அப்பாவா, யாரது?

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 7,906 
 

‘‘வாம்மா, உட்காரு!’’ –

அவள் ஒல்லியாக இருந்தாள். செபாஸ்டினின் சாயல் துளிக்கூட இல்லை. பி.பி.ஓ. கால் சென்டர் கம் பெனி ஒன்றில், ஓரளவுக்கு நல்ல வேலையில் இருப்பதாக, ஆபீஸில் யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘‘சார், நீங்க சொன்ன பேப்பர்ஸ் எல்லாம் கொண்டுவந்துட்டேன். டெத் சர்டிஃபிகேட் வாங்கறதுலதான் கொஞ்சம் சிக்கலாயிடுச்சு. அதான் லேட்! நாளைக்கே எனக்கு செக் கிடைச்சா நல்லது!’’

உடனடியாக கிளார்க்கைக் கூப்பிட்டு, அவள் கண்ணெதிரிலேயே அதற்கான உத்தரவுகளைப் பிறப் பித்தேன்.

‘‘நாளைக்கு ஒரு மணிக்கு வந்தா, செக் கிடைச்சிடும்! கவலைப்படா தேம்மா… நாங்கள்லாம் இருக்கோம்!’’ என்றேன் கனிவுடன். அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

அவளின் தந்தை செபாஸ்டின் எங்கள் ஆபீஸில் பியூனாக இருந்தார். 40 வயதுதான். கடந்த ஆறு மாதமாகப்படுத்த படுக்கையாகக் கிடந்து, போன சனிக்கிழமை செத்துப் போனார். படிப்பறிவில்லாத மனைவி. இந்தப் பெண்ணைத் தவிர, நண்டும் சிண்டுமாக இவளுக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும்!

‘‘உங்க அப்பா செபாஸ்டின் சின்ஸியர் ஒர்க்கர்ம்மா. ரொம்பப் பணிவானவர். நாங்கள்லாம் எப்படியும் அவர் பொழைச்சு வந்துடுவார்னுதான் நம்பிட்டிருந்தோம். ஆனாலும், கடவுள் இவ்வளவு கொடுமைக்கார னாக இருக்கக் கூடாது…’’ & மெல்லிய தாகத் தொடங்கிய என் இரங்கலை, அவள் சட்டெனக் கை உயர்த்தி நிறுத்தினாள்.

‘‘போதும் சார்..! இந்த மேம்போக்கான வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்துப்போச்சு! மன்னிக்கணும்… அவரை நான் அப்பான்னு சொல்லிக்கவே விரும்பலை. வாங்கின சம்பளத்தையெல்லாம் குடியும் கூத்துமாவே அழிச்சாரு. வெட்கமே இல்லாம மூணு பிள்ளைங்களைப் பெத்தாரு. எங்க அம்மாவை அடிச்சே முடமாக்கினாரு. கடைசியில, தண்ணியப் போட்டுட்டு லாரி மோதி, ஆஸ்பத்திரியில கிடந்து இழு இழுன்னு இழுத்து, அரை லட்சத் துக்கும் மேல கடனை வெச்சுட்டு ஒருவழியா போய்ச் சேர்ந்தாரு…’’

நான் உறைந்து போய், அவளையே பார்த்துக்கொண்டு இருக்க, அவளே தொடர்ந்து பேசினாள்… ‘‘லாரியில அடிபட்டுச் செத்திருந்தாக்கூட ரெண்டு லட்சம் வரைக்கும் நஷ்டஈடு கிடைச் சிருக்கும். ஆஸ்பத்திரி செலவு மிச்சமாகி இருக்கும். அவரோட கடன்களை அவரோட சாவாலேயே சரி செஞ்சிருக் கலாம். என்ன செய்ய? எங்க விதி… அவர் இருந்தபோதும் சல்லிக் காசுக்கு உபயோகமில்லே. செத்தும்…’’

‘‘என்னம்மா இது… என்ன இருந்தாலும் அவர் உங்க அப்பா. அவரைப் போய்…’’

‘‘அப்பாவா, அவரா? சார், அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியும். ஏன், எல்லாருக்குமே தெரியும். இருந்தும், எதுக்கு சார் போலியான வருத்தம்? அவரோட கொடுமைகளை உடம்பாலயும் மனசாலயும் நானும் என் அம்மாவும் ராத்திரி பகலா அனுபவிச் சிருக்கோம் சார்! அப்பா, அம்மா, கணவன், மனைவிங்கிற சொற்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்கு. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும். என்ன பண்றது… ஹி ஹேப் பண்ட் டு பி மை பயாலாஜிகல் ஃபாதர்… அவ்வளவு தான்! நீங்க செக்கை கொஞ்சம் சீக்கிரமா ஏற்பாடு பண்ணிக் கொடுத்தா, கந்து வட்டி குறையும். சரி சார், ட்யூட்டிக்கு லேட் ஆகுது. நான் வரேன்!’’

சரேலென எழுந்தாள். வலுவற்ற, செயற்கையான ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, விருட்டென்று கிளம்பிப் போய்விட்டாள். எனக்குள் எழுந்த அதிர்ச்சி முழுவதுமாக விலக, வெகு நேரம் ஆயிற்று!

வெளியான தேதி: 01 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

1 thought on “அப்பாவா, யாரது?

  1. கதை நன்றாக உள்ளது.
    ”செக்கை சீக்கிரம் கொடுத்தால் கந்துவட்டி குறையும்”

    சாட்டையடிபட்டாற்போல உணர்ந்தேன்.
    உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *