தி. கொடுத்து வைத்தவன் என்று காமாட்சி எத்தனை முறை எண்ணியிருக்கிறாள்.

இதெல்லாம் தடம் மாறிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு எப்பொழுதோ வந்திருந்தாள். சுதா மாறி விட்டாள். வெளிப் பழக்க வழக்கங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. முன்போல் வீட்டில் அதிக நேரம் தங்குவதில்லை வீடு தேடி சிலர் வந்தார்கள். ராஜப்பா சகஜமாக வந்து போய்க் கொண்டிருந்ததும், அவன் பின்னால் சுதா போக ஆரம்பித்ததும் தான் காமாட்சிக்குப் பெரிய உறுத்தலாக இருந்தது.

‘இந்தப் பழக்க வழக்கமெல்லாம் சுதாவுக்கு எதற்கு? நல்ல குடும்பப் பெண்ணுக்கு நாடக ஆசை வரலாமா? இது எதில் போய் முடியுமோ’ காமாட்சி உள்ளுக்குள் துணுக்குற்ற படி இருந்தாலும் வாய் திறக்கவில்லை.

“காமாட்சி, நீ போகலாம்… எனக்காகக் காத்துக் கிடக்கணும்கிறதில்லே…” என்று மறுபடியும் சுதா வலிய குரல் கொடுத்தபோது காமாட்சிக்குப் பட்டு விட்டது. காரணம் இல்லாமல்இப்படிச்சொல்லமாட்டாள்என்பது அவளுக்குத் தெரியும். ‘அந்த நாடகக்காரன் வருவான் போலிருக்கிறது. அவனுடன்சுதா பேசுவதற்கு நான்ஏன்இடைஞ்சலாக இருக்க வேண்டும்? இங்கே கத்திக் குத்து களேபரம் நடந்திருப்பது அவனுக்குத்தெரியுமோ? ஒருவேளை அவன்…?’ காமாட்சி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள்,

“அப்ப நான் வர்றேம்மா!”

அவள் கிளம்பி விட்டாள்.

தனிமையில் ஒரு நெடுமூச்சு விட்டாள் சுதா. மேக மூட்டமாகக் காலையில் நடந்த சம்பவம் நெஞ்சைக் கப்பிக் கொண்டிருந்தது. எந்த அளவுக்குத் தான் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதைக் கணிக்க முயல்வது போல் உள்ளத்தில்ஊசலாட்டம். பாவம், மாதவனும்இப்படித்தான் எதையாவது நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பான் என்ற நினைப்பு நெளிந்தது.

வீடு முழுவதும் கூட்டம் நிரம்பி விட்ட காட்சி கண்ணிலேயே நின்றது வந்தவர்கள் ஆளுக்கொன்றாக என்னவெல்லாமோ பேசியது இன்னும், அவள் செவியில் எதிரொலித்துக் கொண்டுதான் இருந்தது. இரவுதான் ஒரு நாடக ஒத்திகைக்குப் போய் விட்டு வந்தாள். விடிவதற்குள் வீட்டில் நாடகக் காட்சி மாதிரி ஒரு களேபரமா?

சுதா குழம்பினாள் தவிப்பாக இருந்தது.

ராஜப்பா வந்தான்.

கண்களில்கலக்கத்தைத்தேக்கிக்கொண்டு அவன்நின்ற கோலத்தை மௌனமாகப் பார்த்தாள்.

“சேதியைக்கேட்டதும்பொறி கலங்கிப்போயிட்டேன் என்ன நடந்தது, சுதா என்னால் நம்பவே முடியலியே.. உனக்கு ஒரு பகையாளி இருக்க முடியுமா? ஒரேயடியா பதறிப் போய் ஓடி வந்திருக்கேன்..”

உணர்ச்சியைக் கொட்டி அவன் பேசியும், உடனடியாக சுதாவிடமிருந்து பதில்கிடைக்கவில்லை. கலவர உணர்ச்சியை முகத்தில் அலைபாயவிட்டு விட்டுப் பேச்சின்றி சிரம் குனிந்திருந்தான் ராஜப்பா. ஓர விழிகளால் இடையிடையே அவளைப் பார்த்தான். சுதா நிமிர்ந்து பார்த்ததும் அவனே கேட்டான்.

“சுதா நடந்தது என்னன்னு நான் தெரிஞ்சிக்கப்படாதா?”

“ஏதோ நடந்து போச்சு, இருட்டிலே!…”

“இருட்டா? என்னவா இருந்தாலும் குத்தினவன் யாருன்னு…” ராஜப்பா குரலை இழுத்தான்.

அவள் இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினாள்.

மீண்டும் பல நிமிடம் மௌனம்

ராஜப்பா என்ன நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தானோ!

ஆனால் சுதாவின் உள்ளம் ஓய்ந்திருக்கவில்லை ராஜப்பாவைச் சுற்றிய நினைவுகள் அட்டையாய்ப் பற்றிக் கொண்டு அவளுடைய உணர்வுகளை உறிஞ்சின. அவனை அவள் சந்தித்து நாலைந்து மாதங்கள்கூட ஆகவில்லை. அது புதிய சந்திப்பு அல்ல. பல வருட இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட பழக்கம்.

ராஜப்பாவை எதிர்பாராது மறுபடியும் அவள் சந்திக்க நேர்ந்ததும், அதற்குப் பிறகு அவன் வீடு தேடி வந்ததும், பிறகு நிழலாக அவளைத் தொடர ஆரம்பித்ததும்…

முதல் முறை ராஜப்பா வீட்டுக்கு வந்தபோது கணவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“நாங்கள் ஒரே சமயத்தில் படித்தோம், அப்பொழுதே ரொம்ப நன்றாக நடிப்பார். எதிர்பாராமல் மறுபடியும் இவரைப் பார்க்க நேர்ந்தது. இங்கேதான் இப்பொழுது நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

“சுதாவுக்கும் நடிக்க வரும் இரண்டு பேருமா பள்ளிக்கூட டிராமாவில் ‘ஆக்ட் பண்ணியதுண்டு. சுதாவிடம் அபாரமான கலைத் திறமை மறைந்திருக்கிறது” என்றான் அவன், சிரித்துக் கொண்டே.

அப்புறம் ராஜப்பா அடிக்கடி சுதாவைப் பார்க்க வந்தான். பகலில் மாதவனின் உலகம் ஆபீஸ் என்பது அவனுக்குத் தெரியும். அந்த நேரத்தில் சுதாவை நாடி வருவது பழக்கமாகி விட்டது.

ஆரம்பத்தில் அவள் நடுங்கினாள் ஆளை விழுங்குகிற மாதிரி அவன் பார்க்கும் பார்வையை எதிர்கொள்ள முடியா மல் அவள் திணறியதுண்டு. கணவன் இல்லாத சமயங்களில் அந்நிய ஆடவனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அந்த உறுத்தல்களெல்லாம் கொஞ்ச நாள் வரைதான்.

“சுதா எத்தனை வருஷமானாலும் உன் நினைவு, சந்தன மாய்க் குளிர்ந்து மணந்து கொண்டிருந்தது. உன் பார்வைக்கு அத்தனை சக்தி! ஒரு நாள் மீண்டும் உன்னைச் என்று காத்திருந்தேன்…”

அவள் மகிழ்ந்து போய் சிலிர்த்துக் கொண்டாள். ‘ராஜப்பா, ராஜப்பாதான்’ என்று மனத்தின் ஒரு விளிம்பில் அவளுக்குப் பூரிப்பு.

ஒரு நாள் அவன் சொன்னான்.

“சுதா, உன்னை நினைத்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. வாழ்க்கை என்பது இந்த வீட்டுக்குள் இயங்கிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, உனக்கு இந்த வீடு, உன் கணவருக்கு ஆபீஸ்…. இரண்டு பேருக்கும் இரண்டு சிறைகள். வெளி உலகம், பழக்க வழக்கங்கள், கலை, ரசனை, பொழுதுபோக்கு என்று எதுவுமே கிடையாதா, உனக்கு இது நாட்டுப்புறம் அல்ல சிங்கப்பூர் வாய்ப்பு வசதியைப் பயன்படுத்தனும்.

இப்படி ஆரம்பித்து அவளைத் திசை திருப்பியது ராஜப்பாவுக்கு ஒரு பெரிய வெற்றிதான். அவளிடம் கலை உணர்ச்சி திரண்டு கிடப்பதாகவும், புகழின் உச்சிக்குப் போகக் கூடிய வாய்ப்புக்கள் வரப் போகின்றன என்றும் அவன் சொல்லச் சொல்ல சுதா மையலேறிப் போனாள். வாழ்க்கை என்பது அந்த வீட்டில் பகலெல்லாம் அடைந்து கிடப்பதும், மாலையில் திருப்பும் கணவனை வரவேற்பதும் மட்டும்அல்ல என்ற முடிவுக்கு அவள் வந்து விட்டாள்.

எல்லை விரிந்தது. நாடகம், சினிமா என்று சகஜமாக வெளியே போய்வர ஆரம்பித்தாள். ராஜப்பாதான் நிழல் நாடக ஒத்திகைக்கு அவள் போக ஆரம்பித்த சமயம், மாதவன் விழிப்படைந்தான்.

ராஜப்பா பெருமூச்சு இழைய அவளைப் பார்த்தான்.

அவள், நினைவிலிருந்து விடுபட்டவள்போல், அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“சுதா பலமான காயம் ஏற்பட்டு விட்டதா?”

“ஆமாம். பலத்த காயம்தான்…” என்று அழுத்தமாகச் சொன்ன தொனிபில் ஆழம் புதைந்திருந்தது.

“குத்துப்பட்டு படுக்கையில் கிடக்கும் மனைவியை விட்டுவிட்டு வேலைக்குப்போக மனம்வருமா, பொறுப்புள்ள ஒரு கணவனுக்கு?” ராஜப்பா மறுபடியும் பேச்சை எடுத்தான்.

“ஏன்போகக் கூடாது? நான்தான்போகச் சொன்னேன். இப்போது உங்களிடம் சொல்கிறேன். நீங்களும் போகலாம். என்னைத் தனிமையில் விடுங்கள், ராஜப்பா!”

அவள் குமுறினாள்.

திகிலுடன் பின் வாங்கினான் ராஜப்பா.

இருட்டிக் கொண்டிருந்தது.

மாதவன் வந்தான்,

“காமாட்சி இல்லையா? இருக்கச் சொல்லியிருந்தேன்!”

“நான போகச் சொல்லி விட்டேன்!”

“அவள் இருப்பாள் என்று நினைத்து தான் வேலைகளை முடித்துவிட்டு நேரம் கழித்து நான்…”

அந்த முன்னிருட்டு நேரத்திலும், அவன் முகத்தில் படிந்திருந்த இருளை அவள் கண்டுகொண்டாள். அவளுக்கு ஒன்று என்றால் அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை சுதாவுக்கு இது நன்றாகத் தெரியும்.

விளக்கைப் போட்டு விட்டு நின்றான்.

“எப்படி இருக்கிறது…? திரும்பவும் டாக்டரை அழைக்கலாமா?”

“வேண்டாம்.. உடகாருங்கள்”.

உட்கார்ந்தபடி அவளை விழியிமைக்காமல் பார்த்தான்.

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? காலையில் இந்தத் தெருவே என்னைப் பார்த்த பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”

“என்னாலும்தான்! ஆனால் சுதா…. நீ… நீ…” எதையோ சொல்ல நினைத்தான். பேச முடியவில்லை.

அமைதி.

அவள் சொன்னாள். “கத்திக் குத்து எனக்குக் கிடைக்கவேண்டியதுதான் என்னுடைய பலவீனங்களைப் பதம் பார்த்துச் சரியான நேரத்தில், சரியான பாதையில் அது நிறுத்திவிட்டது…”

அவனுக்குப் பொறுக்கவில்லை.

“சுதா, என்னை மன்னித்துவிடு!”

சுதா விம்மலை அடக்கிக் கொண்டாள்.

“மான அவமான உணர்ச்சியின் அழுத்தம் தாங்க முடியாமல் ஒரு வெறி உணர்ச்சியை வளர்த்துக் கொண்டு, அமைதியை இழந்து, நிம்மதியைத்துறந்து… ராஜப்பாவும்நீயும் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நான், நானேதான் வெறி உணர்ச்சியில் உன்னைக் கத்தியால் குத்தி….!” பேச முடியாமல் தவித்தான் மாதவுன்.

“அது எனக்குத் தெரியும்”

“தெரியுமா?”

“தெரியும் உங்கள் மனம் எனக்குத் தெரியும்… தறிகெட்டு நான் அலையக் கூடாது என்பதற்காக, குடும்பக் கோட்டிலிருந்து விலகக்கூடாது என்பதற்காகத் நிறுத்தும் ஒரு முயற்சியாக ஒரு காயத்தை உண்டு பண்ணி…”

“ஆமா, சுதா… ஆமாம் என்னை மீறிய துணிவில், வெறியில், ஏதோ நடந்து விட்டது!”

அவன் குழந்தையைப் போல் பொங்கினான்.

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *