காதல் தர வந்தேன்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 3,704 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்3

மனிதன் ஒருவன்தான் சிரிக்கும் தகுதியை பெற்றிருக்கிறான். அப்படிப்பட்டவன் பிறர் சிரிக்குமாறு ஏன் நடந்து கொள்ள வேண்டும்? 

கிருஷ்ணசாமி முற்றிலும் மாறிவிட்டார். குடியை சுத்தமாய் மறந்துவிட்டார். ஒழுங்காய் வேலைக்குச் சென்றார். வேலை முடித்ததும் நேரே வீட்டிற்கு வந்தார். மீனா நம்ப முடியாமல் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். “அப்பாவா… அப்பாவா இது? என்னாயிற்று? எந்த போதி மரத்தடியில் போய் அமர்ந்தார்?” மீனாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. 

அதுமட்டுமின்றி அந்த மாதம் வாங்கிய சம்பளப் பணத்தை ஒத்தை ரூபாக் கூட எடுக்காமல் அப்படியே கொண்டு வந்து. மகளின் கையில் தந்தார். 

“அ….ப்….பா!” ஆச்சரியமாய் பார்த்தாள். 

“என்னம்மா? அப்பா மாறிட்டாரேன்னு ஆச்சரியமாயிருக்கா? தெய்வமாகிப் போன உங்கம்மா மேலே சத்தியமா சொல்றேன். இனி அந்தப் பாழாப் போன குடியை வாயிலேயே வைக்கமாட்டேன். உன்னை கரையேத்தணும். அந்த கடமைய முடிச்சிட்டேன்னா… நிம்மதியா கண்ணை மூடிடுவேன்…” 

“அ.ப்…பா!” நெகிழ்ந்துப் போனாள். கண்களில் ஈரம் படர்ந்தது. 

கிருஷ்ணசாமி மகளின் கண்ணீரை துடைத்து தன் நெஞ்சில் சாய்த்து அவள் தலையை வருடிக் கொடுத்தார். 

“செய்யாம விட்ட ஒவ்வொரு கடமையும் ஏழேழு ஜென்மத்துக்கும் கடனா திரும்ப வருமாம். உனக்கு மட்டும் குறை வைப்பேனா? பார்த்துக் கிட்டே இரு! உன் அழகுக்கும், குணத்துக்கும் தங்கமான மாப்பிள்ளையை தேடிக் கண்டுபிடிக்கிறேன்!” 

“போங்கப்பா!” வெட்கத்துடன் ஓடி விட்டாள். கிருஷ்ணசாமி மகளின் வெட்கத்தை ரசித்தார். 

எப்போதும் இல்லாத ஒரு நிறைவும், சந்தோஷமும் இப்போது மீனாவின் மனசு நிறைய குடிகொண்டிருந்தது. பொறுப்பு மிக்க தலைமைதான் பிள்ளைகளின் தலையெழுத்தை எழுதும் பேனா.. இதுநாள் வரை இருந்த எதிர்காலம் பற்றிய பயமும், வெறுமையும் இப்போது துளியும் இல்லை.

டிராவல்ஸின் ஓனர் கூட இவளை கிண்டல் செய்தார். 

“என்னம்மா மீனா? கொஞ்ச நாளா நானும் கவனிச்சிட்டுதான் வர்றேன். ரொம்ப சந்தோஷமா தெரியறே! எதுனாச்சும் விசேஷமா? வீட்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்களா?” என்றார் ஏழுமலை. 

“ஐயோ… அதெல்லாம் இல்ல சார்!” வெட்கத்துடன் அவசரமாய் மறுத்தாள். 

“அதுக்கேம்மா அலர்றே? ஆனா உன் முகத்துல ஏதோ ஒரு கல்யாண களை தெரியுதே!” என்றார் வேண்டுமென்றே. 

“போங்க சார்! உங்களுக்கு எல்லாமே கிண்டல்தான்!” என்றாள் சிரித்தபடி. 

“கிண்டல் பண்ணலே மீனா. மனசார வாழ்த்தறேன். இந்த சின்ன வயசுல உனக்குத்தான் எவ்வள்வு பெரிய பொறுப்பு? வீட்டையும் கவனிச்சுக்கிட்டு, வேலைக்கும் போய்க்கிட்டு, கிடைக்கிற கொஞ்ச நேரத்துல- படிக்கவும் செய்துக்கிட்டு…. உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா! உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும். அப்புறம் மீனா, அடுத்த மாசம் ஆடி பிறக்கப் போகுது. நம்ம வேனுக்கு டிமாண்டா இருக்கும். பெரியபாளையம் அது இதுன்னு புக் பண்ண வருவாங்க. போன வருஷம் திணறிப் போயிட்டோமில்லையா? அதனால் புதுசா வேற ரெண்டு மெட்டாடர் வேனுக்கு ஆர்டர் பண்ணியிருக்கேன். மூணு நாள்ல வந்திடும். யார் வந்துக் கேட்டாலும், தலைகீழா நின்னாலும் வாடகைப் பணத்தைக் குறைக்காதே! டிரைவருக்கு பேட்டாவெல்லாம் தனின்னு சொல்லிடு..” 

“நீங்க சொல்லாம நான் எப்படி குறைப்பேன் சார்!” 

“சரிம்மா… நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போய்விட்டு… அப்படியே வீட்டுக்கு லஞ்சுக்கு போயிடுவேன். ஈவ்னிங்தான் வருவேன். ரொம்ப அவசியம்னா வீட்டுக்குப் போன் பண்ணு! பாண்டியன் வந்தான்னா… பணம் எதுவும் தராதே… ம்… வேணாம்.. அப்புறம் உன்கிட்டே கத்த ஆரம்பிச்சிடுவான். முந்நூறு ரூபாய்க்கு மேல சல்லிக்காசு தராதேம்மா! ஹூம்… எனக்குன்னு வந்து பொறந்தானே… தவப்புதல்வன்? வயசான காலத்துல நான் ஓடியாடி வேலை செய்யறேன். அவர் ஊரை சுத்திட்டு..” குடிச்சிட்டு வந்து வக்கணையா சாப்பிடுவார். அவருக்கு பொண்டாட்டி, பிள்ளை ஒரு கேடு… தூத்தெறி!” என்றார் தன்னையே நொந்தபடி ஏழுமலை. ஸ்டாண்டிலிருந்து பைக்கை விடுவித்து உசுப்பி புறப்பட்டு விட்டார். ‘வீட்டுக்கு வீடு வாசப்படி பணக்காரங்கன்னாலும் பிரச்னை, ஏழைஙகனனாலும் பிரச்னை. ஆக மொத்தம் இந்த உலகில் யாருமே நிம்மதியாய் இல்லை” தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே வேலையில் கவனம் பதித்தாள். 

‘உன் முகத்துல ஏதோ ஒரு கல்யாணக் களை தெரியுதே’ முதலாளியின் குரல் மறுபடி மறுபடி எதிரொலித்தது. 

மீனா அதை நினைத்து சிரித்துக் கொண்டாள். சட்டென்று அந்த முகம் நினைவிற்கு வந்தது. அடிக்கடி கனவில் வந்த அந்த முகம். வேகமாய் காரை ஓட்டி இவளை பயமுறுத்தி… கிண்டலாய் சிரித்த முகம், எவ்வளவு அழகான முகம்? 

யாரவன்? 

‘அடி முட்டாள் பெண்ணே! கனவில் வந்தவன் யாரென கேட்கும் அளவிற்கு மதி மயங்கி போய் விட்டாயா? கனவில் வந்தது கற்பனை உருவம்! அதைக்கூட பார்த்து மயங்குவார்களா? நீ டிராவல்ஸ் கம்பெனியில் வேலை செய்வதால்… கனவில் கார் வந்திருக்கிறது… அவ்வளவுதான். ஒரேயடியாக கோபுரத்தின் மீதேற ஆசைப்படாதே!’

‘ஆசையா? நானா? என் வீட்டு நிலைமை தெரிந்தும் ஆசையெல்லாம் வருமா என்ன? படிப்பை முடித்து இதை விட நல்ல வேலையை தேடிக் கொண்டபின்தான் என் எதிர்காலத்திற்கு சேர்க்க முடியும். இதோ அப்பாவும் சேர்க்க ஆரம்பித்து விட்டார். அப்படியே சேர்த்தாலும்… எவ்வளவு சேர்க்க முடியும்? எங்கள் நிலைக்கேற்ப… சாதாரண கிளார்க் உத்யோகம் பார்ப்பவன் தான் வர முடியும்? அளவுக்கு மீறி ஆசைப்படுபவளா நான்?’

முகத்திற்கு நேரே விரலால் சிட்டிகை விழ… திடுக்கிட்டு களைந்தாள் மீனா 

“ஹி…ஹி…” என்று இளித்தபடி நின்றிருந்தான் பாண்டியன்.

ஏழுமலையான் வாரிசு! குப்பென்று விஸ்கி வாசம் முகத்தில் மோதியது. கண்களில் சிவப்பு. 

“என்ன மீனா தனியா இருக்கே! அப்பா இல்லையா?” அவன் கேட்ட விதமும் பார்த்த பார்வையும் வேறு மாதிரி இருந்தது. 

இதுவும் வாடிக்கையான ஒன்றுதான்! வழக்கம் போல் மீனா மௌனம் சாதித்தாள். 

பாண்டியன் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் எதிரே அமர்ந்தான். 

மீனாவுக்கு சங்கடமாய் இருந்தது. அவனை அங்கிருந்து சீக்கிரமாய் விரட்டியாக வேண்டுமே என்று முந்நூறு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள். 

“இந்தாங்க சார்… உங்கப்பா தரச் சொன்னார்!” 

“நமக்குள்ளே எதுக்கு மரியாதை? சும்மா பாண்டியன்னே சொல்லு! என் பொண்டாட்டிக் கூட என்னை பேர் சொல்லித்தான் கூப்பிடுவா…. கட்டில்ல இருக்கறப்ப…” சொல்லிவிட்டு அசிங்கமாய் சிரித்தான்.

மீனாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 

“இந்த சுரிதார்ல நீ தேவதை மாதிரியிருக்கே மீனா.. சும்மா… பானுப்ரியா மாதிரி உடம்பு உனக்கு. ஹூம்… எங்கேயோ பிறக்க வேண்டியவ இங்கே வந்து அல்லாடறே! ஆனா, என் பேச்சை கேட்டேன்னு வச்சுக்க… உனக்கு ப்ரைட் ப்யூச்சர்தான்!” 

மீனா அவனை முறைத்தாள். 

“என்ன முறைக்கிறே? முறைச்சா… நீ பத்தினின்னு ஆயிடுமா? வேலைக்குன்னு படி தாண்டி வந்துட்டா.. எப்படி பத்தினின்னு கூப்பிட முடியும்? எவளுமே யோக்யம் இல்லே. அவ்வளவு ஏன்; என் பொண்டாட்டி சித்ரா கல்யாணத்துக்கு முன்னாலே எவனையோ லவ் பண்ணவதான்! அதையெல்லாம் நான் மன்னிச்சுட்டேன். அது மாதிரிதான் இதுவும்.. காதல் வேற, கல்யாணம் வேற, படுக்கறதும் வேறதான்! பணம் சம்பாதிக்கறதுக் காகத்தானே வேலைக்கு வர்றே? எப்படி சம்பாதிச்சா என்ன? உன் கல்யாணத்துக்கு பணம் சேர்க்க வேணாமா? நிறைய பணம் தர்றேன். ப்ளீஸ்டா மீனுக்குட்டி!” வழக்கத்தை விடவும் அதிகமாய் பாண்டியன் பேச.. வெகுண்டெழுந்தாள் மீனா. 

“ஒரு வார்த்தை… இதுக்கும் மேலே ஒரு வார்த்தை பேசினாலும் நான் சும்மாயிருக்க மாட்டேன். உங்கப்பாவுக்காக நான் சும்மாயிருந்தேன். என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல? வேலைக்குன்னு படிதாண்டி வந்திட்டா… எல்லா பொண்ணுங்களும் வேசியாய்டுவாங்களா? உன்னை பெத்தவளும் ஒரு பொம்பளைதானே? அந்த ஈவு இரக்கம் கூடவா இல்லாமப் போச்சு?” 

“ப்ச்… புளிச்சுப் போன டயலாக்! பிடிக்கலேன்னா வரமாட்டேன்னு சொல்லு! நீ என்ன ஊர்ல உலகில இல்லாத பேரழகியா? சும்மா படபடன்னு வாய் வலிக்க டயலாக் பேசிக்கிட்டு… நமக்கு பேசற பொம்பளைங்களை எல்லாம் பிடிக்காது. என் பேச்சை கேட்டு ஆடற பொம்பளைத்தான் எனக்கு வேணும். உன் மேல எனக்கு கொஞ்சம் கிரேஸ் இருந்துச்சு. வாயத் திறந்து கெடுத்திட்டியே கண்ணு! எதுக்கும் யோசிச்ச வை… நாளைக்கு வர்றேன்.. எங்கப்பாகிட்டே என்னைப் பத்தி போட்டுக் கொடுத்தாலும் கவலையில்லே. நான் அப்படி இப்படின்னு அவருக்கே தெரியும். என்ன… என்கிட்டேர்ந்து காப்பாத்த உன்னை வேலையிலேர்ந்து தூக்கிடுவார். நான் வரட்டுமா?” சாவகாசமாய் எழுந்து போனான். 

இடிந்து போய் விட்டாள் மீனா. 

அத்தியாயம்4

மழை விசிறியடித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே சாரலடிக்க மீனா ஓடிப் போய் ஜன்னலை சார்த்தி விட்டு வந்தாள். 

கிருஷ்ணசாமியின் விரல்கள் தட்டிலிருந்த சோற்றை அளைந்தபடியிருக்க… கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் இப்படி உழைக்க வேண்டும்? எல்லாம் என்னால்தானே? நான் பிறந்தே யிருக்காவிட்டால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்’ கண்கள் சுரந்தது.

ஏனோ, அப்பா மகாராஷ்ட்ரா செல்வதில் மீனாவுக்கு விருப்பமே இல்லை. 


ஒரு மாதம் வேகமாய் ஓடிப் போனது. 

மீனாவிற்கு தனக்கு மட்டுமே சமைத்து சாப்பிடுவது, கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்றாலும் வேறு வழி? ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சமைப்பாள். அதையே இரவு வரை சாப்பிட்டு பணத்தை மிச்சம் பிடித்தாள். பாண்டியனின் வம்படி பேச்சு அத்துமீறிப் போனாலும் தன் வீட்டு நிலைமையை நினைத்து சகித்துக் கொண்டாள். 

இரவில் பக்கத்து வீட்டு பாட்டியின் துணையுடன் படுத்துக் கொண்டாள். 

அன்று…. அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. 

‘வரும் ஞாயிறு வீட்டிலிருப்பேன். வெள்ளியன்று புறப்படுவேன்’ என்று பயணம் செய்யப்போகிற ரயில் தேதி, நேரம் எல்லாவற்றையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். 

மீனாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஒரு மாதம் கழித்து அப்பாவை பார்க்கப் போகிற மகிழ்ச்சி! 

‘அப்பா வர்ற அன்னிக்கு அவருக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சு வைக்கணும். பாவம் இந்த ஒரு மாசமும் என்ன சாப்பிட்டாரோ?’ 

அப்பா வந்து சேர மூன்று நாட்களே இருந்தன. பெரிய அக்கா வீட்டிற்கு சென்று விஷயத்தை சொல்லி, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அப்பாவை நவரவேற்க அழைத்தாள். 

“ஆமா… அப்பா எங்களுக்குத்தான் சம்பாதிச்சி கொண்டு வர்றாராக்கும்! எனக்கு தலைக்கு மேலே வேலையிருக்கு. நேரம் கிடைச்சா வீட்டுக்கு வந்து பார்த்துக்கறேன்!” பக்கத்து வீட்டுக்காரி மாதிரி ஓட்டாமல் வந்தது வார்த்தை. 

அக்காவின் பேச்சில் அயர்ந்து போய் விட்டாள் மீனா! 

‘அப்பா…. இன்னமுமா சம்பாதித்து தர வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்?’ வியந்தாள். 

அதன்பிறகு வேறு அக்காள்கள் யார் வீட்டிற்கும் செல்லவில்லை.

‘நாளை இந்நேரம் அப்பா வீட்டிலிருப்பார்’ என்று நிமிடங்களை எண்ணத் தொடங்கினாள். 

கதவு தட்டப்பட்டது. 

சென்று திறந்தாள். எதிர்வீட்டு பாக்யம் நின்றிருந்தாள். அவள் முகம் பேயறைந்தது மாதிரியிருந்தது. 

“என்னக்கா?” 

“மீனா… உங்கப்பா நாளைக்கு வர்றேன்னு எழுதியிருந்தாரா?”

“ஆமா…. ஏன் கேக்கறீங்க?” 

“எந்த டிரெய்ன்ல?” 

சொன்னாள். 

“ஏன்க்கா… இதெல்லாம் கேக்கறீங்க?’ 

“இல்லேம்மா… வந்து… இப்ப டி.வி.யில்… “

“டிவி.யில?” 

“செய்தியில… நீ சொன்ன அந்த டிரெய்ன்ல தீப்பிடிச்சிக்கிட்டு…”

“ஐயோ… என்ன சொல்றீங்க?’ ‘அலறினாள். 

“ஓடுற ரயில்ல தீப்பிடிச்சிக்கிட்டதாம்… நிறைய பேர் இறந்துட்டாங்கன்னு சொல்றாங்க… எதுக்கும் நீ ரெயில்வே ஸ்டேஷன்ல விசாரி….” 

“இல்லேக்கா… எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது.அவர் வருவார். மீனாம்மான்னு ஓடி வருவார். அப்பா ரொம்ப நல்லவர்க்கா… அவருக்கு அமுதாள் மீனா. ஒண்ணும் ஆகாது.. ஆகாது…” சொல்லிக் கொண்டே மடங்கி சரிந்தமர்ந்து அழுதாள் மீனா.


ஆனால் மீனாவின் நம்பிக்கை அனைத்தும் பொய்த்துப் போனது.

ரயில் தீப்பிடித்து எரிந்துப் போனதில் நூற்றுக்கும் அதிகமானப் பேர் உயிரிழந்தனர். அந்த நூறில் கிருஷ்ணசாமியும் அடக்கம் என்பதுதான் வேதனை! விபத்து நள்ளிரவில் நடந்ததால்… என்ன ஏது என்று அறிந்து கொள்ளுமுன்னரே.. பஸ்பமாகிப் போயினர். உறக்கத்திலேயே… தன் உறவுகளை பிரியப் போகிறோம் என்று தெரியாமலேயே உயிரை விட்டிருந்தனர். அடையாளம் தெரியாத அளவிற்கு கரி கட்டையாய் ஒரு உருவத்தை மூட்டைக் கட்டி இதுதான் ‘உன் அப்பா’ என்று மீனாவின் கையில் கொடுத்தபோது இதயம் விண்டு போனது. 

மீனாவினால் அழக் கூட முடியவில்லை. 

‘என்னோட கவலையெல்லாம் உன்னைப் பத்திதாம்மா! உன்னைத் தனியா விட்டுட்டு போறேனேன்னுதான் வருத்தமாயிருக்கு!’ என்றீர்களேப்பா! ஒரு வருஷம் பிரியறதுக்கே… கவலைப்பட்டீங்களே! இப்ப நிரந்தரமா… ஜென்மம் முழுக்க என்னை விட்டு பிரிஞ்சி போய்ட்டிங்களே! மீனா உள்ளுக்குள் மருகி… குறுகிப் போனாள். இனி உங்களை எப்ப பார்க்கப் போறேன்… எப்படி பார்க்கப் போறேன்? 

அப்பாவை வரவேற்க ரயில்வே ஸ்டேஷன் வர மறுத்த பெண்கள் வந்திருந்தனர். அவரை காட்டிற்கு வழியனுப்ப வந்திருந்தனர். நான்கு மருமகன்களும் வந்திருந்தனர்.

ரயில் தீ விபத்தில் இறந்த அத்தனை பேருக்கும் மத்திய அரசாங்கம் இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்திருந்தது. 

கிருஷ்ணசாமியின் வெந்து போன உடலை மறுபடி தகனம் செய்து மீனாவைச் சுற்றி அமர்ந்தனர். விட்டு வந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அக்காள்கள் நால்வரும் மீனாவைச் சுற்றி அமர்ந்தனர்.

“கவலைப்படாதேடி… அப்பா வோட ஆயுள் முடிஞ்சு போச்சு.. அதை விபத்தை காரணம் காட்டி எமன் பறிச்சிட்டுப் போயிட்டான். அதையே நினைச்சிட்டிருக்காம ஆக வேண்டியதை யோசி…” என்றாள் வசந்தி. 

“எப்படியோ… நம்ம குடும்பத்துல உன்னையாவது டிகிரி வரைக்கும் அப்பா படிக்க வச்சிருக்காரே..அந்த வகையில் நீ புண்ணியம் பண்ணி யிருக்கே!” என்றாள் பிரேமா! 

“ஆனாலும், எங்க எல்லாரையும் விட அப்பாவுக்கு உன் மேலதான் பாசம் அதிகம். படிக்க வச்சதிலாகட்டும். தன் செல்ல மகளுக்காக வெளியூர்ல தங்கி வேலை செஞ்சு உனக்காகவே உயிர் விட்டதிலா கட்டும்… எல்லா விஷயத்திலேயும் அப்பா உனக்காகவே விட்டுக் கொடுத்திருக்கார்” மாலினியின் குரலில் வெளிப்பட்டது ஆதங்கமா, பொறாமையா, பரிதாபமா என்றே புரியவில்லை. 

“ஆனா, போறப்ப அப்பா நம்மளுக்கு நல்ல காரியம் பண்ணிட்டு தான் போயிருக்கார். அரசாங்கம் நஷ்ட ஈடா ரெண்டு லட்சம் தர்றதா அறிவிச்சிருக்கு. ரெண்டும் பெண் பிள்ளையா பிறந்திருக்கேன்னு நான் கண்ணீர் விடாத நாளில்லே. அவர் வேலை செய்யற கம்பெனியில ஏதோ பிரச்னையாம். கம்பெனிய இழுத்து மூடுற அளவுக்கு நஷ்டத்துல ஓடறதால் எல்லாருக்கும் பளத்தை பாதியா குறைச்சிட்டாங்க. அப்படியே அப்பா பணத்தை அஞ்சு பாகமா பிரிச்சு எடுத்துக்கப் போகிறோம். எனக்குன்னு வர்ற பங்கை என் பொண்ணுங்க பேர்ல பேங்க்ல போட்டு வெச்சிடுவேன்!” என்றாள் பிரச்னைக்கு தீர்வு கண்ட நிம்மதியுடன் சாந்தி. 

“நீ சொல்றதும் சரிதான் சாந்தி! என் பெரிய பொண்ணு சரிதா இன்னைக்கோ, நாளைக்கோ பெரியவளாயிடற பக்குவத்துல இருக்கா! அவளுக்கு சடங்கு பண்ண எங்கே போய் கடன் கேக்கறதுன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தேன். அப்பா அந்த புண்ணியத்தைக் கட்டிக்கிட்டார்.” ஆமோதித்தபடி சொன்னாள் வசந்தி. 

மீனா அத்தனை பேரையும் ஏறிட்டுப் பார்த்து தனக்குள் வேதனையுடன் சிரித்துக் கொண்டாள்.

‘இவர்களெல்லாம் அப்பா இறந்ததற்காக வருத்தப்படுகிறார்களா? சந்தோஷப்படுகிறார்களா? எப்படி இவர்களால், இவ்வளவு சீக்கிரம், இந்த அளவிற்கு சுயநலமாய் சிந்திக்க முடிகிறது? இவர்களுக்காக, இவர்களை கரையேற்ற அப்பா எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டார்? ஓடாய் தேய்ந்தார்? அதை சற்றாவது சிந்தித்துப் பார்த்தார்களா? இனிமேல் நம் அன்பான அப்பாவை பார்க்கவே போவதில்லை என்கிற ஆதங்கம் இவர்களிடம் துளியும் இல்லையே! ச்சே!’ நொந்து கொண்டாள் மீனா. 

“சரி… போட்டது போட்டபடி அப்படியே கிளம்பி வந்துட்டேன். நிறைய வேலையிருக்கு. நான் கிளம்பறேன் மீனா!” என்று புறப்பட்டு விட்டாள் பிரேமா.

“ரெண்டு நாளா என் மாமியாருக்கு நல்ல காய்ச்சல். தனியே அவஸ்தைப்பட்டுக்கிட்டிருப்பாங்க. நானும் புறப்படறேன். நீ பக்கத்து வீட்டு பாட்டியை துணைக்கு கூப்பிட்டு படுத்துக்க. கவலைப்படாதே… அப்பா சாந்தியும் கிளம்பி விட்டாள். எப்பவும் உனக்குத்தான் துணையாக இருப்பார்!” ஆறுதல் சொல்லி விட்டு சாந்தியும் கிளம்பி விட்டாள்.

மற்ற இருவரும் ஏதோ சொல்லிவிட்டு… அவர்களும் இடத்தை காலி செய்துவிட..அரண்டுப் போனாள் மீனா!

சத்தியமாய் இதை அவள் எதிர்பார்க்கவில்லை. இவர்களில் யாராவது எதிர்பார்த்தாள். ஒருவர் தன்னை அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள் என்றே எதிப்பார்த்தாள்.

ஆனால், கல்லெறிந்த காக்கை கூட்டமாய் பறந்தோடி விட்டன உறவுகள். அதுவும் சொந்த ரத்த பந்தம். ஒரே தொப்புள் கொடியில் உதித்தவர்கள்.

மீனாவுக்கு பயமாயிருந்தது. தன்னந்தனியாய் தான் மட்டுமே அனாதையானது போல் உணர்வு.

கஷ்டத்தையும், துன்பத்தையும், துயரத்தையும் வாழ்க்கையில் அனுபவிப்பதுதானே அனுபவம்?

மீனாவிற்கு இப்போது அப்பாவின் இழப்பு பூதாகரமாய் தெரிய… அதுவரை அடங்கியிருந்த துக்கம் பீறிட்டு எழ… வாய் விட்டு கதற துவங்கினாள் மீனா.

– தொடரும்…

– காதல் தர வந்தேன்…! (நாவல்), ஏப்ரல் 2001, ரமணிசந்திரன் மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *